Saturday, September 14, 2024

அண்ணா ரத்து செய்த கூட்டம்

 


திருச்சியில் அண்ணா அவர்களைக் கொண்டு இரு கூட்டங்கள் நடத்துவது என்று திரு டி கே சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார். 

முதல் நாள் கூட்டத்தில் அண்ணா அற்புதமாக பேசினார் .அண்ணாவின் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வந்திருந்தனர். 

திருச்சி நிகழ்வில் கலந்து கொள்ள வரும்போதுதான் அண்ணா ஒன்றை கவனிக்கிறார். டி கே சீனிவாசனை அழைத்து மறுநாள் கூட்டத்தை ரத்து செய்துவிடு என்றார் அண்ணா. 

ஏன் அண்ணா?

"நாளை நாவலர் பேசுகிறார். "

"அண்ணா நாம் கூட்டம் போட்டால் அவருக்கு கூட்டம் சேராது"என்றார் சீனிவாசன் .

"அதனால்தான் கூட்டத்தை ரத்து செய்ய சொல்கிறேன்.நாவலர் சோமசுந்தர பாரதியாரின் சொற்பொழிவிற்கு இழிவு ஏற்படக் கூடாது .கட்சி கொள்கையைப் பரப்புவதை விட தமிழ் அறிஞர்களை மதிப்பது முக்கியமானது "

இவர்தான் எம் அண்ணா. 


அண்ணாவின் நினைவுகள் ஒவ்வொன்றும் பெருமிதம் அடையும் தருணங்களாக

... என்றும் ...

அண்ணாவின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்💥🙏🙏🙏

#Anna

#Puthiyamaadhavi_20240915

#அறிஞர்அண்ணா

Tuesday, September 10, 2024

ஒரு கவிதை ஒரு பார்வை

 கவிதை: பயணிப்புறா / கவிஞர்: புதியமாதவி



சாமங்கவியும் நேரம்

உன் மெலிந்த கைகளை

தொட்டு தடவிக்கொண்டிருக்கிறேன்

உனக்கு பிடித்தமான

நெருடா கவிதைகளை எடுத்து வாசிக்கிறேன்

அன்றிருந்த நாம் அன்றிருந்தவர்கள் அல்ல

புல்வெளியில் விழும் பனித்துளி போல

நான் வாசித்துக்கொண்டிருந்தேன்

என் ஆன்மா அவளை இழந்ததால் நிறைவுற்றது

என் குரல் கம்மியது

நீ இருமினாய்

உன் எச்சிலில் சளியும், இரத்தமும் கலந்திருந்தன

துருத்திக்கொண்டிருக்கும்

உன் நெஞ்சு எலும்புகள்

ஈட்டியை போல

அவ்விருளை கிழித்துக்கொண்டு வெளிவந்தன

மூடிய விழிகளை மெதுவாக திறக்கிறாய்

நானும் நெரூடாவும் நனைகிறோம்

வறண்ட உன் இதழ்களிலிருந்து

காய்ந்து போன சருகுகளை போல

முத்தங்கள் உதிர்கின்றன

விதைகள் தற்கொலை செய்துகொண்ட

என் பூமியில்

மழை பெய்தால் என்ன?

பொய்த்தால் என்ன?

ஏறி இறங்கும் உன் மூச்சுக்கூட்டிலிருந்து

வாலையும் சிறகுகள் போல விரித்து

பறந்து செல்கிறது பயணிப்புறா

வல்லரசுகளின் துப்பாக்கிகள் வரிசையாக

வெடிக்கின்றன

பயணிப்புறாவின்

கடைசி பயணத்தை பார்க்க முடியாமல்

காடுகள் பற்றி எரிகின்றன.

🔥🔥🔥🔥

Murali kannan 2019, oct 19 ல்

தன் .முகநூல் பக்கத்தில் இக்கவிதைக்கு எழுதி இருந்த நீண்ட விமர்சனம்.

💥💥💥💥💥

சாமங்கவியும் நேரம் / உன் மெலிந்த கைகளை / தொட்டு தடவிக்கொண்டிருக்கிறேன் – கவிதைக்குள் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒன்று கவிஞர். மற்றொருவர் யாரோ. உன் மெலிந்த கைகளை என்பது ஏதோ பிரச்சனையில் அந்த மெலிந்த கைகள் இருக்கிறது என்பதை சொல்கிறது. தொட்டு தடவிக்கொண்டிருக்கிறேன் என்பது ஆறுதலாக என்பதை சொல்கிறது. எனவே அந்த கைகள் ஆறுதல் தேவைப்படும் ஓர் இடத்தில் இருக்கிறது. அந்த கைகளுக்கு சொந்தக்காரன் யார்? அவன் என்ன பிரச்சனையில் இருக்கிறான்? தொட்டுத் தடவிக்கொண்டிருக்கிறேன் எனில்? நம் கைகளை ஒருவர் ஆறுதலாக தொட்டு தடவிக்கொடுக்கிறார். என்ன செய்வோம்? போதும் என விடுவித்துக்கொள்வோம். அதாவது அந்த கைகளுக்கு சொந்தக்காரன் ஒன்று அமர்ந்தபடி இருக்க வேண்டும். அல்லது படுத்த நிலையில் இருக்க வேண்டும். உடம்பு சரியில்லாமல். கைகளுக்கு சொந்தக்காரன் தன் மீது அக்கறை கொண்ட ஒரு ஆத்மா தன் கைகள் தடவிகொடுக்கப்படுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் உயிர்ப்போடு ஆரோக்கியமாக இல்லை.

உனக்கு பிடித்தமான / நெரூடா கவிதைகளை எடுத்து வாசிக்கிறேன் / அன்றிருந்த நாம் அன்றிருந்தவர்கள் அல்ல – கவிஞர் நெரூடாவின் கவிதைகளை அவனுக்கு வாசித்துக் காட்டுகிறார். இது ஒரு பிரத்யேகமான குறிப்பிடத்தக்க சூழல் போல. அன்றிருந்த நாம் அன்றிருந்தவர்கள் அல்ல எனில் வழக்கமாக நடைமுறையில் எத்தகைய சமரசங்கள் அற்று வாழ்க்கையை நாம் கறாராக எதிர்கொள்வோமோ எத்தகைய பொறுப்புகளின் சுமைகளோடு வளைய வருவோமோ அப்படி அன்று கவிஞரோ, கவிஞரின் கவிதை வாசிப்பை கேட்டுக்கொண்டிருக்கும் நபரோ இல்லை. நான் யார் என்ற முறையில் செயல்படும் ஒரு தருணமல்ல அது. சொந்த அடையாளங்களை, சொந்த ஆகிருதிகளை தற்காலிகமாக கைவிடும் தருணம் அது. திட்டமிட்டு அல்ல. ஏனெனில் அங்கு கவிஞரிடமிருந்து அக்குறிப்பிட்ட மனிதனுக்கும், அக்குறிப்பிட்ட மனிதனிடமிருந்து கவிஞருக்கும் இடம்பெயரும் நேசம் இருக்கிறது.

புல்வெளியில் விழும் பனித்துளி போல / நான் வாசித்துக்கொண்டிருந்தேன் – கவிஞரின் மனம் கருணையால் ததும்புகிறது. வழக்கமான அகங்காரங்கள் விலகி வேறு ஏதோ ஒன்று ஊற்றெடுக்கிறது.

என் ஆன்மா அவளை இழந்ததால் நிறைவுற்றது / என் குரல் கம்மியது / நீ இருமினாய் / உன் எச்சிலில் சளியும், இரத்தமும் கலந்திருந்தன – ஏன் கவிஞரின் ஆன்மா அவளை இழந்ததால் நிறைவுற வேண்டும்? இழந்ததால் எனில் என்ன அர்த்தம்? அவள் என்றால் ஆறுதல் தேவைப்படும் அந்த மனிதன் ஒரு ஆண் அல்ல, ஒரு பெண். கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பதை இந்த வார்த்தை குழப்புகிறதா? மனம் கருணையால் நிரம்பி ததும்புவதைத்தான் என் ஆன்மா அவளை இழந்ததால் நிறைவுற்றது என மாறுகிறதா? நம் மனம் கருணையால் நிரம்பி ததும்ப ஒருவர் உடம்பு சரியில்லாமல் படுக்கும் நிலைக்கு வர வேண்டுமா? ஆறுதல் சொல்பவரின் உணர்வுகள் முக்கியமா? ஆறுதல் தேவைப்படும் மனிதனின் உணர்வுகள் முக்கியமா? அதாவது கவிதை ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை பற்றி பேசுகிறது. எது முக்கியம் எது முக்கியமல்ல என்பது போன்ற ஓர் இடம் அங்கு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை பற்றி பேசுகையில் வேறு எந்த ஒன்றும் அதை முந்திச்சென்று அதன் தோற்றத்தை மறைக்கக்கூடாது. இந்த வார்த்தை அதை தவறுதலாக செய்கிறது. என் ஆன்மா அவளை இழந்ததால் நிறைவுற்றது. என் குரல் கம்மியது / நீ இருமினாய் / உன் எச்சிலில் சளியும், இரத்தமும் கலந்திருந்தன – ஆறுதல் தேவைப்படும் அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள். மிகவும் மோசமாக.

துருத்திக்கொண்டிருக்கும் / உன் நெஞ்சு எலும்புகள் / ஈட்டியை போல / அவ்விருளை கிழித்துக்கொண்டு வெளிவந்தன – உடல் நிலை சரியில்லை என்பது நாம் நினைத்ததை விட மோசம் போல. அது மனதில் இருளை வந்து நிரப்புகிறது. உடம்பு சரியில்லாமல் துருத்தி தெரியும் அவளது நெஞ்செலும்புகள் அந்த இருளை ஈட்டியை போல கிழித்துக்கொண்டு வெளி வருகிறது.

மூடிய விழிகளை மெதுவாக திறக்கிறாய் / நானும் நெரூடாவும் நனைகிறோம் – கவிஞரின் இருப்பு, கவிஞரின் ஆறுதல், கவிதை வாசிப்பு இதிலிருந்து அந்த பெண் மெல்ல தன் கண்களை திறக்கிறாள். வந்திருப்பது யார் என உடனே பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ இயலாத நிலையில் அவள் இருக்கிறாள். நெரூடா அங்கில்லை. ஆனால் அவரது கவிதை அங்கிருக்கிறது. நெரூடாவின் கவிதை யாருக்கு பிடிக்குமோ அந்த பெண்ணும் அங்கிருக்கிறாள். எனவே நானும் நெரூடாவும் நனைகிறோம்.

வறண்ட உன் இதழ்களிலிருந்து / காய்ந்து போன சருகுகளை போல / முத்தங்கள் உதிர்கின்றன – உடம்பு சரியில்லாத பெண் கவிஞரின் இருப்பில் மெல்ல புன்னகைத்திருப்பாள் போல. ஆனால் பலவீனமாக.

விதைகள் தற்கொலை செய்துகொண்ட / என் பூமியில் / மழை பெய்தால் என்ன? / பொய்த்தால் என்ன? – விதைகள் எனில் அந்த பெண் குழந்தை அல்ல, திருமணமாகி வாழ்வை அனுபவிப்பதில் அனுபவித்ததாக சொல்லும் ஒரு எல்லையை கடந்தவளும் அல்ல. அவள் நெரூடாவின் கவிதைகளையும் அறிந்திருக்கிறாள். எனவே அவள் ஏறக்குறைய இன்னும் திருமணமாகாத வயது பெண்ணாக இருக்க வேண்டும். விதைகள் தற்கொலை செய்துகொண்ட எனில்? அந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இப்போது படுத்திருக்கிறாளா? அல்லது தற்கொலைக்கு சமமான ஒரு காரியத்தில் ஈடுபட்டு அதன் காரணமாக இப்போது படுத்திருக்கிறாளா? விதைகள் தற்கொலை செய்துகொண்ட / என் பூமியில் / மழை பெய்தால் என்ன? / பொய்த்தால் என்ன? அவளது இந்த நிலைக்கு அவள் மட்டுமே காரணம் அல்ல. காரணம் அவளுக்கு வெளியே நீண்டிருக்கிறது. அவளது இந்த நிலைக்கு யார் காரணம்? அவளுக்கு உண்மையில் என்ன ஆயிற்று? யார் அந்த பெண்? கவிஞருக்கு அவள் என்ன வேண்டும்? அவளது இந்த நிலையில் சமூகம் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறதா? அது நினைத்திருந்தால் இவளுக்கு இந்த நிலை வருமா? விதைகள் தற்கொலை செய்துகொண்ட / என் பூமியில் / மழை பெய்தால் என்ன? / பொய்த்தால் என்ன? கவிஞருக்கு தார்மீக கோபம் அந்த திசையில் திரும்புகிறது.

ஏறி இறங்கும் உன் மூச்சுக்கூட்டிலிருந்து / வாலையும் சிறகுகள் போல விரித்து / பறந்து செல்கிறது பயணிப்புறா – அந்த பெண் இப்போது மரணத்தருவாயில் இருக்கிறாள். வாலையும் சிறகுகளா, வலையும் சிறகுகளா? எழுத்துப்பிழை போல. வலையும் சிறகுகள் தான் போல. உடம்பு சரியில்லாதவர் எப்படி இருப்பார்? முதுகு கூனி விடுகிறது தானாக. ஓடாக. அது தான் இங்கு வலையும் சிறகுகள் போல. வலையும் சிறகுகள் போல விரித்து / பறந்து செல்கிறது பயணிப்புறா – மரணத்தறுவாயில் மெலிந்து ஓடாக இருக்கும் அந்த பெண் கவிஞரின் கண் முன் இறந்து விடுகிறாளா? பயணிப்புறா என்றால்? வாழ்க்கையில் பயணத்தில் இருக்குமே அந்த புறாவா? ஏன் புறா? ஏன் வேறு பறவையேதும் இல்லை? புறா ஒரு சமாதான புறா. இறக்கும் தறுவாயில் இருக்கும் அந்த பெண்ணுக்கும் சமாதானம் என்ற வார்த்தைக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பிருக்கிறது. அவள் ஒரு சமாதான விரும்பியாக இருக்க வேண்டும். அப்படியானால் எங்கு சமாதானம் இல்லையோ அங்கு அந்த பெண் சமாதானம் வேண்டி செல்லக்கூடியவளாக இருந்திருக்கிறாள். அவள் ஒரு சமூக போராளியா? அதனால் தான் அவள் இந்த நிலைக்கு வந்து விட்டாளா?

வல்லரசுகளின் துப்பாக்கிகள் வரிசையாக / வெடிக்கின்றன / பயணிப்புறாவின் / கடைசி பயணத்தை பார்க்க முடியாமல் / காடுகள் பற்றி எரிகின்றன – ஏன் கவிதை திடீரென வல்லரசுகளின் துப்பாக்கிகளையெல்லாம் வெடிக்க வைக்கிறது? அந்த பெண் பல பேர் அறிந்த ஒரு புகழ்பெற்ற சமூக போராளியா? புகழ்பெற்ற எனில் எந்த அளவுக்கு? உலக அளவுக்கா? அல்லது அவள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடக்கூடிய சமூக போராளியாக இருந்திருந்தாளா? பயணிப்புறா எனில் அவள் ஒரு போராளியாக இந்த உலகம் முழுவதும் பயணம் செய்யக்கூடியவளாக இருந்திருந்தாளா? அல்லது இந்தியா முழுவதும் பயணம் செய்யக்கூடியவளா? அல்லது ஒரு மாநிலத்துக்குள் சமூகப்பிரச்சனைகளுக்காக போராடக்கூடியவளாக? வல்லரசுகள் உண்மையில் இவளது இந்த மரணத்திற்காக தங்கள் துப்பாக்கிகளை வெடித்து அரசு மரியாதையோடு அவளை வழியனுப்பி வைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவளது பணி மகாத்தானதாக இருந்திருக்க வேண்டும். நான் சரியாக புரிந்துகொள்கிறேனா? அதை அவர்கள் செய்ய வில்லை. எனவே கவிஞர் அந்த வெடிக்காத துப்பாக்கிகளை வெடிக்க வைக்கிறார். கடைசி பயணத்தை பார்க்க முடியாமல் / காடுகள் பற்றி எரிகின்றன – அவள் காடுகளுடன் ஏதேனும் ஒரு பிணைப்பில் இருந்திருப்பாளா? காடுகள் ஏதோ ஒருவகையில் அவளுக்கு கடமைப்பட்டிருக்கிறதா? பசுமைப்போராளி போன்று ஏதேனும் அவள் இருந்திருப்பாளோ? வல்லரசுகளின் துப்பாக்கிகள் வரிசையாக / வெடிக்கின்றன / பயணிப்புறாவின் / கடைசி பயணத்தை பார்க்க முடியாமல் / காடுகள் பற்றி எரிகின்றன.

கவிதையை மிகவும் ஆராய்வது அது தரும் கவிதானுபவத்தை சிதைக்கிறதா? இக்கவிதையை பற்றி எழுதுகையில் இக்கேள்வி ஏனோ தார்மீகமாக தவிர்க்க முடியாமல் தோன்றுகிறது. கவிதை இரு சாத்தியங்களில் இருந்து வருகிறது. ஒன்று வாழ்வின் ஒரு குறிப்பிட்ட உண்மையிலிருந்து. அது மனம் திடீரென வாழ்வைப்பற்றி வாழ்வின் போக்கில் ஏதோ ஒன்றை உணர்வதிலிருந்து – உணர்வுகளிலிருந்து அல்ல - வருவது. ஆகச்சிறந்த கவிதைகள் அனைத்தும் அதிலிருந்து வருபவையே. இரண்டு, கவிதை வாழ்வின் ஏதோ ஒன்று உணர்வுப்பூர்வமாக நம்மை தாக்குவதிலிருந்து, அதன் தாக்கத்திலிருந்து வருகிறது. அந்த குறிப்பிட்ட ஒன்றைப்பற்றி நம் உணர்வுகளை வெளிப்படுத்துவது போல. இக்கவிதை இந்த இரண்டாவது சாத்தியத்தில் இருந்து வருகிறது. முதல் வகை சாத்தியத்திலிருந்து அல்ல. கவிதையை ஓரளவுக்கு மேல் ஆராய்வது முதல் வகை சாத்தியத்தில் எந்த ஒரு கவிதானுப சிதைவையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் அங்கு உண்மை என்பது அசைக்க முடியாதவாறு உட்கார்ந்திருக்கிறது. உண்மையில் அது ஒரு பேருண்மை. நாம் அதாவது ஒரு கவிஞன் அதை கைப்பற்றுவது அதன் நிழலை மட்டுமே. ஏனெனில் அது கண நேரம் மட்டுமே நீடிக்கும் ஓர் உண்மை. கண நேரம் மட்டுமே திடும்மென அது நம்முள்ளே வருகிறது. நீங்கள் அதில் எத்தனை விரிவாக வேண்டுமானாலும் போக முடியும். எல்லையே இல்லாத அளவில். ஏனெனில் எந்த ஒரு உண்மையும் தன்னந்தனி உண்மையல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்புடன் உள்ள உண்மையே. ஒரு குறிப்பிட்ட உண்மையை நீங்கள் தொடும் இடத்திற்கு சென்றதுமே அது அங்கு மற்றொரு கேள்வியோடு மற்றொரு உண்மையை நோக்கி மெதுவாக திரும்புகிறது. நீங்கள் விரும்பினால் அதற்கும் செல்லலாம். அல்லது அமைதியாக ஓய்வு எடுக்கலாம். எனவே முதல் வகை கவிதையில் ஆராய்வது என்பது சிக்கலை உருவாக்குவதில்லை. மீண்டும் ஒரு முறை கவிதை வாசித்தால் முதல் வாசிப்பை விட அதிக கவிதானுபவத்தை தருவதாக அது மாறுகிறது. ஆனால் ஆராய்வது என்பது இரண்டாவது வகை கவிதையில் பிரச்சனையை உருவாக்குவது போல தோன்றுகிறது. ஏனெனில் அது ஒரு உணர்வுப்பூர்வமான தாக்கத்திலிருந்து வருகிறது. ஒருவன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்தில் நாம் அதை கேட்டுக்கொள்ளும் ஓரிடத்தில் மட்டுமே இருக்கிறோம். அது முட்டாள்தனமான உணர்வுகளாகவும் இருக்கலாம். நியாயமான உணர்வுகளாகவும் இருக்கலாம். அர்த்தமற்ற உணர்வுகளாகவும் இருக்கலாம். ஆனால் உறவு என்பது சாத்தியமாகியிருந்தால் தர்க்கங்களால் அதை நாம் ஆராய முடியாது. அப்போதும் ஆராயலாம். ஆனால் அது அக்கவிதைக்கு வெளியே சென்று மற்றொரு விஷயமாகி விடுகிறது. அதை நாம் பிறகு வேறொரு சமயத்தில் வேறொரு சந்தர்ப்பத்தில் தனியாக பார்த்துக்கொள்ளலாம் என்பதை போல. உணர்வுகள் வெளிப்படும் இடத்தில் தர்க்கத்தை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்பதை போல.

இக்கவிதைக்குள் சொல்லப்படாத விஷயங்களும் ஒளிந்திருக்கின்றன. எவருக்கும் அது முதல் வாசிப்பிலேயே புரிந்துகொள்ளும் சாத்தியம் இல்லையென்றே நினைக்கிறேன். எனவே இக்கவிதையை புரிந்துகொள்ளும் நோக்கோடு அணுகி ஆராய்ந்தது சரி, பரவாயில்லை என தோன்ற வைக்கிறது. புதிய மாதவியின் கவிதைகள் தமிழின் செரிவான, செழுமையான வார்த்தைகளை, மொழியை கொண்டு அர்த்தங்களை பெருக்கி நிறைப்பதல்ல. அது நேரடியான பெரும்பாலும் நடைமுறை வார்த்தைகளால் ஒன்றைப்பற்றி சொல்கிறது. பூடகமான, புதிரான விஷயங்களை கையாளும் போதும் அப்படியே. பூடகம், புதிர் என்றதும் நினைவிற்கு வருகிறது. முதல் வகை கவிதைக்குள் இது அதாவது இந்த வாழ்வின் பூடகம் புதிர் என்பதெல்லாம் மழை பொழிந்து கட்டற்று பாயும் நீர்வீழ்ச்சியென வருகிறது. அங்கு அள்ள அள்ள குறையாத புதிரெல்லாம் இருக்கிறது. வாழ்வின் புதிர். புதிய மாதவி அவர்களின் கவிதையில் முக்கியமான குறையாக அல்லது குறிப்பிட்டு சொல்ல விரும்பும் குறையாக சொல்ல தோன்றுவது, அவருக்கு வாழ்வின் குறிப்பிட்ட ஒன்றைப்பற்றி ஒரு குறிப்பிட்ட புரிதல் இருக்கிறது. அதை அவரது வார்த்தைகள் அல்லது மொழி முந்த வில்லை. அவரது உணர்வுகளே அதை முந்திச்செல்கிறது. புரிதல், உணர்வு, மொழி எல்லாம் கவிதைக்குள் ஒன்றேயென இணைந்து செல்ல வேண்டியிருக்கிறது. கவிதை எழுத கடைசி வரை நீளும் போதுமான அமைதி, நிதானம் போன்றவை அதற்கு வெளியேயிருந்து தேவையாக இருக்கிறது. அது இல்லையெனில் நடந்து கொண்டே நம் உணர்வுகளை வெளிப்படுத்துவது போல, ஒன்றைப்பற்றி சொல்வது போல ஆகி விடுகிறது. புரிதல், உணர்வு, மொழி மூன்றும் வெற்றிகரமாக புரிதலுக்குள் – புரிதலுக்குள் தான் - உறுதியாக அமர்ந்து விட்டால் பிறகு அக்கவிதை எத்தனை வேகமாகவும் வெளிவந்து கொட்டலாம். அதற்கு எதுவுமே ஆவதில்லை. அது நடக்கலாம். ஓடலாம். அமரவும் செய்யலாம். திடும்மென நடந்து திடும்மென வேகமெடுக்கவும் செய்யலாம். திடும்மென வேகமாக அமரவும் செய்யலாம்.

Wednesday, September 4, 2024

தங்கலான் vs வாழை

 " வாழையைக் கொண்டு தங்கலான் மறைக்கப்படுகிறதா?!"


தங்கலான், வாழை இரண்டு படங்களும் நான் பார்க்கவில்லை.

ஆனால் தங்கலான் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போது சட்டென காற்றடித்தது.

அந்தக் காற்று முழுக்கவும் வாழை வாழை என்று பல்வேறு வடிவங்களில் மார்க்கெட்டிங்!

வாழைக் கொண்டாடப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை! காரணம் இந்தக் கொண்டாட்டங்களின் பின்னாலிருக்கும் அரசியல்.

அது என்னைப் போல டூயுப் லைட்டுக்கு கூட புரிகின்றது.

இது ஒரு கண்ணைப் பிடுங்கி இன்னொரு கண்ணுக்கு மை தீட்டும் 

நுட்பமான வன்முறை.

எனக்கே புரிகிறது என்றால்

மற்றவர்களுக்கும் புரியாமலா?!!!!

ஆனால் அவர்களால் வெளிப்படுத்த முடியாது.

படவாய்ப்புகள், பாட்டு எழுதும் வாய்ப்பு, கதை வசனம் எழுதும் வாய்ப்பு, நாளைக்கு இதெல்லாம் கிடைக்கலாம்... இப்படியாக பலருக்கு பல காரணங்கள்.

எனக்கு இதைப் பற்றி என்ன கவலை?!


என் கவலை எல்லாம் பா. ரஞ்சித்தின் கலை அரசியலை மாரி செல்வராஜைக் கொண்டு திசைத் திருப்பும் நுண் அரசியல்... கவலைத் தருகிறது.

இரண்டு கண்களோடு பார்க்கும் பார்வையைத் தான் நாங்கள் விரும்புகிறோம்.

" வாழை ..வாழைப் போட்டவனை பயிரிட்டவனை வாழவிடாது! என்பது இப்போதும் உண்மையாகி விடக் கூடாது.

# தங்கலான்_வாழை

 #thangalan _vaazhai