Saturday, November 2, 2013

பெண்களும் கொண்டாட்டங்களும்







அம்மா அருள் வந்தவள் போல ஆடிக்கொண்டு இருக்கிறாள்.
அவள் கைகள் இரண்டு என்றாலும் பன்னிரெண்டு கரங்களுடன்
அவள் வலம் வருவது போலிருக்கிறது.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் துடைத்து வைக்கிறாள்.
பலகாரங்கள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்கிறாள்.
அதன் பின் நள்ளிரவு வரை உட்கார்ந்து இனிப்பும் காரமும்
என்று ஒவ்வொரு சுவையிலும் செய்துஅடுக்கி வைக்கிறாள்.

அதிகாலையில் எழுந்தே வாசலில் ரங்கோலி போட்டு விளக்கு
ஏற்றி வைத்துவிட்டு குளித்து பூஜை செய்து சாப்பாடு மேசையில்
அனைவருக்குமான பலகாரங்களை அலங்காரமாக அடுக்கி வைத்து
காத்திருக்கிறாள்.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்,  ரம்சான், கோவில் கொடை, திருவிழா,
இப்படி எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் அம்மாக்கள் இப்படி
அவதாரங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் அடிக்கடி என் அம்மா அலுத்துக் கொள்கிறாள்
அவள் அம்மா செய்ததில் பாதி அளவு கூட அவள் செய்யவில்லையாம்!
அவள் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை என்பது எனக்குத் தெரியும்.
.
பால்கனியிலிருந்து பார்க்கிறேன்.

எங்கள் மும்பை நள்ளிரவிலும் மின்வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது. கடைவீதிகள் எங்கும் கூட்டம், கூட்டம்
பெண்களின் கூட்டம். அவரவர் தகுதிக்கு ஏற்ப விரிந்து கடைப்பரப்பி இருக்கிறது சந்தை. அடுக்குமாடிகளின் குளிரூட்டப்பட்ட கார்ப்பரேட்
கடைகள் முதல் ரோட்டோரத்தில் கோலமாவு விற்கும் மவுசி வரை...
கூட்டம் கூட்டம் எங்கும் பெண்களின் கூட்டம்.
வீடுகள் தோறும் என் அம்மாக்களின் அவதாரங்கள் !


என் அம்மா சக்தியை வழிபடுபவள்.
என்னிடம் சக்தியின் மகிமைகள் குறித்து எத்தனையோ கதைகளையும்
தன் அனுபவங்களையும் சொல்லி இருக்கிறாள்.

அவள் கடைசிவரை சொல்லாத ஒரு கதை....

அம்மா ,
இந்தக் கொண்டாட்டங்கள்
சக்திக்கு
 மயிலிறகா? முள்கிரீடமா?

2 comments:

  1. உறுதியாக முள் கிரீடம்தான். இந்த நிலையில் பெண்களுக்கு உரிமை அதிகம் கொடுத்துவிட்டார்கள் என்று படித்த பெண்களே பேசுவதுதான் கொடுமை.

    ReplyDelete
  2. அதிலென்ன சந்தேகம்.விரும்பி அணிந்து கொண்டு இன்னும் இருக்கின்றனர்

    ReplyDelete