Sunday, August 4, 2013

ஓடு மில்கா ஓடிக் கொண்டே இரு...





ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்,
இந்தியாவுக்கு விடுதலை வந்த அதே 1947.. எல்லைக்கோடுகள் ரத்தக்காட்டேரிகளாகி அவனைத்துரத்தியது. .
அப்போது ஓடி விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் எல்லைகளைத் தாண்டி ஓடுகிறான் ஓடுகிறான்
ஓடுவதே அவன் வாழ்க்கையாகிவிடுகிறது. அந்த ஓட்டமே
அவன் அடையாளமானது மட்டுமல்ல, அதுவே இன்று
திரையரங்குகளில் அந்தக் காட்சியைப் பார்க்கும் அனைவரையும் "ஓடு மில்கா ஓடு" பாஃக் மில்கா பாஃக்
என்று ஓட வைத்திருக்கிறது.

அக்டோபர் 8, 1935 ல் லயல்புர் (அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு பகுதி, இன்று பாகிஸ்தான்) கிராமத்தில் பிறந்த மில்கா சிங்கின் சுயசரிதையை வாசித்த திரைப்பட இயக்குனர் ராகேஷ் மெஃரா ,( ரங் தே பசந்தி என்ற வெற்றி திரைப்படத்தைக் கொடுத்தவர்) எப்படியும் மில்கா சிங்கின் வாழ்க்கை சரித்திரத்தை திரைப்பட மாக்கியே தீர்வது என்ற
முடிவுக்கு வருகிறார். இந்திய தேச வரலாற்றில் பாகிஸ்தான் என்ற நாடு உருவான கதையின் பின்புலத்தில்
அதனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் கதையாக
இருப்பதால் மட்டுமே மில்காவின் கதை வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்வதற்கில்லை.

அவன் தன் வலியைச் சுமந்துக் கொண்டு தன் சோகத்தை
தன் காயத்தை அவன் கண்முன்னால் நடந்தக் இனக்கலவரத்தை தன் உறவுகளின் பிணங்களைத் தாண்டி
அவன் அடைந்த வெற்றிகள் என்ற புள்ளியில் குவித்து
ஓர் இரசாயணவித்தையை ஏற்படுத்தி இருக்கிறது இத்திரைப்படம்.
மில்காவின் கதையை திரைப்படமாக்க  சற்றொப்ப 3 வருடங்கள் ஆனது இயக்குநருக்கு. அக்காலக்கட்டத்தில்
ஏற்பட்ட பொருளாதர சிக்கலைத் தீர்க்க குர்ஹாவில் இருந்த தன் சொந்த வீட்டை விற்றும் தன் மனைவிக்குச் சொந்தமான சொத்துகளை விற்றும் இந்த திரைப்படத்தை
எடுத்து முடித்திருக்கிறார் ராகேஷ் மெக்ரா. தன் கதையை
இயக்குநருக்கு திரைப்படம் ஆக்கும் உரிமைக்காக மில்கா வாங்கிக்கொண்டது வெறும் ரூபாய் 1/ மட்டுமே! இன்றைய
ரூபாய் மதிப்பில் இந்த ஒரு ரூபாயை அமெரிக்க டாலரில்
மாற்றுவது கூட கடினம்!

மில்காவின் கதைப்பாத்திரத்தை உயிரோட்டமாக திரையில் கொண்டுவந்ததில் பெரும்பங்கு மில்காவாக நடித்திருக்கும்
அந்தச் சிறுவனும் பஃர்ஹான் அக்தரும் தான். மில்காவின்
பாத்திரத்தை ஏற்று நடித்த பஃர்ஹான் இந்த ஒரு திரைப்படத்திற்காக மட்டுமே திரைப்பட உலகில் ஒரு
நிரந்தரமான முத்திரையைப் பதித்திருக்கிறார் எனலாம்.

'நான் என் வாழ்க்கையில் அனுபவித்த வேதனைகளில் 20 விழுக்காடு தான் இத்திரைப்படம் பேசி இருக்கிறது என்கிறார் மில்கா. 1956ல் திரைப்படம் பார்த்த மில்கா அதன்பின் 57 வருடங்கள் கழித்து இப்போது தான் அதுவும்
தன் கதையே திரைப்படமாக வந்திருப்பதைப் பார்த்து
மனம் நெகிழ்ந்திருக்கிறார் என்கிறார்கள். எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாக வருவாயை இத்திரைப்படம்
கொட்டிக்கொண்டிருக்கிறது. அதிலும் மராட்டிய மாநிலம்,
மத்திய பிரதேசம் மற்றும் டில்லியில் இத்திரைப்படத்திற்கு
வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

1960ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கண்ணிமைக்கும் தருணத்தில் தன் தங்கப்பதக்கத்தை இழந்துவிடும் மில்காசிங்
என்று ஆரம்பமாகும் திரைக்கதை அதன் பின் ஒவ்வொரு
காட்சியிலும் மில்கா நடந்து வந்தப் பாதையை நோக்கிப்
பயணிக்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்ற வரலாற்று நிகழ்வு இக்கதையின் அடிநாதமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. உலகப்போரில் நடந்த ஹோலோகோஸ்ட் மரணங்கள், ருவண்டாவில் நடந்த இனப்படுகொலை, ஏன் நம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த இரத்தம் படிந்த வரலாற்று நிகழ்வுகளில் எல்லாம் சொல்லொணா துயரத்தை அனுபவித்தவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான்.
மில்கா அதில் ஒருவன்.
எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீதோ மதத்தின் மீதோ
வெறுப்பு ஏற்படும் வகையில் கதையோட்டத்தை
நகர்த்தாமல் திரைப்படத்தை எடுத்திருக்கும் இயக்குநரை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தன் இனப்பெருமையை தத்ரூபமாகக் காட்டுகிறேன் என்று
சொல்லிக்கொண்டே சாதி ஆணவத்திமிரைக்  காட்டும்
நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இக்கதையைத் திரைப்படமாக்கியிருந்தால் சர்தார்களின் சரித்திரம் என்ற ஒரு சின்ன வட்டத்திற்குள் அடைத்திருப்பார்கள்.

திரைக்கதையோட்டத்தில் மில்கா வெளிநாட்டு பயணத்தின்போது ஒரு பெண்ணின் வலையில் வீழ்வதும்
அதனாலேயே தன் விளையாட்டு போட்டியில் சரிவதும்
காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இக்காட்சியைப் பார்த்த மில்கா "அய்யய்யோ இப்படி எல்லாம் எதுவுமே என் வாழ்க்கையில் நடக்கவில்லையே!" என்று அலற அருகில் இருந்தவர்கள் இக்காட்சி மில்காவின் ஆண்மையைக் காட்டுவதற்காக சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்களாம்.
கடைசிவரை மில்காவிற்கு இக்காட்சிக்கும் தன் ஆண்மைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது புரியவே இல்லையாம். இதனால், ஊடகத்துறை அன்பர்களுக்கு மில்கா ஓர் அதிசயமாக தெரிவதாக சொல்கிறார்கள்!


பாகிஸ்தானுடன் நேச உறவை வளர்க்கும் வகையில் நடக்கும் விளையாட்டுக்குழுவில் தலைமை ஏற்று பாகிஸ்தான் செல்ல மில்கா மறுக்கின்றான்.
"என்னால் முடியவில்லை, என்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது " முஜ்ஷெ நஹி ஹோகா, மெ பாகிஸ்தான் நஹி
ஜாவோன்ஹா" என்று அவன் சொல்லும் வசனத்திற்காக
பாகிஸ்தான் அரசாங்கத்தின் திரைப்பட தணிக்கை குழு
இத்திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட அனுமதி
மறுத்திருக்கிறது. திரையிடுவதற்கான பேச்சுவார்த்தைகள்
நடந்துக்கொண்டிருக்கின்றன என்கிறார் இயக்குநர்..

இத்திரைப்படத்தின் வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தின்
ஒரு பகுதி மில்காவின் அறக்கட்டளைக்கு வழங்கப்பட இருக்கிறது. மில்கா சிங் தன் அறக்கட்டளை மூலமாக
நலிந்தோருக்கு மருத்துவ உதவிகள், வறிய இளம் விளையாட்டு  வீரர்களுக்கும் விளையாட்டு மைதானத்திலிருந்து வயோதிகம் அல்லது உடல் ஊனம் காரணமாக ஓய்வு பெற்றிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு
உதவி என்று சமூக தளத்திலும் ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.

விளம்பரங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நம் கிரிக்கெட் வீரர்கள் எவரும் விளையாட்டு வீரர்களுக்காக
ஏதேனும் தொண்டு நிறுவனங்கள் வைத்திருக்கிறார்களா?
எப்போதாவது உதவிகள் செய்திருக்கின்றார்களா?
நாமும் தான் அவர்களை விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!



மில்காவின் கடைசி ஆசை ஒன்றே ஒன்றுதான்.
"எந்த ரோம் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கான தங்கப்பதக்கதை நான் இழந்தேனோ அந்தப் பதக்கத்தை என்
வாழ்நாளில் நான் உயிருடன் இருக்கும்போதே ஓர் இந்திய விளையாட்டு வீரன் கொண்டுவர வேண்டும் " என்கிறார்.

நிறைவேறுமா மில்காவின் ஆசை?




No comments:

Post a Comment