Wednesday, May 28, 2008

நிலம் பெண்ணுடல் ....எதிர்வினைகளும் என் மறுமொழியும்


Date: Mon, 26 May 2008 10:58:19 +0300
From: jamalan.tamil@gmail.com
To: puthiyamaadhavi@hotmail.com
Subject: நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து


புதியமாதவி அவர்களுக்கு...

என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், உங்களது எழுத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். முழுமையாக படிக்க வாய்க்கவில்லை. காரணம் நான் அரேபியாவில் இருப்பதால் தமிழ்நூட்கள் கிடைப்பதில்லை. இணையத்தின் வழியாகவே படிக்க முடிகிறது. உங்களது பார்வையின் கொணங்கள் வித்தியாசமானவையாக உள்ளன. உங்களது இக்கட்டுரை கருத்துக்களை நான் முழுமையாக ஏற்கிறேன். மிகச்சிறப்பாக அந்த நூலை முன்வைத்து உரையாடலை மேலே நகர்த்திச் சென்றுள்ளீர்கள். வாசிப்பினூடக எனக்கு எழுந்த சில கேள்விகள் இவை..

தாய்வழிச் சமூகம் பற்றிய "இருக்கம்" புரிதலிலிருந்து நீங்கள் துவங்குகிறீர்கள். தாய்வழிச் சமூகத்தில் பால்வேறுபாட்டு உணர்வு இருந்திருக்குமா? இன்றைய பெண்ணும், பெண் உடலும் அன்றே நிலவி இருக்க வாய்ப்பு உண்டா? "பாலின வேறுபாடு" அல்லது பாலினமாதல் என்கிற இயக்கப்போக்கு எங்க எப்பொழுது உருவாகியிருக்கும்? "ஆதித்தாயை" ஒரு பெண்ணாக பார்க்க முடியுமா? எனது ஊகம் (எனது வாசிப்பு இதில் விரிவானது அல்ல) இன்றைய பெண் குறித்த பார்வையைதான் நாம் அதற்குள் பொறுத்திப் பார்க்கிறோம். சங்க இலக்கியங்களில் ஆண் பெண் வரையறைகளைப் பார்க்க முடியும். அது தாய்வழி சமூகம் அல்ல. அரசு உருவாக்கம் அல்லது நிலமயமாதலுக்குப்(territorialization) பிறகே பாலின வேறுபாடு உருவாகுகிறது. இதற்கு பெண் உடல் நிலமாக பதிலீடு செய்யப்பட்டது. அல்லது நிலமும் பெண்ணும் ஒன்றாக மாற்றப்பட்டு நினைவிலப்புலக் கட்டமைவுகள் உருவாக்கம் நிகழ்கிறது. இங்கு நான் முன்வைக்கும் பிரச்சனை.. பெண்தான் ஆணை உருவாக்குகிறாள் என்கிற அடிப்படையான எனது புரிதலிலிருந்து வருகிறது. ஆண் பெண்ணை தனது சொத்தாக பாவிக்கிறான். அதிகாரம் என்பது ஆணிலையான வடிவமே.. அதிகாரமற்ற ஒருவெளியின் குறியீடாகவே பெண் இருக்கிறாள். ஆக, இந்த ஆண் கட்டமைவிற்கான அரசியல் பின்புலங்களிலிருந்தே நமது பேச்சு துவங்கவேண்டும் என்கிறேன்.

மனித வரலாற்றில் அன்னையின் தலைமை சரிகிற காலகட்டத்தில் இனக்குழு வாழ்க்கை முடிந்து பெண்-ஆண் சமத்துவம் என்ற இரண்டாம் கட்டத்தை எட்டுகிறது. இக்காலக்கட்டத்தில் மதம் நிறுவனமயமாகிறது. அரசு, பேரரசுகள் தோற்றம்.

இவ்வாக்கியங்களில் உள்ள சிக்கல் இரண்டாம் கட்டத்தில் ஆண்-பெண் சமத்துவம் என்கிற போக்கு எற்பட்டதா? மதம் என்பது குறித்த இன்று சொல்லப்படும் கதைகள் எல்லாம் ஆணியநோக்க கதையாடல்களே. மதம் என்பதே பெண் உடல் குறித்த நினைவிலியுடன்தான் செயல்படுகிறது. அல்லது பெண் உடலை தனக்குள் ஒடுக்கி புதைக்கப்பட்ட வடிவமே. நீங்கள் இந்தப் புரிதலுக்கான புள்ளியை தொடுகிறீர்கள் என்றாலும் அரசும் மதமும் பெண்களை ஒடுக்குகிறது என்பதன் மறுதலையாக பெண் அதிகாரம் பெற்றால் போறும் என்கிற மற்றொரு அதிகார நிலைக்கான ஆவலாக மாறிவிடக்கூடியதாக உள்ளது.

மற்றபடி காமக்கிழத்தி பற்றியும் பரத்தமை பற்றியும் உங்கள் புரிதல் நுட்பமானதும் விரிவாகவும் பேசப்பட வேண்டியவை. இன்னும் உங்கள் கட்டுரை பல ஆழமான நுட்பத்துடன் பிரச்சனையின் ஆழத்திற்கு செல்கிறது. குறிப்பாக தேவரடியார் பற்றிய கருத்துக்கள். பெண்ணியத்துடன் பொது அதிகாரப் போக்கையும் சாதிய ஒடக்குமுறையுயம் முன்வைப்பதும் மிக முக்கியமான செயல்படு கோணத்தை முன்வைக்கிறது.

இன்னும் நிறைய உரையாடலுக்கான குறிப்புகளைக் கொண்டுள்ளது உங்கள் கட்டுரை.

உண்மைநிலை விபசாரிகளாக வாழ்ந்த தேவரடியார்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டார்கள் என்பதுதானே. 'கோயில்களை ஆணாதிக்க சாதி ஆதிக்க நிலவுடமையாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து, தேவரடியார்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தால்.." என்று வாதமிடுவது இல்லாத ஊருக்கு வழிச்சொல்வது போல இருக்கிறது.

முக்கியமாக இந்த வரிகளில் உள்ள அரசியல் தெளிவுதான் இக்கடிதத்தை எழுதத் தூண்டியது.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜமாலன்.
--
http://jamalantamil.blogspot.com/
http://tamilbodypolitics.blogspot.com/
http://kalakuri.blogspot.com/

2008/5/26 puthiyamaadhavi sankaran :


மதிப்பிற்குரிய ஜமாலன் அவர்களுக்கு
வணக்கம்.
உங்கள் ஆழ்ந்த வாசிப்பில் எழுந்த கேள்விகளுக்கும் அதைப் பதிவு
செய்தமைக்கும் மிக்க நன்றி.
இனக்குழு வாழ்க்கையில் பெண்ணின் தலைமை இருந்தது. அவளே அந்த இனத்தை வழிநடத்தும் தலைவி.
வேட்டையாடுதல், கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணுதல், தன் இனக்குழுவைப் பாதுகாத்தல், தன் இனக்குழுவை
விருத்தி செய்தல்.. இதுவே வாழ்க்கை. இக்காலக்கட்டத்தில் பெண்ணின் மாதவிடாயும், பிரசவமும்
ஆணால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால் அவளிடம் பயம் கலந்த மரியாதை, அச்சம்,
ஏன் பெண் வழிபாடாக அதுவே மாறியது. நாட்டார் வழிபாட்டில் இன்றும் ஆடு, கோழி, பன்னி என்று
ரத்தத்தால் வழிபாடு நடத்துவதும். ரத்தத்தின் நிறத்தில் நெற்றியில் இன்றுவரை தொடரும் திலகமிடுதல்
எல்லாம் அந்த வாழ்வியலின் எச்சங்கள் தான்.
தமிழ்க் கடவுள் குமரன், பெண் தெய்வம் குமரி. குமரன், குமரி என்ற சொற்றொடர்கள்
ஆண்பால், பெண்பால் சொற்கள்,
கணவன் என்ற ஆண்பாலுக்குப் பெண்பால் சொல் என்ன என்று கேட்டால் மனைவி என்று சொல்லுவோம்.
இது இலக்கணம், உலகம் தழுவிய பாலியல் விதி. (gender ) ஆனால் நம் குமரன் நம் குமரியின் காதலனோ
கணவனோ அல்லன். ஏன்?
குமரி என்று வழிபடும் பெண் தெய்வத்தின் மகன் குமரன். இதுதான் தாய்வழிச் சமூகம் ஆண்வழி தலைமையை
நோக்கி நகர்ந்தப் போது ஏற்பட்டது.
என் கட்டுரையின் தாய்வழிச் சமூகம் அதன் அடுத்தக்கட்டம் பெண்-ஆண் சமத்துவம் என்று எழுதியுள்ளென்.
சொற்களை அதன் வரிசைகளை மீண்டும் பாருங்கள். ஆண்-பெண் சமத்துவம் அல்ல. தலைமையிலிருந்த
பெண்ணுக்குத் துணையாக போர்புரிந்தவன் சிறிது சிறிதாக அவளுக்குச் சமநிலையை அடையும் காலக்கட்டம்.
எனவே தான் ஆண்-பெண் சமத்துவம் என்று சொல்லாமல்,
பெண்-ஆண் சமத்துவம் என்று எழுதியுள்ளேன்.

முதல்நிலை: பெண்-தலைமை - இனக்குழு வாழ்க்கை - - நிலவுடமை அற்ற சமுதாயம்.
இரண்டாம் நிலை: பெண்-ஆண்.. தலைமை -இனக்குழு வாழ்க்கை மாற்றம் பெறும் நிலை. வேளாண்மையின் தோற்றநிலை
தனிநபர் நிலவுடமை இல்லை. இந்த வேளாண்மையைக் கண்டுபிடித்தவளும் பெண்தான்.
மூன்றாம் நிலை: ஆண் தலைமை, நிலவுடமை, உடமை வரும்போது வாரிசுரிமை வருகிறது. உரிமைகளுக்காகவும்
உணவுக்காகவும் போரிட்ட களம் மாறி, நிலவுடமைக்காகப் போரிட்ட காலக்கட்டம்.
இக்காலக்கட்டத்திலும் பெண் ஆணுக்கு அடிமையில்லை.
அடுத்தக்கட்டம்: பேரரசுகள். நடுகல்வழிபாடு மறைந்து பெருந்தெய்வங்கள் வழிபாடு புகுந்தக் காலக்கட்டம்.
இந்துமதம், கிறித்துவமதம், இசுலாம் எல்லா மதங்களும் சிறுதெய்வ வழிபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்து
பெருந்தெய்வ வழிபாட்டை நோக்கி மனித சமூகத்தைப் திருப்பியதை அறிவோம்.
ஒவ்வொரு காலக்கட்டமும் மாற்றமும் நிகழ பலநூற்றாண்டுகள் ஆனது என்பதையும் நினைவிலிருத்திக் கொள்ள
வேண்டும். கிட்டத்தட்ட இந்த மாற்றத்தின் எல்லா கோடுகளையும் சங்க இலக்கியத்தின் அகம், புறம் இரண்டிலும்
நாம் சான்றுகளுடன் நிறுவ முடியும். சங்க இலக்கியம் எழுதப்பட்ட காலம் ஒரு பரந்துப்பட்ட காலமாக இருக்க
வேண்டும்.
நிற்க, பெண்ணுரிமை என்றால் ஆண், குடும்பம், சமூகம் அனைத்தையும் சகட்டு மேனிக்கு எதிர்ப்பது,
கூக்குரலிடுவது என்று சிலர் நினைக்கிறார்கள். என்னளவில் நான் இந்தப் பார்வையிலிருந்து சற்று
விலகி நிற்கிறேன். பெண்ணுரிமை என்பது ஆணையொ குடும்பத்தையோ எதிர்ப்பதல்ல,
"நான் பெண், உன்னிலிருந்து வித்தியாசமானவள். நான் நீயல்ல,.
அதனாலேயே என்னைக் குறைத்து மதிப்பிடும் உன் அளவுகோல்களை
தூர எறிந்துவிடு."
இது குறித்து என் கருத்துகளை "உறவுச்சிக்கல்கள்" என்ற கட்டுரையில்
விரிவாக எழுதியுள்ளேன்.
http://puthiyamaadhavi.blogspot.com/search?updated-max=2008-02-04T23%3A34%3A00-08%3A00&max-results=7
http://www.blogger.com/posts.g?blogID=1341847542020354313

வாழ்த்துகளுடன்,
புதியமாதவி,
மும்பை.

சொல்ல மறந்துவிட்டேன்.

நிற்க, பெண்ணுரிமை என்றால் ஆண், குடும்பம், சமூகம் அனைத்தையும் சகட்டு மேனிக்கு எதிர்ப்பது,
கூக்குரலிடுவது என்று சிலர் நினைக்கிறார்கள். என்னளவில் நான் இந்தப் பார்வையிலிருந்து சற்று
விலகி நிற்கிறேன். பெண்ணுரிமை என்பது ஆணையொ குடும்பத்தையோ எதிர்ப்பதல்ல,
"நான் பெண், உன்னிலிருந்து வித்தியாசமானவள். நான் நீயல்ல,.
அதனாலேயே என்னைக் குறைத்து மதிப்பிடும் உன் அளவுகோல்களை
தூர எறிந்துவிடு."
இது ஒரு ஆரோக்கியமான பார்வை.

வாழ்த்துக்கள்
ஜமாலன்.

2008/5/26 Jahir Hussain :

தோழர் புதியமாதவிக்கு..

முதலில் உங்களது விரிவான விளக்கத்திற்கு நன்றி. பேரளவில் உங்களது கருத்துக்களில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. இதை நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இக்கருத்துக்கள் பலமுறை எதிர் கொள்ளப்பட்டவை என்றாலும், உங்கள் விளக்கங்கள் சரளமாகவும் சுருக்கமாகவும் தொகுக்கப்பட்டள்ளது. அதிலும் குறிப்பாக மார்க்சிய (இதை நீங்கள் ஏற்பவராகத்தான் தெரிகிறது உங்களை முழுமையாக வாசித்தப் பிறகே உறுதிப்படும்.) வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் பெண்ணிய வரலாற்றை நீங்கள் தொகுத்திருப்பது உங்களது ஆழந்த மற்றும் வித்தியாசமானப் புரிதலைக் காட்டுகிறது. குமரன் குமரி பற்றிய விளக்கம் புதிதாகவும் முதன்முறை உங்கள் மூலம் நான் புரிந்து கொண்டேன். குமரனுக்க வேல்தந்து அசுரனை அடக்குதலையும் இதனுடன் இணைத்த வாசிக்கலாம். நன்றி. நிற்க.

நான் முன்வைத்த கோணத்தையும் உங்கள் உரையாடலின் கோணத்தையும் இணைப்படுத்தி நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். விளக்கங்களுக்கு மீண்டும் நன்றி.

எனது பார்வை என்பது இன்றைய பெண் என்கிற கருத்தாக்கத்தை பண்டைய பெண் என்கிற கருத்தாக்கத்துடன் ஒப்பு நோக்கி பார்க்கலாமே ஒழிய ஒன்றுபடுத்தி பார்க்க முடியுமா? என்பதுதான். சமீபத்தில் நான் படித்த ஹிஸ்டீரியா பற்றிய ஒரு ஆய்வில் மேற்குலகில் 18-ஆம் நூற்றாண்டு வரை (மறுமலச்சிக்காலத்திற்கு முன்புவரை) பெண் ஒரு சக மனித ஜீவி என்கிற கருத்தே இருந்ததில்லை என்றும். பாலியல் என்பதில் ஆண்களே முதன்மையாகவும் பெண்கள் ஒரு இன உற்பத்திக்கானவர்களாக மட்டுமே கருதப்பட்டார்கள் எனறு படித்திருக்கிறேன். பெண் உணர்வு பற்றிய புரிதலே அவர்களக்கு இல்லை என்றும். (இங்கு நீங்கள் மனுவின் பெண் பற்றிய நினைவிலி என்ன என்பதை இணைப்படுத்திப் பார்க்கலாம். மனு வரையறுக்கும் பெண்? ஏன் திருவள்ளுவர், தொல்காப்பியர் பெண் குறித்து முன்வைப்பவை ஆதிகக்ச சொல்லாடலே என்பதில் மாறுபாடு இருக்காத என்றெ நினைக்கிறேன்.) இதனை நாம் கீழ்திசை நாடுகளான நமக்கு பொறுத்த முடியாது என்றாலும்.. இன்று நாம் பேசும் "பெண்" என்கிற கருத்தாக்கம் குறித்த பிரச்சனையாக இது இருப்பதை உணரலாம். போகட்டும். "பெண்" குறித்த வரையறை சார்ந்ததே எனது பிரச்சனை என நினைக்கிறேன்.

எப்படியோ உங்கள் பதில் எனக்கு மேலதிக புரிதலை தருவதாக உள்ளது. அடிப்படையில் நான் ஒரு ஆய்வாளனோ எழத்துடன் முழுநேர உறவடையவனோ அல்ல. அதனால் எனது பேச்சை பொருட்படத்த வேண்டியதில்லை. போகிற போக்கில் காதில் பட்டதாக கொள்ளுங்கள்.

இப்பரச்சனைகள் குறித்து எனது கருத்துக்களை இங்கு விளக்க முயன்றுள்ளேன். (http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_7002.html)
வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

மற்றபடி உங்களது பிளாக் இருப்பது எனக்கு தெரியாது. அதனை முழுமையாக முதலில் படித்து விடுகிறேன். சற்றுமுன்தான் உங்கள் மற்றொரு கட்டுரை கீற்றில் படித்தேன். அக்கரமாஷி. அதிலும் உங்களது பார்வை சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் தந்த உறவுமுறை பற்றிய தொடுப்பில் அப்பதிவை அடைய முடியவில்லை. அது பிரச்சனை இல்லை உங்கள் பதிவில் தேடிக்கொள்ள முடியும்தானே.

மற்றபடி உங்கள் பொருட்படுத்தலுக்கு மீண்டும் நன்றிகள்.

தோழமையுடன்
ஜமாலன்.

No comments:

Post a Comment