தானாறம்
தன்னாறம் அம்மை
தானாறம்
தன்னாறம்
தானாறம்
தன்னாறம் – தேவி
தானாறம்
தன்னாறம்
பெண்கள்
கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஆண்டு 40 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் ஆற்றுக்காலில்
கூடப் போகிறார்கள். 108 தேவிகளும் இறங்கிவந்து அப்பெண்களுடன் சேர்ந்து செவ்வாடை அணிந்து வலம் வரப்போகிறார்கள்.
இரண்டு கரங்களிலும் சிலம்புடன் இளம்பெண் ஒருத்தி கண்ணகி கதையைப் பாடிக்கொண்டே
ஆடி வருகிறாள்.
அரிவாளும்
பழஞ்சிலம்பும்
கையிலேந்தும்
தங்கமகள்
நல்லவாரி
திருவடி வணங்கி
கதை சொல்லுவோமே..
என்று
பாடிக்கொண்டே கழுத்தில் தொங்கும் எலுமிச்சை மாலை ஆட
நெற்றியில்
பெரிய சிவப்பு பொட்டு இரத்தமாக வடிய வடிய அவள் கால்சிலம்பு ஆடி வருகிறது.
அவள் பின்னால் தலைவிரிக்கோலத்தில்
பகவதிகள்.. ஒரு கையில் சிலம்பு, இன்னொரு
கையில் கொடுவாள், இடையில் மணி கோர்த்த ஒட்டியாணம்.. முன்னால் செல்லும் பெண் பாடப்பாட செவ்வாடை பகவதிகள் விழிகளை உருட்டி மணிப்பொருத்திய
கொடுவாளை அசைத்துக் கொண்டு அவளைப் பின் தொடருகிறார்கள். அந்த
நாளில் இப்பெண்கள் தங்கள் பெயரிழக்கிறார்கள்.
தங்கள் அடையாளமிழக்கிறார்கள். அந்த ஒரு நாளில்
இப்பெண்கள் எல்லோருமே பகவதிகள்தான்.. அவர்கள் நடக்கும்போது கொடுவாள்
மணியோசையும் இடுப்பு பட்டி மணியோசையும் சேர்ந்து ஆற்றுக்கால் மணியோசை கட்டி ஆடி நடந்துவருவது
போலவே இருந்தது.
கருவறையில் இரு தேவிகள் செவ்வாடை
பகவதிகளுக்காக காத்திருக்கிறார்கள். கத்தி. கேடயம், சூலம், அட்சயப்பாத்திரம்
தாங்கிய
கைகளுடன்
ரத்தினம் போர்த்திய பொன்னாடையில் கருவறை தகதகவென
மின்னுகிறது.
****
அடங்கவில்லை அவள் கோபம் இன்னும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் ஆயிரமாயிரம் பெண்கள் அவள் வாசலில்
படையலிட்டு அவளுக்கு ஆறுதல் சொல்லியும் ஆறவில்லை அவள் மனம். அதில்
கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டே இருந்தது அவள் தீ.
அது கோபம் மட்டும்தானா?
கோபம் என்றால் யார் மீது?
அவளை வஞ்சித்தவர்களை எல்லாம் எரித்து
சாம்பலாக்கியப் பிறகு அவள் கோபம் தணிந்திருக்கவேண்டுமே, கடலில்
மூழ்கிய அவள் புகாருடன் சேர்ந்து அதுவும் மூழ்கி அடங்கி இருக்க வேண்டுமே, ஏன் அடங்கவில்லை?
இது யார்
மீதான கோபம்?
அவள் மீதான
கோபமா?
அவள் இருத்தலின்
மீதான கோபமா?
அந்த அரசவையில்
அவன் உயிர்ப் பிரிந்தவுடன் அவளும் சரிந்து
விழுந்து உயிர்விட்ட தருணத்தில் கேட்டாளே ஒரு கேள்வி..
‘கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என! ஏன் அப்படிச் சொன்னாள்? அதைச் சொல்லும்போது அவள் பார்வை..
அது தன் இருத்தலை நோக்கி அவள் கேட்ட கேள்வியா! பதில் தேடித்தான் காடும் மலையும்
காலமும் கடந்து இவள் அலைகின்றாளா!
எதைத் தேடி அலைகின்றாள்?
இனி.. அவள் வாழ்வில் அவனில்லை என்பது உறுதியான பிறகும் அவள்
இருப்பது எதற்காக? யாருக்காக?
இருத்தலை
அவளுக்குத் தண்டனையாக்கியது யார்? எது?
சோமகுண்டமும் சூர்யகுண்டமும் காமக்கோட்டமும்
கடவுளின் வரமும் ‘பீடன்று’ என்று விலக்கிய
அவள் அறம் அவளை வாழவைக்கவில்லையே! அறம் அவளை அவள் இருத்தலை அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதே.
காமக்கோட்டத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி அவள் தன் இரவுகளின் பசி தீர்க்க மறுத்தது குற்றமா?
இரவில் மட்டுமின்றி பகலிலும் மாறாத பார்வையுடன் அவன் தனக்கானவனாகவே இருக்க
வேண்டும் என்று அவன் அறியாத கற்பனை உலகத்தில் வாழ்ந்தவள் தானா அவளும் !
காற்றைப் போல காலமெல்லாம் சுற்றிச்
சுழலும் அவளை எதில் பிடித்து அடைத்து வைக்க முடியும்? காற்று
அவள் சுவாசம் மட்டுமா? இல்லை காற்றாக இப்போதும் அவளுக்குள் அவன்
மட்டும்தான் வேர்விட்டு மலைக் குன்றுகள் எங்கும் படர்ந்துப் பரவி.. வியாபித்திருக்கின்றானா.. அவன் ஏன் அவளுக்குள் இன்னும்
மரணிக்கவில்லை. அந்த மரணம் நிகழாதவரை அவளுக்கு அவள் இருத்தலே
தண்டனைதானா! மரணம் அவனுக்கு
விடுதலை. அவளுக்கு இப்போதும் அவள் செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக
துரத்துகிறது. அவன் குற்றமற்றவன் என்று வாதாட அவள் இருந்தாள்.
அவளுக்காக…! யாருமில்லை. காலம் அவளை வஞ்சித்துவிட்டதா!
******
கொடுங்களூர் அம்மே காளி
குலதேவதை நீ தானடீ.
நீ வந்து திருவரம் அருள்வாய்
எம்மைத் தேடி…
பேரறியா நாடுகள் தாண்டி
பேரழகி கண்ணழகி
நேராக எம்மில்லம் நாடி
சாபம் தீர்ப்பாளோ…
பக்தர்கள்
கூட்டம் கொடுங்களூர் வாசலில் அவள் வரம் வேண்டி ஆடுகிறது.
ரகசிய
அறையின் கதவுகள் மூடியே இருக்கின்றன.
தினமும் அதிலிருந்து கோவிலின் கருவறைக்கு அவளை அழைத்து வந்து இருத்தி
வணங்கிட
தந்திரிகள்
தாந்தரீக முறையில் சக்கரங்களை வரைந்து அவளை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். செவ்வாடை அசையவில்லை.
பழஞ்சிலம்பு ஒலிக்கவில்லை.
விதவை ரூபையாம் தூமவதியை
– நான்
தொழுதன்னேன்.
திங்கள் சூடும் பகவான்டே பத்தினியை
நான் தொழுதன்னேன்……
பத்தினியின்
உடல் கணவனின் காமத்தை பல காலம் இழந்திருந்த உடல். அப் பெண்ணுடலின் காமத்தைக் குளிர்விக்க வேறு
வழியின்றி தெறிப்பாடல் பாடுகிறது ஒரு கூட்டம்.
தானாரோ தன்னாரோ - தக
தானாரோ தன்னாரோ
கொடுங்கல்லூர் அம்மயே ஓக்கணு மெங்கில்
கொடிமரம் போலொரு குண்ண வேணம்
அம்மயிந் அரமுடி அசயும் அழக
விலகியால் தெரியிம் ரோமக்காடு
பஞ்சுபோலவே விரியும் ரோமக்குவியல்
விரிஞ்ஞால் தெரியும் ஆழக்கிணறு
குருவாயூரப்பன்றெ தாக்கோல் கொண்ட
கொடுங்கல்லூர் அம்மயிட பூட்டு
திறக்கணம்
அம்மயின்றெ பிரஷ்டம் கண்டாலறியும்
கண்டதும் குண்ண எழும்பி நிற்கும்
ரண்டு பந்தெ தூக்கி கட்டி
இடயில் இடவெளி இல்லதாக்கிய
பிரஷ்டத்தில் ஓப்பதே சுகமெந்து
அறியாம்
அம்மனின் பிரஷ்டங்கள் இடயில்
செருகியால்
இழுத்து திருப்பி எடுக்கான் பாடில்லா
கருத்ததாயி ஒள்ள ரோமக்காட்டில்
கைவிட்டு தடவியால் அம்மக்கு சுகமே
கொடுங்கல்லூர் அம்மெயெ பண்ணந மெங்கில்
கொடிமரம் போலொரு குந்தம் வேணம்
அவள்
பள்ளிகொண்டிருந்த ரகசிய அறையின் கதவுகள் தெறிப்பாடல் கேட்டு இறுகப்பூட்டிக் கொண்டன. அவள் உடல் கூசியது. காமக்கோட்டம் தலைகுனிந்தது.
கொடுங்களூரில் இருப்பவளை
ஆற்றுக்கல்லுக்கு அழைத்து
ஆற்றுப்படுத்த நினைத்தார்கள் பெண்கள். வா , எங்களோடு
வந்து தங்கிவிட்டுப் போ.. உன்னில் நாங்களும் எங்களில் நீயும்
இருப்பதை
இந்த
மண்ணும் விண்ணும் அறியட்டும்,
வா தாயே வா, வா மகளே வா… வா தேவீ வா…
மாசி மாதம் பூர நட்சத்திரம் பெளர்ணமி
கூடும் நாள், காலையில் சிறுமிகளின் தாலப்பொலி .. சிறுமிகள் புத்தாடை அணிந்து தலையில் மலர் கீரிடம் தாங்கி , கையில் தாம்பளத்தில் தீபம் ஏற்றிக்கொண்டு தங்கள் பெற்றோர்களுடம் அவளை நோக்கி
நடந்து வருகிறார்கள்.
கோவிலின் முன்பக்கம் போடப்பட்டிருக்கும்
பந்தலில் கண்ணகி கதை பாடலாக பாடுகிறார்கள். அதில் பாண்டியன் மரணிக்கும் பாடல் பாடப்பட்டவுடன் கோவில் தந்திரி
கருவறையிலிருந்து தீபம் ஏற்றி வந்து, மேல் சாந்தியிடம்
(தலைமை பூசாரி) கொடுக்கிறார்.. அவர் கோவில் பண்டார அடுப்பை அத்தீயைக் கொண்டு பற்ற வைக்கிறார். செண்டை
மேளம் அடித்து வெடி முழக்கத்துடன் வாய்க்குரவை ஒலிக்க ‘பண்டார
அடுப்பு ஏற்றியாச்சு’ என்று அறிவிக்கிறார்கள் .
. கோவில் பூசாரிகள் வரிசையாக அனைத்துப்
பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிக்கிறார்கள். கோவிலைச் சுற்றி
பத்து பனிரெண்டு கிலோ மீட்டர் வரை பெண்கள் வரிசை வரிசையாக அடுப்பு மூட்டி பொங்கல் வைக்கிறார்கள்.
. அப்போது வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் பூ தூவி பொங்கல் பானைகளுக்கு
பூஜை நடக்கிறது. கருவறையிலிருந்து பகவதி வெளியில் வருகிறாள்.
அங்கிருக்கும் ஒவ்வொரு பெண்ணிலும் அவளே தன்னை இருத்திக் கொள்கிறாள்.
ஒவ்வொரு அடுப்பின் நெருப்புத்துளியிலும்
அவள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் ரகசியம் அவளுக்கும் புரிகிறது. இவர்களின் நெருப்பு எதை எரிக்கிறது? எதை மறப்பதற்கு வருகிறார்கள்?
இது யாருக்கான வரம் வேண்டி படையல்! கடந்த காலம்
ஏன் இறந்தக் காலம் ஆகவில்லை? ,மரணம் ஏன் மீண்டும் மீண்டும் மரணிக்காமல்
தொடர்கிறது. எல்லாவற்றையும் எரித்துவிட முடியுமா தேவி..
கொடுங்களூரில் இருப்பவள் இந்தப் பத்து நாட்களும் ஆற்றுக்காலில் வந்து
தங்கிச் செல்கிறாள்.
ஆற்றுக்கால்தான்
காலம் காலமாக அவளை அரவணைத்து ஆற்றுப்படுத்தி அவள் இருத்தலை அர்த்தமுள்ளதாக்குகிறது.
*****
எதிலிருந்து தப்பித்து விட வேண்டும்
என்று காடு மலை ஆறு குளம் தாண்டி வெகுதூரம்
பயணித்து வந்தாளே அது அவளைத் துரத்திக் கொண்டே வருகின்றது. அவள்
ஓடிக் கொண்டே இருக்கிறாள்…
இருளடர்ந்த காட்டில் பேயுரு கொண்டு
அலைந்துக் கொண்டிருக்கும் முதியவளின் குடிசையிலிருந்து மாம்பழ வாசனை . கதவில்லாத குடிசைக்குள் அவள் நுழைவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை.
அக்குடிசையில் மனிதக் காலடிச்சுவடுகளின் எந்த ஓர் அடையாளமும் இல்லை.
துருத்திய எலும்புக்கூடு,
காற்றைப் போர்வையாக்கி இருளில் அசைந்துக் கொண்டிருந்தது. இருள் ஒரு புகைப்போல அசைந்து அவளருகில் வந்து “ வா கண்ணகி,
உனக்காகதான் காத்திருந்தேன்” என்றவுடன் குரல் வந்த
திசை நோக்கி திரும்பினாள். “ நீ எப்போதாவது என்னிடம் வருவாயென
தெரியும்” அந்தக் குரலில் புனிதவதியை அடையாளம் கண்டு கொண்டாள்
கண்ணகி.
இரு பெண்களும் கட்டி அணைத்துக்
கொண்டார்கள். அந்தக் குடிசையில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் காணாமல் போனது. இருத்தலின் ரகசியம் உடைந்தப் போது காலம் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றது.
யட்சிகள்
கனவுகாண ஆரம்பித்தார்கள். பறவைகள் விடியலை மறந்து சிறகுகள்
விரிக்காமல் கூடுகளிலிருந்து எட்டிப் பார்த்தன. புள்ளி மான்கள்
துள்ளித்திரியாமல்
மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து புதருக்குள் மறைந்தன.
இருவருக்கும் பேச எவ்வளவோ இருந்தது.
எதிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்கள் ? வனத்தின்
மெளனம்.. குடிசையின் மெளனம், அப்பெண்களின்
மெளனவெளியில் முட்டி மோதி..
கண்ணகியின் விழிகளில் இப்போதும்
அந்தப் பெருமிதம் மின்னியது.
“பீடன்று” என்று பெண் அறம் பேசிய பெருமாட்டி அல்லவா அவள்!
இருக்காதா பின்னே ! அவனின்றி விருந்தோம்பல் இழந்தேன் என்று வருந்தியவளும் இவள் தானா! அவனின்றி அவளுக்கு விருந்தோம்பல் மறுக்கப்பட்டதென்றால்… விருந்தோம்பல் பண்பாடு ச்சே.. .. புனிதவதிக்கு அதற்குமேல்
யோசிக்க முடியவில்லை.
குடிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஓலைச்சுவடிகளை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த கண்ணகி, திரும்பிப்
பார்த்து,
“எல்லாத்தையும் எழுதி இறக்கிவச்சிட முடியுமா புனிதவதி?”
“தெரியல”
“ பிறகு ஏன் இந்த திருவந்தாதியும் ஓலைச்சுவடிகளும் எழுத்தும் ! ஆன்மீகத் தேடலா?”
“அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!”
“அப்படின்னா”
“ஆம், அப்படித்தான் கண்ணகி!”
“அவனை மறந்திட்டீங்களா புனிதவதி?”
“ அவனை எப்படி மறப்பதுனு இன்னும் தெரியல..! அது தெரிந்தா
எதற்கு இந்த எழுத்தும் தேடலும் கண்ணீரும் கதறலும்”
“இடர் களையா ரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும்
நெறி பணியா ரேனும்
அன்பு
அறாது, என் நெஞ்சு
அவர்க்கு”
புனிதவதி விம்மினாள். அப்போது பனிமலையில் பூகம்பம். நதிகள் வெள்ளப்பெருக்கெடுத்து
சமவெளியில் கட்டுக்கடங்காமல் பாய்ந்து ஓட ஆரம்பித்தன. நதிகளின்
சீற்றம் கண்ட கடல் உள்வாங்கியது. பாறைகள் மவுனத்தில் உறைந்துப்
போயின.
கண்ணகியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. “தேவீ… அவன்… இவன்..ஈசன்.. எல்லாமும் அவன் தானா! யெளவனம்
தொலைத்தப் பின்னரும் அவன் தொலையவில்லையா! இந்த எலும்பும் தோலுமாக
பேயுரு கொண்டு அலையும் போதும் அவன் மறையவில்லையா! சொல்லுங்க புனிதவதி..”
“வேறு யாரிடத்தும் ஆளாக முடியாமல்
இந்தப் பெண் தவிக்கிறேன்.
நான் என்பது
அவன் கண்ட அவன் அனுபவித்த இந்த உடல் என்று நினைத்துதான் இந்த உடல் துறந்தேன்.. ஆனால் இப்போதும் அவனைத்
துறக்கமுடியாமல் அலைகிறேன். அவர்க்கே எழுபிறப்பும் ஆளாக வேண்டும்
என்று எனக்குள் ஒருத்தி இப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்!”
“இதை அவன் அறிவானா. தேவி?”
“என்னை அறிந்தவன் தானே இதையும்
அறியமுடியும்?
கண்ணகி
மெல்ல புனிதவதியை அணைத்துக் கொண்டாள்.
அறிதலும் புரிதலுமற்ற உறவு.. ஏன் அவர்களைத் துரத்துகிறது?
“அவன் வேறு, சிவன் வேறு தானே! அப்படித்தானே உன்னை வாசிக்கிறார்கள்!
அவன்தான் இவனா! “
அவன் மட்டுமே என்னைப் பெண்ணாக பார்த்தவன். இவன் என்னை அப்படிப் பார்க்கவில்லையே, ‘தாயே’
என்றழைத்தான். அவனின்றி இவனை என் கருவறை சுமப்பது
எப்படி? பெற்றெடுத்த
பிள்ளையின் முகத்தில் ஒரு தாயும் காண்பது மகனின் சாயலில் அவனை அல்லவா!
ஒன்றை துணிந்தொழிந்தேன்,
அதன் பின்னரும் அந்த ஒன்று என் உள்ளத்தில் பிறிதொன்றாகவே முடியாமல் அலைக்கழிக்கிறது.
பாற்கடலில்
விஷமருந்தி உலகெலாம் காத்தவனுக்கு என் உள்ளத்தின் ஒரு துளி விஷமருந்த முடியவில்லையா!
பெண் உள்ளம் பாற்கடலை விட பெரிதா?”
கண்ணகி திருவந்தாதி வாசிப்பதை நிறுத்தினாள்.
இருவரும் குடிசையை விட்டு வெளியில் வந்தார்கள். மலை உச்சியிலிருந்து பார்க்கும்போது
ஆற்றுக்கால்
புகைமண்டலத்தில் மிதந்துக் கொண்டிருந்தது.
மேக மண்டலத்திலிருந்து இறங்கி வந்த வானூர்தியில் கோவலன் அதே மயக்கும்
விழிகளுடன் “மாசறு பொன்னே வலம்புரி முத்தே” என்று அவளை விழிகளால் அழைத்தான். கண்ணகி புனிதவதியின் கைகளை இறுகப்பற்றிக்
கொண்டாள்.
நன்றி: வாசகசாலை இதழ் 100, நாள் : 05 அக்டோபர் 2024
#புதியமாதவி_கதைகள்
#கண்ணகி_புனிதவதி_ஆற்றுக்கால்பகவதிகள்
#திருவந்தாதி_புதியமாதவி