சாதியும் அரசு அதிகாரங்களும்
🔥🔥🔥🔥
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்
நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி
நம் அரசு சாதி காப்பாற்றும் அரசு
- தந்தை பெரியார்.
“ இந்தியாவில் சாதி காற்றிலும் கலந்திருக்கிறது “ என்று ரெய்ஸ்லி எழுதியது ஒரு சத்தியவாக்கு மூலம்.
“அந்த நாட்டில் (இந்திய நாட்டில்) மதத்தின் விதிகள், நாட்டின் சட்டங்கள், கெளரவ நெறிகள் ஆகியன எல்லாம் ஒன்றில் ஊன்றி இருக்கிறது. அந்த ஒன்று மனிதனை நிலையாக என்றென்றைக்கும் தன்னோடு பிணைத்து வைத்து இருக்கிறது. அதன் பெயர் சாதி ‘ என்று இந்திய சமூகத்தை மிகச் சரியாக சாதி அடையாளமாக கண்டவர் எட்மண்ட் புரூக்.
தமிழ்ச் சமூகத்தில் சாதி என்ற சொல் நம் சொல்லகராதியில் இல்லை என்றாலும் மேலோர், கீழோர் என்ற பாகுபாடுகளும் அவர்களின் வாழ்க்கை முறைகளும் சடங்குகளும் கொண்ட ஒரு சமூக நிலை உருவாகிவிட்டது என்பதை தொல்காப்பியம் பொருளதிகாரமும் பிற்கால சங்க இலக்கியப் பாடல்களும் உறுதி செய்கின்றன. “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்ற திருவள்ளுவரின் வாசகத்தை நாம் தமிழரின் பெருமைமிகு அடையாளமாக சொல்லிக்கொண்டாலும் அந்த வாசகத்தின் உட்பொருளாக ‘பிறப்பொவ்வாமை’
என்ற நிலை வந்துவிட்டதையும் பிறப்பால் உயிர்களுக்கு இடையில் பிரிவினைகள் கோலோச்ச ஆரம்பிக்கும் காலத்தில்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றதொரு கலகக்குரலின் தேவை எழுகிறது என்பதையும் சேர்த்த வாசித்தாக வேண்டும்.
சாதி எப்போது தோன்றியது என்பதை எவராலும் அறுதியிட்டு சொல்லிவிட முடியவில்லை. ஆனால் அது எப்படி இந்திய மண்ணில் காலூன்றியது என்பதை அரசியலும் மானுடவியலும் ஆய்வு செய்திருக்கின்றன. சாதியை இந்திய மண்ணில் நிலை நிறுத்தியதில் “மனு’ முக்கியமானவர். அவர் எழுதிய ‘மனுதர்ம சாஸ்திரம் இன்றுவரை சாதியின் அறுபடாத கயிறாக இருக்கிறது. ‘ அதன் சரித்திரப் பூர்வமான தகுதி எதுவாக இருந்தாலும், இந்திய சமூகத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு அதனைச் செயல்படுத்துவது என்ற நோக்கில் இந்நூலுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிட்டிய சட்ட முக்கியத்துவம் அதற்கு முன்பிருந்த தகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு தகுதியை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்படுத்தியது. சாதியை மானுடவியலாக மட்டுமே அணுகும் வலதுசாரி பார்வையின் உள் நோக்கத்தை சாதியின் சமூக அரசியல் பார்வை வெளிப்படுத்தியது.
சாதி எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது ? சாதியை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி ? என்றாய்வு செய்தவர்கள் அனைவருமே சாதியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்திய அக மண உறவுகள், அதாவது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வது என்ற கருத்தையே முன்வைத்தனர். ஆண் பெண் உறவில் இயல்பாக ஏற்படும் காதலும் திருமண உறவும் கூட சாதியைக் காப்பாற்றும் வகையில் நவீன யுக காதலாகவே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதை கவிஞர் மீரா அவர்கள் கிண்டலாக எழுதினார்.
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்.
நீயும் நானும் ஒரே மதம்
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்
வகுப்பும் கூட.
உன்றம் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்..
மைத்துனன்மார்கள்.
எனவே,
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடன் நெஞ்சம் தாம்கலந் தனவே”
( குறும்புத்தொகை)
. யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்.. என்றெல்லாம் பேசப்பட்ட சங்க காலக் காதல் அல்ல இன்றைய காதல்.
இது நவயுகக் காதல், வேறு வகையானது. சாதி மதம் வர்க்கம் எல்லாம் பார்த்துதான் காதலும் வருகிறது. எனவேதான் சாதி ஒழிப்புக்கு காதல் திருமணங்களை வரவேற்போம் என்பதைவிட சாதி மறுப்பு திருமணங்களை வரவேற்போம் என்றார்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்.
சாதி மறுப்பு திருமண உதவிகள் :
சாதி ஒழிப்பைக் கருத்தில் கொண்டே அரசு சாதி மறுப்பு திருமணத்திற்கு உதவிகளை பல திட்டங்கள் மூலம் அறிவித்து செயல்படுத்துகிறது. அவற்றுள் முக்கியமானவை :
அம்பேத்கர் திட்டம்
டாக்டர் சவிதாபென் அம்பேத்கர் உதவி திட்டம்
டாக்டர் முத்துலெட்சுமி நினைவு திட்டம்
இத்திட்டங்களில் உதவி பெற மணமகன் – மணமகள் இருவரில் யாராவது ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. பொதுவாக இந்த உதவிகளைப் பெறுவதற்கு அரசு அதிகாரி யாராவது ஒருவரின் சான்றிதழும் தேவைப்படுகிறது. சில திட்டங்களில் உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது, சில ஆண்டுகள் இடைவெளிகளுடன் இரண்டாவது தவணை வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டின் திட்டத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தனித்துவமானதும் சிறப்பானதுமாகும்.
அப்பெண் 10 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற விதி பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மட்டுமின்றி அப்பெண் எடுக்கும் முடிவுகளின் சுயத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்திட்டங்கள் அனைத்திலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பணமாக வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட உதவித்தொகையாக மட்டுமே இருக்கிறன.
உதவித்தொகைகளும் அதன் தேவையும் முக்கியமானது என்றாலும் சாதியை ஒழிப்பதில் அதன் பங்களிப்பு என்பது பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் இத்திட்டங்கள் எல்லாமும் தொலைநோக்குப் பார்வையுடன் உதவியதாக தெரியவில்லை. இன்றையை இந்தப் பொழுதை எப்படி கடந்து செல்வது என்பதாக மட்டுமே இருக்கின்றன. திருமண வாழ்க்கை என்பது நிகழ்காலமாக மட்டும் இருப்பதில்லை. எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் எந்த உறவுகளும் நிலைப்பதில்லை. நம் இந்திய சாதி சமூகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சமூகத்தின் ஆதரவோ குடும்பத்தின் ஆதரவோ இருப்பதில்லை. போராட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையின் நிரந்தரமான ஒரு பாதுகாப்பு வழங்கும் வகையில் திட்டமிட்டு சாதி மறுப்பு திருமண திட்டங்கள் தீட்டப்படவில்லை. அம்மாதிரியான ஒரு திட்டமோ யோசனையோ கூட இருப்பதாக தெரியவில்லை. அதனால்தான், இந்திய அளவில், பெரியாரின் மண் என்று போற்றப்படும் தமிழ் நாட்டில் சாதி மறுப்பு திருமண விகிதம் பிற
மாநிலங்களைவிட குறைவு. ! மேலும் ஆணவக்கொலைகள் தமிழ் நாட்டில்
சாதி மறுப்பு திருமணங்களின் தலைகளின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் வெட்டரிவாள், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சாதியின் பெயரால் இங்கே நடக்கும்.. அதை எதிர்கொள்ள அரசு வழங்கும் சிறு தொகை உதவியோ தாலிக்கு கொடுக்கும் தங்கமோ காப்பாற்றிவிட முடியாது.
அப்படியானல் என்னதான் தீர்வு ?
உதவித்தொகையும் நடைமுறை சிக்கல்களும் :
2022- 23ல் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்தவர்கள் 2,873. 2018 முதல் 2023 வரை உதவித்தொகை விண்ணப்பித்தவர்கள் 12,846. ( as per social welfare department) இதில் 10,349 விண்ணப்பதாரர்கள் பயன் அனுபவித்தவர்கள். அதாவது ஓராண்டுக்கு சற்றொப்ப 2000 பேர்,
சாதி மறுப்பு திருமணங்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை அரசு கவனிக்க வேண்டும்.
உதவித் தொகை பெறுவதற்கு தேவையானவை என்று அரசு சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. அவை:
1) திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2) திருமண சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
3) திருமண சான்றிதழ் முகவரியும் திருமணம் செய்தவர்களில் ஆண் பெண் யாராவது ஒருவர் முகவரியாக இருக்க வேண்டும்.
4) சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் தேவைப்படும்.
5) சாதி மறுப்பு திருமண சான்றிதழ் வேண்டும். அதை ரெவென்யு ஆபிஸிலே ஆன்லைனிலோ பெறலாம்.
6) மேற்கண்ட ஆவணங்களுடன் திருமணப் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.
7) இந்த விண்ணப்பங்கள் கிராமப்புற பஞ்சாயத்து துறை (Rural Development and Panchayat Raj Department) வழியாகவே அனுப்பப்படும்.
8) இத்தனைக்கும் பிறகு, சமூக நலத்துறை ஒரு சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும். No Objection certificate !!!!!
இதெல்லாம் சரியாக இருந்தால், அதாவது இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டால் அரசு இதற்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு உதவி வழங்கும்.
இதில் நாம் கவனிக்க் வேண்டியது சாதி மறுப்பு திருமணங்களுக்கு சமூகத்தில் வரவேற்பில்லை என்பது மட்டுமல்ல, அதை மாபெரும் குற்றமாகவே கருதுகிறார்கள்/ இச்சூழலில்தான் பஞ்சாயத்திலிருந்து சான்றிதழ் பெற சொல்கிறது அரசு. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களில் குறிப்பாக பெண்கள் தங்கள் கல்வி சான்றிதழோ சாதி சான்றிதழ் பெறுவதோ ஆதார்/ரேஷன் அட்டையை வைத்திருப்பதோ இல்லை. நடைமுறையில் இச்சிக்கல்கள் சாதி மறுப்பு திருமணம் செய்யும் பலருக்கு பலவிதமான பிரச்சனைகளை உருவாக்குகின்றன. எனவே பலர் விண்ணப்பம் செய்வதில்லை.
எதிர்கால உத்திரவாதம்:
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவி செய்வதற்கென்று மாவட்டம்தோறும் காவல்துறையில் ஒரு தனிப்பிரிவு வேண்டும். அது அவர்களுக்குப் பாதுகாப்பு தருவதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
சாதிமறுப்பு திருமணங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை விட முக்கியமானது சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும், என்ற திட்டம். அதற்கான இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் . அவ்வாறு அரசு வேலை ஒதுக்கீடு செய்யும்போது இருவரில் யார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவரோ அவருக்கு அரசு வேலை என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
புதிய சாதி உருவாக்கம் :
கலப்பு மணங்கள் நடக்கும்போது அவர்களின் வாரிசுகள் புதியதொரு சாதியாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் நூற்றுக்கணக்கான சாதிகளும் சாதிகளுக்குள் இருக்கும் உட்பிரிவுகளும் கலப்பு திருமணங்களால் உருவானவை. காரணம், எந்த வருணத்தினரும் வர்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் அதன்பின் அவனும் அவனுடைய சந்ததியினரும் தங்களது பழைய வருணத்திற்குத் திரும்ப முடியாது. அவர்கள் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவர்களாகி விடுவார்கள். அதன்பின் அவர்கள் சமூகத்தின் பிற பிரிவனருடன் கலப்பதும் தடை செய்யப்பட்டுவிடும். இப்படியாகத்தான் வர்ணக்கலப்பு தடை செய்யப்பட்டதுடன், அவ்வாறு தடை செய்யப்பட்ட வர்ணம் தாழ்த்தப்பட்டவர்களாக ஊர்க்கோடியில் ஒதுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. சாதி மேல் கீழ் அடுக்குகளை மாற்றும் சிறிய அசைவுகளும் பெரும் தண்டனைக்குரியதாகவே கருதப்பட்டன. ஒவ்வொரு சாதி தனக்கும் கீழ் இன்னொரு சாதியை உருவாக்கி தன்னை ஆளப்பிறந்தவனாக நினைக்கும் மன நிலையை சாதி சமூகம் அனைத்து சாதியினருக்கும் அவரவர் படி நிலைக்கு ஏற்ப வழங்கி இருக்கிறது. எனவே, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் சந்ததிக்கு சாதி கிடையாது என்பதே சாதி சான்றிதழாக ஏற்றுக் கொள்ளும் வகையில் நம் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
அரசு வேலையில் இருப்பவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பதும் அவர்களின் அடுத்த தலைமுறை சாதியற்ற தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படுவதுமான சூழல் மூன்று தலைமுறைகளுக்குப் பின் சாதியை ஓட ஓட விரட்டிவிடும்.
சாதியும் பண்பாடும்:
தமிழ்ச் சமூகத்தின் பண்பாடும் கலாச்சாரமும் கூட சாதி அடையாளமாகவே வெளிப்படுகின்றன. எனவே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள் தந்தையின் சாதியாகவே சமூகத்தில் கருதப்படுகிறார்கள். ஆண்மைய சமூக நிலையும் இதற்கு சாதகமாகவே இருக்கிறது. இன்னும் சில இடங்களில், சாதி மறுப்பு திருமணம் செய்தல் என்பது சாதி ஒழிப்பாக மாறுவதில்லை. ஆண் பெண் இருவரின் யார் சாதி உயர்ந்த சாதியோ அந்தச் சாதியின் அடையாளங்களை தங்கள் வாரிசுகளின் சாதி அடையாளமாக காட்டும் போக்கு இருக்கிறது. சடங்குகள் பண்டிகைகள் வழிபாடுகள் நம்பிக்கைகள் உணவு முறைகள் என்ற பல கலாச்சார அடையாளங்களில் சாதி மறுப்பு திருமண உறவுகள் மேனிலை ஆக்கத்தையே பின்பற்றுகின்றன. சாதிய மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை சாதி ஒழிப்பு, சாதியற்ற வாரிசுகள் என்பதில் காட்டுவதில்லை. வேஷ பிராமணர்கள், தலித் பிராமணர்கள் என்று இவர்களை சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பண்பாட்டு அரசியல்:
சட்டங்களால் மட்டுமல்ல, வலுவான பண்பாட்டு அரசியலும் சமூக பொது ஜன உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவை. தந்தை பெரியாரின் பகுத்தறிவும் சுயமரியாதையும் ஏன் அவர் முன்வைத்த கடவுள் மறுப்பும் கூட சாதி ஒழிப்பின் அடிப்படைதான். ஆனால் அதை மேனாட்டு நாத்திகவாதமாக மட்டுமே முன்னெடுத்து சென்றதால் பண்பாட்டு நிலையில் அதற்கான அசைவுகளைப் பெற முடியவில்லை. திராவிட அரசியல் தேர்தல் அரசியலின் காரணமாக சமரசங்களின் ஊடாக தன் பண்பாட்டு அரசியலில் தோற்றுப் போய்விட்டதா? என்ற கேள்வி முன்பு எப்போதையும் விட இப்போது எழுகிறது. காரணம், இந்தியா இந்து தேசம், ஒரே தேசம் ஒரே மொழி என்ற அரசியல் துணை தேசிய அரசியலின் குரல்வலையை நெறித்துக் கொண்டிருக்கும்போது பண்பாட்டு அரசியல் பின்வாங்குகிறது. பண்பாட்டு அரசியலை முன்வைக்க வேண்டிய கலை இலக்கிய உலகமும் ஊடகங்களும் ஆட்சி அதிகாரத்திடம் அடிபணிந்துக் கிடக்கின்றன.
தொலைக்காட்சி ஊடகம் இந்தியாவின் தென் கோடியில் வாழும் இந்தியனுக்கும் மகா கும்பமேளாவை எடுத்துச் செல்வதில் காட்டும் ஆர்வத்தை வேங்கை வயல் பிரச்சனைகளுக்கு காட்டுவதில்லை.!
திராவிட அரசியலும் பண்பாட்டு தளத்தில் வலுவாக இயங்கவும் தன் உண்மையான பலத்தை வேறு சில மாற்று வழிகள், உபாயங்கள் மூலம் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்..
சாதி ஒழிப்பே நம் இலக்கு.
சாதி மறுப்பு திருமணம்
அதற்கான பாதை.
சாதியற்ற சமூகம்
நம் எதிர்காலம்.
(பாசறை முரசு சிறப்பு மலரில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை)