Saturday, February 1, 2025

மைக்ரோ கடவுள்கள்

 மைக்ரோ கடவுள்கள்

🦋🦋🦋



 கடவுள்களின் விசுவரூபங்களை வியந்து எழுதிய காலங்கள் முடிவுக்கு வருகின்றன. இலக்கியம் தனக்கான வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் அது எழுதப்படும் காலத்தின் துளியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. கைபேசிகளின் காலமிது. கடவுளும் கைபேசிக்குள் அடக்கமாக அவதாரமெடுக்கிற காலமிது. இலக்கியமும் விதிவிலக்கல்ல.

 அவசரமான வேகமான கைபேசி காலத்தினூடாக பயணிக்கும் போது இலக்கியமும் அதற்கான வடிவத்தை இயல்பாகவே மைக்ரோ வடிவமாக பெறுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

 பக்கம் பக்கமாக எழுதுவதை இன்றெல்லாம் யாருக்கும் வாசிக்க நேரமிருப்பதில்லை என்பதுதான் உண்மை ! எனவே குறுங்கதைகள், மைக்ரோ கதைகளுக்கான காலமாக இன்றைய கைபேசி இலக்கியவடிவமாக குறுங்கதைகளின் வரவு கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

 பஞ்சதந்திர கதைகள், ஜாதக கதைகள் , அக்பர் பீர்பால் கதைகள் இவை அக்காலத்திய குறுங்கதைகள். உலகத்தின் மிகச்சிறிய கதை என்று எர்னெஸ்ட் ஹமிங்க்வே எழுதிய ஆறு சொற்கள் கொண்ட சிறுகதையைத்தான் குறிப்படுவார்கள். அக்கதை : FOR SALE : BABY SHOES, NEVER WORN” அவ்வளவுதான்! இந்த ஆறுசொல் மைக்ரோ கதையை அவர் சவாலாக எடுத்துக் கொண்டு எழுதினார் என்றும் சொல்கிறார்கள்.


தமிழ் இலக்கியப் பரப்பில் , “ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட கதை சரி”  என்பதும் அவர் கதையைப் போலவே மைக்ரோ கதைதான். எழுதியவர்தான் யாரென்று தெரியவில்லை. ! 80களில்  ஈழம் எழுத்தாளர்  ஐ சாந்தன் எழுதிய கடுகுக்கதைகள் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியவை என்பார். பா. ராகவன்.

அதன் பாதிப்புதான் வார இதழ்களில் வெளிவந்த ஒருபக்க கதைகள் .

ஆனால் இன்று வெளிவரும் மைக்ரோ கதைகள், குறுங்கதைகள் நவீன மைக்ரோ கதைகள். காரணம் வடிவத்தில் மட்டுமே இக்கதைகள் குறுங்கதைகள் என்ற பகுப்பில் இடம்பெற்றாலும் முந்தைய குறுங்கதைகளிலிருன்டு மாறுபட்டவை. 

இன்றைய குறுங்கதைகள்,

கவிதையிடமிருந்து கவித்துவத்தையும் சிறுகதையிடமிருந்து கதை சொல்லலையும் பெற்று உருப்பெற்ற வடிவம். “ என்று குறுங்கதையின் புதிய பாய்ச்சலை அடையாளம் காட்டுகிறார் மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன். எழுத்தாளர் அன்பாதவன் எழுதிய “   நேத்ராவதியின் கடவுள்” குறுங்கதைகளும் நவீனத்துவத்தின் இதே பாய்ச்சலைக் கொண்டு அவருக்கே உரிய மொழி நடையில் தனித்துப் பயணிக்கின்றன.

“செய்திகள் வழியாகவும் பிறரின் நேரடி அனுபவங்கள் வாயிலாகவும் சொல்லக்கேட்ட குறிப்புகளாகவும் கிடைத்தவை இக்கதைகள் “ என்று கதைகளின் முகவரியை தெளிவாக முன்வைக்கிறார் அன்பாதவன்.. * *  * 

• உயிர்த்துளி கதை, (பக் 13) கதையில் சமகால ரயிலில் ஒரு கவித்துவம்  கதையாகிறது.

• நீளமான தாஜ்மஹால் (பக் 73) அன்பு, காதல் என்பது வெள்ளைப்பளிங்குகளால் கட்டப்பட்ட்தல்ல, அலங்காரமோ ஆடம்பரமோ அல்ல. அது வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் டிரெயின். ஆம்.. அது ஒரு  நீளமான  தாஜ்மஹால். என்று கதையின் முடிவு. வானுயர நிற்கும் தாஜ்மஹாலைக் கண்டு போட்டோ எடுத்து காதலின் சின்னம்  தாஜ்மஹால் என்று கொண்டாடி உலக அதிசயமாக பார்க்கும் பார்வையின் நடுவில்  நாம் நம் அன்றாட வாழ்விலும் பயணங்களிலும் காணும் தாஜ்மஹாலை பிரதி எடுக்கிறது இக்கதை. காதலும் நேசமும் பிரமாண்டங்களில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போது வாழ்தல் இனிதாகிறது.

• 60 (பக் 60) கதை அன்பாதவனின் தனித்துவமான எள்ளல் தொனி கொண்ட எழுத்து. அன்பாதவனின் தனித்துவமே எந்த வடிவமாக இருந்தாலும் அதில் அவர் சமகாலத்தை எள்ளலுடன் நகைச்சுவையுடனும் பார்க்கும் பார்வையாகும். குறுங்கதைகளும் விதிவிலக்காகவில்லை. அதிலும் குறிப்பாக ‘60’ கதை.. இதன் உச்சம் தொட்டிருக்கிறது.

• கவித்துவமே கதையாக குறுங்கதைகள் தன் வடிவ நேர்த்தியை கண்ட டைகின்றன என்பதற்கு ‘எம்பாவாய்’ சிறுகதை (பக் 93). மார்கழி நீராடல், ஆண்டாளின் பாடல் வரிகள் எல்லாமும் சமகாலத்துடன் சேர்ந்து ஒரு கரம்சாய் .. குளிருக்கு இதமாக மாறுகிறது. 

‘வங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் ஈந்த பாலில் செய்வோம்.. கரம்சாய்….”! (பக் 93)


• தைலம் (பக் 69) ஒரு பாலியல் கதையும் உண்டு! அது என்னவோ தெரியவில்லை… இந்த எழுத்தாளர்களுக்கு “அண்ணியைக் கண்டால் பாலியல் பிம்பமாகவே தெரிகிறது , பாவம் அண்ணிமார்கள்!” 

வாழ்வின் எந்த ஒரு துளியிலிருந்தும் படைப்புக்கான மூல விதைகளைக் கண்டறிய முடியும் என்பதில் இக்கதைகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

வாழ்த்துகள் அன்பாதவன்.💐💥

வெளியீடு : இருவாட்சி பதிப்பகம்.@ 2024.

பக் 128 விலை ரூ. 150