Tuesday, February 23, 2016

புதுமைப்பித்தன்


உலக சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில்
 நம் புதுமைப்பித்தன் தவிர்க்கமுடியாதவர் என்பது
அன்றும் இன்றும் என் அபிப்பிராயம். அவர் தழுவல் சிறுகதைகளுக்கு
எதிராக உரக்க குரல் கொடுத்தவர். ஆனால் அவருடைய 'புதிய ஒளி'
தொகுப்பில் 5 சிறுகதைகள் மாப்பசான் கதைகளின் தழுவல்தான்
என்பது ஆதாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
இதெல்லாம் பு.பி. எனும் பிரம்மராக்ஷஷ் மீது எனக்கிருக்கும் மரியாதையை,
மயக்கத்தை  குறைத்துவிடவில்லை! (புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஷ்
எழுத்தாளர் ராஜ்கவுதமன் எழுதியிருக்கும் புத்தகம்)

புதுமைப்பித்தனிடம் மணிக்கொடி காலத்தில் சிறந்த 10 சிறுகதைகளைத்
தேர்வு செய்து புத்தகம் வெளியிடலாம் என்று சொன்னார்கள்.
அவர் உடனே தன்னுடைய 10 சிறுகதைகள் தான் அப்புத்தகத்தில்
இடம் பெறும் தகுதி பெற்றவை என்று சொன்னதாக ஒரு செய்தியை
அடிக்கடி எங்கள் பல்கலை கழக வளாகத்தில் பேசுவோம்.
எனக்கென்னவோ புதுமைப்பித்தனின் இந்த அசாத்தியமான
தன்னம்பிக்கை, (திமிர்...?!) ஆளுமை ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

Saturday, February 20, 2016

நீங்கள் தேசத்துரோகியா..?



நீங்கள் மனுவிரோதியா?
பரவாயில்லை.
நீங்கள் நாத்திகவாதியா..?
அதனால் என்ன? இந்துமதம் நாத்திக வாதத்தை
ஏற்றுக்கொள்கிறது என்று இந்துமத காவலர்கள்
அடிக்கடி சொல்கிறார்கள்.
அதனால் பாதகமில்லை.
நீங்கள் பெரியாரிஷ்டா..?
ஒகே ஓகே..
ஸ்ரீ இராமனுஜம் நமஹ.
நீங்கள் அம்பேத்கர்வாதியா?
ஓ அதனால் என்ன? பேஷ் பேஷ்..
கடவுள் முன்னால் அனைவரும் சமம்.
ஒன்றும் பிரச்சனை இல்லை.
நீங்கள் மார்க்சியவாதியா..?
அப்படினா என்னனு கேட்டு வைக்காதிங்க.
ப்ளீஸ்.. என் தோழர்கள் அனைவரும்
தங்களை மார்க்சிஸ்ட் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு அவர்கள் ரொம்பவும் முக்கியம்.
அவர்களிடம் என்றாவது தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் விடுமுறை
இருந்தால் பேசிப்பாருங்கள்.
அற்புதமாக விளக்கம் தருவார்கள்.
எனக்கு அவ்வளவு நேரமில்லை.
சரி.. இப்படி நீங்கள் யாராக இருந்தாலும்
எதைப் பற்றி எவரைப் பற்றி விமர்சித்தாலும்
நீங்கள் தேசத்துரோகிப் பட்டியலில் வரமாட்டீர்கள்.
நீங்கள் மோடியை விமர்சிக்கலாம்.
சங் பரிவாரை விமர்சிக்கலாம்.
பிஜேபி அரசியல் கட்சியை விமர்சிக்கலாம்.
அதிமுக - ஜெ , மகாமகம் இப்படி எதைப் பற்றி
வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.
சுபாஷ் சந்திரபோஷ் விமான விபத்தில் இறந்துப்போனாரா
அல்லது
ரஷ்ய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தாரா?
இது சம்பந்தமான ஆவணங்களைத் தேடி அலைந்து
எந்தமாதிரியான முடிவுக்கும் நீங்கள் வரலாம்.
அத்ற்கெல்லாம் உங்களுக்கு உரிமை உண்டு.
காஷ்மீர் பிரச்சனையில் அருந்ததிராய் மாதிரி பேசலாம்.
அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.
ஆனால்...
இந்திய திருநாட்டில் ..
சமூகத்தில் தாழ்த்தப்பட்டவன்/பிற்படுத்தப்பட்டவன்/ ஆதிவாசி
இவர்கள் எவரும் இசுலாமியர்களுடன்  சேர்ந்து குரல்
கொடுத்தால் அவன் "தேசத்துரோகி".
இந்தக் கூட்டணி எப்போதும் கூடாது என்பதில்
இந்துத்துவவாதிகள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
இந்தப் புள்ளிதான் இந்துத்துவவாதிகள் மகாத்மா காந்தியுடன்
கை குலுக்கும் இடம்.
ஆட்சி, அதிகாரம் , நாற்காலி இத்தியாதி எதற்காகவும்
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள்
சமரசம் செய்து கொள்ளவே மாட்டார்கள்.
அகில இந்திய அளவில் பிஜேபி தோற்றுப்போன
மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை உன்னிப்பாக
கவனித்தால் இன்னும் சில அல்ஜீப்ரா கணக்குகளுக்கு
விடை கிடைக்கும்.



Sunday, February 14, 2016

கூடா நட்பும் கூடும் நட்பும்


தாங்கலடா சாமீ..
மதிப்பிற்குரிய தலைவர்மார்களே...
நீங்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும்
கூடுங்க்ள்.. ஆனால் கூடுவதற்கும் கூடாமல் இருப்பதற்கும்
எதாவது காரணங்கள் மட்டும் சொல்லாதீர்கள்.
தாங்கலடா சாமீ..

எ.கா. விளக்கவுரை.:

2014 ஏப்ரல் மாதம் காங்கிரசு தலைமையிலான மத்திய அரசிலிருந்து
திமுக விலகிய போது கலைஞர் சொன்னார்:
காங்கிரசு தலைமையிலான மத்திய அரசில்
திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும்
பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம்
மத்திய அமைச்சரவை யிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும்  விலகிக்கொண்டது. >

அப்போது அது கூடா நட்பு.
இப்போது கூடும் நட்பாகி இருக்கிறது.

தமிழினத்திற்கு இப்போது நன்மைகள் கோடிகோடியாக வந்துவிட்டதாலும்
அதுவும் காங்கிரசால் மட்டுமே வரமுடியும் என்பதாலும்
கூடா நட்பு கூடுகிறது.
என்று சொல்லப்படும் காரணம்...

எரிகிறது .. மேன் இன் இந்தியா..



* வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் எவ்வளவு முதலீடு
கொண்டுவந்தீர்கள்?

*நீங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்திருக்கும் முதலீடை
வைத்து உங்கள் வெளிநாட்டு பயண்ச்செலவைக் கூட
ஈடு செய்ய முடியாது.

*ஜெய்தாபூர் அணுமின் திட்டம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின்
வாழ்வாதாரத்தை பாதித்துவிட்டது.

*பால்கர் துறைமுகத்தில் அன்னிய முதலீட்டை புகுத்தினால்,
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இன்று மாலை மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா மேடை
தீ பற்றி எரிந்தது. கலை நிகழ்ச்சி நடைபெறும் போது மேடையின்
அடியிலிருந்து தீ பரவியது. மராட்டிய முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ்
முதல் பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சம் வரை .. பிரபலங்கள்
அமர்ந்திருந்தார்கள். தீ விபத்தால் எவருக்கும் ஆபத்தில்லை என்பது
முக்கியமான செய்தி. அதைவிட முக்கியமான செய்தி..
இநத விழாவைக் குறித்து சாம்னா பத்திரிகையில்
சிவசேனா வைத்திருக்கும்  மேற்கண்ட  விமர்சனம்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் அழித்து பெருக்கும் முதலீடுக்கு
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வைத்திருக்கும் பெயர்
வளர்ச்சி..!

சனிக்கிழமை மேக் இன் இந்தியா வாரவிழாவை மும்பையில்
துவக்கி வைத்துவிட்டு சென்றிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி
இதுவரை சென்றிருக்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், அதற்கான
செலவு, வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் முதலீடு, அந்த முதலீடுகளின்
மூலமும் பாதிப்புகளும்.. இதெல்லாம்.. வெறும் கணக்கு விவகாரம்
மட்டுமல்ல..நம்  தலைவிதியைக் கிறுக்கும் புள்ளிகள்.

Thursday, February 11, 2016

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை



பகலெல்லாம் குலைத்து குலைத்து
தொண்டை வற்றிப்போன நாய்கள்
சில இரவுகளில் தூங்குவதுண்டு.

வெளிச்சத்தில் சில நாய்கள்
ஒன்றை ஒன்று கடித்து குதறினாலும்
இருட்டில் கலவிக்குப் பிறகுதான் தூங்குகின்றன.

அயலவனைக் கண்டால் குரைக்கின்ற நாய்கள்
அபூர்வமாகிவிட்டன.
டைகர் பிஸ்கோத்துகளை பொறுக்கித்தின்னும் நாய்கள்
வீட்டுக்கதவுகளைத் திறந்துவிடுகின்றன

சில நாய்கள்
பிரியாணி பொட்டலத்தின் எலும்புத்துண்டுகளுக்காக
நட்சத்திர விழாக்களில்
மேடை ஏறுகின்றன.

அடிக்கடி எஜ்மானனை மாற்றிக்கொள்ளும்
நாய்களுக்கு
நன்றி என்பது அயல்மொழி ஆகிவிட்டது..

ஓநாய்களின் இரத்தவாடையுடன்
வாலாட்டுகின்றன் நாய்கள்.

நாய்கள் ஜாக்கிரதை என்பது எப்போதுமே
நாய்களுக்கு அல்ல.
நமக்குத்தான்.

Wednesday, February 3, 2016

அண்ணாவும் எம் ஜி ஆரும்


அண்ணாவின் நினைவுகள்
-----------------------------------------



திமுக ஆட்சிக்கு வரவில்லை. அதிமுக பிறக்கவில்லை.
எம் ஜி ஆர் அக்காலக்கட்டத்தில் திமுகவில் முக்கியமானவர்.
அப்போது திரைப்படத்துறையினர் மெரினா கடற்கரையில்
கண்டனக்கூட்டம் நடத்தினார்கள். இன்றைய டிஜிட்டல் யுகம்
அல்ல. காமிராவில் ப்ஃலிம் சுருள்களை மாட்டித்தான்
படங்கள் எடுக்கப்பட்டன. சினிமா எடுப்பதற்கான கச்சா
ப்ஃலிம் தேவையான அளவு உற்பத்தி செய்யப்படவில்லை
என்பதால் அரசு திரைப்படங்களுக்கு ஒதுக்கும் ப்ஃலிம்
அளவுக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை எதிர்த்து தான்
திரைப்பட துறையினர் மாபெரும் கண்டனக்கூட்டம்
நடத்தினார்கள். அக்கூட்டத்தில் இறுதியாகப் பேசிய
எம் ஜி ஆர் "அரசியல் கட்சி எதுவும் நமக்காக வாதாடவில்லை,
கண்டனக்குரலை எழுப்பவில்லை. நான் சார்ந்த திராவிட
முன்னேற்ற கழகமும் இதில் கொஞ்சமும் அக்கறை
காட்டவில்லை" என்றார்.

திமுக வில் எம் ஜி ஆரின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.
அண்ணாவிடம் அரங்கண்ணல் போன்றவர்கள் இதைப் பற்றி
பேசினார்கள். அண்ணாவை அறிக்கை வெளியிடவும்
வற்புறுத்தினார்கள். அண்ணா மறுத்துவிட்டார்.

"பேசியது எம் ஜி ஆர். அறிக்கை வெளியிடுவது நானா?
என்ன இது வேடிக்கையாக இருக்கிறது! எம் ஜி ஆரை ஆதரித்து
அறிக்கை விடுவதா? கண்டித்து அறிக்கை விடுவதா? இரண்டும்
தவறாகிவிடுமே! கொஞ்சம் பொறு, காலம் கனியும்" என்று
பதில் சொன்னார்.

அண்ணாவுக்கு விளக்கம் சொல்ல எம் ஜி ஆரே நேரில் வந்தார்.
அப்போது அண்ணா மாடியில் எழுதிக்கொண்டிருந்தார். மாலை 7
மணிக்கு வந்தவர் இரவு 10 மணி வரை அண்ணா எழுதி முடித்து
கீழெ இறங்கி வரும் வரை காத்திருந்து விளக்கம் சொன்னார்.

"தவறுதான் அண்ணா. உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டேன்"
என்றார்.

அதற்கு அண்ணா.. "உணர்ச்சி வேகம் இருக்கட்டும், பிரச்சனையை
முதலில் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
திரைத்துறையினர் யாராவது என்னிடம் பேசினீர்களா?
அல்லது திமுக வின் ஆதரவு கேட்டீர்களா? அப்படி இருக்க
எப்படி உங்களை ஆதரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?
கழகம் ஆதரித்தால் அதற்காகவே ஏறுமாறாக நடவடிக்கை
எடுக்க கூடியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்........
இந்த அண்ணாதுரை மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால்
காமராசர் உதவி இருப்பார்.அதையும் இவர் கெடுத்தார்!
என்று பேசக்கூடியவர்கள் உங்கள் தரப்பில் சிலர்
இருக்கிறார்கள் அல்லவா?"

"ஆம் அண்ணா, தவறு என்னுடையது தான்.."

"சரி.. நீங்களே ஓரு அறிக்கை வெளியிட்டுவிடுங்கள்.."

அண்ணா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

மேற்குறித்த சம்பவத்தை ஒவ்வொருவரும்
கூட்டி குறைத்து பேசியதை நானறிவேன்.

அண்ணா குறித்த பல்வேறு நினைவலைகள்..
ஊடாடுகின்றன.
அண்ணா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
என்ற ஓர்மையுடன் அண்ணா என்ற  ஆளுமையை
கொண்டாடுகிறேன்.