நானே பாற்கடலில் விட்டு விட்டு வந்ததை
தொலைத்துவிட்டேன் என்பதா!
அதை எதற்காக சுமந்து வந்தேன்?
யுகங்களின் தவிப்பை அதில் ஊடும்பாவுமாக
நெய்து வைத்திருந்தேன் என்பதாலா!
காலச்சுமையின் வலி தாங்காமல்
குகையில் ஒதுங்கியது யார் குற்றம்?
வள்ளிமணாளன் ஏன் பழனிக்கு ஓடிப்போனான்.?
யாரைப் பற்றியும் எதைப் பற்றியும்
யோசிக்கமுடியாதப் பொழுதில்
அது நடந்துவிட வேண்டுமென
மரங்களிடம் வேண்டியதை
மணாளன் அறிந்தானோ..
வேர்களின் தாகத்தை இலைகள் அறியுமோ?
மெல்ல மெல்ல இருள் கவிந்த அப்பொழுதில்
அதைச் சுமக்கவோ எடுத்து வரவோ முடியாமல்
இறக்கிவைத்துவிட்டேன்..
கொடுக்கமுடியாதை எடுத்துவருவது எப்படி?
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் எதுவுமில்லாத
குடிசையில் கதவுகள் இருப்பதில்லை.
அதனால் பூட்டுகளுக்கும் அவசியமில்லை.
எடுத்துச் சென்றதைப் பத்திரமாக
எடுத்துவர முடியாமல்
எவர் தடுத்தார்?
முள்வெலியின் காயங்களுக்குப்
பழகிப்போனது முல்லைச்செடி.
அரும்புகள் பூக்கும் போதெல்லாம்
அரவத்தின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
பிச்சியைப் போல தேடி அலைகிறேன்.
கிடைக்குமோ இனி?
ஜனக்கடலில் இனி அதைக் கண்டடைய முடியுமோ?
என் செய்வேன்?
மணல்வீடுகளுக்கு அடியில் அது புதைந்திருக்கலாம்.
கடலை விற்கும் சிறுவன் கையில் கிடைத்திருக்கலாம்.
கோவில் வாசலில் பிச்சைப்பாத்திரமாய் மாறி இருக்கலாம்.
விலைமாதுவுடன் படகருகில் படுத்திருப்பவன்
எடுத்து அணிந்துமிருக்கலாம்.
என்னை எப்போதும் வாசிக்கும் அந்த அலைகள்
கடலுக்கடியில் அதைப் பத்திரப்படுத்தி இருக்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் அது கை நழுவிப் போய்விட்ட து.
அவனா நானா அதுவாகிப் போன
காலத்தின் முன்னால்
தலைகுனிகிறேன்.
தொலைந்துப்போனதற்காய் ..
இப்போதெல்லாம் யாரும் வருத்தப்படுவதில்லையாம்!
உண்மையா..
தொலைந்துப் போ..
தினமும் தொலைந்துப் போ..
புதிதாகப் பிறப்பதே பிறவியின் மகத்துவம்
தொலைந்துப் போ..
பாற்கடலின் விஷம்..பொங்கி மேல் எழுகிறது.
சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான்.
தொலைத்தாயோ தொலைந்தாயோ
யுகங்களின் ஆடைகள் எரிகின்றன.
அதில் பொதிந்து வைத்திருந்த முத்தங்களை
பொறுக்கிவிட துடிக்கிறேன்.
முத்தங்களை நிராகரித்த இரவுகளுக்கு
இது தண்டனையோ விடுதலையோ..
ஓம் நமசிவாய..