Thursday, April 16, 2015

இலங்கை மலையகத்தில் பெண்ணிய சந்திப்பும் பெண்களின் உரையாடலும்

2
525, 26 ஏப்ரல் 2015 நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00)

முதல் அமர்வு 9:30 – 11:00
  • வரவேற்புரை: சந்திரலேகா, தொடக்கவுரை: றஞ்சி
  • கலை நிகழ்வு: இன்னிசைப்பாடல் (சுகன்யா, லாவண்யா, சகுந்தலா)
இரண்டாவது அமர்வு 11:30 – 13:00
  • எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - சரோஜா சிவச்சந்திரன்
  • போர்ச் சூழலில் பெண் - ச.விசயலட்சுமி
  • கலாச்சார மத வழியில் பலமிழந்த பெண்கள். – பரிமளா
  • இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச் சமத்துவம் - கெகிறாவ ஸஹான
பதிவுகள் குறித்த விவாதங்கள் (12:15 – 13:00)
மதிய உணவு 13:00 – 13:30
மூன்றாவது அமர்வு 13:45 – 16:00
  • இலங்கை பெருந்தோட்டப் பெண்களின் காணி உரிமை – கமலேஸ்வரி லெட்சுமணன்
  • மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் – எஸ்தர்
  • பாலர் கல்வியும் பெண்களும் – செல்வி அரஃபா மன்சூர்
  • மலையகப் பேச்சுத் தமிழில் பெண்ணியம். – எஸ்.சுதாஜினி
நான்காவது அமர்வு 16:30 – 17:30
  • சிறுவர் தொழிலாளர்கள்; – மலையகம் சார்ந்த ஓர் பார்வை – டீ.சோபனாதேவி
  • வெளிநாட்டுப் பணிப் பெண்களும் மலையகமும் – யோகித்தா யோன்
  • பெண்களும் கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா
  • சுற்றுச்சூழலியல் பெண்ணியப் பார்வை - சிறி (லுணுகலை)
  • உரையாடல்: அழகு-அழகியல் குறித்த பெண்ணியப் பார்வைகள் (17:30 – 18:30)
நிறைவு (முதல் நாள்)

நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)
  •  வரவேற்பு : இனியம் (கலைவாணி கலை மன்றம் – வடலியடைப்பு.)
  •  வரவேற்புரை : றஞ்சி (முந்திய நாள் நிகழவு குறித்த சிறுபதிவுடன்- RECAP)
  •  உழைக்கும், பெண்கள் (கவிதா நிகழ்வு – யாழினி யோகேஸ்வரன், பிறெளவ்பி)
முதல் அமர்வு 10:00 – 11:30
  •  கலையிலக்கியங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு-சவால்களும் தீர்வு முன்மொழிவுகளும் - லறீனா அப்துல் ஹக்
  •  விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் , சவால்களும்  - காதி நீதிமன்றஙகளை முன்வைத்து - ஷாமிலா முஸ்டீன்
  •  இலங்கை வரலாற்றில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியும் -அவர்கள் எதிர்நோககும் , சவால்களும் – ஜெஸீமா ஹமீட்
இரண்டாவது அமர்வு 11:45 – 12:45
  •  அரசியலில் பெண்கள் - புதியமாதவி
  •  தலித் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் வகிபாகம் பற்றி - சுலைகா பேகம்
  •  மலையக நாட்டாரியலில் பெண்ணியச் சிந்தனைகள் – சந்திரலேகா
  •  மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள் – யோகி
மதிய உணவு 13:15 – 14:00
மூன்றாவது அமர்வு 14:00 – 16:00
  • பாலினம் -   பாலின பாகுபாடு - ரஜனி
  • தாய்மையும் தாய்மை குறித்த சமூக உரிமைகள், நம்பிக்கைகள் (தந்தை உரிமையுடன் ஒப்பிடல்) - நளினி இரட்னராஜ்
  • பெண்  சுயம் – ஒரு மாற்றுப் பார்வை – பவநீதா லோகநாதன்
  • ஊடகமும் , பெண்களும் - கவின்மலர்
குறும்படம் திரையிடல் 15:30 – 16:15
  •  மாதவிடாய்,
  •   
பெண் படைப்புலகம் 16:45 – 17:45 - விஜயலக்சுமி சேகர், எஸ்தர், லுணுகலை சிறி, றஞ்சி
  • கருநாவு (ஆழியாள்)
  •  நீத்தார் பாடல் ( கற்பகம் யசோதர)
  •  சாகசக்காரி (தான்யா)
  •  கதவுகள் திறக்கும்  வானம்  (புதியமாதவி)
  •  பேராயுதம்  மௌனித்த பொழுதில் (கவின்மலர்)
  •  லண்டாய் (ச.விஜயலட்சுமி)
  •  முஸ்லிம், சிங்களப  பெண் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பு
விவாதங்கள் 17:45 – 18:30
நன்றியுரை: யாழினி யோகேஸ்வரன்

நிறைவு



தொடர்புக்கு :(சந்திரலேகா கிங்ஸ்லி, யாழினி யோகேஸ்வரன், சிறி (லுணுகலை), ஜசிமா அகமட், ஆழியாள், றஞ்சி)

 0094 750517522  , 0094 774425265 , 0094777630128 

ரையாடலும், 26 

Monday, April 13, 2015

மகாநதியின் கரையில்..




கங்கையின் புனிதம்
இந்த மகாநதி முன்னால்
மண்டியிட்டது.

இமயத்தின் மகாத்மாக்கள் கூட
இந்த மகாபுருஷனிடம் சரிந்து விழுந்தார்கள்
"இந்து"மாக்கடல் இவர் முன்னால்
பாலைவனம் ஆனது.

பட்டமரங்களுக்கு இந்தப் பச்சைமரம்
நிழல் கொடுத்தது.
சட்டங்கள் கொடுப்பது சலுகைகள் அல்ல
பிறப்பின் உரிமைகள் 
இந்தப் போதிமரம் போதித்தது.

இந்த மனிதச்சங்கிலியை
சாதிச் சங்கிலிகள் தொடும்போதெல்லாம்
தராசு தடம் புரள்கிறது.
நீதிதேவன் குற்றவாளிக்கூண்டில்
பிரம்மனின் சாதிச்சான்றிதழ் சாட்சியாக.

தாகத்தை தணிக்கின்ற தண்ணீரைக் கேட்டால்
இந்துப்பெருங்கடலில் எடுத்துக் கொடுத்தார்கள்.
உப்புக்கரிக்கும் உண்மையை மறுத்தார்கள்.

இங்கே ஆண்டவனில் கூட
சாதிப்பிரிவுகள்..

பாலாஜி - பழநி
மாசானம் - மாடசாமி
காமாட்சி - மீனாட்சி
காளியாத்தா - இசக்கியம்மா..

எல்லா நதிகளும் இந்துப்பெருங்கடலில்
கலக்கும் என்பது
பொதுப்புத்தியின் பூகோளமாக இருக்கலாம்.
இந்த மகாநதி மட்டும் தான்
ஆண்டவனே இல்லாத
ஆலயத்தில் கலந்தது.

மகாநதியின் கனவுகள் வாழ்ந்த
கரையில் நிற்கிறேன்..
மனிதர்களின் சத்தியசோதனைகள் 
வாசிக்கப்படுகின்றன.. 
"வெட்ட நினைபப்வர்கள் வெந்துப்போவார்கள்.
அஹிம்சைக்கோவிலில் ஆடுகள் இனி அடிமைகள் அல்ல"



Thursday, April 9, 2015

தலைமுறைகளின் அஞ்சலி..




என் அப்பாவின் தலைமுறைக் கொண்டாடிய நாகூர் ஹனிபா,
என் தலைமுறைக் கொண்டாடிய எழுத்தாளர் ஜெயகாந்தன்
வாழ்வாதாரம் இழக்கும் என் மண்ணின் மைந்தர்கள்..



காஞ்சி என்றால் அண்ணா, அதுபோலவே நாகூர் என்றால் நாகூர் ஹனிபா
இதுதான் எங்களுக்கு தெரிந்த முதல் சரித்திரமும் பூகோளமும்!
அதிகாலையில் சுப்ரபாதம் கேட்பதைப் பெருமையாக சொல்லிக்கொள்ளும்
நண்பர்களுக்கு நடுவில் நான் எப்போதும் புன்னகை மாறாமல் சொல்லுவேன்,
நான் அதிகாலையில் கேட்ட பாடல்.. "அழைக்கின்றார்..அழைக்கின்றார்
அண்ணா அழைக்கின்றார்" என்ற பாடலைத்தான்...
அதன் பின் எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் வீட்டுக்கு எதிரில்
இருக்கும் சர்ச்சிலிருந்து "ஏசுவின் நாமமே திருநாமம், புதுசிலுவையத்தால்.."
"கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும்
என்றார் ஏசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்.." ஒலிக்கும்.
அப்பா பம்பாயிலிருந்து வந்துவிட்டால்,
மீண்டும் அழைக்கிறார் அண்ணா அழைக்கிறார் ஒலிக்கும் ..
அப்பாவின் வருகையை இப்பாடல் உறுதிப்படுத்தும்


அப்பாவைப் பார்க்க வரும் கட்சி தோழர்கள் நாகூர் ஹனிபாவின்
இசைத்தட்டுகளை வாங்கிவருவார்கள். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து
கேட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். மாடியில் பாடம் படிக்கும்
எனக்கு அது தொந்தரவாகக் கூட இருக்கும். ஒவ்வோருமுறையும்
"அழைக்கின்றார் அண்ணா அழைக்கின்றார் " பாடல் ஒலிக்கும்
1955-ஆம் ஆண்டு, ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற புகழ் பெற்ற பாடலை இசைத்தட்டில்  வெளியிடுமாறு HMV நிறுவனத்திடம் ஹனிபா கேட்டுக்கொண்டதை  அந்நிறுவனம் மறுத்துவிட்டதாம். அதுமட்டுமல்ல,
 ‘இஸ்லாமியப் பாடல்களையே பாடுங்கள்’ என்று சொன்னதாம்
. இந்தப் பாடலை பதிவு செய்யாவிட்டால் நான் வேறு பாடல்களும் பாட மாட்டேன்’  என்று மறுத்து,விட்டாராம ஹனிபா. எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த வருடம் அதிகம் விற்று சாதனை படைத்தது”
என்ற செய்தியைப் பிற்காலத்தில் நான் தெரிந்துக் கொண்டபோது
நான் பிறப்பதற்கு முன்பே இப்பாடல் வெளிவந்திருக்கிறது என்பதையும்
தெரிந்துக்கொண்டேன்.

ஒருமுறை நாகூர் ஹனீபா பாடும் பாடல்களை எழுதியவர் யார்? இசை அமைத்தவர் யார்? என்று அப்பாவின் நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் யாரிடமும் என் கேள்விக்கான பதில் இருந்ததில்லை. ஹனீபா கூட இதை எல்லாம் பதிவு செய்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. திமுக என்ற அரசியல் கட்சியுடனும் அண்ணாவின் தம்பிகளுடனும் நாகூர் ஹனிபாவுக்கும் அவர் பாடலுக்கும் இருந்த ஈர்ப்பும் கவர்ச்சியும் என்னால் மறக்க முடியாதவை.
யார் யாரைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்ற விமர்சனம் எனக்கும் உண்டு.

நாகூர் ஹனிபாவின் இசைத்திறமை பற்றி என்னிடம் கேட்கிறார் என் நண்பர்
ஒருவர், அவர் முறையாக இசைப் பயிற்சி பெற்றவரில்லை என்பது எல்லோரும் அறிந்தச் செய்திதான். அவர் காலத்தில் இசையில் புகழுடன் விளங்கிய எவருடைய பாணியையும் அவர் பின்பற்றவில்லை என்பதுதான் அவருக்கான தனிச்சிறப்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
மெல்லினத்தை வல்லினமாக உச்சரிப்பதும் "ர்"ருக்கு அவர்போடும்
"ற்ற்ற்ற் ர்ர்ர்ர்ர்ர்" அழுத்தமும் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும்.
ஆனாலும் என் அப்பாவின் தலைமுறை அவரைக் கொண்டாடினார்கள்.
அந்த நினைவுகளின் பக்கங்களும் அதில் ஏற்பட்ட கிழிசலக்ளும்
என்னால் ஒட்டமுடியாதுப் போன அவலங்களும் எல்லாமும் சேர்ந்துதான் இன்று நாகூர் ஹனிபாவின் மறைவுக்கான அஞ்சலியுடன் கலந்து நிற்கிறது..





அப்பாவுக்கு ஜெயகாந்தனைப் பிடிக்காது. ஆனால் எனக்கு ரொம்ப
ரொம்ப பிடிக்கும்..
என் தலைமுறையைப் பாதித்த  எழுத்தாளுமை
ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் 'அக்னிப்பிரவேசம்' கதை
பெரியார் பாதையில் வந்த என் போன்றவர்களுக்கு எவ்விதமான
அதிர்வலையையும் ஏற்படுத்தவில்லை! ஆனால் அவர்
படைத்த சாலை ஓரத்து மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும்
அவர்களின் மொழியும் இலக்கியமான போது ஜெயகாந்தனின்
ஆளுமையை என் தலைமுறைக் கொண்டாடியது.
அவருடைய "சக்கரங்கள் நிற்பதில்லை" சிறுகதையை
நான் கல்லூரி கால்த்தில் கொண்டாடினேன். !அக்கதையில்
சமகால அரசியல் பேசப்பட்டது என்பது அப்போது எனக்குத்
தெரியவில்லை என்பது வேறு விஷயம்!
அதே ஜெயகாந்தனின் பிற்காலத்திய சரிவுகள்.. ,மிகவும்
நெருடலாக இருந்தன.





20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை உணர்ச்சி ததும்ப
எல்லோரும் எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கிறோம்..
இதை அரசியலாக்க அனைத்து கட்சியின் தலைவர்களும்
முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழனின். ஓர் ஆதிவாசியின் வாழ்வாதாரத்தைக் கொள்ளை
அடித்த கும்பல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது!
தினமும் விவசாயிகள் தற்கொலை செய்தியை 20../20
கிரிக்கெட் பரபரப்புகளில் மறந்துக்கொண்டிருக்கிறோம்...
அதிர்ச்சிகளும் அதிர்வலைகளும் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன..
அப்போதெல்லாம் எங்கேயோ நம் வாழ்வாதாரம் கொள்ளை அடிக்கப்படுகிறது,
என்பதை மறந்துவிடுகிறோம். ..

Tuesday, April 7, 2015

மாற்று அரசியலில் ஜெஜ்ரிவாலின் சரிவுகள்




ஒரு சுனாமியைப் போல அரசியலில் நுழைந்தவர்கள் ஆம் ஆத்மி.
டில்லியில் ஆம் ஆத்மி தேர்தலில் அடைந்த வெற்றி, இரு
பெரும் அகில இந்தியக் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக
இருந்ததும் அரசியலில் வெகுவாக ஊடகங்கள் பேசிய
ஒரு செய்தியாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல,
ஜெஜ்ரிவால பள்ளிக்கூடத்திற்குப் போகும் குழந்தைகளுடன்
சாலையில் நடப்பதும் கூட பரபரப்பான செய்தியானது.
"இங்கப் பாருங்கடா.. மக்களின் முதல்வர் இவர்தான்"
என்று நாம் நம்பிக்கையுடன் எழுதி நம் கனவுகளை
நிறைவேற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகக்
கொண்டாடினோம்.

நகரங்களில் வாழும் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு
ஆம் ஆத்மி அரசியலில் புதியபாதையை உருவாக்கும்
என்ற நம்பிக்கை இருந்தது. ஏற்கனவே இருந்த அரசியல்வாதிகள்,
அரசின் லஞ்ச ஊழல்களிலும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்திருந்த
மக்களுக்கு ஆம் ஆத்மி உண்மையில் நம்பிக்கையைக்
கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆம் ஆத்மி கட்சியை உருவாக்குவதிலும் அடிப்படை நிர்வாக
அமைப்பைக் கவனிப்பதிலும் பலரின் உழைப்பு இருந்தாலும்
ஜெஜ்ரிவால் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டதைக் கூட
பெரும் தவறாக நினைககவில்லை எவரும்.
தனிநபரின் மீது பொதுமக்களுக்கு ஏற்படும் ஈர்ப்பும் நம்பிக்கையும்
அவ்வளவு எளிதில் மாற்றக்கூடியதல்ல எனறு ஒரு சமாதானம்
சொல்லிக்கொண்டோம்.
ஆனால் அந்த நம்பிக்கை  நட்சதிரத்தின் நடவடிக்கைகள்
இன்று மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருக்கின்றன.
பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு காங்கிரசாக
இருந்தாலும் சரி, பிஜேபியாக இருந்தாலும் சரி,
எவருடனும் கூட்டு வைத்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாடு
கொண்டவர் தான் ஜெஜ்ரிவாலும் என்ற கடந்தக் கால உண்மை
மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கும்  ஆம் ஆத்மியின்
ஜெஜ்ரிவாலுக்கும்  எந்த வகையிலும்
வித்தியாசமில்லை என்பதையே உறுதி செய்திருக்கிறது.


முதல்முறையாக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி
பெற்ற போது ஆம் ஆத்மி பெரும்பான்மை இடங்களைப்
பெறவில்லை. ஒரு தொங்குசட்டசபை நிலை ஏற்பட்டது.
அத்தருணத்தில் தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள
கெஜ்ரிவால் காங்கிரசின் உதவியை நாடினார் என்பதும்
ராகுல்காந்தியுடன் தொடர்பு கொள்ள தன் கட்சியின்
முக்கியமானவர்களை வலியுறுத்தினார் என்பதும்
தெரிகிறது.

அடுத்து, 2015 தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்தப்போது
கொள்கைக்கு இடம் தரப்படவில்லை. கட்சி எதிர்த்த குண்டாக்கள்,
சராயவியாபாரிகள் என்று பணம் புரட்டும் முதலாளிகளுக்கு
சீட் கொடுக்கப்பட்டது.
டில்லி தேர்தல் ஆரம்பித்தவுடன் பிரச்சாரத்தில்
MODI FOR PM ,  KHEJRIWAL FOR CM என்று பிரச்சாரம்
செய்யும்படி கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதும்
வெளிவந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் வலுவான பிரச்சாரமாக இருந்த
ஆம் ஆத்மி தொண்டர்களின் தலைவர் க்ரண் சிங்கின் புகழுக்கு
களங்கம் கற்பிக்கும் வகையில் கூகுளில் தொண்டர் படையின்
பெயரால் அவதூறு செய்திகள் பரவியதும் அதைக் கரண்சிங்க்
செய்யவில்லை என்பது தெரிந்தும் விசாரணைக்கு உடன்பட
கெஜ்ரிவால் மறுத்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறை
விசாரணையில் தீபக் சவுத்ரி என்ற நபர் அதைச் செய்ததாக
தெரியவந்தவுடன் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று
கெஜ்ரிவால் சொல்லி இருக்கிறார்.

மாற்று அரசியலை ஆம் ஆத்மி உருவாக்கும் என்ற
நம்பிக்கையை இவ்வளவு விரைவில் ஜெஜ்ரிவால்
அண்ட் கம்பேனி தங்களின் துடைப்பதாலேயே
துடைத்து எடுத்துவிட்டது பெருத்த ஏமாற்றத்தையே
தருகிறது.




Saturday, April 4, 2015

கிரிராஜ் சிங்கின் FAIR AND LOVELY

‘ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை (கருப்பின பெண்ணை) திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் ஒரு வெள்ளை நிற பெண்மணியாக இல்லாது இருந்தால், காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியைத் தந்திருக்குமா’’ என கேள்வி எழுப்பினார். இதை ஒருநிருபர் தனது ‘ஸ்மார்ட் போன்’ மூலம் பதிவு செய்து, அது டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மந்திரி கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும்
நைஜீரிய தூதரகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.





இது செய்தி:

இச்செய்தியை காங்கிரசு கட்சி மற்றும் நைஜீரிய பெண் என்ற இரண்டு லென்சுகளையும் கழட்டி வைத்துவிட்டு நிதானமாக யோசித்துப் பார்த்தால்
கிரிராஜ் சிங்க் சொனனது தான் யதார்த்தம். பாவம் அவர்.. அதை
அலங்கார வார்த்தைகளால் சொல்லாமல் ரொம்பவும் வெளிப்படையாகச் சொல்லி மாட்டிக்கொண்டுவிட்டார், அவ்வளவுதான்.

மெட்ரிமோனியல் பக்கத்தைப் புரட்டுங்க்ள்.. FAIR looking girl is most wanted.
இது இல்லை என்று எவரால் மறுக்கமுடியும்? நம் செய்திகள் வாசிக்கும்
பெண்களை எடுத்துக்கொள்ளுங்கள்.. மாங்கொழுந்து நிறத்தில் இருக்கும்
கண்ணகிப்போல ஒரு பெண் செய்திவாசிப்பவராகவோ அல்லது
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ ஏன் காட்டப்படவில்லை?
ஏர் இந்தியாவில் ஒரு விமானப்பணிப்பெண் கூட ஏன் நம்மவீட்டு
கறுப்பு/மாநிறத்தில் இல்லை?
பாட்டி, அம்மா, அத்தை, அக்கா, தங்கை என்று த்ன் வாழ்க்கையில்
தன்னைச் சுற்றி கறுப்பு நிறத்தில் பெண்கள் இருக்க, நம் இளைஞ்ர்களுக்கு
மட்டும் ஏன் வெள்ளை நிறத்தில் பெண் பார்த்துக்கொண்டு அலைகிறோம்?
நம் தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகிகள் மட்டுமல்ல,
துணைப்பாத்திரங்களிலிருந்து வேலைக்காரி, வில்லி கதை மாந்தர்கள் வரை
கறுப்பு நிறத்தில் காட்டப்படுவதே இல்லையே, ஏன்?
ஆசியாவில் மட்டும் கறுப்பு நிறத்தை வெள்ளையாக்கும் அழகுச்சாதனங்கள்
உற்பத்தியும், அதன் சந்தை மதிப்பும் பலகோடி டாலர்களாக இருப்பது
ஏன்?
நம் குழந்தைகளுக்கு வாங்கும் செரிலாக், அமுல் குழந்தை உணவு டப்பாக்களில் எப்போதும் வெள்ளை/சிவப்பு நிறக்குழந்தைகள் மட்டுமே
சிரித்துக்கொண்டிருக்கிறார்களே, எப்படி? கறுப்பு நிறக்குழந்தைகள் சிரிப்பதில்லையா?
கறுப்பு தான் எனக்குப் பிடிச்சக்கலரு.. என்ற பாடலில் சூப்பர் ஸ்டாரும்
கறுப்பு தான் என்று வரும். அட.. அதே சூப்பர் ஸ்டார் திரையில் வரும்போது
இவ்வளவு மேக்கப் போட்டு வட நாட்டு கதாநாயகிகளில் கலருக்கு ஏற்றபடி தன் நிறத்தை மாற்றிக்கொண்டு மட்டுனே நடிக்க வேண்டி இருப்பது ஏன்?
கறுப்பு தான் எனக்குப் பிடிச்சக் கலரு என்ற பாடலை இதே சூப்பர் ஸ்டார்
ஒரு கறுப்பு நிற கதாநாயகியைப் பார்த்துப் பாடுவது மாதிரி.. ம்ம் கற்பனை செய்ய முடிகிறதா நம்மால்..!

சரி.. இதை எல்லாம் விட்டுவிடலாம்.. காங்கிரசுக் கட்சி நேற்று வந்த அக்கட்சியில் சேர்ந்த குஷ்பு அவர்களுக்கு ஊடக செய்தி தொடர்பாளர் பதவியைக் கொடுத்தது எதற்காக? குஷ்புவுக்கு அக்கட்சியில் இருக்கும்
மற்ற பெண்களை விட அதிகமாக கட்சியைப் பற்றியும் அரசியல் பற்றியும் தெரியும் என்ற காரணத்தினாலா..!! அல்லது.....
(திமுக என்ன காரணத்தினால குஷ்புவை வைத்திருந்தார்களோ அதே
காரணம்தான் காங்கிரசு குஷ்புவைப் பயன்படுத்தும் காரணமும் , ஒரு சில
வித்தியாசங்களுடன்)

இதற்கெலலம் காரணம் நம் மனதில் நம்மை அறியாமல் இருக்கும் சில
கருத்துருவாக்கங்கள். வெள்ளை, சிவப்பு இந்த இரண்டுக்கும் எதிர்மறை
கறுப்பு. வெள்ளை புனிதத்தின் தூய்மையின் அடையாளம். மென்மையின்
அடையாளம். அப்படியானால், அந்த எதிர்மறையான கறுப்பு எதிர்மறை அடையாளமாக எழுதப்ப்டாத பிம்பமாகிறது.
வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று
நம் வடிவேலு அண்ணன் சொல்லும் நகைச்சுவைக்கூட வெள்ளை என்பது
நேர்மையின் அடையாளம் என்ற கருத்துருவாகத்திலிருந்து எழுவது.
அதன் எதிர்மறை கறுப்பு?
வெள்ளை/சிவப்பு நிறக்காரார்கள் வ்ளமையிம் செல்வச்செழிப்பின் அறிவின் அடையாளம். கறுப்புநிறக்காரர்கள் வறுமையின், உடல் உழைப்பின்
அடையாளம்.
அமெரிக்கனுக்கு அடிமையாக வேலைப்பார்க்கும் ஒரு வொயிட்காலர்
கம்ப்யூட்டர் காலனி நாட்டின் அடிமைக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும்
நம் சமூகத்தில் வயலில் உழைப்பவனுக்கும் பனைமரத்தில் ஏறுபவனுக்கும் மீன்விற்பனுக்கும் இருப்பதில்லை.!
உடல் உழைப்பை இழிவாகக் கருதும் சமூகத்தில் கிரிராஜ சிங்க் சொன்னது
உண்மை. பொய்யல்ல. 

Wednesday, April 1, 2015

கவிஞர் இந்திரனின் நெய்தல் திணை



கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல, சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும். நான் இப்படி சொல்லும் போதெல்லாம் அப்படியானால் கவிதைக்கு அழகுத் தேவையில்லையா? என்று கேட்கிறார்கள் சில கவிதைப் பிதாமகன்கள். கவிதை வெறும் அழகியல் சார்ந்தது மட்டும் தான் என்றால் ப்ளாஸ்டிக் ரோஜாக்கள் வந்த பிறகு தோட்டத்து ரோஜாக்கள் தேவையற்றுப்போயிருக்கும். ப்ளாஸ்டிக் ரோஜாவில் அழகு உண்டு. மிக நேர்த்தியாக வண்ணங்களும் மென்மையும் பனித்துளியின் காட்சிப்படிமமும் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும், ஆனால் தோட்டத்து ரோஜாவின் அழகிற்கு தனி இடம் உண்டு. தோட்டத்து ரோஜாவின் அழகுடன் சேர்ந்திருக்கிறது. அதன் அரசியல், அதன் சமூகவியல், அதன் வணிகவியல், அதன் மானுடவியல். கவிதையும் இதெல்லாம் கலந்த ஒரு தோட்டத்து ரோஜாவாக மட்டுமே இருக்க வேண்டும். வெறும் அழகியல் சார்ந்தது மட்டுமல்ல கவிதை. கவிதையில் தோட்டத்து ரோஜாவைப் போல இவை அனைத்தையும் ஒரு தேர்ந்த படைப்பாளி கொடுத்துவிடுவான்.
indiran bookஇந்திரன் அவர்களின் 'மின் துகள் பரப்பு’ கவிதையை வாசித்து விமர்சனம் செய்திருக்கிறேன். கவிதை வரிவடிவத்தையும் தாண்டி நவீன கணினி யுகத்தில் காட்சிப்படிமத்திற்கும், ஏன் டிஜிட்டல் வடிவத்தையும் சேர்த்துக்கொண்டு புதியதோர் முகத்துடன் வர முடியும் என்பதை அக்கவிதைகளின் மூலம் இந்திரன் காட்டி இருப்பார். அது ஒரு வகையான சோதனை முயற்சி என்று என் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். (பார்க்க:http://www.vaarppu.com/review.php?rvw_id=29) அண்மையில் வெளிவந்திருக்கும் "மிக அருகில் கடல்" கவிதைகளில் கவிதைக்கான அழகியல் மிக நேர்த்தியாக வெளிவந்திருப்பதுடன் சம கால அரசியல், மானுடவியல், சமூகவியல், அறிவியல் பார்வைகள் கவிதைக்கடலில் அலைகளாக தொடர்ந்து படைப்புலகை ஈரமாக வைத்திருக்கின்றன.
தமிழ் மரபின் திணை ஒழுக்கம் இக்கவிதைகளின் அடிநாதமாக அமைந்திருப்பது ரொம்பவும் தற்செயலானதாக அமைந்துவிட்டதா? அல்லது அப்படியான ஒரு திட்டமிடலுடன் இகக்விதைகள் எழுதப்பட்டதா? என்பது தெரியவில்லை. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெயதல் திணைக்குரிய "பிரிவு, பிரிவு ஆற்றாமை ' சார்ந்தவை. கொதுலூப் தீவுகளில் எங்கிருந்து இந்த திணை ஒழுக்க ஆழ்மனம் விழித்துக்கொண்டது? !
"கடல் செதுக்கிய சிற்பத்தில் பாண்டிச்சேரியிலிருந்து கொதுலுப்புக்குக்
கப்பல் ஏறி வந்த கரும்புத் தோட்டத்து கூலி அடிமையின் முகஜாடை
திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் பொருத்தினேன்... கடல் தன் ஞாபகார்த்தமாக
சங்கு ஒன்றை தரை விரிப்பின் மேல் கிடத்தியிருந்தது"
பாண்டிச்சேரியில் இருந்து பிரிந்தவனின் முகஜாடையும் அப்பிரிவும் அப்பிரிவு பல தலைமுறைகள் கழிந்தப்பிறகும் சுற்றுலா பயணியாய் தன் கடற்கரைக்கு வந்தவனைத் திடுக்கிட்டு முழிக்க வைப்பதும் அவன் தன் சாயலை அதில் உணர்வதும்.. பிரிவாற்றமையின் சமூக அரசியல் பார்வையின் உச்சம்! அகத்திணையின் மானுடவியல் பிரிவு ஒழுக்கத்தை புறத்திணையின் அரசியலுடனுன் இணைக்கும் படைபபாளனின் மிக நுண்ணிய கண்ணி. அக்கடல் தன் சாயலைச் சுமந்து வந்திருப்பவனுக்கு பரிசாகக் கொடுத்திருக்கும் 'சங்கு" ஒரு காட்சிப்படிமம். காட்சிப்ப்டிமம் கவிதை அழகியலின் ரசனை.
படிமங்களிலும் உத்திகளிலும் உருவகங்களிலும் காலத்திற்கேற்ற காட்சிகளை உள்வாங்கிக்கொண்டு அதைத் தன் கவிதை மொழியில் கொண்டு வர வேண்டியதே நவீன கவிதையின் நாற்காலியாக இருக்க முடியும். எத்தனைக் காலங்கள் ஏற்கனவே கம்பனும் காளிதாசனும் சொல்லிய உவமானங்களை அப்படியே சொல்லிக்கொண்டிருப்பது? கம்பனுக்கும் காளிதாசனுக்கும் கிடைககாத அறிவியல் வளம் இன்றைய கவிஞ்னுக்கு கிடைத்திருக்கிறது. தொலைக்காட்சிகள் நம் வாழ்வியலையும் வாழ்விடத்தையும் மிகவும் சுருக்கிவிட்டன. இந்தப் பூமி உருண்டை ஒரு கால்ப்பந்து போல நம் கண்களுக்குத் தெரிகிறது தொலைக்காட்சி திரையில். அந்த உருண்டையில் எங்கோ ஒரிடத்தில் நாமும் நம் கவிதைகளும் சிறிய எறும்பு போல ஊர்ந்துக் கொண்டிருக்கிறோம். இக்காட்சியை அன்றைய கவிஞன் தன் கற்பனையில் மட்டுமே கண்டிருக்க முடியும். இன்றைய படைப்பாளிக்கு இது கற்பனை அல்ல, நிஜம். எனவே கற்பனைகள் அனைத்தும் அனுபவங்களாகிவிடும் யுகத்தில் இன்றைய கவிஞ்ன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். எனவே அவன் படைப்புகள் அவன் அனுபவங்களை உணர்த்தியாக வேண்டும். மின் துகள் பரப்பு கவிதைகளில் இவை அனைத்தையும் சோதனை முயற்சியாக செய்திருக்கும் கவிஞர் இந்திரன் கொதுலூப் தீவுகளில் இம்முயற்சிகளின் வெற்றியை முழுவதுமாக தன் கடல்மொழியில் கண்டடைகிறார்.
காதலாய் தன் பிரதிபிம்பமாய் வரும் வரிகளில்,
இதுவரைப் பரிச்சயப்பட்டிராத அந்நிய தீவு ஒன்றில்
சம்பிரதாயமாய் எல்லோரையும் போல்தான்
நாம் சந்தித்துக் கொண்டோம் முதல் முறையாக
உன் புருவ வளைவில்
புன்னகை ஒன்றை
சரலென் என்னிடம் நீட்டியபோது
என்னிடமிருந்த எல்லா திசைக்காட்டும் கருவிகளும்
வழிகாட்டும் வரைபடங்களும்
ஏனோ திடீரெனத் தொலைந்துப் போயின
(பக் 36)
ஒரு கடலோடியின் பார்வையில் திசைக்காட்டும் கருவியும் வழிகாட்டும் வரைபடமும் தானே வரமுடியும்! என்ற உணர்வு வாசகனுக்கு வருகிறது. வாசகன் இப்போது கடலோடியாக கடல் அலைகளில் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறான். இப்பயணத்தில் கரீபியக்கடலும் அட்லாண்டிக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் கடல் கொள்ளைக்காரர்கள் தொலைத்தக் கப்பல்களின் பெயர்கள் நம் காதில் விழுகின்றன. முதல் முறையாக தமிழன் என்ற அடையாளம் மங்கி மிக இயல்பாக வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம் "இந்தியன்' என்ற அடையாளம் கடவுச்சீட்டு வழியாக நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். இக்கவிதைகளில் வரும் கருப்பினத்தமபதிகள் தங்களை இந்தியாவின் பூர்விகக்குடிகள் என்றே அறிமுகம் செய்து கொள்கிறார்கள்.
கடல் பாறையில் வந்தமரும் பறவையோ தன் கருத்த வாலை
அசைத்து சொந்தம் கொண்டாடுகிறது..
கவிதை இத்துடன் முடிந்திருந்தால் இக்கவிதை வெறும் காட்சிப்படிமமாக மட்டுமே முடிந்துப் போயிருக்கும். ஆனால் கவிதையோ அழகியலையும் தாண்டி காட்சிகளின் ஊடாக அரசியலையும் சமூகவியலையும் பேச வேண்டும் என்பதை தன் இலக்காக தன் நேர்காணல்களில் முன்வைக்கும் இந்திரன் தன் கவிதையில் அதைச் செய்திருக்கும் இடம் இக்கவிதையின் கடைசிவரிகள்.
"தீவின் தனிமையில்
என் உண்மை சொரூபம் தேடி
அமர்ந்திருக்கிறேன்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
நிறமிழந்த மரப்பெஞ்சின் மீது.." (பக் 55)
'நான் இந்தியாவின் பூர்விகக்குடியா" இந்தியனா?
இல்லை ஆப்பிரிக்கா தான் மனித குலத்தின் பிறப்பிடம்
என்றால் இந்தக் கறுப்பனான நான் யார்?"
மிக நுண்ணிய அரசியலை வைத்திருக்கும் இந்திரனின் பார்வை..இது.
"பாறையில் பதிந்த டைனோசரின் பாதச்சுவடுகளை
ஆய்வாளர்கள் தூரிகையினால் சுத்தம் செய்து வாசிப்பது போல
நான் உன்னை வாசிக்கத் தொடங்குகிறேன்" (பக் 63)
"பிளாட்பாரம் கிடைக்காமல்
வெளியே நிற்கும் ரயில்கள் போல
திறந்து வாசிக்கப்படாத உனது ஈமெயில்கள்
எங்கே காத்திருக்க நேருமோ என
கணந்தோறும் அஞ்சுகிறேன்" (பக்44)
"கவிதை என்பது ஒரு புதிய புரிதல் முறை. தற்கால வாழ்க்கை - வாகன நெரிசல், கணிப்பொறி, மின் துகள் பரப்பு, விமானத்தின் வேகம், தார் உருக்கும் இயந்திரத்தின் அழகு, சின்னத்திரை பிம்பங்கள், வெள்ளித்திரை வேடிக்கைகள், தனக்கான புதிய கவிஞனை எதிர்பார்த்து நிற்கிறது. " என்று சொல்லும் கவிஞ்ர் இந்திரன் தன் ஒவ்வொரு கவிதைகளிலும் அதைச் செய்திருக்கிறார்.
நவீன கவிதை குறித்த தன் புரிதல்களை அவரே சோதனை முயற்சி செய்து அம்முயற்சிகளில் வெற்றி அடைந்து நவீன கவிதையின் ஒரு வழிகாட்டியாகவே திகழ்கிறார் கவிஞர் இந்திரன் நம் கவிதைக்கடலில் கடலோடியாக பயணிக்கிறார். கடலின் மொழி கவிஞ்ருக்கு தன் இலக்கை நோக்கிய பயணத்தில் மிக அற்புதமாக தன் பாய்மரக்கப்பலை விரித்து பயணித்துவிட்டதற்காய் கொதுலூப் தீவுகளுக்கு நாம் நன்றி சொல்லலாம்...
அதிலிருந்து ஒரு கவிதை:
நம்பிக்கை நட்சத்திரம்
-----------------------
இருளின் சுவர்களுக்குள்
ஆயுதம் தாங்கிய நிழல்களால் சூழப்பட்டு
நான் காவலில் வைக்கப்பட்டிருக்கையில்
நீ என் காதில் கிசுகிசுத்தாய்:
'இருளின் கர்ப்பப் பை
வெளிச்ச விதைகளை
சூல் கொண்டிருக்கிறது'
காய்ந்த முள் பொடிப்பொடியாய் காற்றில் பறக்கும்
கோடை வெயிலில்
நதியாய் நீர் வற்றிப்போய்
பாலை மணல் வெளியாய் நான் திரிந்து கிடக்கையில்
நீ என் அருகமர்ந்து
விழி நீர் துடைத்து கண்களில் முத்தமிட்டுச் சொன்னாய்:
'மணலுக்கும் கீழே
பல நதிகள் பாய்ந்து கொண்டிருப்பதை
அறியாதவனா நீ"
இலையுதிர் காலத்தில்
நம்பிக்கையின் எல்லா இலைகளும் உதிர்த்து
சோக மரமாய் நான் தனிமையில் நிற்கையில்
சந்தனம்போல் மணக்கும் உன் குளிர்ந்த கரங்களை
என் நெற்றியின் மீது படிய வைத்து
ஒரு கவிதை வரி சொன்னாய்:
'புதிய தளிருக்கு இடம் கொடுத்து
பழைய சருகுகள் உதிர்ந்தன என்று
புரிந்து கொண்டவை பறவைகளே'
------
கவிதை தொகுப்பு:மிக அருகில் கடல் 
கொதுலூப் தீவுகளில் எழுதிய கவிதைகள்
வெளியீடு: யாளி.
பக் 72
விலை ரூ 70/

நன்றி: கீற்று.