ஜல்லிக்கட்டில் யாருக்கு வெற்றி.?
அதிமுக? திமுக? மாணவர்கள்?
யாருக்கு வெற்றி?
ஒரு புள்ளி... அதை நோக்கி குவியும் பல்வேறு அதிகார மையங்கள்!
அரசியல்வாதிகளை விலக்கி வைத்து நடந்து முடிந்திருக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் யாருக்கு வெற்றி?
தமிழர் கலாச்சாரம் ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு/ஏறுதழுவுதல் என்ற
பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்கியவர்களின் முதல் வெற்றி.
கட்டுக்கோப்பாக போராட்டத்தை தொடர்ந்து நடத்திய மாணவர்களின் வெற்றி. இவ்விரண்டும் எவ்விதமான கேள்விகளுக்கும் அப்பாற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக மாணவர்கள் திரண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள், மத்திய அரசு மாநில அரசு
மீதான நம்பிக்கை இன்மை, ஒட்டுமொத்தத்தில் இளம் தலைமுறையின் விரக்தி மனப்பான்மை அவர்களை தலைமையின்றி ஒன்றிணைக்கும்
கண்ணுக்குத் தெரியாத நூலிழையாக இருந்தது.
இன்னும் சிலர், முகநூல் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களில் பெரும்பாலோர் எந்த அரசியல் கட்சியின் சார்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் எந்த அரசியல் கட்சிக்கு எதிர்வினை
ஆற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொண்டு
இப்போராட்டம் தன்னெழுச்சியாக எழுந்ததா என்பதை வேறொரு
கோணத்தில் அணுகுவதையும் கவனித்தில் கொள்ள வேண்டும்.
இப்போராட்டம் இப்படித்தான் நடக்கும் என்று கணிக்க முடியாதவர்கள் கூட இப்போராட்டம் இப்படித்தான் முடிவடையும் என்பதைக் கணித்திருந்தார்கள். அவர்களின் கணிப்பு ஓரளவு வெற்றி பெற்றது. இந்த அரசியலுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கும் நேரடித் தொடர்புகள் இல்லை.
இப்போராட்டம் களத்தில் இருந்தப்போது இச்சூழலை ஒவ்வொருவரும் தமக்குச் சாதமாக்கிக் கொள்ள நினைத்தார்கள்.
போராட்டத்தில் கூடியவர்களைப் பார்த்தவுடன் சினிமாக்காரர்களுக்கு வயிற்றில் நண்டு ஓடியது நரி ஓடியது. ஒருவர் தவறாமல் வந்து வருகைப் பதிவேட்டில் ஆஜர் போட்டுவிட்டு போனார்கள். அதற்கான காரணம் எல்லோரும் அறிந்தது தான். !
இப்போராட்ட களம் வெறும் 500 அல்லது 1000 மாணவர்கள் மட்டுமே கூடி இருக்கும் போதே ஆளும் கட்சியான அதிமுக நினைத்திருந்தால் கலைத்திருக்க முடியும். ஆனால் அதிமுக இப்போராட்டதை மிகவும் சரியாக தனக்குச் சாதகமாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தீபாவும் எம்ஜிஆர்
அம்மா ஜெ தீவிர ஆதரவாளர்களின் அதிருப்தியும் பெரும் தலைவலியாக இருந்தது. இப்போராட்டம் அந்த தலைவலிக்கு ஜண்டுபாம் மாதிரி ... வினைபுரிந்தது. ஊடகங்களும் பொதுமக்களும்
வழக்கம்போல சுடச்சுட பரிமாறப்படும் இன்னொரு பிரேக் நியுஸ்க்கு
போய்விட்டார்கள். அப்பாடா நிம்மதியா இருக்கு என்று சசிகலா.
தமிழக முதல்வர் ஓ.பி. க்கு இன்னொரு சவால். ஜெ என்ற ஆகச்சிறந்த திறமையான முதல்வருக்குப் பின் அந்த நாற்காலியில் வந்தமர்ந்திருக்கும் அவருக்கு அவருடைய நிர்வாகத்திறமையைக் காட்ட இது ஒரு களமாக வாய்ப்பாக அமைந்தது, அதனால் தான் அந்த
மவுனமன்னர் எல்லாவற்றையும் ஒரு நமட்டுச்சிரிப்புடன் ரசித்துக்கொண்டும் களத்திற்கு நேரடியாக வராமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டும் இருந்தார். மாணவர்களின் கோரிக்கை நிறைவேறீயது என்பதை மாணவர்கள் மத்தியில் சொல்லாமல் அவர் அலங்காநல்லூருக்கு ஓடினார். அரசு சொன்னவுடன் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்திவிட முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
"ஜல்லிக்கட்டு ஊர்த்தெய்வமான முனிசாமி உத்தரவு போட்ட பிறகுதான் நடத்தமுடியும்! இதுதவிர விரதமிருப்பது காளைகளுக்கு செய்யவேண்டியது இத்தியாதி பல சடங்குகள் உண்டு. அதெல்லாம் முடிந்தால் தான் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் திறக்கமுடியும். தமிழக முதல்வர் சொன்னவுடன் எல்லாம் திறக்க முடியாது. முனிசாமிக்கு
அவ்வளவு "பவர் " உண்டு!"
இதெல்லாம் தெரிந்த தமிழக முதல்வர் தெரிந்தே தான் அலங்காநல்லூர் போனார்!
போரட்டத்தையும் போராட்டக்காரர்களையும் ஒ.பி அணுகிய விதம்
"என் ஸ்டைலே தனி " என்பது போல இருந்தது. ஓ.பி.க்கு அரசியல்
தெரியும். விளையாடத்தெரியும். காளைகளை அடக்கவும் தெரியும்.
என்பதை நிரூபித்துவிட்டார்.
எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் இப்போராட்டம் கலவரமாக
வெடிக்கும் என்று எதிர்பார்தார்களா..? அப்படி எதிர்பார்த்து அது
நடந்திருந்தால் அதுவே ஆட்சிமாற்றத்திற்கான கதவுகளைத் திறந்துவிடலாம். வாடிவாசல் தங்களுக்கு இப்படியும் புறவாசலைத்திறக்கும் என்று எதிர்பார்திருந்தார்களா..?
திமுக வின் செயல்தலைவர் முதல் இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் வரை... தலைமுதல் வால் வரை... ஜனவரி 2017ல்
மிகப்பெரிய மாற்றம் வரும் என்று உறுமியது அவர்களின் வழக்கம்போல மேடை உறுமலா அல்லது அதற்குப்பின்னால்
அவர்களுக்கு என்று தனி அரசியல் எதுவும் இருக்கிறதா...?
இக்களத்தை அவர்கள் எப்படி அணுகினார்கள்..?
தொல். திருமாவளவன் போன்றவர்கள் இப்போராட்ட களத்தை
ஆளும்கட்சியான அதிமுக ஏன் வளரவிட்டது? அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தது என்று பேசும் போது எதிரணியாக இருக்கும்
திமுக வினர் ஆளும்கட்சி மீது காத்திரமான குற்றச்சாட்டுகளை வைக்காமல் தமிழகத்தில் " சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
(அதாவது அப்படி சீர்குலைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்)
என்பதையே மீண்டும் மீண்டும் சொன்னதன் மூலம் ஜல்லிக்கட்டு
களத்தில் தோற்றுப்போய்விட்டார்கள். இன்றைய கணினி யுகத்தில்
இவர்கள் சொல்வதையும் எழுதுவதையும் இவர்கள் சொல்லி எழுதப்படுவதையும் பேசப்படுவதையும் மட்டுமே நம்பிய காலம்
மலையேறிவிட்டது. ஊடக வெளிச்சத்தில் கைபேசி காமிராக்களில்
ஓவ்வொரு தனிமனிதனும் ஓர் ஊடகமாக மாறிவிட்டான்.
இனி, புறவாசல் வழியாக வரும் அரசியல் நடத்த முடியாது.
மக்களுக்கான மக்கள் நலம் தரும் அரசியல் நடத்தினால் மட்டுமே
எதிர்காலம் உண்டு.
காங்கிரசுக்காரர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அமைதியாக
இருந்தார்கள். ஜல்லிக்கட்டைத் தடை செய்தவர்கள் அவர்கள் தான்.
பீட்டாவை ஆதரித்தவர்கள் அவர்கள் தான். சென்னை பாஷையில்
சொல்வதானால் அவர்களுக்கு சூடு சொரணை இருப்பதால் அவர்கள்
உண்ணாவிரதமெல்லாம் இருக்காமல் அமைதியாக இக்களத்தைவிட்டு
விலகி நின்று தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.
"ஜல்லிக்கட்டு நடக்கும் .. இந்த ஆண்டு எப்படியும் நடக்கும். நடந்தே தீரும்" என்றெல்லாம் பேட்டிக்கொடுத்துக்கொண்டே அரசியல் நடத்தியவர்கள்
தமிழிசை மற்றும் இல கணேசன் வகையறாக்கள்..
ஜல்லிக்கட்டு காளைகள் அவர்களை முட்டாமல் இருப்பதில் அவர்களுக்கு சின்னதாக ஒரு மன நிம்மதி..
பொதுஜனங்கள் போராட்டத்தை திருவிழாவாக மாற்றியதில்
உடன்பாடும் எதிர்மறையும் உண்டு.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முகநூல் பதிவு இப்போராட்டம்
"என்ன பிரச்சனை என்பதை மறந்துவிட்டு தீவிரவாதம், மதவாதமாக
ஆகிவிட்டது " என்பதை வருத்தத்துடன் பேசுகிறது.
களத்தில் ஆரம்பம் முதல் நின்றவரின் பதிவு என்பதால் அவருடைய
கருத்துகள் கவனம் பெறுகின்றன.
இன்றைக்கு அவசரச்சட்டம் / நிரந்தர சட்டம் நிறைவேற்றி இதற்கு
வழிகண்டிருக்கும் மத்திய மாநில அரசும் சட்ட நிபுணர்களும்
இதை ஏன் இதற்கு முன்பே செய்யவில்லை?
எது இவர்களை அப்படி செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது?
ஒவ்வொரு பிரச்சனைக்கும் இப்படி மெரினாவில் கூடி போராட்டம்
நடத்தினால் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் என்றால்
அரசு எதற்கு? சட்டமன்றம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு?
#ஜல்லிக்கட்டில் வெற்றி யாருக்கு#