Wednesday, March 13, 2024

கனவு இல்லம்

 கனவு இல்லமெல்லாம் தரவேண்டாம்.

கனவில்லாத இல்லமாவது தரலாம்தானே.!


காணி நிலத்தில் ஒரு குடிசை

கட்டித்தந்தால் போதும்.

அது எனக்கே எனக்கானதாக

இருக்க வேண்டும்.

என் எழுத்துகள் விரும்பும்போதெல்லாம்

எழுந்து  நடமாடவும்

அழவும் சிரிக்கவும்

உயிர்ப்புடன் உலாவரவும்

குடிசையாக இருந்தாலும் போதும்.


கனவு இல்லத்திற்குத்தானே

சா.அ. விருதும் பட்டயமும் தேவை.

கனவில்லாத இல்லத்திற்கு

என்ன தேவை?

வீடில்லை என்பதே 

எழுத்தாளரின் தேவை.

எனக்கு வீடில்லை.

எனக்கு தமிழ் நாட்டில்

முகவரி இல்லை,

எனக்கும் என் எழுத்துக்கும்

இளைப்பாற ஓரிடம்..வேண்டும்.

அதை 

வாரிசுகளுக்கு எழுதி வைக்க மாட்டேன்.

பெற்ற பிள்ளைகளுக்கும்

என் எழுத்துகளுக்கும்

என்ன உறவு?

எழுத்தும் இயக்கமும்

மரபணுவில் வந்ததென்றால்

கம்பனின் பிள்ளைகளை

ஏன் காணவில்லை.?


வாழும்போதே

வந்துப் போகவும்

என் முகவரியை எழுதவும்

என்னைப் போலவே

முகவரியற்ற எழுத்துகளுக்கு

முகவரியாகவும்

ஓர் இல்லம் வேண்டும்.


அரசு கேட்கும் அடிப்படைத் தகுதிகள்

ஆதார் அட்டை

தாசில்தார் முத்திரை

எதுவுமில்லை என்னிடம்.

அவ்வை விருதோ

அம்மா விருதோ

உங்கள் எந்த விருதுகளுக்கும்

எங்களிடம் விண்ணப்ப படிவங்களும் இல்லை,

ஆனாலும்,

வந்துப் போகவும்

தங்கிப் போகவும்

ஓரில்லம் ..வேண்டும்.

கனவு இல்லம் கேட்கவில்லை,

கனவில்லாத ஒரு குடிசை..

போதும்.


#புதியமாதவி_கனவுஇல்லம்.


Monday, March 11, 2024

அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்

 


கலை இலக்கியத்தை உன்னத சன்னிதானத்தில் பூஜை செய்து

புனிதம் என்ற கங்கை நீரைத் தெளித்து அதன் மீது படிந்திருக்கும்

தீட்டுக்கறையை நீக்கி இலக்கியத்தை ஆராதிக்கும் ஒளிவட்ட பிம்பங்களின் நிழல்களும் தரையில் தான் விழுகின்றன. இது இந்த மண்ணின் நியதி. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் இந்தப் பட்டியல் போடும் கூட்ட்த்தின் நுண்ணரசியல் இலக்கிய விமர்சனங்கள் என்ற பெயரில் அதன் அடியாழத்தில் பதுங்கி இருக்கும் அசல் முகம் அவ்வப்போது வெளிவந்துவிடுகிறது.

இப்படியாகத்தான் இலக்கிய வடிவத்தின் பெரியாரியல் தீண்டாமையும்.

     தந்தை பெரியாரின் “இல்லை, இல்லை” என்ற எதிர்மறை கோட்பாடு அழகியலுக்கு எதிரானது என்பதாக ஒரு கருத்தியலை அவர்கள் பல்வேறு மாயஜாலங்களுடன் நம்முன்  நிகழ்த்திக் காட்டினார்கள். வெங்கட் சாமி நாதனின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் தந்தை பெரியாரின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் இருக்கும் வேறுபாடு என்ன? இருவரும் தமிழ்சாதியை உருப்படாது என்றுதான் ஏசுகிறார்கள். தமிழ் நிலத்தை இது ஒரு பாலை நிலம் என்றார் வெ.சா. இதைப் பற்றி ஈழத்து விமர்சகர் எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு கட்டுரையில் (1998, ஜீலை செப். பக் 43) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     “தமிழ்ப் பாரம்பரியத்தை ஒரு பாலை என்று முற்றாக நிராகரிக்கும் வெ.சா. எழுத்து அகங்காரமானது. வரலாற்றின் பார்வை அற்றது. முற்றிலும் தன்முனைப்பானது. வெ.சா.விட மிகத்தீவிரமாக பெரியார் தமிழ்ப் பாரம்பரியத்தை நிராகரித்துவிட்டார். பெரியாரின் நிராகரிப்புக்கு ஒரு கருத்து நிலை அடித்தளம் இருந்த்து. வெ.சா.வின் நிராகரிப்புக்கு உன்னதக்கலை என்ற கானல் நீர்தான் அடிப்படை.”

     தந்தை பெரியாரின் அந்தக் கருத்து நிலையைக் கண்ட அச்சம்தான்  பெரியாரியம் கலை இலக்கிய வடிவமாகிவிட முடியாது என்று சொன்னவர்களின் அசல் பதட்டமும் தன்முனைப்பும். மீண்டும் மீண்டும் இலக்கிய விமர்சன உலகில் அந்த ஒளிவட்டப்பாதையில் சிக்கித்தவித்த பெரியார் கருத்தியல பொதுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பெரியாரியம் மேடைகளில் பேசுவதற்கானது மட்டும்தான் என்ற இன்னொரு பிம்பம் பெரியாரிய சிந்தனை வட்ட்த்திலும் புகுந்து

பெரியார் இலக்கிய மேடைகளில் தீண்டப்படாதவராக ஒதுக்கப்பட்டார்.

அதிலும் குறிப்பாக பெரியாரியல் கவிதைகள் என்பதெல்லாம் யோசித்துப் பார்க்க முடியாத ஏலியன் கனவுகளாக இருந்தன.

     இச்சூழலில்தான் சுகுணா திவாகரின் கவிதை தொகுப்பு இந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து புறப்படுகிறது, விமர்சன உலகின் உன்னதங்களை புனிதங்களை நோக்கி எழுதுகின்ற பெரியாரையே கவிதையின் கருவுக்குள் ஏந்தி வந்திருக்கிறது. வெறும் கருத்தியலை மடக்கி மடக்கி அடுக்குமொழியில் சொல்லிவிட்டு போய்விடும் உரைவீச்சுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு முழுக்கவும் நவீன கவிதையின் உள்வீச்சை

தனதாக்கி, களத்தில் இறங்கி சமராடி இருக்கிறது.

     சாயல் என்ற தலைப்பில் ஒரு கவிதை.

“போகும்போது மனிதர்கள்

எதைக் கொண்டு போகிறார்கள்?”

என்றார் அவர்.

“நிழல்களை .

எல்லா மனிதர்களும்

போகும்போது தன்  நிழல்களை

எடுத்துச்சென்று விடுகிறார்கள்”

என்ற பதில் வந்தது.

“நான் நிழலையும்

விட்டுச் செல்கிறேன்” என்றார்.

பிறகு நாம் அவரின் நிழல்களானோம.

இனி, பெரியார் கவிதைகளின் நிழல்களில் உலாவருவார்,

கருந்துளை என்பது கருந்துளை அல்ல,

அது இல்லை என்று இனி எவராலும் சொல்லிவிடமுடியாது.

நாளை தமிழிலக்கிய கவிதா மண்டலத்தில் இக்கருந்துளையிலிருந்துதான்

கவிதைகள் புறப்படும். அழகியல் மையத்தைச் சுற்றி     சுற்றிவரும் அனைத்து ஒளிவட்டங்களையும் இது விழுங்கிவிடும்.!

ஆச்சரியத்தில் விமர்சன உலகம் தன் கண்டுப்பிடிப்புகளை மீளாய்வு செய்யும்.

ஆம்..

எப்படி அந்தக் கருந்துளையிலிருந்து இவ்வளவு வெளிச்சம் வருகிறதென்று .

(கருந்துளை கவிதையிலிருந்து)

முகவரியைத் தொலைத்தவர்களும்

முகவரி இல்லாதவர்களும்

தவறான முகவரியில் இருந்து கொண்டு

தங்கள் அடையாளமிழந்திருப்பவர்களும்’

இனி, முகவரியைத் திருத்திக் கொள்ளுங்கள்.

நம் பிரபஞ்சத்தின் அதிசயக் கருந்துளை,

நம் சாயலாக .. கவிதைப் பூக்களில்

“அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்”

வெளியீடு: கருப்புப் பிரதிகள்.

கவிஞர் சுகுணா திவாகர்.


------------------------------------------------------------   

    

 

Monday, March 4, 2024

ஒரு கோணல் மரத்தின் கதை

     புதிய இந்தியா வரவேற்கிறது. வாருங்கள். வருவதற்கு முன், ஜனநாயக அடிப்படையிலான குடியுரிமை, அடிப்படை உரிமைகள் என்ற சிந்தனைகளைக் கதவுக்கு வெளியே கழற்றி வைக்கவும்

ஸ்டாண்டப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்டப் இந்தியா, மேக் இன் இந்தியாமாபெரும் நம்பிக்கையைத் தந்த இந்தபுதிய இந்தியாவின் திட்டங்களைக் காணவில்லை! யாரும் தேடவும் இல்லை.

ஏன் இத்திட்டங்களின் நோக்கம் நிறைவேறவில்லை?

இவை ஏன் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை?!

மிகையான விளம்பரங்களுடன் மேடை பேச்சுகளுடன் வெளியான இத்திட்டங்கள் இப்போது எங்கே இருக்கின்றன? அப்படியே இருந்தாலும்

இதன் பயனாளிகள் யார்?

     இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி நமக்கு நம்பிக்கை தருகிறது.

இந்தியாவில் கல்வித்துறை வளர்ச்சியும் இந்தியாவின் திறங்கள் குறித்த வளர்ச்சியும் ஏன் தலைகீழ் விகிதமாக இருக்கின்றன? நம் நாட்டிலிருக்கும் 53% தொழில் நிறுவன ங்களில் வேலை இருக்கிறது என்றாலும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் தேவையான திறன்கள் இல்லை!! எனவே யாரையும் வேலைக்கு எடுக்கமுடியவில்லை என்று இந்திய திறன் அறிக்கை வெட்கமின்றி சொல்கிறது. 2030ஆம் ஆண்டிற்குள் திறன் குறைபாட்டில் ஒரு பெரும் நெருக்கடியை இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்குமென சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்திருக்கிறது. அதன்விளைவாக இந்தியா தன் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) சுமார் 1.6 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் ! ஆனால் அதைப் பற்றி ஆள்வோருக்கு எந்தக் கவலையும் இல்லை. இதுதான்புதிய இந்தியா’ .

     ஒருபக்கம் நம் தரவுகள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. இணைய கட்டுப்பாடு கண்காணிப்பு என்ற பெயரில் ஜன நாயகத்தின் குடியுரிமை குரல்வளை நெறிக்கப்படுகிறது.

     ஒவ்வொரு பிரச்சனைகளையும் தரவுகளுடன் அணுகி இருக்கிறார் பரகால பிரபாகர். அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள் கூட அதிகாரத்திடம் உண்மையைப் பேச அச்சப்படுகிறார்கள் என்பதை இப்புத்தகம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. புதிய இந்தியா ஒரு கோணல் மரம். இந்த கோணலுக்கு காரணம் ஆளும் கட்சி மட்டுமல்ல, திராணியற்ற எதிர்க்கட்சிகளும் தான்.

     சமகால அரசியலைப் பற்றி பேசுபவர்களுக்கும் எதிர்கால இந்தியாவைப் பற்றி உண்மையான தேசப்பக்தியுடன் அணுகுபவர்களுக்கும் இப்புத்தகம் ஒரு தீர்க்கமான பார்வையைக் கொடுக்கும். பக்கத்திற்கு பக்கம் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய புத்தகமாகவும்  நம்மை அதிகம் யோசிக்க வைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது.

     இக்கட்டுரைகளை எழுதி இருக்கும் பரகால பிரபாகர் அவர்கள் இன்றைய நம் இந்திய அரசின் நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமனின் கணவர் என்பதையும் ஒரு தகவலாக மட்டும் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. பரகால பிரபாகருக்கும் அக்கட்டுரைகளை தமிழாக்கம்ச் செய்திருக்கும்ப்ரெண்ட்லைன் ஆர், விஜயசங்கர் அவர்களுக்கும் புதிய இந்தியாவின் வாழ்த்துகளும் நன்றியும்.

தமிழில் எதிர்வெளியீடு..

 



Friday, March 1, 2024

இராசேந்திரசோழனின் "பெண்கதைகள்"

 

இது அஞ்சலி கட்டுரை அல்ல.

ஒருவரின் மறைந்த நாளில் அவர் குறித்தப் பதிவுகளைப் போடலாம்.

ஆனால் விமர்சனங்களை வைத்தால் அதை நெருடலின்றி

அணுகும் மன நிலை இன்றுவரை நமக்கு வாய்க்கவில்லை.

மரணத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை என்றே வைத்துக் கொள்வோம்.

இராசேந்திர சோழன் தன் கதைகளைப் பற்றி சொல்ல வருகிறபோது
என் எழுத்தில் எதாவது செல்வாக்கு தென்படுமானால் புதுமைப்பித்தனும் தி.ஜானகிராமனும் தான் என்று சொல்வேன். அவர்கள் இரண்டு பேரைத்தவிர
மற்றவர் யாரும் என்னைக் கவரவில்லை” என்று தன் படைப்புலகம் பற்றி சொல்லுகிறார். ஆனாலும் புதுமைப்பித்தனின் “காலனும் கிழவியும்” கதையில்
வரும் ஒரு கிழவி கதைப் பாத்திரத்தை நாம் இராசேந்திர சோழனின் கதை பெண்களிடன் காண முடியாது. தி. ஜானகிராமனின் பெண்கள், அவர்களின் பாலியல் மீறல்களை இவரும் தன் கதைகளில் எழுதினார். (தி..ஜாவின் கதை பெண்களின் பாலியல் மீறல்கள் vs இராசேந்திர சோழனின் கதை பெண்கள் பாலியல் மீறல்கள் ஓர் ஒப்பீட்டு ஆய்வுக்குரியது )

இவர் கதைகள் பெண் உடலின் இச்சைகளையும் சந்தர்ப்பம்
கிடைத்தால் எவனுடன் வேண்டுமானாலும் படுத்து தன் உடலின்
பசித் தீர்க்கும் இரவு மிருகமாக பெண்ணுடல் அலைவதை
எழுதி இருக்கிறார். பெண்ணின் காம ம்
கட்டுப்படுத்த முடியாதது என்றும் அதை எதிரில் இருக்கும்
அனைத்தையும் உடைத்துப்போடும் என்றோ
கதை மையத்தில் வைப்பதில் நமக்கும் உடன்பாடுதான்.
ஆனால் பெண்ணுடல் மீறும் தருணங்களும்
பெண் தேர்வு செய்யும் ஆண்கள் யார்? என்பதுடனும் இராசேந்திர சோழன் எழுதிய கதைகள் அபத்தமானவை. காரணம் முன்பின் தெரியாத எவனுடனும் பெண்ணுடல் புணர்வதில்லை. காமத்தின் பசித் தீர்க்க அவள் பிச்சை எடுக்கும்போதும் பிச்சை இடும் கதவுகளையும் கைகளையும்
அவள் தேர்வு செய்து கொள்வாள். அதற்கான பல்வேறு
உளவியல் காரணங்கள் இருக்கும்.
அது மெல்ல மெல்ல கூடி வந்து ஒரு தருணத்தில்
அவள் உடல்வழி ஆண்மையத்தை சிதைக்கும்.
இதில் படித்தவள் படிக்காதவள் மேற்கத்திப் பெண்,
கீழைத்தேசப் பெண் என்ற வேறுபாடில்லை.
அது என்னவோ தெரியவில்லை.. இந்த ஒரு மிக முக்கியமான பெண்ணுடல் மையத்தை இராசேந்திர சோழனின் கதைப் பெண்கள்
அறிந்திருப்பதாகவே இல்லை. காரணம் அவர்கள்
அனைவருமே ஆண் பாலியல் உலகம் உருவாக்கிய பெண்ணுடல்களாகவே மட்டும் இருந்தன. அவர் கனவுகள் கூட இதை நெருங்கவில்லை! அவை பெண்ணுடலையோ அப்பெண்ணுடலின் காமத்தைத் தூண்டும்
உள்ளத்தையோ அதற்கான எந்த ஒரு காரணத்தையோ
காணுவதற்கு சின்னதாக கூட பிராயத்தனப்படவில்லை.
அதனால்தான் அவர் கதையின் பெண்கள் முன்பின் தெரியாத
ஆணிடம் கூட தன் காமம் தீர்க்கும் பெண்களாக வருகிறார்கள்.
'புற்றிலுரையும் பாம்புகள்' கதையில் வரும் பெண்ணை எடுத்துக் கொள்வோம்.
.அவள் ஆண்கள் முன்னால் வரவே மாட்டாளாம். சரி,
அப்படிக் கூட இருக்கலாம் , ஆனால் கதையின் விவரிப்போ
அக்கதை நடக்கும் பின்புலமோ அவள் ஆண்களின்
முன்னால் வராதப் பெண்ணாக இருந்திருப்பாள்
என்று நம்பக் கூடியதாக இல்லை! அதிலும் குறிப்பாக
உழைக்கும் சம்சாரி வீட்டுப் பெண்கள், இப்படி இவர்
கதைகளில் வருகிற மாதிரி ஆணின் முன்னால் வருவதற்கே
மராப்பை இழுத்து விட்டுக் கொள்வதும், கதவோரத்தில்
நிற்பதுமாக இருப்பதில்லை.
பெண்களின் பாலியல் மீறல்கள் ஆண்மையத்தைச் சிதைக்கும்
என்பதற்காக இக்கதைப் பாத்திரங்களை எழுதி இருக்கும்
அஷ்வகோஷ் தன் கதைகளில் படைத்தப் பெண்கள்
எல்லாம் ஆணுலகம் தன் பாலியல் பார்வையில்
படைத்தப் பெண்களே தவிர , பெண்களின் பாலியல் மீறல்களைப்
புரிந்து கொண்ட கதைகள் அல்ல. வேறென்ன சொல்ல?!!!

மற்றபடி, அவருடைய மார்க்ஸ் சாராம்சத்தில் ஒரு கலைஞன்,
தத்துவத் தேடலும் மனிதாபிமானமும் விடுதலை வேட்கையும்கொண்ட கலைஞன், என்பதிலும்
அரசியல் செயல்பாட்டாளனாக எனக்கு முன்னால் புனைவு, அ புனைவு என்பதா என்ற தேர்வு என்முன்னால் இருந்தது. நான் அபுனைவை நோக்கிச் சென்றேன் என்று அவர் நகர்ந்து அவர் எழுதிய அபுனைவுகள் முக்கியமானவை.

எனவே இராசேந்திர சோழனின் பெண்களும்
அவர்களின் பாலியல் மீறல்களும் ஆண்மையம் உருவாக்கிய
பெண்ணுடல்களாகவே இருந்தன. அவை நிஜமான வாழ்க்கையின்
களத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் கூட
அவர்களின் பாலியல் மீறல்களை ஆண்பார்வையிலேயே
கடைசிவரை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
அவரால் பெண்ணுடலின் காம உள்ளத்தை
அதன் மடிப்புகளை அதன் சின்னச் சின்ன அசைவுகளைக்
கண்டறியமுடியவில்லை. எனவே பெண்ணுடலின் அருகில்
அவர் கதைகள் நெருங்கவே இல்லை,
கனவுகளிலும் கூட அவருக்கு அது சாத்தியப்படவில்லையோ!