Tuesday, May 31, 2016

கவிதை கொலை







கூப்பிடு தூரத்தில் இனப்படுகொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் பாரட்டினீர்கள்
பக்கத்து ஊரில் கவுரவக்கொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் கொண்டாடினீர்கள்
ஊரெல்லாம் வெள்ளக்காடு
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் லைக் போட்டீர்கள்
தலைவர் அகாலமரணம்
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் ஆஹா என்றீர்கள்
நேற்று அவன் கொலை செய்யப்பட்டான்
துப்பு துலக்கியதில் 
கவிதை அவனைச் சிறுக சிறுக
விஷம் கொடுத்து கொலை செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
நீங்கள் வேறோரு கவிஞனைப் பாராட்டுவதற்கு
புறப்பட்டுவிட்டீர்கள்.

Sunday, May 29, 2016

ஹிரோசிமாவில் ஓபாமா






அமெரிக்க அதிபர் ஓபாமாவின் ஜப்பான்  ஹிரோசிமா பயணம்
உலக அரங்கில் அதிர்ச்சி கலந்த ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டது.
71 வருடங்களுக்கு முன் இரண்டாம் உலகப்போரின் எந்த மண்ணில்
அமெரிக்க போர்விமானம் அணுகுண்டு போட்டு (ஆக 6, 1945 காலை 8.30
மணியளவில்) இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்ததோ
அந்த மண்ணில் அதே நினைவிடத்தில் ஓபாமா பேசினார்.
அதிலும் குறிப்பாக அணுகுண்டு வீசியதில் தப்பித்து இன்று
உயிருடன் வாழும் ஜப்பானியர்களையும் (மே, 27)சந்தித்தார்.
நெகிழ்வாக  இருந்தது அக்காட்சிகள்.
வருத்தப்பட்டாரே தவிர தங்கள் போர்விமான தாக்குதலுக்காக
ஒபாமா மன்னிப்பு கேட்கவில்லை! அதை ஜப்பானியர்கள் எதிர்பார்க்கவும்
இல்லை என்பது கூடுதல் தகவல்.

At Hiroshima Memorial, Obama Says Nuclear Arms Require ‘Moral Revolution’

Obama in Hiroshima calls for 'world without nuclear weapons'

ஓபாமா  ஜப்பான் மண்ணில் "அணு ஆயுதங்களில்லாத
உலகம் " பற்றி பேசியது கேட்க நன்றாக இருந்தாலும்
பெரிய அண்ணன் , ஆயுத விற்பனை அதிகாரி,
அமெரிக்க அதிபர் அதைப் பற்றி பேசும்போது
நெருடலாக இருக்கிறது.

Monday, May 23, 2016

புரட்சிதலைவி முதல் "அம்மா" வரை

 
புரட்சிதலைவி , "அம்மா" ஆனது தற்செயலானதா?
அல்லது திட்டமிடப்பட்டதா..?

எம் ஜி ஆர் அவர்களை புரட்சிதலைவர் என்று கொண்டாடியவர்கள்
செல்வி ஜெயலலிதாவை புரட்சிதலைவி என்று கொண்டாடினார்கள்.
புரட்சிதலைவர் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் சொல்
புரட்சிதலைவி.
புரட்சிதலைவி இன்று "அமமா" என்றழைக்கப்படுகிறார்.
அம்மா என்று கொண்டாடப்படுகிறார்.


எம் ஜி ஆரால் அரசியலுக்கு அறிமுகமானவர் ஜெயலலிதா.
எம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக எம் ஜி ஆருக்குப் பின்
அதிமுக தொண்டர்கள் ஜெ வை ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று எம் ஜி ஆர் என்ற பிரம்மாண்டத்தையும் தாண்டி
ஜெ என்ற "அம்மா" தன் தடம் பதித்திருக்கிறார்.
ஓர் ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சி அமைத்திருக்கிறது தமிழகத்தில்.
எவ்விதமான அனுதாப அலையோ அதிர்ச்சி அலையோ
இல்லாமல் தமிழக அரசியலில் இதை சாதித்துக்காட்டி
இருக்கிறார் ஜெ.
அவர் கடந்து வந்தப் பாதை..
ஒரு பெண்ணின் அரசியல் வெற்றி..
அவ்வளவு எளிதானதாக அவருக்கு வாய்க்கவில்லை.

அதிகம் படித்தப் பெண்கள், வாசந்தி போன்ற எழுத்தாளர்கள் கூட
ஜெ பற்றி சொல்லும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனையின்
வெளிப்படாகவே இருக்கின்றன.

ஆண் – பெண் உறவில் திருமணம் என்ற சமூகம் அங்கீகரித்த
ஓர் உறவிலிருந்து விலகி / விலக்கப்பட்ட ஒரு பெண்
நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவள்
கட்டாயம் மாசற்ற கன்னிப்பெண்ணாக மட்டுமே இருந்தாக வேண்டும்
 என்ற ஆணாதிக்க மரபு சிந்தனைதான் வாசந்தி அவர்கள் ஜெ குறித்த சொன்ன
அந்த விமர்சன வரிகள்..
(She , (ஜெ)  wants to project herself as the Immaculate Virgin. She is Amma.)
(இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்)


மக்கள் திலகம் எம்ஜியாரின் அரசியல் வாரிசு, எம்ஜியார்
விரும்பிய பெண், ஏம் அவருடைய காதலி.. , சின்னவீடு..
.. இப்படி ஏதோ ஒன்றாகத்தான் ஜெ ஆரம்பகாலங்களில்
பெண்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும்
விருப்பமும் எம்ஜிஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது,
அவர் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்த
ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது.
அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக
ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக.

ஜெ வின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இணைத்துப் பேசப்பட்ட
எம்ஜிஆரின் மரணத்தில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது
கூட்டத்திலிருந்த அனைவரும் பார்க்க அவர் பலவந்தமாக
இறுதியாத்திரைக்குப் புறப்பட்ட ஊர்தியிலிருந்து இறக்கப்பட்டார்.
அவர் திரைப்படங்களில் நடித்த எந்த ஒரு காட்சியையும் விட
மிகவும் உருக்கமாக இருந்த ஒரு காட்சி அதுதான்.
அப்போது ஜெவுக்காக பரிந்துப் பேசவோ ஆதரிக்கவோ அக்கூட்டத்தில்
யாருமில்லை. ஜெ என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணுடன் இருந்தஉறவு / நட்பு
 கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக இருந்த
மூப்பனார் போன்றவர்கள் ஜெ வை ஓர் அரசியல் தலைவராகக் கூட வேண்டாம்,
ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவராகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
 மூப்பனாரைப் பொறுத்தவரை ஜெ என்றுமே ஒரு சினிமா நடிகை, அவ்வளவுதான்.
ஒரு சினிமா நடிகரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான
உறுத்தல்களும் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுவே ஒரு நடிகை
என்று வந்துவிட்டால், நடிகை எல்லாம் அரசியல் தலைவராக வரலாமா?
 என்ற ஆதிக்க மனப்பான்மை அரசியல் கூடாரங்கள் எங்கும் இருக்கிறது.
 இன்றும் கூட ஓட்டு வாங்குவதற்கு , மிஞ்சிப் போனால் பாராளுமன்றத்தில்
 எதுவுமே பேசாமல் இருக்கிறமாதிரி ஒன்றிரண்டு திரைப்பட நடிகைகள்,
 குறிப்பாக ரிடையர்ட் நடிகைகள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் தலைவராக அல்ல! என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


அரசியலின் இச்சூழலில் தான் ஜெ நம் சமூகத்தில் விலக்கப்பட்ட
அனைத்து அடையாளங்களுடனும் ஓர் அரசியல் தலைவராக்
நுழைகிறார். அரசியலின் இந்த அகம் அறியாதவர் அல்ல ஜெ.
மிகவும் நன்றாக அறிந்தவர்தான்.


புரட்சித்தலைவி என்ற அடையாளத்துடன் நுழைந்த ஜெ அதே தொடர முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அம்மா என்ற சொல்லை விட
 புரட்சித்தலைவி என்ற சொல் உலக அரசியலின் அடையாளத்துடன்
ஒத்துப்போகும் சொல். கலகக்குரலின் அடையாளம். ஆனால்..அதைத் தொடர்வதில்
 அல்லது அந்த அடையாளத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதில்
ஜெ வுக்கு சிக்கல்கள் பல இருந்தன.
அதற்கும் இந்த சமூகத்தின் ஆண்-பெண் உறவுச்சிக்கலே முதன்மையான காரணமாக இருந்தது.

எம்ஜிஆர் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படுகிறார்.
புரட்சித்தலைவர் என்ற ஆண்பாலின் பெண்பால் சொல் புரட்சித்தலைவி.
இந்தச் சொல் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் என்ற ஆண்மகனுடன்
 ஜெ என்ற பெண்ணுக்கிருந்த இச்சமூகம் அங்கீகாரம் தாராத
ஒரு அடையாளத்தை மட்டுமே சுமந்து நிற்கும்.
அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை.!

இக்காலக்கட்டத்தில் தான் ரொம்பவும் தற்செயலாக
வந்துசேர்கிறது “அம்மா” என்ற அடையாளம்.

புரட்சித்தலைவி”அம்மா” என்ற அடையாள வட்டத்தில் வந்ததன்
 உளவியல் இப்படித்தான் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும்
வழக்கமும் உண்டு.
அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின்
தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது.
அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார்.
ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு
 வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும்
அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.
பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய
இந்த தமிழ்ச்சமூகம் ஜெ வைக் கொண்டாடுவது என்பது அரிது என்பதை அவர் அறிவார்.

 என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே
இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட
 தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது.
இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில்
 ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல்
அவருக்கு ஒரு கவசமாக இருந்தது.
அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள
 அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.


தந்தை பெரியாரை விட்டு விலகி வந்த திமுகவும் சரி,
திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் சரி,
தங்களுக்கு என்று எந்த அரசியல் சித்தாந்தத்தை தனியாக வளர்த்தெடுத்தார்கள்
என்பது இன்றுவரை கேள்விக்குறி தான். ஆனால் அடையாள  அரசியலை வளர்த்தெடுத்ததில்
திமுகவின் வழியையே அதிமுக வும் பின்பற்றியது.
இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக அரசியல் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி அரசியல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.
திமுகவின் தலைவர் “அண்ணா” என்றானப் பின்
அவர் தொண்டர்கள் அனைவரும் அவர்மீது கேள்விக்கு அப்பாற்பட்ட
 பாசங்கொண்ட தம்பியராக மாறினார்கள்.
அரசியல் பாடங்களை “தம்பிக்கு” எழுதிய கடிதங்கள் மூலம் நடத்தினார் அண்ணா அவர்கள்.
அவருக்குப் பின் திமுக அரசியலில் தலைமைப் பொறுப்புக்கு
வந்த கருணாநிதி அவர்கள் “கலைஞர்” ஆனார்.
அவர் தன் தொண்டர்களை “உடன்பிறப்பே” என்று விழித்தார்.
அவரிடமிருந்துப் பிரிந்த எம்ஜிஆரும் உடன்பிறப்பின்
இன்னொரு நாடக வசனமான ” என் ரத்தத்தின் ரத்தமே” என்று ஆரம்பித்தார்
இந்த வழியில் வந்த ஜெ அவர்கள் இவர்கள் அனைவரையும்
மிஞ்சிய இடம் தான் இந்த ” அம்மா” என்ற அவதாரம்!

திராவிட சமுதாய வரலாற்றில் இந்த “அம்மா” என்ற உறவுக்கு
நீண்ட நெடிய வரலாறு, மரியாதைக்குரிய இடம் உண்டு.

திராவிட சமூகம் தாய்வழிச் சமூகம். தாயைக் கொண்டாடிய சமூகம்.
தமிழர்களின் கடவுளான குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் குமரன்.
இந்தக் குமரனின் தாய் குமரி. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும்
 அம்மன் குமரி தான். குமரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் குமரி,
 குமரனின் காதலியோ மனைவியோ அல்ல. அவன் தாய், குமரனின் அம்மா…
இப்படிப் போகிறது தமிழ்ச் சமூகத்தின் தொல்லியல் கதை.
தமிழ்ச்சமூகத்தின் தாய்வழி உறவை,
அந்த உறவின் அடையாளமான “அம்மா” என்ற சொல்லை
ஜெ தன் அடையாளமாகக் காட்டும் போது,
இதுவரை ஜெ என்ற பெண்ணின் மீது வீசப்பட்ட கறைகள் தானாகவே
மறைந்துவிடுகின்றன.
ஆண் பெண் உறவில் பாலியல் தொடர்பை விலக்கிய ஒரே சொல் “அம்மா” என்ற சொல் தான்.

அடையாள அரசியலையும் தன் தொண்டர்களை வெறும் உணர்ச்சி விலங்குகளாக
மட்டுமே வைத்திருப்பதையும் வளர்த்தெடுத்த திராவிட அரசியலில்
காலம் ஜெ வின் மடியில் போட்ட “அம்மா” என்ற சொல் அவருக்கு கிடைத்த வரம்.
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் அந்தச் சொல் தாங்கள் வளர்த்தெடுத்த
உணர்ச்சி அரசியலின் உச்சம் என்பதையும் அச்சொல்லின் கனத்தையும் வீரியத்தையும்
திராவிட அரசியல் நன்கு உணர்ந்தது. அதை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல
என்பதையும் ஜெ வின் அரசியல் எதிரிகள் உணர்ந்தார்கள்.
ஜெ அடுக்கடுக்காக கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்
“அம்மா ஜெ”வின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகம் உணர்ந்தது.
 நிழல் அம்மா, அரசியல் அம்மா , வறிய மக்களின் வாழ்க்கையில்
 நிஜ அம்மாவாக மாறிக்கொண்டு வந்தார்.
ஜெ வின் அரசியல் எதிரிகளை ரொம்பவும் பயமுறுத்திய இடம் இதுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான
ஓர் உணர்ச்சி உத்திகளின் அரசியல் காட்சிகள் அரங்கேறியதே இல்லை.
இக்காட்சிகள் தமிழகத்திற்கான சிறப்பு காட்சிகளாகவே இருக்கின்றன.
இந்த உணர்ச்சி உத்திகளைக் கையாளாத எந்த ஓர் அரசியல் கட்சியும்
 இந்த தமிழ் மண்ணில் கடை விரித்தால் வியாபாரம் செய்ய முடியாது
என்கிற நிலைக்கு இன்று வந்துவிட்டது. இதனால் தானோ
என்னவோ களப்பணியில் இன்றுவரை தங்களுக்கு என்று
ஒரு தனி அடையாளத்தை வைத்திருக்கும்
 இடதுசாரிகளாலும் தமிழ்நாட்டில் அரசியல் தேர்தல் தேர்வுகளில்
 பாஸ் பண்ணக்கூட முடியவில்லை.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்கள்.
தமிழக உணர்ச்சி அரசியலில் "அம்மா" என்ற ஆயுதம்
அதை மிக வலுவாக செய்து காட்டி இருக்கிறது.
ஜெ வின் ஓட்டுவங்கியில் பெரும்பான்மையாக இருக்கும்
பெண்களுக்கு "ஜெ" வின் கடந்தகாலமோ அல்லது
ஜெ குறித்த கதைகளோ பேசப்படுவது கண்டு அவர்மீது
வெறுப்பு வருவதில்லை. மாறாக அவர்மீது அனுதாபம்
ஏற்படுகிறது. ஜெ மீது அவதூறுகள் சுமத்தப்படும் போதெல்லாம்
அப்பெண்கள் "அம்மா" என்ற பிம்பத்தின் மீது விழும்
எச்சிலாகவே அதைப் பார்க்கிறார்கள். துப்பியவனைக் கண்டிக்கவும்
தண்டிக்கவும் தங்களுக்கு தெரிந்த ஏதொ ஒரு முறையைக் கையாளுகிறார்கள்.

ஜெ என்ற பெண்ணை ஒரு பெண் என்ற பால் அடையாளம் தவிர்த்து
ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, தமிழத்தின் முதல்வராக மட்டுமே
விமர்சிக்க வேண்டும். அப்படியான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை
மட்டுமே இனி எதிர்காலத்தில் சிலரின் அரசியல் வாழ்வுக்கு
துணை நிற்கும்.

ஓர் அரசியல் சாதனையை ஏற்படுத்தி இருக்கும் "அம்மா"விடமிருந்து
ஆக்கப்பூர்வமான மக்கள் ந்லத்திட்டங்களை, செயல்பாடுகளை
எதிர்பார்க்கிறார்கள் அவ்ருக்கு ஓட்டுப்போட்டவர்களும் ,
என்னைப் போன்றவர்களும்.

Thursday, May 12, 2016

மின்பற்றாக்குறையா அல்லது மின் ஊழலா..?




காற்றில் ஊழல், தண்ணீரில் ஊழல், மின்சாரத்தில் ஊழல்.
இந்த ஊழல்களிலும பங்குதாரர்கள் தனியார் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும்.
சந்தைப்பொருட்கள் அனைத்திற்கும் சந்தை விலை உண்டு. அந்த விலையை நிர்ணயித்துவிட்டு அதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்குவது அரசு தான்.
இப்படி செய்கிற அரசாங்கம் வாய்க்கூசாமல் சொல்லுகிறது அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன என்று. ! இது எப்படி இருக்கு?
தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கும் திராவிட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இருவரும் இந்த ஊழலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
மின்துறை இன்று அரசின் நஷ்ட கணக்கில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மின்சார பற்றாக்குறை என்பதை விட
>அரசின் மெத்தனப்போக்கு.
.>அறிவித்த பொதுத்துறை மின் நிலைய திட்டங்களை கிடப்பில் போட்டிருப்பது.
>மின்சார உற்பத்தியில் தனியாரை வளர்த்துவிட்டதுடன்
சந்தைவிலையை விட அதிக விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை அரசே வாங்கி விநியோகிப்பது....
இதனால் இன்று தமிழ்நாடு மின்சார துறைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் ரூ. 97000 கோடி ....
.
இந்த லட்சணத்தில் நம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையிலேயே மின்சாரம் தயாரித்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்..
(நேற்று மாலை ஊழல் மின்சாரம் ஆவணப்படம் பார்த்தேன்.நன்றி விழித்தெழு இயக்கம். மும்பை)

Monday, May 9, 2016

ஜனநாயகத்தில் நாய்கள்



நாய்கள் ஆபத்தானவை.
ஆதிகாலம் தொட்டு மனிதன் காலடியில் வாலாட்டும்
நாய்களை வெறுப்பது உசிதமல்ல
என்கிறார்கள் நாய்க்காவலர்கள்.
நன்றியுள்ள ஜிவன் நாய்கள் தான்
என்கிறார்கள் நாய்ப்பிரியர்கள்.
ஆமாம்.. இந்த நாய்கள்
யாருக்கு காவல் இருக்கின்றன?
இந்த நாய்கள்
யாருக்கு நன்றி காட்டுகின்றன.?
எதற்கு நன்றி காட்டுகின்றன.?

வாலை ஆட்டும் நாயகள்
சில மானுடப்பிறவிகளின் அடையாளம்.
எச்சில் எலும்பு கடிக்க
ஏங்கும் பரிதாபம்.
குரைக்கும் நாய்கள்
அரசியல்வாதிகளின் வாத்தியார்கள்.
கூட்டம் கூட்டமாக
பிச்சைக்காரனைத் துரத்தும் நாய்கள்
காவல்துறையில் .
வேட்டை நாய்களும் உண்டு
நம் நாட்டில்.
அதுகளை நினைத்தால் தான்
என் உடல் நடுங்குகிறது.
உடம்பெல்லாம் கண்ணாக
இந்திரனின் வெறிப்பிடித்த கண்கள்
எம்மை வெருட்டுகின்றன.

வாயில்லாத ஜீவன் நாய்கள் என்று
வக்காலத்து வாங்காதீர்கள்.
ஊரெங்க்கும் வீதியெங்க்கும்
நாய்கள் விரட்டுகின்றன..
நாய்க்கடித்தால் தொப்புளைச்சுற்றி நாற்பது ஊசி
பயமுறுத்துகிறதா உங்கள் அறிவு...
நாய்களைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்துவிட்டு
நாய்கள் ஜாக்கிரதை யை
கழுத்தில் தொங்க்விட்டு
காலம் தள்ள முடிவு செய்துவிட்டீர்களா..?
ச்சே.. நாயும் பொழைக்கும் இந்தப் பொழைப்பு!
நாய்கள் ஆபத்தானவை.
நாய்களை வளர்ப்பவன் எஜமான்
நாய்கள் என்றும் அடிமைகள்.
ஜனநாயகத்தில்  நாய்களும் அடிமைகளும்
ஆபத்தானவர்கள்.

Saturday, May 7, 2016

ஓசுரில் மோடி




தமிழகத்தில் பா.ஜ.க. 3வது சக்தியா வளர்வதாக மோடி
சொல்கிறார். அது அவர் விருப்பம். எத்தானாவது சக்தியாகவும்
இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன..?
ஆனா கடைசியில் மோடி வைத்த வேண்டுகோள் தான்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கெ வேட்டு வைக்கிறமாதிரி
இருக்கு.. இந்திய ஒருமைப்பாட்டை இப்படி எல்லாம் ஒரு
பிரதமர்.. கேள்விக்குறி ஆக்கினால்..

(தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் போது டெல்லியில் நான் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்தி, உங்களுக்காக உழைக்கத் தயாராக உள்ளேன்”)
அப்போ... பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி
தலைமையில் இயங்கும் நடுவண் அரசின் திட்டங்கள்  அமுல்படுத்த
மாட்டீர்களா.. இந்தியாவின் பிரதமர் என்றால் அவர் குமரி முதல்
இமயம் வரை பரந்திருக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் பிரதமர்
அல்லவா.. நடுவண் அரசு அனைத்து மாநில மக்களின் நலனுக்காகவும்
செயல்படும் அரசு அல்லவா..
என்ன இது... இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒழுங்கு நாடாளுமன்ற
திட்டங்கள் மாநில அரசும் மைய அரசு உறவுகள் பற்றி எலலாம்
ஒன்றும் தெரியாத 3 ஆம் தர பேச்சாளர் மாதிரி ... ஓர் அகில
இந்திய கட்சியின் தலைவர் பேசலாமா.. பாரதப்பிரதமர் பேசலாமா..

பாரதமாதா கி ஜெ.

Thursday, May 5, 2016

விஜயகாந்த்




சினிமா நடிகர் என்பதால் அவர் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.
அவர் நடித்துக்கொண்டிருந்தக் காலத்திலும்
மிகப்பெரிய வெற்றி படங்களைக் கொடுத்தார் என்று சொல்வதற்கில்லை.
அவருக்கு என்று தல. தளபதி க்கு இருக்கும் அளவுக்கு கூட
ரசிகர்கள் இருந்ததாக தெரியவில்லை.
வரும்போது வருவேன் ... என்று பஞ்ச் டயலாக் பேசியே
தன் ரசிகர்களை ரஜினிகாந்த் ஏமாற்றிக்கொண்டிருந்த காலக்கட்டம்..
ரஜினிகாந்த அரசியலுக்கெல்லாம் வர வேண்டாம்..
அவர் யாருக்கு ஆதரவு? என்று டில்லி முதல் மெரினா வரை
காத்துக்கிடந்த காலத்தில் இவர் அரசியலுக்கு வருவார் என்று
எவரும் சொல்லவில்லை. அவரும் சொன்னாரா தெரியவில்லை.
அதனால் தான் இக்கேள்வி எழுகிறது....
விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டது தற்செயலானது தானா?

Wednesday, May 4, 2016

கூட்டணி




கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக இருந்தது. துணைக்கு பக்கத்து வீட்டு மரியம்மா பையன் சூசையை வைத்துக் கொண்டாள். காசு நல்ல புழங்கியது. இது கடன் சொல்லிட்டு சாப்பிடற உள்ளூர் கூட்டமில்லை. காசு கொடுத்து சாப்பிடற வெளியூர் கூட்டம்.

இந்த வருடம் மகனின் திவசத்தை நல்ல படியா செய்யனும்னு கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். கிழவியின் ஒரே மகன் இறந்து நாளை விடிந்தால் இரண்டு வருசம் ஆகப் போகிறது.இந்த மாதிரி எலக்ஷன் நேரத்தில்தான் தகராறில் அவன் வம்பாங் கொள்ளையா

போய்ட்டான்.

செத்தாலும் செத்தான்...நோய்பட்டு தூக்கிட்டுப்போக நாலு ஆள் இல்லாத அனாதை மாதிரியா செத்தான். அவன் மகராசானா செத்தான். சும்மா சொல்லப்புடாது. அன்னிக்கி கூட்டம்னா கூட்டம் அம்புட்டு கூட்டம். எம்மாம் பூ மாலை விழுந்திச்சி. பெரிய்ய பெரிய தலைவர் மாரெல்லாம் வந்தாங்க... நான் தலையில் அடிச்சி கூப்பாடு போட்டதைக் கூட படம் பிடிச்சாங்க .பேப்பர்கார மகராசனெல்லாம் வந்து எம்மாம் படம் பிடிச்சாங்க தெரியுமா.. தலைவரு வந்திருந்தாரு.. நம்ம ஆளு மாதிரியே இல்ல வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாரு. அவரு கூட எனக்கு என்னவோ நிறைய பணம் தரப்போறதா சொன்னாராம். சூசைப் பயக் கூட சொன்னான். ஆனா இரண்டு வருஷம் ஆகப் போறது. இன்னும் பணம் தான் கைக்கு வந்த பாடில்லை. பஞ்சாயத்து போர்டுக்கு அலைஞ்சதுதான் மிச்சம்..ம்.

கடைவியாபாரம் எல்லாம் முடிஞ்சது. கிழவி கூட்டமா போற ஊர்வலத்தைப் பார்த்தாள்.

'ஏலே சூசை.. நேற்றுதானே பெரிய கூட்டம் வந்திச்சி..இன்னிக்கும் என்ன அதே கூட்டமா ?

'இல்ல பாட்டி..இது வேற கட்சி..நம்ம அண்ணன் இருந்திச்சி பாரு அந்த கட்சிக் கூட்டம். நம்ம அண்ணன் செத்த அன்னிக்கி வந்தாரு பாரு சிவப்பா ஒரு தலைவரு.. அவரு இன்னிக்கி வாராராம். '

'யாரு அந்த மவராசனா.. ?நல்லாயிருக்கட்டும். ஏலே சூசை அந்த மகாராசனைப் பார்த்து நமக்கு இன்னும் பணம் வரலைன்னு சொல்வோம் வர்றியா.. '

'யே கிழவி சும்மா இரு. அவருக்கு அதெல்லாம் எங்கே நினவில இருக்கப் போவுது '

'போலே அவரு என்ன நம்மூர்க்காரப் பயலுக மாதிரியா ? சொன்னா சொன்ன வாக்கு தவறு மாட்டர்லே '

ஊர்வலம் துவங்கியது. கூட்டம் ஜெ ஜேனு.

கிழவி திறந்த வேனில் கை அசைத்தபடியே வந்த தலைவரைப் பார்த்துவிட்டாள். எவ்வளவு பெரிய மனுஷன்.. நம்ம நிற்கிறதைப் பாத்துப்பிட்டு தான் கையை அசைக்கிறாரு.. கிழவியும் பதிலுக்கு கை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் சேலை தலைப்பை எடுத்து கண்கள் ரண்டையும் துடைத்து கொண்டாள். அவர் நின்று பயணம் செய்த வேன் அவளருகில் வந்தது. தலைவரு பக்கத்தில் நிற்பது யார் ? வணக்கம் போட்ட படி நெற்றியில் சந்தணப்பொட்டுடன் நிற்பது அவந்தானே..எம்மவன் காசியை ஆள்வைத்து அடித்துக் கொன்ற அந்த பாவிப்பயல் தானே...கிழவியின் பெற்றவயிறு பற்றி எரிந்தது.

'ஏலே சூசை..தலைவர் கிட்ட நிக்கறது அந்த கொலைகாரப் பேய்தானே.. '

'ஆத்தா, கத்தாதே.. சும்மா இரு. இப்போ அவுங்க ரண்டு பேரும் கூட்டாளிங்க '

கிழவி ஆவேசம் வந்தது போல் ஓடினாள்.

'அடப் பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா.உங்க பிள்ளை குட்டிக நல்லா இருக்குமா ? '

இறந்து போன மகன் காசியின் முகம் கண்முன்னால் வந்து நின்றது. ரோட்டோரத்தில் தார் ரோடு போடுவதற்காக குவிந்து கிடந்த கற்களை எடுத்து ஊர்வலத்தை நோக்கி வீசினாள். வெறிப்பிடித்தவள் போல கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். மண்ணை எடுத்து கூட்டத்தில் தூவினாள்.

ஊர்வலம் சிதறியது. போலீசார் ஓடிவந்து கிழவியைச் சுற்றி வளையம் அமைத்தார்கள். கிழவி நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு 'ஓ ' வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஏதோ பெரிய்ய மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று பயந்த போலீசார் கிழவியைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் ஒருவர் மாற்றி ஒருவர் லத்தியால் விளாசு விளாசுனு விளாசித்தள்ளினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வளவோ கவனமாகச் செய்திருந்தும் இந்தக் கிழவி எங்கிருந்தோ வந்து இப்படி எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாளே..நாளைக்கு டி.ஜி யிிலிருந்து சி.எம். வரை கேட்கப்போகிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற டென்ஷனில் கிழவியைப் பின்னி எடுத்து விட்டார்கள்.

அவளுக்கு அவர்கள் கொடுத்த எந்த அடியும் வலிக்கவில்லை. அவள் கண்கள் ஆகாசத்தைப் பார்த்து என்னவோ தேடிக்கொண்டிருந்தது.

மறுநாள் பத்திரிகைகளில் விதவிதமான செய்திகள்.

'தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

தலைவரைக் கொலை செய்ய சதியா ?

இது எதிர்கட்சிகளின் சதிச்செயல் .. '

கிழவி என்ன ஆனாளோ தெரியவில்லை.

***

( April  2003ல் எழுதி திண்ணையில் வெளிவந்த கதை. மீள்வாசிப்புக்காக)