Friday, November 25, 2011
காந்தியின் அரிஜன் யார்?
இந்திய தேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் தன் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். எப்போது இந்தப் பெயர் சூட்டினார்? ஏன்? அவர் சொல்வது போல கடவுளின் குழுந்தைகள் என்ற பொருள்படும் காரணத்தினாலேயே மட்டுமே இந்தப் பெயரைச் சூட்டினார் என்றால் இந்திய தேசத்தின் தந்தையைப் பாராட்டுவது அப்படி ஒன்றும் குற்றமில்லை!
சிவஜன், விஷ்ணுஜன் என்றெல்லாம் அழைக்கவில்லை. சரி அவருக்கு மட்டுமல்ல வடக்கே வர வர கைலாச மலையில் சிவன் பார்வதியுடன் வசிப்பதாக கதை இருந்தாலும் கூட சிவனுக்கு வடக்கே மவுசு இல்லை. அதனால் தானோ என்னவோ சிவபிரானின் 64 அவதாரங்களும் நம்ம தமிழ்நாட்டைச் சுற்றியே நடந்திருக்கிறது!
காந்தியும் ஹேராமும் மரணத்தில் கூடப் பிரிக்க முடியாதவர்கள் என்று ஒரு கதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனையும் நம்மிடம் உண்டு. (காந்தி குண்டடிப் பட்டவுடன் 'ஹேராம்' என்றெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை என்கிறார் காந்தியின் உதவியாளர். ஆனால் உண்மையை விட இந்த கற்பனை சுகமாக இருப்பதால் அப்படியே வரலாறும் எழுதப்பட்டுவிட்டது!!) அந்தளவுக்கு ஹேராமுடன் கலந்து கரைந்துபோனவர் காந்தி. அதற்காகவாவது "ஹேராம் ஜன் அல்லது ஸ்ரீராம் ஜன்" என்றாவது பெயர் சூட்டி இருக்கலாமே! அபபடி பெயர் சூட்டி இருந்தால் கூட அவர் சொல்லியிருப்பது போல உண்மையாகவே ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் குழந்தைகளாகவே நினைத்திருப்பார் என்று அவர் பற்றிய பிற விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாமும் ஏற்றுக்கொள்ளலாம்!
இன்னும் சிலர் விஷ்ணுஜன், ஹேராம் ஜன், ஸ்ரீராம் ஜன் என்றாலும் ஹரிஜன் என்றாலும் ஒன்றுதான்! திருமாலின் திருநாமங்கள் விஷ்ணு, ஸ்ரீராம், ஹரி என்று ரொம்பவும் அறிவுஜீவித்தனமாக பதில் சொல்லக் கூடும்! அவர்களிடம் எல்லாம் ஒரே ஒரு கோரிக்கை தான். இனிமேல் ஹரிஜன் என்று சொல்லாமல் ஸ்ரீராம் ஜன் என்று தான் அழைக்கவேண்டும் என்று சொல்லிப் பாருங்களேன்! அவ்வளவு தான்... அவர்களுக்கு கோபம் வரும். ...
ஆனால் இதை எல்லாம் விட்டுவிட்டு 'ஹரிஜன்' என்று பெயர் வைத்தார் பாருங்கள்... அங்கே தான் உதைக்கிறது! அதுவும் அவர் அந்தப் பெயரை வைத்த காலமும் சூழலும்.
24-09-1932ல் புனா ஒப்பந்தத்திற்குப் பின் இதைச் செய்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் இரட்சகனாக தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் ... "என்னை எதிர்த்தாயா... இரு இரு நீ யார் தெரியுமா?" என்று ஒடுக்கப்பட்டவனின் முகத்தில் அடிக்கிறமாதிரி அவனுக்கு உரைக்கிற மாதிரி சொல்ல வேண்டும் என்ற ஆதிக்க சாதி மனோபாவம்!
30-09-1932 அகில இந்திய தீண்டத்தாகதவர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். பின் அந்தச் சங்கத்தின் பெயரை 'தீண்டத்தகாதவர்களின் சேவகன்'என்று அழைத்தார். மீண்டும் அதே சங்கத்தை "ஹரிஜன் சேவா சங்க்" என்றழைக்கத் தொடங்கினார். 11-02-1933ல் 'ஹரிஜன்' என்ற பெயரில் வாத இதழ் ஒன்றையும் ஆரம்பித்தார்.
காந்தி ஹரிஜன் என்ற சொல்லை நரசிங் மேக்த்தா பாடல்களிலிருந்து தான் எடுத்துக்கொண்டார் என்பதும் காந்தி நரசிங் மேத்தாவின் பக்திப்பாடல்கள் மிகுந்த ஈடுபாடுக்கொண்டவர் என்பதும் திரிவேதி, சச்சின்கேட்கர் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் மூலம் தெரியவருகிறது. காந்தியும் அதை மறுக்கவில்லை. அவரே அதை ஏற்றுக்கொள்கிறார்.
"குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞர் தன் பாடலில் பயன்படுத்திய இச்சொல் தலித்துகளுக்குப் பொருத்தமானதாக இருப்பதாக தான் கருதுவதால் பயன்படுத்தியதாகவும் ஒத்துக்கொள்கிறார். (on the strength of its having been used by the first known poet saint of gujarat, i felt it to be acceptable and started using it)
பக்தி இலக்கிய வரலாற்றில் வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக காந்தியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மிகவும் முக்கியமானவர் நரசிங்மேக்த்தா. சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களிடமும் தன் பக்திப் பாடல்களைப் பாடித்திரிந்தவர். வறுமையில் வாழ்ந்தவர். அவர் பயணத்தில் ஒருநாள் ஜூனாகாட் (junagadh) பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் /நாகர்கள் அவரை நிந்தித்து இகழ்ந்து பேசி திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆனால் கிர்நார் மலையடிவாரத்திலிருக்கும் தாமோதர் கோவிலுக்கு அவர் சென்றபோது அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கிருஷ்ணாவின் மீது பாடல்கள் பாடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நரசிங்மேக்த்தா அவர்களுக்காக தன் பஜன் பக்திப் பாடல்களைப் பாடினார். அதைக் கேட்ட அம்மக்கள்,
"ஓ மேக்த்தா..
நீ அற்புதமான மனிதன்..
சாதிகளைக் கடந்தவன்
பணத்திற்கு மயங்காதவன்
உயர்வு தாழ்வு உனக்கில்லை"
என்று போற்றினார்கள்.
அப்போதுதான் அவர் தன் பாடலில் ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். சாதியத்தை முன்னிறுத்தி வாழும் தன் சாதி மக்களைக் கேலியும் கிண்டலுமாக
"ஆமாம்.. நாங்கள் அப்படித்தான்...
நாங்கள் அப்படித்தான்
நாங்கள் கெட்டவர்கள், கேடுகெட்டவர்கள்..
நாங்கள் இழிந்தவர்கள்,
உலகில் இழிவினும் இழிவானவர்கள்
ஓ நாங்கள் அப்படித்தான் .. நாங்கள் அப்படித்தான்
நீங்கள் சொல்வது போல
நாங்கள் அப்படித்தான்!
ஹரிஜனை விலக்கி வைக்கும் பிறவிகள்
பிறப்பின் பலனை எல்லாம் இழந்தவர்கள்
நாங்கள் அப்படித்தான்
நீங்கள் சொல்வதுபோல
நாங்கள் அப்படித்தான்"
(who ever distance themselves from harijans
have wasted their births!
we are like that - yes we are like what you say!)
இந்தப் பாடலில் ஹரிஜன் என்ற சொல்லை நரசிங் புதிதாக உருவாக்கினார் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் அவருக்கு முன்பே சமூகத்தில் ஹரிஜன் என்ற சொல் வழக்கில் இருந்தது. அதுவும் குறிப்பாக தகப்பன் பெயர் அறியாத தேவதாசிகள் பெற்ற குழந்தைகளைச் சுட்டும் சொல்லாக இருந்தது.
எல்லம்மா கோவிலில் கடவுளுக்கு நேர்ந்துவிடும் பெண்குழந்தைகள்/தேவதாசிகள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஹரிஜன் என்றழைக்கப்பட்டார்கள். எனக்குத் தெரிந்து கர்நாடகம், மராத்திய மாநிலம் பகுதிகளில் இன்றும் எல்லம்மா வழிபாடும் பெண் குழந்தைகளை நேர்ச்சியாக தேவதாசிகளாக விடும் வழக்கம் ஒடுக்கப்பட்ட சாதி சமூகத்தில் மட்டுமே இருக்கிறது.
ஹரிஜன் என்ற சொல்லை காந்தி தெரிவு செய்தவுடன் அப்போதே அதற்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் 'என்னைப் பொறுத்தவரை அந்தச் சொல் மற்றவர்கள் நினைப்பதை எல்லாம் விட மிகவும் ஆழமானக் கருத்தைத் தருகிறது" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். (யங் இந்தியா 06 ஆக 1931)
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை மிகவும் உறுதியாக வெளிப்படுத்திய சூழலில் தற்செயலாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது "தீண்டாத்தகாதவர்களை கடவுளின் குழந்தைகள், ஹரிஜன் என்றழைப்பது என் இலட்சியம். அதற்காகவே மற்றவர்களும் அப்படித்தான் அழைக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை" என்று சொல்லியிருப்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.
(incidently in responding to a question, Gandhiji said that it was his ambition to call the untouchables as Harijans but he added that there was no compulsion on others to call them so> ref: CWMG Vol.LVII pg 42/44)
காந்தி ஹரிஜன்களுக்கு சேவை செய்வதாக பேசியதும் எழுதியதும் எம்மாதிரியான தொண்டுள்ளத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்திருந்த போதிலும் காந்தி ஆரம்பித்த ஹரிஜன் சேவா சங்கத்தில் அம்பேத்கரும் ஓர் உறுப்பினராக சொற்ப காலம் இருந்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
பல்வேறு சூழல்களில் காந்தியுடன் விவாதங்களையும் போட்டிகளையும் அம்பேத்கர் தவிர்க்கவே முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகளை எப்போதும் இந்துமதமும் அதன் காவலர்களும் கதவைச் சாத்தி மறுத்திருக்கிறார்கள். அதாவது, காந்திக்கு அவர் தன்னளவில் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
அச்சேவா சங்கத்தின் மீது அம்பேத்கர் கொண்டிருந்த கருத்துகள் அதன் செயல்பாடுகளின் மூலம் உறுதியான சூழலில் சங்கத்திலிருந்து விலகினார். அம்பேத்கருடன் மேலும் பல ஒடுக்கப்ட்ட மக்கள் ஹரிஜன் சேவா சங்கத்திலிருந்து வெளியேறினார்கள். கொஞ்ச கால்த்திற்குப் பின் ஹரிஹன் சேவா சங்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை! அதற்கு காந்தி சொன்ன விளக்கம்
"சாதி இந்துக்களின்/உயர்சாதி மக்களின் மனநிலையை மாற்றுவதே ஹரிஜன் சேவா சங்கத்தின் நோக்கம்" என்றார்.
அம்பேத்கர் சொன்னது போல அச்சேவா சங்கமும் காந்தியால் ஹரிஜன்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் மேலோட்டமான சேவைகளை மட்டுமே செய்தது. அதாவது சேரிகளைத் தூய்மைப்படுத்துதல், சேரிக்குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, சேரி மக்களுக்கு தனிக் கிணறு, சாலை, தனிக்கோவில், தனி சுடுகாடு ஆகிய வசதிகளைச் செய்து கொடுத்தல், சேரிக்குழந்தைகளுக்கு பஜன் பாடல்களைக் கற்றுக்கொடுத்தல் இத்தியாதி..
அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் இந்தமத அடையாளத்தை, இந்து சமூகத்தை விட்டு விலக முடியாத பந்தத்தை காந்தி தன் ஹரிஜன் என்ற பெயர் சூட்டலின் மூலம் கட்டமைத்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.
ஹரிஜன்களுக்கான சமூக உரிமைகள் குறித்தோ சமவாய்ப்புகள் குறித்தோ அவர் நம்பிய வர்ணாசிரம இந்துமதக் கொள்கையிலிருந்து பேசுவதோ யோசிப்பதோ சாத்தியமில்லை. இதைச் சுட்டிக்காட்டிய தருணங்களில் எல்லாம் காந்தி அதற்கான நியாயங்களையொ யதார்தங்களையோ உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.
"அடுத்தப் பிறவி என்ற ஒன்று இருந்தால் நான் ஹரிஜனாக பிறக்க விரும்புகிறேன்" என்று காந்தி சொன்னதைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள் காந்தியவாதிகள். அது ஏன் அடுத்த பிறவி? இந்தப் பிறவியில் மகாத்மா ஹரிஜனாக முடியாது என்பது காந்திக்கே தெரியும். அவருடைய காந்திய தேசத்தின் ஹரிஜன்கள், பிறப்பின் மூலமே அந்த அடையாளத்தைப் பெறுகிறார்கள் என்பது.
ஹரிஜன் என்ற சொல்லின் பயன்பாடு இந்தியாவில் உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக அளவில் இருந்தது. பகுஜன் சமாஜ்வாடி அரசியல் கட்சியின் வளர்ச்சிப்பாதையில் ஹரிஜன் என்ற சொல் வழக்கொழிந்து தலித் என்ற சொல் இடம்பெறலாயிற்று.
இந்திய சட்டமைப்பிலும் ஹரிஜன் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. Scheduled caste, scheduled tribes என்ற சொற்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. அதனால் தான் ராஜஸ்தானில் தலித் மனித உரிமை மையத்தைச் சார்ந்த மிம்ரோத் என்பவர் பத்திரிகைகளில் தலித்துகளை இழிவுபடுத்தும் நோக்கில் வழக்கிலிருந்த ஹரிஜன் என்ற சொல்லை ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தக் கூடாது என்று என்று ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கு கோரிக்கை வைத்தார்.
பலவருடங்கள் கழித்து உள்துறை அமைச்சகம் "ஹரிஜன்" என்ற சொல்லைப் அரசு துறைகளில் பயன்படுத்தக் கூடாது என்று எல்லா அரசு அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
தமிழ்நாட்டில் ஹரிஜன் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டது. ராஜாஜி போன்றவர்கள் இதில் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். காந்தியின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் என்றாலும் கூட இந்த ஹரிஜன் என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எவ்விதமான செல்வாக்கையும் பெறவில்லை. காந்தியவாதிகள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் என்று சொல்வதில் ஒருவிதமான மகிழ்ச்சியை அனுபவித்தார்கள் எனலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றவர்கள் கொடுத்த அடையாளங்கள் எல்லாம் அவர்களைக் கடவுளின் குழ்ந்தைகளாக்கியதே தவிர அவர்களை ஒத்த சமவாய்ப்புகளும் சம உரிமைகளும் கொண்ட சகமனிதர்களாக பார்க்கவே மறுத்தது. இந்த வரலாறுகளை எல்லாம் அறிந்து கொள்ளும்போதுதான் அயோத்திதாசர் பண்டிதர் தன் பத்திரிகைக்கு பள்ளன், பறையன், அருந்ததியன், ஒடுக்கப்பட்டவர்ன், தாழ்த்தப்பட்டவன், கீழ்சாதி, அடிமை இத்தியாதி எந்தப் பெயர்களையும் வைக்காமல் "தமிழன்" என்று பெயர் வைத்ததன் உன்னதம் புரிகிறது. சாதிய எதிர்ப்பு தங்களைச் சாதி கடந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டதுடன் தாங்கள் யார் என்ற தேடலுக்கு வழிவகுத்தது. அதனால் தான் அயோத்திதாசர் ஆங்கிலேய அரசு ஒடுக்கப்ப்ட்ட மக்களை டிப்ரஸ்டு க்ளாஸ் என்றழைப்பதை எதிர்த்து 1911ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 'இந்தியன் புத்திஸ்டு' என்று பதிவு செய்யும்படி எழுதுகிறார். திராவிட பவுத்தம் என்ற புதிய சொல் தொடரை உருவாக்கினார்..
திராவிட பவுத்தர், தமிழ் பவுத்தர் என்ற அடையாளங்கள், இந்திய சாதியவாதிகளுக்கு மாறான பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள், அதன் பின் தந்தை பெரியாரின் பங்களிப்பு என்ற தமிழ்நாட்டு சூழலில் காந்தியின் ஹரிஜன் எடுபடவில்லை!
Subscribe to:
Posts (Atom)