Sunday, August 25, 2024

தனிமை வெளியின் மெளன மொழி



தனிமையின் மவுனம்

பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது.

தனிமைத் தேடி ஓடும் மனிதர்கள்

கண்டதில்லை தனிமையை

காட்டிலும் கடலிலும்.

கைவீசி நடக்க இடமில்லாத மனிதர்களின் சாலையில்

எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரங்களின் பற்களுக்கு நடுவில்

சிக்கித் தவிக்கிறது தனிமையில் ஓர் ஜீவன்.

துணை தேடும் அன்றில் பறவையாய்

உறவுகள் தேடும் காக்கையின் கரைதலாய்

காலம் காலமாய் தன் குஞ்சுகளைக்

காக்கைகளின் கூட்டில் பொறிக்கவைக்கும்

இயலாமைக்காக

ஏங்கித்தவிக்கும் குயிலின் பாடலாய்

இங்கே ஒரு மனித ஜீவன்

தனிமை கவிந்த அறையில்...

தன் தாள்களைக் கிழித்து

வாழ்வின் நாட்களைக் கடக்கிறது.

மாநகரச் சதைக்கோளத் தாக்குதலில்

கைப்பிடியில் தொங்கிக் கொண்டு

துணையற்ற தனிமையை

விழுங்கி செரித்து,


ஒரு ராட்சச மிருகத்தைப் போல

விழுங்க யத்தனிக்கும்

பெருநகரப் பிசாசுவிடமிருந்து தப்பிக்க

காத்திருக்கிறது கைநிறைய கவிதைப் பூக்களுடன்

உரையாடல்களின் புல்வெளியில்

உரையாடல்களின் தரிசனத்திற்காக. Is

"அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவதன் மூலம்

வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதாக

இன்றைய கவிதை வெளிப்படுகிறது" என்றாரே ராஜமார்த்தாண்டன்..

இவர் அறையிலும் அனுபவங்கள் வாழ்க்கையின்

புதிய வாசல்களைத் திறக்கிறது.

காலங்களின் பயணங்களில்

மின்ரயில்களின்  பேரோசையில்

இதுகாறும் கேட்க மறந்துவிட்ட தன்னிசையை

அடையாளம்  காணுகிறது.

"தொட்டிச்செடிகளின் சங்கீதம்

புரியாமல் போனது இக்காலம் வரையில்

அறிந்தேனில்லை ரயிலில் பாடி யாசிக்கும்

சின்னஞ்சிறுமியின் குரலில் வழியும் தேனின்ருசி

கவனிப்பாரின்றி காற்றில் சிதறுகிறது

குழல் விற்பவனின் மூங்கில் கானம்"

"கவிதை ஒரு மோகனமான கனவு "என்றார் புதுமைப்பித்தன்.

இவர் அறையின் கனவுகளில்தான் எத்தனை விதம் விதமான

மோகனப்புன்னகைகள் முகம் காட்டுகின்றன.

முரண்களின் சூழலில் மீறலும் சுகமாகும் கனவுகளில்

நனவிலி மனதின் உருவமற்ற  ஸ்பரிசத்தில்

நேரம்போவது அறியாமல் நீந்தி விளையாடியதில்

ஈரம் அழித்த கவிதைகளின் நடுவே

புதியக்கவிதைகளுக்காய் காத்திருக்கிறது

மாநகரத்தின் மனிதக் கொக்குகள்.

வயிற்றுக்கும் மனசுக்குமிடையே அல்லாடும்

மனசின் கதை

மனித வாழ்க்கையில் புதிய கதையுமல்ல

புதியத்தடமும் அல்ல.

பொருள்வழிப் பிரிவு என சொல்லிவைத்தார்கள்

அகமும் புறமும் பாடிய

நம் சங்ககாலத்து சான்றோர்கள்.

பிரிவும் தனிமையும்

கவிதை அறியாத அறிவியல் கணிதங்களையும்

கவிதை எழுத வைத்தக் கதை

கற்பனையின் ராஜ்யமல்ல.

அப்படியிருக்க,

நெருப்பில் காய்ச்சிய

செம்பழுப்பு சூரியனை

தனிமை கவிந்த அறையில்

சிறைப்பிடிக்க நினைக்கிறது காலம்.

காலத்தை தன் கவிதைகளால்

எட்டி உதைத்து

கவிதையின் திசைகாட்டியாய்

சன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டு

எட்டிப்பார்க்கிறது

கவிதைகள் மிதக்கும் பால்வீதியை

வழிதவறி வடக்கே வந்துவிட்ட

தெற்குவானத்தின் துருவநட்சத்திரம்.


கவிஞர் அன்பாதவனின் முந்தைய கவிதைகளிலிருந்து

விலகி நிற்கிறது

தனிமை கவிந்த அறை.

கவிதைக்குப் பல முகங்கள்,

பல குரல்கள்.

கவிஞனின் வாழ்க்கைப் பின்ணணி,

சூழல், காலம், வயது எல்லாம் சேர்ந்து

கவிஞனின் முகத்திற்கு

முகம் கொடுக்கிறது.

மாநகரம் மும்பை

தனிமையின் தொட்டில்களை மட்டுமே

ஆட்டுவதில்லை.

100 கோடி செலவில் வேடிக்கை விருந்துகள்

இந்த  வெளிச்சத்திற்கு நடுவில்தான்

100 பைசாவுக்கு கடலை விற்கும் கனவுகளுடன்

சிறுவனும் நடக்கிறான்.

தனிமை என்ற பெருநகரச் பிசாசை

விரட்டி,  வதம் செய்து

இந்த மாநகரத்தின் எல்லா அறைகளுக்குள்ளும்

எட்டிப் பார்க்க வேண்டும்

செம்பழுப்பு சூரியனின் வெளிச்சம்.

வாழ்த்துகளுடன்,

புதியமாதவி,

மும்பை 400 042.

14.02.06

அறையின் எதிரொலி:

தனிமை கவிந்த அறை

அவனுக்கு கவிதையின் மகுடம்!

அவளுக்கு...?

பி.கு: கவிஞர் அன்பாதவனின் 'தனிமை கவிந்த அறை'

     கவிதை தொகுப்புக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை.



Monday, August 19, 2024

நடுச்சாமத்தில் ஒரு புத்தக விமர்சனம்.

 அன்புடன் புதியமாதவிக்கு



12/03 / 06 ல் டெல்லியில் இருந்து திரும்பிய பின் என் கடிதம் மூட்டையில் பார்த்த உங்கள் மின்சார வண்டிகள் நூலை இப்போ படித்து முடித்தேன். நூலுக்கு சில பல விருதுகள் பரிசுகள் பாராட்டுகள் கிடைக்கலாம், வாழ்த்துக்கள்.

எந்த வகை?

பொதுவாக பரிசுகள் சிறுகதை நாவல் என்கிற பிரிவுகளில் வரும்.

மேலும் சில சிறுகதைகளுடன் ஒரு தொகுதியும் மேலும் கொஞ்சம் விரிவாக இந்த நாவலையும் செய்து இரண்டு நூல்கள் ஆக்கி இருக்கலாமோ? இப்ப வெளிவந்ததில் என்ன தப்பு என்றால் பதில் இராது.பழக்கம் தான். முகம் மளித்தவன் தாடி விட்ட உடன் பலிக்கிறவர்கள் சேச்சே என்கிற மாதிரி சில நாள் கழித்து தாடியை எடுத்தாலும் சேச்சே!

மாறுபடச் சொல்லும் இனிமை :

நூல் முழுக்க இனிக்கின்றது. மனைவியின் மடிக்கு வேண்டும் மனசு, மடிச்சேலையை தொட்டில் ஆக்கி ஆடும் ஆட்டம் என்று இப்படி.கால் வீட்டில் வரும் மாலா - இனிமைக்குப் பதிலாக மும்பை நாற் சந்தியில் - போகும் பாதை மறந்து தவிக்கும் கிராமத்தானின் கவலையைத் தரலாம். பொருள் விளங்காமல்.

சில சொற்கள் தமிழ் தான் என்றாலும் வட்டாரத் தன்மை கருதி பொருள் தந்திருக்கலாமோ!

வம்பாங் கொள்ளை, பருவத்தின் முட்கள் என்பன. நிறைய இந்திக்கலப்பு மும்பைத் தமிழாக!அடி குறிப்பாகவாவது அர்த்தம் சொல்லப்பட்டால் படிக்கும் இந்தி அறியாத தமிழனின் ஏமாற்றம் தவிர்க்கப்படலாம். மும்பையில் வாழும் மனித தீபகற்பங்கள் (பக் 98)உண்மையில் எனக்கும் புரியவில்லை சாரம் (பக் 100)கூட பொருள் தெரியலை.

வியக்க வைக்கும் வருணனைகள்:

சில போகிற போக்கில் வந்து விடுகின்றன. "மாட்டேன்னு ¡"என்று சிஸ்டர் கேட்ட கேள்வியில் இலக்கண பிழையாக ஒரு ஆச்சரிய குறி விழுந்தது என்பது.இந்த மேதமை சிலம்பாட்டத்தை பாமர பொருள் அறியும் சிரமம் நிகழலாம் ! 'வினாத்தாளில் சாய்ஸில் விடும் கேள்வி இது - காதலர்களுக்கு' என்பதும் அப்படி. மிகவும் ரசித்தேன்.

ஓசையில்லா அழுகைகள்:

நிறைய கதைகளில் ஓசை இல்லாஅழுகைகள்.பொன்னாடையை ரிக்ஷா காரருக்கு கொடுத்துவிட்டு திரும்பும் ரசிகை -இயேசுவின் படத்தின் முன்னால் மண்டியிடும் சிஸ்டர் -தாராவியில் ஒரு தாய் -என்று பல கதைகளில் ஷெனாய் இசை மாதிரி இந்த அழுகை இனிமை இருக்கின்றது.இதுதான் படிப்போரை பாதிக்கும்.அந்தப் பாதிப்பு தான் திரும்ப படிக்க வைக்கும்.நம்ம படிக்கத் தூண்டுவது எழுத்தில் வெற்றி. அ அதுதான் இலக்கியம்.

மின்சார வண்டிகள் :குறு நாவல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நவீன வாழ்வின் நிகழும் எண்ணற்ற சமரசங்களும் முரண்பாடுகளும் துரோகங்களும் அதிர்ச்சிகளும் கதையில் திணிக்கப்பட்டு ஓடுதளம் போதாமல் முள்வேளியில் முட்டி நிற்கும் விமானம் போல என்று இந்த நாவலைப் பற்றி சொல்ல வைக்கிறது. உதவி செய்வதாய் எய்ட்ஸ் நோயாளி இடம் வேலைக்கு சேர்ப்பவர்,குடிபோதையில் நிகழும் வாசனையான பணக்கார அணைப்பு -முந்திய டிரைவர் எயிட்சில் செத்தார் என்றவுடன் -வெறுக்கத்தக்கதாய் மாறுவது -ஒருத்தனை காதலித்து இன்னொருத்தனை கணவன் ஆக்கி -என் பிள்ளைக்கும் சேர்த்து பள்ளிக்கு நடை -டியூஷன் என்று அக்கா உறவாகவே வரும் சுரண்டல் என்று நிறைய சங்கதிகள் .

மின்சார வண்டிகள் என்று ஏன் பெயர் வைத்தீர்களோ? (அட்டைப்படத்தில் ஒரு வண்டி மட்டும் தான் நிற்கிறது). கவுரியின் எதிர்காலம் -அவலத்தின் உச்சம் துயரத்தின் பாதாளம்.திருடன் முரடன் வேசை வேசையன் எல்லாரும் வாழும் சாள் வீடுகள் போல -கழுதை குதிரைகளை எல்லாம் சுமந்தபடி கவலையின்றி ஓடுகின்றன மின்சார வண்டிகள்என்று சொல்வதாக இருக்கும். மிகப்பெரிய அதிர்ச்சி தந்துவிட்டு ஜெயகாந்தன் கதை ஒன்று ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன. படித்து சில மணிப் பொழுதைக் கழிக்கலாம் என்கிற வாசகனை உங்கள் மின்சார வண்டிகள் -இடித்து நசுக்கி கைமா பண்ணிவிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன.அது உங்கள் இலக்கு என்றால் உங்களுக்கு வெற்றி தான்.அப்படி இலக்கு வைத்துக் கொண்டு எழுதவில்லை என்றால்,உங்கள் எழுத்துக்கு வெற்றி.இந்த எளிய ரசிகனின் அன்பான பாராட்டுக்கள்.

-

சங்கமித்ரா



















Saturday, August 17, 2024

அவன் சொல், அவள் ஒலி

 


தமிழில் பின் நவீனத்துவ படைப்புகள் என்றால் ரமேஷ் பிரேதன் எழுதி இருக்கும் 

" அவன் பெயர் சொல்" என்ற புதினம்தான்

முதலிடம்.

எல்லாத்தையும் கலைத்துப் போட்டு அடுக்கி மீண்டும் கலைத்துவிட்டு அடுக்கி..

கடற்கரையில் ஒரு மணல்கோட்டையாக மனித உறவுகள்.

நெய்தல்தான் எனக்கும் பிடித்தமான முதற்பொருள்.

மரகதங்கள் ஒட்டகக் குட்டியைப் பெற்றெடுக்கிறார்கள்.

மூர்த்திகளுக்கு பைத்தியம் பிடிக்கிறது.

மழை.. ஒதுங்க இடம் கேட்கிறாள்.

பிரஞ்சு வம்சாவளி மனைவிக்கு அவன் ஒத்துவராத கருப்பன்.

அவன் உடலுக்கு அடையாளங்கள் திணிக்கப்படுகின்றன.

அவன் மனம் அடையாளங்களுடன் முரண்பட்டுக் கொண்டே..

அடையாளமான உடலைத் தூக்கி சுமந்து கொண்டு அலைகிறது.

அந்த உடல் மரணித்தப்பிறகு

அது விரும்பிய

அடையாளமற்று போதலுடன்.. விடை கொடுக்கிறாள்

அவன் உடலின் உயிர்த்துளி அடையாளமாக அவன் விட்டுச் சென்றிருக்கும் அவன் " மகள்".

***

ஒட்டகம் மேய்த்தவளுக்கு ஒட்டகக்குட்டி..

பன்றி மேய்ப்பவளுக்கு?

நேற்று  புலிமாதிரி உறுமிக்கொண்டு திமிறும் இரண்டு நாய்களைப் பிடித்துக் கொண்டு மரகதம் என் எதிரே வந்தாள்.

அவள் வயிறு இறங்கி

இருந்தது.

குறைந்தது இரண்டு மூன்று குட்டடிகளாவது அவள் ஈனுவாள். 

நான் நாய்களுடன் வலம்வரும் அவள் பின்னால் கையில் ப்ளாஸ்டிக் பையுடன் நாயின் _ அள்ள தயாராக மூச்சிரைக்க ஓடி வந்துக் கொண்டிருக்கும் அவள் புருஷனை விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

இவன் மூர்த்தி போல பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொள்வதோ

கொலை செய்யப் படுவதோ சாத்தியமில்லை

என்ற நம்பிக்கையில் 

ஒரு புன்னகையுடன் 

அவனைக் கடந்து சென்றேன்.


"அவன் பெயர் சொல்" என்றால்

அவள் பெயர் என்னவாக

இருக்கும்?

சொல்லுக்கு முன் இருந்த

ஒலி அவளாகத்தான் இருக்கும்.!

அவள் ஒலி.

சொல்லை 

சொல்லின் வடிவத்தை

சொல்லின் மாத்திரையை

ஏன் சொல்லின் அடையாளத்தை

அர்த்தத்தை

அவள்தான் தீர்மானிக்கிறாள்.

ஒலியாக அவள் இருக்கும்வரை அடையாளமற்று

வாழ்ந்தவள்.

நீ சொல்லாக மாறிய பிறகுதான்

அடையாளங்களை அவள் பிரசவித்தாள்.

அது ஒட்டகக் குட்டியாக இருந்தால் என்ன?

பன்றி குட்டியாக இருந்தால்தான்

என்ன?

சொல்.. ஒலிகளால் ஆனதுதான்.

ஆனால் மீண்டும் அது

ஒலியாக முடியாது!

அடையாளமும்

அர்த்தங்களும்

சொல்லின் வன்முறை அல்லாமல்

வேறென்ன?!


" அவன் பெயர் சொல்"

வாசிப்பனுபவம்.

வாழ்த்துகள் Ramesh Predan .

வெளியீடு: யாவரும் பதிப்பகம்.