( SUE ROBERT AND GILLIAN JOHNSON )
அவள் எழுதுகிறாள்... அவன் எழுதுகிறான்
ஆம் அவள் எழுதுகிறாள் அவன் எழுதுகிறான்
என்ற தலைப்பே என்னைப் போன்றவர்களை NCPA - Experimental theatre க்கு
அழைத்தது எனலாம். அரங்கம் நிரம்பிய கூட்டம். சித்தார்த் சங்கவி தலைமையில் (17 நவம். 2016 மாலை 6.30 - 7.30)
இரு இணையர் பேசிக்கொண்டிருந்தார்கள். -
GILLIAN JOHNSON & NICHOLAS SHAKESPEARE
மற்றும் SIMON ARMITAGE & SUE ROBERTS.
தங்கள் சந்திப்பு, இருவரும் எழுதிக்கொண்டிருக்கும் ப்ஸியான நேரங்கள்,
" காஃபி ப்ளீஸ், வாக்கிங் போகலாமா " என்று மட்டுமே உரையாடல்
நடந்த தருணங்கள், மனைவி பேசிக்கொண்டே இருக்க கணவன்
ஒரு அமைதியாக இருந்ததும் மனைவி வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில்
கணவன் பேச ஆரம்பித்ததும் ... தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
மிகவும் இயல்பாக பரிமாறிக் கொண்டார்கள். ஓர் ஆணும் பெண்ணும்
கணவன் மனைவியாக இணையும் குடும்ப வாழ்க்கையில் அவர்கள்
தங்கள் எழுத்துப்பணிக்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்
என்று (அதாவது child free couple என்ற அடையாளத்தையே நான்
குறிக்கிறேன்) முடிவு செய்திருந்தால் என்னதான் அந்த முடிவு அவர்களின்
தனிப்பட்ட முடிவாக இருந்தாலும் அந்த முடிவு குடும்பம் என்ற நிறுவனத்தின்
ஒரு விதிவிலக்கான முடிவாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது.
இதையும் கருத்தில் கொண்டு அவர்கள் அம்மாதிரியான விதிவிலக்கானவர்களாக
இருக்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போதே.. அவர்கள்
தங்களின் குழந்தைகள் குறித்தும் பேச ஆரம்பித்தார்கள்!
பெண்களின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை எழுத்தாக்கும் நான் ,
ஒரு தாயாக குழந்தையைப் பிரசவிப்பதிலிருந்து
ஒரு குழந்தைக்கு பேம்பர்ஸ் மாற்றுவதும் "ஆய்" போனால் துடைப்பதுமான
அனுபவத்தையும் அடைந்தேன்.. என்று பேசப்பேச ... எனக்குள் என் கடந்தக் காலம் விரிந்தது..
அவர்களுடைய கணவன்மார்கள் ஒரு குழந்தை வீட்டில் தரும் மகிழ்ச்சியை
அளவாக பேசி தங்கள் நிலைப்பாட்டைக் காட்டினார்கள்.
இருவரும் எழுதுகிறார்கள். இருவருக்கும் ப்ஸியான வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு வேறு, உரையாடல்களுக்கான நேரம் குறைகிறது .. எப்படி வாழ்க்கை?
என்ற பார்வையாளர் கேள்விக்கு நிக்கோலஸ் சொன்ன பதில் இதுதான்
"படுக்கையிலிருந்து காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து எழுகிறோம்"
என்றார். ( waking up together) இதில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன.
ஒன்றாக துயில் எழுந்து ஒன்றாக இணைந்து எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொண்டு அவரவருக்கான சுயமிழக்காமல் ஒருவரை ஒருவர் மதித்து
இருவரும் அவரவருக்கான இடத்தைக் கொடுத்து வாழும் வாழ்க்கை..!
இப்படி எத்தனையோ அர்த்தங்கள் அவர் சொன்ன சொல்லில் இருந்தது.
ஆனால் மனைவி என்றால் "பின் தூங்கி முன் எழ வேண்டும்" என்று நல்ல
மனைவிக்குரிய தகுதிகளை வரையறுத்திருக்கும் நம் சமூகத்தில்?
ஊடகத்தில் காட்சிகளைப் பார்த்தால்... "கணவன் படுக்கையில் தூங்கிக்
கொண்டிருப்பான்.. மனைவி எழுந்து குளித்து பூஜை செய்து கையில்
காஃபியுடன் வருவாள்.. இப்படி காட்சி வராத ஒரு தொலைக்காட்சி தொடர்,
ஒரு சினிமா இன்றுவரை வந்திருக்கிறதா..?? இக்காட்சியை தன்னை மறந்து
ரசிக்கும் ஆண்களும் பெண்களுமாக இருக்கும் நம் சமூகத்தில்
சேர்ந்து எழுவது நடக்கவில்லையா..? என்று கேட்டால் காலப்போக்கில்
இந்த மாற்றம் நடக்கிறது ... நடக்கிறது.. எப்படி..?
அவனும் அவளும் ஒரே நேரத்தில் முழிக்கிறார்கள்...
அவள் வேகம் வேகமாக பல்துலக்கிவிட்டு அவனுக்கு காஃபி போடுகிறாள்.
அவன் வாக்கிங் சூ மாட்டிக்கொண்டு நடைப்பயிற்சிக்காக கிளம்புகிறான்.
அவள் அவன் போன பின், கிட்சனில் எட்டுக்கைகள் உடைய தேவியாக
அவதாரம் எடுக்கிறாள். மிக்ஸி ஒடுகிறது.. தோசைக்கல்லில் தோசை..
இன்னொரு அடுப்பில் குக்கர் சத்தம் போடுகிறது. கைகள் காய்கறிகளை
வெட்டுகின்றன. சட்னி தயாராகிவிடுகிறது.. நடு நடுவே கிட்சனுக்கும்
பெட்ரூமுக்குமாக ஒரு ஜெட் போல பறந்துக்கொண்டிருக்கிறாள்..
குழந்தைகளை எழுப்புகிறாள்.. சாம்பாரோ கறியோ தயாராகிக் கொண்டிருக்கிறது.
சப்பாத்தி உருட்ட ஆரம்பிக்கிறாள். எப்படியோ குழந்தைகளை ஒரு வழியாக
எழுப்பி... அவர்களுடன் ஒரு மந்திரவாதியைப் போல நடந்துக்கொள்கிறாள்.
வாக்கிங் போன கணவன் வீடு திரும்புகிறான். ரொம்பவும் வியர்வையுடன்.
வந்தவுடன் அவன் அன்றைய தினசரியை வாசிக்க ஆரம்பித்துவிடுகிறான்.
என்னங்க... கொஞ்சம்.. சின்னவனைப் பாருங்களேன்.. பாத்ரூமில் என்ன
செய்திட்டிருக்கானு.., என்னங்க... குக்கர் சத்தம்ம் போடறது காதில விழலையா.. என்று கேட்டுக்கொண்டே வேகமாக கிட்சனுக்குள் நுழைந்து அதை நிறுத்துகிறாள்.
அவன்... " இந்த வீட்டில நிம்மதியா காலையில எந்திருச்சி ஒரு பேப்பர் படிக்க
முடியுதா.. ? " கோபத்துடன் பேப்பரை எடுத்து வீசுகிறான்.
பிள்ளைகளுக்கு சீருடைகளை மாற்றி சாப்பாடு டப்பா, தண்ணீர் பாட்டில்
வைத்து ஸ்கூல் பஸ் வருவதற்குள் ஓடி ஓடி எப்படியோ அவர்களை
அனுப்பி விட்டு வரும் போது அவன் குளிக்கப் போய்விடுகிறான்.
சிதறிக்கிடக்கும் பேப்பரை எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு
அவள் நிமிரும் போது இடுப்பு வலிக்கிறது. கொஞ்சம் உட்கார்ந்தால்
நல்லா இருக்குமே என்று நினைக்கும் போது அவன் பாத்ரூமிலிருந்து
கத்துகிறான்.. எதற்கோ..!
அவள் வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால்..அவளும்
குளித்து உடைமாற்றி பஸ் பிடித்து மும்பை மாதிரி இடத்தில் ரயில்
கூட்டத்தில் இடிபட்டு தொங்கிக்கொண்டு போய்ச்சேரும் போது
அவள் எப்படி இருக்கிறாள்...? அய்யோ..யோ யோ..!
இப்படியாக சில மாற்றங்களுடன் தொடர்கிறது குடும்பத்தில்
ஆண் பெண் வாழ்க்கை.
இதில் எழுத்தாளர் தம்பதியரின் வாழ்க்கை?
அவள் எழுதினாள்.. அவன் எழுதினான்.
அவள் எழுதினாள்... அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.
அவள் ஒரு காலத்தில் எழுதினாள்.
அவன் எழுதிக்கொண்டு இருக்கிறான்... என்றும் எழுதிக்கொண்டிருப்பான்.
SHE WROTE HE WROTE
SHE WROTE HE WRITES
HE WRITES HE ONLY WRITES...
SHE?
இப்பயணத்தில் தமிழ்ச்சூழலில் சில இணையர் நினைவுக்கு வரக்கூடும்.
she wrote he wrote... she wrote he writes இணையராக. வேண்டாம் எனக்கு
வம்பு. அவர்களை விட்டுவிடுவோம்.
she writes he writes இணையராக சிலர் நினைவுக்கு வருகிறார்கள்.
அ. வெண்ணிலா - முருகேஷ்
(நினைவில் வாழும் ) சுகந்தி சுப்பிரமணியன்- சுப்ரபாரதி மணியன்
அம்பை - விஷ்ணுமாத்தூர்
மாலதி மைத்ரி - பிரேம்
(யாராவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே)
இப்படி சில இணையர் நினைவுக்கு வருகிறார்கள். வாழ்த்துகிறேன் அவர்களை.
TATA LIT FESTIVAL போன்ற பன்னாட்டு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
பங்கேற்கும் நிகழ்வுகளில் வெளிநாட்டவர் சொல்லும் சில கருத்துகள்
இந்தியச் சூழலில் ரொம்பவும் அந்நியமாய் இருப்பதை உணர்கிறேன்.
இந்திய எழுத்தாளர்களில் , இந்திய நடிகர்களில் அவள் - அவன்
ஓர் இணையராக பேசும் நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே
நம்மை அதில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற
எண்ணம் வருகிறது.