Sunday, July 27, 2014

பனிக்கட்டியில் உறைந்த மரணம்





மரணங்கள் புதிதல்ல.
ஆனாலும் ஒவ்வொரு மரணமும்
வெவ்வேறு முகங்களுடன்.

பனிக்கட்டியில் உறைந்துக் கிடந்த 
உன் மரணம்
உடைக்க முடியாத கூர் வாளாய்
என்னைக் கிழிக்கிறது.
உன் கைப்பிடித்து நடந்த
சிறுமியாய் 
உன் கடிதங்களில் வளர்ந்த
கல்லூரி நாட்கள் வரை
மீண்டும் உன்னோடு
மீண்டும் உன்னோடு
.............
பனிக்கட்டியில் நடக்கிறேன்.
சில்லென்று குளிரும் பனிக்கட்டி
இன்று நெருப்புக்கங்குளாய்..

நீ வாசிக்க கொடுத்தப் புத்தகங்கள்
என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம்.
நீ வாசிக்காத புத்தகங்கள்
என் வாழ்க்கையின் அடுத்தப் பக்கங்களை
தானே எழுதிச்சென்றது.
உன்னை விட்டு ரொம்ப தூரம்
பயணித்துவிட்டதாய் நீ நினைத்தாய்.
என் பயணங்களில் உன் கனவுகளைச்
சுமந்து கொண்டு  நடப்பதை
என் மெளனத்தில் எழுதிக்கொண்டே
இருந்த நாட்கள்
கருப்பு பிரதிகளாய் இப்போது...

( .மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் அமைப்பாளரும், மும்பையின் மூத்த பத்திரிகையாளருமான பெரியார் பெருந்தொண்டர் திரு சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் (வயது 80)  (23.07.2014) அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்.
பெரியார் பெருந்தொண்டர்,  உறவு முறையில் அத்தையின் கணவர்.
எனவே மாமா. ஆனால் எனக்கு என் தோழன். என் முதல் புத்தகம்.)




Monday, July 21, 2014

ஜெயந்தன் விருது - பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு





மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது.

புதியமாதவி எழுதி அண்மையில் (dec 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான
விருது வழங்கப்பட உள்ளது.

2013-ம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலும், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவலும் ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜ் அவர்களின் ‘நரிக்கொம்பு’ நூலுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சிறுகதை நூல்களுக்கான விருதுகள், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ நூலுக்கும், ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் என்கிற நூலுக்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த கவிதை     நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும்,  ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமா வின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.  மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ நாடகமும் நடைபெறும்.  இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

SPARROW SILVER JUBILEE CELEBRATION



Silver Jubilee Celebration Programme
CONVERSATIONS
In collaboration with
Research Centre for Women’s Studies
SNDT University, Juhu campus

C S Lakshmi in conversation with
Well-known Tamil and Sindhi Writers

PUTHIYAMAADHAVI
&
VIMMI SADARANGANI 



Monday, July 14, 2014

குடைக்குள் நடப்பது...





குடைக்குள் நடப்பது..
------------------------------------------



மழைத்துளி குடைப்பிடித்து நடந்தாலும்
எப்படியும் நனைத்துவிடத்தான் செய்கிறது.
சில்லென்ற அந்த ஈரத்தின் அணைப்பில்
ஒரு குடையில் இரு உடல்களாய் நடந்தப்போது
அவன் மவுனமாகவே என்னுடன் நடந்து வந்தான்.
அந்த மழைநாளுக்கு அடுத்த மழைநாளிலும்
அவன் குடையுடன் காத்திருந்தான்.
என்னுடன் எனக்கான குடை
பத்திரமாக பையில் இருந்தாலும்
எடுத்து விரிக்க மனமில்லாமல்
அவன் குடைக்குள் நடப்பது
ஒரு கவிதைக்குள் வாழ்வது போல
சுகமாகவே இருந்தது.

அவனுக்கு கவிதையின் மொழிகள்
தெரியவில்லையோ.
தெரிந்தும் வாசிக்க விருப்பமில்லாமல்
இருந்திருக்கலாமோ
அவன் மொழியில் கவிதைக்கோ காதலுக்கோ
வார்த்தைகள் இருந்திருக்காதோ.
அவன் பேசிய வார்த்தைகளோ
அந்த மொழியோ நினைவில் இல்லை.
அவன் முகம் கூட
காற்றிலும் மழையிலும்
கல்தூணாய் மாறிப்போன
காவல்தெய்வத்தின் சிலைபோல
மங்கலாய்..


குடைக்குள் நடப்பதும்
குடைப்பிடித்து நடப்பதும்
வேறு வேறான உலகம்.

இப்போதெல்லாம் எனக்கான குடை
எப்போதும் என் வசம்.
அதை விரிப்பதும் மடக்குவதும்
என் விரல்களுக்குள் அடக்கம்.
யாருடையை குடைக்குள்ளும்
யாருடனும் நடப்பது எனக்கு சாத்தியமில்லை.
கவிதைக்குள் வாழ்கின்ற சுகங்களை
துறந்துவந்தாகிவிட்டது
என்றாலும்
.....

ஒவ்வொரு மழைக்காலத்திலும்
மழைத்துளியின் சாரல்
பாதம் தொட்டு உச்சிமுகர்ந்து
முத்தமிடும் மழை இரவில்
மழைமுகமாய்
அவன் குடைப்பிடித்து வரக்கூடும் என்ற
கனவுகளில் குடைப்பிடித்து
நனைந்துக் கொண்டிருக்கிறது என் மழைக்காலம்.