Friday, June 26, 2015

எமர்ஜென்சி ... மீண்டும் வருமா?


"என்னால் உறுதியாக சொல்லமுடியாது.
இந்தியாவில் மீண்டும் ஒரு எமர்ஜென்சி வராது என்று"
என்று அத்வானி அண்மையில் நிருபர்களுக்கு அளித்தப்
பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
" நம் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இருந்தக் காலத்தில் தான்
  24 ஜூன் 1975 ல்  எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது
 என்பதையும் அவர் அதவானி நமக்கு நினைவூட்டுகிறார்.
இன்று 2015ல் நமக்குப் போதுமான பாதுகாப்பு இருப்பதாகத்
 தெரியவில்லை.
எமர்ஜென்சி காலத்தில்  (24 ஜூன் 1975 முதல் 21 மார்ச் 1977 வரை)
அதை எதிர்த்தவர்களில் அத்வானியும் முக்கியமானவர்.
அத்வானி சொல்லியிருப்பதில் இருக்கும் முக்கியத்துவத்தைக்
கவனிக்க வேண்டும் என்று சிவசேனா வெளிப்படையாகவே
 தங்கள் பத்திரிகையில் கருத்து எழுதி இருப்பது புறக்கணிப்புக்குரியதல்ல. " மீண்டும் ஒரு எமர்ஜென்சி வராது என்று என்னால் உறுதியாக
சொல்லமுடியாது " என்று அத்வானி சொல்கிறார் என்றால்
அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
அவர் நிச்சயமாக யாரையோ குறிப்பிட்டுத்தான் தன்
 அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது
 தெளிவாகத் தெரிகிறது.
ஆனால் அத்வானியின் கருத்துக்கு எதிர்ப்பு சொல்பவர்கள்
அனைவரும் ஒரே ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம்
1975 ல் இருந்த இந்தியா வேறு.
2015ல் இருக்கும் இந்தியா வேறு.
*1975 ல் எமர்ஜென்சி அமுலுக்கு வந்தப்போது இருந்த சட்டங்கள் இன்று பல்வேறு மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாகி இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். (சிவப்பு நிறத்தில் என் மறுப்புரை)
Now Emergency can be imposed only “If the President is satisfied that a grave emergency exists whereby the security of India or of any part of the territory thereof is threatened whether by war or external aggression or armed rebellion...”

Second, an explanation added to Article 352(1) by the same constitutional amendment says if Emergency is to be declared before the actual occurrence of war, or external aggression or rebellion, the President has to be satisfied that there is imminent threat to the security of India or any part thereof by war or by external aggression or by armed rebellion. This additional constitutional safeguard was not there in June 1975.

நம் குடியரசுத்தலைவர் என்ன அவ்வளவு அதிகாரம் படைத்தவரா?
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு எதிராக முடிவு எடுக்கும் அதிகாரம்
குடியரசு தலைவருக்கு இருக்கிறதா..

மோதியின் காலத்தில் எப்படியும் ஒரு யுத்தம் நடக்கும்.இந்திய
சரித்திரத்தில் தன் பெயரை கல்வெட்டு போல எழுதிவைக்கத் துடிக்கும்
மோதி .. ஒரு யுத்தக்கால நெருக்கடியை உருவாக்க மாட்டார் என்பதற்கு
என்ன உறுதி சொல்ல முடியும்? அதுவும் அகண்ட பாரதக்கனவுகளைக்
கொண்ட இந்துத்துவ பின்புலம் உருவாக்கிய தலைவர் மோது என்பதை
நாம் மறந்து விட முடியாது.


* 1975 இந்தியாவின் தூரதர்ஷன் மட்டுமே இருந்தது. இன்று நூற்றுக்கணக்கான
செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் 24 X 7  பல்வேறு மொழிகளில் . அத்துடம் இன்றைய  இந்தியாவில் 13700 பத்திரிகைகள் இந்திய மொழிகளில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

இப்படியான உரிமைகள் நம் ஊடகங்களுக்கு இருப்பதாகவே 
நாம் நம்புகிறோம். ஆனால் எதை எழுதவேண்டும்., எதைக் காட்ட
வேண்டும், எதைக் காட்டினால் நம் வியாபாரத்திற்கு ஆபத்து வராது
என்று வணிகமயமாகி இருக்கும் ஊடகங்களுக்குத் தெரியும்..அவர்களுக்கு
இருக்கும் உரிகைகளின் எல்லைக்கோடு.



* இதற்கெல்லாம் மேலாக 1975 ல் இண்டெர்நெட் வசதிகளோ சமூக வலைத்தளங்களோ இல்லை.
இன்று இந்தியாவில் மட்டும் 243 மில்லியன் மக்கள் இண்டர்நெட் பயன்படுத்துகிறார்கள். (அட... இதில் நீங்களும் நானும் அடக்கம்!)
2018ல் இந்தியாவில் மட்டும் 550 மில்லியன் மக்கள்
 இண்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்துவார்கள்
 என்பதால் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது 1975ல்
சாத்தியப்பட்டது போல இன்று சாத்தியப்படாது.
*அப்படியே மீறி இந்தியாவில் ஒரு இரும்புத்திரை கொண்டுவந்தாலும் நம்
புலம்பெயர் இந்தியர்கள் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை
வெகு எளிதாக உலக அரங்கில் எடுத்துச் செல்ல முடியும்.

நம் பதிவுகள் கண்காணிப்பு வலையத்திற்குள் வந்துவிட்டால்,
நம் முகநூல் கணக்கு மூடப்படலாம். இப்படி சமூக வலைத்தளத்தில்
மறுக்கப்பட்டவர்களின் பட்டியலை நாம் அறிவோம்.
புலம்பெயர் இந்தியர்கள் எழுதுவார்கள் தான். ஆனால் அதை 
ஏற்றுக்கொள்வதும் கவனத்தில் கொண்டு செயல்படுத்துவதை
தீர்மானிப்பதும் அவர்களோ அவர்களின் எழுத்துகளோ அல்ல.
அப்படி ஒரு நிலை உண்மையில் இருக்கும் என்றால் 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எப்போதோ
நீதிவிசாரணை வந்திருக்குமே!



* இன்றைய இந்திய வாக்கு வங்கியில் கணிசமாக இருக்கும் 35 வயது, 25 வயது இளைய தலைமுறையிடம் இம்மாதிரியான ஒரு கடிவாளத்தைப் போட்டு தேர்தலில் வாக்குகளை இழந்துவிட எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் துணிவு இருக்காது.
*சமூக உரிமைகள் அச்சுறுத்தப் படும் போதெல்லாம்
 இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 2015 போராடுவதற்கு தயக்கம்
 காட்டாது. தன் எழுச்சியாக டில்லியில் நடந்த
பெண்ணின் பாலியல் வல்லாங்குக்கு எதிராகப் போராடிய நடுத்தர வர்க்கத்து
இளைஞர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள்.

அப்போது இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தது.
இன்றும் இந்தியா தங்கள் வொயிட்காலர் இளைஞர்களை 
காலனி ஆதிக்கத்திற்கு - தாராளமயத்திற்கு உருவாக்கிவிட்டது.
சுகமான வாழ்க்கை, பீஸா , கோக்.. என்று பழகிவிட்ட நம் இளைஞர்கள்
எந்தளவுக்கு போராட்ட குணம் உடையவர்களாக இருக்கிறார்கள்
என்று தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு டில்லி நிகழ்வை
வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த ஒரு சமூகத்தையும் பார்ப்பதோ
அல்லது அந்த நிகழ்வு வெளிக்கொண்டுவரப்பட்டதில் இருக்கும்
அரசியலைப் புரிந்து கொள்வதோ நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்திக்கு
இன்னும் சாத்தியப்படவில்லை.

(சிவப்பு வண்ணத்தில்அத்வானி கருத்துக்கு வைக்கப்படும் 
எதிர்வினைகளுக்கான மறுப்புகள் .. என் தரப்பிலிருந்து)

.. எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு நெருடல்..
நானும் என் தோழியும் தினமும் இதைப் பற்றி ஒரு மணி நேரமாவது விவாதிக்கிறோம்.
எங்களுக்கும் சில கேள்விகள் இருக்கின்றன.
1)எமர்ஜென்சி 25வது வருடத்தைக் கூட பேசாத ஊடகங்கள் இன்று
எமர்ஜென்சி 40 வது வருடத்தைப் பற்றி ஒவ்வொரு பத்திரிகையும்
பேசுவது ஏன்?
2)அத்வானி எதையோ சொல்லமுடியாமல் குறிப்பாக சொல்லி இருப்பதன்
மர்மம் என்ன?
3) அத்வானியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திட்டமிடப்பட்டே
குற்றவாளிகளாக.. அவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலுமே திடீரென கண்டுப்பிடித்தது
போல  இப்போது அடையாளம் காட்டப்படுவது ஏன்?
இதற்குப் பின்னால் இருக்கும் மவுனமான சூத்திரதாரி யார்?
4) எமர்ஜென்சி 40 என்று அண்மையில் கொண்டாடிய பிஜேபியின் விழாவுக்கு
அத்வானி ஏன் அழைக்கப்படவில்லை?
5) விழாவுக்கு தலைமை ஏற்ற  அமித் ஷா நிருபர்கள் கேட்ட இக்கேள்விக்கு
ஏன் பதில் சொல்ல மறுக்க வேண்டும்?

என்னவோ நடக்குது.. எங்கேயோ புகையுது..
அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்ஸி.. அமுலுக்கு வரலாம்.

Sunday, June 21, 2015

அஸ்தமிக்கும் சூரியன்


முதலிடத்திற்கு நடக்கும் போட்டியில்
இரண்டாவது இடத்தை எட்டி உதைக்கிறது
மூன்றாவது இடம்.
மூன்றாவது இடத்திலிருந்து
முதல் இடத்திற்கு பாய்ந்துவிட தயாராகிவிட்டது
பைங்கிளி.
எல்லாம் அறிந்த முதலிடத்தின் கனவுகளில்
இரண்டாம் இடத்திற்கு இடமில்லை
என்று வருத்தப்படுகிறான் தோட்டக்காரன்.


இரண்டாம் இடம் முதலிடத்தைத் தீர்மானிக்கும்
என்பது இனி விதியல்ல என்று
போஸ்டர் அடித்து தம்பட்டம் அடிக்கிறது
பாலூட்டி வளர்ததப் பைங்கிளி.

இப்போதெல்லாம் இரண்டாமிடம் வெற்றிடமானதை
போஸ்டர்களைத் தின்னும் மாடுகள் தவிர
எவரும் கண்டுகொள்வதில்லை.

வளர்த்தக் கிடா மார்பில் பாய்ந்த வலி மறக்க
தனிமைப்பாடசாலையில்
புத்தகங்களுக்குப் பாடம் நடத்துகிறது
ஒரு பல்கலைக்கழகம்.
கள்ளமவுனத்தின் மனசாட்சிக்குத் தெரியும்
சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற
கடவுச்சீட்டு காலவதியாகிவிட்டது என்பது.

இரண்டாம் இடமிருந்தால் தான்
முதலிடம் இருப்பது சாத்தியமாகும்
என்ற அரிச்சுவடி மறந்தவர்கள்
அர்ததசாஸ்திரம் எழுத முடியுமா?
அழுகிறது அஸ்தமிக்கும் சூரியன்.

Saturday, June 13, 2015

பாரதிதாசன் பற்றி புதுமைப்பித்தன்






பில்ஹணீயம் எனும் கதையை, பாவேந்தன் பாரதிதாசன் ‘புரட்சிக் கவி’ எனும் பெயரில் புதிய நோக்கில் எழுதியிருந்ததைக் குறித்து புதுமைப்பித்தன் 1944ல்  எழுதிய விமரிசன கட்டுரையிலிருந்து  சில பகுதிகள்:

பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்ல வேண்டும்.
எங்கெங்குக் காணினும் சக்தியடா ! – ஏழுகடல்
அவள் வண்ணமடா
என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்தபொழுது, பாரதியாரின் ‘தராசு’ “எழுக புலவன்” என ஆசீர்வதித்தது. அன்று முதல் பாரதிதாஸனாகிவிட்ட ஸ்ரீ கனக சுப்புரத்தினம் பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார். பாரிச வாய்வும், பக்கவாதமும் போட்டலைக்கும் இன்றைய கவிதையுலகிலே, அவருடைய பாட்டுக்கள்தான் நிமிர்ந்து நடக்கின்றன. நண்பர் ஸ்ரீ கனக சுப்புரத்தினம் நம்மிடையே வாழ்பவர்; நம்மைப் போல, கருத்து விசித்திரங்களும் கருத்து விருப்பு வெறுப்புக்களும் ஆணித்தரமான அபிப்பிராயங்களும் கொண்டவர். பாரதிதாஸன் கவி; கனவுக் கோயில்களைக் கட்டி நம்மை அதில் குடியேற்றி மகிழ்கிறவர். ‘குள்ளச் சிறு மனிதர்களின்’ எத்து நூல் வைத்து அவரது காவிய மாளிகளைகளை முழம்போட முயலுகிறவர்களுக்கு ஸ்ரீ கனக சுப்புரத்தினம் இடைமறித்து நின்று தம் கருத்துக்களைக் காட்டி மிரட்டி ஓட்டிவிடுவார். பாரதிதாஸனைப் பழகி அனுபவிக்க வேண்டுமெனில் ஸ்ரீ கனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகமல்ல; ‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று பாடியவரைவிட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில், ராமாயணம் என்னும் பெரும் புளுகும், ‘எங்கள் மடாதிபதி’ ‘சைவத்தை ஆரம்பித்த’ விமரிசையும் இருந்தால் என்ன குற்றம் ? அவர் கவி.

 தன்னுடைய அந்தஸ்துக்காக ஒருவனை உயிர்வதை செய்யத்துணியும் மன்னனுக்கு ராஜ்யத்தில் இடமில்லை என்பதுதான் இந்தப் புரட்சிக் கவியின் ஆதாரக் கருத்து. களவையும் நிலவையும் பற்றி பாடிக் கொண்டிருந்த கவிஞன், பிரஞ்சு புரட்சிக்கு உதயகீதம் பாடிய ரூஸோவைப் போலக் கனல்விடுகிறான். ‘ அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே’ என்று கொண்டு பட்டினத்தார் தம் வீட்டுக்குத்தான் நெருப்பு வைக்க பார்க்கிறார். புரட்சிக் கவியான உதாரனது பேச்சு, வீண் கருவம், டம்பம், வரம்பற்ற தன்னிச்சை, கொலை வெறி, அந்தஸ்து என்ற உச்சாணி கொம்பு என்ற உளுத்துப் போன கருத்துக்களைச் சுட்டு சாம்பலாக்குகிறது. கூளங்கள் கொதித்தெழுந்து உயிர் வதைக்குத் துணிந்திட்ட மன்னனைத் தேடி வரும்போது, மன்னன் இன்றைய வளமுறைப்படி நாட்டைவிட்டு வெளியேறி விடுகிறான்.
. புரட்சிக்கவியில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பச்சைத் தமிழன்; சாயச்சரக்கல்ல; மழை பெய்த மூன்றாம் நாள் சாயம் விட்டுப்போகும் பண்ருட்டிப் பொம்மை அல்ல..



இரண்டாவதாக இவர் காதல் துறையில் பாடும் பாட்டுகள் யாவும் உடம்பு விகாரங்களைத் தட்டியெழுப்பும் பாட்டுகளே தவிர, உள்ளத்தின் போக்கைக் காட்டுவன அல்ல; புலன் நுகர்ச்சியில் சந்துஷ்டியேற்பட்டுவிட்டால் போதும் எனச் சொல்லுவதைப் போல் இருக்கிறது என்று சிலர் அளக்கிறார்கள்.
அவரது பாடல்கள் உடம்பை மறந்துவிட்டு, நெறி திறம்பாக் காதல்துறை காட்டும் வெறும் சொப்பனாவஸ்தைகள் அல்ல என்பது உண்மை. உடம்பை மறந்த காதலைப் பாடுகிறவன்தான், தான் கற்பனா லோகத்தில் நடப்பதாக நினைத்துக்கொண்டு, உளைச்சேற்றில் மிதிக்கிறவன்.
நேரான குங்குமக் கொங்கை
காட்டிச் சிரித்தொரு பெண்
போறாள் பிடிபிடி யென்றே
நிலவு புறப்பட்டதே
[அவ்வை: அசதிக் கோவை]
எனவும்,
கொங்கைகளும் கொன்றைகளும்
பொன்சொரியும் காலம்
[நந்திக் கலம்பகம்]

எனவும், மனம்விட்டுப் பாடிய கவிஞர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் அவரும். தமிழ்ப் பண்புக்குப் புறம்பானவர் அல்ல. ஏதோ பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலீஷ் இலக்கியத்தின் போலி மூடாக்குகளை வைத்து எதையெடுத்தாலும் விரசம் விரசம் எனத் திரைபோடும் ரசனோபாக்கியான கர்த்தர்களுக்கு இது புரியாமலிருந்தால் பாரதிதாஸன் எப்படி பொறுப்பாளியாக முடியும் ? இன்று, இலக்கியத்தை இங்கிலீஷ் கண்ணாடி கொண்டு சோதனை செய்து, அந்தச் சங்கப் பலகையின் அங்கீகாரம் பெற்றதே கவிதை என நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், அதைவிட தமிழ்க் காவியத்துக்கே சந்தனக் கட்டையில் சிதைவைத்து சந்துஷ்டியடையலாம்.

Friday, June 12, 2015

பாரதியும் தம்பலாக்களும்


புதுவை வாழ் எழுத்தாளர் பாரதி வசந்தன் எழுதியிருக்கும் தம்பலா சிறுகதை
நூலை    வாசித்த அனுபவம் இனிது. சிறுகதை
ஆங்கிலத்திலும் பிரஞ்சு  மொழியிலும் மொழியாக்கம் பெற்றுள்ளது.
சிறுகதைக்கான விமர்சனங்கள், கதை மாந்தர்களின் நிஜம், அதற்கான
வரலாற்று ஆவணங்கள், அதைத் தேடி அலைந்த எழுத்தாளரின் பயணம்,
பயணத்தில் அனுபவித்த காயங்கள் என்று அனைத்தையும் ஒரே நூல்
வடிவாக்கியிருக்கும் முயற்சி தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு புதிய , முதல்
முயற்சி.

தம்பலா சிறுகதையில் பாரதியும் தம்பலாவும் கனகலிங்கமும் கதைப்பாத்திரங்கள்.

தம்பலாவும் கனகலிங்கமும் பாரதி கண்ட இரு நிஜங்கள். இருவருமே
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்.
இதில் கனகலிங்கத்தைப் பாரதி தன் சமூக சீர்திருத்த கருத்துக்காக
கையில் எடுத்துக்கொண்டு அவனுக்குப் பூணூல் அணிவித்து
தன்னளவில் ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியை நடத்திக் காட்டுகிறார்.
ஒரு கனகலிங்கத்திற்கு புணூல் போடுவதாலேயே சமூகப்புரட்சியை
ஏற்படுத்திவிட முடியாது என்பதால் இந்தக் கருத்து தளத்தில் பாரதியை
மிகவும் கடுமையாக விமர்சனம் செய்கிறார் புதுமைப்பித்தன்.
பாரதி நம்பிய ஆசார சீர்திருத்தங்கள் புதுமைப்பித்தனுக்கு அசட்டுத்தனங்களாகப்
பட்டன. பாரதி எழுதிய சிறுகதை "முற்றுப் பெறாத சந்திரிகையின் கதையில்
பாரதி கோபலய்யங்காருக்கும் வேலைக்காரி மீனாக்ஷிக்கும் நடத்திய
கலப்பு மணத்தை விகடம் பண்ணுகிறார் புதுமைப்பித்தன் "கோபலய்யங்காரின்
மனைவி' சிறுகதையில்.
கனகலிங்கத்திற்கு பாரதி தான் குரு. எப்போதும் கனகலிங்கத்திடம் கண்ட
சிஷ்யபக்தி பாரதிக்குக்கும் பாரதியின் ஆளுமைக்கு ரொம்பவும் சாதாரணமான
விஷயம். பாரதி கனகலிங்கத்திடம் பொறாமைப் படவோ வியப்படையவோ
எதுவுமில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட அதே சமூகத்தைச் சார்ந்த
தம்பலாவைக் கண்டு பாரதி பிரமிப்பு அடைகின்றான.

பாரதி நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு மனிதனாக
தம்பலா கதைப் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. தம்பலா.
 குதிரையிலிருந்து இறங்கும் போது அவன் தோற்றத்தில் தெரிந்த
கம்பீரம், அவன் குதிரை மேல் போவதைக் கண்டு பொறாமைக் கொண்ட
உயர் ஜாதிக்காரர்கள் "தோட்டிப் பயலுக்குத் திமிர பார்த்தியான்னு' அவன் முதுகுக்குப் பின்னால் பேசுகிறார்களாம். இதைச் சொல்லிவிட்டு
"பற்கள் எல்லாம் வெளியே தெரியும்படியாக சர்வசாதாரணமாகச் சிரித்தான்.
அதில் வெளிப்பட்ட அலட்சியம் பாரதிக்குப் பிடித்திருந்தது"
என்கிறார் கதைச் சொல்லி.

பாரதியைப் பற்றி சொல்லும் போது கதையாசிரியர்
'மிகவும் மெலிந்த சரீரம், ஆனால் வீர புருஷனுகுரியதோர்  நடை" என்ற
வரிகள் தம்பலாவின் தோற்றம், வீரம், கம்பீரத்துடம் ஒப்புமைப் படுத்தி
பார்க்க வேண்டிய வரிகள்.

தம்பலா தோட்டிகளை அவமானப் படுத்தியதற்காக  புதுச்சேரியை நாறடித்த
சம்பவத்தைக் கேட்டு,
'அப்படியான காரியமா செய்தீர்கள் தம்பலா? '
என்று கேட்கிற இடத்திலும்,
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கர்த்தர் நீதி நியாயம் செய்கிறாரோ இல்லையோ..
இந்தத் தம்பலா கண்டிப்பா செய்வான்' என்று சொல்லும் போது
தம்பலாவின் குரலில் தொனித்த உறுதியும் ஆவேசமும் பாரதியை
கண்களை இமைக்காமல் அவனைப் பார்க்க வைக்கிறது.

இந்த இடத்தில் தான் தம்பலா என்ற கதைப்பாத்திரம் கம்பீரத்துடன்
வாசகனின் மனதில் வலம் வருகிறது.
ஒரு எழுத்தாளனாக பாரதிவசந்தன் கத்தி மீது நடக்க வேண்டிய
இடம். ஒருவர் பாரதிவசந்தனே ஆராதிக்கும் பாரதி, இன்னொருவர்
பாரதி கண்டு பிரமித்த தம்பலா. இந்த இரண்டு பாத்திரங்களுமே
நிஜம். ஒருவரின் நிழலில் ஒருவர் மறைந்துவிடாமல் இருவரையும்
சேர்த்து சுமக்க வேண்டிய இடம். பாரதி வசந்தன் பாரதி மீது
கொண்ட அதீதப் பற்று காரணமாகக் கூட எவ்விதமான நாடகத்தன்மையையும்
கதையில் புகுத்தாமல் மிகவும் கவனத்துடன் கதை முடிவை நோக்கி
நகர்த்த வேண்டிய இடம்.
இந்த இடத்தை பாரதிவசந்தன் மிகவும் சரியாகவே கடந்திருக்கிறார்.
அதனால் தான் இக்கதை யதார்த்தத்திலிருந்து விலகாமல் இருக்கிறது.
பாரதி, தம்பலா சந்திப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் கதையை நகர்த்தி
பாரதி சந்திக்க வரும்போது புதுச்சேரியை ஒரு பருந்து பார்வையில்
பின்புலமாகக் காட்டி சந்தித்தப் பின் பாரதி என்ன சொல்லியிருக்க முடியும்
என்பதோடு கதையை முடிக்கிறார்.

புதுச்சேரி தமிழ் பாரதி வசந்தனுக்கு கைகொடுத்திருக்கிறது.
கிறித்தவனான தம்பலாவின் 'பிரகாசமான நெற்றியில் மிகச் சின்னதாய்
சந்தணப்பொட்டு' என்று எழுதியிருப்பது கிறித்தவர்கள் அக்காலத்தில்
இந்துமத அடையாளங்களை விடாமல் பின்பற்றினார்கள்
என்பதைக் காட்டுகிறது.

பாரதி தம்பலாவின் வீட்டுக்கு வெளியே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறார்,
வீட்டுக்குள் போகவில்லை. ஆனால் தம்பலாவின் வீட்டைப் பார்த்து
பெருமை அடைகிறார்.
வீட்டுக்குள் போனதாகவோ
 தம்பலா விருந்து உபசரித்ததாகவோ காட்டியிருந்தால்
அது நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும்.
பாரதி வசந்தன் அந்தத் தவறைச் செய்யவில்லை.

கதை முடிவில் பாரதியின் வரிகளாக பாரதிவசந்தன் எழுதியிருக்கும் வரிகள்:

" ஒரு மனுஷன் தாழ்ந்த குலத்திலே பிறந்துவிட்டான் என்கிறதுக்காக அவனை
ஒதுக்கி வைப்பதோ ஒடுக்கி வைப்பதோ அவனுக்கும் கேடு, பிறருக்கும் கேடு.
இனிமேல் பள்ளனோ, பறையனோ, சக்கிலியோ, தோட்டியோ யாரும் தம்மைக்
கைநீட்டி அடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது"

இந்த வரிகள் ஒடுக்கப்பட்டவர் பார்வையிலும்
சமூக சீர்திருத்த தளத்திலும்  விமர்சனத்திற்கும்  எதிர்வினைகளுக்கும்
இடமளிப்பவை. ஆனாலும் பாரதி இப்படித்தான் சொல்லியிருக்க
முடியும் என்ற முடிவுக்கு பாரதி வசந்தன் வந்திருப்பது பாரதியின் காலத்துடனும்
ஆசார சீர்திருத்தங்கள் இந்து சமூகத்தை ஒற்றுமைப் படுத்தும், சீர்திருத்தும்
என்று நம்பிய பாரதியின் கருத்துடனும் நேர்க்கோட்டில் இருப்பது போல
எழுதியிருப்பது பாராட்டுதலுக்குரியது தான்.

விமர்சனத்திற்குரிய இந்த வரிகளை
எழுதியதன் மூலம் பாரதிவசந்தன் கதையை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைத்து மவுனமாக ஒரு புரட்சியை செய்திருக்கிறார்.
எழுதிய எழுத்துகளுக்கு நடுவில் எழுதப்படாமல் கடந்து வந்த மவுனத்தில்
இன்னொரு கதையையும் சேர்த்தே  வாசிக்க வைத்ததில் தம்பலாவுக்கு
தனி இடம் உண்டு.
பாரதியைக் கொண்டாடுபவர்களும் பாரதியை விமர்சிப்பவர்களும்
என்று இருசாராருக்குமே  மறுவாசிப்புக்கு இடம் கொடுப்பது இக்கதையின்
சிறப்பு.

நூல்:
A Trilingual edition
BHARATHI VASANTHAN'S
THAMBULA
English version : P Raja
French version: S A Vengada Soupraya Nayagar
வெளியீடு: நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை
(ஏப்ரல் 2010 ல் எழுதிய விமர்சனம். வடக்குவாசல் இதழில் வெளிவந்தது
 மீள்வாசிப்புக்காக)




























































































































Monday, June 8, 2015

தினக்குரல் - இலங்கை பத்திரிகையில் வெளியான என் நேர்காணல்

நேற்றைய தினக்குரலில்( 07/06/2015)- நன்றி பாரதி அண்ணா.
நன்றி லுணுகலை ஶ்ரீ.






மும்பயில் பிறந்து வளர்ந்த புதியமாதவி மதுரைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்றவர். மும்பை பன்னாட்டு வங்கியில் (HSBC) 22 ஆண்டுகள் பணி செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். நான்கு தலைமுறையாக மும்பையை வாழ்விடமாகக் கொண்ட இவர் மும்பை பெரு நகரத்தின்  அவலங்களை, தாராவியின் மெளன ஓலங்களை, மாறிவரும் பெண்களின் உலகத்தை தன் கதைகளிலும் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்.

சூரியப்பயணம், ஹேராம், நிழல்களைத் தேடி, ஐந்திணை, செங்காந்தாள்(மின்னூல்) என்று 5 கவிதை தொகுப்புகளும், மின்சாரவண்டிகள், புதிய ஆரம்பங்கள், தனியறை, பெண்வழிபாடு என்ற 4 சிறுகதை தொகுப்புகளும் சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள், ஊமைத்தசும்புகள், மழைக்கால மின்னலாய், செய்திகளின் அதிர்வலைகள் என்ற 4 கட்டுரைத் தொகுப்புகளையும்வெளியிட்டவர். கவிதைக்கான சிற்பி இலக்கியப்பரிசும், கதைகளுக்கான ஜெய ந்தன் படைப்பிலக்கிய விருதும், மணல்வீடு களரி இலக்கிய விருதும் பெற்றவர்.

இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் சாகித்திய அகதெமி பெண்கள் கவிதைத் தொகுப்பிலும், மற்றூம் மலையாள மாத்ருபூமி, மாநகர கவிதா தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.

மலையகப்பெண்களும் ஊடறூவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணி உரையாடலும் நிகழ்வுக்கு இலங்கை வந்திருந்த போது அவருடனான நேர்காணல்.

நேர்காணலும் படங்களும் : லுணுகலை - ஸ்ரீ

"புதியமாதவி” என்ற புனைப்பெயரை தாங்கள் தெரிவு செய்ததன் காரணம் என்ன?

நான் இந்தப் பெயரை தெரிவு செய்து கொண்டேன் என்று சொல்வதை விடஇப்பெயர் என்னைத் தேடி வந்து தெரிவு செய்து கொண்டது. அது ஒரு சுவராஸ்யமான கதை. நான் முதலில் எழுதியது கவிதையோ கட்டுரையோ அல்ல. சிறுகதை எழுதினேன். அந்த முதல் சிறுகதையின் தலைப்பு "புதியமாதவி' சிலப்பதிகாரம் படித்த வயது. ஆறாம் வகுப்பு முடிந்து ஏழாம் வகுப்புக்கு போகும் வயது. அப்போதுதான் அக்கதையை எழுதுகிறேன். அப்போதெல்லாம் ஜெராக்ஸ் வசதிகள் கிடையாது. கார்பன் பேப்பர் வைத்து எழுதி 1 + 1 என்று இரண்டு இரண்டு படிவங்கள் எழுதிக்கொள்வேன். பின்னர் அதை நூல் கோத்து என் தந்தையைப் பார்க்கவரும் அவருடைய தோழர்களிடம் வாசிக்க கொடுப்பேன். அவ்வாறு வாசித்தவர்களில் ஒருவர் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள். அவர் மும்பையில் சீர்வரிசை என்ற இதழின் ஆசிரியராக இருந்தக் காலத்தில் என்னை மீண்டும் எழுதச் சொல்கிறார். கவிதை, கதை என்று இலக்கிய உலகை விட்டு 10 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு நான் எழுதவ்ருகிறேன். குடும்பம், பணிச்சுமை, அடையாள சிக்கல் என்ற பல்வேறு மன உளைச்சல்களுக்கு நடுவில் என் இயற்பெயருடன் என் கவிதைகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். மல்லிகா என்ற என் பெயரில் எழுதுவதில் புதிதாக எதுவும் சிக்கல்கள் வந்துவிடுமோ என்ற நிலை. அப்போதுதான் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் என் முதல்கதையான "புதியமாதவி" என்ற பெயரில் என் எழுத்துகளை வெளியிட்டார். சில வருடங்களுக்குப் பின் மல்லிகா தான் புதியமாதவி'என்று தெரியவந்தக் காலக்கட்டத்தில் கேட்டார்கள். வேறுபெயர் கிடைக்கவில்லையா ? அது ஏன் மாதவி? என்று அப்போது தீர்மானித்தது தான் என் புனைபெயரை அப்படியே தொடர்வது என்று. மாதவி என்றால் குருக்கத்தி, துளசி, துர்க்கை என்ற பல பொருட்களும் உண்டு. இந்த ஒவ்வொரு அர்த்தங்களும் ///////// \எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. மல்லிகா புதியமாதவியாக பயணம் தொடர்வது இதனால் தான்.

02. இலங்கை பயணம் பயனுடையதாக அமைந்திருந்ததா/… ?பயணங்களில் பயன் பற்றி யோசிப்பதில்லை நான். பயணங்கள் எப்போதும் புதுப்புது அர்த்தங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கின்றன. பத்து புத்தகம் வாசித்த அனுபவத்தை விட ஒரு பயணத்தின் அனுபவம் என்பது நிஜங்களின் தரிசனத்தை தரும் அனுபவம். அவ்வகையில் இலங்கைப் பயணம் என் வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியமானது. ஒன்று முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு நான் வருகிறேன். கண்டி வெகுதூரமில்லை, கடலும் மிக ஆழமில்லை என்றாலும் நான் கையறுநிலையில் இருந்தேன். அந்த உணர்வு ஒருவகையான குற்றவுணர்வு என்று கூட சொல்லலாம். மனித நேயமிக்கவர் எவருக்கும் தன் கண்முன்னால் நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்துஎதுவும் செய்யமுடியாத குற்றவுணர்வு ஏற்படுகிறது, இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், என் தந்தை தன் இளம்வயதில் வாழ்ந்த கொழும்பு நகரத்திற்கு நான் வருகிறேன், கொழும்புக்கு ஒரு முறையாவது மீண்டும் போக வேண்டும் என்பதே என் அப்பாவின் கடைசி ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை. என் அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரிகள் இருவர் கொழும்பில் தான் வசிக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளுடன் இருந்த தொடர்புகள் அப்பாவுக்குப் பின் இல்லை. இந்த மனநிலையும் சேர்ந்து கொழும்பு மண்ணில் கால்வைத்தவுடன் ஏற்பட்டது.

03. நீங்கள் மும்பையில் வளர்ந்தவர். மும்பைக்கும் உங்களுக்குமான தொடர்பு எத்தகையது?
தாமிரபரணி என் தாயகம் என்றாலும் அரபிக்கடலோரம் மும்பை தான் என் வாழ்விடம். மும்பை தான் என் வாழ்க்கை. மும்பையில் பிறந்து, வளர்ந்து திருமணம் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கும் நான், மும்பை தமிழ் சமூகத்தின் நாலாவது தலைமுறை. என் அப்பாவுக்கு தாத்தா காலத்திலேயே அவர்கள் மும்பை வந்துவிட்டார்கள். மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்த இடம் மும்பை. அதனால் தான் மும்பை என் வாழ்க்கையுடன் நெருங்கிய நேரடி தொடர்புடையதாக என்னைப் பாதிப்பதாக இருக்கிறது. தாமிரபரணி எனக்கு வேடந்தாங்கலாக இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 4வது தலைமுறையாக மும்பையில் வாழும் நான் மும்பையை அம்ச்சி மும்பையாக (அம்ச்சி - எங்கள்) . ஏற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் மும்பை என்னை அப்படி தன் மகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறதா? நான் இன்றும் மும்பையில் 'பொழைக்க வந்த மதராஸி, இனக்கலவரங்களின் போது "ஸாலா மதராஸி" என்ற இரண்டாம்தர குடியுரிமையுடன் தான் வாழ்கிறேன் என்பது தான் யதார்த்தம்.

04. மும்பை சேரிப்புறங்கள் தமிழ்ச்சூழலில் விமர்சனத்துக்குரிய கலாசார சூழலாக காண்பிக்கப்படுகிறது..?



காண்பிக்கப்படுகிறது " என்று சரியாகவே கேட்டிருக்கின்றீர்கள். யார் அப்படி காட்டுகிறார்கள்? இந்த இந்தி சினிமாவும் தமிழ் சினிமாவும் தானே அப்படி காட்டுகிறார்கள்..என்னவோ மும்பையின் சேரிப்புறத்தில் தினமும் கொலை, கொள்ளை, வன்புணர்வு , சண்டை, நடப்பது போலவும் .இங்கே வாழ்பவர்கள் எல்லோரும் தாதாக்கள் போலவும் காட்டுகிறார்கள்...சினிமாவில் காட்டப்படும் கதாநாயகர்கள் அனைவரையும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நினைப்பதும் வில்லன்களை கேடிகளாகவும் சமூகவிரோதிகளாக நினைப்பதும் எப்படி சினிமா மூலம் நம் மக்களின் பொதுப்புத்தியில் விமர்சனத்திற்கு இடமின்றி திணிக்கப்பட்டிருக்கிறதோ அதுபோலவே தான் மும்பை சேரிப்புற வாழ்க்கை பற்றிய சினிமா சித்தரிப்புகளும்.
மும்பையில் குண்டுவெடிப்பு நடந்து மிகப்பெரிய கலவரம் நடந்த காலக்கட்டத்தில் கூட இதே சேரிபுறத்தில் வாழ்ந்த இந்துக்களும் இசுலாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதை இவர்கள் காட்டுவதே இல்லை! இதே சேரிப்புற மும்பை வாழ்க்கையை தான் நான் என் தனியறை கதைகளில் எழுதி இருக்கிறேன். அக்கதைகளில் புனைவுகள் இல்லை, அக்கதைகளின் மாந்தர்களும் அக்கதைகளின் அறைக்கதவுகளும் நிஜமானவை.

05. அவர்களுடன் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். சிக்கல் மிகு பல்கலாசார சூழலில் இது சாத்தியமானதா/?

இவ்விடத்தில் என் அரசியல் பணி என்பது ஓட்டு அரசியலோ, அதிகாரம், பதவிக்கான அரசியலோ அல்ல. முழுக்க முழுக்க சமூகவிடுதலை சார்ந்த அரசியல் பணி. சமூகவிடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புகளுடன் எப்போதும் நான் துணையாக நிற்கிறேன். பல்கலாசார சூழலில் இது சாத்தியமா என்று கேட்டால் நாம் எந்த தளத்தில் நிற்கிறோம் என்பதை வைத்து நம் சாத்தியப்பாடுகள் தீர்மானிக்கப்படும் என்பது என் எண்ணம். தமிழ் தேசியத்தையும் இந்தியா பல்வேறு இன மக்கள் வாழும் இடம், அதிலும் குறிப்பாக பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாடு என்ற புரிதல் வேண்டும். இங்கு வாழும் மராட்டிய சகோதரர்களின் மண்ணின் மைந்தர்கள் கொள்கையில் இருக்கும் சில அடிப்படை நியாயங்களை நான் புறக்கணிப்பதில்லை. தந்தை பெரியாரைப் பற்றி மும்பையில் எந்த மொழி சார்ந்த மேடையிலும் என்னால் பேச இயலும். யாருக்கும் அவர் தெரியாவதவர் அல்ல.பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் இந்த மூவருக்கும் இருக்கும் நுண்ணிய வேறுபாடுகள் பகை முரண்கள் அல்ல என்ற தெளிவும் எனக்கிருக்கிறது. இந்த மூவரும் எப்போதும் என்னுடம் பயணிக்கிறார்கள். பல்லின மக்கள் வாழும் மும்பையில் இவர்களுக்கான தேவையும் இடமும் இருக்கிறது. நான் பிறந்த குடும்பமும் முழுக்கவும் அரசியல் பின்னணி கொண்டவர்கள். என் அப்பாவுக்கு தாத்தா நரசிம்மமேஸ்திரி அவர்கள் தான் மும்பையில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பயில ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடத்தை நிறுவி இருக்கிறார். அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் மும்பைக்கு அருகில் இருக்கும் புனே நகரில் வாழ்ந்த மகாத்மா புலே. என் அப்பா பி.எஸ்.வள்ளிநாயகம் அவர்கள் பெரியார், அண்ணா வழி வந்த அரசியல் வாழ்க்கையிலும் என் அப்பாவின் தம்பி , என் சித்தப்பா பி.எஸ் கோவிந்தசாமி விளிம்புநிலை மக்களின் அரசியலை முன்னெடுத்த குடியரசு கட்சியிலும் இருந்தார்கள். இந்தப் பின்புலம் என் சமூகவிடுதலைக்கான பயணத்தில் எனக்குத் துணையாகவும் இருக்கிறது. சில நேரங்களில் தொந்தரவாகவும் இருக்கிறது.

06. ஒரு பெண்ணிய செயற்பாட்டாளராக இயங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எவ்வாறு?
பெண்ணிய செயற்பாட்டாளராக " இது நீங்கள் என்னைப் பார்க்கும் பார்வை. நான் இப்படி எல்லாம் எந்த ஓர்மையுடனும் திட்டமிட்டு செயல்படவில்லை. எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்க ஆரம்பித்த காலத்திலேயே பெரியாரின் எழுத்துகள் தான் என் வீட்டு சூழலில் எனக்கு வாசிக்க கிடைத்தவை. எனவே பெண்விடுதலை என்பது ரொம்பவும் இயல்பாக என் வாழ்வில் ஏற்பட்டது. ஆணின் விடுதலை எப்போதும் சமூகவிடுதலையாகவும் அதே நேரத்தில் இச்சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்ணின் விடுதலை மட்டும் தனித்துபெண்விடுதலையாகவும் இன்றுவரை தொடர்கிறது. பெண்ணிய செயற்பாட்டாளரை நாம் இனி சமூக செயற்பாட்டாளராக அடையாளம் காண பழக வேண்டும்.
07. சமுக விடுதலை சாத்தியமாகாத நிலையில் பெண்விடுதலைஎன்பது அடையக்கூடியதா.?
நான் ஏற்கனவே சொல்லியது போல இச்சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்ணுக்கு விடுதலை வராமல் சமூகவிடுதலை எப்படி சாத்தியமாகும்?

08. இந்தியா- மும்பை, மும்பை – தமிழ் நாடு, தமிழ் நாடு- இலங்கை, இலங்கை – மலையகம் இந்த பிரதேச வேறுபாடுகளில் பெண்களின் சூழலை எவ்வாறு உணருகிறீர்கள்? 

இந்தியாவின் தலைநகரம் டில்லி என்றாலும் வணிக தலைநகரம் மும்பை தான். மும்பை பெருநகரம் தான் இந்தியாவின் பெண்களின் முகம். பல மொழிகள், பல கலாச்சாரங்கள், உலகமயமாதலின் நேரடி தாக்கம்.. காங்கீரிட் காடுகளுக்கான அடையாளங்கள் , நுகர்கலாச்சாரத்தின் உச்சம் மும்பை. தமிழ்நாட்டு பெண்களும் மும்பையின் நுகர்கலாச்சாரத்துடன் இன்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண் பெண் உறவுகளில் மும்பை வாழ் பெண்களுக்கு இருக்கும் வெளிப்படைத்தன்மை தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டு பெண்களுக்கும் இலங்கை தமிழ்ப் பெண்களுக்கும் இருக்கும் மொழி ரீதியான ஒற்றுமை தவிர்த்து யாழ் மண்ணின் சூழலில் எங்கள் கேரள மண்ணின் வாழ்க்கை சூழலை சந்தித்தது போல உணர்ந்தேன். அதற்கு வாழ்விடம் காரணமா தெரியவில்லை. அதைப்போல சிங்கள, மற்றும் காலனி ஆட்சியின் எச்சமாக சில கலாச்சாரங்கள் இலங்கையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இலங்கையில் வாழும் இசுலாமிய பெண்களின் கல்வி அறிவும் திறமைகளும் அதற்கான சூழலும் தமிழ்நாட்டைவிட போற்றுதலுக்குரியதாக இருந்தது இப்பயணத்தில் அக்காட்சிகளும் அனுபவமும் மனநிறவை தந்தன. நான் இலங்கை வாழ்க்கையை ஒரு வார பயணத்தை வைத்துக்கொண்டு அவதானிப்பதோ
அல்லது கருத்து சொல்வதோ சரியாக இருக்காது என்பது என் எண்ணம் இலங்கை - மலையகம் சார்ந்த பிரச்சனைகளை வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்பயணம் அதை உணர வைத்தது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சொல்வதை நிறுத்தவில்லை என்பதுடன் கூடுதலாக என் கவனிப்பை பெற்றது.. வர்க்கம் சார்ந்த வேறுபாடுகளுடன் சாதி மனப்பான்மையும் சேர்ந்திருக்கிறதோ என்ற எண்ணம் ... ( என் எண்ணமும் கவனிப்பும் தவறாக கூட இருக்கலாம். தவறாக இருந்தால் பெருமகிழ்ச்சிதான்).

09. மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வில் “பெண்களும் அரசியலும்” என்ற தலைப்பில் உரையாற்றினீர்கள்.இந்த தலைப்பின் முக்கியத்துவம் எத்தகையது/

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல என் அரசியல் பின்னணி. தற்போது தொடர்ந்துநான் எழுதிவரும் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் இன்று என்னை ஓர் அரசியல் விமர்சகராக அடையாளம் காட்டும் சூழல் (நான் இந்த அடையாளங்களை விரும்பவில்லை ஏற்கவில்லை என்றாலும்) . பெண்ணியம் சார்ந்த பிரச்சனைகள் என்றால் குழந்தைப்பேறு. குழந்தை வளர்ப்பு, பால் சமத்துவம், பெண்ணுக்கு சொத்துரிமை, குடும்ப நிர்வாகத்தில் ஆணின் பங்கு, பெண் உடல், பெண்கள் எழுதும் பெண்மொழி கவிதைகள், பெண் உடல்நலம், பெண் சிசுக்கொலை, மத ரீதியான பெண் பிரச்சனைகள், கருப்பை, கருச்சிதைவு, இதை எல்லாம் காட்டி வியாபாரம் செய்யும் திரை உலகம் என்று ஒரு வட்டத்தில் பெண் சந்திப்புகள் முடிந்துவிடுகின்றன. இவை எல்லாமே பெண்ணியம் சார்ந்தவை தான் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால் ஆட்சி அதிகாரம் சட்டம் என்று வந்துவிட்டால் அது முழுக்கவும் பெண்ணுலகிலிருந்து ரொம்பவும் தூரமாக இருக்கிறது. ஒரு வகையில் சொல்லப்போனால் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அரசியல் முழுக்கவும் ஆண்களுக்கானதாக இருக்கிறது. பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுடன் மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பெண்ணியம் சார்ந்த பிரச்சனையும் பெண் அரசியலில் நுழைவதற்கான தடைக்கற்களாக இருக்கின்றன . இதை பெண்கள் புரிந்து கொள்வதுடன் இதைப் பற்றி பேசவும் விவாதிக்கவுமான தருணம் வந்துவிட்டது. நாம் இனி அரசியல் பேசி ஆகவேண்டும்.

இன்றைய அரசியலில் பெண்களின் இடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெண்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு இந்திராகாந்தி, ஒரு ஸ்ரீ பண்டார நாயக என்று நம்மால் இப்போதும்
சிலரின் பெயர்களைச் சொல்லமுடியும். இந்த் ஆளுமைகளை மட்டும்
வைத்துக்கொண்டு அரசியலில் பெண்களின் இடத்தையும் பங்களிப்பையும்
வரையறை செய்வது ஆபத்தில் போய் முடியும். இன்னும் ஒருவகையில் சொல்லப்போனால் இவர்களில் பெரும்பாலோர் அரசியல் நுழைவு புறவாசல் வழியாக .. அதிலும் நேராக வாரிசுரிமை என்ற ஒரே ஒரு துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு வந்தவர்கள்.
ஆண்கள் இப்படி வரவில்லையா என்று கேட்டால் வருகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பெண்கள் இப்படித்தான் entry ஆகிறார்கள்!
குடும்ப அரசியல் பிரதிநிதித்துவம் காரணமாக அரசியலில் ஆளுமைகளாக
உருவாக்கப்பட்டவர்கள் இவர்கள்..அரசியல் தலைவரின் மகளாக, மனைவியாக,துணைவியாக, விதவையாக,காதலியாக, சிநேகிதியாக.. இப்படி ஏதாவது ஒர் ஆண் துணையுடன் நுழைந்தவர்கள் மட்டுமே அரசியலில் பெண் ஆளுமைகளாக
உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். வங்க அரசியலின் மம்தா பனர்ஜியைப் போல
ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தற்காலத்தில் இந்திய அரசியல் தளத்தில் செயல்படும் ஒரு சில பெண்களை யோசித்துப் பாருங்கள், உங்களுக்கே நான் சொல்லவருவது புரியும்.

>சோனியாகாந்தி : ராஜீவ்காந்தியின் மனைவி. ராஜீவ்காந்தி மறைவுக்குப் பின்
காங்கிரசுக்கு தேவைப்பட்ட / உருவாக்கப்பட்ட ஒரு தலைவர்.
>|மயாவதி : கன்சிராம் அவர்க்ளால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர்.

ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த

பள்ளிக்கூடத்து ஆசிரியையான மாயாவதியை கன்சிராம் அரசியலுக்கு அழைக்கிறார்.

அம்பிகா சோனியும் ஷீலா திட்சீத்தும் இந்திராகாந்தி குடும்பத்தின்

குடும்ப நண்பர்கள் என்ற பின்புலத்தில் வருகிறார்கள்.

வாசுதார சிந்தியா குவாலியரின் அரசக்குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய

தாயாரும் பிஜேபியின் அரசியலில் பங்குவகித்தவர்.

ஜெயலலிதா எம்ஜியாரால் அரசியலுக்கு வந்தவர்.

சுப்ரியா சுலே, கனிமொழி, பிரியா தத், அகதா சங்கமா, மீரா என்று ப்லர்

அப்பாவின் வாரிசுகளாக வளர்க்கப்பட்டு இடம் பிடித்தவர்கள்.

மம்தா பனர்ஜி, சுஸ்மா சுவராஜ் என்று விதிவிலக்காக சிலர் வாரிசு

அரசியல் அடையாளங்கள் இன்றி அரசியலில் இடம் பெற்றவர்கள்

என்பது நமக்கு கொடுக்கும் நம்பிக்கை.


இந்த தகவலில் இந்தியா இடம் பெறுவதால் இது என்னவோ இந்தியாவுக்கு
மட்டுமேயான நிலை என்று எண்ணிவிட வேண்டாம். உலக அரசியலில்
அனைத்து நாடுகளின் பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களைக்
கணக்கில் கொண்டால் உலகத்தில் மொத்தமே 13% பெண் உறுப்பினர்கள் தான் இருக்கிறார்கள் !

10. இலங்கையில் தாங்களை பெரிதும் பாதித்த விடயம் எது?
முள்ளிவாய்க்காலின் போர் தின்ற சனங்களின் கதைகள்.. ..வரலாற்றை துடைத்து எடுத்தல் என்ற சொற்றொடரை நான் வாசித்திருக்கிறேன் ஏன் எழுதியும் இருக்கிறேன்... ஆனால் உண்மையில் வரலாற்றை துடைத்து எடுத்தல் என்றால் என்ன என்று இலங்கையில் பார்த்தேன், உணர்ந்தேன்.

11. தாங்களின் படைப்புகளில் “பெண் வழிபாடு” என்ற சிறுகதைத்தொகுதி தமிழ் கலாசார வாழ்வியல் சூழலில் சர்ச்சைக்குறிய பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. புத்தகம் வெளிவந்தப்பின் சர்ச்சைகள் வருமென்று எதிர்பார்த்தீர்களா? வந்ததா..? 
பெண் வழிபாடு சிறுகதைகள் தமிழ்நாட்டின் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தவை.எந்தப் பிரச்சனையும் வரவில்லை என்பது தான் உண்மை. தற்போது எங்கள் தமிழ்நாட்டு சூழலில் .தமிழ்நாட்டு இலக்கிய சூழலில் பெண்ணின் கலாச்சாரம் சார்ந்து சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு எந்த சாதி சார்ந்த அடையாளமும் இருக்க கூடாது.. அப்படி ஒரு அடையாளம் இருந்தால் அந்தக் குறிப்பிட்ட சாதிக்காரார் என்னவோ அவர் பொண்டாட்டியை பற்றி எழுதிவிட்டதாக கலவரம் செய்ய வருவார்கள். அந்த அடையாளம் இல்லை என்றால் அந்தப் பெண் " எவளோ ருத்தி..அவர்கள் வீட்டுப் பெண் அல்ல" என்ற மனப்பான்மை. அதே நேரத்தில் என்கவிதை தொகுப்பு "ஹேராம்" வெளிவந்தவுடன் ஒரு பதட்ட நிலை ஏற்பட்டது. காரணம் அக்கவிதைகள் வெளிப்படையாக இருந்த இந்துத்துவ அரசியலுக்கு எதிரான கருத்துகள். என் தனியறை சிறுகதைகள் தொடர்ந்து மும்பை போஸ்ட் வார இதழில் வெளிவந்த காலத்தில் " நான் அவர்கள் வீட்டு கதையை எ ழுதிவிட்டதாக " ப்லர் என்னிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். அதில் என் உறவினர்களும் உண்டு. மேலும் அண்மைக்காலங்களில் என் அரசியல் விமர்சனங்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. அரசியல் என்றால் என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன? அதன் சரிவுகளுக்கு யார் காரணம்? இந்தியாவின் இந்துத்துவ ஆட்சி, இந்தியாவின் மதசார்பின்மை, சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறேன். என்னைக் கருத்தியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் எழுதுவதற்கு கூட ஆள் வைத்து தரக்குறைவாக எதிர்ப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கண்டு பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? முரண்கள் அனைத்தையும் பகை முரண்களாகவும் விமர்சனங்களை எல்லாம் எதிர்ப்புக்குரலாகவும் எண்ணுவது அச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் வியாதி. இது தீர்க்கப்படவில்லை என்றால் .. ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியையும் அது பாதிக்கும். தினக்குரல் ஆசிரியர் குழுமத்திற்கும் வாசகர்களுக்கும் என் வாழ்த்துகளும் நன்றியும்.
- எழுத்தாளர் புதியமாதவி
மும்பை, இந்தியா.
மின்னஞ்சல் : puthiyamaadhavi @hotmail.com
 — with Puthiyamaadhavi Sankaran.

Thursday, June 4, 2015

அகில இந்திய கருத்தரங்கம், மத்திய பிரதேசம்.

National Symposium at MHOW, MADYA PRADESH
----------------------------------------------------------------------------------




அகில இந்திய காங்கிரசு ஏற்பாடு செய்திருந்த தேசிய கருத்தரங்கம்
NATIONAL SYMPOSIUM ON VISION OF BABASAHEB DR. B R AMBEDKAR:
ROADMAP AHEAD FOR THE EMPOWERMENT OF DALITS AND ADIVASIS..

ஒரு மாதத்திற்கு முன்பே டில்லியில் இருந்து தொலைபேசியில்
என்னிடம் பேசினார்கள். " எனக்கும் காங்கிரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதே!, என்னை எதற்காக அழைக்கிறீர்கள்?" என்பதே என் முதல் கேள்வியாக இருந்தது. என்னைப் பற்றியும் என் அரசியல் விமர்சனங்கள் பற்றியும் வாசித்திருப்பதை அவர்கள் உறுதி செய்தது எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. என்னிடம் பேசியவர் யார் என்பதைப் பற்றியோ அவரின் அரசியல் செல்வாக்கு பற்றியோ கருத்தரங்கத்திற்கு போகும் வரை எனக்கு எதுவும் தெரியாது! மும்பை
காங்கிரசு ரவீந்திர தல்வியும் தொடர்பு கொண்டார். அதன் பின் என் வேலைகளுக்கு நடுவில் நானும் மறந்துவிட நாளை காலை 6 மணிக்கு உங்கள் விமானடிக்கெட் இந்தூருக்கு என்று போன் வருகிறது. அதுவும்
கிளம்புவதற்கு முன் தினம் மாலை 6 மணிக்கு. இப்படி அவசரத்தில் புறப்பட்டு போன அனுபவமும் காங்கிரசு அரசியல் வாதிகளை சந்தித்த அனுபவமும் சற்று வித்தியாசமாக இருந்தது.


இந்தூர் விமானநிலையத்திலிருந்து அம்பேத்கர்  பிறந்த இடமான
மஹொ பகுதிக்கு 45நிமிடம் சாலை வழி பயணம். போய் 1 மணி நேரத்திற்குள்
கருத்தரங்குக்கு கிளம்பியாக வேண்டிய அவசரத்தில் நான்.
விமானநிலையத்தில் தான் ரூத்மனோரமாவை சந்தித்தேன்.
முதல்முறையாக அப்போதுதான் சந்தித்தாலும் பலநாட்கள்
பழகியது போல இனிமையாக பழகினார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிந்தனையாளர்கள்,
அரசியல்விமர்சகர்கள் எழுத்தாளர்கள் களப்பணியாளர்கள் என்று
கருத்தரங்கம் களை கட்டியது. கொலம்பிய பல்கலை கழகம் முதல்
நாக்பூர் பல்கலை கழகம் வரை.. என்று ஒரு பக்கம் கல்வியாளர்கள்
வேறு. சில ஆய்வு மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
தன் இளைய மகனை அண்மையில் இழந்துவிட்ட தோழி சிவகாமி
அவர்களையும்  அங்குதான் சந்திக்கிறேன். அதுவும் எங்கள் முதல்
சந்திப்பு, கண்களில் கண்ணீருடன். என்ன பேசுவது, எப்படி ஆறுதல்
சொல்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களும் நாங்கள் இருவரும்
நிறைய பேசிக்கொண்டோம்.


இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தி இன்றைய ஆட்சியில் இருக்கும்
மோடி சர்க்காரை எதிர்க்க பலமான ஒரு பரீட்சைக்கு காங்கிரசு தன்னைத் தாயர்ப்படுத்திக் கொள்கிறதா? இக்கருத்தரங்கை மட்டும் வைத்துக் கொண்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா?
11 மணிக்கு என்று போட்டிருந்தாலும் கருத்தரங்கு 12 மணிக்குத்தான் ஆரம்பித்தது. என்னைப் போல பலர் அன்று காலையில் தான் வந்து கொண்டிருந்தது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
தொடர்ந்து இந்தியாவை காங்கிரசு ஆண்டிருக்கிறது. எங்கள் ஆட்ச்யின் தவறுகளைப் பற்றி குற்றம் குறைகளைப் பற்றிப் பேசலாம் நீங்கள் என்று
இக்கருத்தரங்கில் அவர்கள் மனம் திறக்கிறார்கள்.


> congress should confess என்கிறார் ஒருவர். புனா ஒப்பந்தம் தலித்துகளுக்கும்
அம்பேதருக்கும் கொடுமை செய்துவிட்டது என்ற ஆவேசத்துடன்.

> மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, இவர்களும் அம்பேத்கர்
மூவரும் இருக்கும் காங்கிரசின் போஸ்டர்.... காங்கிரசின் புதிய அவதாரம்
புது அடையாளம் என்று சொல்கிறார் இன்னொருவர்.

>யாரும் அம்பேத்கருக்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.
அவர் சாதாரண இந்தியர்களின் தலைவன், காக்கவந்த ரட்சகன் ..

சிந்தனைவாதிகள் ஒருவர் பின் ஒருவராக.. மின்னல் போல..
கருத்துகள்..ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டும் கைகுலுக்கிக்
கொண்டும்... மாலை 6 மணிவரை.
அதன் பின் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி கருத்தரங்கிற்கு வந்தார். இந்தூர் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து..
ரொம்பவும் இயல்பாகவும் எளிமையாகவும் தான் அவர் தோற்றம்.
கருத்தரங்கில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய எளிய
நேர்மையான பதிலும் விளக்கங்களும்.
அவருடைய பதில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அதில் பாசாங்கில்லை. சரியாக ஏழரை மணிக்கு கிளம்பினார்.
திக் விஜய்சிங் மற்றும் குமாரி செல்ஜா இருவரும் கருத்தரங்கை பின்வரிசையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
சுஷில்குமார் ஷிண்டே ஒரு மணி நேரம் வந்துவிட்டுப் போனார்.

நேற்று இந்தூரிலிருந்து 4 மணிக்கு கிளம்பி 5 மணிக்கு மீண்டும்\மும்பை.
இரவு கருத்தரங்கம் பற்றி கருத்து கேட்கிறார்கள் டில்லியிலிருந்து
 கே.ராஜூவும் மும்பையிலிருந்து ரவிந்திர தல்வியும்.
என் கருத்தை அவர்களுக்கு எழுத வேண்டும். எழுத்தில் பதிவு செய்ய
முடியாதவை எப்போதும் இருக்கத்தானே செய்யும். அவற்றை
சந்தர்ப்பம் வரும்போது சொல்லிவிட வேண்டியது தான்.




Monday, June 1, 2015

பார்த்தேன், ஆனால் பார்க்க விருப்பமில்லை



பயணங்களில் சில வரலாற்று முக்கியத்துவம் கொண்ட
 இடங்களைப் பார்ப்பதில் எனக்கு எப்போதுமே
 ஆர்வம் உண்டு. சமீபத்திய இலங்கை
பயண்த்தில் அம்மாதிரியான சில அனுபவங்கள் .. 
ஆனால் அந்த அனுபவங்கள் புதுமையானவை.
 அதில் இதுவும் ஒன்று.
புதிதாக கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தைப் பார்த்தேன்.
ஆனால் ஏனோ பார்க்கவிருப்பமில்லை. சில மணி நேரங்கள்
காத்திருந்து நூலகத்தின் உள்ளே போய்ப்பார்க்கலாமா? இன்னொரு
ரவுண்ட் சுற்றிவிட்டு வந்து அதன் பி ன் நூலகத்திற்கு 4 மணிக்கு வந்து
நூலகத்திற்குள் போய் அந்த நூலகத்தில் 
எம்மாதிரி புத்தகங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாமா?
தோழி றஞ்சி எங்களிடம் கேட்டார்.
வேண்டாம், எங்களுக்கு நூலகத்திற்குள் போய்ப் பார்க்க வேண்டாம்.
புதிதாகக் கட்டி இருப்பதாக சொன்னார்களே..
அதைப் பார்த்துவிட்டோம்.. என்று சொன்னோம்.
நான், யோகி, விஜி எங்கள் PM வழக்கறிஞர் ரஜினி எல்லோரும்
ஒருமித்த குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு
புத்தகங்கள் எரியும் வாசனை வந்து கொ ண்டிருந்தது.