Wednesday, February 3, 2016

அண்ணாவும் எம் ஜி ஆரும்


அண்ணாவின் நினைவுகள்
-----------------------------------------



திமுக ஆட்சிக்கு வரவில்லை. அதிமுக பிறக்கவில்லை.
எம் ஜி ஆர் அக்காலக்கட்டத்தில் திமுகவில் முக்கியமானவர்.
அப்போது திரைப்படத்துறையினர் மெரினா கடற்கரையில்
கண்டனக்கூட்டம் நடத்தினார்கள். இன்றைய டிஜிட்டல் யுகம்
அல்ல. காமிராவில் ப்ஃலிம் சுருள்களை மாட்டித்தான்
படங்கள் எடுக்கப்பட்டன. சினிமா எடுப்பதற்கான கச்சா
ப்ஃலிம் தேவையான அளவு உற்பத்தி செய்யப்படவில்லை
என்பதால் அரசு திரைப்படங்களுக்கு ஒதுக்கும் ப்ஃலிம்
அளவுக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை எதிர்த்து தான்
திரைப்பட துறையினர் மாபெரும் கண்டனக்கூட்டம்
நடத்தினார்கள். அக்கூட்டத்தில் இறுதியாகப் பேசிய
எம் ஜி ஆர் "அரசியல் கட்சி எதுவும் நமக்காக வாதாடவில்லை,
கண்டனக்குரலை எழுப்பவில்லை. நான் சார்ந்த திராவிட
முன்னேற்ற கழகமும் இதில் கொஞ்சமும் அக்கறை
காட்டவில்லை" என்றார்.

திமுக வில் எம் ஜி ஆரின் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.
அண்ணாவிடம் அரங்கண்ணல் போன்றவர்கள் இதைப் பற்றி
பேசினார்கள். அண்ணாவை அறிக்கை வெளியிடவும்
வற்புறுத்தினார்கள். அண்ணா மறுத்துவிட்டார்.

"பேசியது எம் ஜி ஆர். அறிக்கை வெளியிடுவது நானா?
என்ன இது வேடிக்கையாக இருக்கிறது! எம் ஜி ஆரை ஆதரித்து
அறிக்கை விடுவதா? கண்டித்து அறிக்கை விடுவதா? இரண்டும்
தவறாகிவிடுமே! கொஞ்சம் பொறு, காலம் கனியும்" என்று
பதில் சொன்னார்.

அண்ணாவுக்கு விளக்கம் சொல்ல எம் ஜி ஆரே நேரில் வந்தார்.
அப்போது அண்ணா மாடியில் எழுதிக்கொண்டிருந்தார். மாலை 7
மணிக்கு வந்தவர் இரவு 10 மணி வரை அண்ணா எழுதி முடித்து
கீழெ இறங்கி வரும் வரை காத்திருந்து விளக்கம் சொன்னார்.

"தவறுதான் அண்ணா. உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டேன்"
என்றார்.

அதற்கு அண்ணா.. "உணர்ச்சி வேகம் இருக்கட்டும், பிரச்சனையை
முதலில் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
திரைத்துறையினர் யாராவது என்னிடம் பேசினீர்களா?
அல்லது திமுக வின் ஆதரவு கேட்டீர்களா? அப்படி இருக்க
எப்படி உங்களை ஆதரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?
கழகம் ஆதரித்தால் அதற்காகவே ஏறுமாறாக நடவடிக்கை
எடுக்க கூடியவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்........
இந்த அண்ணாதுரை மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால்
காமராசர் உதவி இருப்பார்.அதையும் இவர் கெடுத்தார்!
என்று பேசக்கூடியவர்கள் உங்கள் தரப்பில் சிலர்
இருக்கிறார்கள் அல்லவா?"

"ஆம் அண்ணா, தவறு என்னுடையது தான்.."

"சரி.. நீங்களே ஓரு அறிக்கை வெளியிட்டுவிடுங்கள்.."

அண்ணா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

மேற்குறித்த சம்பவத்தை ஒவ்வொருவரும்
கூட்டி குறைத்து பேசியதை நானறிவேன்.

அண்ணா குறித்த பல்வேறு நினைவலைகள்..
ஊடாடுகின்றன.
அண்ணா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
என்ற ஓர்மையுடன் அண்ணா என்ற  ஆளுமையை
கொண்டாடுகிறேன்.


No comments:

Post a Comment