Tuesday, March 22, 2016

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா.. (1)


தேர்தல் அரசியலைக் கடுமையாக விமர்சித்த வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் . 16 ஜூலை 1989 சென்னை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.
சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் இந்த நான்கும் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குறிக்கோள் என்று முழங்கினார். 
மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை
மக்களின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபடுவது தான் தங்கள் இலட்சியம் என்று அறிவித்தார்.
தலைவர் பதவி வன்னியருக்கும் செயலாளர் பதவி
தாழ்த்தப்பட்டவருக்கும் வழங்கப்படும் என்பது அவர்
அறிவிப்பில் மிகவும் முக்கியமானது. அதன்படி
தலைவராக பேராசிரியர் தீரன், செயலாளராக எழில்மலை
(இந்த இருவருமே தற்போது அக்கட்சியில் இல்லை என்று
நினைக்கிறேன்.)
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அன்றைய துவக்க விழாவில் அவர் கொடுத்த வாக்குறுதிகளின் முக்கிய சாராம்சங்கள்:
* நான் எக்காலத்திலும் சங்கத்திலோ கட்சியிலோ எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்.
*என் வாழ்நாளில் தேரதலில் போட்டியிட மாட்டேன்.
என் கால்செருப்பு கூட சட்டமன்றத்திலோ/நாடாளுமன்றத்திலோ நுழையாது.
*பொதுக்கூட்டங்கள்/பொது நிகழ்ச்சிகளுக்கு சொந்தச் செலவில் வந்துப்போவேன்.முடியாதபோது
ஓய்வெடுத்துக்கொள்வேனே
தவிர அடுத்தவர் செலவில் வந்து போக மாட்டேன்.
*பிரதமர் பதவியைக் கொடுத்தாலும் சரி, சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாக பேரம் பேசினாலும் சரி, இந்த ராமதாஸ் விலை போக மாட்டான்.
இது என் தாய்மீது சத்தியம்.
*என் வாரிசுகளோ , சந்ததியினரோ , யாரும் எக்காலத்திலும் சங்கத்திலோ கட்சியிலோ எந்த ஒரு பதவிக்கும் வரமாட்டார்கள்!!!!
*இவற்றை எல்லாம் உங்கள் டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...
 (அவரு சொன்னாருனு நானும் எழுதி வைத்திருந்தேன்.. !)
என் தாய்மீது செய்து கொடுத்த சத்தியத்தை மீறி நான் நடந்தால் என்னை
நடுரோட்டில் நிறுத்தி வைத்து ச+++ல் அ++++ள். (எடிட்டிங் என்னுடையது)
----
காலம் எவ்வளவு மாறிவிட்டது, 
மருத்துவரை குறை சொல்ல முடியாதுதான்
அரசியலில் இதெல்லாம் சகஜம்பா...

Saturday, March 19, 2016

இருத்தலுக்கான "வலி"



எனக்கு அவர்கள் ஓர் ஆடையை அணிவித்தார்கள்.
அவர்களும் அணிந்து கொண்டார்கள்.
அவர்கள் ஆடையில் வண்ண வண்ணப் பூக்கள்
பூக்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள்.
ஏக்கத்துடன் கழிந்தது என் இரவுகள்.
ஓர் அமாவசை இரவில்  அவர்கள் கொடுத்த ஆடைகளைத் துறந்து
அம்மன (ண)ம் ஆன பொழுதில் ...
பவுர்ணமி வெளிச்சத்தில் பட்டாம் பூச்சிகள்
கொலை செய்யப்பட்டன.
எரிக்கப்பட்டது என் ஆடைகளும்.
இப்போதெல்லாம் 
ஆடைகளைக் கழட்டுவதோ மாற்றுவதோ
கனவில் கூட வருவதில்லை.
என் வாரிசுகளையும் அவர்கள்  கொடுத்த
ஆடைகளுடனேயே பிரசவிக்க சம்மதமே.

Friday, March 11, 2016

எழுதாதே ....ஆபத்து

அரசியல் பற்றி எழுதாதே
ஆபத்து .. 
எங்கிருந்து ஆட்டோ ரிக்‌ஷா பாய்ந்துவரும் என்று
எவராலும் சொல்லமுடியாது..
எச்சரிக்கிறார்கள் என்மீது கொஞ்சம் அக்கறைக்கொண்டவர்கள்.

கவிதை எழுது என்று சொல்கிறாள் தோழி..
எழுதலாம் தான்..
என் கவிதைகளைத் தற்காலிகமாக "கடமை"
என்ற கடன் தீர்க்க அடமானம் வைத்திருக்கிறேன்..
கடனும் வட்டியும் சேர்ந்து என்னை மூச்சுத்திணறடிக்கிறது.
கவிதை எழுதுவது இப்போதைக்கு முடியாதுதான்.

சரி.. எழுத ஆரம்பித்து முற்று பெறாமல் இருக்கும்
நாவலை எழுத ஆரம்பிக்கலாம்..
ஆனால் நாவலின் கதவுகள் சாத்தி இருக்கின்றன.
பெரிய பூட்டு வேறு தொங்கிக்கொண்டிருக்கிறது.
வழக்கம் போல நான் சாவியைத் தொலைத்துவிட்டேன்.
கதைமாந்தர்கள் வேறு கட்சிமாறிவிட்டார்கள்.
கூட்டணியும் உறுதியாகவில்லை
.
'நாவல்'பழம் சர்க்கரை வியாதிக்கு நல்லதாமே
சுட்டப்பழமோ சுடாதப்பழமோ
வாங்கித்தின்று கொட்டையை துப்பி
தூரவீசாமல் பத்திரப்படுத்தி
காயவைத்து பொடி செய்து
தேனில் குழைத்து சாப்பிட்டால்
அவ்வையைப்போல அதிகநாட்கள் வாழலாம்
.
அவ்வைக்கு கிடைத்த அதியமான்
எனக்கும் கிடைக்காமலா போய்விடுவான்?