Monday, December 13, 2010

செம்பருத்தி




செம்பரிதி குளத்தில் நீராடிய வதனம்
பார்த்தாலே போதையூட்டும் கவர்ச்சி
சிவந்த இதழ்களைத் தொடும்போதெல்லாம்
வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு.
ஐந்துவிரல்களாய் இணைந்த
ஐம்பூதங்கள்
இப்படி எத்தனையோ இருந்தாலும்
நாங்கள் சூடுவதில்லை
செம்பருத்தி பூக்களை.
அச்சமாக இருக்கிறது
ஐவருடன் வாழ்ந்த
அவளறியாதக் காமத்துடன்
சூல்முடியும் சூலகமும் விரித்து
சூரியக்குஞ்சுகளைப்
பிரசவிக்கத் துடிக்கும்
அவளைப் பார்த்து.

----------------------------

Friday, December 10, 2010

மீன் தொட்டி

அழகான வளவளப்பான கரைகளுடன்
எனக்காக நீ எழுப்பிய
புதிய சமுத்திரம்.
அலைகளோ வலைகளோ
என்னை
விலைப் பேசிவிட முடியாத
புதிய சாம்ராஜ்யம்.

எப்போதும் இதமான வெளிச்சம்
சுகமான காற்றுக் குமிழிகள்
தேடி அலைய வேண்டியதில்லை
எனக்கான என் உணவை.
வேண்டும் போதெல்லாம்
விதம் விதமான
சுவைகளுடன்
விருந்துகளின் ஆரவாரம்.
பாடுகின்றேன்
கனவுகளுடன் ஆடுகின்றேன்
கண்ணாடிக் குடுவையின்
திரவங்களைப் பருகிய
போதையில்
தள்ளாடுகிறது
என் பருவ மேனி.








காமம் உடைத்தப்
புதுவெள்ளமாய்
அலைகளில் கலக்கும் நதிகளை
நான் மறந்துவிடுவது
உன் சமுத்திரத்தை மட்டுமல்ல
உன்னையும் காக்கும் அறம் என நம்புகிறாய்
அதனாலேயே
உன் சமுத்திரத்தில்
அடிக்கடி
தண்ணீரை மாற்றுவதை மட்டும்
நீ மறப்பதே இல்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்
பழையக் கடல் ,நதி,
பவளப்பாறை
சுறாவின் வேட்டை ,சுனாமி
எல்லாமே
உன் புதுவெள்ளத்தில் கரைந்து
காணாமல் போய்விடுகின்றன..
ஆனால்
மழைத்துளிகள்
செதில்களை நனைத்து
முத்தமிட்ட இரவுகள் மட்டும்
இன்னும் ஈரமாய்....