கொள்கைகளும் விலகல்களும்: புதியமாதவியின் வட்டமும் சதுரங்களும்
பெண்ணியம் இன்று இரண்டு நிலைப்பட்டது. பரவலாக அறியப்படுவது அதன் செயல்நிலை. சமூகத்தின் இருப்பை உணரும் நிறுவனங்களான குடும்பம், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், கேளிக்கை மற்றும் சடங்கு நிகழ்வுகள் என ஒவ்வொன்றிலும் பெண்களின் இடத்திற்காகவும் இருப்புக்காகவும் குரல்கொடுப்பதும், போராடுவதும், சட்டரீதியான உரிமைகளைப்பெறுவதுமான செயல்பாடுகளே செயல்நிலை வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இச்செயல்நிலைகளுக்கான கருத்தியல் வலுவை உருவாக்குவது கோட்பாட்டுநிலை. பெண்ணியத்திற்கான கோட்பாட்டு நிலையை உருவாக்கிட உதவிய இன்னொரு கோட்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அது மார்க்சியமாகவே இருக்கும்.
ஆதியில் இங்கே நிலவியது பொதுவுடைமை நிலையே என்ற நம்பிக்கையைக் கொண்டு தனது கருத்துருவாக்கத்தைச் செய்த மார்க்சியம் திரும்பவும் அதே பொதுவுடைமை நிலையைக் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை முன்வைக்கிறது. புராதன பொதுவுடைமையிலிருந்து உருவான வேட்டைச் சமுதாயம், அடிமை உடைமைச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் என ஒவ்வொன்றும் உடைமையை- பொருளியல் காரணிகளைக் கைப்பற்றிய வர்க்கத்தின் ஆதிக்கத்தைக் கொண்டவை. அவற்றைத் தகர்த்து சோசலிசக் கட்டுமானங்களை உருவாக்கும்போது வர்க்க வேறுபாடு மறையும் எனக் கோட்பாட்டை விளக்கிக் காட்டியது மார்க்சியம். இதனை விளக்குவதற்காக உற்பத்திக்கருவிகள் ஒவ்வொரு கட்டத்திலும் யார் கையில் இருந்தன என்பதையெல்லாம் வரலாற்று நிலையிலும் இயங்கியல் நிலையிலும் ஆய்வுசெய்து காட்டியது.
பொருளியல் ஆய்வான தனிச்சொத்தின் தோற்றத்தை ஆய்வுசெய்தபோது, அதனை நிலைநிறுத்தும் அமைப்பான குடும்பத்தின் தோற்றத்தையும் இயக்கத்தையும், அதனைப் பாதுகாக்கும் அரசின் இருப்பையும் அதிகாரத்தையும் ஆய்வுசெய்தது மார்க்சியம். அந்த ஆய்வின் முக்கிய வெளிப்பாடே எங்கெல்ஸின் குடும்பம் அரசு தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூல். இந்த ஆய்வுகளைச் செய்ய மானிடவியல் தரவுகளைப் பயன்படுத்தினார் பிரெடரிக் எங்கல்ஸ். மானிடவியல் ஆய்வுகள் மனிதர்களைப் பற்றிப் பேசும்போது பொதுவான அலகாகப் பேசாமல் ஆண் – பெண் என்ற பால் வேறுபாட்டை மையப்படுத்தியே பேசும் அறிவுத்துறையாகவே வளர்ந்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. சமூகத்தின் போக்கிலும் இருப்பிலும் பெண்ணின் பங்களிப்பு பற்றியும் மானிடவியல் பேசுகிறது. அதேபோல பொருளாதார உறவுகளைப் பற்றிப்பேசும்போது பெண்களையும் தொழிலாளர் தரப்பாக க் கருதிப் பேசிய பொருளியல் சிந்தனை மார்க்சியப் பொருளாதாரச் சிந்தனையாகும்.
எந்த நிலையில் பெண்களைத் தவிர்த்துவிடாத சிந்தனைப்பள்ளியான மார்க்சியச் சிந்தனைப்பள்ளியே பெண்களின் விடுதலைக்கான சிந்தனைத் தோற்றத்திற்கும் காரணமாக இருந்தது. அதே நேரத்தில் ஒரு போதாமையோடு இருந்தது என்பது பின்னர் பெண்ணியவாதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. தொழிலாளர்களின் மீது முதலாளித்துவம் கொண்டிருக்கும் உழைப்புச் சுரண்டல் சார்ந்த தளைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் போகும் நிலையில் அனைத்துத் தொழிலாளர்களும் விடுதலை பெற்றவர்களாகத் திகழ்வார்கள் என்பது அதன் நிலைபாடு. அந்நிலைபாட்டை ஏற்றுக்கொண்டால் அனைவரும் தொழிலாளர்களின் விடுதலைக்காக முதலில் போராட்டம் நடத்தவேண்டும். அவ்விடுதலைக்குப் பின்னர் பெண்களுக்கான விடுதலைப்போராட்டமே தேவைப்படாது என்று கருதியது. இதைப் பெண்ணியர்கள் ஏற்கவில்லை. மார்க்சியத்தின் போதாமையாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்தோடு பாலியல் வேறுபாடும் ஒருவித ஆதிக்கத்தன்மை கொண்ட வேறுபாடுதான். அதனால் எல்லாவகையான ஆதிக்கத்திற்கும் எதிராகப் போராடுவதுபோல ஆண்களின் ஆதிக்கத்திற்கெதிராகப் பெண்கள் போராடித்தான் விடுதலையைப் பெறவேண்டும் என விளக்கினர். உலகம் முழுவதும் தோன்றிய பெண்ணிய இயக்கங்களில் தொடக்கநிலை விவாதங்கள் ஒவ்வொரு வெளியிலும் தங்களுக்கான இடத்திற்காகப் பேசின.இதிலிருந்து நகர்ந்த மார்க்சியப்பெண்ணியம் ஒவ்வொரு வெளியிலும் பெண்களின் சமத்துவத்திற்காகவும் சமத்துவமான வேலைப்பிரிவினைக்காகவும் சமநிலையான கூலிக்காகவும் பேசியதோடு குடும்பத்திலும் சமநிலை நிலவவேண்டும் என்பதை முன்மொழிந்தது. 1960 களில் பேச்சாகத் தொடங்கிய மார்க்சியப்பெண்ணியம் பத்தாண்டுகளில் பெரும் இயக்கமாக மாறியது. ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் அமெரிக்காவில் பேசப்பட்ட தனித்துவமான மார்க்சியப்பெண்ணியச் சிந்தனைகள் இந்தியாவில் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. இங்கே பெருங்கட்சிகளின் துணை அமைப்புகளாகவே மகளிர்/ பெண்ணுரிமை அமைப்புகள் இயங்கிவருகின்றன.
அதே நேரத்தில் எழுத்துத்துறையில் இயங்கும் பலர் பெண்களுக்கான சமத்துவத்தை குடும்பம், பணியிடம் என்ற நிலையிலிருந்து நகர்த்தி அரசியல் அதிகாரம் பெறுதலை நோக்கிப் பரப்புகின்றனர். ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாகும் குடும்ப அமைப்பில் ஆணின் அதிகாரம் உருவாகாமல் இருக்க இருவரும் உழைப்பவர்களாகவும் இருவரும் சம்பாதிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் எனப் பேசியதோடு கணவன், மனைவி என்ற அதிகாரத்துவச் சொற்களைத் தவிர்த்து நண்பர்களாக இருக்க வேண்டும் என ஒரு கருத்தை முன்வைத்தது மார்க்சியப்பெண்ணியம். மனைவி – கணவன் என்ற உறவில் வாரிசை உருவாக்கும் பிள்ளைப்பேறு, வளர்ப்பு போன்ற வேலைப்பிரிவினைகள் பெண்களைச் சார்ந்த தாக இருக்க, கல்வி அறிவுதருதல், வேலைக்கு ஏற்பாடு செய்தல் போன்றன கணவனைச் சார்ந்த தாக – ஆண்களின் வேலையாக இருக்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்பது மார்க்சியப்பெண்ணியத்தின் நிலைபாடு. அதற்காக அது முன்வைத்த நட்பு என்ற சொல்லாடல் கொண்டாடப்படும் சொல்லாடலாக இருந்து வருகிறது. கணவன் -மனைவி என்ற உறவுப்பெயர்களைப் போலல்லாமல் நண்பர்கள் என்ற சொல்லாடல் ஒருவர் மீது ஒருவருக்கு ஆதிக்கமோ, சார்ந்திருத்தலோ இல்லை என்பதால் அந்தக் கொண்டாட்டம் சரியென நம்பப்படுகிறது.
கணவன் , மனைவி என்ற உறவில் கிடைக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய உறவாக நட்பு இருக்கமுடியுமா? என்ற கேள்வியும் இங்கே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நட்பாக இருக்கும் ஒரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள விரும்பும் ஆண்கள் இங்கே இருக்கிறார்களா? கல்லூரி அல்லது பணிக்காலத்தில் நண்பர்களாகப் பழகியவர்கள் அதனைத் தொடர்ந்து கணவன் மனைவியாகிய பின்னும் நண்பர்களாகவே இருக்கமுடியுமா? போன்ற கேள்விகள் இங்கே அடிக்கடி. அப்படியொரு கேள்வியை எழுப்பி விவாதிக்கும் கதைகள் தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. சில ஆண் எழுத்தாளர்கள் -ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்றவர்கள் – அப்படியான கதைகளை எழுதியிருக்கிறார்கள். பெண் எழுத்தாளர்களில் புதிய மாதவியின் புனைகதைகள் சில அந்தச் சொல்லாடலுக்குள் நுழைந்துள்ளன. அவரது அண்மைத் தொகுப்பான ரசூலின் மனைவியாகிய நான் என்பதில் இடம்பெற்றுள்ள வட்டமும் சதுரங்களும் என்ற கதை முழுமையாக இதை விவாதப்பொருளாக்கியுள்ளது.
தடைகளும் எல்லைகளும் கொண்ட அமைப்பாகவே குடும்பம் இருக்கிறது என்பதை உள்வாங்கிய புதிய மாதவி கதையின் தலைப்பாக வட்டமும் சதுரங்களும் எனத் தந்துள்ளதே முக்கியமான ஒன்று. அவ்வமைப்புக்குள் சுற்றிச் சுற்றி வந்தாலும் திரும்பவும் சந்தித்துக்கொள்ளவும் சார்ந்து வாழவுமே முடியும். அதனை உணர்ந்து கொண்ட ஆணும் பெண்ணும் தனித்துவமானவர்களை நிராகரித்துவிட்டு அடங்கிப் போகும் நபர்களையே தேர்வுசெய்பவர்களாக இருக்கிறார்கள். அதிலும் ஆண்கள் பேசும் கொள்கையும் தத்துவமும் ஒன்றாகவும் செயல்பாடும் நடப்பும் வேறொன்றாகவும் இருப்பதை நாடுகின்றனர் என்ற கடும் விமரிசனத்தை வைப்பதாக அந்தக் கதையை எழுதியுள்ளார். இருவரும் நண்பர்களாக ஒரே அறையைப் பகிர்ந்துகொண்டவர்கள். அவர்களைக் கணவன் – மனைவி என்ற உறவுக்குள் நகர்த்தாமல் தடுக்கும் ஒன்றாகப் பொருளாதார நிலையும் குடும்பத்தின் நெருக்கடியும் இருக்கிறது என்ற உண்மையைப் பட்டவர்த்தமான முன்வைக்கும் கதாசிரியர், ஆண்கள் எப்போதும் முடிவெடுக்காமல், தங்கள் குடும்பத்தினரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதின் மூலம் ஆதிக்கம் கொண்ட – ஆண்களின் ஆதிக்கம் கொண்ட குடும்ப அமைப்பை உருவாக்கி நீட்டிக்கிறார்கள் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார். அந்தக் கதை இப்படித் தொடங்கி,
வீட்டைவிட்டு அவள்கிளம்புவது முடிவாகிவிட்டது. எல்லாம் பேக் செய்தாகிவிட்டது. மெத்தையை மட்டும் இன்னும் சுருட்ட வில்லை. போகும்போது சுருட்டி எடுத்துக்கொண்டால் ஆச்சு.வேறு எந்த பொருட்களும் அவளுடையதல்ல. மடிக்கணினி கூட அவனுடையது தான். மடிக்கணினி இல்லாமல் எப்படி தன் வேலைகளைச் செய்வது? அவரிடம் கேட்டால் எடுத்துக்கொள் என்று தான் சொல்லுவான். ஆனால் அவளுக்குத் தான் அப்படிப் பேசிப் பழக்கமில்லையே.
பற்பல உரையாடல்களை நடத்திவிட்டுக் கடைசியாக ஒரு உரையாடலோடு முடிகிறது. அந்த உரையாடல் வருமாறு:
என்ன ஜானு இது. பால் தீய்ந்துபோன வாசனை வர்றதுகூட தெரியாம.. என்ன? கீழே வரும்போதே எனக்குத் தீய்ந்த வாசனை வருது.
அவனே அவசரமாக கிட்சனுக்குள் நுழைந்து அடுப்பிலிருந்து குக்கரை இறக்கி அடுப்பைத் துடைத்துக் கொண்டிருந்தான். அவள் எதுவும் சொல்லாமல் சன்னலோரமாக வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஜானு.. சூடா டீ… அவன் குரல் கேட்டு அவள் திரும்பினாள் . சூடான டீ. அவள் கைகளில் இருந்த சாசர் நடுங்கியது. வெள்ளை நிற குர்தாவில் டீ துளி பட்டு .. அவள் துடைக்கவில்லை.கண்டுகொள்ளவும் இல்லை.
இன்னும் சிறிது நேரத்தில் டெம்போ வந்துடும் ஜானு.
தேங்க் யூ டா.. கைகளை முத்தமிட்டாள்.
ஐ லவ் யூ ஜீவா.. என்று முணுமுணுக்கும் அவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தனது வீட்டில் கட்டில் முதல் கொண்டு எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்ட ஒருத்தியிடம் விவாதிக்காமல் நிச்சயிக்கப்பெற்ற பெண்ணை மனைவியாக்கிக் கொள்ளத் தயாராகும் அவன் உலகத்தொழிலாளர்களுக்குச் சுரண்டலற்ற வாழ்க்கையை உறுதிசெய்யும் தத்துவமான மார்க்சியம் அறிந்தவன்; விவாதிப்பவன்; எழுதுபவன் என்ற குறிப்புகளையெல்லாம் கதை தருகிறது. அதே நேரத்தில் தான் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப்போவதை ஏற்றுக்கொள்ளும்படி அவளிடம் பேசுகிறான். நட்பு வேறு; திருமண உறவு வேறு என்பதைப் புரிய வைக்க முயல்கிறான். ஆனால் அவள் தனது வாதங்களை முன்வைத்து உரிமை கோராமல் இவனிடம் பேசிப்பயனில்லை என்று ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகிறாள். என்றாலும் அவனது பொய்ம்மைத்தன்மை மீது கோபமும் எரிச்சலும் அவளுக்கிருக்கிறது.
ஸீ ஜானு.. கல்யாணம்கிறது என்ன?. காதல், காமம் இத்துடன் தொடர்ந்துவரும் புரிதலுணர்வு கொண்ட நட்பும் தானே.. வெறும் காதலும் காமமும் மட்டுமே திருமண உறவு அல்ல. அதில் நட்பும் இருக்கணும். அந்த நட்பு இருந்தாத்தான் யாரும் யாரையும் அடக்கியாள வேண்டிய அவசியம் இருக்காதுனு நாம் எவ்வளவு பேசி இருக்கோம். அப்படியான ஒரு ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்து காட்டக் கூடாது.? An idieal couple..
அதையேதான் நானும் உன்னிடம் கேட்கிறேன். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து கொண்டால்தான் இதெல்லாம் உண்டா? அந்தச் சடங்கு.. அதாவது ஒப்பந்தம் உடன்படிக்கை இல்லாட்டி என்ன? Why not possible’? திருமணம் தேவையில்லை. இதோ பாருங்க நாங்க வாழலையா என்று வாழ்ந்து காட்டுவோம் வானு.. அவ்வளவுதான்.
திருமணம் என்னும் ஆதிக்கத்தன்மை கொண்ட அமைப்பையும் சடங்கையும் நிராகரிக்க நினைக்கும் அவளோடு சேர்ந்து வாழ முடியாத ஆணாக அவன் இருப்பதை அவள் அறிகிறாள்.
பசியைப் பற்றி பேசுவது வேறு. பசியுடன் வாழ்வது என்பது வேறு. இரண்டுமே வேறுவேறான உலகம். வட்டத்துக்குள் சதுரமும் சதுரத்திற்கு வட்டமும் வெறும் வரைபடங்கள் மட்டும் தான அவர்களுக்கு. நல்ல வேலை… போகவில்லை.
இந்த விளக்கமும் புரிதலும் ஜானுவுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலையையே அவள் எடுக்கிறாள்.
ஜீவாவின் எங்கேஜ்மெண்ட் ஆல்பம்.. அவளிடம் காட்டுவதற்குத்தான் அவன் கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனோ காட்டவில்லையா. அல்லது காட்டினால் இவள் சொல்லப்போகும் எதையாவது கேட்பதைத் தவிர்ப்பதற்காகக் காட்டாமல் வைத்துவிட்டானா தெரியல. மெதுவாக அந்த ஆல்பத்தை எடுத்துப் புரட்டினாள்.
ஜீவா திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் ஜாய் அலுக்காஸ் விளம்பரத்தில் வருகிறவள் மாதிரி ஜொலித்துக்கொண்டிருந்தாள். அவளும் ஜீவாவைப் போல சட்டம் படித்தவள் என்றும் அவளுடைய அப்பா ஜட்ஜ் என்றும் ஜீவா சொல்லியிருந்தான். அந்தப் பெண்ணுக்கு நல்ல பெரிய கண்கள். அதில் மை இட்டு அலங்காரம் செய்ததில் இன்னும் பெரிதாக தெரிந்தன. தன்னைப் போல அவள் கண்கள் சிறியதாக இல்லை அவள் செழிப்பு அவள் உடலெங்கும் சிதறிக் கிடந்தது. சில இடங்களில் அதிகமாகவே துருத்திக்கொண்டு பிதுங்கி வெளியில் வந்திருந்தது.
பணம், அழகு, அந்தஸ்து போன்றவற்றை நாடும் ஆண்களின் குணத்தோடு இருப்பது இவன் மட்டுமல்ல; இங்கே சிந்திப்பவர்களாகவும் வித்தியாசமானவர்களாகவும் காட்டிக்கொள்ளும் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்ற குறிப்பைக் கதைக்குள் வைக்கும் முகமாக அவனது நிச்சயதார்த்த ஆல்பத்தை முன்வைத்து அவளது எண்ண ஓட்டங்களை எழுதுகிறார் புதிய மாதவி,
அந்த ஆல்பம், அதிலிருக்கும் அனைவருமே அவளுக்கு அந்நியமானவர்களாகவே இருந்தார்கள். எது நிஜம்? புகைப்படமா? அவள் நேரில் சந்தித்த அவர்களா? எது நிஜம்? ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல்.. இது என்ன அலைவரிசை?
அந்த எண்ண ஓட்டங்களும் கேள்விகளும் ஜானுவின் நண்பனாக இருக்கும் அந்த ஒருவன் குறித்த கருத்தோட்டங்கள் மட்டுமல்ல. இங்கே ஆதிக்க மனோபாவத்துடனும் போலித்தனத்துடனும் கொள்கைகள் பேசித்திரியும் பலரையும் நோக்கியவை என்பது வெளிப்படையானது. புதிய மாதவியின் வட்டமும் சதுரங்களும் என்னும் இந்தக் கதையில் வெளிப்படும் தொனியும் விசாரணையும் வினாக்களும் அவரது பல எழுத்துகளிலும் வெளிப்படக்கூடியவைகள் என்பது குறிப்பிடப்படவேண்டியது. தமிழகத்தை விட்டு விலகி மும்மையில் வாழும் புதிய மாதவி தமிழின் முதன்மையான பெண்ணியக் கவிகளில் ஒருவர். அவரது புனைகதைகள் உள்ளடக்கத்தில் தொடர்ந்து விசாரணைகளை முன்வைத்துக்கொண்டே இருப்பவை. அதற்கேற்பப் புதிய வடிவச் சோதனைகளையும் செய்பவர். தொடர்ச்சியாகப் பயணங்களை மேற்கொண்டு புதியபுதிய பெண்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அவர் பெண்கள் சந்திப்பின் வெளிப்பாடாக இருக்கும் ஊடறுவின் முதன்மையான பங்கேற்பாளராகவும் இருக்கிறார். அவரது குரல் தமிழின் பெண்ணியக்குரல்களில் தனித்துவமானது என்பதற்கு இந்தக் கதையே ஒரு சான்று.
( நன்றி : உயிர்மை.காம். )