Tuesday, January 22, 2019

தனியறையும் நானும்



மும்பையிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த
வார இதழ் “தமிழ்ப் போஸ்ட் “ எனக்காக அவர்களின்
ஒன்றரை பக்கங்களை ஒதுக்கித்தந்தார்கள்.
என்ன எழுத வேண்டும் என்றெல்லாம் எதுவும்
சொல்லவில்லை. எனக்கு முழு சுதந்திரமும்
கொடுத்த ஆசிரியர் ராஜாவாய்ஸ் அவர்களுக்கு
நன்றி. அப்போது தான் ஒரு சோதனை முயற்சியாக
தனியறை என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தேன்.
தனியறை 1 , 2 , 3 என்று 26 தனியறைகள் வார வாரம்..
அதுவும் எவ்வித முன் தயாரிப்புகளும் கிடையாது.
வியாழக்கிழமை போன் வரும். வெள்ளிக்கிழமை
மாலை விளக்கு வைப்பதற்குள் தமிழ்ப் போஸ்ட்
ஆபிசிலிருந்து இன்னொரு போன்.. 
அன்றிரவு தனியறை என்னுடன் பேசும்..
தனியறை கதைகளின் பக்க அளவு
மீற முடியாத து. இன்னும் சொல்லப்போனால்
 அது எனக்குஒரு சவாலான வரையறையும் தான்.
 நீட்டி எழுதுவது எளிது.
எதையும் சுண்டக்காய்ச்சி கொடுப்பது..கடினம்.
ஆனாலும் பக்க அளவு ஏற்கனவே மனசில்
 பதிந்துவிட்ட தாலோஎன்னவோ..
தனியறை தன்னை அந்த எல்லைகளுக்குள்
நிறுத்திக்கொண்ட து.
தனியறையின் சில கதைகள் 
சில பிரச்சனைகளையும் சந்தித்தன.
 தங்களின் கதையைத்தான் நான் எழுதியிருக்கிறேன்
என்று என்னை மிகவும் கடுமையாக
 போன் போட்டு திட்டுவார்கள்.
அதையும் ரசித்துக்கொண்டேன். 
காரணம் அது உண்மையல்ல என்பதால் தான். 
ஒரே கதையை ஐந்தாறுபேர் என்வீட்டு கதை
என்றால் அது எப்படி? 
என்பதை மெல்ல மெல்ல அவர்களும்
 புரிந்து கொண்டார்கள் .. 
திடீரென 26 கதைகள் வந்தவுடன்
நிறுத்துக்கொண்டேன். எதுவும் தானே தொய்வடைவதற்குள்
அய்யோ ஏன் நிறுத்திவிட்டார்கள்? என்று வாசகர் 
நினைக்கும் போதே தொடரை 
நிறுத்துவது நல்லது
என்பது என் பத்திரிகை அனுபவம்.

தனியறை குறித்து

எழுதுவதற்கு ஒரு புதினம் அளவுக்கு அனுபவங்கள் 
இருக்கின்றன. தனியறை ஏக்கப்பெருமூச்சுகளில்
எம் இளமையும் காதலும் காம மும் வாழ்வின் 
அவிழ்க்க முடியாத தருணங்களும் கலந்திருக்கின்றன.
தனியறை எம் மக்களின் கதை. 
எம் தாய் தந்தையரின்கதை. 
புலம் பெயர் வாழ்வில் எம் தாராவியின் ஏக்கப் பெருமூச்சு.
இப்போதும் தாராவி குடிசை மேம்பாட்டு வாரியம்
புறாக்கூண்டு போல 250 சதுரஅடி வீடு
 கட்டிக்கொடுப்பதாக கூறுகிறார்களே…
அதன் அரசியல் பின்னணி..
தனியறை… வெறும் அறையல்ல.
தனியறை .. ஒரு வரலாறு.
தனியறை .. ஓர் அரசியல்
.
தனியறை.. புத்தகமாக மருதா வெளியீட்டில்
வந்த போது..
“தனியறை போராட்ட த்தில்
உலக வரைபட த்தில்
புள்ளிகளாக சிதறிக்கிடக்கும்
என் உடன்பிறப்புகளுக்கு”
என்று எழுதி சமர்ப்பணம் செய்திருந்தேன்
.
தனியறை என்னுரையிலிருந்து …
பிரபஞ்சத்திற்கு சூரியமண்டலம் தனியறை
சூரியமண்டலத்திற்கு பூமிஉருண்டை தனியறை
பூமி உருண்டைக்குப் பனித்துளி கூட தனியறை
ஆகாயத்திற்கு மேகக்கூட்டம் தனியறை
மேகங்களுக்கு மலைமுகடு தனியறை
மலைக்கெல்லாம் மழைத்துளியே தனியறை
மழைத்துளிக்குக் கடலடியில் தனியறை
கடலுக்கு அலையெல்லாம் தனியறை
அலைக்கு மண்மீது தனியறை
மண்ணுக்கு உயிரெல்லாம் தனியறை
உயிருக்குத் தாயின் கருவறையில் தனியறை.
மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழும் நாட்கள்
அவரவர்களுக்கான தனியறைக் கதவுகளைத்
தேடித் தேடி தொடர்கிறது.
தனியறை தேடும் போராட்டத்தில்
தனித்தனியாகப் பிரிந்துபோன
அண்ணன் தம்பி, அக்கா தங்கை, கணவன் மனைவி,
பெற்றேர் பிள்ளைகள்.
உடைந்துப்போன கண்ணாடித் துண்டுகளாய்
தனியறைக் கதவுகளின் முன்னால்
சிதறிப்போன உறவுகள்.
பேரரசுகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள்
வரலாறு நெடுகிலும் உண்டு.
காதல், பாசம், அதிகாரம், ஆளுமை
இவற்றை மட்டுமல்ல
மனித நாகரிகத்தில்
பண்பாட்டு மாற்றங்களையும் சிதைவுகளையும்
தனியறைக் கதவுகள்தான் தீர்மானிக்கின்றன.
சிந்திக்க சிந்திக்க
கண்களை அகல விரித்து
ஆகாயத்தைப் பார்த்து பிரமித்து நிற்கும்
சிறுமியாக நான்.
என் முன்
தனியறை ஒரு பிரபஞ்சமாக விரிகிறது.,
இப்பிரபஞ்சத்தில் நான் எழுதியது
என்னை நனைத்த
இந்த மா நகர மழைத்துளியின்
சிறுதுளியைத்தான்.
(முகனூல் வாசிப்போம் குழுவில் தனியறை குறித்து
இன்று விமர்சனம் எழுதி இருக்கிறார் தோழி மஹா.
தனியறை மீண்டும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறது.
வாசிப்போம் குழுவினருக்கும் நன்றி)

Saturday, January 19, 2019

BAAZAAR politics

பஜார்…
Bazaar movie critics review and rating

ஸ்டாக் மார்க்கெட்/ஷேர் மார்க்கெட்டின்
பணம் அதிகாரத்துடனும் அரசியலுடனும் 
சேர்ந்து என்னவெல்லாம் நட த்திக்கொண்டு
இருக்கிறது என்பதுதான் கதை.
இந்திய வணிகத்தின் தலை நகரமான
மும்பை தான் கதைக்கான களம்.
சந்தை வணிகத்தின் கதா நாயகனும்
வில்லனும் இரண்டுமே லாபத்தை மட்டுமே
நோக்கமாக க் கொண்டிருக்கும் குஜராத்தி
மார்வாடி. பணம் சார்ந்த வாழ்வியல் அறங்கள்
ஒரு குஜராத்தியைப் பொறுத்தவரை
லாபம் ஈட்டுவது மட்டும் தான்.
இதை ரொம்பவும் வெளிப்படையாக க் கதையின்
உரையாடல்கள் வழி சொல்லிக்கொண்டே இருக்கிறான்
சகுன் கோத்தாரி (சையப் அலிகான்) 
டுயுட் பாடல்கள், மயிர்க்கூச்செறியும் சண்டைக்
காட்சிகள் என்று எடுக்கப்படும் மசாலா
படங்களின் வரிசையிலிருந்து மாறுபட்ட
கதையை அதே விறுவிறுப்புடன் கதையாக்கி
இருப்பதற்கு இயக்குனரைப் பாரட்டலாம்.
அகமதாபாத்திலிருந்து ஷேர்மார்க்கெட் கனவுகளுடன்
வரும் ரிஷ்வான் அகமது பணம் சம்பாதிக்க
ஷேர்மார்க்கெட் ஒரு சுரங்கம் என்று நம்பும்
மத்திய தர வர்க்கத்தின் குறியீடு.
வித்தியாசமான கதைப்பாத்திரத்தை ஏற்று
நடிக்கும் சையப் அலிகானின் நடிப்பு
கதைக்கு வலு சேர்க்கிறது.
மும்பை ஷேர்மார்க்கெட்.. எத்தனை
நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளை
தின்று துப்பி இருக்கிறது..( நான் உட்பட..!)
ஒரு நிறுவனத்தின் 
ஷேரின் மதிப்பு குறைவதும் ஏறுவதும்
அந்த நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி
இலாபம் சேர்ந்த தாக எவ்வளவு வெள்ளந்தித்
தனமாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் இதைப் பற்றி வெளியாகும்
செய்திகள் ஊடகச்செய்திகளுக்குப் பின்
இருக்கும் இன்னொரு அரசியல்…
என்ன தலை சுற்றுகிறதா…
எனக்கும் தான்..
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த
ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்ச்-பங்கு சந்தை
அலுவலகத்தின் அருகில் தான் என்
ஆபிசும். எப்போதும் டென்சனாக இந்த
ஆபிசிலிருந்து வெளியில் வரும் முகங்கள்
தலை தெறிக்கிற வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும்
கால்கள்.. இதற்குப் பின்னால் இவ்வளவு
கதைகளும் அரசியலும்…

Tuesday, January 15, 2019

BRAND IMAGE

Image result for brand sale banner
காந்தி BRAND
காமராஜ் BRAND
கலைஞர் BRAND
காலச்சுவடு BRAND
ஒவ்வொரு BRAND க்கும் இருக்கும்
விலை அதன் தயாரிப்பை மட்டும் பொறுத்தல்ல.
அதன் BRAND IMAGE பொறுத்தச் சமாச்சாரம்.
உங்களுக்குத் தெரியுமா..
ரிலையன்ஸ், பாட்டா, வுட்லண்ட்ஸ் இத்தியாதி
பிராண்ட் பொருட்களின் தயாரிப்பு வேலைகள்
குறுகிய தாராவி சந்துகளில் நடக்கின்றன
என்ற ரகசியம்.. 
ஆனால் இங்கிருந்தே அது விற்பனைக்குப்
போனால் நீங்கள் வாங்க மாட்டீர்கள்.
அப்படியே வாங்கினாலும்
அடிமாட்டு விலைக்கு வாங்குவீர்கள்.
உழைத்தவனைப் பற்றியோ
அவன் உழைப்புக்கான ஊதியம் பற்றியோ
உங்களுக்கும் எனக்கும் கவலை இல்லை.
அதே பொருளைத்தான் பிராண்ட் வைத்திருப்பவன்
வாங்குகிறான். அல்லது ஆர்டர் கொடுத்து
செய்து கொள்கிறான். கோட்டு சூட்டு போட்ட
ஆண்களும் பெண்களும் உங்களை வரவேற்க
நீங்கள் அதையே அவர்களிடன் வாங்கிச்
செல்கின்றீர்கள். அந்தப் பிராண்ட்..
உங்கள் அந்தஸ்தின் அடையாளம்..
நீங்கள் பெரிய மனிதனாகிவிடுகின்றீர்கள்.
இந்தப் பிராண்ட் ஒரு பிசினஸ் வித்தையாக
இருக்கும் வரை அது முதலாளித்துவ உத்தி.
கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.
இதே பிராண்ட் அரசியலாகிறது.
இதே பிராண்ட் இலக்கியமாகிறது.

இங்கே காந்தி நேரு எம்ஜியார் காமராஜ்
கலைஞர் ..இப்படியாக பலர் கூட
இன்றைக்கு பிராண்ட் ..இமேஜ்.. தான்.
காந்தி என்ற பெயரை நேருவின் மகளுக்கு
தானமாக்கியது தான் நம் இந்திய
தேசத்தின் ஆகச்சிறந்த பிராண்ட் அரசியல்.
இப்போ பாருங்கள்…
காங்கிரசு தலைவர் ராகுல் அவர்களை
வெறும் ராகுல் என்று சொல்லிப்பாருங்கள்.
காற்று மட்டும் தான் வரும்.

ராகுல் காந்தி என்று சொல்லும்போது
ஒரு பிராண்ட் இமேஜ் , கம்பீரம்
வந்துவிடுகிறாதா இல்லையா?
ராகுலுக்கும் காந்தி என்ற ப்ராண்ட்
அடையாளத்திற்கும் எதாவது
தொடர்பு உண்டா..
இதைப் பற்றி எல்லாம் பொதுப்புத்தி
யோசிப்பதில்லை.
இங்கே ராகுலைச் சொல்லுவது கூட
இந்த பிராண்ட் ஏமாற்றுத்தனம்
புரிவதற்காக மட்டும் தான்.
பாவம் ராகுல்..
அவருக்கு இன்னும் இதெல்லாம் புரிகிற 
வயது வரவில்லை என்பதே என் எண்ணம்.
இந்தப் பிராண்ட் ப்ஃராட்டுத்தனம்..
அரசியலில் மட்டுமல்ல
சினிமாவிலும் உண்டு
அட.. இலக்கியத்திலும் உண்டுங்கே..
brand identity என்பதை BRAND IMAGE
ஆக மாற்றும் போது சொத்தை கூட
வித்தைகள் புரிகிறது.
விதைகள் தான் விலகி நிற்கின்றன.
… கொசுறாக இன்னொரு செய்தியும்..
எங்கள் தொழுவத்தில் இப்போதெல்லாம்
மாடுகள் இல்லை.
எங்கள் மகேந்திர மலை அடிவாரத்தில்
உங்கள் இராட்சத காற்றாடிகள்..
நாலுவழிச் சாலைகளைக் கடப்பதற்காக
காத்திருக்கிறேன்.
எங்க்கிருந்தாலும் உழைக்கும்
மாடுகள் வாழ்க, அதன் கொம்புகளைச் சீவி
விடுங்கள்.
மாடுகளுக்கும் கூட கொம்புகள் தான்
அடையாளம். பிராண்ட் இமேஜ். 
மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்..
(மாடுகளுக்குத்தான் மக்கா)

Sunday, January 13, 2019

THE ACCIDENTAL PRIME MINISTER


Image result for accidental prime minister review

சமகால அரசியலை முன்வைத்து
வெளிவந்த திரைப்படங்களில்
இப்படம் மிகவும் முக்கியமானது.
"Sach likhna itihaas ke liye zaroori hota hai”
"உண்மையை எழத வேண்டியது 
வரலாற்றின் கட்டாயம்"
என்று சொல்லும் பிரதமரின் மீடியா
 அட்வைசராக 2004 முதல் 2008
வரை கூடவே இருந்த சஞ்சய பாரு வின் 
அனுபவத்தில்எழுதப்பட்ட புத்தகம்.
திரைப்படமாகி இருக்கிறது.
மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமரானது
யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு திருப்பம்,
ஒரு விபத்து.. 
ஒரு தனிமனிதனின் அரசியல்
போராட்டம், மகாபாரத யுத்தம்..
ஆட்சி அதிகாரத்தின் அசல் முகம்..
ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும்
மறைந்திருக்கும் உள்குத்து அரசியல்..
மன்மோகன் சிங்க் என்றஅதிர்ந்து பேசாத
ஒரு தலைவர் , ஊடகங்களால் மிகவும்
அதிகமாக கேலி கிண்டலுக்கு உள்ளான
பிரதமர்… தன் மென்மையான குரலில்
உறுதியாக சொல்கிறார்…
ஊடகங்கள் காட்டிய பிரதமராக 
நான் மக்கள் மனதில் இடம் பிடிக்கமாட்டேன்.
என்று! 
அணு ஆயுத ஒப்பந்தம் அத்துடன் 2ஜி,
நீராடிய டேப்.. ஊழல்.. இப்படியாக 
பிரதமரைச் சுற்றி ஒரு சதிவலை..
குற்றங்கள், ஊழல், தோல்வி, இயலாமை
இத்தியாதிக்கெல்லாம் பொறுப்பேற்க
வேண்டியவராக மன்மோகன் சிங்..
காங்கிரசு கட்சிக்கு ஒரு பலிகடாவாக
பிரதமர் நாற்காலியில்…

மன்மோகன்சிங்க் பாத்திரத்தில் நடித்திருக்கும்
அனுபம் கெர், மற்றும் சோனியா காந்தி பாத்திரத்தில்
நடித்திருக்கும் (German-born actress Suzanne Bernert.) 
சுசைனி பெர்னர்ட் இருவரின்
உடல்மொழி இத்திரைப்பட த்தின் காட்சிகளுக்கு
 வலு சேர்த்திருக்கிறது.
சமகால அரசியல் என்பதாலும் 
சம்பவங்கள் பார்ப்பவர்களுக்கு
மிகவும் நெருக்கமானவை, 
நினைவிலிருப்பவை என்பதாலும்
தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது.
காங்கிரசு கட்சிக்கும் காங்கிரசு அரசியலுக்கும்
இத்திரைப்படம் எதிர்மறையான அலைகளை
 எழுப்பும் என்பதும் அதை இன்றைய பிஜேபி அரசு
 மறைமுகமாக ஆதரிக்கும் என்பதும்
 இத்திரைப்பட த்தைப் பார்த்துவிட்டு
 வெளியில் வரும் போது
இதன் இன்னொரு அரசியலாக
விரிகிறது.
ஒரு புத்தகம் … அதன் சம்பவங்கள்.. அதில் வரும்
நபர்கள்.. அனைத்தும் உண்மை.
ஆனால் உண்மைகளுக்கும் இன்னொரு முகம் உண்டு.
உண்மைகளுக்கும் அரசியலுண்டு..
அந்த இரண்டும் இந்த திரைப்பட த்திற்கும் உண்டு…
இதை எழுதும் போது…
இப்படியான ஒரு திரைப்பட த்தை/ புத்தகத்தை
 தமிழக அரசியலை வைத்து எடுக்க முடியுமா?
எழுத முடியுமா..

ஆக்சிடெண்ட்.. ஆகிவிடும்.

Friday, January 11, 2019

அடைமொழிகள்


அடைமொழிகளை நான் வெறுக்கிறேன்.
இதற்கு யாரைக் குற்றம் சொல்வது?
அடைமொழிகளை அள்ளி வீசும் அரசியல்
அடைமொழிகளில் வாழ நினைக்கும் முகவரிகள்
அடைமொழிகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும்
கவிமன ங்கள்..
போதாமையை எப்போதும் அடைமொழிகளால்
நிரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம்
இதை எல்லாம் மவுனமாக ஏற்றுக்கொண்டிருக்கும்
நீங்கள்.. உங்களில் ஒருத்தியாக இருக்கும்  நான்
.. எல்லோரும் தான் காரணம்.
இது சகிப்புத்தன்மை அல்ல.
இது கையறு நிலை..
இது ஒருவகையான பிழைப்பு வாதம்..
இது ஒருவகையான பித்தலாட்டம்.
இது ஒரு வகையான மொழிச்சிதைவு..

என் கஞ்சிக்கலயத்தில் உப்பு போல
அளவாக இருந்த அடைமொழியை
அவரவர் தங்கள் சுயலாபங்களுக்காக
விற்பனை செய்தார்கள்.
சந்தையில் விற்பனையாகும் சரக்கு மாதிரி
அடைமொழி விற்பனை செய்யப்பட்ட து.
தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும்
 அதற்கான வரலாற்றையும் வீரியத்தையும்
இழந்துப் போனது .. இதைக் கண்டு எந்த ஒரு
தமிழ்த் தேசியமும் கொதிக்கவில்லை!
என் கஞ்சியில் உப்பை அள்ளி அள்ளிக்
கொட்டுகிறார்கள். என் பசி தீர்க்கும்
பழையச்சோறு.. அவர்கள் கொட்டிய
உப்பில் கரைந்து என் பசியாற்ற முடியாமல்
என் நாக்கில் பட்டவுடன்த்தூஎன்று
துப்ப வைக்கிறது.
த்தூ.. த்தூ.. “ என்று காறி காறித் துப்புகிறேன்.
பசியில் துடிக்கிறேன்.
என் கஞ்சியில் இன்னும் இன்னும் தண்ணீரை
ஊற்றி ஊற்றி அவர்கள் கொட்டும் உப்பின்
வீரியத்தைக் குறைத்துவிடலாம் என்று
பெரும் முயற்சி செய்கிறேன்.
என்  நிலத்தடி நீர்இல்லை.
அதையும் விற்றவர்கள் தான்
என் மொழியை  விஷமாக்கியவர்கள்.
ஒரு வாய்க்கஞ்சி..
என் உழைப்பு..
என் மொழி..
என் ஆதித்தாய் தன் கருவறையில்
சுமந்து காப்பாற்றிய என் தாலாட்டுமொழி..
என் பனிக்குட வாசனையின் மொழி..
அடைமொழிகளால் அசிங்கப்பட்டு
தன் அர்த்தங்களை இழந்து என் மொழி
சிதைக்கப்படுகிறது..
இந்த அரசியலை .. மொழியின் மீது
ஏற்பட்ட பண்பாட்டு தாக்குதலை
மொழியின் மீது ஏறி அமரும் ஆதிக்கத்திமிரை
என் சொற்களை கொச்சைப்படுத்தும்
அரசியலை
இதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும்..
இனியும் பொறுப்பதற்கில்லை.. 
கொலை வாளினை எட டா



Tuesday, January 8, 2019

இலக்கியத்தில் தாதாகிரித்தனம்



இலக்கியத்தில் தாதாகிரித்தனம்...
குண்டர்கள் தீர்மானிக்கிறார்கள்
இலக்கிய விழாக்களின் தலைமையை
91 வயதான மூதாட்டி.. Nayantara Sahgal
அப்பெண் மராத்திய இலக்கிய விழாவுக்கு
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
ஆனால் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும்
அவர் மராத்தி இலக்கிய நிகழ்வுக்கு எப்படி
அழைக்கப்படலாம் என்று இங்கிருக்கும்
லோக்கல் அரசியல் பயமுறுத்தியதால்
காரணம் எதுவும் சொல்லாமல்
அப்பெண்ணை விரும்பி அழைத்தவர்கள்
இப்போது “வந்துவிடாதே” என்று கடிதம்
அனுப்பிவிட்டார்கள்..
யார் இந்தப் பெண்?
இவர் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்
என்றாலும் அரசியல் பின்புலத்தை மட்டும்
வைத்துக்கொண்டு எழுத வந்தவர் அல்ல.
நேருவின் உடன்பிறந்த சகோதரி விஜயலட்சுமி
பண்டிட்டின் மகள் தான் இவர். ஆனால் இந்திரா
காந்தியின் ஒற்றை அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்திய
அக்குடும்பத்தைச் சார்ந்தவர்.
அதனால் தான் இந்திராகாந்தி
இத்தாலிக்கு தூதுவராக பதவி ஏற்க இருந்தவரை
தான் பிரதமரானவுடன் தன் அத்தைமகளின்
பதவியை ரத்து செய்தார்..
1986 ல் , Rich Like Us – எங்களைப் போன்ற செல்வந்தர்கள்
 என்ற நாவலுக்காக
சாகித்திய அகதெமி விருது பெற்றவர். 
ஆனால் 2015 ல் மதவாதிகளால்
படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர், 
கோவிந்த் பன்சாரே ஆகியோரின்
படுகொலையை எதிர்க்கும் வகையில் தனக்கு
 வழங்கப்பட்ட சாகித்திய அகதெமி
விருதை திருப்பிக் கொடுத்தவர்… “
உறவுகள்” என்ற தலைப்பில் அவர்
எழுதிய எழுத்துகள் பெண்ணிய தளத்திலும் சமூக தளத்திலும்
அதிர்வலைகளை உருவாக்கியவை.
அவராகவே எவரிடமும் தன்னை அழைக்கச்சொல்லவில்லை.
ஆளுமைமிக்கவராகவும் கம்பீரமாகவும் தன் எழுத்துகளில்
வாழ்ந்துக் கொண்டிருப்பவரை அழைத்தவர்கள், அதுவும்
பிஜேபி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களுடன்
கலந்து கொள்ள இருந்த துவக்கவிழா நிகழ்வு இது.
சொல்லப்பட்ட ஒரே காரணம்… அவர் ஆங்கிலத்தில்
எழுதுகிறார் என்பது மட்டும் தான்!
அவர் வரவை எதிர்த்தவர்களின் வாரிசுகள்
ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள்,
 படித்துக்கொண்டும் இருப்பவர்கள்.

இலக்கியத்தில் அரசியல் இருக்கலாம்.
இருக்க வேண்டும்.
ஆனால் அரசியல் கட்சிகளின் அதிகாரம்
இருக்க கூடாது.
இலக்கிய நிகழ்வுக்கு யாரை அழைப்பது
யாரை அழைக்க கூடாது என்பதை
 தீர்மானிக்க வேண்டியது இலக்கியவாதிகள்
தானே தவிர அரசியல் கட்சிகள் அல்ல.

Saturday, January 5, 2019

ஆண் பெண் உறவு நிலை

ஆண் பெண் உறவுகளில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை
எப்படி எடுத்துக்கொள்வது?
திருமணம் என்பது நிறுவனம் தான்.
அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் அந்த நிறுவனத்தின் நோக்கம்
துவக்கம் எப்படி இருந்தாலும் அந்த
நிறுவனத்தின் மாற்றம் என்பது
ஆண் பெண் குடும்ப நிறுவனத்தில்
சம பங்காளர்கள் .. இந்தப் பங்கீடு என்பது
வணிகவியலில் சொல்லப்படும் பங்கீடு மட்டுமல்ல,
சமூகவியலின் பொருத்தப்பாடுகளுடன்
கையாள வேண்டிய பங்கீடு.
நம் அம்மாக்களுக்கு இந்தப் பங்கீட்டு முறை
குறித்த புரிதல் இல்லை என்று சொல்லமாட்டேன்.
அவர்கள் இதைப் பேசவில்லையே தவிர
சத்தமில்லாமல் தங்கள் உரிமைகளை
மிகச்சரியாக பயன்படுத்தும் சூட்சம ம்
அறிந்தவர்களாக இருந்தார்கள்.
அம்மாக்களின் பெண்களாகிய நாங்கள்..
அம்மாக்கள் வாசிக்காத தை எல்லாம்
வாசித்த தலையில் கொம்பு முளைத்த
பெண்களாக … எங்களுக்கு தன்னம்பிக்கை
என்பது தானே எங்களுடன் வளர்ந்த து.
எங்களுக்கு முடிவு எடுக்கும் உரிமையை
நாங்களே வைத்துக்கொண்டோம்.
எங்களை இச்சமூகம் அடங்காப்பிடாரி,
திமிரு பிடித்தவள் என்றெல்லாம் விமர்சிக்கும் போது
அதில் மறைந்திருக்கும் பொருளின் கனம் எங்களை
இன்னும் வலிமையுடன் பயணிக்க வைத்திருக்கிறது.
எங்கள் தலைமுறை பெண்களுக்கு இருந்த
வாசிப்பு, எங்கள் தலைமுறை பெண்கள்
 ஏற்றுக்கொண்ட கருத்தியல்,
 எங்கள் தலைமுறை ஏற்றுக்கொண்ட 
தலைமைத்துவங்கள்…
இது எதுவுமே..
இன்றைய தலைமுறை பெண்களுக்கு
பூஜ்யமாகிவிட்டதா.. ?…
இன்றைய ஆண் பெண் உறவில்
அது குடும்ப நிறுவன உறவாக இருந்தாலும் சரி,
அந்த நிறுவனத்தை ஒதுக்கிய உறவாக
இருந்தாலும் சரி…
எத்தனை ஊசலாட்டங்கள்!
தடுமாற்றங்கள்!
எம் தலைமுறையை விட அதிகம் படித்தவர்கள்,
அதிகமாக சம்பாதிக்கும் இன்றைய பெண்களுக்கு
எங்க்கேயோ.. ஏதோ.. மிஸ்ஸிங்க்.
அதைக் கொடுக்க மறந்த விட்டோமா?
வன்முறைகள்.. என் பது கை நீட்டி அடிப்பது
மட்டுமல்ல…
ஆண் தொடர்ந்து ஒரு பெண்ணைக்
 குற்றவாளி ஆக்குவதும்
பெண் தொடர்ந்து ஆணை மட்டுமே 
குற்றவாளி ஆக்குவதும்
ஒரே ஆண் , ஒரே பெண் என்று ஒரே ஒரு 
குழந்தையைப் பெற்ற தலைமுறை
 தங்கள் உணர்வுக்குமிழிக்குள் சிக்கிப்
புதையுண்டு போவதும்…
பெற்றோரின் இந்த உணர்வு நிலை..
பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிப்பதும்…
அதிகரித்து இருப்பதை அக்கறையுடன் பார்க்கிறேன்.
இன்றைய கணினி கைபேசி வசதிகள் ஆண் பெண்
உறவு நிலையைக் காத்திரமாக வளர்ப்பதற்கு மாறாக
இருக்கின்றன. பெற்றோரின் தலையீடு என்பது
சின்ன சின்ன விசயங்களிலும் அதிகரிக்க இந்த
கைபேசியும் ஒரு காரணமாக அமைந்துவிட்டதா?
என்பதை பெற்றோர்களும் யோசிக்க வேண்டும்.

18 வயது என்பது ஓட்டுப்போடும் வயது மட்டுமல்ல,
சிறகு முளைத்தப் பறவைகள் பறந்து செல்ல வேண்டிய
அவர்களுக்கான பயணத்தின் தகுதியும் தான்.
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ..
அவர்கள் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தை
தீர்மானிக்கட்டும். வானத்தில் பறப்பதும்
கூடுகள் கட்டுவதும் அவர்கள் விருப்பம்..
அவர்களே அவர்களுக்கான திசைகளைத் தீர்மானிக்கட்டும்.
நாம் தூர இருந்து பார்த்து ரசிப்போம்.
நமக்கும் நமக்கான வாழ்க்கை மிச்சமிருக்கிறது.

எம் தலைமுறை இக்கருத்தை இன்னும் ஆழமாகவும்
தீவிரமாகவும் முன்வைக்கும் தருணம் இது..
எம் தலைமுறையின் குரலாக…

Friday, January 4, 2019

ஸ்டாலினா கனிமொழியா

Image result for உதய நிதி ஸ்டாலின் திமுக
உடன்பிறப்புகளுக்கு இது சோதனைக்காலம்!
திருவாரூர் தொகுதியில் எப்படியும் திமுக
வெற்றி பெற்றே ஆக வேண்டும்!
திமுக வின் இமெஜ் இந்த  இடைத்தேர்தலின்
முடிவில் இருக்கிறது என்பது இடைத்தேர்தல்
வரலாற்றில் இன்னொரு திருப்புமுனை..
குடும்பத்தில் சிலரின் பெயர்கள் அடிபட்டன.
இதோ… அதிகாரப்பூர்வமான வேட்பாளர்
அறிவிக்கப்பட்டுவிட்டார். தேர்வு செய்யப்பட்டிருக்கும்
வேட்பாளர் அறிவிப்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு
நிம்மதியை தற்காலிகமாகத் தந்திருக்கும்.
(எனக்கும்  தான்!)
உதய நிதி ஸ்டாலின், திமுக வின் இளைய கலைஞர்
என்றெல்லாம் அறிவிக்கப்பட்ட தும் '
மேடையில் இடம் கொடுக்கப்பட்ட தும் 
ஏன் அவர் கையாலேயே
விருதுகள் கூட வழங்கப்பட்ட தும்.. 
இதெல்லாம்..
உதய நிதி என்ற தனி நபர் செய்த தல்ல!
தொண்டர்களிடையே இக்காட்சிகள்
 மன உளைச்சலையும்
முணுமுணுப்பையும் ஏற்படுத்தியதையும்
 தலைமை அறியும்.
இந்தக் காட்சிகள் அரங்கேறி கொண்டிருந்தப் போது
இதை ஏன் வெளிப்படையாக உங்கள்
 பொதுக்குழு கூட்ட த்தில்
பேசுவதில்லை என்பதற்கு 
அவர்களிடம் பதில் இல்லை.
பொதுவாக பொதுப்புத்தியில் 
அதிமுக கட்சியினர் அனைவரும்
“அம்மாவின் அடிமைகள்” என்ற பிம்பம் மிக எளிதாக
உருவாக்கப்பட்டுவிட்ட து. 
அவர்களும் அம்மா போன
கார்த்தட த்தை காத்திருந்துக் கும்பிட்டவர்கள் தான்.
அவர்களை அடிமைகள் என்று சொன்னவர்கள்
இதை எல்லாம் வெளியில் புலம்புகிறார்களே தவிர
ஏன்  தங்கள் கட்சியில் வெளிப்படுத்துவதில்லை!
கொத்தடிமைகளாக வாய்மூடி இருப்பது ஏன்?

உதய நிதி.. திருவாரூர் தொகுதியில் தீயா
புகுந்து தேர்தல் வேலைச் செய்யப்போகிறார்.
தாத்தாவின் மறைவில் ஏற்பட்ட இடைத்தேர்தலைப்
பேரன் தன் சிம்மாசனத்திற்கான துருப்புச் சீட்டாக
மாற்றும் திட்டங்கள் உண்டு.
திரு ஸ்டாலின் அவர்களுக்கும் திருவாரூர் தேர்தல்
வாழ்வா சாவா தான். எப்படியும் திமுக வெற்றி பெறும்
என்ற நம்பிக்கை இருக்கிறது என்றாலும்…
கவனிக்க வேண்டிய சில புள்ளிகள்…
பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் திமுக என்ற
மாபெரும் அரசியல் கட்சியின் தலைமைப் பதவிக்கு
வந்திருக்கும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு பிரச்சனையே
கட்சியோ எதிர்க்கட்சியோ அல்ல. அல்லவே அல்ல.
அவரைச் சுற்றி இருக்கும் அவர் குடும்பமும் கிட்சன்
கேபினட்டும் மட்டும் தான்!
இதை அவர் கட்டுக்குள் கொண்டுவரத் தவறினால்..
அவரிடமிருக்கும் கட்சியின் தலைமை தானாகவே
திருமிகு.கனிமொழி கரங்களுக்குப் போய்விடும்.
கனிமொழியின் புதல்வர் அரசியலுக்கு வர
இன்னும் சில காலம் இருக்கிறது என்பதால்
இப்போதைக்குப் பிரச்சனை ஏற்படாது.

சுடலைஆண்டவா..தொண்டர்களைக் காப்பாற்று.

Tuesday, January 1, 2019

கொற்றவை விழித்துக்கொண்டாள்



Image may contain: 1 person


ஓம் ஓம் ஓம் தீம் தரிகட தீம் தரிகட
ஓம் ஓம் ஓம் ..
கொற்றவை விழித்துக்கொண்டாள்
இருள் சூழ்ந்தப் பொழுது..
கனமான தருணங்கள்..
கண்ணீர் விட முடியாத பெருமூச்சில்
காலச்சுமை ..
உன் தோள்களில் சரிந்து பிறவியின்
கடனைத் தீர்க்க துடித்த உயிரின் வலி..
கொற்றவை அழைத்தாள் என்னை. 
கண்களில் கண்ணீரைத் துடைக்கவில்லை
அவள்..
என்னை அழவிட்டாள்.
உப்புக்கரித்த கண்ணீரின் துளியில்
சமுத்திரம் பொங்கியது..
அலைகள் மலைகளை விழுங்கின.
என்னவாயிற்று என் சக்தியின் மகளுக்கு?
ஏன் கலங்குகிறாய் என் கொற்றவையே..
பாலை நிலத்தில் விடப்பட்டவள் நீ
கானல் நீருக்கு கலங்காத ஈரமல்லவா நீ
பாலைவனத்திலும் பசுஞ்சோலைகளை
பிரசவித்த உன் பனிக்குட த்தின் கருவறை..
இன்னும் மிச்சமிருக்கிறது..
பாலைவனத்தின் இரவுகள்..காத்திருக்கின்றன
மணல்வெளி எங்கும் புதைந்திருக்கிறது
இன்னும் எழுதாத உன் கவிதையின் மொழி..
முடியவில்லை.. 
இதுவரை நடந்த்தெல்லாம்
இனிமேல் நடக்கப்போவதற்கான 
ஒத்திகை மட்டும் தான்.
முடிந்துவிடவில்லை உன் ஆட்டம்
பஞ்சரப்பண் இசைக்கிறது.
நட த்து.. நடத்திக்காட்டு..
கொற்றவையைச் சீண்டியவனை
குல நாசம் செய்ய நினைத்தவனை..
ஏழுகடல்தாண்டி ஏழு கண்டம் தாண்டி
மூவுலகும் தாண்டி..முடித்திடுவேன்..
ஓம் ஓம் ஓம்.. தீம் தரிகட தீம் தரிகட..
ஓம் ஓம் ஓம்.. தீம் தரிகட தீம்தரிகட..
மாரம்பு அணிந்தவளை..
மல்லிகையின் மணம் மயக்குவதில்லை.
செங்கலும் சுவர்களும் கட்டி எழுப்பிய
உன் வீடுகளைத் துறக்கிறேன்.
ஆடை அணிகலன் ..துறந்தவள் நான்.
என்னை மயக்குவது எளிதல்ல,
கொற்றவையின் முகம் ..
பிரதியங்கதேவியின் விசுவரூபம்..
ஓம் ஓம் ஓம் தீம்தரிகட தீம்தரிகட..
கொற்றவை.. விழித்துக்கொண்டாள்..
உழிஞ மரத்தடியில் 
தூங்கிக்கொண்டிருந்த பெண்புலி..
தன் வேட்டைக்காக 
உன் எல்லைகளைத் தாண்டி 
எழுந்து வருகிறது.
நிலம் நடுங்கும் ஓசை..
ஓம் ஒம் ஒம்..