தமிழ் வழிக் கல்வி குறித்து தங்கர்பச்சன் பதட்டமடைந்திருக்கும்
செய்தி மகிழ்ச்சிக்குரியது.
பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் அவர் இவ்வாறு சொல்லி இருக்கிறார்.
செய்தி மகிழ்ச்சிக்குரியது.
பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் அவர் இவ்வாறு சொல்லி இருக்கிறார்.
"வெளிநாடு சென்றிருந்த நான் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். கடலூர் மாவட்டப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற செய்தியைப் படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. புகைப்படத்தில் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளி என்பதை பாத்தபோது மேலும் அதிர்ந்தேன். காரணம் அது நான் படித்த பள்ளி. அந்தப் பள்ளியின் அரசமர நிழலில் 'அ' என்ற எழுத்தை எழுதி எனது கல்வியைத் தொடங்கினேன். ஆலமர இலைகளைத் தைத்து அதில் மதிய உணவுடன் கல்வியையும் சேர்த்து உண்டு வளர்ந்தவன் நான். அந்த சாதாரணப் பள்ளியில் பயின்று தான் நான் ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளேன். எனது முதல் படமான 'அழகி', சமூகத்தில் முன்னேறியுள்ள பலர் தாங்கள் படித்த பள்ளிகள் குறித்த நினைவுகளையும் அவற்றை தரமுயர்த்த தங்களாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்த 'பள்ளிக்கூடம்' என்ற படத்தை இயக்க எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பள்ளிதான். இன்றுள்ள சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் இதுபோன்ற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் தான். மொத்தமே 3,000 பேர் இருக்கும் பத்திரக்கோட்டையில், ஒருவர் கூட தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லையே என்பது தான் என் பதற்றதுக்குக் காரணம்."
உங்கள் பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் மிகவும் மதிக்கின்றேன். அதே நேரத்தில் உங்களைப் போல திரைப்படங்கள் எல்லாம் எடுத்து எவ்வித பிரபலமும் அடையாத என் போன்ற
சாதாரண தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சில கேள்விகளையும் இந்தப் பதட்டத்துடன் சேர்த்து
நீங்கள் பார்த்தாக வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
இந்த வேண்டுகோளை வைப்பதற்கு எனக்கு மற்றவர்களை விட மிக அதிகமான தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்..
தமிழ் தமிழ் என்று நீங்கள் பேசும் அ தே தமிழை சற்று உரக்கப் பேசிய ஒரு தலைமுறையின்
வாரிசுகள் இந்தக் கேள்வியை முன்வைப்பதில் இருக்கும் நியாயத்தை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.
நியாயங்கள்:
1) தலைவர்கள் பேசிய தமிழால் தொண்டர்களின் பிள்ளைகள் எல்லாம் தமிழ் படித்தார்கள். தமிழில் படித்தார்கள். தமிழர்களாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தலைவர்களின் பிள்ளைகள் யாரும் தமிழ்ப் படிக்கவில்லையே! ஏன்?
அவர்கள் நாடாளுமன்றம் போகவும் மத்தியில் அமைச்சராகவும் இந்தி பேசக் கற்றுக் கொண்டது கூட
ஒரு காரணமாகச் சொல்லப்பட்ட தே! அப்போதெல்லாம் நீங்கள் பதட்டப்படவில்லை.
தொண்டர்களின் பிள்ளைகள் தான் தமிழைக் காப்பாற்ற வேண்டுமா என்ன?
போதும் தங்கர்பச்சன், கொஞ்சம் மாற்றிக் கொள்வோம். தலைவர்களின் பிள்ளைகளை
தமிழால் அரசாள வந்தவர்களை கொஞ்சம் தமிழ் படிக்கச் சொல்லுங்கள், தமிழில் படிக்கச் சொல்லுங்கள்.
2) அது என்ன அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் மட்டுமே தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றீர்கள்? அவர்கள் மட்டும் தான் தமிழர்களா? புற்றீசல் போல ஆங்கில வழிக்கல்வி
நிலையங்கள் திறக்கப்பட்டதும் கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டிப் போட்ட
போதும் பதட்டப்படாத நீங்கள் இப்போது எதற்கு பதட்டப்படுகின்றீர்கள்?
3) அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எல்லோரும் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும்
அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்கள். அவர்கள் குழந்தைகள் ஆங்கிலம் படித்துவிட்டுப் போகட்டுமே!
தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் என்று ஊடகங்கள் வெளிச்சப்படுத்தும் அனைவரும்
தங்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் வழிக் கல்வியில் அனுப்பி தங்கள் தரத்தை மேம்படுத்திக் கொண்டிருப்பதாக பாவனை / அல்லது தக்க வைத்துக் கொண்டிருக்கிக்கும் நினைப்பு. இ ந்த வெளிச்சத்தைப் பார்க்கும்
எங்கள் குப்பனும் சுப்பனும் தன் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி கற்க ஆசைப்படுவது தவறா
தங்கர்பச்சன்,? சொல்லுங்கள்!
4) மேற்கண்ட குற்றச்சாட்டுகள் இன்றி இன்னார், இந்த தலைவர் இருக்கின்றார், இந்த அறிவுஜீவி
இருக்கின்றார் என்று நீங்கள் ஒருவரை அடையாளப்படுத்தினால்,
தங்கர்பச்சன் அவர்களே, வாருங்கள் போராடுவோம், மும்பையிலிருந்து சில இலட்சம்
இளைஞர்களை அழைத்துவர நான் தயாராக இருக்கின்றேன்.
நம் தமிழ்நாட்டில் யார் தமிழ்ப் படிக்க வருகிறார்கள் என்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள்,
வேறு துறைகளில் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்,
அப்புறம் பெண்கள்/ அதிலும்,
பெண்கள் அதிகமாக படிக்க வருவது கூட ' சரி திருமணம் வரை ஏதாவது படிச்சிட்டு இருக்கட்டும் என்ற நினைப்பும் திருமண அழைப்பிதழில் டிகிரி போட வேண்டிய அந்தஸ்த்து கருதியும் தான் படிக்கிறார்கள்.
இவ்வாறு படிக்க வந்தவர்கள் தமிழைக் காப்பாற்றிவிடுவார்கள் என்று எப்படி நம்புவது?
இன்னொரு செய்தி தெரியுமா தங்கர்பச்சன்? தமிழில் முனைவர் பட்டம் பெற்ற 95% பேருக்கு
33 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறுகிறதாம்!
வெறும் பதட்டங்கள் , போராட்டங்கள், ஆவேச உரைகள் எங்களுக்கு அலுத்துவிட்டது.
இந்தக் கல்வி முறையில் மாற்றம் தேவை.
இந்த நாட்டில் ஐடி துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் இருப்பது ஏன்?
மிகக் கேவலமாக இந்த சமூகத்தால் பார்க்கப்படும் தமிழ்ப் படித்தவன் எவனாவது தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப் பட்டிருக்கின்றோமா? அவன் படாத என்ன அவமானத்தை இந்த ஐடி அதிகச் சம்பளக்காரன் அனுபவித்துவிட்டான். ????
பனிரெண்டாம் வகுப்பு வரை மனப்பாடம் செய்து மார்க் வாங்கும் மாண்வன் தான் சுயமாகச் சிந்திக்க ஆரம்பிக்கும் வயதில் தன் பண்பாடு சார்ந்த மொழியைக் கற்பதில்லையே! பணம் சம்பாதிக்கும்
படிப்பை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை மட்டுமே படித்து வெளியில் வருபவன்
வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளவில்லை, அப்படி ஒரு கல்வியைக் கொடுக்கும் கல்வி முறை நம்மிடம் இல்லை.
இது ஒரு பக்கம் என்றால் தமிழ்ப் படிக்கிறவனின் நிலையும் தகுதியும் வெளியில் சொன்னால் வெட்ககேடு! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று
இவர்களால் எதாவது செய்ய முடியுமா? தமிழில் படிக்கிறவன் என்றால் மொழிகள் பல தெரிந்தவன் என்ற நிலை வராத வரை தமிழில் படிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்படும் நிலைத்தான் தொடரும்.
தமிழ்ப்படிக்கிறவனுக்கெல்லாம் இந்தியோ, ஆங்கிலமோ, பிரஞ்சோ , சரி அதை எல்லாம் விடுங்கள்
குறைந்த அளவு மலையாளம், கன்னடம் , தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும், இரண்டாவது மொழியாக
இரண்டு மொழிகள் இருக்க வேண்டும் என்று மாற்றிப் பாருங்கள். தமிழ் வளரும். தமிழன் வாழ்வு
உயரும்.
சிலர் மரங்களை வெட்ட மாட்டார்களாம். வெட்டினால் வெளிப்படையாக தெரிந்துவிடும் அல்லவா?
அதனால் மரத்தில் அடியில் நஞ்சு கலந்து மண்ணொடு மண்ணாக வைத்துவிடுவார்களாம்!
அப்படித்தான் தமிழ் என்ற மரத்தின் அடியில் நஞ்சு கலந்திருக்கிறது.
அவர்கள் மண்ணைத் தோண்டிய போதெல்லாம் ஏ ன் தோண்டுகின்றாய்? என்ற கேள்வியை நாம்
கேட்கவில்லை? உரம் வைப்பவனையும் நஞ்சு வைப்பவனையும் பிரித்தறியும் நுண்ணரசியல்
நம்மிடம் இல்லை. மரத்தின் இலைகள் வாடி விட்டன. அங்கு கூடு கட்டி இருந்த பறவைகளைக் காணவில்லை. இதோ இந்த மரத்தில் கூடு கட்டி இங்கிருந்து தான் நான் பறக்க ஆரம்பித்தேன்,
எங்கே போய்விட்டன எம் பறவைகள்? என்று பதட்டப்படுகின்றீர்கள்.
பறவைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் தங்கர்பச்சன்?