காதலன் இல்லாமல்
வாழ்ந்துவிட முடிகிறது
கவிதை இல்லாமல்
வாழ்வது ?
கட்டில் மெத்தையில்
காமம் கூட
அந்த மூன்று நாட்கள்
முகம் சுழித்து
விலகிக்கொள்கிறது.
கவிதை மட்டும்தான்
அப்போதும்
காற்றாய்
சிவப்புக்கொடி ஏந்திய
தோழனாய்
துணைநிற்கிறது.
சுவடிகளில்
சிறைவைக்கப்பட்டிருந்த
கவிதைமொழியை
விடுதலையாக்கிய
பாட்டனின்
பாடல் வரிகள்
எல்லைகள் தாண்டி
எப்போதும்
என் வசம்.
ஆளரவமில்லாத காட்டுப்பாதையில்
பூத்திருக்கும் செடிகளின்
இலைகளின் அசைவில்
கவிதைமொழி
கண்சிமிட்டி
கண்ணீர்விட்டு
கட்டி அணைக்கிறது.
காதல் தேசத்தில்
கவிதையே
யார் குற்றவாளி?
கவிதை எழுதும் மனைவி
கணவனுக்குத் தலைவலியாம்
கவிதை எழுதும் அம்மா
பிள்ளைகளுக்கு
பெருந்தொல்லையாம்.
கவிதையே
எத்தனைப் பிறவிகள்
அடுத்தவன் மனைவியை
பித்தனாய் வந்து
பேதலிக்க வைக்கிறாய்?
கவிதையுடன்
கொண்ட காதல்
கல்லறைக்கதவுகளைத்
திறந்து
கடப்பாறையால்
தோண்டி எடுத்து
மரணித்தப் பின்னும்
வேர்களாய் வந்து
கருந்துளை உதடுகளில்
ஈரம் ததும்ப
முத்தமிடுகிறது.
இருந்தும் என்ன செய்ய?
கவிதையே..
துரோகம் செய்தேனோ
நம் காதலுக்கு?
மன்னிப்பாயா
இல்லை
தண்டிப்பாயா
கவிதையே
நீ வாசம் செய்யும்
எந்த மொழியிலாவது
எந்த தேசத்திலாவது
நம் காதல் தேசத்தின் கொடி
பறக்கும் அனுமதி இருந்தால்
ஓடி வந்து சொல்
வருகிறேன் உன்னோடு
அதுவரை
கவிதையே
உன்னுடன் நான் கொண்ட
காதல்
கள்ளக்காதலாய்
தலைகுனிந்து
.....
kavithai meethu konda kaathal.. nalla irukku... athu.. eppdi kalla kaathalaai irukkum....
ReplyDeleteகவிதையிலேயே இக்காதல் ஏன் கள்ளக்காதலானது என்பதைப் பற்றியும்
ReplyDeleteகொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது ரிஷ்வன்.
கவிதையே
எத்தனைப் பிறவிகள்
அடுத்தவன் மனைவியை
பித்தனாய் வந்து
பேதலிக்க வைக்கிறாய்?
விமர்சனத்திற்கு நன்றி
அன்புடன்
புதியமாதவி