Tuesday, April 23, 2013

காதல் என்பது...






மதுரை  காமராசர் பல்கலைக் கழகத்தில் 1976, 77, 78களில் நானும் ஒரு முதுகலை மாணவியாய் உலா வந்திருக்கிறேன். அந்த நூலகமும் வியாழ வட்ட கருத்தரங்குகளும் என் வாழ்வில் மிகவும் முக்கியமான களங்கள்.
பாப்லு நெருடாவையும் அகிலனையும் நீலபத்மநாபனையும் ஜெயகாந்தனையும்
பற்றிப் பேசாத நாட்களில்லை.
அப்போது பல காதலர்களைப் பார்த்திருக்கின்றேன். காதலித்த எல்லோரும்\
திருமண உறவில் இணைய முடியவில்லை என்கிற யதார்த்தநிலை ஒரு பக்கம், இன்னொரு பக்கமோ தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சிலர் சந்தோஷமாக வாழவில்லையே என்ற வருத்தமும்
எனக்குண்டு.  காதலைப் பற்றி அதிகமாக கவிதைகளில் கூட எழுதவில்லை நான். அதனாலோ என்னவோ 'அன்புள்ள நிலாவுக்கு ' புத்தகத்தைக் கொஞ்சம் தாமதமாகவே வாசிக்க ஆரம்பித்தேன்.!

  .

அமரர் கந்தசாமி அறக்கட்டளை சார்பாக சொற்பொழிவாற்ற மும்பை வந்திருந்தார்கள் பேராசிரியர் மோகன் அவர்களும் அவர் துணைவியார்
பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களும். பேராசிரியர் . இரா. மோகன் அவர்களை ஒரு ஆய்வு மாணவராக மட்டுமே நானறிவேன். ஒரு கால்நூற்றாண்டு கடந்து  அவரையும் அவர் துணைவியாரையும்
சந்தித்த அனுபவம் இனிமையாக இருந்தது. அக்காலக்கட்டத்தில்
அவர்கள் இருவரும் காதலர்களாக இருந்தார்கள் என்பதும் அவர்கள்
அப்போது எழுதிக்கொண்ட காதல் கடிதங்களை தொகுத்து
'அன்புள்ள நிலாவுக்கு' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருப்பது கண்டு ஆச்சரியமாக இருந்தது.

'அடடே.. நம்ம மோகன் சார் வியாழவட்டத்திற்கு தவறாமல் வந்ததற்குப் பின்னால் இப்படி ஒரு காதல் காவியம் இருப்பது நமக்குத் தெரியாமல்
இருந்திருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டேன்.

காதல் கடிதத்தில் மேடம் க்யூரியும் குறுந்தொகையும் கபிலரும் திருக்குறளும்
சர்வ சாதாரணமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. பேராசிரியர் மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை என்று அன்றைக்கு பல்கலை கழக வட்டாரத்தில் பேசப்பட்ட இரா. மோகன் அவர்கள் மு.வ. பற்றிய கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார்.
மலர்விழி நாவலில் கலெக்டர் செல்வநாயகம் மலர்விழிக்கு எழுதிய கடிதத்தை அந்த நாவலைப் பிரிக்க நேரும்போதெல்லாம் படிக்காமல் இருக்க மாட்டேன்  என்று சொல்லும் மோகன் அவர்கள்

 " சொல்லப்போனால் அதையே என் கடிதங்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கொண்டேன்" என்று வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறார்.


காஸ்டில்லிஜோ எழுதிய knowing woman வாசித்துவிட்டு அதில் தனக்குப் பிடித்த
கருத்துகளை எழுதுவதிலாகட்டும், கீட்ஸ், ரஸ்ஸல், கிப்பன் ஆகியோரின்
காதல் கதைகளை தன் காதல் கடிதங்களில் எழுதுவதிலும் பேராசிரியர் மோகன் அவர்களின் காதல் கடிதங்கள் வெறும் உடல் சார்ந்த பாலியல்
வேட்கை, ஈடுபாடு என்பதை எல்லாம் தாண்டி காதல் என்பது கருத்தொருமித்தல், ஒருவரை ஒருவர் மதித்தல் என்ற புரிதலை
ஏற்படுத்தி  இருக்கிறது.
இன்று வாழ்க்கையில் இந்த இணையரின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது
இந்தப் புரிதல் தான்.

இந்த இணையர் காதலுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட இவர்களால் காதல் பெருமை அடைந்திருக்கிறது,
வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.



 

Monday, April 8, 2013

இவர்கள் தீவிரவாதிகளா..??









ஆனந்த பட்வர்தனின் ஜெய்பீம் காம்ரேட் ஆவணப்படத்தைப் பார்த்திருப்பீர்கள்.
அப்படத்தில் ஓங்கி ஒலித்தக் குரல்.. 
ஒவ்வொருவரையும் உலுக்கிய அந்தப் பாடல் வரிகள்
வலியை வேதனையை சாதியக்கொடுமையை
வறுமையின் நிறத்தை தன் பாடல்களில்
வடித்த அந்தக் குரல்...
சீத்தல் மற்றும் சச்சின்.. 
தீவிரவாதிகள் என்று அவர்கள் தேடப்பட்டதும் அவர்களின்
இசைக்குழுவான கபீர் கலா மஞ்ச் தீவிரவாதக்குழுவாக அறிவிக்கப்பட்டதும்
அவர்கள் தலைமறைவானதும்... 
இன்று: மராட்டிய மாநில காவல்துறை அவர்களைத் தீவிரவாதிகள் என்று
கைது செய்திருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர்கள் அவர்களுக்காக
தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் அவர்களூடன் சேர்ந்து... 


Saturday, April 6, 2013

இந்தியா - இலங்கை - ஒரு பூகோள அரசியல்


திருமருதன் அவர்கள் தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைக்கும் அதற்கு மறுப்புரையாக திரு நலங்கிள்ளி அவர்கள் கீற்றுவின் எழுதியிருக்கும் கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது? என்ற கட்டுரைக்கும் பதில் சொல்லும் வகையிலும் அவர்கள் சுட்டிக்காட்டாத இன்னொரு தளத்தை இன்றைய “Geopolitical Realism” என்னவாக இருக்கிறது என்பதையும் விளக்கும் வகையில் மும்பையில் விழித்தெழு இயக்கம் சார்பாக நடந்த கருத்தரங்கில் நான் ஏற்கனவே பேசியிருந்த கருத்துகளின் சாரத்தைத் தொகுத்து இக்கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.
 யதார்த்த நிலை என்னவாக இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதை எப்படி உடைத்துக்கொண்டு அல்லது மாற்று வழியைக் கண்டுபிடிப்பது எப்படி?அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? இவை அனைத்தையும் நம் இளைய சமுதாயம், குறிப்பாக ஈழ ஆதரவாளர்களும் மாணவர் சமுதாயமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.
 இந்தியா - இலங்கை வெளியுறவுக் கொள்கை
 வெளியுறவு கொள்கையை இரண்டாகப் பிரிக்கலாம். (ValueBased,Interests based.) அறம் சார்ந்தது ஒன்று. இன்னொன்று பொருளாதர சமூக ஆதாயம் சார்ந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியா கூட்டுச்சேரா கொள்கையைத் தான் தன் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் விடுதலை அடைந்த நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தியாக இந்தியாவே விளங்கியது. அக்காலக்கட்டத்தில் நம் வெளியுறவு கொள்கையைத் தீர்மானிப்பதில் அறம் சார்ந்த கோட்பாடுகள் முன்னிலை வகித்தன.
 அந்த அடிப்படையில் தான் பண்டித நேருவின் புகழ்மிக்க பஞ்சசீலாகொள்கை. திபேத்தில் சீனாவின் நிர்வாக அதிகாரத்தை பஞ்சசீல ஏற்றுக்கொண்டது இந்த அடிப்படையில் தான். 1955ல் ஐ. நா. பாதுகாப்பு கவின்சிலில் உறுப்பினராகும் தகுதியை இந்தியாவுக்கு வழங்கியபோது அதை ஏற்க மறுத்த அன்றைய பிரதமர் நேரு அத்தகுதியை சீனாவுக்கு வழங்கும்படி சிபாரிசு செய்கிற அளவுக்கு நம் வெளியுறவு கொள்கை தார்மீகம் பேசியது.
 “Think Bank” என்ற அறிவு ஜீவிகளின் அமர்வில் அமர்ந்து கலந்துரையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை நேரு ஒதுக்கி இருந்தார் என்பார்கள். எனினும் நடந்தது எல்லாமே நேரு நினைத்தபடி அல்ல.
 1962ல் சீனா ஏமாற்றியது தான் இந்தியாவின் அறம் சார்ந்த வெளியுறவு கொள்கைகைக்கு கிடைத்த முதல் அடி. வெளியுறவு கொள்கையில்(Realities of power politics) அதிகாரப்போட்டி அரசியலின் யதார்த்தம் என்ன என்பதை நேச நாடுகளாக இருந்து எதிரி நாடுகளாக மாறியவர்கள் தான் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்தார்கள். நம் ஆயுதங்களைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகளாகவே இருக்கிறார்கள் என்று சொல்வது இதைத் தானோ. நேருவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மரண அடி நேருவின் சகாப்தத்தை 1964ல் முடிவுக்கு கொண்டுவந்தது என்கிறார்கள்.
 அதன்பின் 1970வாக்கில் இந்தியா அறம் சார்ந்த வெளியுறவு கொள்கையை கைவிட்டு அதே நேரத்தில் முழுக்கவும் தன் சுயநலம் சார்ந்த வெளியுறவு கொள்கைக்குள் வராமல் ஒரு இடைப்பட்ட நிலையில் இருந்தது எனலாம். இக்காலத்தில் இந்தியா கூட்டுச்சேரா கொள்கையைக் கைவிட்டு சோவிய வல்லரசின் நேச நாடாகிவிட்டது. இராணுவம், தொழில்நுட்பம் வளர்ச்சிகளின் சோவியத்தின் உதவி. சோசலிஷ பொருளாதரக் கொள்கை என்ற அரசின் பிரகடனம். தனியார் நிறுவனங்கள் அரசு மயமாக்கப்பட்ட நிலை.
1971ல் வங்கதேசம் உருவானதில் பெரும்பங்கு இந்தியாவினுடையது. இப்போதும் நாம் அனைவரும் ஈழம் பிரச்சனைக் குறித்துப் பேசும் போதெல்லாம் நான் உட்பட, இதையே பல மேடைகளில் பேசியும் எழுதியும் உணர்வுப் பிழம்பாய் கொதித்துப் போகிறோம். 1971களில் இருந்ததை விட அதிக வலுவுடன் இந்திய இராணுவம் இருக்கும் இன்றைய நிலையில் இந்தியாவால் ஏன் ஈழப்பிரச்சனையில் வங்க தேசத்திற்கு செய்ததைச் செய்ய முடியவில்லை?70களுக்கும் 90களுக்குப்
 பின்னரும் உலக அரங்கில் நடந்த மிகப் பெரிய மாற்றங்கள் என்ன?
வங்க தேசத்திற்காக பாகிஸ்தானுடன் இந்திய இராணுவம் போரிட்டுக் கொண்டிருந்த போது அமெரிக்காவின் அணு ஆயுதக் கப்பல்(seventhfleet) வங்காள விரிகுடாவில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
 1974ல் பொக்கரம் அணுகுண்டு வெடிப்பு சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா தன்னை அணு ஆயுத நாடாக உலகுக்குப் பெருமையுடன் பறைசாற்றிக் கொண்டது. ஐ. நா. வில் வீட்டோ பவரில் இருக்கும் ஐந்து வல்லரசுகள் தவிர்த்து அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக தன்னை வெளியுலகுக்கு காட்டிக்கொண்டதன் மூலம் அதிகாரப் போட்டியில் நுழைந்தது இந்தியா.
 1991ல் சோவியத் வல்லரசு உடைந்தது. சோவியத்துக்கும் அமெரிக்காவுக்கும் நடந்து கொண்டிருந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது, இந்நிலையில் சோவியத்தின் நேச நாடுகளாக இருந்த இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவு கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சோவியத்துடன் கொண்டிருந்த நேச உறவு காரணமாக கொள்கை அடிட்படையில் சீனாவுடன் கை கோத்திருக்க வேண்டிய இந்தியா அதற்கான எல்லா கதவுகளும் சீனாவில் மூடப்பட்டிருந்ததாலும் ஆசியாவின் தலைமைக்கான போட்டியில் இந்தியாவுக்கு எதிரணியில் சீனா நிற்பதாலும் இந்தியா அமெரிக்காவின் பக்கம் சாயத்தொடங்கியது.
 இந்த இடைப்பட்ட காலங்களில் இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்டபல்வேறு ஒப்பந்தங்களும் அதற்கான சூழல்களும் இந்தியா இலங்கை வெளியுறவு கொள்கையைப் பாதிக்கும் முக்கிய அம்சங்களாகின.
 சாஸ்திரி சீரிமாவோ பண்டாரநாயக்கா ஒப்பந்தம்:
1965ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் இலங்கையிலிருக்கும் கட்டுநாயகா விமானத்தளத்தை பாகிஸ்தான் விமானப்படை எரிபொருள் நிரப்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலங்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிவித்தது. இந்தியா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இலங்கையின் இந்நிலைப்பாடு இருப்பதாக சாஸ்திரி நினைத்தார். இலங்கையின் இந்நிலைப்பாட்டைத் தவிர்க்க சாஸ்திரி சீரிமாவோடு ஒப்பந்தம் செய்ய முன்வந்தார்.
 இந்திய அரசு இராணுவ பலத்தில் பரப்பளவில் பொருளாதர நிலையில் தன்னைவிட பலமடங்கு வலுவுள்ளதாக இருந்தாலும் அதை அச்சுறுத்துகின்ற கவண்கல்லாக தன்னிடமிருக்கும் பூகோள ஆயுதத்தை இலங்கை அரசு அப்போது உணர்ந்து கொண்டது எனலாம். இன்றுவரை அந்த கவண்கல் நெற்றிப்பொட்டில் பட்டால் என்னவாகும் என்ற நிலையில்தான் இந்தியா இருக்கிறது!
 அந்த ஒப்பந்தப்படி,ஐந்தரை இலட்சம் மலையகத்தமிழர்களை அகதிகளாக இந்தியாவுக்கு அனுப்புவதை ஏற்றுக்கொண்டதன் மூலம் சாஸ்திரி ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் முதல் தவறைச் செய்தார். இலங்கையில் அன்று வாழ்ந்த 9. 5 இலட்சம் மலையகத்தமிழர்களில் 5. 5 தமிழர்கள் அகதிகளாக இந்தியா ஏற்றுக்கொள்வதும் மீதி 4இலட்சம் தமிழர்களுக்கு இலங்கை அரசு குடியுரிமைக் கொடுப்பதும் என்று முடிவானது. இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த மலையகத் தமிழர்கள்,இலங்கையை வளம் கொழிக்கும் காபி,டீ தோட்டங்களாக்கிய உழைப்பாளர்களும் அந்த மண்ணுக்கும் உள்ள தொடர்பு கேள்விக்குறியானதும் அவர்களை இந்திய அரசு அகதிகளாக ஏற்றுக்கொண்டதன் மூலம் ஈழமண்ணுக்கு அவர்கள் அந்நியர்கள் தான் என்று இந்தியாவே ஏற்றுக்கொண்டதாக அமையும் என்பதைக் கணிக்க தமிழக அரசும் மக்களும் தவறிவிட்டார்கள்.
 இந்திரா சீறிமாவோ ஒப்பந்தம்:
1971ல் அமெரிக்கா வங்கக்கடலில் அணு ஆயுதக் கப்பலைக் காட்டி இந்தியாவை மிரட்டியபோது சோவியத் உதவிக்கு வந்தது என்பார்கள். ஐ.நா சபை அமெரிக்காவின் அத்துமீறிய செயலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதால் அமெரிக்கா பின்வாங்கியது என்பார்கள். அப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையை தன்பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கச்சத்தீவை இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இந்திராவும் சீறிமாவோவும் செய்து கொண்ட ஒப்பந்தம் தமிழக அரசின் ஒப்புதலுடன் தான் நடந்திருக்க வேண்டும்.
trade_routes
கச்சத்தீவு தமிழர்களின் நிலம். இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. கடல்கோளுக்கு இறையாகிப் போனது போக எஞ்சி நிற்கும் மிச்சம் மீதி இந்த தீவு. தமிழகத்து மீனவர்கள் ஓய்வெடுக்க,மீன்வலைகள் உலர்த்த ஆண்டுக்கொரு முறை நடக்கும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள என்று 74ஆம் ஆண்டுவரை இருந்த உரிமைகளையும் 1976ல் இலங்கைக்கு கொடுத்தது இந்திய அரசு. இன்றைக்கு டொசோ மாநாடுகள் நடத்தும் கலைஞர் அவர்கள் தாம் அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். இவர்களுக்குப் பின் வந்த நேருவின் பேரன்,  இந்திராவின் வாரிசு என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவின் மக்களாட்சி அரசியல் தலைவராக- இந்திய பிரதமராக வந்த ராஜீவ்காந்தி எடுப்பார் கைப்பிள்ளையாகவே செயல்பட்டார். வெளியுறவு கொள்கைகளில் அவருக்கு எவ்விதமான தொலைநோக்குப் பார்வையும் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக ஈழம் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர் நடவடிக்கைகள் மேலும் உக்கிரமாக்கியதெனலாம்.
 திம்புவில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இந்தியப் பிரதமர் கபட நாடகம் ஆடினார். அமைதிப்படை தளபதியாக இருந்த ஹரிகிரட்சிங் தன் குறிப்புகளில் இதைப் பதிவு செய்திருக்கிறார்.
 "ராஜீவ்காந்தி தன்னை சந்திக்க விரும்புகிறார் என்று இந்தியத் தூதரகம் மூலம் அறிந்த பிரபாகரன் மகிழ்ச்சி அடைகிறார். டில்லி வந்த பிரபாகரனை 28, ஜூலை 1987ல் இந்தியப்பிரதமர் சந்திக்கிறார். முதல்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் அசோகா ஓட்டல் அறை எண் 518ல் அடுத்த பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறார் பிரபாகரன். ஆனால் அடுத்த நாள் கொழும்புவில் ராஜீவ்காந்தி பேச்சுவார்த்தைக்கு போயிருப்பதை தொலைக்காட்சி நேரடியாக ஒலிபரப்புகிறது. (The intervention of Srilanka page 26) அவரே மேலும் சொல்கிறார்,அமைதிப்படை இந்தியாவிலிருந்து இலங்கை அனுப்பப்படும் போது யாருக்காக? என்பது கூட தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
 (The IPKF personnel did not know exactly what their mission was in Sri Lanka because at one stage , they were told to protect the LTTE since the IPKF had arrived on the island as a friend to fulfil the aspirations of the tamils. . . on 8 Oct 1987, Gen. Sundarji visited IPKF Head quarters at Palay and ordered me to adopt the hard option against LTTE, the IPKF from being a peacekeeper had suddenly adopt an offensive stance) page 75 & 77
 இந்திரா காந்தி பிரதமராக இருந்தப்போது ஈழ விடுதலை இயக்க போராளிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்து இலங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் மகனோ, போராளிகளை வெல்வது எளிது என்றும் அப்படி வென்றெடுக்கும் ஈழ மண்ணை இந்திய நிலமாக்கிக் கொள்ளலாம் என்றும் அரசியலும் தெரியாமல் வெளியுறவுக் கொள்கையும் தெரியாமல் செயல்பட்டார். நான்காண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் போரிட்டு இலங்கை அரசு தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில், இன்னும் சொல்லப்போனால் தமிழ் ஈழம் விடுதலையை வென்றெடுக்கும் நேரம் பார்த்து இந்திய இராணுவம் 'அமைதிப்படை' என்ற பெயரில் இலங்கை மண்ணில் இறங்கியது.
அமைதிப்படை விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முன் தோல்வி அடைந்தது என்பது தான் அன்றைய வரலாற்று உண்மை. 1989ல் அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியது உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு எனலாம்.
அதன்பின் இலங்கை அரசு வெளிப்படையாக பிற நாடுகளின் உதவியை நாடியதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. ஒருபக்கம் இந்திய இராணுவத்தின் தோல்வி, பிரச்சனையை இந்தியாவால் தீர்க்க முடியவில்லை என்ற இலங்கையின் பிரச்சாரமும் அதையே காரணம் காட்டி இலங்கை எடுத்த நிலைப்பாடுகளும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை, அதிலும் குறிப்பாக இலங்கையுடனான கொள்கையை பெரிதும் பாதித்தன.
29 ஜூலை 1987ல் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு எழுதியிருந்தக் கடிதம் இந்திய அரசின் நிலைப்பாட்டையும் இன்றுவரை அதே பாதையில் இந்திய அரசு இலங்கையுடனான வெளியுறவு கொள்கையைக் கடைப்பிடிப்பதையும் தெளிவாக உணர்த்துகின்றன.
"திரிகோணமலை அல்லது ஶ்ரீலங்காவின் எந்தவொரு துறைமுகமும் எந்த ஒரு நாடும் தன் இராணுவப் பயன்பாட்டுக்கு இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் விதத்தை அனுமதிக்க கூடாது. திரிகோணமலையில் இருக்கும் எண்ணெய்க் கிடங்குகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே செய்ய வேண்டும்,. .
ஶ்ரீலங்கா வெளிநாடுகளுடன் செய்திருக்கும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தகவல் தொழில்நுட்பங்களாக மட்டுமே இருந்தாக வேண்டும். எக்காரணம் கொண்டும் இராணுவ மற்றும் உளவுத்துறை பயன்படுத்தாது என்பதைக் கண்காணித்து இலங்கை அரசு உறுதி செய்வது அவசியம். . இதற்கெல்லாம் கைமாறாக பிரிவினை பேசும் தீவிரவாதிகளான இலங்கை மக்களை இந்தியா ஆதரிக்காது, வெளியேற்றும். அத்துடன் ஶ்ரீலங்கா பாதுகாப்பு படைக்கு இந்தியா இராணுவ தளவாட உதவிகள் செய்து பயிற்சியும் கொடுக்கும். "
திரிகோணமலையில் 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா" என்ற ரேடியோ தகவல் பரிமாற்றத்தை அமெரிக்கா செய்து கொண்டிருந்தது. சோவியத்தின் நேசநாடுகளைக் கண்காணிக்கவும் உளவு பார்க்கவும் அமெரிக்கா செய்திருந்த இந்த ஏற்பாடு இந்தியாவுக்கு அன்றைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்ற அவசரத்தில் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தமாகவே ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அமைந்தது.
உலக அரங்கில் 90களில் சோவியத் உடைந்தப் பின் 91களில் இந்தியா உலகமயமாதலில் அடி எடுத்து வைக்கிறது. அதன் பின் அதாவது 1993 -96களில் இந்திய வணிகம் இருமடங்காக பெருகியது. இந்த வளர்ச்சியின் காரணமாக இந்திய அரசு 1998ல் இலங்கையுடன் செய்து கொண்ட வணிக ஒப்பந்தம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது
INDIA SRI LANKA FREE TRADE AGGREMENT - ISLFTA என்றழைக்கப்படும் அந்த ஒப்பந்தம் மார்ச் 2000 முதல் அமுலுக்கு வந்தது. அதன் விளைவுகள் இந்தியா இலங்கை வெளியுறவு கொள்கையை பாதிக்கும் மிக முக்கியமான அம்சங்களாக இன்று இருக்கின்றன.
*2006ல் இந்தியா - இலங்கை வணிக மதிப்பு 2. 6 (இரண்டு புள்ளி ஆறு) பில்லியன் அமெரிக்க டாலர். இது பத்து வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 5 மடங்கி அதிகம்.
*இந்தியா இலங்கையில் வைத்திருக்கும் முதலீட்டின் மதிப்பு 1990ல் $ 4 மில்லியன். அதுவே 2006ல் $ 150 மில்லியன்.
*2005 கணக்குப்படி SAARC நாடுகளில் இந்திய செய்திருக்கும் முதலீடுகளில் 50% இலங்கையில் தான்.
இலங்கையில் முதலீடு செய்திருக்கும் இந்திய நிறுவனங்கள்:
  • லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
  •  டாட்டா (தாஜ் ஹோட்டல், வி எஸ் என் எல் ஆகியவை)
  • அப்பல்லோ மருத்துவமனை
  • இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC)
  • எல் அண்ட்டி
  • அம்புஜாஸ்
  • சியட் (ceat)
  • நிக்கோலஸ் பிரமள்
  • ஜெட் ஏர்
  • சகாரா
  • இந்தியன் ஏர்லைன்ஸ்
  • அசோக் லேலண்ட்
*உலக உருண்டையை நாம் கிழக்கு மேற்கு பகுதிகளாகப் பிரித்தோம் என்றால் சற்றோப்ப நடுவில், இரண்டையும் இணைக்கும் மையப்புள்ளியாய் இலங்கை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இலங்கையின் கொழும்பு துறைமுகம் அமைந்திருக்கிறது.
 *இந்து மகா சமுத்திரத்தைக் கடக்கும் கப்பல்கள் அனைத்தும் இதன் வழியாகத் தான் போயாக வேண்டும். (Entry and Exit Point)
*உலக ஏற்றுமதி இறக்குமதியில் சரக்கு கப்பல்கள் 50% அதிகமாக இந்த வழியாகத்தான் போகின்றன. 1/3 சரக்கு கப்பல்களும் 2/3 எண்ணெய் கப்பல்களும் (Bulk cargo and Oil shipments)
*இந்தியாவுக்கு இறக்குமதியாகும் எண்ணெயில் 89% இந்துமகாக்கடல் வழியாகத்தான் வருகிறது.
*இந்திய இறக்குமதியில் 70% கொழும்பு துறைமுகத்தில் தான் நடந்தாக வேண்டும். கொழும்பு துறைமுகத்தில் பெரிய சரக்குகள் பிரிக்கப்பட்டு (BULK BREAKING) இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களுக்கு இங்கிருந்து தான் அனுப்பப்படுகிறது.
*இந்திய வணிகம் மட்டுமல்ல, உலக நாடுகளின் வணிகமும் கடல்வழியைத்தான் நம்பி இருக்கின்றன.
*திரிகோணமலை உலகின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகம் என்கிறார் பிரிட்டிஷ் அட்மிரல் ஹார்டியோ நெல்சன்.
*21ஆம் நூற்றாண்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போவது அதன் கடல்வழிகள் தான்.
*யார் இந்து மாக்கடலில் தன் ஆளுமையை அதிகாரத்தை நிலைநாட்டுகின்றார்களோ அவர்தான் ஒட்டுமொத்த ஆசியாவின் தலைமை இடத்துக்கு வரமுடியும்.
 *இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனா $100 மில்லியன் டாலர் செலவில் கொழம்புவில் லோட்டஸ் டவர் என்ற ஹைடெக் தொழில்நுட்ப கட்டிடத்தைக் கட்டி இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கட்டிடம் இதுதான்.
ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியது வியாபர நோக்கத்திற்காக மட்டுமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவின் பாதுகாப்பையும் உத்தேசித்துதான்என்கிற வரலாறு இந்திய பாதுகாப்புக்கு இலங்கைத் தீவு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும். இதுதான் பூகோள அரசியலின் யதார்த்த நிலை. (International affairs , nations tend to act based on self interest. Calculation of power and national interests. Foreign policy text books characterized this behaviour as geopolitical realism)எனவே இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை அதுவும் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் மூன்று காரணிகள் முக்கிய இடம் பெறுகின்றன.
1) பொருளாதரம்
2) கடல்வழி பாதுகாப்பு (இந்துமகாக்கடலில்)
3) இலங்கை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் கொண்டிருக்கும் உறவுநிலை.
வெளியுறவுக் கொள்கையில் நிரந்தர நண்பனும் இல்லை, யாரும் பகைவனுமில்லை என்பது தான் உலக நாடுகளின் தாரகமந்திரம். இந்தியா இலங்கை அரசுக்குப் பொருளாதர தடை விதிக்குமா? என்ற கேள்வியை மேற்கண்ட யதார்த்த நிலையுடன் ஒப்பிட்டு முடிவுக்கு வர வேண்டும். ஏன் முடியாது? என்ன நிலை? எது தடையாக இருக்கிறது? இதை எல்லாம் மீறி பொருளாதர தடை விதித்தால் என்னவாகும்? இந்தக் கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைத் தேடிக் கண்டடைந்தால் தான் ஈழம் குறித்த அடுத்தக்கட்ட போராட்ட நடவடிக்கைக்கு உண்மையில் நாம் தாயாராக முடியும். வெறும் உணர்வுக் குமிழிகள் கரை சேர்வதற்குள் காணாமல் போய்விடும்.
நன்றி: கட்டுரையை வெளியிட்ட கீற்று இணைய தளத்திற்கு


Thursday, April 4, 2013

காமன்வெல்த் காப்பாற்றப்படுமா?





காமன்வெல்த்தில் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்கும் தகுதியை இலங்கை அரசு இழந்துவிட்டது. அந்நாட்டில் 2009ல் நடந்த மனித உரிமை மீறல்களை
உலக நாடுகள் அனைத்தும் அறிந்துள்ளன. அத்துடன்
தன் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டாக்டர் ஷிரானி பண்டாரநாயகாவை அவர் தன்
நாட்டு சட்டப்படி நடந்து கொண்டதற்காக கடுமையாகத் தண்டித்ததுடன் அவருடைய இடத்தில் தன் முன்னாள்
அட்டர்னி ஜெனரலைக் கொண்டு வந்து உட்கார வைத்து
நீதியைக் கேலிக்குரியதாக்கி இருக்கிறது. இதனால்
காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கான குறைந்த பட்ட தகுதியையும் இலங்கை அரசு இழந்துவிட்டது. எனவே வரும் நவம்பர் (2013) மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் சந்திப்பில் இங்கிலாந்தின் அரசியோ அரசு பிரதிநிதியோ கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள் இங்கிலாந்தின் வக்கீல்களும் மனித உரிமை ஆர்வலர்களும்.

காமன்வெல்த் கூட்டமைப்பின் முக்கியமான நோக்கங்கள்: சமத்துவம், அடுத்தவர் பாதுகாப்பை மதிப்பது, அரசியல் பொருளாதர சமூக வளர்ச்சிக்கும்
கலாச்சார உரிமைக்கும் பாடுபடுவது, எக்காரணம் கொண்டும் எதை முன்னிட்டும் எவருடைய மனித உரிமைகளுக்கும் கேடு வராமல் அமைதியை நிலைநாட்டுவது..

காமன்வெல்த் கூட்டமைப்பின் நோக்கங்கள் அனைத்தையும் கைவிட்டதுடன் தன் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் முற்றிலும் நேர்மாறாக இலங்கை அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பது உறுதி
செய்யப்பட்டிருக்கும் நிலையில் காமன்வெல்த கூட்டமைப்பு இலங்கை அரசை காமன்வெல்த்திலிருந்து விலக்கி (சஸ்பெண்ட்) வைக்க வேண்டும்.

ஓர் அரசை இம்மாதிரியான காரணங்களுக்காக விலக்கி வைப்பது காமன்வெல்த் கூட்டமைப்புக்கு புதிதல்ல.
இன்றும் கூட 54 நாடுகள் கொண்ட இக்கூட்டமைப்பில் 53 நாடுகள் தான் இருக்கின்றன. பீஜி இராணுவ அரசு
விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

1977ல் உகாண்டாவில் இடிஅமீனின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து அந்நாட்டை விலக்கி வைத்தது.
ஜிம்பாவேயில் (white minority govt of Ian Smith) , தெற்கு ஆப்பிரிக்காவில், ஏன் பாகிஸ்தானைக் கூட விலக்கி வைத்த நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன.
பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்தப்போது பிரிக்கப்பட்டதாக கோபித்துக்கொண்டு பாகிஸ்தான்
காமன்வெல்த்திலிருந்து விலகிக்கொண்டதும் உண்டு.
அதுமட்டுமல்ல, 1977 (Gleneagles Agreement that banned sporting contact with Apartheid South Africa.) உடன்படிக்கைப்படி விலக்கி வைக்கப்பட்டிருந்த தெற்கு ஆப்பிரிக்காவின் விளையாட்டு வீரர்களை 1981ல் நியூசிலாந்தின் பிரதமர்
ராபர்ட் முல்டன் வரவேற்று கொண்டாடியதை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தது.

இன்று?

அதே அந்த காமன்வெல்த் நாடுகளின் சந்திப்பு இலங்கையில் நடப்பதன் மூலம் அந்நாட்டின் அதிபரான
ராஜபக்சே காமன்வெல்த அமைப்பின் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுவார். அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவரே காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு தலைவராக இருப்பார்!!
காமன்வெல்த்தின் உறுப்பினராக கூட இருக்கும் தகுதியை இழந்துவிட்ட ஓர் அரசு நவம்பரில் இலங்கையில் நடக்கவிருக்கும் இச்சந்திப்பின் மூலம்
அந்த அமைப்பிற்கே தலைவராகும் அவலம் நடந்துவிடும்!
காமன்வெல்த் சந்திப்புகள் வெறும் கிட்டிபார்ட்டிகளாகிவிடும். காமன்வெல்த்தின் மீது இருக்கும் ஓரளவு மரியாதையும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும்.

இக்காரணங்களுக்காகவே கனடா அரசு இலன்கையில் நடக்கவிருக்கும் சந்திப்பை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இங்கிலாந்தில் எதிர்ப்புகள் வலுக்கின்றன. இங்கிலாந்து அரசிக்கு வேண்டுகோள்
வைப்பதும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும் நடந்துவருகிறது. தமிழக அரசும் இந்தியப்பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனாலேயே என்னவோ, இது என்னவோ தமிழ்நாட்டு பிரச்சனை போல நினைத்துக் கொண்டு
வழக்கம்போல கள்ளமவுனம் சாதிக்கிறது இந்திய அரசு!

காமன்வெல்த் காப்பாற்றப்படுமா?