நிலவு ஒரு பெண்ணாக என்று கற்பனையில் இப்போதும் எழுதுவதில்
ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. நிலவுக்கும் பெண்ணுக்கும் எப்ப்போதும்
ஓர் ஈர்ப்பு. நிலவைப் பெண்ணாக உருவகிப்பது அழகின் ஆராதனை மட்டுமல்ல.
நிலவே அவள். அவளே நிலவு.
நிலவின் ஒவ்வொரு நாளும் அவளுக்கானவை. அவளைப் போலவே நிலவும் வளர்வதும் தேய்வதும் மறைவதும் பூரணமாய் மலர்வதும் மீண்டும் இதே தொடர்வதும் அவள் கண்டறிந்த ரகசியங்கள். அவளுக்கும் நிலவுக்குமான அந்த அந்தரங்க உறவு நிலை அவள் பூரணமாக அறிந்து கொள்ள எத்தனையோ பருவங்களைத் தாண்டி வழிவழியாய் தன் அடுத்த தலைமுறைகள் அறிந்து கொள்ளவும் அதற்கு அடுத்த நிலையில் அவள் கடந்து வந்த பாதையில் முன்னேறி செல்லவும் அவள் எத்தனையோ மவுன யுத்தங்கள் நடத்தி இருப்பாள்.
இயற்கை அவள் விட்டுச்சென்ற தடயங்களை அழித்திருக்க கூடும். அந்த அழிபாடுகளுக்கு நடுவில் அவள் கண்டறிந்த நிலவின் ரகசியங்கள்
பெண்ணுடலின் பிம்பமாய் அவளைத் தொடர்ந்திருக்கும்.
நிலவுக்கும் அவளுக்குமான அந்த ரகசியங்களே உணவில், உடையில்,
களவில், காமத்தில், இரவில் பகலில் எத்தனை எத்தனையோ மாற்றங்களை உருவாக்கின. நாள் கிழமை திங்கள் என அவள் நாட்காட்டி எங்கும் அவள்
கோடுகளின் குறியீடுகள். மனித வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.
ரத்தம் சிந்தும் போதெல்லாம் உயிரினங்கள் மாண்டுபோவதை மட்டுமே அறிந்த ஆதிகால இனக்குழு சமூகத்தில் மாதந்தோறும் அவளிடமிருந்து வெளிப்படும் ரத்தப்போக்கு அவளை எதுவும் செய்யாமலிருப்பது அன்றைக்கு அவனுக்குப் புரியாதப் புதிராக மட்டுமே இருந்திருக்கும். அந்தப் புதிருக்கு விடைக் கிடைக்கும் முன்னே ரத்தப்போக்கினூடாகவே புதியதொரு ஜீவனின் ஜனனம்,
புரிந்தும் புரியாத புதிராக அவள் , அவனை மருட்டி இருப்பாள். அவளைக்
காணும் போதெல்லாம் ரத்தச்சிவப்பு அவன் நினைவில் வந்து கனவில் வந்து
அவனை விரட்டி இருக்கும்.
மனிதன் எதைக்கண்டெல்லாம் அச்சம் கொண்டானோ அதெல்லாம் அவன் வழிபாட்டுக்குரியதாக மாறியது போலவெ அவளும் அந்த நாட்களில் அவன் வழிபாட்டுக்குரியவளாக தெய்வமாக அவனிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டாள்.
எல்லா மதங்களிலும் இனங்களிலும் சடங்குகளின் போது ரத்தச் சிவப்பு நிறமே
இன்றுவரை எச்சமாய் தொடர்வதன் காரணம் ஆகும்.. பெண்தான் ஆரம்பத்தில் தெய்வீக அம்சமாய் , சக்தியின் அடையாளமாய் மந்திரவாதியாய் மனித குல வாழ்க்கையில் தோற்றமளித்தாள்.
அவளை அவனிடமிருந்து முற்றிலுமாக வேறுபடுத்திய இந்நிகழ்வு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான விளைவுகளைப் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுத்தின. அந்தப் பாதையில் அவள் இறங்குமுகமாக இருந்ததும் அவள் அதனாலேயே அந்த நாட்களில் தீட்டாகிப் போனதும்
இறங்குமுகத்தின் இறுதிக்கட்டம் எனலாம்.
ஆரம்பகாலங்களில் அன்னையே இனக்குழுக்களின் தலைமை பொறுப்பில் இருந்தாள் என்கிற மனித இன வரலாற்றை நாம் அறிவோம்.
மாதவிடாயும் குழந்தைப்பேறும் பெண்ணை தலைமைப் பொறுப்பிலிருந்து இறக்கியது உண்மை. ஆனால்,.
பெண்ணுடலின் இந்த இயற்கையான நிகழ்வே அவளை பல கண்டுபிடிப்புகளின்
அன்னையாக்கியது.
அவள் உடலின் மர்மம் அந்த நாட்களில் அவளைத் தனித்திருக்க செய்த காலத்தில் அவளுடன் இருந்த ஒரே உறவாக இருந்தது நிலவு மட்டுமே.
நிலவை ஒவ்வொரு நாளும் அவள் கவனிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கும் நிலவுக்குமான ஒற்றுமை..
நிலவும் மூன்று நாட்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவளும் அந்த மூன்று நாட்கள் தனித்திருக்கிறாள். 28 நாட்கள் கழிந்தப் பின் மீண்டும் நிலவு மறைகிறது. அவள் உடலும் இதே 28 நாட்கள் சுழற்சியில் மீண்டும் ரத்தப்போக்கைக் காட்டுகிறது. சமூகம் அவளை தனிமைப்படுத்துகிறது.
அவள் நிலவைப் பார்க்கிறாள். இதை எழுதும் போது நாட்கள், 28 நாட்கள்
என்றெல்லாம் எழுதுகிறேன். நாள், கிழமை, திங்கள், இந்த நாள் கணக்கு கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அவளின் அந்த நாட்களின் குறியீட்டு கோடுகளே
முதல் காரணமாக இருந்திருக்கின்றன.
தெற்கு பிரான்சில் , கி.மு. 15000 வருட பழமையான கருடப்பறவையில் எலும்புகளில் காணப்படும் குறியீடுகளை வாசித்த அலெக்ஷாண்டர் மார்ஷக்
அந்தக் கோடுகள் நிலவை அடிப்படையாகக் கொண்ட காலக்கணக்காக (based on lunar month) இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
3000 வருட பழமையான சீனக்காலண்டர் கணக்கும் 28 நாட்களின் அடிப்படையில் இருப்பது இதனால் தான்.
இன்றும் காடுகளில் மனித அறிவியலின் தாக்கத்திலிருந்து விலகி தனித்து வாழும் ஆதிவாசிகளின் கணக்குகளில் பெரிய எண்கள் கிடையாது. சில
ஆதிவாசிகள் ஆயிரம் என்ற எண் எழுத்தை அறியாதவர்கள் தான்.
மரக்குச்சியாலும் உலோகத்தாலும் பெண்தான் முதலில் வரைய ஆரம்பித்தாள்.
நிலவு வந்தவுடன் ஒரு கோடு போட்டாள். மறுநாள் நிலவு வந்தவுடன் இன்னொரு கோடு போட்டாள். இப்படி ஒவ்வொரு நாளும் நிலவு வந்தவுடன்
அவள் கோடு கோடாக போட்டுக் கொண்டே வந்தாள். காலம் செல்ல செல்ல
அவளுக்குப் புரிந்தது. நிலவின் கணக்கும் அவளின் அந்த நாட்கள் கணக்கும்.
இப்படித்தான் அவளிடமிருந்து வானவியலறிவு வளர்ந்தது.
நாட்காட்டியும் பருவங்களும் அவள் வைத்தப் புள்ளியிலிருந்து வரையப்பட்ட கோடுகள் தான்.
ஆதிவாசிகளின் ஓவியங்கள் கோடுகளாகவும் கோடுகளை அடிப்படையாகக் கொண்ட முக்கோணம், செவ்வகம், வட்டம் என்று ஜியாமெண்ட்ரி வடிவங்களாக இருக்க இதுவே காரணம்.
தனித்திருந்த பெண் அந்த நாட்களில் அவள் எப்போதும் செய்யும் சில வேலைகள் செய்யக் கூடாது என்று தடை செய்யப்பட்டாள். அந்த தடைகளை
எல்லாம் தன் புதிய புதிய கண்டுபிடிப்புகளின் ஊடாகவே அவள் கடந்து வந்தாள். மகப்பேறின் போது அவள் கைகள் அழுக்கானது. அவள்
இறைச்சியை, காய்கறியை தீயில் சுடும் வேலையை, உணவைப் பகிர்ந்து அளிக்கும் வேலையையோ செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவள் தன் கைகளைப் பயன்படுத்தாமல் அதே நேரத்தில் இந்த வேலைகளை எல்லாம் செய்யக் கூடிய பொருட்களை உருவாக்கினாள். அன்றாடம் அவள் வாழ்க்கையில் அவள் அருகே இருக்கும் காய்ந்த கொட்டை, சிரட்டை, மரக்குச்சி, இவைகளைக் கொண்டு தான் அவள் கரண்டி, சூப் கரண்டி, சாப் ஸ்டிக் இத்தியாதிகளின்
கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டாள். இலைகளில் சாப்பிடவும் அவளே சொல்லிக்கொடுத்தாள்.
தண்ணீரை அந்த நாட்களில் அவள் தொட்டுவிட்டாள் தண்ணீருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று மனிதன் பயந்தக் காலத்தில் தண்ணீரைத் தொடாமல்
சேமித்து வைக்கவும் எடுத்து வரவுமான சுரைக் குடுக்கைகள், மரக்குடுவைகள்
என்று அவள் கண்டு பிடிப்புகள் தொடர்ந்தன.
அந்த நாட்களில் அவள் காலடி நிலத்தில் பதிந்தால் நிலத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்த காலத்தில் அவள் தன் பாதங்கள் நிலத்தில்
பதியாமல் நடக்கும் இரும்பு காலணிகள்,., தோல் காலணிகளைக் உருவாக்கினாள். நிலத்தில் சாய்ந்து தூங்கக்கூடாது என்ற நிலையில்
நிலத்திலிருந்து ஓரடி இரண்டடி உயரத்தில் படுத்திருக்கும் சொகுசுக் கட்டிலின்
ஆரம்ப சொந்தக்காரி அவளானாள்.
மண்ணைக் குழைத்து பாண்டம் செய்யும் போது அவள் செய்தக் குடுவை
டிசைன் அவள் கர்ப்பினி காலத்தின் மாடலிங் காட்சிதான்
தாந்திரிகம் பெண்ணை நான்கு வகையாகப் பிரிக்கிறது. குமரி அதாவது கன்னிப்பெண். பூப்படைவதற்கு முந்திய நிலை.
பூப்படையும்நிலை அவள் அழகின் சிரிப்பு. அதை வெள்ளைத் தாமரையிலிருக்கும் சரசுவதி தேவியாக உருவகிப்பது, அதற்கு அடுத்த நிலை
அல்லது மாதவிடாய் முடிந்த அடுத்த வாரம், கருமுட்டை உருவாகும் காலம்,
ஆண் பெண் புணர்ச்சிக்கு ஏற்ற காலம் என்று தொல்காப்பியமும் சங்ககால இலக்கியமும் சொல்லும் காலம், பெண்ணின் பூரணத்துவம். அதுவே
இலட்சுமியின் உருவகம். கருமுட்டை அழிந்து மீண்டும் மாதவிடாய்
ரத்தப்போக்கிற்கான காலம், அல்லது நிலவு கண்ணுக்குத் தெரியாத அந்த மூன்று நாட்கள். காளி தேவியின் உருவகம். காளியின் முகம் கறுப்பாக காட்டப்படுவதன் காரணம் இதுதான்.
குமரி - கன்னிப்பெண்
சரசுவதி - பிறை நிலவு
இலட்சுமி - முழு நிலவு
காளி - அமாவாசை
இன்னொரு வகையில்
குமரி - சிறுமி
பிறைநிலவு --- இளம்பெண்
முழுநிலவு ---- தாய்மை
அமாவாசை - மூதாட்டி, எல்லாம் அறிந்த சக்தியின் வடிவம்.
என்று பெண் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி காட்டுவதும் உண்டு.
நிலவும் பெண் தெய்வ வழிபாடும் இப்படியாக தனக்குள் பல்வேறு உருவகங்களைக் கொண்டிருக்கின்றன.-
இந்த உருவகங்களின் எச்சங்களாக இன்றைக்கும் உலகம் எங்கும் பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான அடையாளங்களில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருக்கின்றன.
கி.மு. 25000 வருட பழமையான மனிதன் செய்த கல்வேலைப்பாடு உட்கார்ந்த நிலையிலிருக்கும் பெண்ணின் உடல்.
ஆஸ்திர்யா பைர்நஸ் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கால்களையும் மடக்கி குத்தவச்ச மாதிரி பெண் உட்கார்ந்திருக்கும் காட்சி.
அங்கெல்லாம் அதெல்லாம் வரலாறாக மனிதன் கடந்து வந்தப் பாதையை திருப்பிப் பார்க்கும் ஏடுகளாக மட்டுமே இருக்கின்றன. இங்கே, நம் இந்தியாவில்.?????????!!!!!!!
அசாம் மாநிலத்தில் கெளகத்தி ரயில்வே நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் துர்க்கா காமக்யா கோவில் யோனி வழிபாட்டு ஸ்தலம்
"யோனிபீடம் " என்றழைக்கப்படுகிறது. இதற்கு சொல்லப்படும் புராணக்கதை.
கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதைக் கேட்காமல் அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள்
அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்
அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனிவழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்! சரி கதையை விட்டுத்தள்ளுங்கள்.
இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள்.
அந்த மூன்று நாட்களும் அக்கோவில் குளத்து நீர் சிவப்பாக மாறிவிடும் அதிசயம் நடக்கும்.! அந்த புண்ணிய நீரை பக்தர்களுக்கு புனித நீராக
கொடுப்பார்கள். (கோவில் குளத்தில் கலர்ப்பொடி தூவுகிறார்கள். அதனால் தான்
குளத்து நீர் சிவப்பாக மாறுகிறது என்பது தான் உறுதி செய்யப்பட்ட செய்தி)
அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும்.
அசாமில் தான் அப்படி என்றால் தமிழ்நாட்டிலும் இதெல்லாம் உண்டு.
இன்றைய கேரளாவில் இருக்கும் செங்கனூர் பகவதி அம்மன் கோவில்
கேரளாவில் இருக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தமிழருக்கானவைதான்.
கேரளா என்றவுடன் இன்றைய முல்லைப்பெரியாறு கேரளாவை நினைக்கவேண்டாம். சிலப்பதிகாரம் செங்குட்டுவன் காலத்து மலையாள
பூமி. இந்தப் பகவதி அம்மன் கோவில் தீட்டுத்துணி ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. இந்த தீட்டுத்துணி எவரிடமிருக்கிறதோ அவருக்கு அதிர்ஷ்டம்
கொட்டோ கொட்டு என்று கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமாம்.
அதனால் தான் முதலமைச்சர் முதல் நீதிபதிகள் வரை இந்த தீட்டுத்துணியை வாங்கிச் செல்ல போட்டி. பலவருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இக்கோவில்களின் தொடரும் இச்சடங்குகள் இனக்குழு வழிபாட்டின்
பெண் வழிபாட்டின் எச்சங்கள் தானே தவிர வேறல்ல,
மருத நில வாழ்க்கையில் கேரளாவில் இன்றும் "உக்காரல்" என்ற சடங்கு மிகவும் புகழ்பெற்றது. பெண் பூப்படைவதை கிராமப்புறங்களின் பெண் உட்கார்ந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள்.
தை மாதத்தில் அறுவடைக்குப் பின் அந்தக் கோடையில் மண் தக தகவென
சிவப்பாக காட்சி அளிக்கும். அந்த நாட்களை பூமாதேவி உட்கார்ந்துவிட்டாள்
என்கிறார்கள். அந்த மூன்று நாட்களும் விவசாயம் சார்ந்த எந்த வேலைகளும் நடக்காது. அதிலும் குறிப்பாக விவசாய நிலத்தில் வேலை செய்யும் மக்களே
இச்சடங்கை நம்புகிறார்கள். நிலம் அவர்களுக்கான உடமையாக இல்லாத இக்காலத்திலும் இந்த மூன்று நாட்களும் நிலவுடமையாளர்கள் அவர்களை
ஒன்றும் சொல்வதில்லை.
இக்கோவில்களில் தொடரும் வழிபாட்டின் எச்சங்களும் சில சடங்குகளும்
மனித இன வரலாற்றில் பெண் வழிபாட்டின் மிச்சங்களே தவிர வேறல்ல.