அவள் இப்போதெல்லாம் அரண்மனையை விட்டு வெளியில்
வருவதே இல்லை. குருஷேத்திர வெற்றிக்குப்பின் பாண்டவர்களால்
அந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை.. எதையோ இழந்துவிட்டதைப்போல அவர்களைச் சுற்றி வெறுமை நிறைந்திருந்தது.
கூடவே இருந்த கிருஷ்ணனும் அவன் தேசத்தில் ஏற்பட்டிருக்கும்
உள்நாட்டு பிரச்சனையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான். ரொம்ப காலம் பாண்டவர்களுக்காகவே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததில் தன் தேசத்து மக்களின் பிரச்சனைகளை அவன் கவனிக்க தவறிவிட்டதாக அமைச்சர் பெருமக்கள் குற்றம் சாட்டினார்கள். ‘அவன் பாண்டவர்களுக்காகவா அலைந்தான்? எல்லாம் அந்தப் பாஞ்சாலிக்காகத்தான்’ என்ற அவன் அந்தப்புர அரசிகளின் பொறாமையிலும் உண்மை இல்லாமலில்லை.
முன்பெல்லாம் அரசவைக் கூடும்போது பட்டத்து மகாராணி என்ற
நிலையில் அவள் அந்த அரசவைக்கு வந்து கொண்டிருந்தாள். அவள்
வந்து உட்கார்ந்த பிறகுதான் அந்த மண்டபத்திற்கே ஒரு தனி அழகு கூடிவரும். அல்லியை சந்தித்துவிட்டு வந்த பின், அவள் அரசவைக்கும் வருவதில்லை.அவள் தன்னைத்தானே சிறை வைத்துக் கொண்டு எதற்கோ தண்டனை அனுபவிக்கிற மாதிரி தனித்திருந்தாள்.
தேசத்திற்கே ராஜாவா இருந்தாலும் அவள் அந்தப்புரத்தின் கதவுகள் திறக்கும் சாவி அவனிடம் இல்லை.
ஒவ்வொரு தேசத்து இளவரசிகளையும் மயக்குவதில் கைதேர்ந்த அர்ஜூனன் இவள் விஷயத்தில் மட்டும் மவுனம் சாதித்தான். “என்னவாச்சு.. அர்ஜூனா, ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு வாயேன்’ என்று சாடைமாடையாக சொல்லிப் பார்த்துவிட்டான். அவன் புரிந்து கொண்டும் எதுவும் செய்யவில்லை. பீமனுக்கு காயங்கள் ஆறவில்லை. அரண்மனை மருத்துவர்கள் பெண் உறவைத் தவிர்க்க சொல்லிவிட்டார்கள். இளைய தம்பிகளிடம் இதுபற்றி வெளிப்படையாகப் பேச எதோ தயக்கம் .. ராஜமாதாவோ விதுரனுடன் சேர்ந்து வனப்பிரஸ்தம் போய்விட்டாள்.
…**
அரண்மனையில் எப்போதும் அலங்காரங்களுடன் மட்டுமே அரசிகளைச் சந்தித்துப் பழகி இருக்கும் திரெளபதிக்கு அல்லியைச் சந்திக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அவள் தலைமுடியை உச்சியில் கொண்டையாக முடிந்திருந்தாள். நெய் தடவித் தடவி படிய வாரிய கூந்தலாகத் தெரியவில்லை. காற்றில் பறந்து கொண்டிருந்த சுருட்டை முடிகள். கண்களில் மை எழுதி இருக்கவில்லை, மாவிலைக் கொழுந்து நிறம். அது அந்த வெயிலில் பட்டு மினுங்கியது. ரொம்பவும் அவளை ஆச்சரியப்படுத்தியது அவளின் ஒற்றை முலை. .. அவளுக்கு வலது முலை இல்லை. அதனாலோ என்னவோ இடது முலை பருத்து அவள் கச்சைக்குள் அடங்காமல் திமிறி எட்டிப்பார்த்தது.. இவளின் எது அர்ஜுனனை வசப்படுத்தி இருக்கும் என்ற எண்ணத்துடன்
அல்லியைக் கூர்ந்து கவனித்தாள். அல்லி அவள் பார்வை படும்
இடத்தை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு
“இவளிடம் எதைப் பார்த்து நம்ம அர்ஜூனன் மயங்கினான்?’ என்று
யோசிக்கின்றீர்களா, அரசி?” அல்லி இப்படி ஒளிவுமறைவில்லாமல்
கேட்டுவிடுவாள் என்று திரெளபதி எதிர்பார்க்கவில்லை. நாம் நினைத்திருப்பதை விட இப்பெண் புத்திசாலி என்பதை அவள் பேச
ஆரம்பித்தவுடனேயே புரிந்துகொண்டாள்.
ஆயுதப்பயிற்சி செய்துவிட்டுத் திரும்பியவள் இன்னும் நீராடவில்லை.
அவள் உடலெங்கும் வேர்வையின் ஈரம் படிந்திருந்தது. எப்போதும்
யாரையும் அவள் தன் அந்தப்புரத்தில் சந்திப்பதில்லை. ஆனால்
திரெளபதியை அவள் அந்தப்புரத்தில் காத்திருக்கச் சொன்னது
அரண்மனைக்கே அதிசயமாக இருந்தது.
“தேவி மன்னிக்க வேண்டும், வெளியிலிருந்து வருகிறேன். நீராடிவிட்டு
உங்கள் அருகில் வந்து நீங்கள் முடிந்திருக்கும் கூந்தலைத் தொட்டு
வருட வேண்டும்.. என் நீண்ட நாள் ஆசை..” அல்லி சொல்லவும்
திரெளபதி முகத்தில் படர்ந்திருந்த சுருக்கங்கள் வெளிவந்தன. அவள் கூந்தலே பாரமாகச் சுமக்க முடியாத பாவத்தின் மூட்டையாகத் தலையில் அவளே ஏற்றி வைத்துக்கொண்டு அலையும் புத்திரசோகமாக அவளை அலையவிட்டிருக்கிறது என்பதை யாரிடம் சொல்லமுடியும்? அல்லியின் கண்களைப் பார்க்காமல் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் அவளைத் துரத்திக்கொண்டே வருகின்றன அந்தக் காட்சிகள் .
தருமராசனோடு அஸ்தினாபுரத்தில் அரசவை கூடிய அந்த முதல் நாளில் அரண்மனை வாசலில் தலைவிரிகோலமாகக் கூடி இருந்து
ஒப்பாரி வைத்த பெண்களின் அழுகுரல் .. வற்றிய தாய் முலையில் முட்டி மோதி அழும் குழந்தைகளின் அழுபசி அவள் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது. அரச குடும்பத்தின் வாரிசுப்போரில் அதற்குச் சம்பந்தமே இல்லாத பெண்கள் , தங்கள் கணவன்மார்களை இழந்த இளம்பெண்கள், தங்கள் புதல்வர்களை இழந்த பெண்கள் பிச்சியாகி தலைவிரிகோலமாக வீதிகளில் அலைந்து கொண்டிருப்பதாக ஒற்றர்கள் சொன்னது அவளைப் பயமுறுத்துகிறது.
சூளுரைத்தபோது இருந்த ஆத்திரம் அடங்கிவிட்டது. கூந்தலில்
படிந்த ரத்தவாடை அவள் கொதி நிலைக்கு மருந்தாகி அவள் பசி
ஆற்றிவிட்டது. ஆனாலும் எல்லாமும் முடிந்து அரசாளும் நாளில்
நிம்மதி இல்லாமல் அலைகிறது அவள் மனம். விரிந்த கூந்தலோடு அலைந்த நாட்களில் இல்லாத துக்கமெல்லாம் கூந்தலை முடிந்து முடிசூடிய பிறகு
அவளைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அவள் ஓடிக் களைத்துவிட்டாள்.
‘தேவி… நீங்களும் வருகின்றீர்களா இன்று நதிக்குளியல் இல்லை.
அரண்மனை குளியல்தான். வாருங்களேன். எங்கள் பாண்டி நாட்டு நன்னீராடல் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமாக இருக்கும்..’
. குளிக்கும் இடத்திற்கு தன்னையும் அழைக்கும் அவளை
அதிசயமாக பார்த்துக்கொண்டே அவளோடு திரெளபதி நடந்தாள்.
அரண்மனையின் வடமேற்கு பகுதியில் அரண்மனையை ஒட்டியும் ஒட்டாமலும் தனித்திருந்தது அச்சிறிய பொய்கை. வைகை நதியை
வளைத்து ஒடித்து அந்தப் பொய்கையில் கொண்டு விட்டிருக்கும்
நீர் தொழில் நுட்பத்தை திரெளபதி பிரமிப்புடன் கவனித்தாள். அரண்மனையில் நீராடும் குளங்களை மட்டுமே அறிந்தவளுக்கு ஓடும் நீரும் அதில் அவர்கள் அமைத்திருக்கும் வேகத்தடை வசதிகள் அவள் பார்வையில் பட்டு அவள் விழிகள் விரிந்தன.
பணிப்பெண்கள் தேவியர் இருவரையும் நீராடத் தயார் செய்தார்கள். ஆபரணங்களை நீக்கியபின் மெல்லிய கச்சையும் இடுப்புத்துணியும் அணிய உதவினார்கள். அரபு நாட்டின் வாசனைத் தைலமும் மலை நாட்டின் மூலிகைத்தைலமும் அடங்கிய எண்ணெயை அப்பணிப்பெண்கள் இருவர் உடலெங்கும் பூசிவிட்டார்கள். . உள்ளங்காலில் பெருவிரல் அருகே அமுக்கி நீவிவிட்டு அப்படியே மெதுவாக அவள் இறுக்கமான தொடைகளை அமுக்கி இலேசாக்கினார்கள். அவள் கருப்பையின் கட்டிகள் உடைந்து வலி மறைந்தது. கைகால்களை அப்பெண்கள் தடவும் போது திரெளபதியின் உடல் மெல்ல மெல்ல கனம் குறைந்து பஞ்சாகிப் பறக்க ஆரம்பித்தது. ரொம்ப காலத்திற்குப் பிறகு அவள் முகத்தில் பாஞ்சால நாட்டுக் கன்னியின் புன்னகை எட்டிப்பார்த்தது.
பொய்கையில் இறங்கியவுடன் அந்த நீரின் மணம் அவள் இதுவரை
அறியாத வாசனையில் அவளைக் கிறங்கடித்தது. அல்லி நீரோட்டத்தை எதிர்த்து நீச்சலடித்துக் கொண்டிருந்தாள். கைகளால் நீரைத் துழாவி நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும் திரெளபதியைப் பாண்டி நாட்டு பணிப்பெண்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு திரெளபதிக்கு நீச்சல் தெரியாது போல என்று பேசிக்கொண்டார்கள். புனித நதிகளில் நீராடி காடு மேடுகளில் வனவாசம் செய்தவளுக்கு நதியோ நதியின் வெள்ளமோ பொருட்டல்ல.
அவளை நீச்சலடிக்கவிடாமல் அந்த நதியில் மிதந்த வாசனைப்பூக்கள்
தொந்தரவு செய்தன. ஒவ்வொரு இதழ்களும் அவள் ஆடை களைந்து
அவளைத் தழுவிச் செல்லும் போது அவள் அல்குல் விரிந்து அவளை விடுவித்த உணர்வு ஏற்பட்டது. இரவின் வலி தீர்க்கும் இந்தப் பொய்கை
இருக்கும்வரை மதுரை தேசத்தில் மீனாட்சியின் அரசாட்சிதான் தொடரும் என்று அவளுக்கு உணர்த்தியது. நன்னீரில் கலந்திருக்கும் மூலிகைச்சாறுகள் அவள் தேகத்தை அடர்வனமாக்கி நிறைத்தன. பச்சையங்கள் வற்றாமல் வனம் செழிக்கும் மந்திரத்தை வைகை ரகசியமாகச் சுமந்து வருகிறாள். நீரின் மொழி ஆதித்தாயின் மொழியல்லவா.. தண்ணீரிலிருந்து திரெளபதிக்கு வெளியில் வரவே விருப்பமில்லை. ஆனால் அல்லி நீராடல் முடித்து தயாராகிவிட்டதால் திரெளபதி படிக்கட்டுகளில் ஏறி வெளியில் வந்தாள். பணிப்பெண்கள் பருத்தி ஆடையால் அவள் ஈர உடம்பை துடைத்தார்கள். ‘நீராடல் சுகமாக இருந்ததா தேவி’ என்று பணிப்பெண் கேட்கவும் ‘உங்கள் தேசத்தின் நன்னீராடல் நறுமண நீராடலாக இருக்கிறதே’ என்றாள் திரெளபதி.
“ஆம் தேவி, இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், , நெல்லி, ஒத்தகடு, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அமரேணுகம், காஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி, கதிர்நகை ஆகியவற்றின் சாறெடுத்து நீராடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் , முந்திய படித்துறையில் , நீராடல் முடியும்வரை, கொஞ்சம் கொஞ்சமாக
விழுந்து கொண்டே இருக்கும் . வாசனைக்கு மட்டுமல்ல
மருத்துவ குணமும் கொண்ட மூலிகைச்சாறுகளும் கலந்திருப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும் “ சாதாரணமாக அப்பெண் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இத்தனை மூலிகைகளா.. பெண்ணின் நீராடலுக்கு.. !! அரண்மனையில் அரசனுக்காக வாசனைத்திரவியங்கள் கலந்து நீராடி அவனைப் படுக்கையில் மகிழ்விக்கப் பெண்ணுடலை தயார் செய்யும் அரண்மனை குளியல்களை அறிந்தவளுக்கு களைப்பும் இரவின் வெட்கையும் காயமும் வேதனையும் கடந்துவரப் பெண் தன்னுடலை நீராட்டும் மூலிகை நீராடல் .. புதுமையாக இருந்தது.
பெண்ணின் உடல் ராஜாங்க முத்திரைப்பதித்த பத்திரமல்ல, அது அவளுக்கே அவளுக்கானது , அவளுடல், அவள் தேசம் .. மெல்ல அவள் தன் உடலைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள்.
பணிப்பெண் அவள் தலையில் சுற்றி இருந்த துணியை எடுத்து
மெதுவாகத் துவட்டினாள். மூங்கில் கட்டிலில் அவளைப் படுக்க வைத்தாள். கட்டிலுக்கடியில் கங்கு நிறைந்த மண்சட்டியிலிருந்து வந்த அகில் புகையின் இதமான சூடு அவள் நீண்ட விரி கூந்தலுக்கிடையில் பரவி ஈரத்தை உறிஞ்சி வாசனையைப் பூசிக்கொண்டிருந்தது. மெல்லிய புகை மண்டலத்தில் அவளுடல் பூப்போல மெல்ல மெல்ல ஆகாசத்தில் றக்கை கட்டிக்கொண்டு மிதக்க ஆரம்பித்தது. அல்லி ராஜ்யத்தின் அரண்மனை வாசம் இதுவரை பூட்டி இருந்த கதவுகளைத் திறந்துவிட்டது.
அன்று மாலையில் புலந்திரன் அவளை சந்திக்க வருவதாகச் சேதி அனுப்பி இருந்தான். மகனாக இருந்தாலும் யாரும் அல்லியின் அரண்மனைக்கு வர முன் அனுமதி வேண்டும். திரெளபதிக்கும் புலந்திரனை நேரில் சந்திக்க விருப்பம் இருந்தது.
அவன் அர்ஜூனன் விழிகளையும் பீமன் தோள்களையும்
சேர்த்துக்கொண்டு பிறந்திருக்கும் மாவீரன் என்று சுபத்திரை
அடிக்கடி சொல்லுவாள். அப்படி ஒரு ஆண்மகன் இருந்தால்
எப்படி இருக்கும்? அவள் கற்பனைக்குள் அடங்கவில்லை அவன்.
சரியாக சொன்ன நேரத்தில் அவன் அரண்மனைக்குள் நுழைந்தான்.
அரச குடும்பத்துப் பட்டாடைகள் இல்லை. அவன் மார்பில்
தொங்கிக்கொண்டிருந்தது ஒற்றை முத்துமாலை. தேக்குமரம் போல உடலும் கூர்மையான கண்களும் பரந்த நெற்றியும் உடலமைப்பில்
சற்றே நீண்ட கால்களும் அவன் தோற்றத்தை தனித்துக் காட்டியது.
வந்தவன் திரெளபதியின் பாதம் தொட்டு வணங்கினான்.
“தாயே .. உங்கள் தோள் அணைத்து மாண்ட என் சகோதர்களுக்காக கண்ணீர் விட அனுமதி வேண்டும்” என்றான்.
‘அவன் எந்த சகோதரர்களைச் சொல்கிறான்?’
திரெளபதிக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவள் கைகள் நீண்டு அவனைத் தழுவிக்கொண்டன.
அவன் மார்பில் எழுந்த விம்மல்.. அவள் தழுவலில் அடங்க
முடியாமல் அவள் உடலெங்கும் பரவியது. அவள் கண்ணீர்
அவன் மார்பில் அணிந்திருந்த முத்துமாலையில் சொட்டு
சொட்டாக விழுந்து புரண்டது.
“அன்னையே.. என் சகோதரர்கள் ஐவரையும் இழந்த பிறகும்
என்னை ஏன் அழைக்கவில்லை, ? என் வீரத்தின் மீது நம்பிக்கை இல்லையா அல்லது இவன் துச்சலையின் மகன் காந்தாரியின்
புருஷன் தானே என்பது மட்டும்தான் நினைவுக்கு வந்ததா?
இவன் அவன் மாமனுக்கு மருமகன் தானே என்றெண்ணி ஒதுக்கி
வைத்துவிட்டீர்களா? இவனும் அர்ஜூனன் புத்திரன்தான் என்பதை
மறந்துவிட்டதற்காக அழவில்லை தாயே..அல்லி ராஜ்யத்தின் வீரத்தையும்
விவேகத்தையும் இழந்துவிட்டீர்களே என்பதற்காக அழுகிறேன்?”
அவன் குரல் உடைந்து உடைந்து வெளியில் வந்து திரெளபதியை
உடைக்க ஆரம்பித்தது. அவன் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவளிடம்
பதிலில்லை. ஆனாலும் அவன் தோளணைத்து அழுத அக்கணம் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. இதுவரை யாருமே அவள் தோளணைத்து கண்ணீர் துடைக்கவில்லையே.
பாண்டவர்கள் என்று நினைத்து அஸ்வத்தாமனால் கொலை செய்யப்பட்ட அவள் புத்திரர்களின் முகம் நினைவுக்கு வந்தது. அத்தருணத்தில் அவள் மட்டுமே அக்கூடாரத்தில் தனித்து நின்றாளே . பாண்டு புத்திரர்கள் யாருக்குமே புத்திரசோகம் வரவும் இல்லை. அவர்கள் கொலையுண்ட தன் புத்திரர்கள் மார்பில் விழுந்து புரண்டழும்
அவளை அணைத்து ஆறுதல் சொல்லவும் அருகில் வரவில்லை. அபிமன்யு
போர்க்களத்தில் இறந்தபோது சுபத்திரயைக் கட்டிப்பிடித்து அழுத அர்ஜூனன்,
கடோத்கஜன் மாண்டபோது தன் புத்திரனின் உடலைச் சுமந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறிய பீமன் இவர்கள் யாருக்குமே அன்றைக்கு புத்திரசோகம் வரவில்லையே !விலகியே நின்றார்களே!!.. துன்ப காலத்திலெல்லாம் துணையாக நின்ற கிருஷ்ணன் மூன்றாம் மனிதனாக ஏன் முகம் மறைத்துக்கொண்டான்? இதோ.. ஓர் ஆண்மகன் முதல் முறையாக அவளை அணைத்து ஆறுதல் சொல்கிறான்,
இவன் அர்ஜூன்ன் புத்திரனல்ல, இவன் அல்லியின் மகன்..
இருவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள்.
பதிலை எதிர்பார்த்து கேள்வி கேட்கவில்லை அவன். அவன் உள்ளத்தில்
அடக்கிவைத்திருந்ததைக் கொட்டி தீர்த்துவிட்டான்.
திரெளபதி புறப்படும் அந்த நாளும் வந்தது. அல்லி அன்றிரவுதான்
திரெளபதியின் படுக்கையறையில் நுழைந்தாள். தூங்காமல் விழித்திருக்கும்
திரெளபதியைப் பார்த்து “வாருங்கள் தேவி, வெளியில் நிலா வெளிச்சம்.
காலாற நடந்துவிட்டு வருவோம்” என்றாள். இந்த இரவிலா, வெளியில்
நடப்பதா” ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டே சீனப்பட்டு
சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு அவளுடன் வெளியில் வந்தாள்.
கூட துணைக்கு யாரும் வரவேண்டாம் என்று அல்லி கை அசைத்தாள்.
அரண்மனையிலிருந்து தேவியர் இருவரும் காலார நடந்தே அரண்மனை கதவுகளைத் தாண்டி நடந்தார்கள்.
அந்த இரவிலும் மதுரை நகரம் தூங்கவில்லை. கோவில் வாசல் கடைவீதிகளில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. வண்டிகளில் வந்து இறங்கிக்கொண்டிருக்கும் முத்துப்பெட்டிகளை வியாபாரிகள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். இரவு சில்லறை வியாபாரங்களுக்கானதல்ல. மொத்தமாக பொருட்களை வாங்கி விற்கும் பல தேசத்து பெரு வணிகர்கள்
அவர்களின் மொழிகளில் கடை வீதி புதிய தேசமாக காட்சி அளித்தது. யவனர்களின் நடமாட்டம் அதிகமாக தெரிந்தது. கடைவீதியில் அரிசிமாவுப் புட்டு, திணைமாவுப் புட்டு, தேங்காய் மணத்துடன் சுடச்சுட விற்றுக்கொண்டிருக்கும் பெண்கள்., அதை இலையில் வாங்கி கையில் வைத்துச் சாப்பிட்டுக்கொண்டே நடக்கும் பாணர்களின் கூட்டம்..
அதில் ஒரு சிலர் அரசியை அடையாளம் கண்டு தலைவணங்கினார்களே தவிர பெரிதாக வேறு எதுவுமில்லை. அவரவர் அவரவர் வேலையில் மும்மரமாக இருப்பது தெரிந்தது.
நதியோரத்தில் மருத மரத்தடியில் மக்கள் உட்காரும் வளைவான
இருக்கைகள் ,.. நிலவொளியில் வைகை அமைதியாக இருந்தாள்.
இரு பெண்களும் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே மெளன விரதமிருப்பது என்று ஒரே நேரத்தில் யோசித்துக்கொண்டிருக்கும் போது
“தேவி , நீங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சி. என்னிடம் எதாவது சொல்ல
விரும்பி அதைச் சொல்லாமல் போகின்றீர்களோ என்று தயக்கமாக இருக்கிறது.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அல்லி ராஜ்யத்திற்கு வரலாம், “
“ஆம் எதற்காக வந்தேன்? எதைத் தேடி இவள் ராஜ்யத்திற்கு வந்தேன்?
எதுவும் அவள் கேட்கும்போது சொல்வதற்கில்லை”
“உன்னை நேரில் பார்க்கவேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.
இப்போதுதான் அதற்கு நேரம் வாய்த்தது.. வேறொன்றுமில்லை”
“எனக்கும் உங்களைக் கண்டதில் அளவில்லாத மகிழ்ச்சியும்
மன நிறைவும் தேவி, மீண்டும் எப்போது வருவீர்கள்?”
“புலந்திரன் முடிசூட்டு விழாவிற்கு அழைப்பாய்தானே, அப்போது
நாங்கள் அனைவரும் வருவோம்”
அல்லி சிரித்தாள்.
தேவி.. அப்படியானால் நீங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.
புலந்திரனுக்கு அல்லி ராஜ்யம் முடிசூட்டாது. அவன் வயிற்றில்
பெண்மகவு பிறந்தால் அவளுக்கு ஆயக்கலைகள் அறுபத்து நாலும்
கற்பித்து அவள் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அவளுக்கு முடி சூட்டுவோம்.
அப்படி இல்லை என்றால் அல்லி ராஜ்யத்தை எம் அரசி
மீனாட்சி தேவியிடம் திருப்பிக் கொடுத்துவிடுவோம். மீனாட்சியின்
பச்சைக்கிளி பறந்துவந்து எந்தப் பெண்ணின் தோளில் அமர்கிறதோ
அவளே இந்த அல்லி ராஜ்யத்தை ஆளப்பிறந்தவள், இந்த மண் எங்கள் தாய் மீனாட்சியின் மண். அவள் சார்பாகத்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம்”
திரெளபதிக்கு இந்த அரசாட்சி முறையே ஆச்சரியமாக இருந்தது.
அல்லி இதைப்பற்றி விளக்கமாகப் பேச ஆரம்பித்தாள்.
இந்தப் பூமியில் ஆண்தான் அரசாள வேண்டும் என்று அரண்மனை
வாழ் பெண்களையும் நினைக்க வைத்திருக்கிறார்கள். இப்போது அஸ்தினாபுரத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். நம் மாமி குந்தி தேவிக்கு பாண்டுவின் அரசியாக இருப்பதுடன் மன நிறைவு வந்துவிடவில்லையே. எப்படியும் அவளே ராஜமாதாவாக இருக்க வேண்டும் என்ற விபரீத ராஜாங்க ஆசை தானே குந்தியைக் காட்டுக்கு விரட்டியது. மாமன் பாண்டு மகாராஜாவுக்கு அரண்மனையில் இல்லாத வைத்தியமா? வனத்தில் நியோகமுறையில் கருத்தரிக்கும் போது ஆண்வாரிசுள் தான் வேண்டுமென்றாரார் குந்திதேவி. நியோகத்திலும் கூடுகின்ற ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் நடக்க வேண்டும் என்று ஆணை இட்டிருந்தாராமே! தன்னைப் போல ஒரு புதல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏன் தேவி ராஜமாதாக்கள் விரும்புவதில்லை! அவர்களுக்குப் புத்திரர்கள்தான் வேண்டும், அவர்களுக்கு ராஜமாதாவாக வேண்டும், அதற்காக ராஜமாதாக்கள் நடத்துகின்ற அரசியல் இருக்கிறதே.. என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்குவதில்லை அவர்கள் !”
திரெளபதிக்குள் இருந்த ராஜாமாதா .. அப்போது விழித்துக்கொண்டாள்
மதுரை மீனாட்சி ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை ஆரம்பித்துவிட்டது.
அல்லி எழுந்து நின்று கோபுரத்தைப் பார்த்து கும்பிடும்போது
திரெளபதியும் எழுந்து நின்றாள்.
***
தருமன் இமைகொட்டாமல் பாஞ்சாலியின் அரண்மனையைப் பார்த்துக் கொண்டே இருந்தான்… அவள் அன்றைக்கு கேட்டமாதிரி என்னைக் கேள்வி கேட்டிருக்கலாம். “உன்னை வைத்து இழந்தப் பிறகு என்னைப் பணயம் வைத்தாயா ? என்று. எதுவுமே கேட்காமல் இருக்கிறாள்.. அவள் மனசில் என்ன இருக்கிறது ? எப்படித் தெரிந்து கொள்வது?
கணவனாக தெரிந்து கொள்ள எந்த தர்ம சாஸ்திரமும் கற்றுக்கொடுக்கவில்லை. அரசனாகத் தெரிந்து கொள்ள ஏன் அதிகாரமில்லை! எங்கே தோற்றுப்போனேன்? தலைவிரிகோலத்துடன் அவளைக் கண்டபோது கூட தாங்கிக்கொண்டவனுக்கு இப்போது அவள் கூந்தல் மழித்து பத்திய உணவருந்தி தரையில் படுத்திருக்கும் அரண்மனை தவக்கோலம் புரியவில்லை. அவள் அரண்மனையைப் பார்த்துக்கொண்டே
தன் மடியிலிருந்த தரும சாஸ்திரத்தை மூடிவைத்தான் அஸ்தினாபுரம்
இருள் போர்வையை எடுத்து மூடிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது.
-----------------------
(இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை சிறுகதைப்போட்டியில்
பரிசுப்பெற்ற சிறுகதை. )