Monday, October 24, 2016

கற்பிதங்களும் கவிதாசரணும்




அலர் பற்றிய முதல் குறிப்பு வாய்மொழியாய் என்னுடன்
பகிர்ந்து கொண்ட அத்தருணம் ...
நான் இதுவரை அறியாத
கவிதாசரணின் இதிகாசமாய் விரிந்து இன்று "அலர் எனும்
மகா உன்னதமாய் என் முன் ...
அலர் பற்றி கவிதாசரண் பேச ஆரம்பித்தவுடன் வழக்கத்திற்கு
மாறாக நான் அமைதியாக இருந்தேன். அவர் சொல்ல சொல்ல
கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் கண்களை ஊடுருவிப்
பார்த்துக்கொண்டிருந்தேன். மொழிகளின் கற்பிதங்கள் மறைக்கும்
கதைகளை கண்கள் எப்போதும் மறைக்காமல் சொல்லிவிடும் தானே.!
அவர் த்ன்னை மறந்து தன் அடிமனதில் பல
ஆண்டுகள் திறக்காத கதவுகளைத் திறந்து கொண்டிருக்கிறார்.
திறக்கட்டுமே.. இதில் மண்டி கிடக்கும் இருள் விலகட்டுமே.
இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ரகசியச்சாவிகளைப்
பத்திரப்படுத்துவது.?
இப்போது அவரால் திறக்கமுடியவில்லை என்றால் இனி
எப்போதும் அது சாத்தியப்படாது என்ற சின்ன புரிதல்
மட்டுமே  அந்த விசாலமான அறையில்
எங்கள் இருவருடனும் இருந்தது. அத்தருணம் கனமானப்பொழுதாக
நீண்டது . ஓர் அசிரீரி போல ஒலித்த அவர் குரல்,
அப்போது அந்தக் கண்களில் வெளிப்பட்ட கனவுகள்,
அந்த அறை எங்கும் வியாபித்தது.
இந்தக் கவிதாசரணை நான் அறிந்திருக்கவில்லை
என்ற எண்ணம் வந்தவுடன் அவ்விடத்தில் நானொரு
மூன்றாம் மனுஷியாக உட்கார்ந்திருந்தேன்.
அதை அவரும் உணர்ந்திருந்தார். அதைத்தான் அவர்

என்னிடம் எந்த தீர்வுகளையும் எதிர்ப்பார்த்து
உரையாடல் ந்டத்தவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்.
"அண்மையில் புதியமாதவி சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்ததில்
அலர் பற்றிய தகவலைப் பரிமாறிக்கொண்டேன்.சற்றுக் கூடுதலாகப்
பரிமாறிக்கொண்டதாக என்னுள் ஓர் எண்ணம்.அவர் எனக்கு புதிய வழி
சொல்வார் என்பதைவிடவும் யாரோடாவது பேசினால் மனம் சமாதானம்
அடையும் அல்லவா? அந்த சமாதானத்துக்கு மாதவி நம்பகமானவராய்த்
தெரிகிறார் என்பதாலும் தான் " (பக் . 68)


... அலர் ஒரு கற்பிதமா?
கனவா? மாயையா? பல ஆண்டுகள் அவருக்குள் கொஞ்சம்
கொஞ்சமாக செதுக்கப்பட்ட சிற்பம் என்பது அவருடைய புத்தக
வாசிப்பு அனுபவங்களின் ஊடாக நான் வந்தடையும்
புள்ளி. .
(அதிலும் குறிப்பாக "தெய்வம் தெளிமின்" "அடங்கல்"
:"புழுதிக்கோலம் " புத்தகங்கள் )
.

நான் அறிந்த அம்மா திருமதி கவிதாசரண் அல்ல
அலர் கவிதாசரண்.
திருமதி கவிதாசரண் என்ற ஒற்றை
அடையாளத்திற்குள் அலர் கவிதாசரணை அடக்கி
வைத்துவிடமுடியாது. அலர் வேறு கவிதாசரண் வேறல்ல.
பிரிந்து வாழ்ந்திருந்தாலும் சேர்ந்தே சுவாசித்த
ஈருடலாய்  அலரும் கவிதாசரணும்.

ஐம்பூதங்களின் சேர்க்கையே உயிர் என்று சொல்கிறது
அறிவியல். சுவாசிக்கும் காற்றாய் கண்ணுக்குத் தெரியாத
வேர்களைத் தாங்கும் நிலமாய், பச்சையம் வற்றாமல்
வளர்த்து ஆளாக்கும் நீராய், ஆண் பெண் சமூக உறவுகளின்
வட்டத்திற்குள் அடைபடாத ஆகாயமாய்... இறுதியில்..
கடந்த காலத்தின் நிகழ்காலத்தில் கறைகளை தன்
மவுனத்தாலும் பொறுமையாலும் எரித்துப் பொசுக்கி
சாம்பாலாக்கும் நெருப்பாய் ...அந்தச் சாம்பலையே உரமாக்கி
கவிதாசரணை விசுவரூபமாக்கும் சக்தியாய்..
இப்படியாக ஜீவனைப்  பிரசவிக்கும் ஐம்பூதமாய்  அலர்
. கவிதாசரணின் சக்தியாய் அலர் ..
அலர் கவிதாசரண்.

இதழே ஓர் இயக்கமாய் வாழ்ந்த என் ஆசான் கவிதாசரண் அவர்களின்
இயங்குசக்தி அலர் என்பதன் எழுத்து ஆவணமாய் இப்புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும்..



புத்தகம் என் கைக்கு வந்தப் பின் இந்த 5 நாட்களுக்குள்
3 தடவைகளுக்கும் அதிகமாக வாசித்தாகிவிட்டது.
மகாபாரத இதிகாசம் போல கதைப் பாத்திரங்கள் ஒன்றிலிருந்து
ஒன்றாக விரிகிறது. விரிய விரிய வாழ்க்கை சரித்திரத்தின்
ஆழம் பெண்ணுலகின் ஆழியாய் என்னைத் தனக்குள்
மூச்சுத்திணற ,முக்கி எடுக்கிறது.
ஆனையம்மாளும் ஜலகண்டேஸ்வரியும் அலரும் திருமதி கவிதாசரணும்
நல்லம்மாவும் நீமாவும் சோனாவும் இசையும் ...
ஏன் இந்த உன்னதப்பக்கங்களில் சிறிய கரும்புள்ளியாக
உருவம் தெரியாமல் ... கவிதாசரணுடன் வாழ்ந்து அவர் குழந்தைகளைப்
பெற்றெடுத்த பெண்ணும்... ஒவ்வொரு பெண்ணும் கவிதாசரண்
என்ற புள்ளியைச் சுற்றி வருகிறார்கள்.
இந்தப் பெண்களுக்கு கவிதாசரண் வெறும் ஆண்மகனாக மட்டுமே
இருந்திருந்தால் இக்கதை பிற புனைவுகள் போல
பத்தில் ஒன்றாக படித்துவிட்டு கடந்து சென்றிருக்கும்
புதினமாகி இருக்கும் . .
ஆனால் இந்தப் பெண்களுக்கு கவிதாசரண் மகாபிரபுவாக
ஆகச்சிறந்த தலைவனாகவே இருக்கிறார்.
இப்பெண்களின் கற்பிதங்கள் கவிதாசரணின் வாழ்க்கையில்
மேடு பள்ளங்களை உருவாக்கிக்கொண்டே இருக்க்கின்றன..
அனைவரும் கவிதாசரண் என்ற ஆளுமையை கண்ணனைக்
கொண்டாடும் கோபியர்கள் போல கொண்டாடிக் கொண்டாடி
ஓர் இதிகாச தலைவனாக்கி விடுகிறார்கள்.
இப்பெண்களின கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் கவிதாசரணின்
பிம்பத்தை கட்டமைப்பதில் ஒவ்வொரு செங்கலாக அடுக்கப்பட்டு
உன்னதங்களை நோக்கி உயரே எழும்பி நிற்கின்றன.
இந்தக் கோபுரத்தின் கருவறையாக இருக்கும் ஆனையம்மாள்
கருவறையின் சிலைக்கு உயிரூட்டுகிறாள்.
கவிதாசரணுக்காகவே
பெற்று வளர்த்துவிட்ட நேர்த்திக்கடனாய் எப்போதோ ஒலித்த
ஜலகண்டேஸ்வரியின் வாக்கை சத்தியவாக்காக ஆக்கும்
பிரயாசையில் அலர் எனற இதிகாச தலைவி உருவாக்கப்படுகிறாள்.

பார்வை இழந்தவனுக்கு தன்னை மணமுடித்துவிட்டார்கள் என்ற
ஒரு மனநிலையில் தன் கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரிதேவியை
அரண்மனையின் அதிகாரபீடங்கள் ... கணவன் காணாத புற உலகை
காந்தாரியும் காண விரும்பவில்லை என்ற கற்பிதத்தை
அவள் மீது ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கற்பிதத்தை
அரண்மனைப் பெண்கள் கொண்டாடுகிறார்கள். இதுவே
காந்தாரியின் தலையில் முள்கிரீடமாய் ஏறி அமர்நது
கொள்கிறது  அவளால் கடைசிவரை
அவர்கள் கற்பித்த கற்பிதங்களிலிருந்து வெளியில் வர முடியவில்லை.

அலர் மீதும் சுமத்தப்பட்ட கற்பிதங்கள் அலரை ஆகச்சிறந்த
உன்னதமாக்கி இருக்கலாம். ஆனால் ஆசாபாசங்களை அனுபவித்த
ஒரு சாதாரண மனுஷியாக வாழவிடவில்ல. சாதாரணங்கள்
அவளீடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. ஜலகண்டேஸ்வரி
ஜானகிராமனின் "அம்மா வந்தாள் " புதினத்தின் அம்மாவைப் போலவே
தனக்கான பாவ விமோசனம் தேடி அலைகிறாள்.
ஆனையம்மாளிடம்
". தன் மகளைத் தொடாதே .. அவள் தோஷம் உனக்கு
வேண்டாம் என்று சொல்லும் ஜலகண்டேஷ்வரி "மகளின் குழந்தையை
உத்தமியாக்கி என் பிள்ளைக்கு நேர்ந்துவிடு " என்று வேண்டுகிறாள்.
காவிரியும் கரைக்கமுடியாத தன் பாவத்தை இந்த நேர்த்திக்கடன்
செய்து கரைத்துவிட நினைக்கும் பெண்ணின் கண்ணீர்
இந்த நேர்த்திக்கடன். ஒருவகையில் சொல்லப்போனால்
ஜலகண்டேஷ்வரிககு இந்த நேர்த்திக்கடன் அவளாகவே கற்பித்துக்
கொண்ட ஒரு பாவவிமோசனம்.

தன் மகள் உன மகனுக்காகவே ஒரு பெண்மகவைப் பெற்றுக்கொடுபபாள்.
அவள்   ஒரு நேர்த்திக்கடன் என்ற கற்பிதம்
 அலர் ஜனிப்பதற்கு முன்பே அலர் மீது சுமத்தப்படுகிறது.
அந்தக் கற்பிதத்தை நிஜமாக்கும் போராட்டத்தில் அலர்
மகா உன்னதமாகிவிடுறாள்  கவிதாசரண் எழுத்துகளில்.
.
 சிலப்பதிகாரத்தின் மாதவி தான் பெற்றெடுத்த
மணிமேகலையை இளவரசனின்  காதலை உணர்ந்தும் விலக்கி
வைக்கும் துறவை எப்படி தன் ம்கள் மீது சுமத்தி வைத்திருந்தாளோ
அப்படியே ஈஸ்வரியும் தன் மக்ள் வழி பேத்தி மீது சுமத்தி
வைத்திருக்கிறாள். மாதவியோ காதலை விலக்க் வைத்து
அமுதசுரபியுடன் தன் மகளை அலையவிட்டாள்.
ஜலகண்டேஸ்வரியோ காதலையோ ஓர் அமுதசுரபியாக
தன் பேத்தியின் கைகளில் கொடுத்து காதலுககு,
ஆண்- பெண் உறவுக்கு ஓரு இதிகாசத்தை படைத்துவிடுகிறாள்.
ஆனால் காதலை விலக்கி வைததவளும் சரி,
காதலையே அமுதசுரபியாக சுமந்தவளும் சரி,
மனுஷியாக ... வாழ்வில்லை.
நிஜங்களில் வாழ்வதைவிட கற்பிதங்களில் வாழ்வது
இவர்களுக்கு சுகமான வலியாகவே இருந்துவிடுகிறது.

"அம்மா... , நீ உண்மை என்பதைவிடவும் கற்பிதம் என்னும்
போது பேரழகாத் தெரியிறே. உண்மையை விடக் கற்பிதம் தான்
உண்மையாய் இருப்பதின் உயர்ந்தபட்சத் தகுதியோ என்னவோ..
எனக்கே பல சமயங்கள்ல நான் பாட்டுக்குப் பேசிண்டே
போகும் போது அலர் என்னோட கற்பிதமாத்தான்
பேசறாளோன்னு பிரமிப்பு ஏற்படுதுப்பா..."
(பக்.. 48)

கற்பிதங்கள் கட்டமைக்கும் ஆளுமைக்கு எல்லா
கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை
என்றாலும் சில அடிப்படை கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டு
உன்னதங்களைக் கொண்டாடுவது சாத்தியப்படவில்லை.
அதனால் மாணிக்கவாசகம் என்ற பெயரில் கவிதாசரணுக்கும்
தேவைப்பட்டிருக்கிறது
அலர் - இன்னொரு வெளிச்சம் " என்ற இணைப்பு.

இலையுதிர்காலத்தில் இளைப்பாறும் தருணத்தில் அலர்
என்ற ஆலமரத்தடியில் காற்றில் அசைந்தாடும்
கிளைகளின் ஊஞ்சலில் ஆடுகிறது கவிதாசரணின்
காலம்.
ஆகப்பேரழகு மிக்க அம்மா தன் ஆசைக்கனவுகளை எல்லாம்
பாலை மணற்குறுணையாய் பதியமிட்டுவிட்டு,
கட்டக்கடைசியில் வாழ்வின் தீராமையாக
" என் கடைசிமூச்சு உன் மடியில் தான் டா " என்று
அப்பாவை வேண்டி பரிதவிப்பதாக மாணிக்கவாசகம்
சொல்கிறார். (பக் 145)
. ஆனால் அலரின் கிளைகளில் கூடுகட்டவோ
நிரந்தரமாக தங்கிவிடவோ நிழலிலொரு  கயிற்றுக்கட்டிலில்
துயிலவோ மறுக்கிறது கவிதாசரண் என்ற ஆளுமை.
ஒரு வகையில் அந்த ஆளுமைதான் அலர் என்ற
பெண்ணை ஒரு சக மனுஷியாக வாழ்விடமால்
தெய்வீகப்பேயாக அலைய விட்டிருக்கிறது.
..
" நான் உன் அம்மா கூடவே இருந்திடலாம்டா. அது பெரிய
விஷயமே இல்ல. ஆனா அப்படி இருந்துட்டா, நான் ஒரு
தூசு மாதிரி அற்பமா தாழ்ந்து போயிடுவனோன்னு பயமா
இருக்கு. அப்படியொரு தன்னகங்காரத்தை அம்மாவுக்கு எதிரா,
அம்மாவை மீறி அவளே எங்கிட்ட விதைச்சிருக்காம்மா.
அதை இப்பத்தான் நான் உணர்றேன்... அம்மாவும் நானும்
ஒன்னுங்கைறதெல்லாம் அதுக்கும் மேலதாம்மா. அப்படி
ஒன்னு நடந்திட்டா , அம்மாவுக்கு அது எவ்வளவு
பெரிய வீழ்ச்சி!"  (பக் 148)

அவரே இசையிடம் சொல்லும் இக்காரணம் அலரின்
கற்பிதங்களை நிஜமாக்கும் கவிதாசரணின் விசித்திரமான
வாழ்க்கை.. கற்பிதங்கள் விசித்திரமானவை மட்டுமல்ல,
பல தருணங்களில் கற்பிதங்களே நிஜ வாழ்க்கையைத்'
தீர்மானிப்பதும் ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பதும்
அலைக்கழிப்பதும் தொடர்கிறது.

இதையே அலரிம் பார்வையில் சொல்லப்போனால்,

"அவருக்குள்ள ஆற்றாமை அல்லது அதிதீவிரம் என்னன்னா,
அவரு நல்ல கனவு காண்றாரு. நல்லா கற்பனை பண்றாரு.
ரொம்ப நல்லா எழுதி தொலைக்கிறாரு. அதுக்கும் மேலே
தான் காண்ற கனவெல்லாம் நிஜம்னு நம்பறாரு.
கற்பிதத்தை எல்லாம் அற்புதம்னு பிரமிக்கிறாரு.
நாம அழுது புலம்பறதை எல்லாம் தன் மகாகாவியத்தோட
பிரம்மாண்டம்னு கூத்தாடுறாரு.."

அலர் எனும் மகா உன்னதம் ... கூத்தாடுகிறது
மலைக்கோட்டைகள் அதிர்கின்றன.
எங்கோ ஒலிக்கிறது... இன்னும்

கால்டுவெல்லின் பறை ஓசை. 

Thursday, October 13, 2016

பாப் டிலானும் கோலிவுட் இசைத்தட்டுகளும்


யாருங்க இந்த பாப் டிலான்..?
யாருக்குத் தெரியும்..! 

நேற்றுவரை அவரைப் பற்றித்தெரியாவ்தவர்க்ள் கூட இன்று 
கூகுள் உபயத்தில் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாப் டிலானுக்கு என்னைத் தெரியாது என்பது எவ்வளவு
உண்மையோ அதைவிட பெரிய்ய்ய உண்மை 
எனக்கும் அவரைத் தெரியாது என்பதுதான்.!
எனவே... இப்போ இலக்கியத்திற்கு நோபல் பரிசு
 வழங்கப்பட்டிருக்கும் பாப் டிலான் பற்றி தானே விசாரிக்கிறீர்கள்?
 என்று அவரிடம் கேட்டேன்.
அவரே தாங்க... அவரு பாட்டு எழுதறவருதானே.. சரிதானே...

>ம்ம்..<

அப்படி என்ன பெரிசா எழுதிட்டாருங்க.
. நம்ம கவிஞ்ரை/தலைவரை விடவா அவரோட பாட்டு 
ஃபேமஸா போயிடுச்சி..என்ன நான் சொல்றது சரிதானே...
ஏம்மா லைன்ல இருக்கீங்களா....?

> கட் கட் கட்<

ஷாக் அடிச்சமாதிரி உட்கார்ந்திருக்கேன்...

"ஏம்பா... டிவியிலே தானே அசத்தப்போவது யாரு காமெடி உண்டு.....
இப்போ அலைபேசி தொலைபேசியிலுமா ஆரம்பிச்சீட்டீங்க..
தாங்க்க முடியலடா சாமீ

கோலிவுட்டில் பாட்டெழுதும் படா படா கவிஞ்ர்களுக்கு 
அதாவது பாடலாசிரியர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை
என்பதைக் குறித்து நீங்கள் விவாதம் செய்யுங்கள், 
போராட்டம் நடத்துங்கள்..
 யார் யாருக்கு கொடுக்கலாம் என்று பட்டியல் கூட போடுங்கள்.
 பட்டியல் போடுவதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்்்
 பலர் இருக்கிறார்கள். அவ்ர்களும் உதவக்கூடும்.
என்னவும் செய்துவிட்டுப் போங்கள்..
தயவுசெய்து அதை எனக்கு TAG செய்துவிடாதீர்கள்.!!
அப்புறம் உங்க பாடலாசிரியர்கள் லிஸ்டில் 
நிகழ்கால நிகழ்ச்சி வித்துவான்கள் மட்டும் இருக்கட்டும் .
. மறக்காமல் பாடல் எழுதிய பெண் பாடலாசிரியர்களையும் 
சேர்த்துக்கொள்ளுங்கள் ..
ஆனால் எக்காரணம் கொண்டும் கண்ணதாசனையோ 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையோ 
சேர்க்க வேண்டாம். 
அவர்கள் தங்களுக்கு
நோபல்பரிசு வேண்டாம் என்று என்னிடம் கனவில் வந்து
சொல்லிவிட்டார்கள்.
பாப் டிலான்... நீ நல்லா இருய்யா..(சாலமன் பாப்பையா டப்பிங்க் வாய்ஸ்)
வாழ்த்துகள் பாப் டிலான்.

Friday, October 7, 2016

ஜெமு மாமு பட்டியல்


ஒரு கவிதை புத்தகம் மிஞ்சிப்போனால் 500 பிரதி..
அதிகப்பட்சமாக 1000 பிரதி என்று வைத்துக்கொள்வோம்.
சிறுகதை, நாவல் பற்றி கேட்கவே வேண்டாம்.
1000 காப்பி அச்சடிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
1000 பேர் வாசிக்கிறார்கள்... சரி ஓசியில் வாசிப்பதையும்
கணக்கில் கொண்டால் 10,000 பேர் வாசிக்க கூடும்.
தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகை 7 கோடி.!
அப்படியானால் பெரும்பான்மையான தமிழர்கள் இதைப் பற்றி
கவலைப்படவில்லை. இந்த ஒளிவட்டம் வீசும் அறிவுஜீவிகளைப்
பற்றி அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை என்பது தான் உண்மை.
காமு திமு, கொமு பாமு ஜெமு மாமு என்று எந்த மு வும்
அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக்
கொண்டுவரப்போவதில்லை.
இதில இவுங்க போடுகிற பட்டியலும்
அதற்காக கவலைப்படுகிற கூட்டமும்...
 &&&&
எப்பா... ஆரம்பிச்சிடாதீங்கய்யா ஆரம்பிச்சிடாதீங்க
எழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாதுனு. பொன்மொழி
சொல்ல ஆரம்பிச்சிடாதீங்க.. ப்ளீஸ்..
அப்போ உழவனையும் தொழிலாளியையும் துப்புரவு செய்ப்வனையும்
மதிக்காத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா என்ன?

&&&&

நண்பா... பட்டியலில் உன் பெயர் இல்லையே என்று
ஏன் கவலைப்படுகிறாய்..?
பட்டியலில் இடம் பெறுபவன் பெரிய ஆள் அல்ல.
பட்டியல் போடுகிறான் பாரு ..... அவன் தான் தீர்மானிக்கும்
அதிகாரம் கொண்டவனாக தன்னை நினைத்துக்கொள்கிறான்.
இதனால் நீ அறிய வேண்டியது என்னவென்றால்...
நீயே ஒரு பட்டியல் போட்டுவிடு.
யார் யார் பெயரை எல்லாம் உன் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என்பதைவிட யாரை எல்லாம் மறந்தும் சேர்த்துவிடக்கூடாது
என்பதில் மட்டும் கவனமாக இரு.
நண்பா.. பட்டியல் போடு..


Wednesday, October 5, 2016

நோபல்பரிசும் களவாணித்தனமும்




(Lise Meitner with Otto Hahn in the Lab)
இப்போ இரண்டு மூன்று நாட்களாக நோபல் பரிசு
பெற்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
(பிரான்சு, அமெரிககா, நெதர்லாந்து நாட்டிலிருந்து
வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுகிறார்கள்
மூன்று ஆண்கள்). அப்போதெல்லாம் எனக்கு சில
பெண்களும் இந்த மியுசிக்கல் சேரில் அவர்களிடமிருந்து
 தட்டிப்பறிக்கப்பட்ட நோபல் பரிசும் நினைவுக்கு வந்து விடுகிறது..

ஒருவர் நிட்டி ஸ்டீவன்ஸ்.
ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது
 க்ரோமோசம்.ஆணிடம் X , & Y   என்று இரு ககுரோமோசம்
இருக்கிறது. பெண்ணிடம் இருப்பது எக்ஸ் க்குரோமோசம்
 மட்டும் தான். என்பதைக் கண்டுபிடித்தவர். Nettie Stevens 1862–1912
ஆனால் நிட்டியுடன் வேலைப்பார்த்த  தாமஸ் ஹண்ட் முர்கன்
இதைப் பற்றி முதலில் புத்தகம் போட்டுவிடுவதால் கண்டுப்பிடிப்பு அவ்ருடையதாகிவிடுகிறது.
தாமஸ் ஹ்ண்ட் முர்கன் நோபல் பரிசும் பெற்றார்..

ரோசலின் ப்ராங்க்ளின் எக்ஸ்ரே வைப் பயன்ப்டுத்தி
டி என் ஏ வின் படத்தை எடுத்துவைத்திருந்தார்.
 டி என் ஏ எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அதே கேம்ப்ரிட்ஜ்
பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஜேம்ஸ் வாட்சனும் பிரான்சிஸ் கிரிக்கும் ரோசலினுக்குத் தெரியாமல்
அவள் ஆராய்ச்சியைத் திருடினார்கள்.
அவர்களுக்குத்தான் மருத்துவக்கண்டுப்பிடிப்பில் நோபல் பரிசு கிடைத்தது.

மூன்றாமவர் லில்ஸி.
இவர்நோபல் பரிசு குழுவையே தங்கள் தவறை ஒத்துக்கொள்ள செய்தவர்
அணு ஆராய்ச்சியில் அணுவைப் பிளக்கமுடியும் என்ற கண்டுப்பிடிப்பு மிகவும்
முக்கியமானது. அணுவைப் பிளக்க முடியும் என்பதைக் கண்டுப்ப்டித்தவர்
ஜெர்மனியில் வாழ்ந்த லிஸ்ஸி மிட்னர் என்ற யூதப்பெண்.. இரண்டாவது உலகப்போர் நடந்தக் காலக்கட்டம்.
ஜெர்மனியிலிருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்ந்த லிஸ்ஸி
தன் கண்டுபிடிப்புகளை ரகசியமாக தான் சந்தித்த ஓட்டோ ஹன்
 என்பவரிடம் சொல்கிறார். ஓட்டோ அதை அபப்டியே தன்னுடைய
க்ண்டுப்பிடிபபாக எழுதி வெளி உலகத்திற்கும் காட்டி
1944ல் நோபல் பரிசும் பெறுகிறார்.
ஆனால் இத்தவறு நோபல் பரிசு கமிட்டியால் பிற்காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டது.
இன்று nuclear element NO; 119 க்கு லிஸ்லியின் பெயர் வைத்து மரியாதை செய்திருக்கிறது
அணு ஆராய்ச்சி அறிவியல் உலகம்.