மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி..
பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில்
ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை
என்கிற வரலாற்றை பெண்கள் தினம் கொண்டாடும் பலர்
மறந்து போயிருக்கலாம்.
ஆனால் எங்களால் மறக்க முடியவில்லை.
ஏன் தெரியுமா...?
நியூயார்க்கின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்த
உரிமையைக் கூட ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கறுப்புபெண்கள்
பெற்றிருக்கவில்லை.
அன்றைக்கு பெண்கள் உரிமைகாக நடந்த அந்தப் பேரணியாகட்டும்,
அங்கே ஒலித்த பெண்களின் குரலிலாகட்டும் ,
தன்னை ஒத்த சக மனுஷியான ஆப்பிரிக்க பெண்ணுக்காக
எந்தக் குரலும் இல்லை.
இந்தக் கதை ஏதொ ஆப்பிரிக்க அமெரிக்க இன வரலாற்றின் பக்கம் மட்டுமல்ல.,
இதோ இந்தியாவின் ..சாதியக் கொடூரத்தில் எவராலும் எப்போதுமே
எழுதப்படாத இந்தியப் பெண்களின் கதையும் தான்.
இந்திய இராணுவமே எங்கள் பெண்களை வல்லாங்கு செய்கிறது.
காஷ்மீரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள்
இந்திய எல்லைக் காவல் படையால் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எங்கள் அரசியல்
கட்சிகள் வேட்பாளர்களாக்கி நாடாளுமன்றம் அனுப்புகின்றன.
எங்கள் தலைநகர் டில்லியில் ஒரு நாளுக்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
பெற்ற மகளைத் தாயாக்கும் ஆண்மிருகஙக்ள் எங்களுடன் வாழ்கின்றன.
ஒருதலைக் காதல் கொண்டு ஏற்க மறுக்கும் பெண்களை ஆசிட் ஊற்றி
தன் காதல் பழியைத் தீர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் எங்கள்
சமூகத்தில் நடமாடுகிறார்கள்.
காதலும் வீரமும் எங்கள் பண்பாடு என்று கொண்டாடிய எங்கள் சமூகத்தில்
சாதிமறுப்பு திருமணம் செய்ய, அதிலும் தலித் ஆண்களைக் காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் தங்கள் சுயசாதிப் பெருமைக்கு இழுக்கு
என்று கொக்கரிக்கும் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக எங்கள்
மேடைகளில் உலா வருகிறார்கள்.
ஊமைகாளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள்.
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம்
எங்கள் சாலைகளில் பெருக்கி சுத்தம் செய்யும் அவள்
ஓடும் புகைவண்டியில் நெருக்கியடித்து நுழைந்து
காதணியும் நைட்டியும் விற்றுப்பிழைக்கும் அவள்
சிவப்பு விளக்குப் பகுதியில் பகல் நேரத்தில்
பள்ளிக்கூடம் போய் இரவு நேரத்தில்
கட்டிலுக்கடியில் ஓசையின்றி தூங்கும் மகள்
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம்.
பின் யாருக்குத்தான் இந்தப் பெண்கள் தினம்?
பெப்சி கம்பேனியில் இந்திரா நொயி
ஐ சி ஐ சி ஐ வங்கியில் CEO சந்தன் கோச்சர்
அப்பலோ மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் பிரீத்தா ரெட்டி
ஜே பி முர்கன் இந்தியாவின் CEO கல்பனா மூர்பாரியா
இந்திய பேரரசின் எல்லையில்லா அதிகாரம் கொண்ட சோனியா காந்தி
தமிழகத்தின் ஜெயலலிதா
மம்தா ...
இவர்களுக்கும் இவர்களை ஒத்த கார்ப்பரேட் மற்றும் அரசியல் தலைவர்களின்
பெரிய வீடு சின்னவீடுகளுக்கும் அவர்களின் மகள், மருமகள்கள் மற்றும் பேத்திமார்களுக்கும் வெள்ளித்திரை சின்னத்திரை பிரபலங்களுக்கும்
மார்ச் 8, பெண்கள் தின கொண்டாட்டம் உண்டு, உண்டு, உண்டு.