Saturday, November 12, 2022

வலி முறித்த மின்னல்


 உன்னைப் புதைத்த இடத்தில்

எங்காவது

உறவின் அர்த்தங்கள்

பூத்திருக்கலாம்.

அப்பூவின் பெயர் 

தெரியாமல் இருக்கலாம்.

ஆனாலும்...



கூடவே இருக்கிறது

நம்பிக்கையில் கிழிபடும்

நாட்காட்டி நாட்கள்.

நாடு கடத்திய தேசங்கள் உண்டு.

வீடு கடத்திய உறவுகள்???!!

அலைந்து கொண்டிருக்கிறது

காலத்தின் சாபம்.

யாரை யார் விரட்டுவது?!


பிறந்த வீடும்

வளர்ந்த முற்றமும்

கதவடைத்துவிட்ட வாசலும்

திறந்து வைத்திருக்கின்றன

கல்லறைகளை மட்டுமே.

ஆடுமாடுகள் இளைப்பாறும்

நிழலில்

நினைவுகளை அசைபோடும்

நிழலோடு நானும்.

என்மீது கவிந்திருக்கும்

உன் வாசனையை எரிக்கிறேன்.

மல்லிகைப்பூ ஊதுவத்தி

மணக்கும்..

பறக்கும் சாம்பல் துளியிலும்

காற்றோடு கலந்து

நம் கதைகளைப் பேசும்.

..

உன் தேசம்

எனக்கானதாக இல்லை.

வலி முறித்த மின்னல்

மழைத்துளியின் ஈரத்துடன்

கசிகிறது..


++அப்பாவின் நினைவுநாள்.

13 நவம்பர் 1986

Tuesday, November 8, 2022

கனவுகள் விரியும்..விழி.


 


கவிஞர் விழி.பா.இதயவேந்தன் என்ற பா.அண்ணாதுரய் அவர்கள் தலித் சிறுகதை எழுத்தாளர் என்றே பொதுவாக அறியப்படுகின்றார். 1984 முதல் எழுத ஆரம்பித்த இவரின் இலக்கியப் பயணம் இன்று கிட்டத்தட்ட 14 புத்தகங்களாக இந்த விளிம்புகளுக்கு வெளிச்சம் தந்துக்கொண்டிருக்கின்றது.

நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு, தாய்மண், சிதேகிதன், உயிரிழை, அம்மாவின் நிழல், இருள் தீ, சகடை என்ற சிறுகதைகளின் தொகுப்புகள், ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் என்ற குறுநாவல்கள், தலித் அழகியல், தலித் கலை, இலக்கியம் என்ற கட்டுரைகளின் தொகுப்பு... இந்த எழுத்து வரிசையில் ஒற்றையாக நின்று கனவுகளை விரிக்கின்றது அவருடைய கவிதைகள்.
கவிதைகளின் தொகுப்பு : கனவுகள் விரியும்.

"அடிப்படையில் நான் ஒரு கவிஞனா என்றால் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. கலைஞன்.. கலையின் பிரமாண்டமான உலகத்தில் ஒரு சின்ன உளியோடு கரடுமுரடான கற்களிலிருந்து கலைகளாக வடிக்கத் துவங்கியிருக்கிற ஒரு எளிய சிற்பி" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் கலைஞர் இந்தக் கவிஞர்.

தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதும்போது, அதுவும் அவர்களின் ஒருவரே எழுதும்போது வைதீக சமய சமூக அமைப்பின் நம்பிக்கைகள் தூக்கி எறியப்படுகின்றன. புரட்டிப் போடப்படுகின்றன. அகமும் புறமும் சார்ந்து இயங்கும் இவரின் எல்லா இயக்கங்களிலும் ஒடுக்கப்பட்டவனின் வலியும்
வேதனையும் பதிவுச் செய்யப்படுகின்றன. எது அழகு? என்று கவிஞனைக் கேட்டால் காலம் காலமாய்
ரோசாப்பூ அழகு
கள்ளிச் செடி அழகு
வானம் அழகு
நடசத்திரம் அழகு
நிலவு அழகு
சூரியனின் சூடு அழகு
நதி அழகு
காதலி அழகு
அவள் கண் அழகு
கருங்கூந்தல் அழகு
பெண் அழகு
பெண் விரும்பும் ஆணின் வீரம் அழகு
விவேகம் அழகு... இப்படி விரிக்கலாம்..
இப்படித்தான் அழகியல் விரிக்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் சொல்லப்போனால் இந்த அழகியல் சிந்தனை உலகம் தழுவிய அழகியல் சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் புள்ளியிலிருந்து விலகி விரிகின்றது இவரின் அழகு என்ற கவிதை

"அம்மாவின் யாசிப்பில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்குத் துணி

சேற்றிலும் துர்நாற்றத்திலும் ஊறிப்போன
அம்மா நெட்டி முறித்து
அழகு பார்ப்பாள் என்னை
திரும்ப திரும்ப.."
(பக் 27)

தலித்தின் வாழ்க்கை அனுபவங்கள் அதிர்ச்சியானவை. படிப்பு, பதவி, பணம் என்னவந்தும் அந்த வலியின் ரணத்தை அகற்ற முடியவில்லை. தலித்தின் தோள்களைத் தழுவும் தோழமைக்கூட தோழமைக்கான அர்த்தத்தை காயப்படுத்தி விடுகின்றது. தலித்தின் வேதனையை அனுபவத்தை ஒரு தலித் உணர்வதற்கும் தலித் வட்டத்திலிருந்து வெளியில் நின்று உணர்வதற்கும் நிறைய வேறுபாகுகள் இருக்கத்தான் செய்கின்றது.

" நீ
எனக்கானவன் என்பதில்
எனக்கு இருக்கிறது
இன்னமும் சந்தேகம்.

எவற்றிலாவது உனது பதிவை
என்னுள் வைத்துப் பார்க்கத்
தொடர்பேயில்லாமல்
உன்னால் எப்படி முடியும்?"
( க : அர்த்தம்/ பக் 30)

"தமிழகத்தில் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே நால் வருணப்பிரிவுகள்

இருந்தன என்பதை நம் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அவர்கள் தலித்துகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அன்றுமுதல் இன்றுவரை தலித்துகளுக்கு மேலுள்ள பெரிய சாதிகள் முதல் சின்னச் சாதிகள்வரை ரொம்ப வன்மத்தோடு கண்காணித்து வந்துள்ளன. மீறினால் வன்முறைக்குத் தயாராக இருக்கின்றன " என்கிறார் தலித்தியச் சிந்தனையாளர் ரா.கவுதமன். அதை வரிக்கு வரிச் சொல்லும் கவிதைதான் இரத்தசாட்சி.

நீ
உயிரோடு இருந்ததற்கான
தடயங்களை ஒவ்வொன்றாய்
ஓர் ஆய்வாளனைப் போல்
பரிசீலித்துப் பார்த்தேன்..

மூச்சு முட்டமுட்ட
உன் குரல்கள் நெறிக்கப்பட்டிருந்தன.
கதறக் கதற
நீ கற்பழிக்கப்பட்டிருக்கிறாய்
அடையாளம் தெரியாதவாறு
உன் எலும்புகள்
நொறுக்கப்பட்டிருக்கிறது.
செல்லும் இடங்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய
செய்திகள்கூட எரிக்கப்பட்டிருக்கிறது."
(பக்: 32)

தலித்தின் வரலாற்றில் அவர்களின் அவலங்களுக்கு சாட்சியாய் நிற்பது மட்டுமின்றி அவர்களின் நம்பிக்கைக்கும் இரத்தசாட்சியாய் நிற்பது மட்டுமே தலித்தின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை உணர்ந்து கவிதையை நம்பிக்கை கனவுகளுடன் முடித்திருப்பது இரத்தசாட்சியை ஈரமுள்ளக் கவிதையாக்குகின்றது.

இப்படிப்பட்ட தலித்திய எழுத்துக்களால், சிந்தனைகளால் தீடிரென்று தலித்திய வாழ்வியல் மாறிவிடுமா?.. என்றால் அப்படிப் பட்ட  பூம்பா புரட்சிகளில் யதார்த்தத்தைப் படைக்கும் இவருக்கு நம்பிக்கை இல்லை. எதிலும் யதார்த்த நிலையை விட்டு விலகாமல் இவர் கனவுகள் விரிவது மட்டுமெ இவர் கனவுகளுக்கும் கவிதைகளுக்குமானத் தனிச்சிறப்பு என்றே சொல்லவேண்டும்.

"காலங்காலமாய்
நின்றிருந்ததில்
திடீரென்று பாய்ந்தோட
நம்மால் முடியாது.

ஓடமுடியாவிட்டால் என்ன
நிற்காதே.
ஓரடி முன்னால் வைத்தபடி
நட..

களத்தில் ஓடுவது
நாலை நடக்கும்வரை
இப்போதைக்குத்
தைரியமாய் நட!"
(பக்: 36 & 37)

தலித்தியப் படைப்பாளி தலித்திய பிரச்சனைகளை மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் மானுடம் தழுவிய ஒட்டு மொத்த வேதனையை, வறுமையை, வலியை, ஏமாற்றத்தை, இயலாமையை மற்றவர்களைவிட ஒரு தலித்தியப் படைப்பாளிக்கு உணர்வதும் உள்வாங்குவது படைப்பதும் எளிதான அனுபவமாகிவிடுகின்றது. ஆழ்கடலில் முத்துக்குளிப்பவனுக்கு கரையோரத்து கிளிஞ்சல்களைப் பொறுக்குவதில் சிரமம் இருப்பதில்லை. இதைத்தான் இவரின் நிறம், வியாபாரம், எங்கள் தெரு, குருவிக்கூடு, அலுவலக்சிறை போன்ற கவிதைகளில் காண்கின்றோம். இல்லற உறவில் ஏற்படும் பிரச்சனைகள் பெண்ணுக்கு மட்டுமே உரியதல்ல. தன் பெண்டு, தன் வீடு , தன்பிள்ளை, தன் உறவு என்று வாழாமல் இயக்கம் சார்ந்து வாழும் ஆண்களுக்கும் இருக்கும் பிரச்சனையை மிகவும் நுட்பமான அந்த முரண்பாடை யாரையும் குற்றம் சொல்லாமல் இவர் எழுதியிருக்கும் கவிதைதான்

"எனக்கும் அவளுக்கும்".


எனக்குப் பிடித்தது
அவளுக்குப் பிடிக்கவில்லை

அவளுக்குப் பிடித்தது

எனக்குப் பிடித்த மாதிரி இல்லை.

எங்கோ ஓர்
வேர் முடிச்சு..
சுழன்று சழன்று
சுருண்டு அடங்கி
எனக்குள் அல்லது
அவளுக்குள்
விலக மறுக்கிறது..
(பக் 97)

அகம் சார்ந்து எழுதப்பட்டிருக்கும் சிலக் கவிதைகள் அதன் கருப்பொருட்கள் உரைநடை உத்திகள் பாத்திரப்படைப்புகள்.. இவருடைய சிலச் சிறுகதைகளின் மறுவாசிப்பாக இருப்பதை இவரின் கதைகளை வாசித்தவர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக இவருடைய சிறுகதைகளின் தொகுப்பு அம்மாவின் நிழலில் உள்ள சிறுகதைகள் அலுவலகச்சிறை, ஒரேயொரு பார்வையில்.. கதைகளைச் சொல்லலாம்.

சூடான அக்னிக்குழம்பாக கொதிக்கின்ற தலித்திய யாதார்த்த வாழ்வியலைப் படம்பிடிக்கும் இவரின் எழுத்துக்கள் எரிமலையாக வெடிக்காமல் வல்லினம் தவிர்த்து மென்மையாக ஒரு அதிர்ச்சியை மின்னலெனத் தாக்கிச் செல்கின்றன.

தலித்திய வாழ்வியலின் காட்சி, அதில் பிறக்கும் சமுதாயக் கேள்வி, முடிவில் நம்பிக்கைத் தரும் வரிகளில் முடிக்கும் வடிவமைப்பை கட்டமைத்துக் கொண்டு இவர் கவிதைக் கனவுகள் இலக்கிய வானில் விரிந்திருக்கின்றன.

கனவுகள் விரியும்
வெளியீடு: அநுராகம்
19, கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை 600 017
விலை: ரூபாய் 30/ மட்டும்
பக்கங்கள் : 112

(மீள்பதிவு: நன்றி:  வார்ப்புகள்.காம்)