Monday, November 25, 2013

சச்சினின் பாரதரத்னாவை நிராகரிக்கும் ஓர் இந்திய அன்னை




சச்சின் டெண்டுல்கர் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் சம்பாதித்த தொகை பல கோடிகளைத் தாண்டும்,. ஆனால் அண்மையில் இந்திய அரசு சச்சின் டெண்டுல்கர் தன் 24 வருட கிரிக்கெட் ஆபிஸிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் நாளில் அவரை இந்தியாவின் தலைசிறந்த விருதான 'பாரத ரத்னா" விருதுக்கான அம்பாசிடராக்கிவிட்டது. சச்சின் டெண்டுல்கர் இனி லிட்டில் மாஸ்டர் சச்சின் அல்ல. பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்.
அவர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய விருதை இந்திய அன்னையர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதாக பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. சச்சின் உளப்பூர்வமாகவே இந்த சமர்ப்பணத்தைச் செய்திருக்கலாம். எனினும்  சச்சின், நானும் ஒரு இந்திய அன்னை என்ற நிலையில் நீங்கள் கொடுத்திருக்கும் இந்த சமர்ப்பணத்தை மனம் உவந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் சமர்ப்பணத்தை ஓர் இந்திய அன்னையாக நிராகரிக்கும் உரிமை எனக்கிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
சச்சின், உங்கள் கிரிக்கெட் விளையாட்டுகளைப் பற்றியோ அதில் எந்தளவுக்கு நீங்கள் நம் இந்திய திருநாட்டுக்காக விளையாடினீர்கள் என்பது குறித்தோ பத்திரிகைகளில் விளையாட்டு பகுதியில் விலாவரியாக நிறையவே எல்லோரும் எழுதி தீர்த்துவிட்டார்கள். எனக்குப் புதிதாக சொல்ல எதுவுமில்லை, சச்சின்.
நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றபடி உங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர். இந்திய மக்கள் அனைவரும் உங்களை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே அடையாளம் கண்ட போதும் அதை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தும் வாய்க்கூசாமல் நான் ஒரு மாடலிங் நடிகன் என்று உங்களைச் சொல்லிக்கொண்டீர்கள், நினைவிருக்கிறதா சச்சின். இப்போதும் அதற்கான கோப்புகள் இந்திய வருமானவரித்துறையிடம் இருக்கின்றன.
2001- 2002, 2003, 2004 உங்கள் வருமானவரித்துறை கோப்புகளைப் புரட்டிப் பாருங்கள்!
இ எஸ் பி என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பெப்சி, வெளிநாடுகளில் பணம் எடுக்கும் விசா கார்ட் (ESPN STAR SPORTS, PEPSICO, VISA FOREIGN CURRENCY) கம்பேனிகளின் விளம்பரங்களில் வந்ததற்காக (நடித்ததற்காக என்று சொல்வதே தவறு..) உங்களுக்கு கிடைத்த வருமானம் 5,92,31, 211/ அந்த வருமானத்திற்கு நீங்கள் கட்ட வேண்டிய வரி 2,08,59,707/ ஆனால் நீங்கள் உங்கள் வருமானத்திற்கான வரியைக் கட்ட மறுத்தீர்கள், அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாதம் செய்தீர்கள். அந்தச் சூழலில் தான் உங்கள் திருவாய் மலர்ந்து, என் தொழில் மாடலிங் நடிப்பு என்று சொன்னீர்கள்.
அதாவது இந்திய அரசுக்கு கட்ட வேண்டிய வரியில்  சலுகை பெற இல்லாத ஒன்றை இருப்பதாக வாதம் செய்தீர்கள்! உங்கள் கூற்றுப்படி உங்கள் தொழில் - நடிப்பு, நீங்கள் நடிகர். அதிலிருந்து வரும் வருமானத்தை தான் முதன்மையான வருமானமான காட்டினீர்கள்! கிரிக்கெட் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை "பிற வருமானங்கள்" (INCOME FROM OTHER SOURCES)என்றல்லவா சொன்னீர்கள்! he is a popular model acts in various products of various companies என்று உங்கள் வருமான வரி ஆலோசகர்கள் வாதிட்டார்களே!
நீங்கள் கிரிக்கெட் வீரர் இல்லை என்றால் வேறு யார் தான் கிரிக்கெட் வீரர்? நீங்கள் கிரிக்கெட் வீரர் என்பதால் உங்களைத் தங்கள் விளம்பரங்களில் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றார்களே தவிர நீங்கள் ஒரு மிகச்சிறந்த மாடலிங் கலைஞர் என்பதால் அல்ல என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அல்லவா உங்களிடம் சொல்ல வேண்டி வந்தது? ஏன் சச்சின்? கிரிக்கெட் உங்கள் அடையாளம், உங்கள் உயிர்மூச்சு என்றால் அதை எப்படி உங்கள் வரிச்சலுகைக்காக இரண்டாம் நிலைக்குத் தள்ளினீர்கள்?
அதன் பிறகும் நீங்கள் தொடர்ந்து வரிச்சலுகைப் பெற என்னவெல்லாம் செய்தீர்கள் சச்சின்?
ரூ. 57,969/ உங்கள் பணியாட்களின் நலநிதி
ரூ 50,000/ தொலைபேசி செலவு
ரூ 142,824/ உங்கள் கார்ச்செலவு...
இதற்கெல்லாம் கூட வரிவிலக்கு கேட்டீர்கள்.. இறுதியில் இதெல்லாம் உங்கள் குடும்பச்செலவு என்று இந்திய வருமான வரித்துறை கொஞ்சம் கறாராக சொல்லிவிட்டது.
சரி இதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்குப் பரிசாகக் கிடைத்த ஃபிராரி காருக்கு வரி கட்ட மறுத்தீர்களே எவ்வளவு கோபத்துடன் ஊடகங்களைச் சாடினீர்கள்? இறுதியில் உங்களுக்கு அந்தக் காரைப் பரிசாகக் கொடுத்த ஃபியட் அல்லவா அந்த வரியைக் கட்டினார்!
பரிசுப் பொருட்களுக்கு வரி வாங்குவது சரியல்ல என்றே வைத்துக்கொண்டாலும் பரிசாக வாங்கிய அந்தக் காரை குஜராத்தில் ஒரு வியாபாரிக்கு விற்றுவிட்டீர்களே! அந்தக் காரை விற்று வந்த வருமானத்தை எந்தக் கேபிடல் கணக்கில் காட்டி எப்படி சமாளித்தீர்கள்?
நல்ல இந்தியக் குடிமகன் வருமான வரியை உடனே கட்ட வேண்டும். அரசை ஏமாற்றாமல் கட்ட வேண்டும், சரியாகக் கட்ட வேண்டும், என்றெல்லாம் இந்திய அரசு எங்களைப் போன்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.. அதே இந்திய அரசு தான் உங்களுக்கு
பாரத ரத்னா வழங்கி இருக்கிறது!
சஹாராவின் க்யு ஷாப் விளம்பரத்தில் நீங்களும் வந்தீர்கள்.. அதுவும் செபி அந்த நிறுவனத்தின் மீது சந்தேகப்பட்டு யாரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவித்தப் பின்னரும் உங்கள் விளம்பரங்கள் ஓடிக்கொண்டு இருந்தன! ஒரு பேச்சுக்காவது சஹாராவின் மீது உங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருப்பீர்களா? அதுமட்டுமா சச்சின், ஹோம் டிரேட் விளம்பரத்தில் உங்களைப் பார்த்து வீடு வாங்க தங்கள் சேமிப்பைக் கட்டி வீடும் கிடைக்காமல் நடுவீதிக்கு வந்தவர்களைப் பற்றி என்றைக்காவது வருத்தப்பட்டிருப்பீர்களா சச்சின்?
நீங்கள் நன்றாக விளையாண்டீர்கள், அதற்கு மிக அதிகமாகவே உங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. கிரிக்கெட் மட்டை வியாபாரத்தில் நீங்கள் கொடி கட்டிப் பறந்தது போல இனி எவராலும் பறக்க முடியாது! வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் வாசலில் கொட்டியது போல யாருக்கும் வாய்த்ததில்லை. நீங்கள் எப்போதும் இந்தியாவுக்காக விளையாடியதாக எல்லோரும் சொல்கிறார்கள், நீங்களும் கூட இப்போதெல்லாம் அடிக்கடி அப்படித்தான் சொல்லிக்கொண்டீர்கள்.. ஆனால் உங்கள் சட்டைக்காலரிலிருந்து கை, கால், சட்டைப்பை என்று உங்கள் உடலெங்கும் விளம்பரங்களைச் சுமந்து கொண்டுதானே விளையாடிக் கொண்டிருந்தீர்கள்!
இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை என்கிறீர்களா சச்சின்? அப்படித்தான் .. நீங்கள் வெறும் கிரிக்கெட் வீரராக, ஏன் கிரிக்கெட்டின் அடையாளமாக மட்டுமே இருக்கும் வரை இதெல்லாம் இந்த விளம்பர உலகத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும். ஆனால் இந்தியாவின் பாரத ரத்னா சச்சினுக்கு?


Sunday, November 10, 2013

மவுனத்தின் பிளிறல்





உங்கள் இலைகளில்
ஓரமாக ஒதுக்கப்படும்
கறிவேப்பிலையாக
இருப்பதில்
எனக்கு வருத்தமில்லை.
ஆனால்...
உப்பாக இருக்கிறேன்.
இந்த  உண்மை
உங்களுக்கு உவப்பானதாக இல்லை.
எனக்கும் தான்!

*

உங்களுக்கு விருப்பமானதை மட்டுமே
நான் விரும்புவதில்லை
உங்கள் பூமியில்
ஒரே சூரியன்
என் பிரபஞ்சமெங்கும்
ஒரு கோடி சூரியன்கள்
என் சிறகுகளை   
உங்கள் சூரியனால்
எரித்துவிட முடியாது.
ஏனே னில்
உங்கள் சூரியக்கதிர்களுக்கு
கங்குகளை ஏற்றி
சூடேற்றியது எம் சிறகுகள்.

*

என்னோடு நீங்கள் நடத்தும்
தீண்டாமை யுத்தத்தில்
பெரியாரின் கைத்தடி
எனக்கு மூன்றாவது காலல்ல.
மூன்றாவது கண்.

*

வெறுப்பின் உச்சத்தில்
உங்கள் தலைகள்
விலக்க முடியாத
அச்சத்தில்
என் இதயம்.

*

கடகரேகைக்குள்
மகரரேகை சங்கமிப்பதில்லை.
பூமத்திய ரேகையின்
விதிக்குள் புதைந்துவிட்டது
இந்தப் பஃறுளி
மவுனத்தின் பிளிறலோடு.




 




Saturday, November 9, 2013

அதிரடி.... வணக்கம் மும்பை






பத்திரிகை, புத்தகம் .. வெளியீடுகள் எப்போதும்
மும்பையில் நடந்துக்கொண்டிருக்கின்றன.

பத்திரிகை - நாளிதழோ வார மாத இதழ்களோ வெளியிடும் போது
யாரை வைத்து வெளியிடுவது என்பது எப்போதுமே வெளியிடுபவருக்குப்
பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?
முன்னாள் தலைவருக்கா? இன்னாள் தலைவருக்கா?
யார் முதல் பிரதியை வாங்குவது?
யாரை விமர்சனம் செய்ய சொல்லலாம்?
அல்லது யார் விமர்சனம் செய்தால் பிரச்சனைகள் இருக்காது?
யார் யாரெல்லாம் வாழ்த்துரையில் இருக்கிறார்கள்?
வாழ்த்துரையில் இல்லாத பெயர்களை முன்னிலையில் போட்டுவிடலாம்.
முன்னிலையிலும் விடுபட்டவர்களை சிறப்பு அழைப்பாளர்கள் போட்டுவிடலாம்

இதில் முன்னிலை பட்டியலுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலுக்கும்
என்ன வேறுபாடு? என்று யாரும் யோசித்து யோசித்து மண்டை காய வேண்டாம். !

இப்படியாக சகலவிதமான முன்னெச்சரிக்கையுடன் தயாரிக்கப்படும் அழைப் பிதழில் தங்கள் பெயர் எத்தனாவது வரிசையில் யார் யாருக்குப் பின்
அச்சிடப்பட்டிருக்கிறது என்று பார்த்து வருத்தப்பட்டு தங்களின் ரேட்டிங்
இறங்கிவிட்டதாக நினைத்து அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எங்கள் மும்பைவாசிகள் சிலர் ..

பத்திரிகை வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை என்ற
பெயரில் "உன்னால் பத்திரிகை நடத்த முடியாது" என்று வாழ்த்திவிட்டுப்
போகிறவர்களும் உண்டு. அவ்வளவு நல்ல மனசு அவர்களுக்கு.
தங்கள் தோல்வி அனுபவங்களால் அடுத்தவருக்கு எச்சரிக்கை செய்கிறார்களாம்!


இப்படியான பல காட்சிகள் அடிக்கடி அரங்கேறும் மும்பையில்
சரிதான் போங்கப்பா... நான் இந்த வெளியீட்டு விழா விளையாட்டுக்கெல்லாம்
வரவில்லை. என் "வணக்கம் மும்பை" இதழை தமிழர்கள் அதிகம் வாழும்
தாராவி சாலையில் வெளியிடப்போகிறேன் என்று சொல்லி அப்படியே
நவம்பர் 2 ல் மாலை 5 மணி வாக்கில் தாராவி 90 அடிச்சாலையிலும்
குறுக்குச்சாலையிலும் தன் பத்திரிகையை வெளியிட்டிருக்கிறார்
மும்பை பாமரன். எந்த முன்னறிவிப்பும் இன்றி சாலையில் போன ஒருவரை
அழைத்து " நீங்கள் தான் அய்யா இந்தப் பத்திரிகையை வெளியிடுகின்றீர்கள்!"
என்று சொன்னால் அந்த நபருக்கு எப்படி இருந்திருக்கும்?

பத்திரிகை வெளியீட்டில் அதிரடியாக இப்படி செய்திருக்கும்
வணக்கம் மும்பையின் ஆசிரியரிடம் பத்திரிகையின் நோக்கம் குறித்துக் கேட்டால்
"வணக்கம் மும்பை வாசிக்கிற வாசகன் கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கனும்ங்க, லோ லோனு மும்பை டிரெயினில் ஏறி போயி வேலைப் பார்த்திட்டு அலுத்து வற்ற நம்ப ஆள்களுக்கு என். எஸ். கே பாணியில்
ஏதாவது சொல்லிட்டு இருப்போங்க.. சரிதானே !நான் சொல்றது?" என்று
சொல்லிவிட்டு வேகமாக வீரார் டிரெயின் பிடிக்க ஓடுகின்றார்.

Tuesday, November 5, 2013

மன்மோகன்சிங்கை நம்புங்கள்!







மன்மோகன் சிங் நல்ல மனிதர்.
அமைதியானவர்.
ஆடம்பரம் இல்லாதவர்.

அவருக்கு இலங்கையில் முந்திரித் தோப்புகள் நிச்சயமாக இல்லை.

அவர் ரஜபக்சேவின் விருந்தில் கலந்து கொண்டு
தங்க ஒட்டியாணமோ அல்லது வைர நெக்லஸொ பரிசாக..
இல்லை... தங்க டர்பனோ கட்டிக்கொண்டு வரப்போவதில்லை.

எதையும் வாய்திறந்து பேசவெல்லாம் மாட்டார். அவரை நம்புங்கள்.
நம் இளவரசர் ராகுல்காந்தியாவது தீவிரவாதம், படுகொலை ,என் பாட்டி
அப்பா என்று ஏதாவது உளறிக்கொட்ட வாய்ப்பிருக்கிறது.
ஆனால் நம் மன்மோகன்சிங் அப்படி எல்லாம் எதுவும் உளறக்கூட
மாட்டார்.

சரி எதிலாவது கை எழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் என்ன
செய்வது? ஒட்டு மொத்த இந்தியாவின் தலைவர் ஆயிற்றே என்று
பயப்படுகின்றீர்களா..?

என்ன இவ்வளவு விவரம் கூட இல்லாமல் இருக்கின்றீர்கள்?
ஒப்பந்தங்களில் கை எழுத்து போடுவதே அதை மீறுவதற்குத் தான்!
அதிலும் இதில் உலக அரங்கில் முன்னணியில் நிற்கும் இந்திய-இலங்கை
ஒப்பந்தங்கள் பற்றி அறிந்தப் பின்னருமா கவலைப்படுகின்றீர்கள்?



பிறகென்ன...?

மன்மோகன்சிங் இலங்கை சென்றால் விபரீத விளைவுகளைச் சந்திக்க
வேண்டி வரும் என்று திமுக தலைவர் கலைஞர் வேறு பயமுறுத்துகிறார்.
கலைஞர் டிவியில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளின் தாக்கம் இது
என்பது தெரியாமல் பாவம், மன்மோகன்சிங்  ரொம்பவும் பயந்துவிடப்
போகிறார். டில்லியின் வெள்ளை வேட்டியும் கலைஞரும் சேர்ந்து
இப்படி மன்மோகன்சிங்கை வைத்து காமெடி கலாட்டா செய்வதை
நிறுத்த வேண்டும் என்று நரேந்திரமோதியே கூட நாளை கண்டன
அறிக்கை வெளியிடலாம். பிறகென்ன... மன்மோகன்சிங் என்ன காங்கிரசு
மந்திரியா..?. இந்தப் பாரதநாட்டுக்கே பிரதம மந்திரியாயிற்றே!!



காங்கிரஸூ கோபண்ணா அவர்களின் தீவிர ரசிகர்கள்/ ரசிகைகளின்
கவனத்திற்கு:

அடுத்த முறை உங்கள் கோபண்ணா  அவர்கள்  டிவியில் நேர்ப்படவோ
நேர்ப்படாமலோ பேசும் போது மன்மோகன்சிங் போவதைக் குறித்து
யாரும் அதிகம் பயப்பட வேண்டியதில்லை என்பதைக் கட்டாயம் சொல்லும்படி
செய்தி அனுப்பி விடுங்கள்.




Saturday, November 2, 2013

பெண்களும் கொண்டாட்டங்களும்







அம்மா அருள் வந்தவள் போல ஆடிக்கொண்டு இருக்கிறாள்.
அவள் கைகள் இரண்டு என்றாலும் பன்னிரெண்டு கரங்களுடன்
அவள் வலம் வருவது போலிருக்கிறது.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் துடைத்து வைக்கிறாள்.
பலகாரங்கள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்கிறாள்.
அதன் பின் நள்ளிரவு வரை உட்கார்ந்து இனிப்பும் காரமும்
என்று ஒவ்வொரு சுவையிலும் செய்துஅடுக்கி வைக்கிறாள்.

அதிகாலையில் எழுந்தே வாசலில் ரங்கோலி போட்டு விளக்கு
ஏற்றி வைத்துவிட்டு குளித்து பூஜை செய்து சாப்பாடு மேசையில்
அனைவருக்குமான பலகாரங்களை அலங்காரமாக அடுக்கி வைத்து
காத்திருக்கிறாள்.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்,  ரம்சான், கோவில் கொடை, திருவிழா,
இப்படி எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் அம்மாக்கள் இப்படி
அவதாரங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் அடிக்கடி என் அம்மா அலுத்துக் கொள்கிறாள்
அவள் அம்மா செய்ததில் பாதி அளவு கூட அவள் செய்யவில்லையாம்!
அவள் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை என்பது எனக்குத் தெரியும்.
.
பால்கனியிலிருந்து பார்க்கிறேன்.

எங்கள் மும்பை நள்ளிரவிலும் மின்வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது. கடைவீதிகள் எங்கும் கூட்டம், கூட்டம்
பெண்களின் கூட்டம். அவரவர் தகுதிக்கு ஏற்ப விரிந்து கடைப்பரப்பி இருக்கிறது சந்தை. அடுக்குமாடிகளின் குளிரூட்டப்பட்ட கார்ப்பரேட்
கடைகள் முதல் ரோட்டோரத்தில் கோலமாவு விற்கும் மவுசி வரை...
கூட்டம் கூட்டம் எங்கும் பெண்களின் கூட்டம்.
வீடுகள் தோறும் என் அம்மாக்களின் அவதாரங்கள் !


என் அம்மா சக்தியை வழிபடுபவள்.
என்னிடம் சக்தியின் மகிமைகள் குறித்து எத்தனையோ கதைகளையும்
தன் அனுபவங்களையும் சொல்லி இருக்கிறாள்.

அவள் கடைசிவரை சொல்லாத ஒரு கதை....

அம்மா ,
இந்தக் கொண்டாட்டங்கள்
சக்திக்கு
 மயிலிறகா? முள்கிரீடமா?