Tuesday, May 26, 2009

வாழ்ந்ததை உணர்த்திய மரணம்


(1)
வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,
ருவண்டாவில், ருசியாவில்,
ஈரானில் ஈராக்கில்
இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம்..
நமக்கு வெறும் செய்தி.
சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு
தூக்கி எறிந்துவிடும் செய்தி.
உலகச் செய்திகளில்
வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி.
அதுவே இலங்கையில் நடந்தப்போது....
செய்திகள் வாழ்க்கையானது.
அவர்களின் முகம் தெரியாதுதான்.
தொடர்புகள் இல்லைதான். ஆனாலும்
அவர்கள் வாழ்க்கையில்
அவர்கள் போராட்டத்தில்
அவர்கள் ரத்தத்தில்
அவர்கள் வெற்றியில் அவர்கள் தோல்வியில்
நாமும் இருந்தோம். இருக்கிறொம்.
அவர்கள் வாழ்க்கை நம்முடையதாக இல்லை எனினும்
அவர்கள் மரணம் நம்முடையதானது.
பிறப்பில் தான் உறவுகள் நிச்சயிக்கப்படுவதாகவும்
தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,.
ஆனால்
அவர்கள் இறப்பில் தான்
அவர்களுக்கும் நமக்குமான உறவு நிலம் விளைந்தது.
அவர்கள் மரணத்தில் தான்
நாம் நம்மை நம் வாழ்க்கையை கற்றுக்கொண்டோம்.
அவர்களின் ரத்தம் தோய்ந்த போராட்டத்தின் கதைகளின் ஊடாகவே
நாம் போராளிகளின் முகங்களை வரைந்தோம்.
மண்ணம்பேரியும் கோணேஸ்வரியும்
நம் ஆதித்தாயின் புதல்வியர் என்பதை
உணர்ந்த தருணங்களில் தான்
முலைப் பிடுங்கி எறிந்த கண்ணகியின் ஆவேசத்தைக்
கற்பனையில்லை என்றுணர்ந்தோம்.
சுயம்புவாக முளைத்த பெண்ணியத்தை கோணேஸ்வரியின்
யோனியில் வெடித்த கிரனைட் வெடிச்சிதறல்கள் தான் நம்மில் விதைத்தன.

--
(2)


சித்திரவதை முகாம்களில்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டைநாயின் இரத்த நெடி
ரத்தக் கறைப்படிந்த சுவர்களில்
மனித ஆன்மாவின் சித்திரங்கள்.

கனவில் கத்திகள் பாய்ந்தக் கவிதைகளை
ரசிக்கும் படி எழுதிக்குவித்த
எம் கவிஞர்கள்
எப்போதும் எழுதியதில்லை
காலம் காலமாய்
வரப்போகும் தலைமுறை தலைமுறையாய்
நம்மை நம் சந்ததிகளைத்
துரத்திக்கொண்டிருக்கும்
மரணத்தின் ஓசையை.


(3)
மரணம் மட்டுமே அறிந்த
எம் விளைநிலத்தில்
குருதியின் நிறத்தில்
பூக்கும் மலர்களில் கூட
வீச்சமடிக்கும்
இனவாத எலும்புத்துண்டுகளின் வாடை.

எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல
உங்கள் குழந்தைகளும்
குழந்தைகளாக வளரவில்லை.
வெடிகுண்டுகளும்
பீரங்கி ஓசைகளும்
பாலூட்டிய
பதுங்குகுழிகளின்
மழலை விரல்களில்
பிறக்கும் போது
பதிந்துவிட்டது
ரத்தம் தோய்ந்த
வன்மத்தின் வாடை.

யுத்த வெறியில்
உன்மத்தம் பிடித்த
நாய்களுக்குத் தெரிவதில்லை
நடுவீட்டிலும்
புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகளின் காட்சி.
சிங்களத்தாயின் அடிவயிற்றிலும்
ஜனிக்கக்கூடும்
கம்சன்களை வதைச் செய்யும்
கண்ணனின் அவதாரம்.

-
(4)

மக்களின் மரணத்தை
கைதட்டிக் கொண்டாடியது ஒரு கூட்டம்
மனிதம் மரணித்து போனதை
மவுனமாக பதிவு செய்தது
அந்த நீண்ட இரவு.

தப்பித்ததாக சொன்னார்கள்.
நலமாக இருப்பதாக
நம்பிக்கையுடன சொன்னார்கள்
இல்லை இல்லை
எல்லாம் முடிந்ததென்றும்
எரித்துவிட்டதாகவும்
சாம்பலைக் கூட
இந்தியக்கடலின் மடிநிறைக்க
கரைத்துவிட்டதாகவும்
காற்றில் கலந்துவிட்டதாகவும்
மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்..

மரணத்தை மீறியும்
தனி மனிதர்களின் வளையத்தைத் தாண்டியும்
வாழ்க்கையும் உண்டு
போராட்டங்களும் உண்டு

தன் பெண்டு தன் பிள்ளை
தன் மனைவி தன்துணைவி
தன் பேரன் தன் சுற்றம்
இவர்களையே மந்திரிகளாக்கும்
வித்தைகள் அறிந்த
நம் தலைவர்கள்
அறிந்ததில்லை
நிலத்தடியில் உதிக்கும்
சூரியக்குஞ்சுகளை.

(கவிதை தலைப்பு - சங்கரியின் கவிதை "இருப்பும் இறப்பும்"
கவிதை வரிகள். தொகுப்பு : சொல்லாத சேதிகள்)

Tuesday, May 5, 2009

நகம்




விதம் விதமாக
வண்ணம் பூசி
அழகுப்பார்த்த காரணத்தாலேயே
வெட்டாமல் இருக்க வேண்டும்
என்பதல்ல.
கவனமாக வெட்ட வேண்டும்.
ஆழமாக வெட்டினால்
ரத்தக்கசிவு வரலாம்
கவனிக்காமல் விட்டுவிட்டால்
வீங்கி சீழ்ப்பிடித்து
விண் விண் என்று
வலி கொடுக்கும்
பிராண அவஸ்தையை
அனுபவிக்க வேண்டிவரும்.


வளர்ப்பது தற்காப்புக்கு
என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்
வளர்ந்து வளைந்திருக்கும்
இடுக்குகளில்
தங்கிவிடுகிறது
தேடிவந்த அழுக்கும்
தேகத்தின் அழுக்கும்.
சமைப்பது சாப்பிடுவது
அழுக்குகள் சேர்த்துதான்
என்றாலும்
பழகிவிட்டது
இரப்பையும்
இறைப்பையும்.


இரவில் வெட்டினால்
தரித்திரம் என்று
பாட்டி சொன்னதையே
அம்மாவும் மறக்காமல்
சொல்கிறாள்.

வெட்ட வெட்ட வளருமாம்
உன் நினைவுகளைப் போலவே
நகமும் .
செத்த உடம்பிலும்
நகம் வளருமாமே
சொல்லுகிறார்கள்
உண்மையா?
அதனால்தான் உயில் எழுதுகிறேன்
விரல்களைப் புதைக்காதீர்கள்
எரித்துவிடுங்கள் என்று.

---------------