Sunday, March 27, 2022

வணக்கம், தலைவா .. ஹாஜிமஸ்தான் வரதாபாய் முதல் சந்திப்பு

 

 
 
“வணக்கம், தலைவா ” ஹாஜி மஸ்தான், வரதபாய் முதல் சந்திப்பு
இதை தமிழ் சினிமா டைரக்டர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். !
இவர்கள் இருவரையும் திரையில் காட்டிய எந்தப் படத்திலும் இந்த உண்மையான காட்சி இடம்பெறவில்லை!
 
பச்சைக்குதிரை நாவலிலிருந்து …
 
கஸ்டம்ஸ் கோடவுணிலிருந்து சமான்களைத் திருடி சோர்பஜாரில் வரதாபாய் விற்றுக்கொண்டிருந்தக் காலக்கட்டம் அது. அப்போது கஸ்டம்ஸின் கோடவுணில் வந்திருக்கும் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் தினக்கூலியாக வேலைப் பார்த்தவர் செல்வவிநாயகம். இந்த திருட்டுத்தொழிலில் இருக்கும் காலத்தில் தான் இருவருக்கும் பழக்கமானது.
ஒரு முறை யுனியன் மினிஸ்டருக்கு வந்த ஒரு கண்டெய்னரைத் திருடி ஒளித்து வைத்திருந்தார்கள். போலீசாருக்கு மேலிடத்திலிருந்து பிரஷ்ஷர் வந்ததால் வரதாபாயையும் செல்வவிநாயகத்தையும் அரெஷ்ட் செய்து அடித்து மிரட்டி கெஞ்சி எல்லாம் செய்து பார்த்துவிட்டார்கள். ம்கூம் நாங்கள் திருடவே இல்லை என்று அந்த திருடர்கள் இருவரும் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
போலீஸ் அந்தக் கேசை கையாள எடுத்துக் கொண்ட ஒரு அதிரடி நடவடிக்கை மும்பை அண்டர்கிரவுண்ட் சாம்ராஜ்யத்துக்கு ஓர் அடிக்கல் நாட்டிய நாள். என்றுதான் சொல்ல வேண்டும்.
‘என்ன தம்பி. ரொம்ப அடிச்சுப்புட்டானுகளா’ என்று அனுதாபத்துடனும் அன்புடனும் தன்னைவிட வயதில் இளைய செல்வவிநாயக்திடம் ஆறுதலாக வரதாபாய் பேசிக்கொண்டிருந்த அந்த இரவு, ஆர்தர் ரோடு சிறையில் இருந்த அவர்களைச் சந்திக்க ஒரு வெள்ளுடை அணிந்த கனவான் கம்பீரமாக வந்தார்.
எதிர்காலத்தில் மும்பையை ஆட்டிப்படைத்த அந்த இருவரின் சந்திப்பு அப்படித்தான் நடந்தது. வெள்ளைக் கலரில் மின்னும் பேண்ட் சர்ட், கையில் 555 சிகிரெட் புகை, நடையில் ஒரு பணக்கார மிடுக்கு.. அவர் ஹாஜி மஸ்தான். சிறை வளாகத்தில் நுழையும் அவரை யாரும் தடுக்கவில்லை. வரதபாயும் செல்வவிநாயகும் அவர் வருவதை அதிசயமாக கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க அவர் நேராக வரதாபாயிடம் வந்து "வணக்கம், தலைவா" என்றார்.
கசங்கிய வேட்டி., அழுக்கான தோற்றம்,காலில் தேயந்த சிலிப்பர் கோலத்தில் இருந்த தன்னிடம் வந்து "தலைவா "என்றதும் அதுவும் தமிழில் பேசியதும் ஆச்சரியமாக இருந்தது. எந்த வகையிலும் மஸ்தானின் அந்தஸ்த்துக்கு இணையாக நிற்க முடியாத மனிதரிடம் வந்து ‘வணக்கம், தலைவா’ என்று மஸ்தான் பேசியதில் திக்குமுக்காடிப் போனவர் செல்வவிநாயகம்.
அங்கே அந்தச் சிறையில் அவர்களுக்குள் நடந்த உரையாடல் தமிழில் இருந்தது. அவர்கள் தாய்மொழியே அவர்களுக்குள் ரகசியம் பேசிக்கொள்ள உதவியாக இருந்தது . அவர்கள் இருவரும் ரொம்பவும் நெருங்கி வந்துவிட்டார்கள். கோடவுணில் திருடுவதெல்லாம் ‘சும்மா, கள்ளன் போலீஸ் விளையாடும் சின்னப்பிள்ளை விளையாட்டு " என்பதை வரதாபாய் புரிந்து கொண்டார். 
அந்தக் கதை மர்மங்கள் நிறைந்தது. 
 
 ajay
 
(பிகு: என் பச்சைக்குதிரை நாவலில் இந்த உண்மை நிகழ்வை என் கதைக்கு அப்படியே எடுத்துக்கொண்டு எழுதினேன்! இதில் செல்வவிநாயகம் என் புதினத்திற்கான கதைப்பாத்திரம். மற்றபடி சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் நடந்த சம்பவங்கள்..)

 

Monday, March 21, 2022

ஆக்டோபஸ் அரசியல்

 


நடுநிலைமை என்பது அயோக்கியத்தனம், பிழைப்புவாதம்”
“இக்கட்டுரைகள் நடுநிலைப் பார்வையோடு எழுதப்பட்டவை
 என்று சொன்னால் அது மாபெரும் பொய்” 
என்று தன் ஆக்டோபஸ் காவியங்களின் 
பக்கங்களைப் பற்றி தெளிவாக உறுதியுடன்
பிரகடனப்படுத்திவிடுகிறார் எழுத்தாளர் எழிலரசு அவர்கள்.
 
நடுநிலைமை என்பது ஓர் அயோக்கியத்தனம்.
இன்னும் சொல்லப்போனால்
சமூகத்தின் கையாலாகததனம். ..
நடுநிலைமை என்பது ஒரு தப்பித்தல்.
ஒருவகையான பிழைப்புவாதம்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்துகள்
அறம் பிழைப்பதில்லை.
அறம் பிழையாமைதான் எழுத்தறம்.
அதை ஆக்டோபஸ் காவியம் எழுதிப் பார்த்திருக்கிறது.
 
பத்திரிகையில் அவ்வப்போது வெளிவந்தக் 
கட்டுரைகளின் தொகுப்பு என்ற வகையில்
  இக்கட்டுரைகள் பல்வேறு காட்சிகளை முன்வைக்கும் 
கலைடாஸ்கோப்பாக இருக்கின்றன. 
 சமகால அரசியலுடன் இலக்கியம் முதல்
 இன்றைய முகநூல் கலாச்சாரம் வரை 
தன் பார்வையை முன்வைத்திருப்பது
 இக்கட்டுரைகளின் சிறப்பு.
 
அரசியல் தலைவர்களைப் பற்றி எழுதுகிறபோது 
அறிந்தச் செய்தியின் ஊடாக அறியப்படாத தகவல்களை 
முன்வைப்பது முக்கியம். அதுதான் அப்பக்கங்களை 
கனமுள்ளதாக்கி வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் 
நடுவில் இனம்புரியாததொரு நேசத்தையும் மரியாதையையும் உருவாக்கிவிடுகிறது.
அடுத்தமுறை வாசகன் அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் 
எழுத்துகளைத் தேடிவாசிக்க வைத்துவிடும் . 
இதைக் கச்சிதமாக எழுத்தாளர் எழிலரசின்
ஆக்டோபஸ் காவியம் செய்திருக்கிறது.
உதாரணமாக கலைஞர் அவர்களின் பொன்னர் சங்கர்
 வரலாற்று நாவலைப் பர்றிய கட்டுரை
. இது தமிழ் வாசகர்களுக்குப் புதிய செய்தி அல்ல. 
அந்த தெரிந்த செய்தியின் ஊடாக வாசகர்கள் 
அறியாத இன்னொரு பக்கத்தை திறக்கிறார்.
இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவலாசிரியர்கள் 
அனைவரும் தங்கள் கதைகளுக்கான தரவுகளை
 கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், ஓலைச்சுவடிகள், 
அருங்காட்சியகங்கள், இலக்கியங்கள் மற்றும் அறிஞர்களின் ஆய்வுகளிலிருந்து எடுத்திருக்கிறார்கள். 
ஆனால் கலைஞரோ மக்கள் பாடல்களிலிருந்து 
 தகவல்களைத் திரட்டி இருக்கிறார் என்பதையும் 
அதற்கு உதவிய கட்சிக்காரர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முதல் கவிஞர் சக்திக்கனல் வரை தன் முன்னுரை பின்னுரையில் 
கலைஞர் குறிப்பிட்டிருந்ததையும்
பதிவு செய்கிறார், இக்கட்டுரை எழுதியப்பின்
 பின்னூட்டமாக வந்த அரியதொரு தகவலையும் 
கட்டுரையில் இணைத்திருப்பது இனவரைவியல் 
ஆய்வில் இன்னொரு புள்ளியாக இருக்கிறது. 
 கொங்கு வேளாளர் முருகன்-தெய்வானையை 
வணங்குபவர்கள் என்பதும் 
வேட்டுவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 
முருகன்-வள்ளியை வணங்குபவர்கள் என்பதும் 
 தகவலாக மட்டும் பதிவாகவில்லை.
முருகன் தமிழ்ச் சமூகத்தின் ஆதி தெய்வம். 
அவனோடு இருக்கும் வள்ளியும் தெய்வானையும் 
இருவேறு சமூகத்தின் அடையாளமாக இருந்தது போய் 
அவரவர் சாதிய அடையாளமாகி இறுதியில்
 முருகன் வள்ளி தெய்வானை இருவருடனும் 
காட்சியளிக்கும் புதியகதையின் முகவரியை 
குறிப்பாக உணர்த்தியும் இருக்கிறார் எழிலரசு அவர்கள்.
 
மறந்துகொண்டே இருப்பது மனித இயல்பு.
 அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது எழுத்துமரபு. 
காங்கிரசு கமிட்டியிலிருந்து
விலக்கப்பட்டிருந்த மதன் மோகன் மாளவியாவும் 
ராஜாகோபாலாச்சாரியரும்
மீண்டும் காங்கிரசு காரியக்கமிட்டியில் 
சேர்த்துக்கொள்ளப்பட்டது ஏன்? என்ற
கேள்வியை 1931 ஆகஸ்டு மாதம் விருது நகரில்
 நடைபெற்ற 3வது சுயமரியாதை மாநாட்டில் 
திரு செளந்திரபாண்டியனார் ஆற்றிய உரையை 
நினைவூட்டுகிறார். மறக்கப்பட்ட இந்த வரிகளின் ஊடாக
 இன்று தன் கரங்களை விரித்திருக்கும்
 ஆக்டோபசின் புதிர்களை விடுவிக்கிறார்.
 
வெளிப்படுத்துவதற்கு சிக்கலான கருத்துகளையும்
 சரியானப் புரிதலுடன் வெளிப்படுத்தும்போது
 அக்கருத்து வாசகனிடம் சரியாகப் போய்ச்சேர்ந்துவிடும். 
ஆனால் ஒவ்வொரு கட்டுரையாளருக்கும் 
இது மிகவும் சிக்கலான சவாலான செயல்.
 காரணம் சிக்கலான கருத்துகளை எழுதும்போது 
வெளிப்படுத்துவதில் சிறிது தவறு ஏற்பட்டாலும் 
அதுவே அந்த எழுத்து சொல்லவந்ததையும் 
கெடுத்து இன்னொரு திரிபு நிலைக்கு கொண்டுவந்து
 விட்டுவிடும். அதனால் தான் பலர் இம்மாதிரியான 
சில சிக்கலான முடிச்சுகளைத் தொடுவதில்லை.
 நமக்குஎதற்கு வம்பு? பிரச்சனைகள் வேண்டாம்
 என்று ஒதுங்கிவிடுவார்கள். 
ஆனால் ஒதுங்கி விடுவதால் பிரச்சனைகள்
 இல்லை என்றாகிவிடுமா என்ன?
எழிலரசு அப்படி ஒதுங்கிவிடுபவரில்லை. 
காந்தி அம்பேத்கர் சந்திப்பு,
காந்தியின் ராம ராஜ்யம் என்ற கற்பனாவாதம் , 
அதை எதிர்கொண்ட நேருவின் அரசியல்.. 
இதை எல்லாம் கட்டுரையாக்கி இருக்கிறார்.
 கட்டுரையின் தலைப்பும் பொருத்தமாக
 “அறம் தவறிய அரசியல் பிழைகள்” 
 
ஆக்டோபஸ் காவியம் சமகால அரசியலையும்
 கடந்த கால அரசியலூடாக பார்த்திருக்கிறது. 
சமகாலத்தை புதிய தொரு கோணத்தில் அணுக 
வாசகனுக்கு வழிகாட்டுகிறது. 
இன்னும் சில பக்கங்கள் வாசகனை மேலதிக 
தேடலுக்கும் இட்டுச்செல்கிறது. 
அண்மையில் வெளிவந்திருக்கும் 
சமூக அரசியல் கட்டுரைத்தொகுதிகளில்
 'ஆக்டோபஸ் காவியம் 'முக்கியமானது.. வாழ்த்துகள். 
 
&&&
 
ஆக்டோபஸ் காவியம் (கட்டுரைகள்)
எழுத்தாளர் வே. எழிலரசு
வெளியீடு : இருவாட்சி 
கைபேசி: 9444640986.
பக். 160. விலை ரூ 170.
 

Sunday, March 20, 2022

ஒருபாலினபுணர்ச்சி.. தொடர்வதன் மர்மங்கள்

 


ஆண் பெண் இருபாலின புணர்ச்சியில் இனப்பெருக்கம் 
தொடர்வது இயற்கை.
ஆனால் இனப்பெருக்கத்திற்கு பயன்படாத
 ஒரு பாலின புணர்ச்சியில் அதற்கான மரபணுக்கள் 
காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும்.
ஆனால் தொடர்ந்திருக்கின்றன.. ஏன்? எப்படி?
இதைப்பற்றி ஆய்வு செய்வதே பாவம் என்று 
கருதப்பட்ட காலமிருந்தது.
ஆனால் இந்த மரபணுக்கள் தலைமுறைகளாக
 கடத்தப்பட்டு வந்திருப்பதை
இயற்கை உறவின் ஒரு பக்கமாகவே 
இன்றைய மரபணு ஆய்வுகள் முன்வைக்கின்றன.
 
பிறக்கும் குழந்தை அம்மாவிடமிருந்தும் அப்பாவிடமிருந்தும் 
 பெறும் ஒரு குறிப்பிட்ட பாலின மரபணுவானது 
 ஒன்று போல இருக்கலாம்.(homozygous) , 
அல்லது வேறுபட்டும் இருக்கலாம் (heterozygous).
ஒன்றுபோல இருக்கும் பாலின மரபணுக்களைக் 
கொண்ட குழந்தையே ஒரு பாலின புணர்ச்சியாளராக
மாறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. 
 
 
இரண்டாவது கருத்து : தாயின் கருவறைச்சூழலும் கூட
காரணமாக இருக்கலாம் என்பது. . 
அதாவது ஒரு பெண்ணின் கருப்பையில் 
ஆண்பிள்ளைகளையே சுமந்திருக்கும் என்றால் அச்சூழலில்
மெதுவாக ஆண்மைய எதிர்ப்பாற்றல் சக்தி 
உருவாகி அது கடைசியாக அவள் பிரசவிக்கும்
 ஆண் குழந்தையிடம் வினையாற்றி இருக்கிறது.
எந்த முடிவுகளும் இதுதான் 100% காரணிகள் 
 என்று அறுதியிட்டு கூறவில்லை. தொடர்ந்து 
ஆய்வுகள் நடக்கின்றன. 
 
இந்திய உச்ச நீதிமன்றம் இருவரின் ஒப்புதலுடன் 
நடக்கும் ஒருபாலினபுணர்ச்சி, சட்டப்படி குற்றமில்லை 
என்று தீர்ப்பளித்து இருப்பது வரவேற்புக்குரியது. ஒருபாலினபுணர்ச்சியாளர்களை வெறுக்காமல்,
 கலாச்சார கைத்தடிகளைக் கொண்டு ஒடுக்காமல், 
மூட நம்பிக்கைகளுடன் அணுகாமல் 
இதுவும் இயற்கையின் ஓர் அதிசயம்
 என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 
ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை.
வெறுத்து ஒதுக்காமல் இருந்தாலே போதும். 
 
( ஆதாரம் : சு. இராமசுப்பிரமணியன் எழுதி இருக்கும் கட்டுரை : 
டார்வினின் பரிணாம-முரண். 
காக்கைச் சிறகினிலே இதழ் பிப்.- 22.)

Friday, March 18, 2022

The Kashmir Files VS Mumbai Diaries 26/11

 

காஷ்மீரைப் பார்க்கவில்லை.
பாதி உண்மையை சொல்வது என்பது
முழுப் பொய்யை சொல்வதைவிட ஆபத்தானது.
ஆனால் அந்த ஆபத்தை எப்போதும் கொழுந்துவிட்டு
எரியவைத்துக்கொண்டே இருப்பதன் மூலம் அரசியல்
ஆதாயம் தேடுகிறார்கள் என்பதை பாதிக்கப்பட்ட அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்துக்கள் விரட்டப்பட்டார்கள். உண்மை.
 ஆனால் அதைவிட உண்மை விரட்டப்பட்டதும்
பாதிக்கப்பட்டதும் 
இந்துக்கள் மட்டுமல்ல.
காஷ்மீர் – சுதந்திர இந்தியாவின் காஷ்மீரில் தான்
இதுவும் நடந்திருக்கிறது!
1991, பிப்ரவரி மாதம் 23 ஆம் நாள் “தேசியம்” என்ற பெயரால்
 POSHPORA கிராமத்தில் என்ன நடந்தது?
பாதி விதவைகள் – HALF WIDOWS இதுவும்
காஷ்மீர் தான்.
ஆனால் காட்சிப்படுத்தவோ கதையாகக்கூட எழுதவோ
முடியாது.
பார்க்காத காஷ்மீர் பயமுறுத்துகிறது.
ஆனால் நானே சாட்சியாகவும் ரத்தக்கறையுடனும்
நின்றுகொண்டிருந்த ‘மும்பை டைரிஸ் ‘ 
பயமுறுத்தவில்லை! நம்பிக்கை தருகிறது.
 
வி. டி. ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கியில்
சுட்டுத்தள்ளினார்கள்.
எம் மதிப்புமிக்க காவல்துறை அதிகாரிகளை
அவர்களின் துப்பாக்கியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
எங்கள் மும்பையின் கம்பீரமான தாஜ் ஹோட்டலில்
அவர்கள் புகுந்து வேட்டையாடினார்கள்.
எதுவும் செய்யமுடியவில்லை. அந்த நிகழ்வு நடந்த அந்த நாளில்
(26/11) பம்பாய் மருத்துவமனையில் என்ன நடந்திருக்கும்?
காட்சியாக விரிகிறது மும்பை டைரியின் பக்கங்கள்.
காவல்துறை அதிகாரிகள் டாக்டரை உணர்ச்சி வேகத்தில்
துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்.
இப்பெரு நகரத்தின் காவல்துறை அதிகாரியைக்
காப்பாற்ற முடியாத உன் மருத்துவம்
எப்படி ஒரு தீவிரவாதியை ,
எம் மக்களை சுட்டுக்கொன்றவனைக் (கசாப்)
காப்பாற்ற மருத்துவம் பார்க்கிறது ?
அவர்களின் அந்த நாளும்
அந்த உணர்வுகளும் அப்படித்தான் இருந்திருக்க முடியும்.
ஆனால் காட்சி அதை மட்டும் காட்டியதுடன்
முடிந்துவிடவில்லை. டாக்டர் கெளசிக் சொல்கிறார்,
“என் மருத்துவம் எனக்கு சொல்லிக் கொடுத்திருப்பது
என் எதிரில் இருப்பவன் யார் என்று பார்த்து
மருத்துவம் செய்ய வேண்டும் என்றல்ல.
எனக்கு என்னிடம் வரும் எல்லோருமே
நோயாளிகள் தான்.
அவர்கள் யார் என்பதை நான் பார்ப்பதில்லை”
இரண்டுமே இந்த தேசத்தின் ரத்தக்கறை படிந்த
வரலாறுகள் தான்.
 
காஷ்மீர் பைல்ஸ் ரத்தக்கறையை எரியூட்டி
அரசியலாக்கப்பார்க்கிறது.
மும்பை டைரிஸ் .. படிந்துவிட்ட ரத்தக்கறையை 
துடைத்து மனித மனங்களை
 வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.
 
துப்பாக்கிகளுக்கு தான் அரசியலும் மதமும்
 அதிகாரபோதையும்
வரலாறாக இருக்கிறது.
சிந்திய ரத்தங்களில் அவை இல்லை.

Tuesday, March 15, 2022

வரலாறுகள் விசித்திரமானவை.

 

தாஜ்மஹால் காதலின் சின்னம் என்ற பிம்பம் 
கட்டி எழுப்பபட்டு, உலகின் ஏழு அதிசயங்களில் 
ஒன்றான சமாதியாக வெள்ளைப்பளிங்குகளில் 
வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
 ஆனால் தாஜ்மஹாலைக்கட்டிய ஷாஜஹானுக்கு
 பல காதலியர்கள் உண்டு. 
பல மனைவியர்களும் உண்டு. 
பலதாரமணத்தை ஏற்றுக்கொண்ட அரண்மனை வர்க்கத்தின்
பிரதி நிதி மட்டுமல்ல, அதை சட்டப்பூர்வமாக 
நியாயப்படுத்தி இருக்கும் இசுலாமிய மதமும் 
 அவன் பலதாரமணத்தை குற்றமாக்கியதில்லை.
 
ஆனால் அதே இசுலாமிய சமூகத்திலிருந்து 
அதே அரண்மனை வர்க்கத்திலிருந்து 
ரொம்பவும் வித்தியாசமான ஒர் அரசன் வரலாற்றில் 
அதிகம் நினைக்கப்படுவதில்லை. 
அவன் டில்லியை ஆண்ட சுல்தான் ‘நசுரூதின் முகமதுஷா” 
இந்த சுல்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கையை வாழ்ந்தவன்.அதிசயமான அரசன். 
அவன் அரண்மனை அந்தப்புரத்தில் 
அவள் மட்டும் தான் இருந்தாள் என்பது மட்டுமல்ல, 
 அவன் அரண்மனையின் அடுக்களையிலும் 
அவள் மட்டும் தான் இருந்தாளாம்.
அதாவது அவர்களுக்கான உணவை 
அவள் சமைத்துக்கொண்டாள் ! 
 
குரானை வாசித்தும் படிஎடுத்தும்
  தொழுகையின் போது அணியும் குல்லாய் செய்தும் 
வரும் வருமானத்தில் தான் டில்லி சுல்தானும் 
அவன் மனைவியும் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார்கள். 
அரசு கஜானாவை தன் சொந்த செலவுக்கு 
அவன் திறக்கவில்லை. 
 
ஒருவனுக்கு ஒருத்தி என்றவுடனேயே
 சீதாராமனை கொண்டுவந்து நிறுத்துகிறோம். 
ராமன் வாழ்ந்தாரா இல்லையா 
அது வரலாறா புனைவா என்பதற்குள் போனால் 
அயோத்தி பிரச்சனை ஆகிவிடும். 
 ஆனால் வரலாற்றில் அப்படி ஒர் அரசன் 
வாழ்ந்திருக்கிறான். 
அவனும் அவன் வாழ்க்கையும் புனைவல்ல, 
நிஜம் என்பதை தேசங்கள் வரலாறாகவோ 
புனைவாகவோ கூடஎழுதிக்  கொள்வதில்லை! 
 
இப்படியான விசித்திரமான அரசர்களை 
வரலாறு நினைவில் வைத்திருப்பதில்லை. 
காரணம் அடுத்த தேசங்களுடன் போரிடுவதும்
  தன் தேச எல்லைகளை விரிவுப்படுத்திக் கொள்வதும் 
அதற்காக தன் தேசமக்களை பலியிடுவதுமாக
 வாழ்ந்த அரசர்களை, 
வரலாறு , பேரரசர்கள் என்று முடிசூடி கொண்டாடுகிறது.
 
அரசனுக்கு அற ஒழுக்கம் தேவையில்லை என்பது
பொதுப்புத்தியில் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறதோ?!!
அன்று அரசன்
இன்று தலைவன்
 
விசித்திரமான உலகம்..
வரலாறுகளும் விசித்திரமானவை!


Sunday, March 13, 2022

கம்பன் நின்ற இடமும் சிலம்பை வென்ற இடமும்

 



கம்பன் நின்ற இடமும் சிலம்பை வென்ற இடமும்

பேசப்படுவதில்லை.

இதுவும் இலக்கிய அரசியல் தான்.

இதுவரை பேசியதெல்லாம்

முழு உண்மையும் அல்ல.

முழு பொய்யும் அல்ல.

“கம்பரசம் “ வாசித்தவர்களில் , வாசித்து சிலாகித்தவர்களில் நானும் ஒருத்தி. இதெல்லாம் சொல்லித்தான் இதையும் சொல்லியாக வேண்டி இருக்கிறது.!!


வடமொழியில் எழுதப்பட்டதையும் வடமாந்தர்களையும் தமிழுக்கு கொண்டுவரும் போது கம்பனின் மொழி மட்டுமல்ல, உள்ளமும் தமிழாகவே இருந்திருக்கிறது. ஆனால் தமிழ் மாந்தர்களை தமிழ் நாட்டு களத்தை எழுதிய இளங்கோவடிகளின் உள்ளம் மட்டும்

ஏனோ தமிழரின் வாழ்வியலை மறந்து அவனை மேனிலையாக்க உத்தியாக பார்ப்பனிய சடங்குகளைக் கொண்டுவந்து புகுத்தி இருக்கிறது!


இளங்கோ காட்டும் கண்ணகி கோவலன் திருமணம், மதுரை எரியும்போது விதிவிலக்களிக்கப்படும் பார்ப்பனர்கள்.. செங்குட்டுவன் கதை, சிலம்பில் வரும் சென்ற பிறவிப்பயன் தொடரும் பக்கங்கள்.. இப்படியாக பல உண்டு.

 கம்பனுக்கோ.. ராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்பு சந்திக்கும் புதியதொரு காட்சியை அவன் தமிழரின் களவியல் அத்தியாயத்திலிருந்து எடுத்துக் கொள்கிறான். அவன் உள்ளத்தில் தோய்ந்திருக்கும் தமிழர் வாழ்வியலின் பல்வேறு கருத்துகள் வடமொழி காப்பியத்தை தமிழுக்கு கொண்டுவரும்போதும் உயிர்ப்புடன் இருந்திருக்கின்றன..

என்ன செய்வது…?

அவரவருக்கு அவரவர் அரசியல்..

யாரும் முழு உண்மையை சொல்வதுமில்லை.

சொன்னதெல்லாம் முழு பொய்யுமல்ல..

Saturday, March 12, 2022

மல்லிபாய் மல்லி நாத் ஆன கதை


 

24 தீர்த்தங்கரர்களின் சிலைகளை இனி கவனியுங்கள்.
அதில் யாரோ ஒரு தீர்த்தங்கரராக அவள் இருப்பாள்.
ஆனால் சிலைகளில் அவளை மல்லிநாத் என்று
சொல்லுவார்கள்.
அவள் மல்லிபாய். அழகானவள். வசீகரமானவள்.
அழகானப்பெண்ணை ரசிக்கும் இச்சமூகம் அவள்
அறிவானவளாக இருந்துவிட்டால், 
அவளை ஒதுக்கிவிடும்.
இன்று மட்டுமல்ல, அன்றும் அதேதான்.
அவள் சமணர்களின் கருத்தாக்கத்தை 
கேள்விக்குட்படுத்தியவள்.
சமணத்தில் பெண் துறவியாவதே அடுத்தப்பிறவியேலேனும்
ஆணாக பிறந்து பிறவிப்பெருங்கடல் 
கடந்துவிடத்தான்.
அவள் அதை எதிர்த்தாள்.
ஆண்- பெண் உடல்களின் 
ரகசியங்களை உடைத்தாள்.
பெண்ணுடலுடனேயே தீர்த்தங்கராகினாள்!
ஆனால் அவள் சிலையை வடிக்கும்போது
மல்லிபாய் என்ற பெண்ணை மல்லி நாத் என்ற ஆண்
தீர்த்தங்கரராக்கி … 
24 தீர்த்தங்கரர்களும் ஆண்களாக
இருப்பதைப் பேணிக் கொண்டது சமணம்.
 
மல்லிகா என்ற பெயர் இந்தியப்பெருவெளியில்
ஒரு கலகக்காரியின் கதையை 
மறைத்துவைத்திருக்கிறது.
மல்லிகா என்றால் மல்லிகைப்பூ என்று சொல்லி
போதையூட்டி மயக்கிவேறு வைத்திருக்கிறது.

Monday, March 7, 2022

அவள் கவிதையில் ரத்தவாடை - (ராபியா அ பால்கி)


 

ராபியா அ  பால்கி ..முதல்  பெர்சியன் பெண்கவி. அன்றைய பால்க்

இன்றைய ஆப்கானிஸ்தான். அவள் கவிதைகள் எழுதி இருக்கிறாள்.

ஆனால் அவை மொத்தமாக கிடைக்கவில்லை!

அவள் வாழ்ந்த வாழ்க்கையை அவள் காதலை ஆப்கானிஸ்தான்

பெண் சமூகம் தங்கள் வாய்மொழியாக கடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஷாகிரூதின், நூருதீன் கவிதைகளில் அவள் வாழ்க்கை சரித்திரம்

துண்டு துண்டாக பேசப்படுகிறது என்பதைத் தவிர அவள் வாழ்ந்த

வாழ்க்கையின் சுவடுகளை மிகவும் கவனமாக அதிகார வர்க்கம் துடைத்து வைத்திருக்கிறது. ஆனாலும் அவள் அவர்கள் இலக்கியத்தின் முதல் பெண் கவி என்பதாலோ என்னவோ அவளுக்குரிய நினைவிடங்களை உருவாக்கி அவளை சிலையாக வடித்து வழிபாட்டுக்குரியவளாக்கி  நிஜ வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்தில் கொண்டு வைத்திருக்கிறது.


 

அவள் அவனுக்காக தன் தேகத்தின் ரத்தத்தால் எழுதிய கவிதைகள்

அவள் காதலை ரத்தவாடையுடன் பேசிக்கொண்டிருக்கின்றன.

அவளோ மேட்டுக்குடிப்பெண். அவள் காதலித்த அவன் ஓர் அடிமை.

தன் சகோதரிடனிடம் அடிமையாக இருந்த துருக்கி அடிமை பக்தாஷ்க்காக அவள் எழுதிய கவிதைகளை பிற்காலத்தில் அவள் இறைவனுக்கு எழுதிய கவிதைகளாக சூஃபியசம் வகைப்படுத்திக் கொண்டது.

&&

அவள் :

இன்மையுன் உண்மையுமாக நீயே இருக்கிறாய்.

நீ என்னிடம் இல்லையென்றால்

வேறு எங்கிருக்கிறாய்?

என் விழிகள் உன்னால் பிரகாசமடைகின்றன.

என் உள்ளம் உன்னால் அர்த்தமுள்ளதாகிறது.

வா.. என் விழிகளையும் ஆன்மாவையும்

அழைத்துச் செல்ல வா.

அல்லது

ஒரு வாளால் என் உயிரை எடுத்துவிடு..

&&

அவன்:

உன்னைப் பார்க்கவே முடியவில்லையே

நீயின்றி எனக்கு அமைதியும் நிம்மதியும் இல்லையே

நீயின்றி இந்த அவஸ்தையை

எப்படி சுமக்கப்போகிறேன்?

உன் கூந்தலின் நுனி என் தலைப்பாகையை துளைக்கிறது.

உன் முகம் என்னைக் காதலில் தள்ளுகிறது.

உன் கூந்தலால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

&&

.08 மார்ச்.. சர்வதேச மகளிர் தினத்தில் ராபியாவுக்கும்

அவள் காதலையும் வாழ்க்கையையும் தங்கள் வாய்மொழியில்

கட்த்தி வந்திருக்கும் பெண்களுக்கும் இன்றும் அவள் நினைவிடத்தில்

இளைப்பாறும் பெண்களுக்கும் சேர்த்தே “மகளிர் தின வாழ்த்துகள்”.