Thursday, December 27, 2012

பாலியல் வன்புணர்வு தேசமும் கள்ளமவுனமும்




கடந்த வாரம், டிசம்பர் 16 இரவு ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை 6 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ சம்பவம் நேற்றுவரை இந்தியாவின் தலைநகரை உலுக்கி எடுத்துவிட்டது. மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டி இருப்பது ஒருவகையில் நம்பிக்கை தருகிறது. மாணவர்கள் இந்தியா கேட்டுக்கு செல்வதைத் தடுக்க 9 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடும் நிலை உருவாகி இருப்பதுடன் பிரதமர் நாற்காலியில் இருக்கும் மன்மோகன்சிங்கும், பிரதமராக அதிகாரம் படைத்த சோனியா காந்தியும் கலந்து பேசி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன வழக்கம் போல.... ஆட்சியாளர்களுக்கே உரிய ஆயுதத்தை எடுப்பார்கள்.
தனியாக ஒரு கமிஷன் போட்டு ஆராயப் போவதாக அறிவிப்பார்கள். ஏதாவது ரிடையர்டான... இவர்களுக்கு வேண்டிய கனம் நீதிபதிகள் யாருக்காவது அந்தப் பதவியைக் கொடுத்து விடுவார்கள்.
கமிஷன், இந்தியா ஏன் பாலியல் வன்புணர்வுகளின் தேசமானது என்பதையும் பாரதமாதாவின் பாலியல் வன்புணர்வு புத்திரர்களின் (இவ்விடத்தில் பாரதமாதாவைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ புத்திரர்கள் என்று வாசிக்கும் உரிமை வாசகர்களுக்கு உண்டு) தகுதி திறமைகளையும் ஆராய்ந்து சில நூறு பக்கங்களுக்கு அறிக்கைத் தயாரித்துக் கொடுக்கும். அப்புறம் அந்த அறிக்கை என்னவாகும் என்பதோ, யாரிடம் அந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்பதோ அந்த அறிக்கை மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன் என்பதோ சிதம்பர ரகசியமாகிவிடும். மறந்துவிடும். ஏனெனில் ஆறிப்போன அறிக்கையை விட சுடச்சுட அவ்வ‌ப்போது விற்கப்படும் சுண்டலை வாங்கித் தனியாகவோ கூட்டமாகவோ கொறித்துக் கொள்வ‌துதான் ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் வாடிக்கை.
மாணவர்களின் கிளர்ச்சி ஒரு பக்கம் என்றால் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக சொல்லி விட்டார்கள்.
2004ல் தன் சகோதரியைக் கேலி செய்த வாலிபனைத் தட்டிக்கேட்ட மராட்டிய மாநிலம் புல்தானா பகுதியைச் சார்ந்த நிதின் ஜோஷி என்ற சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டான். அந்த வழக்குக்கு இப்போது நீதி வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் "பெண்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் மரண தண்டனை விதிக்கலாம்" என்று சொல்லி இருக்கிறார்கள்.
மருத்துவக் கல்லூரி மாணவியைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌வர்களைப் பற்றிய குறிப்புகளும் ஏற்கனவே டில்லியில் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவைகளாக இருக்கின்றன.
மருத்துவக்கல்லூரி மாணவி வழக்கில் குற்றவாளிகள்:
1)ராம்சிங் - வயது 33, செக்டர் 3, ரவிதாஸ் கேம்ப், ஆர்.கே.புரம் பகுதியில் வசிப்பவர்
2)முகேஷ் - வயது 24, ராம்சிங்கின் தம்பி, மற்றவர்கள் அப்பெண்ணைக் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ போது பேருந்தை ஓட்டியவர்.
3)வினய் சர்மா - வயது 20, லோக்கல் ஏரியாவில் (ஜிம்)உடற்பயிற்சி நிலையத்தின் உதவி டைரக்டர்
4)பவன் குப்தா - வயது 18, பழவியாபாரி
5)அக்‌ஷய் தாக்கூர் - வயது 26 பஸ் க்ளீனர்
6)ராஜ்ஜூ - வயது 25 பஸ் க்ளீனர்
உள்துறை அமைச்சரின் தகவல் படி இந்தியாவில் பாலியல் வன்புணர்வு குற்றங்களின் பட்டியல்:

2011
2010
2009
டில்லி
453
550
491
மும்பை
221
194
182
பெங்களூரு
97
65
65
கொல்கத்தா
46
32
42
சென்னை
76
47
39
ஹைதராபாத்
59
47
47
சில வழக்குகளின் முடிவுகள்:

எஸ்.பி.ஏஸ் ராத்தோரின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
மாடலிங் ஜெஸ்ஸிக்கா கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட்ட மன்னுசர்மா காங்கிரசு அரசியல் கட்சியைச் சார்ந்த விநோத் சர்மாவின் மகன். குற்றத்திலிருந்து எவ்விதத்திலும் தப்பிக்க முடியாத நிலையில் சட்டம் மன்னுசர்மாவைக் கைது செய்தது. 2009ல் 30 நாட்கள் மட்டுமே சிறையிலிருந்த சர்மா நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் அன்னையைப் பார்க்க பரோலில் வந்தார். அப்போது சர்மாவின் அன்னை ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் என்பது நமக்குத் தேவையில்லாத செய்தி தான்! பரோலில் வந்த சர்மா டில்லியின் இரவு நேர விடுதி கேளிக்கையில் ஜாலியாக இருக்கிறார். இதுதான் நம் சட்டமும் நீதியும்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான், செப் 28, 2002ல் தன் டோயோட்டா காரில் வேகமாக வந்து மும்பை பாந்திரா பகுதியிலிருக்கும் பேக்கரியில் மோதி ஒருவர் அந்த இடத்திலேயே இறந்தார், நான்கு பேர் காயமடைந்தார்கள். இந்த வழக்கும் இன்றுவரை அதாவது பத்து வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது! கோர்ட்டில் ஆஜார் ஆகாமல் இதுவரை 82 தடவை தட்டிக் கழித்திருக்கும் சல்மான் இந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்த பின் தான் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திருவாய் மலர்ந்திருக்கிறார். அதுவும் அவரைக் கனவிலும் கண்டு ஏங்கிக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு முக்கியமான செய்தியாகவே இருக்கிறது.
இன்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் விட்டு அழும் எம்.பிகளும் சரி, ஆவேசமாக குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று கர்ஜிக்கும் கிழட்டு சிங்கங்களும் சரி, இவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு வர கதவுகளைத் திறந்துவிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சரி... எவ்வளவு போலித்தனமானவர்கள் என்பதை 2009 நாடாளுமன்ற தேர்தல் உறுப்பினர்களின் தகுதிகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதை பார்க்கத் தவறியதுடன், இருட்டை வெளிச்சம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தேசிய தேர்தல் கண்காணிப்பு (national election watச்ஹ்) புள்ளிவிவரங்களின்படி, பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 6 பேர் அரசியல் கட்சிகளால் தங்கள் உறுப்பினராக தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டார்கள். கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கு அரசியல் கட்சிகள் சீட் கொடுத்திருப்பதும் உண்மை.
260 உறுப்பினர்கள் மீது பெண்கள் சம்பந்தப்பட்ட வன்கொடுமை, கேலி கிண்டல் இத்தியாதி குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுப்பினர்களே தங்கள் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு பதிவு செய்திருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த தகுதிகள்! இந்த தகுதிகளைக் கொண்ட உறுப்பினர்கள் இருக்கும் நாடாளுமன்றம் நம் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதும், நம்மைப் பாதுகாப்பதாக உறுதி அளிப்பதும் கேலிக்கூத்து!
காவல்துறை:
என்ன செய்கிறது நம் காவல்துறை? மேற்சொன்ன தகுதி மிக்க நம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காகவே இருக்கிறது நம் காவல்துறை! டில்லியில் மட்டும் வி.ஐ.பிகள் பாதுகாப்புக்கு 50059 போலீசார். 28298 போலீசார் மட்டுமே சட்டப்படி பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் சட்டத்தை மீறி (காவல்துறையே சட்டத்தை மீறி இருப்பதைக் கவனிக்கவும்) 21761 போலீசார் கூடுதலாக வி.ஐ.பி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் நலன் பாதுகாக்க 131 பொதுமக்களுக்கு ஒரு போலீசார் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் 761 நபருக்கு ஒரு போலீசார் இருக்கிறார் என்பதே உண்மை நிலவரம்! டில்லி நகரத்தில் மட்டும் ஒரு வி.ஐ.பிக்கு 20 போலீசார் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சில வழக்குகள் மட்டுமே ஊடகத்தின் அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளின் அதீதமான கவனத்திற்கு உள்ளாவதும் பல வழக்குகள் இருட்டடிக்கப்படுவதும் ஊடகங்களும் கள்ளமவுனம் சாதிப்பதும் ஏன்? இதன் உள்ளரசியல் என்ன? வாச்சாத்தி வழக்கும் கயர்லாஞ்சி வழக்கும் சாதிச்சண்டையாக மட்டுமே ஏன் பேசப்பட்டன? அந்த உழைக்கும் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட வல்லாங்கு கொடுமைக்காக, அந்தப் பெண்களின் யோனி கிழிந்து நாற்றமடித்த போதும் வாய்திறக்கவில்லைpயே நம் அறிவுஜீவிகள் ..!!.
இன்றைய போராட்டத்தையோ கிளர்ச்சியையோ குறை சொல்வதோ அல்லது டிசம்பர் 16ல் வல்லாங்கு செய்யப்பட்ட பெண்ணுக்காகப் போராடுவது தவறு என்றோ சொல்வது என் நோக்கமல்ல. ஆனால் வாச்சாத்தி பெண்களுக்காக பெண்ணியம் பேசிக்கொண்டிருக்கும் என் இனிய தமிழ் நாட்டு தோழியர் கூட எவரும் வாய்திறந்ததாகவோ வாச்சாத்தி பெண்டிரின் யோனிகள் சிதைக்கப்பட்டதற்காக தங்கள் கவிதைகளைக் கூர்வாளாக்கியதாகவோ செய்தியாகக் கூட எதுவும் கேள்விப்படவில்லையே. இந்த மவுனங்களுக்கெல்லாம் என்ன காரணம்?
ஒட்டுமொத்த ஊடகமும் ஒரு புள்ளியில் தன் கவனத்தைக் கொண்டுவரும் போது அரசியல் கட்சிகளும் அதை வழிமொழிந்து செல்லும் போது இந்த நாட்டின் திரை மறைவில் வேறு என்னவோ நடக்கிறதா? அந்த திரை மறைவு காட்சிகள் மீது எவர் கவனமும் வராமலிருக்க 453 பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் நடந்திருக்கும் டில்லியில் திடீரென ஒரு குற்றச்சாட்டு ஊடகத்தின் கவனத்திற்கு திட்டமிட்டே காட்டப்பட்டு தொடர்ந்து நாம் ஏமாற்றப்படுகின்றோமா?

நன்றி: கீற்று டாட் காம்



Tuesday, November 27, 2012

திராவிட இயக்க வரலாற்று பார்வையில் யார் பிராமணர் அல்லாதார்?





திராவிட இயக்க வரலாறு தொகுதி 1 முரசொலி மாறன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது-.
திராவிட இயக்கம் நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த 2012களில்
திராவிட இயக்க வரலாறு குறித்த பதிவுகளைப் பலரும் எழுதிக்கொண்டு
இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவரான முரசொலி மாறன் பதிவுகள் திராவிட இயக்கத்தின் ஒற்றைப் பார்வை என்று அடையாளப்படுத்தப்
படுவதில் சிக்கல்கள் இருந்தாலும் திராவிட இயக்க வரலாற்றை எழுதிக்
கொண்டிருப்பவர்களும் ஏற்கனவே எழுதியவர்களும் திராவிட இயக்கம்,
திராவிட இயக்க வரலாறு என்று வகுத்திருக்கும் எல்லைக்கோடு
அவர்களின் இன்னொரு முகத்தை வெளிச்சப்படுத்திவிட்டது
என்பதை அவர்களே உணர்ந்த மாதிரி தெரியவில்லை.
அவர்களுக்கு அதை உணர்த்தவும் அதையும் உரத்தக் குரலில் பதிவு செய்ய
வேண்டிய தேவையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.


சென்னை நகரில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தாங்கள்  பிராமணர் அல்லாதோராக இருக்கின்ற காரணத்தால் அரசு துறையில் பதவி உயர்வு
போன்ற நியாயமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால்
மனம் புழுங்கி 1912 ஆம் ஆண்டு சென்னையில் திருவல்லிக்கேணி
பெரிய தெருவில் அமைந்திருந்த டாக்டர் நடேசனார் இல்லத்தில் கூடி மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற பெயரில்
ஓரமைப்பை ஏற்படுத்தினார்கள். அந்த அமைப்பே தென்னிந்திய நல உரிமை சங்கமாகி, நீதிக்கட்சி என்று பத்திரிகை பெயரால் அடையாளப்படுத்தப்பட்டது.
2012 ஐ திராவிட இயக்கத்தின் நூற்றாண்டாக கொண்டாடுவதின் காரணமும்
இதுவே ஆகும்.

1918ல் கோவையில் நடைபெற்ற இரண்டாவது பிராமணர் அல்லாதோர் மாநாட்டு உரையில் நல்லசாமி பிள்ளை தென்னிந்திய பிராமணர் அல்லாதாருக்கெனத் தனி அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க பலமுறை
முயற்சி செய்யப்பட்டது என்று பேசி இருக்கிறார்.

எனவே 1912ல் ஆரம்பிக்கப்பட்ட மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற
பிராமணர் அல்லாதோரின் இந்த அமைப்பு தான் திராவிட இயக்க வரலாற்றின்
முதல் பக்கம் என்பதை எவ்விதமான கருத்து வேறுபாடுகளுமின்றி
திராவிட இயக்கத்தார் ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படியானால் சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆதிதிராவிடர் மகாஜன சபா ?????
அதுவும் 1890 களில் ஆரம்பிக்கப்பட்ட ஆதிதிராவிட மகாஜன சபா?
திராவிட இயக்க வரலாற்றில் ஏன் வரவில்லை?
ஆதிதிராவிடர்கள் திராவிடர்கள் இல்லையா ? அல்லது பிராமணர் அல்லாதோர்
பட்டியலில் இல்லையா? இந்தக் கேள்வி விசவரூபமெடுக்கும் போதுதான்
திராவிட இயக்கத்தின் படிநிலை சாதியப் பார்வையை நாம் அடையாளம்
கண்டுகொள்ள முடிகிறது. ( the vertical classification )

முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு புத்தகமும் இக்கருத்தை மேலும் உறுதி செய்கிறது. திராவிட இயக்கம் ஆதிதிராவிட இயக்கத்துடனும்
அச்சமூகத்தலைவர்களுடனும் கலந்து பணி ஆற்ற வேண்டிய சூழலை
ஏற்படுத்தியது வெறும் அரசியல் காரணமாக மட்டுமே இருந்தது. அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ
பிராமணர் அல்லாதோர் என்று தாங்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின்
உள்வட்டத்தில் வருவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றோ உணர்ந்த காரணத்தால் கூட்டணி அமைத்ததாக தெரியவில்லை. அன்றைக்கு
ஒட்டுமொத்த பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதியாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் திராவிட இயக்கத்தின்--
நீதிக்கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அதுதான் -

1909ல் முஸ்லீம்களுக்கு மிண்டோ மார்லி சட்டப்படி தனித்தொகுதி வழங்க்கப்பட்ட நிலையில் அதை மனதில் கொண்டு பிராமணர் அல்லாதாரின் நிலையை எப்படி இந்தியா வர இருக்கும் மந்திரி மாண்டேகுவிடம் விளக்குவது என்ற நிலையில் நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயர் "நீதிக்கட்சி தான் சென்னை மாகாணத்தில் உள்ள 4 கோடி பிராமணர் அல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வகிக்கிறது " என்று மாண்டேகுவிற்குத்  தந்தி அனுப்பினார்.
நான்குகோடி பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதி நீதிக்கட்சிதான் என்பதை உறுதிப் படுத்த வேண்டுமானால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக இருந்த ஆதிதிராவிடர்களின் ஒருமித்த ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயம் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டது. இந்த அரசியல் காரணம் மட்டுமே நீதிக்கட்சி ஆதிதிராவிட இனத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய
இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது.

திராவிட இயக்க வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் முரசொலி மாறன்
"நீதிக்கட்சிக்கு இவர்கள் ஆதரவைப் பெறுவதற்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஏனேனில் அந்தச் சமுதாயமும் வெகுகாலமாகவே திராவிட உணர்வு பெற்றிருந்தது. .... சென்னையில் ஆதிதிராவிட மகாஜன சபா என்னும்
அமைப்பு 1892லிருந்தே அவர்களது நலன்களுக்காக பாடுபட்டு வந்தது"
என்று குறிப்பிடுகிறார். (பக் 198)

1917 அக்டோபர் 2 ல் எழும்பூர் ஏரியில் நடைபெற்ற ஆதிதிராவிடர் கூட்டத்தில்
பேசிய டாக்டர் நாயர் அவர்கள் "பஞ்சமர் கட்சியும் பிராமணர் அல்லாதார் கட்சியும்" அரசியலில் இணைந்து செயல்பட வேண்டுமென்பதை வற்புறுத்தி
பேசி இருக்கிறார்.

எனவே திராவிட இயக்கம் என்று இன்றைக்கு அறியப்படும் திராவிட இயக்கத்தின் வட்டத்திற்குள் ஆதிதிராவிடர் அமைப்புகள் விலக்கப்பட்டிருக்கின்றன. பிராமணர் அல்லாதார் என்று திராவிட இயக்கம்
வகுத்திருக்கும் பிரிவில் அந்த பிராமண அல்லாதாரின் பட்டியலில்
கடைநிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்கள் இல்லை என்கிற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது.

1886ல் வெஸ்லியன் மிஷினரியைச் சார்ந்த Rev. ஜாண் ரத்தினர் என்பார்
திராவிடர் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியதாகவும் அவருடன் சேர்ந்தே
பண்டித அயோத்திதாசர் திராவிட பாண்டியன் என்கிற இதழை ஆரம்பித்தார்.
ஆதிதிராவிட மகாஜன சபா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு குறித்து சில கருத்து
வேறுபாடுகள் இருக்கின்றன. 1890 களில் ஆரம்பிக்கப்பட்டது என்பார் சிலர்.
1891ல் சென்னையில் சுப்பிரமணிய பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்டது
என்கிறார் டாக்டர் பி. செர்மாகனி (Dr. P Sermakani in History of people and their
Environs) 1891ல் அயோத்திதாசர் தலைமையில் ஊட்டியில் ஆரம்பிக்கப்பட்டது
என்கிறார் மீனா கந்தசாமி. ஆதிதிராவிடர் மகாஜன சபாவின் முதல் மாநாடு
1891 டிசம்பர் 1 ல் நடைபெற்றது என்கிறார் அவர். எந்த ஆதாரத்தை எடுத்துக்
கொண்டாலும் ஆதிதிராவிடர் மகாஜனசபா 1912க்கு முன்னர் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை.

1885 ல் திராவிட மித்ரன்
1886 ல் திராவிட பாண்டியன்
1907 ல் திராவிட கோகிலம்-
ஆகிய பத்திரிகைகள் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பே ஆதிதிராவிட
சமூகத்தில் தோன்றி வளர்தெடுக்கப்பட்ட திராவிட இதழ்கள்.

1898ல் ஒடுக்கப்பட்டோர் அரசு துறை தேர்வுகளில் வெற்றி பெற தகுதிக் குறைவு வழங்கப்பட வேண்டும் (Lower the standard of qualifying test) அதாவது
குறைந்த மதிப்பெண் பெற்ற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவருக்கு
முன்னுரிமை கொடுக்கப்பட்டு தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்ததும் ஆதிதிராவிட மகாஜன சபா தான்.

1918ல் ஆதிதிராவிட மகாஜன சபா அரசாங்கத்திற்கு ஒரு மனு கொடுத்தது.
பறையர் என்கிற பெயருக்குப் பதிலாக தொன்றுதொட்டு நிலவி வருவதும்
தங்களுக்கு உரிய பெயருமாகிய 'திராவிடர் ' என்கிற பெயரால் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அப்பெயரை அரசும் அங்கீகரிக்க வேண்டும்"
என்றும் கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையின் நீதிக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஒடுக்கப்பட்ட
மக்கள் அமைப்பின் பிரதிநிதியான எம்.சி. ராஜ் அவர்கள் சென்னை மாகாண
சட்ட சபையில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். நீதிக்கட்சியும் அத்தீர்மானத்தை நிறைவேற்றியது. 1922 மார்ச் 22 ல் அப்பெயரை அங்கீகரித்து
அரசு ஆணை பிறப்பித்தது. பழைய பஞ்சமர் என்ற பெயர் நீக்கப்பட்டு
ஆதிதிராவிடா, ஆதி ஆந்திரா என்ற அங்கீகாரம் சட்டப்படி வழங்கப்பட்டது.
எம். சி ராஜ் தீர்மானம் கொண்டு வந்தார் என்பதைப்
பற்றியோ நீதிக்கட்சியின் ஆட்சியில் சட்டசபையிலிருந்த முதல் ஒடுக்கப்பட்ட
மக்களின் பிரதிநிதி எம்.சி ராஜ் என்றொ எவ்விதமான குறிப்புகளையும்
பதிவு செய்யாமல் தங்கள் வரலாற்றை எழுதிச் சென்றிருக்கிறார் முரசொலி மாறன் அவர்களும்! ( பக் 198 & 199).

ஒருவேளை எம். சி ராஜா பற்றி எழுதினால் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் எழுதியாக வேண்டும் என்பதால் வசதியாக அந்தப் பக்கங்களை கடந்து செல்கிறார்கள் திராவிட இயக்க வரலாற்றை எழுதுபவர்கள்.  1921ல் பனகல் அரசர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு
கொண்டுவர அதை எதிர்த்தவர் எம். சி இராஜா அவர்கள். அவர் எதிர்ப்புக்கான காரணம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பதல்ல. அவர்களையும் விட பிறபடுத்தப்பட்ட கடைநிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதியாகது என்கிற காரணத்தால் தான்.
எம். சி இராஜாவின் எதிர்ப்புக்கு ஒட்டு மொத்த நீதிக்கட்சியின் அரசும் கள்ள
மவுனம் சாதித்தது. கலவரம் மூண்டது. புளியந்தோப்பு பகுதியில் 1921ல் நடந்த
கலவரம். அதன் பின் தான் எம். சி இராஜா கூட்டணியிலிருந்து விலகினார். எனினும் 1923 முதல் 1926 வரை சட்டசபை உறுப்பினராக
தொடர்ந்தார்.

-1912ல் ஆரம்பித்த திராவிடர் இயக்கத்திற்கு 2012ல் ஒரு நூற்றாண்டாகி விட்டது என்று  நூற்றாண்டு கொண்டாடுகிறவர்கள் திராவிடர் இயக்கத்தின் இந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றுக்கும் பின்னோக்கிப்
பார்த்தால் பெருமையுடன் சமூக தளத்தில் சாதிகளற்ற திராவிடர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஆதிதிராவிடர்களின் வரலாற்றை
ஏன் திராவிடர் இயக்க வரலாற்றின் முன்னோடியாகப் பார்க்கத் -தவறிவிட்டார்கள் என்கிற கேள்வி அவர்கள் முன் வைக்கப்படுகிறது.


Friday, November 2, 2012

மானுடம் போற்றுதும்






மானுடம் போற்றுதும்
மானுடம் போற்றுதும்
இருக்கின்றார் இவர்களெல்லாம்
இவ்வுலகில் என்பதினால்
மானுடம் போற்றுதும்  எம்
மானுடம் போற்றுதும்.

இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும்
இப்படித்தான் வாழ வேண்டும்
என்றெல்லாம் அடையாளம் காட்ட நம்முடன் யார் இருக்கிறார்கள்:?
அரசியலாகட்டும் சமூக வாழ்வியலாகட்டும்
ஆன்மிகமாகட்டும்\
ஊடகங்களாகட்டும்
கல்வி துறையாகட்டும்
எங்கேயும் எவருமி;ல்லாமல் இருக்கின்ற வெற்றிடம் நம்மைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.

சரியானவர்களுக்கு/தகுதியானவர்களுக்கு அங்கீகாரம்
கிடைக்காமல் இருப்பதை விட ஆபத்தானது
தவறானவர்களுக்கு/ தகுதியில்லாதவர்களுக்கு
 கிடைக்கும் அங்கீகாரம் என்பது என் கருத்து.
நாம் நல்லவர்களை சந்திக்கவே இல்லையா?
யோசிக்கும் போது முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர்
நினைவுக்கு வருகிறார்கள்!
அவர்களைப் பற்றியும் அவர்களின் மிகச்சிறந்த அற விழுமியம் பற்றியும்
போற்றவும் கொண்டாடவும் நாம் ( முக்கியமாக நான்) தவறிவிட்டோம்

பத்திரிகைகளில் எப்போதாவது ஒர் ஓரத்தில் எவ்விதமான பரபரப்புகளும் இன்றி இம்மாதிரி செய்திகள் வெளிவருவது உண்டு. ஆனால் அந்தச் செய்திகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நாம் அனைவரும்
தயாராக இல்லை என்பது தான் உண்மை. ஏனேனில் அந்தச் செய்திகளில்
இடம் பெறுபவர்கள் அனைவரும் மிக மிக சாதாரண மனிதர்கள்.
ஆனால் அவர்களிடம் தான் நாம் போற்ற வேண்டிய கொண்டாட வேண்டிய
வாழ்க்கையின் விழுமியங்கள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
அவர்கள் தான் மனித நேயத்தையும் மானுட மாண்பையும் தலைமுறை
தலைமுறையாக இந்த மண்ணில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
தொடர்ந்து இம்மாதிரியான உண்மைச் செய்திகளை ஊடகங்கள் வெளிச்சம்
காட்ட முன்வாராத செய்திகளை  நாம் பகிர்ந்து கொள்வோம்.

மானுடம் போற்றுதும் :

செய்தி எண் : 1

இது கேரளாவில் கொச்சியில் நடந்த சம்பவம். பீட்டர் பெட்டிக்கடையில்-
பத்தி-ரிகைகள் விற்பவர். அவருடைய கடை வுட்லண்ட்ஸ் ஜங்ஷனில்
எம். ஜி ரோட் பகுதியில் இருக்கிறது. பத்திரிகை விற்பனையுடன்
சேர்ந்து லாட்டரி டிக்கெட் விற்பனையும் செய்பவர்.
 பீட்டரின் வாடிக்கையாளர் முருகன், தமிழ்-நாட்டிலிருந்து
கொச்சி நகரத்திற்கு பிழைப்பு தேடி வந்திருப்பவர். பீட்டரின்
லாட்டரி டிக்கெட் வாடிக்கையாளர்களில் ஒருவர். எப்போதும்
முருகன் காலையில் கடைக்கு வந்து குறிப்பிட்ட லாட்டரி டிக்கெட்டுகளை
எடுத்து வைத்துவிட்டு மாலையில் காசு வந்தவுடன் பீட்டரிடம்
கொடுத்து தான் எடுத்து வைத்திருக்கும் லாட்டரி டிக்கெட்டுகளை
வாங்கிக்கொள்கின்ற பழக்கம் உள்ளவர். முருகன் துணிகளை இஸ்திரி
போட்டு கொடுக்கும் தொழிலாளி என்பதால் மாலையில் தான் அவர்
கையில் காசு கிடைக்கும்.

அப்படித்தான் அந்த வெள்ளிக்கிழமையும் காலையில் முருகன் கடைக்கு வந்து
ஐந்து லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைத்துவிட்டுப் போனார். வழக்கம் போல மாலையில் வந்து லாட்டரி டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்துக்
கொள்ளலாம் என்ற எண்ணத்தில். ஆனால் அந்தக் குலுக்கலில்
மாலையில் முருகன் எடுத்திருந்த இரண்டு டிக்கெட்டுகளுக்குப் பரிசு
விழுந்திருந்தது.
ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 40 லட்சத்துடன் ஒரு இன்னோவா கார் பரிசு.
இன்னொரு டிக்கெட்டுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு.

பரிசு விழுந்த டிக்கெட்டுக்கான பணத்தை இன்னும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த பீட்டர் வாங்கவில்லை. பீட்டர் நினைத்திருந்தால்
முருகன் எடுத்து வைத்திருந்த டிக்கெட்டுக்குத் தான் இந்தப் பரிசு
விழுந்திருக்கிறது என்பதை வெளியில் தெரியாமல் மறைத்திருக்க
முடியும். ஏனேனில் எடுத்து வைத்திருக்கும் லாட்டரி டிக்கெட்டின்
எண் பற்றிய எந்த விவரமும் முருகனிடமும் இல்லை.
ஆனால் பரிசு விழுந்திருப்பது என்னவோ முருகன் எடுத்து
வைத்திருந்த டிக்கெட்டுக்குத்தான்.

ரூபாய் 40 லட்சம் என்பதும் இன்னோவா காரும் பீட்டருக்கும்
பெரிய தொகைதான். எந்த மனிதனுக்கும் கொஞ்சம்
ஆசையைத் தூண்டும் சூழல் தான் . அதற்கான நியாயங்களை
பீட்டர் சொன்னால் முழுவதும் நிராகரிக்க முடியாது.
ஆனால் பீட்டர் மனசில் சலனமே எழவில்லை.
முருகனைத் தேடி பரிசு விழுந்ததைச் சொன்னபோது
முருகனும் தான் லாட்டரிக்கான பணத்தைக் கொடுக்காததால்
பீட்டருக்கு பரிசுத் தொகையை எடுத்துக் கொள்ளும் உரிமை
இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். பீட்டர் மறுத்துவிட்டார்.
மீண்டும் முருகன் பாதி பாதி"50 "  "50" எடுத்துக் கொள்ளலாம் என்று
பகிர்ந்து கொள்ள முன்வந்ததையும் பீட்டர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பீட்டரும் முருகனும் நம்முடன் நாம் வாழும் காலத்தில் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செய்தி 2:
-------------------------------------------

பகவந்தாஸ் என்ற ரயில்வே கடைநிலை ஊழியர் வழக்கம்போல அன்று
டிரெயினில் வேலை செய்துக் கொண்டிருந்தப் போது பயணி ஒருவர்
தன் கைப்பையை மறந்து விட்டுவிட்டு சென்றிருப்பதைக் கண்டெடுக்கிறார்.
அந்தக் கைப்பையில் இருந்தது ரூபாய் 15 லட்சம். கைப்பைக்குச் சொந்தக்காரர்
டில்லியின் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன். இந்தச் செய்தி ஊடகங்களுக்குப் பரவி புகைப்படக்காரர்கள் பகவன் தாஸைப் புகைப்படம் எடுக்க வந்தப் போது
புகைப்படக்காரர்களிடன் போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.
என்ன பெரிய சாதனை என்று படம் எடுக்க வந்துவிட்டீர்கள்?
எப்போதும் செய்வது போலவே இப்போதும் இதைச் செய்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
இப்படியும் சிலர் நம் காலத்தில் நம்முடன்.



செய்தி 3
-----------------


செப்டம்பர் 24, 2012 ஜீதேந்திர வாக் தன் விலை உயர்ந்த கைபேசியை
தான் பயணம் செய்த ரிக்‌ஷாவில் மறதியாக விட்டுவிட்டு இறங்கிவிட்டார்.
தொடர்பு கொண்ட போதெல்லாம் தொலைபேசி ஒலித்துக் கொண்டே
இருந்தது. வீட்டிற்குப் போய் மனைவியிடம் சொன்னார். மனைவியும்
வீட்டு எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் அவருக்கு
தொலைபேசி வந்தது. ரிக்‌ஷா டிரைவர் தன்னுடைய ரிக்ஷாவில் பயணம் செய்தவர் மறதியாக விட்டுச் சென்றதையும் கைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
விலை உயர்ந்த அந்தக் கைபேசியில் எப்படி அழைப்பை எடுத்துப் பேசுவது
என்பது தெரியாமல் தான் அவதிப்பட்டதையும் நேரில் சந்திக்கும் போது
சொல்லி இருக்கிறார். டிரைவரின் கைபேசியிலிருந்து அழைத்தவருக்குப் போன்
செய்ய போதிய அ:ளவு இருப்பு இல்லாமல் இருந்ததால் 10 ரூபாய்க்கு
தன் கைபேசியில் கையிருப்பை அதிகரித்துக் கொண்டு அதன் பின்
தொடர்பு கொண்டதையும் சொல்லி இருக்கிறார்.


செய்தி 4
-----------------

இச்செய்தி எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. நானும் வாசித்து அறிந்த செய்தியல்ல!
1987 ஜூன் முதல் வாரத்தில் மும்பையில் முதல் மழைக் கொட்டிய ஒரு
நாளிரவு 9 மணிக்கு, மருத்துவமனைக்குப் போய்விட்டு தன் வீட்டுக்குத் திரும்பிய கணவனும் மனைவியும். கொஞ்சம் டென்ஷனாக இருந்த நிலையில்
அந்த நிறைமாதக் கர்ப்பினிப் பெண் தன் கைப்பையை டாக்சியில் விட்டுவிட்டு இறங்கிவிட்டாள். வீட்டுக்குப் போன பிறகுதான் கைப்பை நினைவு வந்தது.
கைப்பையில் ரூபாய் 25000. + கொஞ்சம் சில்லறை. சயானில் அன்றைக்குப் புகழ்பெற்ற டாக்டர் மெர்ச்சண்ட் சிசரியன் செய்துதான் ஆகவேண்டும் என்று
உறுதியாக சொல்லிவிட்டதால் டாக்டரிடம் போய்விட்டு வீட்டில் எப்போதும் வரப்போகும் மருத்துவச்செலவுக்கு எந்த நேரத்திலும் தேவைப்படலாம் என்று
எடுத்த வந்தப் பணம் .

அந்த தொகை அன்றைக்கு அந்தப் பெண்ணுக்கு பெரிய தொகைதான்.
பணத்தை தொலைத்தாகிவிட்டது, கணவனும் மனைவியும் அதைப்பற்றி
எதுவுமே பேசிக்கொள்ளவில்லை, எப்போதும் போல "யு ஆர் கேர்லஸ்"
என்று கணவன் திட்டி இருந்தால் கூட அந்தப் பெண்ணுக்கு நிம்மதியாக
இருந்திருக்கும். ஆனால் அவருடைய அந்த மவுனம் அவள்
தூக்கத்தை தின்று துப்பிக்கொண்டிருந்தது. மறுநாள் பகல் 11 மணியளவில்
அவள்  வீட்டுக்கு அருகில் இருக்கும் டாக்டர் குரேஷியின் கிளினிக்கில்
வேலைப்பார்க்கும் ஒருவர் வந்து கைப்பையை ஒரு டாக்சி டிரைவர்
டாக்டரிடம் வந்து கொடுத்துவிட்டு சென்றிருப்பதாகச் சொன்னார்.
குரேஷி டாக்டரின் க்ளினிக் இப்போதும் தாராவியில் இருக்கிறது.
தன் முதல் குழந்தைக்கு அந்தப் பெண் எப்போதும் அருகில் இருக்கும்-
டாக்டர் குரேஷியிடம் தான் போய்வருவது வழக்கம். அந்தப் பெண்ணின்
கைப்பையில் குரேஷி டாக்டரின் மருந்து எழுதிக் கொடுத்த ரசீது
இருந்ததால் பாந்திரா கலாநகரில் வாழ்ந்த டாக்சி டிரைவர்
முதல் நாளிரவு வீட்டுக்குத் திரும்பும் வழியில் பாந்திரா தாராவி
ரோட்டில் இறக்கிவிட்ட பயணியின் கைப்பை என்று சொல்லி
பையிலிருந்த ரசீதைக் காட்டவும் குரேஷி டாக்டரும் அடையாளம் கண்டு
வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கிறார். அந்த டாக்சி டிரைவரும்
கலாநகரிலிருந்து குரெஷி டாக்டர் க்ளினிக் வரை எவ்வளவு
மீட்டர் சார்ஜ் உண்டோ அதற்கு மேல் வாங்க மறுத்துவிட்டார்.
அந்தப் பெண்ணின் உறவினர் கைப்பையை வாங்கிவந்து கொடுத்தப் பின்
அந்தப் பெண்ணால் நம்பவே முடியவில்லை. பேங்க் கவரில் இருந்தப்
பணம் அப்படியே இருந்தது. இன்றுவரை அந்த டாக்சி டிரைவரின்
முகத்தை தன் நினைவில் கொண்டு வர பிரயத்தனம் செய்தும்
அவரால் அந்த மனிதனின் முகத்தை நினைவுக்கு கொண்டுவர
முடியவில்லை. ஒவ்வொரு நாளும் காக்கி யுனிபார்ம் அணிந்து
கற்பனையில் முகம் காட்டும் அந்த மானுடன் வாழ்க என்று
கண்ணில் நீர் மல்க... அந்த மானுடன் வாழ்ந்த திசைநோக்கி..
இன்றும்.. இதோ உங்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டும்.


மானுடம் போற்றுதும்
மானுடம் போற்றுதும்.


===================================================----------------===






Wednesday, October 3, 2012

இந்திய தேசத்தின் தலைகுனிவு




இங்கே யாருக்கும் வெட்கமில்லை
சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட
இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.

2012, ஏப்ரல் மாதம் டி.பி சத்திரம் என்ற ஊரில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான
செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய
எவ்விதமான சொரணையும் இல்லை. இறந்துப் போன அண்ணனின் வேலையை கார்ப்பரேஷனிலோ பஞ்சாயத்திலோ வாங்கிய தம்பி சின்னமுனியும் ஜூலை மாதத்தில் அதே போன்றதொரு முடிவில்
மரணமடைந்திருக்கிறார். இறந்துப் போனவர்களுக்கு அரசு நிவாரணம்
எதுவும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவும்.


சுதந்திர இந்தியாவில் 1993ல் மனிதக் கழிவை சக மனிதன் கையால்
சுத்தம் செய்யும் கொடுமையைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை மீறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்
வலுவான அதிகாரத்தை இந்தியாவின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாளருக்கும்
கொடுத்திருந்தாலும் இன்றுவரை ஒரு மாவட்ட ஆட்சியர் கூட
இச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இதை விட வேடிக்கையும் கொடுமையும் என்னவென்றால் இந்திய
அரசு நிறுவனமான இந்திய ரயில்வேயில் தான் இன்றுவரை
இத்தொழிலைச் செய்வதற்கு என்றே பணியாட்கள் வேலைக்கு
அமர்த்தப்படுகிறார்கள் நேரடியாகவோ ஏஜன்ஸி மூலமாகவோ.

இக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் இந்திய உச்சநீதி மன்றத்திற்கு வெகு அருகில் உலர் கழிவறைகள் இன்றும் இருப்பதாக
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மட்டும் 13 இலட்சம் உலர் கழிவறைகள் இருப்பதையும் அதைச் சுத்தம் செய்வதில் மனிதர்களும் மிருகங்களும் (பன்றிகள் & நாய்கள் ) சமபங்கு வகிக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது

இதோ சில புள்ளிவிவரங்கள்

   மிருகங்களால்       
                                 மனிதர்களால்                               
டில்லி       633                            583                                                      

.பி      80291                           3.26 இலட்சம்                                          

வங்காளம் 72289                           1.3 இலட்சம்                                          

ஒரிசா     24222                         26496                                                  

பீகார்      35009                           13487                                                  

அசாம்     35394                           22139                                                  

குஜராத்     4890                           2566                                                    

மகாராஷ்டிரா 45429                         9622                                                    

ஆந்திரா      52767                        10357                                                  

கர்நாடகா     28995                         7740                                                    

தமிழ்நாடு     26020                       27659                                                  



இந்தியாவில் உள்ள 24.6 கோடி கழிவறைகளில் 26 இலட்சம் கழிவறைகளின்
மனிதக் கழிவு திறந்தவெளி சாக்கடையில் கலக்கிறது. இச்சாக்கடையை
துப்பரவு தொழிலாளிக்குரிய எவ்விதமான காலணியோ உடைகளோ
கண்ணாடியோ பிராணவாயு சிலிண்டர்களொ இத்தியாதி எதுவுமின்றி
மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்பவன் உங்களையும் என்னையும் போல
நம் சகமனிதன்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காணச்சொன்ன எவருக்கும்
இந்தியாவின் இந்தக் கொடுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏன் தெரியுமா
அவர்களின் சிறுகுடல் பெருங்குடல்கள் மலம் சுமப்பதில்லை அவர்கள்
மலம் கழிப்பதுமில்லை. இந்தி தொலைகாட்சியில் ஒரு நகைச்சுவை
நடிகர் ஓர் உண்மை சம்பவத்தை கொஞ்சம் நகைச்சுவையுடன்
சொன்னது நினைவுக்கு வருகிறது.

அவருடைய கிராமத்திற்கு அவர் மும்பையிலிருந்து தொலைக்காட்சி
தொடர்கள் மூலம் பிரபலமான பின் சென்றிருந்தப் போது அங்கிருந்த
அப்பாவி கிராமத்து மக்கள் கேட்டார்களாம்,
மும்பையில் தானே பேரழகி ஐஸ்வரியராய் இருக்கிறார் என்று.
இவரும் 'ஆமாம் ' என்றாராம். அதில் ஒருவர் ரகசியமாக வந்து
மெல்லிய குரலில் கேட்டாராம்... ' முன்னா, அவுங்களும் நம்மளைப் போல
காலையில் எழுந்து நம்பர் டூ இருக்கத்தானே செய்வாங்கனு!!!"

எதற்கு எடுத்தாலும் அமெரிக்கா அமெரிக்கா என்றும் மேலை நாடுகள் என்றும் பறந்து கொண்டிருக்கும் நம் இளம் அறிவுக் கொழுந்துகளுக்கு ஏன் அந்தந்த நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கழிவுகளை எடுத்துச் செல்லும் வாகனம்,  சுத்திகரிப்பு தொழிலாளிக்கு அரசு செய்து கொடுத்திருக்கும் வசதிகள்,
அவர்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், எந்திரமயமான
சுத்திகரிப்பு வேலை... இத்தியாதி
எதையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று எண்ணமே வரவில்லை? ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் நவீன
ஐபேட் இந்திய சந்தையில் வரும் முன்பே டில்லியில் விற்பனை
ஆகும் அளவுக்கு நுகர்வோர் சந்தையைக் கொண்ட இந்திய
சமூகம் இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை?
வால்மார்ட் இந்திய மண்ணில் கால்பதித்தே ஆகவேண்டும் என்று
பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதேஅமெரிக்க நாட்டிலிருந்து
இந்த வசதிகளையும் கொண்டு வர ஏன் முயற்சிப்பதில்லை?

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள
தொழிலாளர்கள் 19 பேர் சுத்திகரிப்பு செய்து கொண்டிருக்கும் போது
மரணம் அடைந்திருக்கிறார்கள், அவர்களைப் பற்றி பேசவோ
எழுதவோ சாதிப்படிநிலையைத் தாண்டி ஒருவரும் வரவில்லையே! ஏன்?
செத்துப் அந்த 19 பேரும் தமிழர்கள் இல்லையா? அவர்கள் சாவுக்கு
யார் காரணம்? தமிழ் தேசியம், ஈழப்போராட்டங்கள் , மொழி போராட்டங்கள்
மார்க்சிய இயக்கங்கள், திராவிட இயக்கங்கள்  இப்படி சமத்துவத்திற்காக போராடும் எத்தனையோ
கூடாரங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோமோ... இதில் எந்த ஒரு
பாசறையிலிருந்தும் இவர்களுக்காக இவர்களையும் தன் சகமனிதனாக
நினைத்து குரல் கொடுத்தவர் எத்தனைப் பேர்?


ஏன் எனில் இத்தொழில் இந்திய சமூகத்தில் ஒரு சாதியம் சார்ந்த தொழில்.
இத்தொழிலை செய்வது இவன் தலைவிதி என்று விதிக்கப்பட்டிருப்பதை
காலம் காலமாய் சுமந்து சுமந்து செல்லரித்து போய்
செப்பனிட முடியாத அளவுக்கு சிதைந்து கிடக்கிறது நம் சமூகம்.
இந்தியாவில் மட்டுமே இக்கொடுமை நிலவுவதற்காக
ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும்.
இக்கொடுமை இந்திய தேசத்தின் அவமானம்.


பி.குறிப்பு:

மேலதிக விவரங்களுக்கு :  ref: Safai Karamchari Andolan