Wednesday, December 12, 2007
உறவுச் சிக்கல்கள்
உறவுச் சிக்கல்கள்
--------------------> புதியமாதவி, மும்பை
( பாரீஸில் 2007, அக்டோபர் 13,14 களில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில்
கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை)
நான் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது என்று உறுதியானப் பின் இச்செய்தி அறிந்த என் நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி:
தனியாகவா போகிறாய்?
சங்கர் (என் துணைவரின் பெயர்) உன்னுடன் வரவில்லையா?
இப்படிக் கேட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள், பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பவர்கள். பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள். அவர்களுக்குத் தெரியும் இக்கருத்தரங்கு பெண்கள் கருத்தரங்கு, பெண்கள் கலந்து கொள்ளும்
பெண்களால் நடத்தப்படும் கருத்தரங்கு என்பது.
இதைவிட என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி: நுழைவிசைவுக்காக (விசா) ஜெர்மானிய தூதரகத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியும் இதுதான்:
தனியாகவா பயணம் செய்கிறீர்கள்?
உங்கள் கணவர் உடன் வரவில்லையா?
இப்போது யோசித்துப் பாருங்கள். இதே மாதிரி கேள்வியை ஓர் ஆணிடம் அவன் தனியாக பயணம் செய்தால் யாராவது கேட்பார்களா? இப்படிக் கேள்வி கேட்டவர்களை நான் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். எது , யார் இந்த மாதிரி கேள்விகளை அவர்களிடம் திணித்தது?
சமுதாயத்தின் மொழி, நம்பிக்கை, மரபுகள் நம்மீதும் நம் நனவிலி மனதிலும் (sub-conscious mind) ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய தாக்கம் இது. இந்த மாதிரியான தாக்கங்கள் மிகவும் இயல்பாக கிட்டத்தட்ட அனிச்சை செயல்போல நம் சிந்தனை அலைகளில் மிதந்து கொண்டிருக்கின்றன.
ஆணுக்கு உறவுகள் உண்டு. பெண்ணுக்கும் உறவுகள் உண்டு.
ஆணுக்கு உறவுகள் பிரச்சனைகள் ஆவதில்லை. பாரமாவதில்லை. அவனைச் சிறுமைப் படுத்துவதில்லை. அவன் மதிப்பு, மரியாதைகளை நிலைநிறுத்துகின்றன.
ஆனால் பெண்ணுக்கு உறவுகள் பிரச்சனைகளாக பயமுறுத்துகின்றன. அவளால் சுமக்க முடியாத பாரமாக அவளைக் காலம் காலமாய் அழுத்தி வைத்திருக்கின்றன. எந்த உறவுகளும் அவளைப் பெருமைப் படுத்துவதில்லை.
அவளைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளாய் உறவுகள். அவள் வேகமாக நடந்தால் அவளைக் காயப்படுத்தும். அவள் உறவுகளுக்காகவே வாழவேண்டும் என்பது மாற்றமுடியாத விதி. இனம், மொழி, நாடு கடந்த உலகளாவிய சட்டம் இது. உறவுகள் அவளுக்காக வாழ்வதும் வாழாமல் இருப்பதும் உறவுகளின் விருப்பம் கட்டாயமில்லை.
அவளுக்கு என்று விருப்பங்கள் இல்லை. இருக்கவும் கூடாது. அவளுடைய விருப்பங்கள், கனவுகள், திட்டங்கள் எல்லாமே அவளைச் சுற்றியிருக்கும் உறவுகளின் நலம் சார்ந்தாக மட்டுமே இருக்கும், இருக்க வேண்டும்.
சமைப்பதும் துவைப்பதும்
அழுகிற குழந்தையை
அள்ளி எடுப்பதும்
குடும்ப பாரம் தூக்கிச்சுமப்பதும்
எனக்கு மட்டும்
உரியதென்கிறாய்!
புரிகிறது -
நீ ஆண் என்பதும்
நான் பெண் என்பதும்
அதனாலென்ன மனிதர்கள் தானே
என்ற பதிலை
உன்னிடம் நான்
கேட்டுப் பெறவில்லை என்பதும் -
( வர்த்தினி)
பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்துவிட்டாலே ஆண்களுக்கு
அடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னார் பெண்ணிய விடுதலைப் போராளி தந்தை பெரியார்.
ஆனால் நடந்தது என்ன?
அடுப்பங்கரை விறகுக்கு
ஒரு பக்கம் தீ
இந்த அலுவலக விறகுக்கு
இரண்டு பக்கமும் தீ
(புதியமாதவி)
இன்றைக்கு அவர் நினைத்தப் படி தன் காலில் தானே நிற்குமளவுக்கு பொருளாதர வலிமையை அடைந்துவிட்ட பெண்களாலும்
பெண் அடிமை சமுதாயத்திலிருந்து விடுதலைப் பெற்ற பெண்ணாக வாழ்ந்து காட்ட முடிகிறாதா என்ற கேள்வி
நம் முன்னால் விசவரூபமெடுத்து நிற்கிறது. இப்போது தான் நாம் வேகமாக ஓடி ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் நிற்பதை
உணர்கிறோம். நமக்கான வெளி, நமக்கான பாதை, நமக்கான பயணம் எதுவாக இருக்க வெண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தக் கேள்வியை நேருக்கு நேராக சந்திக்காமல் கண்ணாடிச் சன்னல்கள், திரைச்சீலைகளுக்குப் பின்னால் நாம் மறைந்து கொள்ளும் வரை நம் முகங்களை நம் முகங்களாக நம்மால் நம் வரலாற்றில் பதிவு செய்ய முடியாமல் போய்விடும்.
பெண்ணின் உறவுச் சிக்கல்களை இரண்டு வகையாகப் பிரித்து பார்க்கிறேன்.
முதலில் அவள் இந்த மனித சமுதாயத்தின் ஓர் அங்கம். இதில் அவளுக்கும் இந்த சமுதாயத்திற்குமான உறவுச் சிக்கல்கள்.
இரண்டாவது மனித சமுதாயத்தில் ஆண்-பெண் என்ற இரண்டு பாலியல் அடிப்படையானப் பிரிவுகளில் பெண்ணுக்கு ஆணுக்குமான உறவு சார்ந்த சிக்கல்கள்.
மனித வரலாற்றில் தாய்வழிச் சமூகமாக இருந்த இனக்குழு எப்படி எப்போது தந்தைவழிச் சமூகமாக, ஆண்வழிச் சமூகமாக
மாறியது என்பதான காரண காரியங்களை பற்பல இசங்கள், பெண்ணிய வாதிகள் நிறையவே பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் அறிவோம்,. எனவே கூறியது கூறல் வேண்டாம் என்று நினைக்கிறேன்.
பெண் என்றால் யார்?
சூல்பை, கருப்பை என்ற பதில் வருகிறது.
அப்படியானால் இந்த சூல்பை, கருப்பையை எடுத்துவிட்டால் அவள் பெண்ணில்லையா?
இந்தக் கேள்வியை முன்வைக்கும் போதுதான் பெண்ணியக் கவிஞராக பெரிதும் அறியப்பட்டிருக்கும் கவிஞர் குட்டிரேவதி அவர்கள் தான் நடத்தும் பெண்ணிய இதழுக்கு கருப்பை, பிரசவத்துடன் தொடர்புடைய "பனிக்குடம்" என்ற பெயரை
வைத்திருப்பதில் என் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. இதுவும் கூட நம்மில் ஊறிக்கிடக்கும் மரபியல் ரீதியான சிந்தனைகளின் தாக்கம்
என்று தான் நினைக்கிறேன்.
‘ஒரு பெண் பெண்ணாக இருப்பதென்பது தரத்தில் குறைபாடுடையவளாக அவள் இருப்பதைச் சார்ந்தது’, சொன்னது அரிஸ்டாடில். ‘குறைகளுடன் உழலவே ஒரு பெண் இயற்கையில் படைக்கப் பட்டிருப்பதாகக் கருத வேண்டுமென்றும் என்கிறார் அந்தச் சிந்தனையாளர்!
தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாக பிறக்கவைத்ததற்காக முதலாவதாகவும், தன்னை பெண்ணாக அல்லாமல் ஓர் ஆணாக பிறக்கவைத்தமைக்காக இரண்டாவதாகவும்’, பிளாட்டோ, இறைவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தான்.
"திறமையற்ற பெண்தான் நற்குணம் உடையவள்' என்பது சீனப்பழமொழி.
பெண் எதையும் தானாகச் செய்து கொள்ள உரிமையற்றவள் ( மனுநீதி 5:147)
ஒரு மகனைப் பெறுவதற்க்காக எந்த ஆணும் இன்னொருத்தன் மனைவியைப் பயன்படுத்தலாம். ( மனு 9:52)
வாரிசுகள் இன்றி சொத்துக்களை விட்டுக் கணவன் இறந்துவிட்டால் கணவன் வழி சொந்தக்காரனுடன் கூடிக் குழந்தை பெற்றுக் கணவனின் சொத்துக்களை அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். என்கிறது மனுநீதி.
இன்றைய சமுதாயத்தில் இக்கருத்துகள் மறைந்துவிட்டன என்று பலர் சொல்கிறார்கள், மறைந்துவிடவில்லை. மங்கலாக தெரிகிறது. அவ்வளவுதான். இக்கருத்துகளின் ஊடாக விதைக்கப்பட்ட கருத்து: பெண் ஓர் ஆணின் வாரிசை உருவாக்கும்
விளைநிலம் என்ற கருத்துதான். இன்றுவரை இந்தக் கருத்திலிருந்து முழுமையாக பெண்களால் வெளிவந்திருக்க முடிந்திருக்கிறதா?
சீனாவில் கன்ஃப்யூஷியஸ் பெண்களைப் பற்றி பேசியது மிகக் குறைவு. எங்கும் உயர்வாக பேசவில்லை. ஆண்வழிச் சமூகத்தின் கடைசிப் படிகளில் பெண்ணை வைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் ஆண்வாரிசைப் பெற்றெடுப்பது தான் அவள் பெண்ணாகப்
பிறந்ததன் பலன் என்ற நம்பிக்கை இன்றுவரை உள்ளது. அதனால் கம்யுனீசக் கொள்கைகள், சட்டங்கள் பெண்சிசுக்கொலையை மாற்றமுடியவில்லை. 1990 களில் வெளிவந்த பி.பி.சி எடுத்த ஆவணப்படம் "மரண அறை" வெளிவந்தப் பிந்தான் பெண்குழந்தைகள் எவ்வாறு அனாதைகளாக்கப்படுகிறார்கள், சாகடிக்கப்படுகிறார்கள் என்பதை உலகம் அறியவந்தது.
ஆணின் ஆசைநாயகியாக இருக்கவும் அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் சீனப்பெண்கள் தயாராக இருந்தார்கள்.
இந்தியாவில் சீனாவில் பெண்ணுரிமைப் பேசியவர்கள் இல்லையா? பெண் கவிஞர்கள் இல்லையா? பெண் எழுத்தாளர்கள் இல்லையா? என்றால் இருந்தார்கள் இருக்கிறார்கள். உலக வரலாற்றில் பெண்ணுரிமைக்கான முதல் குரலாக ஒலிக்கும் புத்தரின் கருத்துகள் பிறந்த இடம் இந்திய மண் என்றால் பரவி காலூன்றிய இடம் சீனமண்.
துறவு மேற்கொள்ளும் முன் தன் மனைவி யசோதரையிடம் " நான் மக்களுக்காக சமூக வெளிக்குள் செல்கிறேன். நீ விரும்பினால் மறுமணம் செய்துகொள்" என்று கேட்டுக்கொண்டவர். தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளக் கேட்டுக்கொண்ட முற்போக்கான மாமனிதராக சித்தார்த்தர் இருந்தே பின் புத்தரானார்.
“பெண் வாழ்வது ஆணுக்காகவும்; அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை! தனது வீட்டுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்’ என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.
புத்தர், பெண்களுக்கான சிந்தனையில் செயல்பாட்டில் இச்சையாகவோ, அனிச்சையாகவோ ஆணாதிக்க உணர்வுகள் தனக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பெண்களுக்கு ஆண்கள் தலைமை தாங்க முடியாது; இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது; பெண்களுக்குப் பெண்கள்தான் தலைமை தாங்க முடியும்; இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறினார். பெண்களின் விடுதலையை பெண்கள்தான் ஏற்படுத்த முடியும் என்றார்
புத்தர், ஓர் ஆணின் பார்வையில் நிகழ்த்தப்படும் எந்தவோர் ஒழுக்கத் தத்துவம், பொதுத் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும் என்றார்.
சமயச் சடங்குகள், ஈமச்சடங்குகள் இதை எல்லாம் செய்யும் அதிகாரமும் உரிமையும் ஆண் குழந்தைக்குத் தான் என்றும் ஆணாகப் பிறந்தவன் தான் பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவனடி சேர முடியும், நிர்வாண நிலையை எட்ட முடியும்
என்று இருந்த இந்து மத நம்பிக்கைகளை உடைத்தார். சீனாவிலும் பவுத்தம் கோலோச்சிய பேரரசி வூ ஜீத்தியேனின் ஆட்சியிலும் டாங்க் முடியாட்சிலும் பெண்கள் உயரிய அந்தஸ்தில் இருந்தார்கள் , சுதந்திரம் அனுபவித்தார்கள் என்பதை
வரலாற்றில் பார்க்கிறோம். நான் சொல்ல வந்தக் கருத்திலிருந்து சற்று விலகிச் செல்வது போல இருக்கும்.
இப்போது தான் உங்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.
புத்தராக மாறிய சித்தார்த்தன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ள கேட்டதெல்லாம் ரொம்பவும் புரட்சிகரமான கருத்துகள் தான் என்பதில் ஐயமில்லை, ஆனால் சித்தார்த்தனின் மனைவி யசோதரை அதற்கு என்ன பதில் சொன்னார்.
, உலக மக்களின் நன்மைக்காக நீங்கள் துறவறம் மேற்கொள்கிறீர்கள். நானும் ஒரு துறவியாக விரும்புகிறேன். ஆனால், மகன் ராகுலனையும் வயது முதிர்ந்த தங்களின் தாய் தந்தையரையும் அன்புடன் கவனித்துக் கொள்ள, நான் சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் நிம்மதியாகச் செல்லுங்கள்’ என்பதுதான்.
யசோதரைக்கும் துறவியாக விருப்பம்தான். ஏன் சித்தார்த்தனுடன் சேர்ந்து அவளுக்கும் சமூக வெளிக்கு வர ஆசைத்தான்.
ஆனால் வரமுடியாது. ஏன் வரமுடியாது. அவளே தான் சொல்கிறாளே. குழந்தை ராகுலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவனை வளர்த்து ஆளாக்க வேண்டும். வயதான மாமன், மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆண் சமூக வெளிக்கு எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தை விட்டுவிட்டு வந்துவிட முடியும் எப்போதும் எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரு பெண்ணால் அது முடியாது. ஏன் எனில் இந்த உறவுகளை அவள் தான் சுமக்கிறாள், குடும்பம் என்ற செடியின் ஆணிவேராக பெண் மட்டுமே இருக்கிறாள். சமுதாயக் கட்டமைப்பு இதுதான்.'
இப்போது தான் பிரச்சனை வருகிறது. படித்தவள், கை நிறைய சம்பாதிக்கிறவள், எல்லா தளங்களிலும் ஆணுக்கு இணையாக பல இடங்களில் அவனை விட ஒரு படி உயர முடியும் என்று காட்டும் தகுதிப் ப்டைத்தவள் இன்றைய யசோதரை. இவள்
சித்தார்த்தனுக்கு முன்பாகவே சமூக வெளிக்கு வரத்துடிக்கிறாள். ஆனால் சித்தார்த்தன் ராகுலைக் கவனித்துக் கொள்ளத் தயாரா? வீட்டில் இருக்கும் வயதானவர்களைக் கவனிக்க முன் வருவானா? வரமாட்டான். அப்படி வரவேண்டும் என்ற நிலை
ஏற்படும் போது தான் காலம் காலமாய் இந்த சமுதாயம் பெண்ணுக்கு என்று உருவாக்கி வைத்திருக்கும் கடமைகளை
அவன் பட்டியலிடுகின்றான். பிரச்சனைகள் உருவாகிறது.
கற்பு, தாய்மை இந்த இரண்டும் தான் காலம் காலமாய் பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்கள். சமூக மதிப்பீடுகளும் நுகர்ப்பொருள் கலாச்சாரமும் இந்த மதிப்பீடுகளை மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
கற்பு பற்றி ஒரு காலத்தில் சொன்னார்கள்: ஆடவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்பட்டாலே அந்தப் பெண்ணின் கற்பு களங்கப்பட்டு விடுகிறது என்று. ஆண் பெண்ணைப் பார்த்து ஆசைப்படுவதில் பெண்ணுக்கு எந்த தொடர்புமில்லை.
இந்த தெளிவு வந்தவுடன் ஒரு பெண் ஆடவனைப் பார்த்து ஆசைப்பட்டால் தான் தவறு, அந்த ஆம்பளை மட்டும் ஆசைப்பட்டால் அதற்கு இவள் என்ன செய்யமுடியும்? என்று மாற்றிக்கொண்டான்.அதன் பின் பெண் படிக்க வெளியே வருகிறாள், வேலைக்குப் போகிறாள், பல்வேறு ஆண்களைச் சந்திக்கிறாள், தொடர்பு ஏற்படுகிறது. ஒப்பீடு சாத்தியமாகிறது. இன்று ஒரு பெண்ணுக்கு வேறு ஓர் ஆணுடன் காதலுறவு இருக்கிறது எனத் தெரிந்த பிறகும்கூட இவர்களுக்குத் தேவையான பணம், சாதி, தகுதி, படிப்பு, எல்லாம் கூடி வருகிற போது திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. திருமணத்திற்குப் பின்
சரியாக இருந்தால் போதும், இன்றைக்குத் திருமணம் பேசப்படும் போதே இந்த நிலைமை வந்துவிட்டது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
அப்படியானால் சமுதாயத்தில் கற்பு என்ற சொல்லின் பொருள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டுதானே வருகிறது.
சீன நகரங்களில் திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணமாக ஒன்று உண்டு. திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பதை சீன நகரவாசிகள் மிகவும் பரந்த மனதுடன் ஏற்க ஆரம்பித்துள்ளதுதானாம். சுமார் 18 வருடங்களில் பிரம்மாண்ட மாற்றங்கள் இவ்விசயத்தில் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக நகரங்களில் திருமணத்தையும் பாலுறவையும் குழப்பிக்கொள்ளும்
மனப்பான்மை முற்றிலும் மறைந்துவிட்டிருக்கிறது .
பெண்ணின் மேல் பாரமாய்க் கவிந்திருக்கும் அடையாளம் தாய் என்ற புனைவுதான். பெண்ணை அடிமைபடுத்த ஆண் கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே அதி அற்புதமானது இந்தத் தாய்மை என்ற ஆயுதம். பெண் தாய்மையில்தான் முழுமையடைகிறாள், பிறந்தப் பயனை அடைகிறாள் என்று புனைந்து அவளைப் பிள்ளைப் பெறும் எந்திரமாய் அவன் வாரிசை
வளர்க்கும் செவிலியாய் மட்டும் ஆக்கியிருந்தது ஆண் மேலாண்மைச் சமூகம்.
கர்ப்பத்தை மட்டுமே
நினைவூட்டி அச்சுறுத்தும்
இந்தக் கட்டில்
எஜமானின் ஆயுதம் ' என்று சல்மா சொல்வது இதைத்தான்.
இப்போதும் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு குற்ற உணர்வு
இருக்கிறது.
நகர்ப்புறத்து பெண்கள் திருமணத்தைப் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆண்-பெண் பாலியல் தீர்மானிக்கப்படுவது ஆணின் விந்திலிருந்து வெளியாகும் xy குரோமோசொம்களைப் பொறுத்தே என்ற அறிவியல் பரப்புரை ஆண் வாரிசுகள்., சொத்துரிமை குறித்த சமூக மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளது.ச்
கல்வியும் கல்வி வழங்கிய பணி, பணி நிமித்தம் பிரிந்திருத்தல், அதனாலேயே தனித்து வாழ முடியும் என்று
காலம் பெண்ணுக்கு கற்பித்துவிட்டப் பாடம் இவை அனைத்தும் ஆண்-பெண் உறவில் சமுதாயம் போட்டிருந்த
இரும்புத்திரையை விலக்கி புதிய வெளிக்கு இட்டு வந்துள்ளது.
'பொறுக்க முடியாத தருணத்தில்
என் நியாயத்தை
உரத்துச் சொல்வது
வேலைக்குப் போகிற திமிராகும்போது
நீ அடிப்பது
உதைப்பது மட்டும்
எப்படி அத்தான்
ஆபிஸ் டென்ஷனாகிறது
(இளம்பிறை, நிசப்தம் பக் 14)
சோவியத் ரஷ்யா உருவாக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு அரசியல் வாழ்வில் பெண்களின் விடுதலைக்கான வழிமுறைகளைச் சட்டபூர்வமாக்கிய பெருமைக்குரியவர் அலெக்சாண்டிரா.சர்வதேச அரசியலில் பெரும் பங்காற்றியதோடு லெனின் தலைமையின் கீழ் அமைச்சராகவும் வெளிநாட்டுத் தூதராகவும் செயலாற்றிய செயல்திறன்மிக்க போராளி; தன் வாழ்நாள் முழுவதும் அயராது துணிச்சலோடு தன் இலட்சியத்திற்காகப் போராடியவர். முதலாளித்துவ சமூகம் பெண்களை எப்படிச் சுரண்டுகிறது என்பதை உணர்ந்த அலொக்சாண்டிரா ரஷ்யப் புரட்சிக்கு முன்னும் பின்னும் பல்வேறு முறைகளில் அவர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய வீராங்கணை எனலாம்.
வர்க்க விடுதலை மட்டும் பெண் விடுதலைக்குப் போதாது என்பதில் உறுதியாக நின்று செயல் பட்டதாலேயே பலமுறை கைது செய்யப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புரட்சியின் போதும் அதன் பின்னரும் அவர் சந்தித்த நெருக்கடிகளும் சிக்கல்களும் ஏராளம். ஆயினும் மனந்தளராமல் இறுதிவரை பெண் விடுதலைக்கும் போர் எதிர்ப்புக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் கரைத்துக்கொண்ட அசாதாரண பெண் அலெக்சாண்டிரா.
குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்றாலும் அந்தச் சுமையைத் தாங்கும் நிலையும் பெண்ணுக்கே உரியதாகிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும் விடுப்பு எடுப்பது என்பது இயலாமற்போகிறது. தவறி எடுத்துவிட்டால் வேலை போய்விடும் என்ற நிலை. வேலை பறிபோனால் ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும் நேர்ந்து விடுகிறது. அப்போது அவள் சுயத்தை இழந்துவிடும் துரதிருஷ்டமும் ஏற்பட்டுவிடுகிறது.
வேலையை இழந்து, வறுமையில் வாடி தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழலில் பெண் தன் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆணை நாடிச் சென்று பணத்தைப் பெறும் சூழலும் நெருக்கடியும் உருவாகி விடுகின்றன. பெண்களின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை பாட்டாளித் தோழர்கள் உட்பட. புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யாவில் விபசாரம் பெருமளவிற்குக் குறைந்தது என்றாலும் அதன்பின் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலைமை சோவியத் சமூகத்தில் விபசாரத்தை மீண்டும் துளிர்க்கச் செய்தது. அவர் எழுதிய சகோதரிகள் என்ற கதையில் அதை எதிர்த்துப் போராடும் தேவையை அலெக்ஸாண்டிரா நுட்பமாக விளக்குகிறார் .
பல போராட்டங்களுக்குப் பிறகும் பெண் மீதான வன்முறை கருத்தியல் தளம் உள்பட எல்லா தளங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் குறிப்பாக நாம் வளர்ந்ததாகக் கருதும் மேலை நாடுகளிலும்கூட பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தே வந்திருக்கிறது.
அமெரிக்காவைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. சமீபத்தில் The centre for reproductive rights என்கிற அமைப்பு ஐ.நா. சபையின் மனித உரிமை குழுவிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜார்ஜ் புஷின் அரசு பெண்களின் உடல்நிலை மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம், குடும்பக் கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் புஷ் அரசு கடுமையான விதிமுறைகளை விதிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது இந்த அமைப்பு. இது தவிர, முறையற்ற செக்ஸ் கல்வியை ஊக்குவிப்பதாகவும் இந்த அமைப்பு சொல்கிறது. ஏற்கனவே கருக்கலைப்புப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழலில் இந்த அறிக்கை உலக அளவில் பெண்ணியவாதிகளிடையில் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் பெண்களின் நிலை கவலையளிப்பதாகவே இருப்பதற்கு இன்னொரு சாட்சி London school of economicsன் centre for economis performance தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கைதான். ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. நிர்வாகக் குளறுபடிகள்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை. பெரும்பாலும் குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும்கூட இந்த சம்பள பாகுபாட்டிற்குக் காரணங்கள். ‘கடந்த 30 வருடங்களில் ஆண்,பெண்களுக்கு இடையிலான இந்த சம்பள இடைவெளி குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும்' என்கிறது அறிக்கை. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக வேலையை தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது' என்கிறார் அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.
பெண்ணுக்கு ஆன்மிகத்தளத்தில் இடமில்லை. மதம் அவளைத் தீண்டத்தாகதவள் என்று புறக்கணிக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்து மதம். இந்து மதத்தில் தான் ஏகப்பட்ட பெண்வழிபாடு. மூன்று தேவியர் உண்டு. அவர்களுக்கு பிள்ளைப் பேறு, பிரசவம் எல்லாம் உண்டு. குடும்பம் உண்டு. பாற்கடலில் படுக்கை அறை உண்டு. அந்தப் பொம்பளை சாமிக்கெல்லாம்
மாதவிலக்கு தீட்டு கிடையாதா?
சபரிமலை சர்ச்சை வந்த போதும் வழிபாட்டு இடங்களுக்கு பெண்கள் அனுமதிக்கப்ப்டாத போதும் அறநிலை அதிகாரிகளாக
பெண்கள் அமர்த்தப்படுவதில்லை என்று எழுதிவைத்திருப்பதை எதிர்த்தும் போராட வந்தப் போதும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் மத நம்பிக்கைகளை எதிர்த்த பெண்ணிய அமைப்புகள் எத்தனை?
பெண்ணுக்குக் கல்வி வேண்டும். தொழில் செய்ய உரிமை வேண்டும். அரசு பதவியில் அமர முடியும் நிர்வாகம் செய்ய முடியும். அதிகாரமும் செய்யலாம். பெண்ணுக்கு சொத்துரிமை உண்டு சொத்து சேர்த்துக் கொள்ளலாம். இவை எல்லாம் பெண் உரிமைகள் என்ற பட்டியலில் இடம் பெறுகின்றன. இங்கு தரப்படும் கல்வி யார் தேவையை நிறைவேற்றுகிறது. இங்கு நடைபெறும் தொழில் நிறுவனங்கள் யார் தேவையை எவ்வகையில் எத்தகைய முறையில் நிறைவேற்றுகிற நிறுவனங்கள்? நிர்வாகம் செய்வது என்றால் என்ன? சொத்துரிமை என்பது என்ன? இவையெல்லாம் முதலாளியத்தை, அரசு அதிகாரத்தை வலுப்படுத்தக் கூடியவை. நெடுங்காலமாக நம் சமூகச் சூழலில் பெண்கள் எத்தனையோ வகைகளில் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் பிறப்பு முதல் இறப்புவரை எத்தனையோ கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாகி வந்திருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு நம் காலத்தில் கிடைத்துள்ள கல்வி முதலியவை எத்தனை அளவுக்கு ஆக்க ரீதியானவை என்பதை நாம் மறுக்கமுடியாது.
கூடவே இன்னொன்றையும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. முதலாளியச் சூழலில் நமக்குக் கிடைக்கிற கல்வி முதலிய உரிமைகள் நாம் நமக்கான ஆளுமையைப் பெறுவதற்கு எந்த அளவுக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
கல்வி, நுகர்ப்பொருள் கலாச்சாரம், உலகமயமாதல் இதனால் பெண்ணிடம் ஏற்பட்டிருக்கும் புதிய அடையாளங்கள் சமூக மதிப்பீடுகளை பாதித்துள்ளன. மரபுகளை மாற்றியுள்ளன.அடையாளங்களை அழித்து புதிய வெளியை உருவாக்கியுள்ளன.
தன்னை மறந்து தன் நாமம் கெட்டு அவள் அவனில் ஒன்றி அவளை இழத்தல் இனி சாத்தியமா?
அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் மணமுறிவுகள் இந்தக் கேள்வியை ஒவ்வொரு சமூக அக்கறையுள்ளவர்களிடமும் கேட்கிறது. என்ன பதில்? யாரிடம் குறைபாடு? குடும்ப வட்டம் இன்று ஒரு சின்ன ஒற்றைப் புள்ளியாய்
மாற்றம் கண்ட பிறகும் எதனால் காதல் கசப்பாகி வழக்கு மன்றங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது? படித்தப் பெண்கள் அதிகமிருக்கும் கேரள மாநிலத்தில் பெண்களின் தற்கொலைச் சாவுகளும் அதிகமாக இருப்பதன் காரணம் என்ன?
ஒரு பக்கம் பெண்விடுதலையை நோக்கிய புறவுலகின் பயணம். மறுபக்கம்
பெண் குடும்பம் சார்ந்தும் கணவன் துணையுடனும் வாழ்வது மட்டுமே அவளுக்கான
சமூக அந்தஸ்த்து என்ற சமூக வாழ்வின் அகநிலை. இந்த இரண்டுக்கும் இடையிலான முரண், இடைவெளியில் இன்றைய பெண்களின் வாழ்க்கை. இந்த இடைவெளி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. என்னவோ இப்போதோ நேற்று முந்தினமோ தோன்றிய இடைவெளி அல்ல. ஆனால் இந்த இடைவெளி எவராலும் இட்டு நிரப்பமுடியாத பள்ளத்தாக்காய் அண்மைக்காலங்களில்
மாறிப்போனதால் தான் சமரசமும் பெண் தன்னை மறந்து காதலாகிக் கசிந்து கரைந்து
போதலும் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டது.
கல்வியும் கல்வி சார்ந்த வேலை வாய்ப்புகளும் இன்றைய பெண்ணுக்கு அபரிதமான
பொருளாதர உரிமையை வழங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் ஆண்களை விட
பெண்களே முன்னுரிமைப் பெற்றவர்களாக திகழ்கிறார்கள். பள்ளி இறுதிப் படிப்பு,
கணினி மென்பொருள் துறை. வளர்ந்து வரும் BPO, Call centres, வணிக வளாகங்கள்
அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது இன்றைய உலகமயமாதலும் தனியார்மயமாதலும். பெண்களை பணிகளில் அமர்த்துவதன் மூலம் தொழிற்சங்கம், ஊதிய உயர்வு போன்ற போராட்டங்களைத் தவிர்ப்பதும், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற நியாயமானக் கோரிக்கைகளை புறக்கணிப்பதும் பெண்களின் விசயத்தில் எளிது என்பதால்
பெண்களுக்கு பணியடங்களில் முன்னுரிமை வழங்கப் படுகிறது என்பது தான் உண்மை. உலக மயமாதலான சந்தையில் அரசும் அரசு சார்ந்த கொள்கைகளும் வலுவிழந்து விட்டதால் படித்தப் பெண்களும் மேற்கத்திய உடையில் வலம்வரும்
கொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிமைத்தனத்திலிருந்து
வெளியில் வர முடியாது என்பது பெண்ணிய வளர்ச்சி விடுதலையில் ஏற்பட்டிருக்கும்
தீர்க்க முடியாத நோயாகிவிட்டது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக
வீடு, குடும்பம், குடும்பம் சார்ந்த கடமை, பாலியல் உறவு, பொறுப்பு இவைகளை முழுமையாகச்
செயல் படுத்த முடியாத நிலைமை பெண்களுக்கு. விளைவு.. மணமுறிவுகள்.
மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்திருக்கும் 10 ஆண்டு
வழக்குகளில் 1991ல் 1839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2001ல் அதுவே 2877 ஆக
உயர்ந்துள்ளது. (ref: Growing Incidence of Divorce in Indian Cities:)
ஆண் பெண்
15-24 1.7 22.3
25-34 57.3 57.0
35-44 29.0 18.0
44+ 12.0 2.7
இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மும்பை, சென்னை நகரங்களில் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ,மேலும் விவாகரத்துக்கான காரணங்களில் தற்காலிகமான வேறுபாடுகள் காரணமாக விவாகரத்துக்கு வந்து
வழக்குகள் 18.7. ஆணின் வன்கொடுமைக் காரணமாக வந்தவை 33.7.
பொய், பித்தலாட்டம், பாலியல் உறவில் நிறைவின்மை காரணங்கள் எல்லாம் முறையே 1.3, 5.7 என்ற எண்ணிக்கையில் உள்ளன.
இந்தப் பத்து வருட உண்மையான பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் ஆண்- பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் உளவியல் சார்ந்த புள்ளியைச் சுற்றி எழுந்திருக்கும் அலைகள்.
சீனாவில் நிறைய சம்பாதிக்கும் பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். அதுமில்லாமல் அதிகம் படித்தப் பெண்களைச் சீன ஆண்கள் பல்வேறு சொந்தக் காரணங்களுக்காக மனைவியாக ஏற்கத் தயாராயில்லை
சீனத்தில் குடும்ப வன்முறை ரொம்பவும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. மனைவியை அடிப்பதைப் பெருமையாக நினைக்கும் கணவன்மார்கள். அதிலும் பெண்குழந்தையைப் பெற்ற பெண்தான் குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகிறாள்.
2003 ஆம் ஆண்டை ஒப்புநோக்க 2004 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை இரட்டிப்பாகி இருக்கிறது .
கல்வி, வேலை காரணமாக பெண்களின் திருமண வயது 25ஐத் தாண்டிவிட்டது.
25 வயதுக்குள் ஒரு பெண்ணோ ஆணோ தன் ஆளுமையை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்டபின் ஒருவருக்காக ஒருவர் தன்னை மறப்பதும் தன்னை இழப்பதும் எப்போதும் எல்லா இடங்களிலும்
சாத்தியமாவதில்லை.
புடவையா.. அவருக்குப் பிடித்தது..
சமையலா.. அவருக்குப் பிடித்தது
சங்கீதமா.. அவருக்குப் ப்டித்தது
சினிமா அவருக்குப் பிடித்தது
இப்படி எல்லாம் அவருக்குப் ப்டித்ததாகவே இயங்கிய நம் அம்மாக்களின் பெண்களாக
நாமில்லை. ஆனால் மரபணு சார்ந்து தனக்குப் ப்டித்தது மட்டுமே அவளுக்குப் ப்டித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே ஆணும் அவன் சார்ந்த சமூகமும் இருக்கிறது. குறைந்தப் பட்சம் தனக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிற இடங்களில் வேறுபாடுகள் குறைகிறது. அதாவது தன் விருப்பம் அவள் விருப்பமாக இருப்பதுடன் அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அந்த விருப்பங்கள்
தானும் விரும்புவதாக இருக்கலாம் அல்லது விரும்பாததாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு ஆண்-பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்குள் ஒவ்வொரு ஆணும்
சற்று திக்கு முக்காடி மூச்சுத் திணறித்தான் தவிக்கிறான். இந்த மூச்சுத் திணறலை
விட்டு வெளியில் வந்து பெண், மனைவி, அவளுக்கான ஆளுமைகளை ஏற்றுக்
கொள்வதில் ஆண் காலம் காலமாய் போற்றி வளர்த்திருக்கும் ஆண்மை காயப்படத்தான் செய்கிறது. " உலகத்தில் 'ஆண்மை' நிற்கும்வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் 'ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று தந்தை பெரியார் சொல்வதும் இதனால் தான்.
.பெண்ணும் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால் ஆணையும் அவன் அகப்பட்டுக் கொண்டுள்ள அடிமைத்தனத்திலிருந்து, ஆதிக்கத்திலிருந்து அவனை விடுவித்தாக வேண்டும். உடைமை, அரசு, மதம் முதலிய ஆதிக்கங்களைத் தனக்குக்கீழ் உள்ளவர்கள்மீது செயல்படுத்தும் கருவி என்ற முறையில் அந்த ஆதிக்கங்களுக்குள் அகப்பட்டு அவைதரும் சில வசதிகளை அனுபவித்துக் கொண்டு, அவற்றையே தனக்கான இன்பம் என்றும், அவற்றையே தனக்குப்பெருமை என்றும் ஆணவத்தோடும் தோரணையோடும் இருக்கிற ஆண் தானே விரும்பி தன்னைக் கட்டுப்படுத்துகிற அடிமைத்தனத்தை தகர்த்துக்கொள்ள முடியாது. இந்நிலையில் அவனையும் விடுவிக்கும் முறையில், அவனோடும் போராடி அவன் வழியாகச் செயல்படும் ஆதிக்கங்களின்மூலம் எது என அவனுக்கும் சுட்டிக்காட்டி அவனை எதிரியெனக் கருதிக் காயப்படுத்தாமல் அவனையும் தன்னோடு இணைத்துக்கொண்டு ஆதிக்கங்களுக்கெதிரான போராட்டத்தில், விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும்.
பெண் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆணையும் அவன் அகப்பட்டுக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதிக்கச் சக்தியிலிருந்து மதங்களின்மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும்.
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!
- புறம்(187) அவ்வை.
___________________________________________
பின்குறிப்புகள்:
>அணங்கு - மார்ச்-ஆக்ஸ்டு 2007 இதழ்
> பெருஞ்சுவருக்குப் பின்னே: ஜெயந்திசங்கர்
> பல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை
- கோவை ஞானி - பெண்ணியம் இதழ்
>A Growing Incidence of Divorce in Indian Cities: A Study of Mumbai
Ajay Kumar Singh & Dr. R K Sinha
International Institute for Population Sciences,
Mumbai, India
Thursday, December 6, 2007
தலித் மாநாடு
நன்றி: கீற்று மின்னிதழ்
(http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_5.php)
தலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்
புதியமாதவி, மும்பை
ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.
தமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்.. இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது? நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன்? தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ்ப் படிக்க விட்டீர்களா? உங்கள் தமிழ் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெறும் அரசியல் சட்டங்களினாலும் சட்டமனற மசோதாக்களாலும் நிறைவேற்றப்பட்டு ஏட்டில் இருக்க வேண்டியவை மட்டுமல்ல. சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் விடுதலையே விடுதலைக்கான பாதையாக இருக்க முடியும் என்பதை சற்று உரத்தக் குரலில் பதிவு செய்த மாநாடு இது.
இந்த மாநாட்டிற்கு போகும் முன்பே சூலை 2007, தலித் முரசு இதழில் சி. ஜெய்சங்கர் அவர்களின் நேர்க்காணல் வாசித்திருந்தேன். அதில் ஈழத்தில் நிலவும் சாதியம் பற்றிய நிலவரத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. (மூன்றாவது கண், தேர்ட் அய் என்று தமிழ், ஆங்கில இதழ்கள் நடத்துபவர். தோழமை ஓவியர் வாசுகியின் கணவர்)
போர்ச்சுழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்" என்று சொல்லியிருந்தார்.
இந்தளவு புரிதல்களுடன் தலித் மாநாட்டில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் அருந்ததி அவர்கள் 'புòதூரில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான்' என்று யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னதை மேற்கோளாக சொன்னார். இந்த மாதிரியான எதிர்மறுப்பு எதில் கொண்டு போய் முடியும்? இரண்டுமே வரலாற்றின் கறைகள். கறைகளை கறைகளால் மட்டுமே கழுவ முடியும் என்பது எந்தக் கறைகளையும் நீக்குவதற்கான தீர்வாகிவிட முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.
இசுலாமியர்களிடம் சாதியம் இருப்பதை எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் தன் எழுத்துகளில் பதிவு செய்திருப்பதையும் அதற்காக தக்கலை ஜமாத் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருப்பதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் ஜமாத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருப்பதைச் சொல்ல வரும் நோக்கத்தில் அப்போது நினைவில் வந்த "ரசூலில் தலையை வெட்டிவிடலாம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளை என்ன செய்யப்போகிறீர்கள்?" என்ற கவிஞர் இன்குலாப்பின் கூற்றை எடுத்துரைத்தேன்.
இலண்டனிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் பசீர் அவர்கள் கலந்துரையாடலில் சொன்ன மறுமொழியில் 'இன்குலாப் புலி ஆதரவாளர்..' என்றார். பசீரின் இந்த மாதிரியான மறுமொழி என்னைக் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. இன்குலாப் புலி ஆதரவாளாரா.. இல்லையா ? என்பதல்ல இங்கே கேள்வி. அவர் சொன்ன கருத்து மட்டுமே. இன்குலாப் புலி ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவர் சொல்வதை நம்பகத்தன்மையுடன் ஏற்க மறுப்பது என்ன மாதிரியான புரிதல்?
ராயகரன் குறுக்கிட்டு இசுலாமியர்களிடமும் சாதியம் இருப்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் என்னுடைய கூற்றை பசீர் ஓர் இசுலாமியராக மட்டுமே தன் வட்டத்துக்குள் நின்று கொண்டு மட்டுமே பார்ப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் முஸ்லீம் சமூகத்தில் சாதிப் பிரிவினைகள் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாவிதர், மரைக்காயர், வெள்ளாட்டிகள் என்ற பிரிவுகளில் நாவிதர்கள் மற்றவர்களால் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். மரைக்காயர் போன்ற உயர் பிரிவினர் திருமண உறவுகளை நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை முஸ்லீம்களுக்கும் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கும் இடையே திருமண உறவுகள் கிடையாது என்பதை நானறிவேன். அதுமட்டுமல்ல, புதிதாக இசுலாத்திற்கு மதமாறி வரும் தலித்துகளை இவர்கள் சரிசமமாக நடத்துகிறார்களா என்றால் சில ஊர்களில் புதிதாக மதம் மாறியவர்கள் எதையாவது முறையிடும்போது 'அட..மொறையப் பத்தி எல்லாம் பறையங்க கிட்டேப் பேசணுமோ?" என்று பெரியதனக்காரர்கள் சொல்லியும் இருக்கிறார்கள்.
இத்துடன் இன்னொரு செய்தியையும் சேர்த்தே சொல்லியாக வேண்டும். 'மனுசங்க' இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த இராசேந்திரன் என்ற இளந்துறவி இசுலாத்தைத் தழுவிய பின் கும்பகோணம் அருகிலுள்ள தன் கிராமத்தில் இசுலாமியத் தெருவிலேயே குடியிருக்கிறார். அங்குள்ள ஜமாத்திற்கு அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சாதியை வென்ற மதமாக இசுலாம் மட்டுமே உள்ளது.
கக்கூசு இல்லாத கலாச்சாரம் உள்ளவன் தமிழன்! இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது? என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் ஒருவர். (பெயர்?) அந்த நேரத்தில் அவர் கேள்விக்கு ஓங்கி கரவொலி எழுப்பியது நானும் தான். நேரம் போகப் போக இந்தக் கேள்வி பல்வேறு தளங்களுக்கு இட்டுச் சென்றது.
கக்கூசு கட்டிய பிறகுதானே அதைச் சுத்தம் செய்ய ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டான்? மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது? தமிழன் இந்த அடிமைத்தனத்தை மனிதச் சாதியில் ஏற்படுத்தவில்லை, தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில் இந்த இழிநிலை இருந்ததில்லை என்பதற்காக உண்மையில் பெருமைப்பட வேண்டும்!
தமிழர்கள் வாழ்விடங்கள் (இன்றைய அகதிகளான புலம்பெயர்வு அல்ல) பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. பேச்சு வழக்கில் இதை "வெளியில் போய்ட்டு வருவதாகவே இன்றும் சொல்வதைக் கேட்கலாம். வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.
தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம். ஐரோப்பா போன்ற குளிர்ப்பிரதேசங்களிலும், மத்திய ஆசியாவிலும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாகத் தான் அந்தச் சமூகங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
தலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி 'அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்' என்று கொஞ்சம் சூடாக கலந்துரையாடலில் சொன்னதும் 'நானும் தலித் தான்' என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது.
அசுரா சிந்துவெளி நாகரிகத்தைச் சுற்றி தன் கட்டுரையை நகர்த்திச் சென்றார். நான்கு வேதங்களும் பல நூறாண்டுகள் வாய்மொழியாக வந்து அதன் பிந்தான் எழுத்துரு பெற்றன சிந்து வெளி நாகரிகத்தை ஆய்ந்து அவர்கள் திராவிடர்கள் என்றும் அவர்களின் மொழி திராவிட மொழியான தமிழ் மொழியின் ஆதிவடிவம் என்பதையும் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளார்கள். குறிப்பாக டாக்டர் நா.மகாலிங்கம், முனைவர் மதிவாணன் போன்ற அகழ்வாய்வு அறிஞர்களின் கருத்துகளைச் சொல்லலாம்.
சிந்துவெளி நாகரிகத்தை ஒத்த தடயங்களும் முத்திரைகளும் எழுத்துருவங்களும் இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள் அல்லர், அவர்களில் பலர் காலம் காலமாய் இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை மிகவும் வலுவாக முன்வைக்கும் அகழ்வாய்வு கண்டுபிடிப்பு இது.
சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது குறித்து பல்வேறு வரலாற்று பார்வைகள் உண்டு. அசுராவின் கட்டுரை இவைகளுக்குள் புகவில்லை எனினும் ஓர் ஆய்வு மனப்பான்மையுடன் வித்தியாசமான பார்வையில் அமைந்திருந்தது.
சாதிகள் இடையில் வந்தவை தான், சாதிகளில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றால் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக் காப்பாற்றிக்கொண்டு வரும் சமுதாயத்தை எப்படி மாற்றப் போகிறோம்? என்ற கேள்விக்கு காலம் எழுதும் எல்லா பதில்களும் குறைபாடுகள் கொண்டதாகவே உள்ளன. அதுவும் இந்திய-இலங்கை மண்ணில் சாதியம், சாதி அடுக்குமானங்கள், சாதிகளுக்குள் நிலவும் உட்சாதிகள், எல்லா சாதிகளுக்கும் தன்தன் வக்கிரத்தைக் காட்ட அவனை விட கீழ்ப்படிநிலையில் ஒருவன் என்ற படிநிலை அமைப்பு- ஏன் தலித்துகளுக்குள்ளும் வாழும் தலித்துகள்.. நினைத்துப் பார்த்தால் இப்படியான ஒரு படிநிலை சமுதாய அமைப்பு முறை உலகில் வேறு எங்குமிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
டொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை? என்ற கேள்வி விசவரூபமெடுத்தது.
சிவகுருநாதன் சில சட்ட ஆலோசனைகளை முன்வைத்தார். அவர் வைத்த சட்ட ஆலோசனைகள் 99.9% இந்திய சட்டத்தில் வெறும் எழுத்துகளில் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மாநாட்டில் சொன்னேன். தலித் அரசியல் அதிகாரத்திற்கு பாபாசாகிப் அம்பேத்கர் வைத்த "இரட்டை வாக்குரிமை" என்ற தீர்வை சிவகுருநாதன் பெயருக்கு கூட குறிப்பிடவில்லை. அதுகுறித்து யாரும் கதைக்கவும் இல்லை.
இந்தியாவில் அயோத்திதாசர் பண்டிதரும், தந்தை பெரியாரும், பாபாசாகிப் அம்பேத்கரும் இந்திய விடுதலைக்கான அன்றைய தேசிய நீரோடையில் கலந்தவர்களில்லை. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தைப் பற்றி "இந்தியாவில் தீண்டாமைப் பரப்பும் இவர்கள் ஜோன்ஸ்பர்க்கில் நியாயம் தீர்க்கப் போகிறார்களா?" என்றும் "ஆறுகோடி மக்களையும் நாசம் செய்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மேலுக்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு பெரிய வேஷக் காங்கிரஸாகவே நடத்தி வருகிறார்கள்" என்று எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.
இந்திய விடுதலையை துக்க தினமாகவே அறிவித்தவர் தந்தை பெரியார்.
1947ல் இந்திய பெற்ற சுதந்திரத்தை "அதிகார மாற்றம்" என்றும் "பெறப்பட்ட ஒப்பீட்டளவு சுதந்திரம் ஆதிக்க சாதியினருக்கானதே" என்றும் சொன்னவர் பாபாசாகிப் அம்பேத்கர்.
இவர்களை இந்திய தேசியவாதிகள் "தேசத்துரோகிகள்" என்றே வசை பாடினார்கள். எனினும் அயோத்திதாசப் பண்டிதர் தீண்டப்படாத மக்களை தென்னாட்டின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் என்று நிறுவினார்- சாதி பேதமற்ற திராவிடர்கள் (non-caste dravidians) என்றழைத்தார். 'தமிழன்" என்று தன் இதழுக்கு பெயர் வைத்து தன்னைத் தமிழன் என்ற அடையாளத்துடனேயே முன்னிறுத்தினார்.
திராவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை பெரியார் தன் இறுதி நாட்களில் "தமிழ் தேசியம்" பேசினார். இந்திய விடுதலையை எல்லா தளங்களிலும் விமர்சித்த பாபாசாகிப் அம்பேத்கர்தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதினார்.
தலித் மாநாட்டில் கலகக்குரலை முன்வைத்தவர்கள் இந்த வரலாறுகளையும் புரட்டிப் பார்க்க வேண்டும். தரவுகள், களப்பணி, குழு மனப்பான்மையை விட்டொழித்தல், தலித் அரசியலை வென்றெடுக்க தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளல்... என்று ஒரு நீண்ட பயணத்திற்கு இந்த மாநாடு குளிர்ப்பிரதேசத்தில் ஓர் அக்னிக்குஞ்சாய் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது.
அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
-
நேர்காணல்
நேர்காணல்
வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி
(http://www.vaarppu.com/interview.php?ivw_id=3)
செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்)
கடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு என்பவற்றில் கலந்து கொண்டீர்கள். இச் சந்திப்புக்கள் உங்களுக்கு புது அனுபவங்களைத் தந்திருக்கிறதா?
நிச்சயமாக. இதுவரை நான் எட்டிப் பார்க்காத பல வாசல்கள் திறந்தன. அதனுள் பயணிக்கும்போது உண்மைகளை ஏற்றுக்கொள்வதும் அதை உணர்த்துவதும் எவ்வளவு கடினமானது என்பதை முதல் முறையாக அனுபவித்தேன். எங்கள் ஊடகங்களும் தலைவர்களும் எனக்குள் கம்பீரமாக கட்டி எழுப்பியிருந்த கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிதறிய போது உண்மையிலேயே நானும் உடைந்து போனேன் மௌனமாக?
பெண்கள் சந்திப்பின் ஆக்கபூர்வமான தன்மைகளாக எவற்றை அடையாளம் கண்டீர்கள்?
எதிர்மறையான கருத்துள்ளவர்களையும் அழைத்து தங்கள் சந்திப்பில் பேசவைத்து அவர்கள் கருத்துகளுக்கும் செவிசாய்க்கும் பண்பு,- எந்த அரசியல் பின்புலமோ பணபலமோ இன்றி பெண்கள் தங்கள் கூட்டு முயற்சியால் தாங்களே முன்னின்று 17 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தியிருக்கும் 26 சந்திப்புகள்,- பெண்களின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் ஆக்கப்பூர்வமான செயல்,- எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் இருத்தலை நிச்சயப்படுத்திக் கொள்வதின் ஊடாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சி.
இச் சந்திப்பின் பின்னரான உங்கள் உணர்வுநிலை எவ்வாறு இருந்தது?
அலைகளில்லாத ஆழ்கடல் போல அமைதியாக இருந்தேன். பேசப்பட்ட பல்வேறு செய்திகளை மனம் அசைப்போட்டது. தமிழ்நாட்டில் ஏன் இது போன்றதொரு சந்திப்புக்கான வாய்ப்புகளில்லை என்று யோசிக்கவைத்தது. இவர்களை எல்லாம் அழைத்துவந்து அவர்களின் ஆதித்தாய் மண்ணில் -( தமிழ்நாட்டில்) ஒரு சந்திப்பு நடத்தினால் என்ன என்று கனவு கண்டேன். அந்தக் கனவே ரொம்பவும் இனிமையானதாக இருந்தது.
தலித் மாநாட்டு நிகழ்ச்சி உங்கள் எதிர்பார்ப்போடு பொருந்திப் போனதா அல்லது மாறுபாடாக இருந்ததா?
இந்தக் கேள்விக்கு என் பதில் 'இரண்டும் தான்.' சிலவற்றில் பொருந்திப்போனதையும் சிலவற்றில் மாறுபாடாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
எதில் பொருந்திப்போனது? எதில் மாறுபாடாக இருந்தது?
ம்ம்ம்.. தேசியநீரோடையில் கலக்காமல் இந்திய மண்ணில் பாபாசாகிப் அம்பேத்கர், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், இவர்களுக்கு முன்னோடியாக பாதை அமைத்த அயோத்திதா சப்பண்டிதர், மகாத்மாபுலே இவர்கள் அனைவரும் சமூக விடுதலையை முன்னிறுத்திப் போராடினார்கள். அம்மாதிரியான ஒரு போராட்டக்குரலை -கலகக்குரலை- எழுப்பும் கட்டாயத்தில் காலம் இவர்களைத் தள்ளி இருக்கிறது என்று எண்ணினேன். அதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது.
எதில் மாறுபாடாக இருந்தது என்றால் இந்த மாநாட்டில் தரவுகளை வைப்பதற்கான களப்பணியோ, ஆய்வுகளோ செய்யப்படவில்லை. கலகக்குரலாக மட்டுமே இருந்ததே தவிர எதிர்காலத் திட்டங்கள், தீர்மானங்கள் பற்றிய தெளிவில்லை. தலித் அரசியல் பற்றிய பார்வையை முன்வைக்கவில்லை. இந்த மாநாடு குறித்த என் கருத்துகளைத் தனிக்கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.
இலங்கையின் சாதியமைப்பு முறை பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது ஏற்கனவே அறியப்பட்டவைகளாக அவை இருந்ததா?
நான் அறிந்தது சொற்பம். இந்த மாநாடு இன்னும் நான் அறிந்து கொள்ள வேண்டியவைகளைக் கோடிட்டுக்காட்டியது மட்டுமல்ல தமிழகத்தின் ஊடகங்கள் சொல்லாத பலச்செய்திகளை நோக்கி என்னைச் சிந்திக்க வைத்தது.
தமிழ்த் தேசியம், தலித்தியம் இடையிலான முரண்களில் இந்த மாநாடு தெளிவான பார்வையொன்றைத் தந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
தரவில்லை. அதற்கான கேள்வியை நான் மாநாட்டிலேயே வைத்தேன். இந்த மாநாடு தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான இருத்தலைப் பற்றியும் தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான சமவாய்ப்புகள் குறித்தும் குரல் எழுப்பி இருக்கிறதா அல்லது தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவே- குரல் எழுப்பி இருக்கிறதா.. இந்தக் கேள்வியுடனேயே நான் இந்தியா திரும்புவதாக அவர்களிடன் சொன்னேன். அதையே தான் உங்களிடமும் சொல்கிறேன்.
இம் மாநாட்டில் வைக்கப்பட்ட உங்கள் கருத்துக்கள் கவனிப்புப் பெற்றதாக அறிந்தோம். அதுபற்றி சொல்லமுடியுமா?
கவனிப்பு பெற்றிருந்தால் மகிழ்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட 30 நிமிடங்களில்.. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கும் தலித்துகளின் பக்கங்களைச் சொன்னேன், வரலாறு எப்போதும் வெற்றிபெற்ற வேடர்களின் பார்வையிலேயே எழுதப்படுவதைச் சுட்டிக்காட்டினேன். ஆதித்தமிழர்கள் நாம் தான், எவ்வாறு நாம் சேரிகளில் தள்ளப்பட்டோம் என்பதையும் குறிப்பிட்டேன். எல்லா மதங்களும் சாதிக்காப்பாற்றும் மதங்கள் தான். சட்டத்த்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது எங்களுக்கான சமத்துவ உரிமைகள். இந்திய அரசு சாதிக்காப்பாற்றும் அரசுதான். என்று தரவுகளுடன் சொல்லி, இறுதியாக தலித்துகளுக்கிடையில் இருக்கும் உட்சாதிப்பூசல்களை ஒழிக்க வேண்டும். தலித் விடுதலையில் முதல் படி இதுதான் என்பதை வலியுறுத்தினேன். நான் இறுதியாகச் சொன்ன தலித்துகளுக்கிடையில் நிலவும் உட்சாதிப்பூசல்கள் குறித்த கருத்தை எந்தளவுக்கும் இந்த மாநாட்டினர் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது இன்றுவரை சந்தேகம்தான்.
.இது உங்கள் முதலாவது வெளிநாட்டுப் பயணம், மற்றும் வெளிநாட்டில் பங்கேற்கும் சந்திப்புகள் என்ற வகையில் உங்களுக்கு திருப்திதந்த விடயங்கள், திருப்திதராத விடயங்கள் என்றுஎவற்றைச் சொல்கிறீர்கள்?
நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்தால்தானே ஏமாற்றங்கள் இருக்கும்! எனவே திருப்திதராதது என்று சொல்வதற்கு எதுவுமில்லை. நான் ரொம்பவும் சாதாரணமானவள். ஈழப்போராட்ட வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் புஷ்பராணி அக்காவைச் சந்தித்தது, மகிழ்ச்சி. அதைப் போலவே மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மட்டுமே அறிந்திருந்த உறவுகளை நேரில் சந்தித்ததும் அவர்களுடன் ஒருத்தியாக ரொம்பவும் இயல்பாக என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் என் வாழ்வின் இனிய நினைவுகள்.
இன்றைய குடும்ப அமைப்பிலிருந்து இயல்பாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் சமூக கட்டுமானங்களால் மிகக் குறைவு எனக் கூறப்படுகின்றதே இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
பெண்கள் சந்திப்பில் முதல் நாள் நான் 'உறவுச்சிக்கல்கள்' என்ற தலைப்பில் வாசித்தக் கட்டுரையின் மையப்புள்ளி இதுதான். இல்லாள், மனைமாட்சி, தாய்மை என்ற கருத்துருவாக்கங்களின் மூலம் சமூகக்கட்டுமானங்கள் குடும்பத்தின் சுமையை பெண்ணின் தோள்களில் ஏற்றி சவாரி செய்கின்றன. சமூக வெளியில் ஓர் ஆணைப்போல இயல்பாக கரைந்து செயல்படுவது என்பது இன்றும் பெண்ணுக்கு எட்டாதக் கனிதான். இன்றைய பெண் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமையில் ஆணுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்ந்தவள். எனவே பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கிறாள். அந்த எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படும்போது குடும்பம் என்ற அமைப்பையே ஒரு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நிலமைக்குத் தள்ளப்படுகிறாள்.
பெண்ணியம், பெண்மொழி உருவாக்கம் பற்றி பேசுகின்ற போதிலும் பெண் தனது உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துக்களில் பிரயோகிப்பதை பலர் எதிர்த்து வரும் நிலையில் நீங்கள் ஒரு கவிஞர் என்ற ரீதியில் இவ்எதிர்ப்புக்களை, இப்பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்.?
மொழியும் மொழிவழி நம் சிந்தனைகளும் ஆணின் பார்வையிலேயே காலம் காலமாய் இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெண்ணின் உடல்மொழியை ஓர் ஆண் எழுதுவது என்பதற்கும் பெண் எழுதுவது என்பதற்கும் அடிப்படையில் இருக்கும் வித்தியாசங்களை பெண்கள் எழுதவந்தப் போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.
கவிஞர் அ.வெண்ணிலா
பேற்றின் வலியோடு
அலறும் குரலில்
இணைந்தே ஒலிக்கிறது
என் நிர்வாணத்திற்கான
அழுகையும்
என்று எழுதும்வரை பிரசவத்தைப் பற்றி என்ன எழுதிக்கொண்டிருந்தார்கள்? பிரசவ வலியின் அழுகையின் ஊடாக பெண் அனுபவிக்கும் இந்த வலியை ஓர் ஆணால் உணரவும் முடியாது, எழுதவும் முடியாது! தன்னை ஆணிலிருந்து வேறுபடுத்தும் தன் உடல் உறுப்புகள் தன்னை அவன் அடிமையாக்கும் அடையாளங்கள் அல்ல என்ற எண்ணம் வந்தப் போது பெண் தன் உடல் உறுப்புகளை நேசிக்கவும் பாராட்டவும் பெருமை கொள்ளவும் துணிந்தாள். அந்த வகையில் தான் பெண் தனது உடலுறுப்புகளைப் பற்றி எழுதிய போது ஓர் அதிர்வலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்று வெளிவர இடம் கிடைத்தால் மிகவும் வேகத்துடன் வருவது போலவே பெண்ணின் உடல்மொழி கவிதைகளின் வேகம் இருந்ததாக நினைக்கிறேன். இந்த அதிர்வலைகளை மட்டுமே நம்பி அதற்காகவே பெண் தன் உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துகளில் கையாளும் விளம்பரத்தனங்கள் வந்த போது தான் நெருடலாக இருந்தது. தன்னுடல்சார்ந்த உணர்வுகளைத் தாண்டி, பெண்ணின் உடல் சமூகத்தில் எல்லா தளங்களிலும் கீழ்த்தரமாக ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் கருவியாக்கியிருப்பதை பெண்களின் உடல்மொழி கவிதைகள் ஏன் கண்டுகொள்ளவதில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
உங்கள் ஹேராம், நிழல்களைத் தேடி கவிதைத்தொகுதிகள் இலக்கியத்தளத்தில் எப்படியான கவனிப்பையும் விமர்சனங்களையும் பெற்றது?
ஹேராம் கவிதைகள் என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. என் இலக்கிய வட்டத்தை விசாலமாக்கியது. அரசியல் தளத்தில் சில கேள்விகளை எழுப்பி ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது உண்மை. அயோத்தி பாபர்மசூதி இடிப்பு, அதன் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள், மதக்கலவரங்கள் ... இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவனின் கேள்விகள். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாதிப்புகளில் ஏற்பட்ட வலியின் அலறல். அத்துடன்,
ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதி திராவிடன் உயர்ந்தவனா?'
என்று திராவிட இயக்கங்களை நோக்கி அந்தக் குடும்பப்பின்னணியில் வந்த அதன் இரண்டாம் தலைமுறை வைக்கும் கேள்வி.. இப்படியாக நிறைய உண்டு. நிறைய விமர்சனங்களும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தன. அமீரக நண்பர்கள் கவிஞர் அறிவுமதியை அழைத்து அமீரகத்தில் (துபாய்) ஹேராம் நூலை வெளியிட்டு அறிமுகம் செய்தார்கள
நிழல்களைத் தேடி கவிதைநூலுக்கு 2006 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசு கிடைத்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நிழல்களைத் தேடி கவிதைகளை ஆய்வு செய்தார்கள். ஆனாலும் ஆய்வுகளும் சரி விமர்சனங்களும் சரி, நிழல்களைத் தேடி என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் 11 கவிதைகளுக்குள் புகவில்லை என்பது என்னை வருத்தப்பட வைத்த விசயம்தான்.
பெண் அரசியல், பெண்மறுப்பு அரசியல் பற்றி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
உடற்கூறும் அதனால் விளையும் உளவியல் சிக்கல்களும் அரசியல், சமூகத் தளத்தில் பெண்ணை இரண்டாம் நிலைக்கு (subordinate) இட்டுச் செல்வதாகவும் இயற்கையிலேயே அதிகாரத்தை (power) வென்றெடுக்கும் உடல்வலியும் மனவலியும் ஆணுக்கே இருப்பதாகவும் சொல்லப்படும் கருத்துகள் பெண் மறுப்பு அரசியலை முன்வைக்கின்றன, இன்னும் சிலர் ஆள்பலம், அடிதடி, குத்து, கொலை, ஏமாற்று என்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடப்பியல் சூழலில் ஆணின் துணையின்றி பெண் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் சொல்வதை முற்றும் புறக்கணிக்கும் நிலை வரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி அம்மையாரைப் பற்றிச் சொல்லும்போது 'அவர் ஒருவர்தான் காங்கிரசில் ஆண்' என்று சொன்னதை நினைவுப் படுத்த விரும்புகிறேன். ஏனெனில் அரசியல் அதிகாரம் பெண்ணிடம் வரும்போது அதையும் 'ஆணாக' பார்க்கும் பார்வையே நம்மிடம் இருக்கிறது! ஒவ்வொரு பெண்ணின் அரசியல் நுழைவும் கூட இங்கே அரசியல் தலைவரின் மகளாக, விதவை மனைவியாக, உடன்பிறந்தவளாக..ஆணின் பினாமி பெயரில் ரப்பர் ஸ்டாம்பாக ... இருக்கும்வரை பெண் அரசியலைப் பெண்கள் அடையாளம் காண வெகுதூரம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.
பெண்களைப்பற்றிய கருத்தாக்கங்கள் மாறும்போது குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்ற வாதம் பிழையானது என்று கருத்து வைக்கப்படுகிறது இது பற்றி உங்கள் கருத்துக்கள் எவை?
உங்கள் கேள்வியில் இருக்கும் 'குடும்பம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது' என்ற சொற்றொடரில் இருக்கும் 'பாதுகாப்பு 'என்ற சொல்லே மரபியல் சார்ந்த கருத்து தான். பாதுகாப்பு என்பதே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஒரு தந்திரமான பாதுகாப்பு வளையம்தான் பாதுகாப்பு என்ற சொல்லின் கருத்துருவாக்கத்தைப் பெண்கள் உடைத்து வெளிவர வேண்டும். யாருக்கும் யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. .துணை என்பதும் சேர்ந்து வாழ்வது என்பதும் குடும்ப உறவுகள் என்பதும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் சிலுவையில் அறையப்படக் கூடாது. பெண் கல்வி, அதனால் கிடைக்கும் பொருளாதர பலம், பணிநிமித்தம் தனித்து வாழும் சூழல் இவை எல்லாம் 'குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது' என்ற கருத்துருவாக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படும் ஒரு கருவியாக பெண்ணின் பாலியல் தன்மை கருதப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது என்ற கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
நிச்சயமாக. எங்கெல்லாம் தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறதோ அதற்கான பின்னணியைப் பாருங்கள். உதாரணமாக ஒரு தலித் ஆண் ஆதிக்கச்சாதியை எதிர்த்தால் அவனை அடக்கவும் ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் செய்யும் செயல் அந்த தலித் ஆணின் தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவனுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்வது.இந்தமாதிரியான பாலியல் பலாத்காரம் ஆணின் காமயிச்சையையோ , தனிமனித விகாரத்தையோ காட்டும் செயலாகவோ இருப்பதில்லை. முழுக்க முழுக்க ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பெண்ணின் பாலியல் தன்மையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது .ஆணாதிக்க சமூகத்தில் போர் முடிந்து எதிரி நாட்டின் பெண்களைச் சிறைப்பிடித்து வந்ததாக சொல்லப்படும் வரலாற்றிலிருந்து இதை நாம் பார்க்கலாம். சாதி மேலாதிக்கத்தில் மிகவும் தீவிரமாக இக்கருத்தியல் செயல்படுகின்றது.
அண்மையில் வெளிவந்த ஈழத்து பெண்கவிஞர்களின் தொகுப்பான பெயல்மணக்கும் பொழுது என்ற கவிதைத்தொகுப்புப் பற்றி -நீங்கள் ஒரு கவிஞர் எழுத்தாளர், என்ற வகையிலும் பெண்கள் சந்திப்பில் அந்நூலை விமர்சனம் செய்தவர் என்ற வகையிலும்- நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
பெண்கள் சந்திப்பில் கவிதைகளுக்கான என் விமர்சனத்தை வைத்தேன். அதுதவிர இத்தொகுப்பு குறித்து சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. பெண்களின் கவிதைகளைத் தொகுக்கும் இந்த முயற்சியில் பெண்கள் பெயரில் எழுதும் சில ஆண்களின் கவிதைகளும் தவறுதலாக இடம் பெற்றுவிட்டன. யுத்த பூமியில் தனக்கான நாளைய விடியல் நிச்சயமில்லாத பொழுதில் ஆண்கள் பெண்கள் பெயரில் எழுதுவதும், ஒருவரே பல பெயர்களில் எழுதுவதும் தவிர்க்க முடியாதது என்றே நான் நினைக்கிறேன். இம்மாதிரியான தொகுப்பு நூல்களில் கவிஞர்களைப் பற்றிய பின்னூட்டங்கள் கட்டாயம் தேவை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சஞ்சிகைகளில் வந்த கவிதைகளை இவர்கள் அப்படியே எடுத்து போட்டுக்கொண்டுவிட்டார்கள் என்பது மாதிரியான தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்த்திருக்க முடியும். அதேநேரத்தில் என்னவோ இத்தொகுப்பை வெளியிட்டு இதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ இதன் மூலம் தான் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓர் அவசியம் நிச்சயமாக இந்நூலைத் தொகுத்த அ.மங்கை அவர்களுக்கு இல்லை என்பதையும் இம்மாதிரியான விமர்சனங்களை வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, நான்கு சுவர்கள், கூரை, வீடு என்று வாழும் பெண் ஒரு நிமிடத்தில் அனைத்தும் இழப்பதும் அகதி முகாம்களில் வாழ்வதும் மிகவும் கொடுமை. அதிலும் ஒரு பெண் அதில் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். எனினும் இக்கருப்பொருளில் ஓரு கவிதை கூட இத்தொகுப்பில் இல்லை. பெண்கள் இதைப் பற்றிய கவிதைகள் எழுதவே இல்லையா என்ற கேள்வி இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் தன்னிச்சையாக எழுகிறது.
பெண், ஆண்களால் எழுதப்படும் பெண்ணிய எழுத்துக்களை வைத்து பெண்களால் மட்டும் எழுதப்படும் பெண் எழுத்துக்களின் தேவையை நிராகரிப்பது பற்றிய உங்கள் பர்ர்வை என்ன?
பெண்ணிய எழுத்துகளை பெண் எழுதுவதற்கும் ஆண் எழுதுவதற்கும் நிச்சயமாக வேறுபாடுகள் உண்டு. கவிஞை அ.வெண்ணிலாவின் கவிதையை உதாரணம் காட்டி நான் ஏற்கனவே சொல்லியிருப்பது இதைதான். இதைச் சொல்லும் போது பெண்ணிய எழுத்துகளை ஆண் எழுதினால் அது நிராகரிக்கப்படவேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. பெண் எழுத்துகளின் தேவையை எந்த தளத்திலும் ஏற்கனவே எழுதப்பட்ட எந்த அளவுகோலை வைத்துக்கொண்டும் இனி எவராலும் நிராகரிக்க முடியாது. யாருடைய எழுத்தையும் யாரும் நிராகரிக்கவும் முடியாது தானே!. எழுத்துகளின் இருத்தலை நிச்சயப்படுத்துவது காலம் மட்டுமதான.
கவிதைகளுக்கான வார்ப்பு மின்னிதழ் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
'எனக்குத் தொழில் கவிதை' என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. கவிதையும் கவிதை சார்ந்தும் மட்டுமே இயங்குதல் என்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலையும் கம்பீரத்தையும் பாராட்டுகிறேன். வளரும் கவிஞர்களைத் தாலாட்டியும் வளர்ந்த கவிஞர்களைச் சீராட்டியும் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிக்கும் வார்ப்பு பலர் கவிதைகளுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்ததன் மூலம் தன் முகவரியை கவிதை உலகில் நிச்சயிப்படுத்திவிட்டது. வார்ப்பு ஆசிரியர் குழுவுக்கு என் வாழ்த்துகளும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Saturday, November 3, 2007
இது அறிவுரை அல்ல
இது அறிவுரை அல்ல
---------------------
என் அனுபவத்தை எழுதச் சொல்லுகிறீர்கள்?
எழுதுவேன்.
இப்போதல்ல.
எப்போதாவது.
என் கதைகளில்
என் கவிதைவரிகளில்
பட்டுத் தெறிக்கும் மின்னலாய்
கட்டாயம் எழுதுவேன்.
நான் வந்தது ஒரு சுற்றுலாவுக்காக என்றால்
பார்த்து பிரமித்த காட்சிகளை
அப்படியே என் டிஜிட்டல் காமிராவுக்குள்
சிறைப்பிடித்து
என் வார்த்தை ஜோடனைகளால்
அலங்கரித்து
எழுதி எழுதி
பயணக்கட்டுரைகளில்
ஒரு புதிய அத்தியாயங்களைப்
படைத்திருப்பேன்,
நானோ வந்தது அதற்காக அல்லவே.
உங்களில் புதைந்து கிடக்கும்
என் அடையாளங்களைத் தேடி..
குளிர்ப்பிரதேசத்தில்
அக்னிக்குஞ்சுகளாய்
வலம் வரும் உங்கள்
இரஸாயண வித்தையை
அப்படியே எடுத்துவந்து
இந்த அரபிக்கடலை
அதிசயிக்கவைக்கும்
பேராசையுடன் ...
பறந்துவந்தேன்.
எப்படி நடந்தது நிகழ்ச்சி?
என்னிடமே கேட்கிறீகள்!
என்ன சொல்லட்டும் ..
சிறப்பு விருந்தினரை
அழைத்து வந்து
அவர் பேசப் பேச
கைதட்டி கைதட்டி
ஒரு கைதட்டும் கூட்டத்தை
உருவாக்கி இருக்கும்
எங்கள் கூட்டங்கள் போலில்லை
என்று சொல்லட்டுமா?
ஒலிவாங்கி நோய்வந்து
அவதிப்படும்
லோக்கல் தலைகளின்
வரவேற்புரை,
தொடக்கவுரை
அவர்களே ..இவர்களே..
எதுவுமே இல்லாமல்
யதார்த்தமாக இருந்தது
என்பதைச் சொல்லட்டுமா?
எதைச் சொல்லட்டும்?
தன் ஆதித்தாயின் மொழியை
கங்காருவைப் போல
தன்னில்
தன் கவிதைகளில்
சுமந்து திரியும் ஆழியாள்
கண்ணிவெடிகளைத் தாண்டி
களமிறங்கி
கண்ணீர்த்துடைக்கும் சாந்தி
பிஞ்சுக்கரங்கள் சுமக்கும்
பீரங்கி வெடி குண்டுகள்
தற்கொலைக்காரிகள்
இத்தியாதி ..
பட்டியலோடு வந்து
ஆயுதம் தாங்கிய
அணங்குகளின்
எதிர்காலத்திற்காய்
ஓங்கிக்குரல் கொடுத்த
லண்டன் ராஜி அக்கா
பாலியல் உறவும்
மரபணு விதையும்
வாழ்வியல் கதையில்
நடத்தும் வித்தைகளை
அறிவியல் பார்வையில்
அவைக்கு கொடுத்த
ஆற்றல்மிகு நிர்மலா..
பெரியாரைத் தெரியுமா என்று
அறியாமல் கேட்டு
அகப்பட்டுக்கொண்ட தமிழச்சி
காலையில் 'மை" எடுத்து
மாலையில் வரைந்துவிட்ட தர்மினி
ஈழத்தேசத்து
எங்கள் தமிழ்மண்ணில்
பெண்ணிய உரிமைகளை
வென்றெடுக்கும் தளம் அமைக்க
இப்போதே தயாராகும் விஜி..
பெண்கள் சந்திப்பா..?
என்ன சாதித்தார்கள்?
எவர் பணத்தில்
இவர்களின் பயணம்?
இவர்கள் என்ன போராளிகளா?
இயக்கங்களைக் குறைச்சொல்லும்
இவர்களை
இயக்குவது யார்?
அடுக்கடுக்காக ஆயிரம் குற்றச்சாட்டுகள்..
அத்தனைக்கும் ஆணித்தரமான பதில்களுடன்
பெண்கள் சந்திப்பின் தொடக்கமும் வளர்ச்சியும்
விரித்துச் சொன்ன றஞ்சியின்
மவுனத்தில் மறைந்து கிடந்தது
யுத்தங்கள் இல்லாத தேசம் கேட்கும்
ஓர் அன்னையின் குரல்...!
எப்போதும்
எல்லோரிடமும்
ஏதாவது கேள்விகளுடன்
எழுந்து நின்ற புன்னகை ஜெயா
ஜெர்மனியில் தமிழ்ப்பள்ளி
ஆரவாரமில்லாமல்
காரியங்கள் செய்யும்
இரட்டையர்
வன்கொடுமை வழக்குகளைச்
சந்திக்கும் அனுபவத்தில்
சந்திப்பில்
கிடைத்த நேரத்தில்
தேவா கொடுத்தது குறைவுதான்
ஆனால்
அவரோடு தனியாக
நான் கதைத்து கதைத்து
எடுத்தது அதிகம்.
வல்லரசுகள் எல்லாம்
நல்லரசுகளா?
குறும்படமாய்
இசையுடன் கொடுத்த
இளந்தளிர் ஆரதி
நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக
கூஃபி நடனமாடிக்காட்டிய
நடனமங்கை
ஸ்ரீஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
(அட.. நம்ம ராஜி அக்கா தான்)
சில எரிமலைகள்
மோதிக்கொண்ட
காட்சிகளுக்கும் கருத்துகளுக்கும்
சாட்சியாய் நான்..
என் படைப்புகளை
விமர்சிக்கும் நேரத்தில்
கவிஞர்களுக்குத் தண்டனையாக
அவர்கள் எழுதிய கவிதைகளை
வாசிக்கும்
அற்புதமான ஆங்கிலப்படத்தை
நினைவூட்டி
பயமுறுத்திக் கொண்டேயிருந்த
நிமிடங்கள்...
இதில் எதை எழுதட்டும்?
எழுதமுடியாதவை இன்னும் எத்தனையோ
அதை எல்லாம்
எழுதும் நாள் வரும்.
உங்களைப் போலவே நானும்
காத்திருக்கிறேன்.
கண்ணில் கனவுகளுடனும்
மண்ணில் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும்
நம்பிக்கைகளுடனும்.
மும்பையிலிருந்து
உங்கள் அன்பு,
புதியமாதவி.
வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்
வியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள்
--------------------------------
இன் இனிய உறவுகளே
முகவரி மட்டுமே அறிந்த
உங்கள் முகங்களை
குளிரூட்டும் அந்த இரவில்
சந்தித்த அந்த நிமிடங்கள்
மிகவும் இனிமையானவை.
கோடைமழையைப் போல
என்னைக் குளிர்வித்த
தருணங்களை
பனிப்பிரதேசத்தில்
நெருப்பு அடுப்புகளில்
குளிர்க்காயும்
உங்களிடம்
எப்படி புரியவைப்பேன்.?
உங்களைச் சந்தித்த நிமிடங்கள்
காதலின் இனிமையை, தழுவலை
இரண்டாம் நிலைக்கு
தள்ளிவிட்ட அற்புதத்தை
என்னவென்று சொல்லட்டும்?
*
வெட்ப பிரதேசத்தின்
வியர்வைகளை விடக் கொடியது
குளிரில்
கம்பளிப்பூச்சிகளுடன்
குடும்பம் நடத்துவது.
எப்போதும்
எதற்குள்ளாவது
நம்மை, நம் உடலை
போர்த்திக்கொண்டு
திரியும் அவலம்
நிரிவாணத்தைவிடக் கொடியது.
உங்கள் புன்னகைகளை மட்டுமல்ல
உங்கள் புன்னகைக்குள்
மறைந்து கிடந்த
உறைந்த பனிக்கட்டிகளையும்
அப்படியே சுமந்து
கொண்டு வந்திருக்கிறேன்
என் வியர்வைத் துளிகளில்.
*
என் தொட்டிச்செடிகளைப்
பார்க்கும் போதெல்லாம்
உங்கள் மழலைகளின் முகங்கள்.
அதனால்தான்
இப்போதெல்லாம்
செடிகளின் இலைகள்
பழுத்து உதிர்ந்துவிட்டால் கூட
பதறுகிறது நெஞ்சம்.
பார்த்து பார்த்து
வளர்க்கிறேன்.
நாளைப் பூக்கும்
பூங்கொத்துகள்
நான் அவர்களுக்கு
அனுப்பும் வெறும் மலர்க்கொத்துகள்
மட்டுமல்ல.
ஆல்ப்ஸ் மலையின்
பனிக்கட்டியில்
நீர்த்துப் போகாமல்
நெருப்பு மலர்களாய்
நீங்கள் வாழ்ந்ததின் சாட்சியாய்
தலைமறைத் தலைமுறையாய்
அனுப்பிக்கொண்டிருப்பேன்.
என் தொட்டிச்செடிகளின்
வேர்களில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
நமக்கான நம் மண்ணின்
அடையாளம் இருக்கும்வரை.
*
எழுத்தும்
எழுத்து சார்ந்த என் கலகக்குரலும்
என்ன சாதித்துவிட்டது?
என்னைப் புரிந்து கொள்ளாத
மனிதர்களுக்கு நடுவில்
காயங்களுடனேயே
சுமந்து கொண்டு திரிகிறேன்
எனக்கான என் எழுத்துகளை.
மயில்களே இல்லாத
மலைவாசத்தளத்தில்
எங்கிருந்து சேர்த்துவைத்திருக்கிறீர்கள்
என்னையும் என் எழுத்துகளையும்
நேசிக்கும்
உங்கள் மயிலிறகுகளை?
-----------------------------
26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்
26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்
உங்களுக்கான பதில்களும்.
----------------------------------------------------
பெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது?
> ஓர் இனிய அனுபவம்.
மறக்க முடியாத நிகழ்வு.
நிகழ்வின் சிறப்பம்சம்?
> ஜோடனைகள் விலக்கிய கருத்துச் செறிவுள்ள
அவர்கள் பேச்சுகள்
நிகழ்வில் ரசித்தது ?
> ராஜி அக்காவின் கூஃபி நடனம்தான்!
தவிர்த்திருக்க வேண்டியது?
>என்னைச் சிறப்பிப்பதாக நினைத்து
அரைகுறையாக அவர்கள் வாசித்த என் படைப்புகள் குறித்த அறிமுக உரைகள்தான்! (விமர்சனங்கள்..!!??).
நேரமின்மையைக் கருத்தில் கொண்டு நீக்கியிருந்தால்
நிச்சயமாக வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என்பதை
அவர்கள் உணரவில்லையே என்பதுதான் என் வருத்தம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு?
>விஜி & றஞ்சிக்கு என் வாழ்த்துகள். எனினும்
> இன்னும் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் செயல்பட்டிருக்க
முடியும்.
சரியான திட்டமிடலும் நேரம் ஒதுக்குவதும்
வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதும் நிகழ்வை
இன்னும் சிறப்பாக்கும். குறிப்பாக இளந்தளிர் ஆரதி மிகவும் சிரத்தையுடன் தயாரித்து கொண்டுவந்திருந்த
அமெரிக்கா ஆவணப்படத்தை கூட்டம் களைந்த பிறகு
திரையிட்டது போன்ற தவறுகளைத் தவிர்த்திருக்கலாம்.
உங்கள் கட்டுரைகள், பேச்சு எப்படி இருந்தது?
> இந்தக் கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்..!
எனக்கு கொடுக்கப்பட்ட காலவரையறை மீறாமல்
எதைச் சொல்லவேண்டுமோ அதை மட்டும்
சொன்ன நிறைவு எனக்கிருக்கிறது.
நிகழ்வில் உங்களை மகிழ்வித்தது/கவுரவித்தது?
> நிச்சயமாக கைதட்டல்கள் அல்ல. ஊடறு வெளியிட்டிருக்கும் " இசை பிழியப்பட்ட வீணை" மலையக பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு நூலை
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆழியாள் வெளியிட
நான் முதல் நூலைப் பெற்றதுதான்.
நிகழ்வில் "இதைத் தவிர்த்திருக்கலாம்" என்று எதை
நினைக்கிறீர்கள்?
தனிப்பட்ட முற்போக்கு கருத்து கொண்டவராக தன்னைக்
காட்டிக்கொண்டிருக்கும் பாரிஸில் வாழும் ஓர் எழுத்தாளர்
தன் இளம் மனைவியை விலக்கி வைத்திருப்பதும்
அதற்கான காரணங்களும் அதிக நேரம் பேசு பொருளானதைத் தவிர்த்திருக்கலாம்.
அவர் செயலுக்குப் பெண்கள் சந்திப்பு கண்டனம் தெரிவிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அடுத்த நிகழ்விற்கு சென்றிருக்க வேண்டும்.
அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
26-வது சந்திப்பு இந்நிகழ்வு. நீங்கள் இருப்பதோ
ஐ.நா.வுக்கு மிகவும் அருகில். எந்த இயக்கமும் அரசியலும்
சாராமல் உங்கள் கருத்துகளை முன்வைக்கும் பட்சத்தில்
உங்கள் தீர்மானங்களை அம்னெஸ்டிக் அமைப்பு,
ஐ.நா.சபையின் மனித வள மேம்பாட்டு அமைப்புகளுக்கு
அனுப்பவதற்கு ஆவண செய்யுங்கள். மொழிப்பிரச்சனையும் இல்லை என்பதால் உங்களால் இதை செய்ய முடியும்.
வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
இந்த அமைப்பிலிருந்த தற்போது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத வேறு சில பெண்களும் என்னைச்
சந்தித்தார்கள்.
ஒருவர் முன் நின்று நிகழ்வை நடத்துவதால் எந்த அமைப்பும் அந்த தனிப்பட்ட நபரின்
அமைப்பாகிவிட முடியாது. தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகளை விலக்கி எல்லோரும் கலந்து
கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் விடுக்கிறேன்.
கருத்து வேற்பாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
பல இலட்சம் நம் உறவுகளை விதைத்த யுத்தபூமியின்
ரத்தக்கறைகளைக் கூட அமைதிப் பேச்சு வார்த்தைகளில்
தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் காலத்தில்
தனிப்பட்ட நம் விருப்பு வெறுப்புகளைப் பேசித் தீர்த்துக்
கொள்ள முடியாதா?
பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நிகழ்வின்
உயிர்நாடி அவர்கள் தான்.
--------------------------------------
Saturday, October 6, 2007
எங்கள் தேசப்பிதாவே
எங்கள் தேசப்பிதாவே
-------------------------
எங்கள் தேசப்பிதாவைக்
காணவில்லை
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
மும்பை மாநகரை
முழுசா கொடுக்கிறொம்
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
குண்டு மழையில்
குருதி வெள்ளத்தில்
மிதக்கிறது
எங்கள் சுதந்திர பூமி
தண்டவாளங்களில்
வெடித்துச் சிதறுகிறது
அஹிம்சைத் தேவியின்
அனாதைக் கனவுகள்
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
அரபிக்கடலை ஆஸ்தி ஆக்குவோம்
அமெரிக்க வல்லரசின்
அணு ஆயுத ஒப்பந்தங்களின்
சாட்சியாக
செங்கோட்டையில்
பறக்கிறது
எங்கள் மூவர்ணக்கொடி
மித்தி நதியின்
குடிசை வானத்தில்
செயற்கை கோள்கள்
சீறிப்பறக்கின்றன.
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
இமயப் பெருமலையை
எடுத்துக் கொடுத்திடுவோம்
திருவிழாவில்
குழந்தைகளைத் தொலைத்த
பெற்றவர்கள் உண்டு
நாங்களொ
தந்தையே
சுதந்திர தேவியின்
மணிவிழா மண்டபத்தில்
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
முன்னாபாயின்
முகவரியில் இருப்பதாய்
வெள்ளித்திரையில்
விளம்பரம் போட்டார்கள்
எட்டிப் பார்த்து
ஏமாந்து போனோம்
எங்கள் தேசப்பிதாவை
காணவில்லை..
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
இந்திய தேசத்தையே
இனாமாய்க் கொடுக்கிறோம்
எங்கள் தேசப்பிதாவைத்
தொலைத்துவிட்டோம்....
எங்கள் தேசப்பிதாவே...
வெள்ளையரின் ஆட்சியில்
விடிவெள்ளியாய் நீ
கொள்ளையரின் ஆட்சியில்
இருண்டு போனாய்.
கோட்சேயின் குண்டுகளில்
உயிர்த்து எழுந்த உன்னை
ராமபிரானின் அம்புகளால்
எங்கள் அரசியல்வாதிகள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
எங்கள் தேசப்பிதாவே
எங்கள் தலைவர்களை
மன்னித்துவிடு
அவர்களைத் தலைவர்களாக்கிய
எங்களையும் மன்னித்துவிடு.
-------------------------------------------------------
எங்கள் தேசப்பிதாவே
நீ எங்களுடன் இருந்தால்
எதையும் சாதிக்கலாம்
அரசியல் வாதியை
அடியாள் ஆக்கலாம்
கூட்டணிக்குள்
கூட்டணி அமைக்கலாம்
எம்.பி , எம்.எல்.ஏக்களை
விலைக்கு வாங்கலாம்
எங்கள் சுதந்திர இந்தியாவில்
இந்து இசுலாம்
கிறித்தவன் சீக்கியன்
யாராக இருந்தாலும்
உன் புன்னகைக்காகவே
தவமிருக்கிறார்கள்
கறுப்பு வெள்ளையாய்
எப்போதும் புன்னகையுடன்
இந்திய தேசத்தின்
மதிப்பாய் வாழும்
எங்கள் தேசப்பிதாவே
உனக்கு எங்கள் அஞ்சலி.
------------------------------------------
Wednesday, August 29, 2007
மும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்
மும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்
----------------------------------------------------
மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயத்திற்கு 18-08-07 மாலை 6 மணியளவில் மும்பை தாதர் (மேற்கு) வான்மாலி அரங்கில் தலித் உறவுகள் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தினர்.
ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையும் தமிழர் முழக்கமும் இணைந்து
நடத்திய நிகழ்வில் தலித் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
புலவர் இரா.பெருமாள் அவர்கள் தோழர் வள்ளிநாயகத்தின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து நினைவு அஞ்சலி கவிதை வாசித்தார்.
தோழர் வள்ளிநாயகத்தின் களப்பணி, எழுத்துப்பணி, இயக்கப்பணி குறித்து அறிமுகவுரை ஆற்றினார் தோழர் இராசேந்திரன்.
தோழர் வள்ளிநாயகம் மும்பைக்கு வர இருந்த இரண்டு
நிகழ்வுகள் மும்பையில் நடந்த சில கலவரங்கள் காரணமாக தடைப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்த ஆகஸ்டு மாதம் தான் அவரை மும்பைக்கு
அழைக்கும் திட்டம் இருந்தது. இப்போது அவருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்த கூடி இருக்கிறோம் என்று உணர்ச்சி தளும்ப அவர் நினைவுகளை,
பணிகளைப் பகிர்ந்து கொண்டார்.
தோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணியைப்
பற்றி சிறப்புரை ஆற்றினார் எழுத்தாளர் புதியமாதவி. 'விடுதலை இயக்க
வேர்களும் விழுதுகளும்' என்று தோழர் வள்ளிநாயகம் தலித்முரசில்
தொடர்ந்து எழுதிய கட்டுரைகளையும் அதில் அவர் அறிமுகப்படுத்தி இருக்கும்
தலித் இயக்க முன்னோடிகளையும் குறிப்பிட்டு தலித் இயக்க வரலாற்றில்
தோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணி படைத்திருக்கும் சாதனைகளைப்
பட்டியலிட்டார். தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆண்டதை விட அயலவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் அதிகம். அதிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக
இருந்தக் காலம் அதைவிடக் குறைவு. இருந்தும் சங்கத்தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் தமிழ் தன் மூலத்தன்மையை இழந்துவிடாமல் சேரிகளில் தான் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.
ஆதிதிராவிட சிந்தனையாளர்களின் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து புராணங்களின்
பொய்மை கலக்காத அவர்களின் படைப்புகளை எல்லாம் தோழர் அறிமுகம் செய்திருக்கும் பாங்கினை எடுத்துக்காட்டினார் புதியமாதவி.
பாபாசாகிப் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இணையும்
புள்ளியிலிருந்து தான் இந்திய மண்ணில் சமத்துவமும் சாதி ஒழிந்த
சமுதாய மானுட விடுதலையும் சாத்தியப்படும் என்பதை தன் எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்க்கையின் மூலமும் நமக்கான செய்தியாக விட்டுச்
சென்றிருக்கிறார் தோழர் வள்ளிநாயகம் என்றார்.
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு செயலாளர் தோழர்
சு.குமணராசன் நம்மை, நம் வரலாற்றை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம் வரலாற்றை எழுதியிருக்கும் தோழர் வள்ளிநாயகம் அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அதுவும் மும்பையில் அவருடைய
25 நூல்களையும் நாமும் நம் இளைஞர்களும் வாசித்து பயன்பெற
வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.
நடந்து முடிந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள்
பெற்று தேர்வில் வெற்றி பெற்ற தலித் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தோழர் வள்ளிநாயகத்தின் வாழ்க்கை குறிப்பினை வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஆதிதிராவிட சிந்தனையாளர் சபையின் ஆணை அதிகாரி திரு.சேகர்சுப்பையா.
நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த வி.ஜே பாலன்,
திருவள்ளுவர் பவுண்டேசன் அமைப்பைச் சார்ந்த எம்.ஜெயம், மற்றும்
தேவராஜன் மற்றும் பல மும்பை தமிழர்கள் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையின் பொருளாளர் திரு.ஜசக் நியூட்டனும்,
நிர்வாக அதிகாரி சேகரும் தோழர் ஏபி.வள்ளிநாயகத்தின் நூல்களைத் தமிழக அரசு அரசுடையாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை
முன்மொழிந்து நிறைவேற்றினர்.
.............
Thursday, August 23, 2007
மணிப்பூரின் போராளிகள்
மணிப்பூரின் போராளிகள்
-----------------------
"தேசப்படத்தின்
எல்லைக்கோடுகள்
கிறுக்கிய
எல்லைமீறிய
வன்புணர்ச்சியில்
மணிப்பூரின் நிர்வாணம்.
முலைகளே ஆயுதமான
போர்ப்படை
புறப்பட்டுவிட்டது
வலிகளின் வரிசையுடன்.
எதிர்க்கமுடியாத
அவலத்தில்
தோற்றுப்போகிறது
நேற்றுவரைக் குறிவைத்த
உன் நீண்ட துப்பாக்கிகள்"
மணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இருக்கிறது - இது பூகோளப்பாடம்.
மணிப்பூர் மக்களை எதிர்க்கிறது - இந்திய இராணுவம். இது சரித்திரப்பாடம்.
யாருக்காக யாரை எதிர்த்து இந்திய இராணுவம் போர் புரிகிறது?
வரைகோடுகளால் வரையப்பட்ட பூகோளப்பாடத்தை நிலைநிறுத்த இந்திய அரசு இந்தியர்களாக
சொல்லப்படும் இந்திய மணிப்பூர் மக்களை அவர்கள் மண்ணிலேயே அடித்து வீழ்த்தி தன் ஆளுமையை
நிலைநிறுத்தப் போர் நடத்துகிறது. இந்தப் போரில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தீவிரவாதிகள் என்ற
பட்டம். அந்த மண்ணின் உரிமையை, அவர்களின் பிறப்புரிமையை எதிர்ப்பதன் மூலம் இந்தியா
அரசின் இன்னொரு முகம் -மக்களாட்சி முகமூடி அணிந்து தன் மக்களைத் தின்று திரியும் பயங்கரவாதத்தின் பலம் - திரைவிலகி வெளியில் தெரிகிறது.
இம்பாலில் (Imphal) இருக்கும் பம்மன்கம்பு சிற்றூரில் அதிகாலையில் வீட்டுக் கதவைத் தட்டி அவளைக் கைது செய்கிறார்கள்.
தீவிரவாதைகளின் இயக்கத்தைச் சார்ந்தவள் என்று தங்கஜம் மனோரமாதேவி
மீது குற்றம் சாட்டுகிறார்கள். அப்போது அவளுக்கு வயது 32. குண்டுகள்
துளைத்த மனித வல்லூறுகள் தின்று நாசம் செய்த அவள் உடல்
11-07-2004 அதிகாலையில் நகரியன் மபோமரிங் கிராமத்தில் கண்டெடுக்கப்படுகிறது. ஏழு குண்டுகள் பாய்ந்துள்ள அவள் உடலில் ஒரு குண்டு அவள் இடுப்புக்கு கீழே பின்புறம் வழியாகப் பாய்ந்து அவள் யோனியைக் கிழித்து சிதைத்துள்ளது. அவள் உடலெங்கும் கீறல்கள், காயங்கள், வலது
தொடையில் கத்திக்குத்து..
அவள் நிலைக்கண்டு மணிப்பூர் மக்கள் கொதித்து எழுந்தனர். மனோரமாவின் குடும்பத்தினர் அவள் உடலை வாங்க மறுத்தனர். 32 அமைப்புகள் ஒன்றுகூடி இரண்டு நாட்கள் முழுகதவடைப்பு போராட்டம் நடத்தினர்.
மனோரமா படுகொலையைக் கண்டித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை ( Armed forces special powers act- AFSPA. 1958ஐ) விலக்கக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சார்ந்த 12 பெண்கள் ஊர்வலம் சென்றனர். இந்தப் பெண்களின் ஊர்வலம் பலகோடி
மக்கள் கலந்து கொண்ட ஊர்வலங்களை விட வலிமையானது.
இந்திய அரசை அசைத்துப் பார்த்த பெண்களின் ஊர்வலமிது.
தங்கள் உடலையே ஆயுதமாக ஏந்தி நிர்வாணக் கோலத்தில் கங்க்லாகேட் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
INDIAN ARMY RAPE US
INDIAN ARMY TAKE OUR FLESH
என்ற பதாகைகள் தாங்கி அவர்கள் நடத்திய ஊர்வலம்தான் ஊடகங்களை
மணிப்பூரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. மணிப்பூரில் என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்று பிற மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்களுக்கு தெரியவந்தது.
16-07-2004ல் தடையுத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 700 பேர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.மணிப்பூர் பல்கலை கழக மாணவர் அமைப்பு அமைதியான முறையில் ஊர்வலம் வந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையை
முற்றுகையிட்டனர்.
கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த கிளர்ச்சியை
காவல்துறை தன் இரும்புக்கரங்களால் சுட்டு வீழ்த்தியது. பலர் காயமடைந்தனர்.. சிலர் உயிரிழந்தனர்.
13 நாட்கள் பிணவறையிலிருந்த மனோரமாவின் உடலை அவள் உறவினர்களுக்குத் தகவல் சொல்லாமல் காவல்துறையே எரியூட்டி இறுதிச் சடங்கைச் செய்தது.
12 ஆகஸ்ட் 2004ல் மணிப்பூர் முதல்வர் 7 தொகுதிகளில் இந்திய இராணுவத்தின் (AFSPA) கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்காமல் தளர்த்திக் கொள்வதாக அறிவித்தார். (partial withdrawal).
15 ஆகஸ்ட் 2004ல் இந்திய சுதந்திர நாளில் மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இந்திய சுதந்திரக்கொடி, மூவண்ணக் கொடி எரியூட்டப்பட்டது.
32 வயது பிபம் சித்தரஞ்சன் சிங் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின்
வன்கொடுமையை எதிர்த்து தீக்குளித்தார்.
மணிப்பூரில் நடக்கும் இந்த அனைத்து செய்திகளையும் ஒளிபரப்ப
மணிப்பூர் கேபுள் நெட்வொர்க்கிற்கு அரசு தடையுத்தரவு விதித்தது..
>ஒத்துழையாமை இயக்கம் - (non cooperation )
>தன் எழுச்சி இயக்கம் (self reliance movement)
>சுதேசி இயக்கம்.. ஆம், இந்தியப் பொருட்களை முழுவதுமாக மணிப்பூரில் விலக்குதல்..
சுதந்திர இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தின் மறுவாசிப்பு இது.
சந்தேகத்தின் பேரால் யாரையும் எப்போதும் எவ்விடத்திலும் விசாரணையின்றி கைது செய்யவும் சுட்டுத் தள்ளவும் இந்திய பாதுகாப்பு படையில் கடைநிலை காவலர்க்கு கூட அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததையும்
இதெல்லாம் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட இந்திய அரசு
எடுக்கும் முயற்சிகள் என்றும் அரசு மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல,
தன்னையே ஏமாற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய இராணுவத்தில் 31 ஆண்டுகள் பணிபுரிந்த பிரிகேடர் சாயில்லோ
(Brigadier Sailo) அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில் அரசு தரப்பு செய்திகள் உண்மைக்கு புறம்பாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
"மிஷோரோம் கிராமத்தில் ஒட்டு மொத்த மனிதர்களின் உரிமைகள்
பறிக்கப்பட்டிருப்பதையும் அவர்களின் அவல நிலையையும் எழுதியுள்ளார்,
," The feelings of the entire villages and population of Mizoram are now totally alienated by the denial of all decencies of human rights and any picture which may have been painted to you to the contrary, is totally false." (Quoted in Where 'Peacekeepers' Have Declared War - :Report on violations of democratic rights by security forces and the impact of the AFSPA on civilian life in the seven states of North East - National Campaign Committee against Militarisation and Repeal of AFSPA, 2000, Delhi).
இன்று வடகிழக்கு மாநிலங்களின் நிலை இதுதான்.
தென்கொரியா வழங்கும் க்வாஞ்ச்சு விருது (Gwangju Prize ) சியோல் நகரத்தில் மே மாதம் 18ஆம் நாள் 2007ல் மணிப்பூரின் இரும்பு மங்கை சர்மிளா தானுவுக்கு -வயது 35- வழங்கப்பட்டுள்ளது.
ப்ளஸ் டூவுக்கு மேல் (12th std) தன் கல்வியைத் தொடர முடியாத மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த சர்மிளா தானுவுக்கு ஆசியாவின் மிகச்சிறந்த
விருது வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய ஆவணப்படத்தை மனித
உரிமைகள் அமைப்பு தயாரித்து திரையிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக
அவருடைய விருதைப் பெறுகிறார் அவருடைய மூத்த சகோதரர்.
சர்மிளா தன் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவில்லை.
யார் இந்த இரும்பு மங்கை?
இம்பாலிலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் மலோம் (Malom) பேருந்து நிலையத்தின் அருகில் இந்திய பாதுகாப்பு படை 02 நவம்பர் 2000ல்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் எண்ணிக்கை 10.
இதுமாதிரி துப்பாக்கிச் சூடும் மனித உயிர்களைப் பறிப்பதும் இந்திய பாதுகாப்பு படைக்கு புதிதல்ல, மலோம் மக்களுக்கும் புதிதல்ல. ஆனால் இச்செய்தியைக் கேள்விப்பட்ட சர்மிளா உடனடியாக மலோம் விரைந்து
தன் "சாகும்வரை உண்ணாவிரதம்" போராட்டத்தை அறிவித்தார்.
சர்மிளாவின் காந்திகிரியைக் கண்டு பலர் இந்த இளம்பெண்ணின் உண்ணாவிரதம் எதுவரை தொடரும் என்று ஐயப்பாட்டுடன் நோக்கினர்.
இம்பாலா மருத்துவமனையில் அவருக்கு 21 நவம்பரில் மூக்குவழியாக
திரவ உணவு ஊட்டப்பட்டது. 'தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக
சர்மிளாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசமும்
தற்கொலைக் குற்றமும் தொடர்கதையானது.
தாயின் சந்திப்பும் கண்ணீரும் சர்மிளாவின் மனவுறுதியை தளர்த்திவிடக்கூடாது என்பதால் இன்றுவரை உண்ணாவிரதமிருக்கும் மகளைச் சந்திக்கவில்லை என்கிறார் 75 வயதான சர்மிளாவின் தாய்.
மகாத்மா காந்தியடிகள் இன்றிருந்தால் நான் செய்வதையே அவரும் மணிப்பூர் மக்களுக்காக செய்வார் என்று காந்தியின் நினைவிடத்தில் நின்று கொண்டு
இந்திய அரசிடம் சொல்கிறார் சர்மிளா.
மனோரமாவின் படுகொலை, அதன் பின் நடந்த மக்கள் எதிர்ப்புணர்வு அனைத்தும் சர்மிளாவின் போராட்டத்தை கூர் தீட்டியுள்ளன.
2007, சர்மிளா தன் சத்தியாகிரக அஹிம்சை வழி போராட்டமான உண்ணாவிரத்தத்தை ஆரம்பித்து
7 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த இந்திய அரசு மகாத்மாவின் சத்தியகிரக அஹிம்சைவழிப் போராட்டத்தில்
சுதந்திரம் அடைந்ததாக தன் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் எழுதி வைத்து 60 ஆண்டு
மக்களாட்சியை மண்ணில் நடத்துவதாக பெருமை அடைந்துள்ளதோ அதே இந்திய அரசுதான்
காந்தியின் அதே வழியில் தன் மண்ணின் மனிதர்களின் தன்மானம், தன்னுரிமைக்காக போராடும்
இளம்பெண் சர்மிளாவை அரசு மருத்துவமனையில் சிறை வைத்துள்ளது!
மருத்துவமனை ஆகட்டும், சிறைச்சாலை ஆகட்டும் சர்மிளாவைப் பார்க்க குறைந்தது 20 நாட்கள்
முன்பே திட்டமிட்டு உள்துறை அமைச்சகம் முதல் மணிப்பூர் சஜிவ்வா சிறைச்சாலை அதிகாரி வரை
அனுமதி தர காத்திருக்க வேண்டும். ஒரு தீவிரவாதிக்கு கூட சிறைவிதிகள் இத்தனை கட்டுப்பாடுகளை
விதிக்கவில்லை.
ஜவஹர்லால் நேரு மருத்துவமனை, இம்பாலாவில் இருக்கும் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து செப்டம்பர் 13, 2007 முதல் மணிப்பூரின்
மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
நாடுதழுவிய போராட்டமாக தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் போராளிகளின்
படையில் ஒரு நாளாவது உண்ணாவிரதத்தில் நாமும் சேர்ந்து இரும்பு மங்கை சர்மிளாவின் போராட்டதை ஓரடி
முன்நகர்த்திச் செல்லுவோம்.
(¿ýÈ¢: Subhash Gatade , H 4, Rohini Sector 15,Delhi110085, Ph : 011-27872835 email : subhash.gatade@gmail.com)
Wednesday, August 22, 2007
விமர்சனக்குருவிகள்
விமர்சனங்கள்
எங்கிருந்து வந்தாலும்
இடமுண்டு
இளைப்பாற
என்வாசலில்.
எத்தனை விமர்சனங்கள்?
விதம் விதமான
ரங்கோலிகள்!
விமர்சனக் கோலங்கள்
இணைத்த புள்ளிகளுக்கும்
இணைக்காத புள்ளிகளுக்கும்
நடுவில்
எப்போதும்
சிக்கித்தவிக்கிறது
எழுத்துப்பறவை.
என் கவிதைகளில்
வாழ்விடம் சார்ந்த
உண்மைகளில்லை என்றார்கள்.
உண்மைதான்.
கிராமவாசனையை
கருவில் சுமந்திருக்கும்
என் கவிதைகளில்
இன்னும் வந்துப்படியவில்லை
மாநகரக் கழிவுகள்.
எரிந்துகிடக்கும் புகைவண்டிகளின்
சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும்
மனிதப்பறவைகளை
என் கவிதைக்கூண்டுக்குள்
பத்திரமாக அடைத்துவைத்தேன்.
"கவிதையின் கவித்துவம்
சிறைவைக்கப்பட்டிருப்பதாக
புலம்பித் தீர்த்தார்கள்."
அவர்களின் அளவுகோலில்
எழுதிப்பார்த்தேன்
முற்றுப்பெறாத ஒரு
முனிவனின் முத்தத்தை.
சூரியன் குளிர்ந்து பனிக்கட்டியாய்
உறைந்து போனதாக
வருத்தப்படுகிறார்கள்.
என் விமர்சனச்கொடியும்
மண்ணில் பரந்து
மரத்தில் ஏறி
காற்றில் அசையும்
அடர்ந்தக் காட்டில்
இப்போதெல்லாம்
விமர்சனங்களை
விமர்சிப்பதில்லை.
ரசிப்பதாக மட்டுமே
தலையாட்டி வைக்கிறேன்.
இலக்கியவேடன் விரித்த
விமர்சன வலையில்
விழுந்து தவிக்கும்
என் விமர்சனக்குருவிகள்.
எறும்புக்கடி.
எறும்புக்கடி.
----------
தேசிய நெடுஞ்சாலை
சிக்னலுக்கு அருகில்
இரவு நேர கால்செண்டர்
பகலெல்லாம் தூங்கிறது
அவள்வீட்டு சூரியன்.
தாயின் அகாலமரணத்தில்
அவளுக்காக ஒதுக்கப்பட்டது
இந்த அலுவலகத்தில்
தாயின் இருக்கை.
கேள்விகளுக்கு விடைதெரியாத
அவள் வினாத்தாள்களே
அவளுக்கு
இந்த வேலைக்கான
உத்தரவாதமானது.
நேர்முகத் தேர்வில்
மொழி தெரியாத அவள் முகம் கூட
வேலையில்லை என்றவளை
விரட்டவில்லை.
இந்த வேலையில்
அவளுக்கு வருத்தமில்லை.
ஆனால்-
எப்போதாவது அவள் நிர்வாணத்தை
எறும்புகள் கடிக்கும்
"இவனில் எவனாவது
அப்பனாக இருந்தால்.?."
---------------
----------
தேசிய நெடுஞ்சாலை
சிக்னலுக்கு அருகில்
இரவு நேர கால்செண்டர்
பகலெல்லாம் தூங்கிறது
அவள்வீட்டு சூரியன்.
தாயின் அகாலமரணத்தில்
அவளுக்காக ஒதுக்கப்பட்டது
இந்த அலுவலகத்தில்
தாயின் இருக்கை.
கேள்விகளுக்கு விடைதெரியாத
அவள் வினாத்தாள்களே
அவளுக்கு
இந்த வேலைக்கான
உத்தரவாதமானது.
நேர்முகத் தேர்வில்
மொழி தெரியாத அவள் முகம் கூட
வேலையில்லை என்றவளை
விரட்டவில்லை.
இந்த வேலையில்
அவளுக்கு வருத்தமில்லை.
ஆனால்-
எப்போதாவது அவள் நிர்வாணத்தை
எறும்புகள் கடிக்கும்
"இவனில் எவனாவது
அப்பனாக இருந்தால்.?."
---------------
பாவமன்னிப்பு
பாவமன்னிப்பு
-------------
எங்கள் பரமப்பிதாவே!
கரைவேட்டி மின்ன
நீண்ட துண்டு
நெஞ்சில் புரள
மாநாடுகளுக்கு
வரும்போதெல்லாம்
மறக்காமல்
எங்களையும் இரட்சிக்க வந்த
எங்கள் தந்தையே..!
உனக்குத் தெரியுமா..
உன் சூரியனுக்கு
வந்தக் குளிர்க்காய்ச்சல்!
நீ படித்தாயா
உன் பகுத்தறிவுப் பேசும்
அன்னைப் பராசக்தி
'அண்ணா'மலையாகி
ஆருடம் சொல்லும் கதையை?
மன்னித்துவிடு..
அவர்களை மட்டுமல்ல..
உன் வாரிசு சுமையை
சுமக்க மறுக்கும்
என்னையும்
என் எழுத்துகளையும்.
....................
-------------
எங்கள் பரமப்பிதாவே!
கரைவேட்டி மின்ன
நீண்ட துண்டு
நெஞ்சில் புரள
மாநாடுகளுக்கு
வரும்போதெல்லாம்
மறக்காமல்
எங்களையும் இரட்சிக்க வந்த
எங்கள் தந்தையே..!
உனக்குத் தெரியுமா..
உன் சூரியனுக்கு
வந்தக் குளிர்க்காய்ச்சல்!
நீ படித்தாயா
உன் பகுத்தறிவுப் பேசும்
அன்னைப் பராசக்தி
'அண்ணா'மலையாகி
ஆருடம் சொல்லும் கதையை?
மன்னித்துவிடு..
அவர்களை மட்டுமல்ல..
உன் வாரிசு சுமையை
சுமக்க மறுக்கும்
என்னையும்
என் எழுத்துகளையும்.
....................
மவுனவெளி
மவுனவெளி
-------------------
உரையாடல்களில்
உதிர்ந்து விழுந்த
மவுனங்களைப்
பொறுக்கி எடுத்து
பத்திரப்படுத்தி
காத்திருக்கிறது
பச்சைப் புல்வெளி.
*
ஓடும் வண்டியில்
கை அசைத்து புன்னகைக்கும்
ஓராயிரம் கைகளுக்கு
நடுவில்
தொலைந்து போனது
முத்தங்கள் பதிந்த
இரவுகளின் ஈரம்.
*
நிரம்பி வழியும்
மனித வண்டிகளுக்கு
நடுவில்
தனிமையின்
மூச்சுத் திணறலில்
இருத்தலுக்கும்
இறத்தலுக்கும்
நடுவில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
நாட்கள்.
*
-------------------
உரையாடல்களில்
உதிர்ந்து விழுந்த
மவுனங்களைப்
பொறுக்கி எடுத்து
பத்திரப்படுத்தி
காத்திருக்கிறது
பச்சைப் புல்வெளி.
*
ஓடும் வண்டியில்
கை அசைத்து புன்னகைக்கும்
ஓராயிரம் கைகளுக்கு
நடுவில்
தொலைந்து போனது
முத்தங்கள் பதிந்த
இரவுகளின் ஈரம்.
*
நிரம்பி வழியும்
மனித வண்டிகளுக்கு
நடுவில்
தனிமையின்
மூச்சுத் திணறலில்
இருத்தலுக்கும்
இறத்தலுக்கும்
நடுவில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
நாட்கள்.
*
பூனைகளும் புலிகளும்
பூனைகளும் புலிகளும்
----------------------
பூனைகளை நான் ரசிப்பதில்லை
ஓசையின்றி
திருட்டுப் பார்வையில்
அங்குமிங்கும் அலைபாயும்
விழிகளுடன்
அலைந்து கொண்டிருக்கும்
பூனைகளை நான் ரசிப்பதில்லை.
தூக்கத்திலிருக்கும் பூனைகளை
கண்டு தூரவிலகிவிடுவது
உத்தமம்.
விழித்திருக்கும் பூனைகளை விட
தூங்குவது போல
பாய்ச்சலுக்காகக் காத்திருக்கும்
பூனைகள் தீவிரவாதிகள்.
பூனைகளை நான் ரசிப்பதில்லை.
அது என்ன?
புலியின் அச்சு அசலுடன்
யாரை ஏமாற்ற
உடல் சுருக்கி
நிறம் மாற்றி
கோடுகள் மறைத்து
வீடுகள் தோறும்
உலா வருகிறது
பூனை என்ற பெயரில்?
கருப்பு பூனைகள்
வெள்ளைப் பூனைகள்
குட்டிப் பூனைகள்
எல்லா பூனைகளிலும்
எப்போதும்
ரத்தக் கறைகளுடன்
ஒளிந்திருக்கிறது
புலியின் கோரப்பற்கள்.
பாயத்தயாராயிருக்கும்
புலிகளைவிட
பக்கத்தில் படுத்திருக்கும்
பூனைகள்
எப்போதும் ஆபத்தானவை.
பூனைகளை நான் ரசிப்பதில்லை.
----------------------------------
----------------------
பூனைகளை நான் ரசிப்பதில்லை
ஓசையின்றி
திருட்டுப் பார்வையில்
அங்குமிங்கும் அலைபாயும்
விழிகளுடன்
அலைந்து கொண்டிருக்கும்
பூனைகளை நான் ரசிப்பதில்லை.
தூக்கத்திலிருக்கும் பூனைகளை
கண்டு தூரவிலகிவிடுவது
உத்தமம்.
விழித்திருக்கும் பூனைகளை விட
தூங்குவது போல
பாய்ச்சலுக்காகக் காத்திருக்கும்
பூனைகள் தீவிரவாதிகள்.
பூனைகளை நான் ரசிப்பதில்லை.
அது என்ன?
புலியின் அச்சு அசலுடன்
யாரை ஏமாற்ற
உடல் சுருக்கி
நிறம் மாற்றி
கோடுகள் மறைத்து
வீடுகள் தோறும்
உலா வருகிறது
பூனை என்ற பெயரில்?
கருப்பு பூனைகள்
வெள்ளைப் பூனைகள்
குட்டிப் பூனைகள்
எல்லா பூனைகளிலும்
எப்போதும்
ரத்தக் கறைகளுடன்
ஒளிந்திருக்கிறது
புலியின் கோரப்பற்கள்.
பாயத்தயாராயிருக்கும்
புலிகளைவிட
பக்கத்தில் படுத்திருக்கும்
பூனைகள்
எப்போதும் ஆபத்தானவை.
பூனைகளை நான் ரசிப்பதில்லை.
----------------------------------
Tuesday, August 21, 2007
கனடாவிலிருந்து 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்ற வேட்கையுடன் வெளிவரும் பதிவுகள் இணைய இதழில் என் வலைப்பதிவு பக்கங்களை அறிமுகம் செய்திருக்கும் பதிவுகள் ஆசிரியர் தோழர். வ.ந.கிரிதரன் அவர்களுக்கு நன்றி.
எழுத்தாளர் புதியமாதவியின் வலைப்பதிவு!
தனது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்தான் புதியமாதவி அவர்கள். அவரும் 'புதியமாதவி' என்னுமொரு வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவரது வலைப்பதிவிலிருந்து அண்மையில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் பற்றி எழுதப்பட்டிருந்த 'தீர்ப்புகளும் கேள்விகளும்: தீர்ப்புகளும் கேள்விகளும்' ...உள்ளே
கவிதாசரணில் எதிர்வினை
Keetru Kavithaasaran Article
என் கை முறிவுக்கு அறுவை செய்துகொண்டபின், ஒரு நாளில் புதிய மாதவி எங்கள் இல்லம் வந்திருந்தார். மும்பைத் தோழர்களோடு சென்னை வந்தவர், அவர்கள் அதிகாரத் தமிழர்களைத் தரிசிக்கச் சென்ற இடைவெளியில் இவர் தன் அன்பை வெளிப்படுத்த எங்களைத் தேடி வந்தார். நீரும் நீரும் கலந்தாற்போல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன இரண்டு செய்திகள் அந்த உரையாடலின் முகவரிபோல் எனக்கு முகமன் கூறி, சறுகுகள் அடர்ந்த வனத்தினூடாக 'வீடு நோக்கித் திரும்தலில் சற்று இளைப்பாறக் கோரின.
ஒருமுறை மும்பை வந்திருந்த ஆசிரியர் வீரமணியிடம் (திராவிடர் கழகத்தவர் தங்கள் தலைவரை அவ்வாறுதான் குறிப்பிடுகின்றனர். ஒருவகையில் மிகையில்லாமல் அவருக்குப் பொருந்திவரும் இயல்பான அடைமொழி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மாதவியின் முதல் விளிப்பும் அதுவாகத்தான் இருந்தது.) 'பெரியாரின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டுடைமையாக்க வலியுறுத்தலாமே?’ என்று துண்டுச்சீட்டு அனுப்பிக் கேட்டதாகச் சொன்னார்.
ஆசிரியர் மலர்வார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக இறுகிப்போனதைப் பார்த்து இவருக்கு அதிர்ச்சி. எனக்கு அதைக் கேட்டு வியக்கத் தோன்றியது- மாதவிக்கு இப்படியொரு வெள்ளை மனசா என்று. பெரியார் எழுத்தின் அனுபவப் பாத்தியதையை விட்டுக்கொடுக்க மறுக்கும் வீரமணியாருக்கெதிராக அணுகுண்டைக் காட்டி மிரட்டியிருக்கிறார் மாதவி. இதை முன்கூட்டியே அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தாலும் அதைக் கேட்கும் துணிச்சல் உள்ளவர்தான். 'வீரமணி உங்களை வெகு காலத்திற்கு மறக்கமாட்டார்.என்றேன்.
அவர் சொன்ன இரண்டாவது செய்தி எனக்கொரு புதிய தகவலாய்க் கூடுதல் மன உளைச்சலைத் தந்தது.
"இந்தியாவில் என் பணி நிமித்தமான பயணங்களில் பல விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன், ஐயா. ஆனால் எங்கும் பார்த்திராத அதிசயமாய் சென்னை விமான நிலையத்தில் மட்டும்தான் பிள்ளையார் கோயிலைப் பார்க்கிறேன். இந்திய மதச்சார்பின்மைக்குப் பெரியார் வாழ்ந்த மண்ணின் காத்திரமான பங்களிப்பு”, என்றார்.
பெரியாரைப் பேசிப் பின்பற்றிய குடும்பத்தில் பிறந்தவர். பெரியாரைக் கடந்தும் பல கேள்விகளோடு வளர்ந்து வருபவர். உரைகளுக்கிடையிலும் வரிகளுக்கிடையிலும் ஒளிந்துகிடக்கும் கரித்துகள்களைச் சலித்தெடுக்கும் நுண்ணரசியலைப் பயின்றுகொண்டிருப்பவர். எதார்த்த வெள்ளத்தில் உடன்போகப் பழகிய பிறர் இவரை நோய் முற்றியவராகப் பார்த்துச் சலித்துக்கொள்ளும் அளவுக்கு எதிர் அரசியலின் நியாயங்களை மனமதிரப் பேசுபவர். புதிய மாதவியின் இப்பரிமாணங்கள் நமக்கு வெகு காலமாகவே பரிச்சயமானவைதாம்.
(அவர் கிளம்பும்போது மதிய உணவு வேளை கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆயினும் அவர் உணவு கொள்ளாமலே கிளம்பிச் சென்றார். எங்கள் வீட்டிலிருந்து யாரும் அப்படிச் செல்ல நேர்ந்ததில்லை. வெளியிலிருந்து வருகிறவர்கள் ஒருவேளையேனும் தங்கிச் செல்வார்கள். நான் மாதவியை அதிகம் வலியுறுத்தவில்லையோ என்பது என் வீட்டம்மாளின் குறைபாடு. எனக்கு அப்போது அது தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் வேறு வகை உணர்வில் திளைத்திருந்தேன் என்பது கவனத்திற்கு வருகிறது.
நாங்கள் அப்போதுதான் அவரை முதல் தடவையாகச் சந்திக்கிறோம். ஆனால் அது எனக்கு மறந்தே போய்விட்டது. அவர் ஏதோ இந்த வீட்டுப் பெண்போல, அடுத்த தெருவிலோ, அடுத்த பேட்டையிலோ வாழ்க்கைப்பட்டவர்போல, அவ்வப்போது எங்களை வந்து எட்டிப் பார்த்து 'எப்படி இருக்கிறீர்கள்?’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன?)
புதிய மாதவியின் கட்டுரை நான்கு பேர்களைப் பற்றிப் பேசுகிறது. நால்வரும் அவரவர் தளத்தில் ஆள்திறம் கொண்டவர்கள்; சமூகப் பெரும்பரப்பை ஊடறுத்து நிற்பவர்கள். மாதவி அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறார். கலைஞரைப் பற்றிய மதிப்பீட்டில், 'அவரும் மரத்துப் போய்விட்டார்; அவரை நம்பிய மக்களும் மரத்துப்போய் விட்டார்கள்’ என்பதாக மாதவியின் ஆற்றாமை கசந்து கொள்கிறது. இந்த ஆற்றாமை ஒன்றும் அவ்வளவு எளிதாக விலக்கிவிடும் விஷயமல்ல. உண்மையில் அது நம்மைக் கொல்லும் பண்பியல் நஞ்சாக அச்சுறுத்துகிறது; அலைக்கழிக்கிறது. கடவுள் மறுப்பிலிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் நிலைப்பாட்டுக்கு மாறியவர்களை என்னிலும் கடுமையாகத் தாக்குகிறார். 'திருடர்கள்’ என்று பெயரிட்டழைக்கிறார். அவர் கோபம் நியாயமானது. இழப்பின் ஆற்றாமையில் சொற்கள் பொங்கி வழிகின்றன. இதில் ஒளிந்திருக்கும் கண்ணி என்னவெனில் இன்னும் நாம் அவர்களின் உடன்பிறப்புகளாய்ச் ‘சீ’ப்படுகிறோம் என்பதுதான்.
நான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் 1960களில் ஜெயகாந்தனுக்காகக் கடைகளில் காத்து நின்றவர்களில் நானும் ஒருவன். மாதவி அதைத்தான் சொல்கிறாராக இருக்கும். மனிதர்களோடான உரையாடல் தளத்தில் ஜெயகாந்தன் எப்போதுமே விவகாரமான ஆள்தான் எனினும் எங்கள் காலத்தில் அவரை சிம்ம கர்ஜனை செய்பவராகவே நம்பியிருந்தோம். 'ஹரஹர சங்கர’ எழுதி ஞானபீட விருது பெற்ற பிறகுதான் மாதவி சொல்வதுபோல் அவர் கம்பீரமாகக் குரைப்பது ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. முரசொலி அறக்கட்டளை பரிசு தரவும் அதை அவர் பெறவும் இந்த வீழ்ச்சி நியாயப்பட்டிருப்பதுதான் ஆகப்பெரும் சோகம்.
இந்தக் கசப்புகளிலிருந்து மீளும் உபாயமாக மாதவிக்கு இளையராஜா கிடைத்திருக்கிறார். கொஞ்சம் மிகையோ என்னும்படி அவரை உயர்த்திப் பிடிக்கிறார். அவர் சித்தாந்த உறுதிப்பாடுமிக்கவர் என்பதாக வேறு நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பதற்கும் மூகாம்பிகைக்கு வைரக்கை சாத்தினால் அருள்பாலிப்பாள் என்பதற்கும் சித்தாந்தம் வேண்டியதில்லை; வெறும் மூடத்தனம் போதும். 'செத்தாலும் சிந்திக்க மாட்டேன்’ என்று கண்ணைக் கட்டிக்கொள்ளும் மூடத்தனம். மாறாக, இளையராஜாவின் தன்மானத்தைப் பற்றிப் பேசுகிறாரே, அது பெருமிதம் கொள்ளத்தக்க நியாயம். மாதவி அதற்காக கர்வமும் கொள்ளலாம். தன்மானம் பிறர் மானத்தைக் காயப்படுத்தாதவரை அந்தக் கர்வம்தான் அதன் நியாயமும்கூட.
பெரியார் படத்துக்கு இளையராஜா இசையமைக்காமல் போனது அவரது தீவிர தெய்வ பக்தியால் மட்டுமே அல்ல என்றே தோன்றுகிறது. பெரியார் பட இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற நிர்வாக மேட்டிமைகள் பலரும் மிகையான தன்மூப்பில் திளைப்பவர்கள்; அடிப்படையில் அதிகாரச் சுரப்பிகளாய் வடிவமைக்கப்பட்டவர்கள். பிறரை சகமனிதர்களாகவன்றி, ஊழியர்களாகவே பார்க்கப் பழகியவர்கள். நட்புக்குச் சூழ்பவர்களை ஏவிப் பிழைக்கிறவர்கள். இவர்களால் ஒருபோதும் மக்களைத் திரட்டி ஈர்க்கும் அரசியல் தலைவர்களாக முடியாது என்பது என் எண்ணம்.
மக்களுள் ஒருவனாக உட்கார்ந்து, மக்களை ஊடறுத்துச் மேலேறுகிறவன்தான் வெற்றிகரமான மக்கள் தலைவனாகலாம். தனக்கு மேலே உள்ளவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்பதான மனத்தயாரிப்புள்ளவன் மானஸ்தர்களைப் பற்றி அக்கறைப்படாதவன். இளையராஜா விஷயத்திலும் இப்படியொரு ரசாயனமே வினை புரிந்திருக்கக்கூடும். ஞானராஜசேகரன் தன்னை எளிமைப் படுத்திக்கொண்டு தானே களமிறங்காமல் தன் அலுவலகச் சிப்பந்தியை ஏவி இளையராஜாவைப் பணியமர்த்த எத்தனித் திருக்கலாம். (இளையராஜா மறுத்துவிட்டார் என்பதை உடனடியாக ஆதாய விளம்பரமாக்கிக்கொண்டதில், குற்றம் சுமத்தப் பறக்கும் அதிகார மூளையை அடையாளம் காணலாம்.) காயப்பட்டு விட்டதாகக் கருதிய இளையராஜா 'என்னை மதியாதவன் நான் வணங்கும் ஈசனேயாயினும் எனக்கவன் துச்சமே’ என்று தன்னை விடுவித்துக் கொண்டிருக்கலாம்.
ஈசன் என்றதும் திருவாசகம் ஓதி உடுக்கடிக்கிறவர் இளையராஜா என்பதைத்தான் மாதவி சித்தாந்தவாதம் என்கிறார் - அதாவது சச்சிதானந்த சித்தாந்தம் என்னும் பொருளில். அதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது சித்தாந்தமல்ல. எதார்த்தத்தில் அடிமைத் தனத்தின் அடியாழத்தில் தன்னைத் தற்கொலைப்படுத்திக் கொள்ளும் தற்குறித்தனம். எனக்கு ஒரு படைத்தவனைக் கண்டெடுத்து, அவனுக்காகத் தெருத்தெருவாய் உருண்டுவந்து, நன்றி சொல்லி, போற்றி பாடி, தேரிழுத்துக் கொண்டாடி நாறிப் புழுப்பதென்பது, 'எனக்குச் சுயம் வேண்டாம். அடிமையாயிருப்பதே என் சுகம்’ என்பதன் மீட்சியற்ற வெளிப்பாடு. சுயமற்றவன் கோரும் மரியாதை, உடையில் சிந்திய பருக்கைபோல வெறும் அழுக்குதானே தவிர அணி அல்ல.
எதிர்பாராமல் இந்த 'நன்றி’ பற்றிப் பேச்சு வந்துவிட்டதால் நான் அதை மீண்டும் பேசியாக வேண்டும். என் 'சங்கர நேர்த்தி’யில் ஏற்கனவே பேசியதுதான். இளையராஜா பிறக்குமுன்பே அவர் பிறந்த பண்ணைபுரத்தில் அவருக்காகப் பெரியார் பேசியிருக்கிறார், பெருந்தொண்டாற்றி யிருக்கிறார் என்பதாகப் பேராசிரியர் சுபவீ நினைவுகூர்கிறார். ஆகவே, இளையராஜா பெரியாருக்கு நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. எதற்காக நன்றியுள்ளவராயிருக்க வேண்டும், பெரியார் ஏதோ வள்ளல் போலவும் இளையராஜா அவர்முன் இரந்து நிற்பவர்போலவும்? நன்றி என்பது பிச்சைக்கார மண்ணின் அடிமை முறிச்சீட்டு என்பதல்லாமல் வேறென்ன?
பெரியார் தனக்குப் பிடித்த வேலையைத் தன்மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்; சமூக விழிப்புக்கான கருத்தியல் கொதிகலனாய்த் தன்னை வாழ்வித்துக்கொண்டவர். நான் அவரைப் புரிந்து கொள்ளலாம்; பின்பற்றலாம்; வளர்த்தெடுக்கலாம்; கொண்டாடி முன்னெடுக்கலாம். நன்றிகாட்டுவதென்பது நான் அவரின் நாய்க்குட்டியாய் இருக்கவா? திரும்பத்திரும்ப உடைமைச் சமுதாயத்தையும் அடிமைக் குடிமக்களையும் புதுப்புது உத்திகளில் அதிகாரச் சூத்திரங்களால் நியாயப்படுத்திக்கொண்டு, அதையே புரட்சி என்பதாகப் பிதற்றிக்கொண்டு அடிமைப் பட்டாளங்களைப் பிரசவித்து ஆசீர்வதிக்கிற இழி வேலையல்லவா அது?
மாதவியின் கட்டுரைக்கு சுபவீயின் நேர்காணலே அடிநாதம். வேறு வகையில் சொன்னால் சுபவீ வருத்தப்படுவதற்கு அல்லது கோபப்படுவதற்கு சுபவீயும் அவரது சேனைத் தலைவர்களுமே பொருத்தமானவர்கள் என்று கோடிட்டுக் காட்டும் கட்டுரை இது.
சுபவீ, இன்றுபூசிய சந்தனம் போன்றவர். உடம்பு வியர்க்கும்; சந்தனம் குழம்பும் என்பதெல்லாம் அப்புறம். இனிய பழகு முறைகளும் அரிய தோழமை உணர்வும் நிறைந்தவர். நல்ல பேச்சாளர்; பாசாங்கில்லாத வெகுநல்ல மனிதர். சொல்லப்போனால் இந்தக் கடைசி இரு அம்சங்கள்தான் என்னில் ஒளிரும் அவரின் அடையாளங்கள். அவரவர்க்கும் பொருந்திப்போக ஓர் இடமிருக்கும். சுபவீக்கு அப்படி யொரு இடம் இன்னும் வந்தடையவில்லை என்றே தோன்றுகிறது. கோல்ப் மைதானத்தின் பச்சைப் புல் மெத்தையில் எங்கிருந்து நோக்கினும் பளிச்செனத் தெரியும் வெள்ளைப் பந்து போல அவர் ஒளி சிந்துகிறார். சொல்லற்ற பொருண்மையின் படிமத் தீற்றல்கள் சொல்லுக்கப்பாலும் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.
திராவிட இயக்கவாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாய் இருக்கிறார்கள்- தங்கள் அப்பன்களையும் ஆத்தாள்களையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூசும் வல்லமைமிக்க நோஞ்சான்களாய் இருப்பதில். உடைமைச் சமுதாயத்தின் அதிகார வரம்பு இது. வெள்ளையடித்த வீடே இவர்களுக்கு இடித்துக் கட்டிய புதிய மாளிகை. மேடை முழக்கங்களே புரட்சிகரமான சிந்தனைகள். அரிய சிந்தனையாளர்களும் புதிய கருத்தியல் வாதிகளும் கருப்பைக் குள்ளேயே ரசாயன மாற்றத்துக்குள்ளாகி பெருச்சாளிகளும் நட்டுவாக் காலிகளுமாக உற்பத்தியாவது இந்த உடைமைப் பண்ணையின் இனப்பெருக்க முறைமை. இவர்கள் நடுவே வெள்ளைப் பந்துகள் குழிக்குள் விழுந்துவிடாமல் பச்சைப் புல்வெளியில் சுதந்திரமாய் மிதந்தலைந்தால் அதுதான் எவ்வளவு பெரிய கொண்டாட்டமா யிருக்கும்! அது நிகழும்போது வெற்றியும் தோல்வியும் வெறும் சொற்கள் மட்டும்தான்- அர்த்தமற்று உதிரும் வித்தைகளற்ற சொற்கள்.
சுபவீ நந்தன் வழி பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தபோது நான் எழுதிய கட்டுரை அவரைக் கடுமையாக முகங்கோண வைத்தது. (எந்தக் கட்டுரை யாரைத்தான் முகங்கோண வைக்கவில்லை?) அதன் அர்த்தப்பாடு அறுபடாத உள்ளிழையாக இன்னமும் அரூபத்தில் தங்கியிருந்தாலும் எங்களுக்கிடையேயான முகமன்களை மீட்டுக்கொள்வதில் அவரது பெருந்தன்மைக்கு முதலிடம் உண்டு. அவர் எழுதி வெளிவந்தவற்றுள் 'பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ கவனம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் பெரியாரை அவருக்கு உகந்த மாதிரி மறுவாசிப்புச் செய்த முயற்சியாகவே ஒரு வரையறைக்குள் அது சுருக்கிப் பார்க்கப்பட்டது. அப்படியும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக அதுவே இருக்கும். அந்த நூலுக்கு விமர்சனம் எழுதும்படி இடதுசாரி சாய்மானமுள்ள ஒரு இளைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவரோ விமர்சனம் எழுதாமல், அதன் உந்துதலால் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். இது சுபவீக்குக் கிடைத்த வெற்றியென்றே சொல்ல வேண்டும். நான் அந்தக் கட்டுரையைக் கவிதாசரணில் வெளியிட்டேன்- ஆக்கபூர்வமான விமர்சனப் பார்வைகளை எதிர்பார்த்து. அது கைகூடவில்லை. மாறாக, அந்தக் கட்டுரையை வாசித்த புகழ்பெற்ற மருத்துவரும் பெரியாரியவாதியுமான கவிஞர் ஒருவர் ஒரு போட்டியில் முதற்பரிசுக்குரியதாகத் தேர்வு செய்திருந்தார். இது சுபவீக்குக் கிடைத்த இன்னொறு வெற்றி. எனக்கு மகிழ்ச்சிதான். கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது - ஆழம் இவ்வளவு இலோசா என்று. அர்த்த நீர்ப் பரப்பில் சொற்கள் அலையற்று மிதப்பது நிகழத்தான் செய்கின்றன.
அந்த நூலை அடியொற்றியே அண்மையில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ யைக் கொண்டாட்டமாகத் துவங்கியுள்ளார் சுபவீ. இதன் மூலம் திராவிட இயக்கம் தமிழுக்கு மட்டுமானதல்ல என்று காலங்கடந்த காலத்தில் மீண்டுமொருமுறை நினைவு கூரப்பட்டிருக்கிறது. ஒரு வேளை, திராவிட இயக்கவாதிகளுக்கு 'திராவிடம்’ என்னும் சொல் வெறும் இடுகுறிப் பெயராகவே தடித்துப் போயிருக்கலாம். அந்தச் சொல்லுக்கு எத்தனை ஆயிரம் விளக்கங்கள், விவரிப்புகள் செய்யப்பட்டபோதும் அடிப்படையில் அது தமிழுக்கான சமஸ்கிருதச் சொல்தான் என்பது அறுபடாத ஊடிழையாக நினைவு கூரப்பட்டிருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியையும் பார்ப்பனக் கலாச்சாரத்தையும் அடிப்படை அலகுகளாகக்கொண்டு சமூகத்தை உலைத்துக் கட்டமைத் ததுதான் பார்ப்பனர்கள் சாதித்த வெற்றி.
அந்தப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தமிழர் இயக்கம் - நீதிக்கட்சியைப் போலன்றி தமிழைத் தாய்மொழியாகவும் சமூக மொழியாகவும் கொண்டவர்களின் தமிழர் இயக்கம் (இன்றைய நான்கு தென் மாநிலங்களிலுமே எங்கெல்லாம் சந்தைகளும் படைக்குடியிருப்புகளும் இருந்தனவோ அங்கெல்லாம் தமிழ் சரளமாகப் புழங்கப்பட்டதாக கால்டுவெல் சொல்கிறார்.) பார்ப்பன மொழியிலேயே 'திராவிட இயக்கம்’ என்று அழைக்கப்பட்டதுதான் ஒரு வினோதக் கோணல். 'தமிழ்’ என்பதைவிட 'திராவிடம்’ என்பது மதிப்புள்ள சொல்லாகப் பார்க்கப்பட்டிருக்கக் கூடும். தமிழைவிட ஆரியம் உயர்ந்தது என்பதன் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம். (தமிழைக் கூலிக்காரர்களும் கூலிக்காரர்களோடு தொடர்புடைய வர்களும் பயன்படுத்திய மொழியாக இழித்துப் பார்ப்பது நெடுங்காலமாக நடந்துவந்திருப்பதோடு திராவிட ஆட்சியின் ஆங்கிலப் பள்ளிகளில் இன்றும் அது உறுதி செய்யப்படுகிறது.
திராவிடம் என்ற சொல்லைத் திண்ணை வேதாந்தத்தர்க்கமாக்கவே கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் 'திராவிடம், அல்லது திராவிட நாடு’ என்று தொண்டை வறளக் கத்தியாகிவிட்டது. இதெல்லாம் சுபவீ அறியாததல்ல. ஆனாலும் அந்த வறட்டுக் கூச்சலைப் புத்துயிர்த்துப் பின்புலமாக்கும் விதமாகத்தான் அவர் முன்வகிப்பில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் சுபவீ தன் இடத்துக்கான அறிவார்ந்த அடைதலைத் தேட மறுத்துவிடுகிறார், அல்லது கூடித் தொலைத்து விடுகிறார் என்று நமக்குப் படுகிறது. நம்மிலிருந்து மாறுபடுவதற்கு அவரிடம் மரபான காரணங்கள் நிறையவே இருக்கலாம். மரபின் மீள்பரிமாணம் பார்ப்பான் ஒழிந்த பார்ப்பனச் சாரம் அன்றி வேறென்ன?
பொடா சிறையனுபவத்துக்காளானவர் சுபவீ. இன்று அவரையும் அவரது நான்கு பழைய நண்பர்களையும் கலைஞர் பொடாவிலிருந்து விடுவித்திருக்கிறார். அதற்கு முன்பே அவர் கலைஞரின் அண்மையை விதித்துக்கொண்டுவிட்டார். அது ஒன்றும் சாதாரண அண்மையல்ல. அவரைப் போன்ற பொடா கைதிகள் புதிய அண்மையில் கல்லைப்போல் கனத்து மரத்திருக்க வேண்டிய அண்மை. இருவர் சேரும்போது ஒருவரையொருவர் பாதிக்கலாம். ஆனால் ஆள்கிறவர் பாதிப்படைவதென்பது ஆளப்படுகிறவரின் சரிவுக்குக் கிடைக்கும் ஆறுதலாக மட்டுமே இருக்கும்.
'பேரறிஞர் அண்ணா’ என்று தம்பிமார்களால் பெரிதும் போற்றப்பட்டவர் 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று அறைகூவல் விடுத்தார். அடைந்தாலும் அடையாவிட்டாலும் சுடுகாடு நிச்சயம் என்றாலும், ஏதோ 'அருள்வாக்கு’ மாதிரி அப்போதே சுடுகாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு மாயத் தொடர்பாகத் திராவிடநாடு உருவாக்கப் பட்டுவிட்டது. அதாவது, திராவிட நாடு என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ஒரு சுடுகாட்டுத் தத்துவம் என்பதாக. அண்ணாவின் உடலுக்குச் சுடுகாடு கிடைக்கவில்லை. அதை இருப்பில் வைத்துக்கொண்டு இடுகாடுதான் உருவாக்கப்பட்டது.
அண்ணாவின் இலட்சியம் திராவிடநாடு அடைவதுதான். அது எல்லோருக்குமான திராவிடநாடு. அதை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை; சந்தர்ப்பம் கருதிப் பரண்மேல் பத்திரப்படுத்தி வைத்தார். அண்ணாவின் கனவை நனவாக்கும் கடமை தம்பிமார்களுக்கு உண்டுதானே. அவருக்கு ஆயிரம் பல்லாயிரம் தம்பிகள் இருக்கலாம். ஆனால் 'வெட்டிவா என்றால் கட்டிவரும்’ காளையாக வெடித்துக் கிளம்பிய ஆருயிர்த் தம்பி கலைஞர் மட்டும்தான். ஆகவே அவர் அண்ணாவின் சூளுரையை ஏற்று அவரது ஆத்மா சாந்தியடையும் பொருட்டு அரிதின் முயன்று திராவிடப் பேரரசையே வென்றெடுத்த மூலநாயகனாகிவிட்டார். ஒரு வேறுபாடு- இது அவரின் சொந்தத்துக்கான பேரரசு. நாம் சொல்லும் திராவிடப் பேரரசு நான்கு திராவிட மாநிலங்களிலும் கொடிகட்டிக் கோலோச்சும் 'சன் குழுமம்’ அல்லாமல் வேறென்ன? நுகர்வியமும் உலகமயமும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும்? யார் சாதித்தார் என்பதை விட யார் வழியும் துணையுமாய் இருந்தார் என்பதை நினைவுகூர்வதாகத்தான் கலைஞர் கண்ட பேரரசாக இதை நாம் அடையாளப்படுத்துகிறோம்.
‘சன்’னுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பார் கலைஞர். உண்மையாகவே இருக்கலாம். ஆனால் உலகம்-குறிப்பாக திராவிட உலகம் அதை நம்ப வேண்டுமே. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் என்கலாம். ஆனால் அது ஒரு பேச்சுக்குத்தான், அல்லது சட்ட முறைமைக்குத்தான். 'சன்’னைத் தமிழ்நாட்டில் யாரும் தகர்க்கத் துணிய மாட்டார்கள். ஜெயலலிதா எடுத்த சிறு முயற்சி அவர் தோல்வியோடு ஏறக்கட்டப்பட்டது. இன்று கலைஞர் ஆட்சி நடக்கிறது. 'சன்’னைத் தாக்கினால் அது அறிவாலயத்தைத் தாக்கியதாகத்தான் அர்த்தம். ஆட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். பதவி மேல் துண்டு மாதிரி- தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் கொள்கையை விடமுடியுமா? அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா? அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா? பதறமாட்டாரா? பதறித் துடிப்பார் என்றால் அதற்குப் பெயர்தான் சொந்தம். 'தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்’ என்பார்கள். ஆனால் இங்கு கலைஞர் தானும் ஆடுவார். தன் சதையையும் ஆட்டுவிப்பார் என்பதுதான் உண்மை.
சன் குழுமத்துக்குக் கலைஞர்தான் தலைக் காவிரி. இன்று வழியெங்கும் வந்தடையும் பல்லாயிரம் நீர்க்கால்களுடன் அகண்ட காவிரியாய் விரிதல் பெற்றாயிற்று. ஒரு பேச்சுக்காக, தலைக்காவிரியே அடைபட்டுப் போனாலும் காவிரி இருக்கும். மணலும் மணலடி நீருமாகவேனும் பிழைத்துக் கிடக்கும். ஆனால் தலைக்காவிரி எங்க போகும்? பெற்ற பிள்ளைகளிடம் இரந்து நிற்கும் அன்னைபோல அது காவிரிக்காகத்தான் சுரந்து கொண்டிருக்கும்.
மாறனின் மக்கள் அம்பானியின் பிள்ளைகளைப்போல அல்லது அவர்களுக்கும் மேலான தொழில் மூளை கொண்டவர்கள். தங்கள் வர்த்தகப் பேரரசின் உறுதிக்கும் விரிவுக்கம் வழிசெய்துகொள்ளத் தெரிந்தவர்கள். 'நம்பர் ஒன், நம்பர் ஒன் - தினகரன் தமிழில் நம்பர் ஒன்’ என்பது போன்ற சீழ் மணக்கும் வர்த்தக மொழியை உற்பத்தி பண்ணக் கற்றவர்கள். வலிய சிறகுகளோடு பறக்கத் தெரிந்தவர்களுக்குத் தங்கள் தாத்தாவின் அளவற்ற அன்பு சில சமயங்களில் வேண்டாத சுமையாகக்கூட இருக்கலாம். ஆயினும் அந்த அன்பு அவர்களை இன்னமும் கிளிக்குஞ்சுகளைப்போல உள்ளங்கையில் வைத்து நீவிக்கொடுத்து முத்தமிடவே முந்துகிறது. இது கலைஞர் தன் கருணைமயமான பெயராகவே மாறிவிடும் உச்சபட்ச பிறவிப்பயன். எங்கே நாம் நாமாகவே இருக்க முடிகிறதோ அங்கே நாமாகவே நம்மை மடைமாற்றிக் கொண்டுவிட்டால் நமக்கும் நம்மைத் தாங்கிப்பிடித்தவர்களுக்கும் எவ்வளவு நிம்மதி!
பார்ப்பனர்களும் பனியாக்களும் எந்த அரசையும் தங்கள் சேவை நிறுவனமாக மாற்றியமைத்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள். வணிக மொழியில் சொல்வதெனில், முதலாளிமார்கள் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தங்கள் நலன் பேணுவதற்காக சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது அமைச்சர்களைத் தங்கள் சம்பளப்பட்டியலில் சேவைத்தரகர்களாக அமர்த்திக் கொள்வார்கள். அரசியலின் முரண் பருவப் பனிச்சருக்கில் பாதுகாப்பாக ஊன்றி நிற்கப் பயன்படுகின்ற கைத்தடிகள் அவர்கள். சமயத்தில் முதலாளியே அப்படியோர் உறுப்பினராகவோ அமைச்சராகவோ ஆகிவிட்டால் தரகுப் பணம் மிச்சம்; தொழில் பெருக்கத்துக்கும் பாதுகாப்பு. ஆனால் அரசியல் வாழ்வு தான்தோன்றித்தனமான தட்பவெப்பங்களில் சிக்கிக்கொள்ளும் போது அதுவே தொழிலைக் கவிழ்க்கும் புயலாகவும் மாறிவிடும். அதனால் எதார்த்தத்தில் நாணயப்பற்றாக்குறையுள்ள அரசியல்வாதிகள் தாம் பெருமுதலாளி களாவார்களே தவிர, நல்ல முதலாளிமார்கள் தங்கள் அரசியல் கைத்தடிகளோடே தொழிற் பேரரசர்களாய் சிகரம் தொடுவார்கள்.
எந்த அரசியல்வாதியும் முதலாளியான பிறகு அரசியலை விட்டு விலகியதில்லை என்பது சமூகம் சந்திக்கும் பின்னடைவு. பலர் உழைப்பில் மண்ணள்ளிப் போடும் தொழில் நேர்மையற்ற வன்செயல். பணத்தைவிட அதிகாரப் போதையில் கரைந்து போகிறவர்களின் அழிச்சாட்டிய ஆட்டம் அது. சாராய வியாபாரிகள் பலர் அரசியலினூடாகப் பயணித்து கல்வித் தந்தைகளான பிறகு அரசியலும் சாராயமும் அளிக்க முடியாத வருமானத்தோடும் 'புகழ்’ மணத்தோடும் வாழ்ந்து காட்டுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அரசியல் முதலாளிகள் - குறிப்பாகப் பல்மாநில, பன்னாட்டுத் தரத்தை எட்டிய திமிங்கிலங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்றலாம். சமூக நல்லறம் பேணும் சாக்கில் அதற்கொரு சட்டமே கொண்டுவரலாம். அரசியல் அதிகாரம் பெற்றவன் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்கிறவனாகவும், பெருமுதலாளி தன் பேரரசை விரிவுபடுத்துவதற்குகந்த பன்னாட்டுக் குடிமகனாகவும் தகவமைத்துக் கொள்வதே அந்த நல்லறம். இதைக் கலைஞர் தன் கவிதைத் தமிழால் எப்படிச் சித்தரிப்பார் என்பது 'மில்லியன் டாலர்’ கேள்வி. எல்லாம் பணத்துக்குத்தான் என்பார்கள். அது வயிற்றுக்கான உண்மை. பணத்தை வென்ற பின் எல்லாம் அதிகாரத்துக்குத்தான் என்னும் மண்டை கனத்துக்கான உண்மையும் உண்டு.
கலைஞர், அரசியல் கலாச்சாரத்தில் ஊறித் திளைப்பதற்கென்றே பிறவியெடுத்தவர். அதன் உடன்போக்குப் பரிமாணங்களோடு, புறம்போக்குப் பரிமாணங்களையும் விஸ்தாரமாக வளர்த்தெடுத்து அவற்றை ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாற்றிக்காட்டியவர். தமிழ்ச் சமுதாயத்தின்மேல் தன் அரசியல் சாகசங்களையெல்லாம் ஒரு மாய வித்தைக்காரனைப்போல் செய்நேர்த்தியோடு பரிசோதித்து வெற்றி கண்டவர். மூச்சுக்கு மூச்சு தமிழைச் சொல்லியே தமிழ் மக்களை போதையூட்டி வசப்படுத்தியவர். தன்னை சாமானியனாக சித்தரித்தே சாமானியர்களை வென்றெடுத்து இன்றைக்கு கொழுத்த முதலாளிய மனோபாவத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர். முத்தமிழ் வித்தகர் என்றும் தமிழினத் தலைவர் என்றும் பட்டங்கள் தரித்தே தமிழகத்தில் தமிழை ஒரு வழி செய்துவிட்டுத் தன் தொப்பிக்கு மேலும் ஒரு வெற்றி இறகாக அதைச் செம்மொழிப் பட்டியலில் தள்ளிவிட்டவர். கட்சி அரசியல் கலைஞர் மீது முடிவில்லாத விமர்சனங்களை வைக்கும் என்றாலும், அவை ஒரு வகையில் அவர் ஓய்வில்லாமல் இயங்குகிறார் என்பதற்கும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கித் தன் சாமர்த்தியங்களைப் பலன்களாக்கிக்கொள்கிறார் என்பதற்குமான சான்றுகள்தாம்.
நண்பர்கள் விமர்சகர்கள் எனும் பாகுபாடில்லாமல் கலைஞரிடம் ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் பல இருக்கும். அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கின்றவன் குறைந்தபட்சம் தனக்கு உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியவன். எனக்கு அவரிடம் பிடித்த தலையாய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது 'கலைஞர்’ பட்டம். அவருக்குப் போல அது வேறெவருக்கும் அத்தனை கச்சிதமாய்ப் பொருந்திவிடாது. மற்றொன்று அவரது வாசிப்பு. இந்த வயதிலும் அவர் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல், குறிப்பெடுக்காமல், அதற்கான விழாவில் பேசுவதில்லை. அப்போதெல்லாம் அவர் ஒரு அரசியல்வாதி என்பதே மறந்துபோய் நாம் அவரது ரசிகனாய்விட முடிகிறது.
இவ்வகை சிறப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கேள்விக் குள்ளாக்கும் விதமாக அண்மையில் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்க்குரலாக, யோசிக்கத் தெரிந்தவர்களிடமிருந்து ஒரு முணுமுணுப்பு ஓங்கி ஒலித்தது. அது 'சன் டிவியை காப்பாத்தறதுக்காக தமிழ்நாடே தார வார்ந்திடும் போலிருக்கு’ என்பதுதான். நதி நீர் சிக்கலை கலைஞர் எதிர்கொண்ட விதம் பற்றிய விமர்சனம் அது. எந்தவித புள்ளிவிவரத்தோடும் நிரூபித்துவிட முடியாத ஒருவகை பாமரத்தனமான குற்றச்சாட்டுதான் என்றாலும், உண்மைகள் சாட்சிகளால் கொல்லப்படுவதும், அரசியல் ஒருபோதும் சீசரின் மனைவியர்களைப் பிரசவிப்பதில்லை என்பதும் அக்குற்றச்சாட்டின் முகமதிப்புகள். கலைஞரைக் கட்டுப்படுத்தும் காரணியாக 'சன் குழுமத்தை’ அடையாளப்படுத்துவது ஒருவகையில் உண்மையாக இருக்கலாம் என்றாலும் அதுமட்டுமே முழு உண்மையாகிவிடாது. அவரின் மொத்த செயல் தந்திரத்தின் ஒன்றைக் காரணியாக அது ஒருநாளும் இருந்துவிட முடியாது. ஆகவே உண்மைக்கு அருகில் நகரும் முயற்சியாக நாம் மேலும் சில கேள்விகளை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.
கலைஞர் எதன்பொருட்டும் ஓர் அறைகூவல் விடுத்து அதை உரிய காலத்தில் நிறைவேற்றிக் காட்டும் வல்லமையும் வைராக்கியமும் உள்ள மனிதர். எனில், தம் நாட்டு மக்கள் மீது அவருக்கு ஏதேனும் சொல்லற்ற சினம் இருக்கக்கூடுமா? இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி? இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்தது சங்க காலத்திற்குப் பின் வெகு அபூர்வமாகத்தான். ஏனெனில் அதை ஆக்கிரமித்தவர்கள் அந்நிய மொழியினராயிருந்தனர். தமிழின் வாழ்வு அது மக்கள் மொழியாய் அருகுபோல் வேரோடி நின்று தன்னைக் காப்பாற்றிக்கொண்டதுதான். இந்திய விடுதலைக்குப் பின்னரே ஆட்சிமொழியாக அதற்கொரு வாய்ப்பு வந்தது.
தமிழைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்தவர்கள் - குறிப்பாகக் கலைஞர் அதைக் கிடப்பில் போட்டார் எனில் உள்ளூர அதற்கொரு அர்த்தம் அல்லது கோபம் இருக்க வேண்டும். கர்நாடகச் சிறையில் குணாவும், நெடுஞ்செழியனும் அநியாயமாக ஆண்டுக் கணக்கில் வாடியபோது தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் முறையிட்டு விடுவிக்கக் கோரினர். கலைஞர் ஒரு வார்த்தை சொன்னால் விடுவித்துவிடுவார் என்பது நிலை. கலைஞர் சொல்லவில்லையே. காரணம் குணா அவரை 'வடுகர், வந்தேறி’ என்று தன் நூல்களில் அடையாளப்படுத்தியதற்கான கோபமாக இருக்க வேண்டும். கலைஞர் அவரை மன்னிக்கத் தயாராயில்லை. ஆகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்வதற்கான பட்டறிவும் உயர் பொறுப்பும் பெற்றவர்தான் என்றாலும் அற்பக் கோபங்கள் அவரை ஆளவே செய்யும்போலும். ஆகவே நாம் இதையும் கேட்கலாம்: தமிழினத்துக்கு அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார்? அவர் இடத்தில் ஓர் அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதி இருந்து ஆற்றிவிடக்கூடிய பணிகளுக்கப்பால் அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் என்பதுதான் இக்கேள்வியின் அர்த்தம். இதன் தொடர்ச்சியாக, தமிழர்களுக்கு அவர் என்ன பாடம் புகட்ட நினைக்கிறார் என்பதும் புறக்கணிக்க முடியாத கேள்வியாகிறது.
முன் எப்போதையும்விட இந்த ஆட்சிக்காலத்தில்தான் கலைஞர் தமிழ் மக்களுக்குப் பல அநீதிகளை இழைத்து வருகிறார் என்று ஒரு நண்பர் மனம் வெதும்பிச் சொன்னார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியாயிருந்தது. உண்மையில் இந்த ஆட்சிக்காலத்தில்தான் அவர் மிகுந்த வள்ளல்தன்மையோடு கூடுதல் நலம் செய்கிறார் என்பதாகவே ஒரு கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதாகூட அவருக்கு உடனடி அச்சுறுத்தலை விளைவிக்க முடியாமல் திணறுகிறார் என்பதாகப் பேச்சு. ஆனால் நண்பர் சொன்னதைக் கொஞ்சம் தொலைக் நோக்குப் பார்வையில் யோசிக்கும்போது இனவியல், பொருளியல், சமூகவியல் ரீதியாக சரியென்றே தோன்றுகிறது. 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்றொரு கருத்து உண்டு. அது இன்று அர்த்தமற்ற கூற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. சோழர்களைக் கொண்டாடும் கலைஞர் காலமும் அப்படியொரு பார்வையில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் நண்பரின் எடுத்துரைப்பு அர்த்தம் பெறுகிறது. எடுத்துரைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை தேற்றங்களாகும்.
தமிழ் மக்கள் நாம் அறிந்த அளவில் தொல்காப்பியர் காலத்திலிருந்து அந்நியக் கலாச்சாரங்களால் தின்னப்பட்டவர்களாகவும், பின்னர் அந்நியர் ஆளுகையால் அடக்கப்பட்டவர்களாகவும் இரண்டாயிரம் ஆண்டு அடிமை வாழ்வைச் சுவைத்துக் களைத்தவர்கள். ஆகவே, அடிமைத்தனம் அவர்களின் இரத்தச் சிவப்பணுக்களாகவே ஊறிவிட்டது என்று சொன்னால் அது தப்பில்லை. கேரளர்கள், கர்நாடகர்கள், ஆந்திரர்கள் யாவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழர்களை அடக்கி ஆண்டவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். இன்றும்கூட அவர்கள் எதிர்த்தடிக்கிறவர்களாகவும் தமிழர்கள் தாழ்ந்துபோகிறவர்களாகவுமே நிலைமை நீடிக்கிறது. அதனால்தான் இன்றைக்கு மற்ற மாநிலங்களில் போல் 'மண்ணின் மைந்தர்கள்’ இயக்கம் தமிழ்நிலத்தில் கெட்டிப்படவில்லை என்று தோன்றுகிறது.
அடித்தட்டுத் தமிழ் மக்கள் இன்று வரை பேணிவரும் ஒரு நல்லம்சம், நாட்டில் அரசியல் ஊடறுப்புகளால் அந்நியத்தனங்கள் கோலோச்சினாலும், ஏதோ கண்மறைவில் நடத்தப்படும் ஒண்டிக் குடித்தனம்போலவும், காற்றக்கு அணைந்துவிடாமல் குடங்கையுள் நின்றொளிரும் கைவிளக்கு போலவும் அவர்கள் தங்கள் தொன்மங்களையும் கலாச்சாரத் திளைப்புகளையும் வழிவழி வரும் பண்பாக்கங்களாகக் காத்து வருகிறார்கள் என்பதுதான். மற்றபடி சாதியும் தீண்டாமையும் சமூக அசைவுகளைத் தீர்மானித்தபின், 'இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன?’ எனும் கோட்பாடே கூடுகட்டிக்கொண்டுவிட்டது. நம்மவனா, பிறத்தியானா என்னும் பாகுபாடில்லாமல் ஆள்கிறவன் எவனாயிருந்தாலும் அந்நியனே என்னும் மனத்தயாரிப்பில் வாழப் பழகிக்கொண்டுவிட்டனர்.
முன் சொன்னதுபோல் 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்பது உண்மையில் பார்ப்பனச் செழிப்பில் எழுந்த, குடிபடைகளை உள்ளடக்கிக்கொள்ளாத புறமதிப்பீடுதான். சோழர்கள் காலத்தில்தான் அரச நீதியும் அரண்மனை ஆதிக்கமும் பார்ப்பன மயமாயின. தேவதாசி முறையும் தீண்டாமையும் கோயில்களிலும் குடியிருப்புகளிலும் வலுப்பட்டன. இராசராசன் தன் அண்ணனைக் கொன்ற ரவிதாசன் என்னும் பார்ப்பானைச் சிரச் சேதம் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் மனுநீதி அனுமதித்தபடி அவன் தலையைக்கூட மொட்டை அடிக்க முடியவில்லை. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அந்தக் கொலைகாரனையும் அவனது சுற்றத்தையும் போதிய உதவிகள் வழங்கி வேற்றிடம் செல்லும்படி வேண்டிக் கொண்டதுதான்.
மன்னன் ஆள்கிறான் என்பது சண்டைக்காலத்தில் மட்டுமே அறியப்படுவதாயிருந்தது. மற்ற காலங்களில் மன்னனுக்குப் படை திரட்டித் தருகிற கட்டைப் பஞ்சாயத்துக் கங்காணிகளின் வரைமுறையற்ற அத்துமீறல்களால் ஆசீர்வதிக்கப்பட்டதுதான் பொதுச் சமூக வாழ்வு.
வழிவழியாக இப்படி நசுங்கிக்கிடந்த தமிழ்மக்கள் அநியாயங் களுக்கெதிராகத் தாங்களாகவே திரண்டெழுவார்கள் என்பது வீண் கனவு. அவர்களைத் தட்டியெழுப்பவும், வழி நடத்தவும் மூர்க்கம் மிகுந்த தலைமை வேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களைப் போல் பொய்த்தோற்றம் காட்டி வந்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்கள்தாம் திராவிடக் கட்சிக்காரர்கள். இன்றைய திராவிட இயக்கம் வீரமணி நடத்தும் மடம்தான் எனினும், திராவிட இயக்கம் வேறு, திராவிடக் கட்சிகள் வேறு என்னும் அடிப்படைப் புரிதலை நாம் தவறவிட்டுவிடக்கூடாது.
திராவிடக் கட்சிக்காரர்களில் முதன்மைப் பாத்திரம் பகிப்பவர்தாம் கலைஞர் கருணாநிதி. கல்லக்குடி வீரராகக்கள அரசியலில் இறங்கியவர். பராசக்தி வசனமாக மக்களை எழுச்சி பெற வைத்தவர். ஆனால் அது ஒரு காலம். சொந்தங்கள் தன்னைத் தின்னக்கொடுக்காத காலம். இன்றோ, தன் எழுபதாண்டு அரசியல் முன்னெடுப்பில் என்னவாக வளர்ந்து, தமிழ் மக்களுக்கு எதை விட்டுவைத்திருக்கிறார் என்னும் கேள்விக்குரியவர். உலகெங்கும் உள்ள அரசியல் தலைமைகளை விடவும் அதிக விவரத்தோடு தமிழ் மக்களின் பாமரத் தன்மையைத் தன் அசுர செல்வாக்குக்குப் பயன்படுத்திக்கொண்டதைத் தவிர, தமிழகத்தின் சாமான்ய மனிதனுக்கு அவர் எந்த ஏறு முகத்தை முன்மொழிந்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் நுட்பமாக யோசித்தே ஆக வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானதும் கலைஞரும் சன் தொலைக்காட்சியும் அடித்த லூட்டிகளைப் பார்த்த பிறகு தூங்கும் தமிழகத்துக்கே ஒரு சுய விழிப்பு வந்திருக்கிறது. அப்படி வந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களின் கவனத்தைக் காவிரியிலிருந்து திசை திருப்புவதற்கென்றே கலைஞர் தன் மகள் கனிமொழியைக்கொண்டு 'ஊரே கேள் நாடே கேள்’ என்னும்படி சென்னை சங்கமம் நடத்திக்காட்டினார் என்று பேசாத ஆள் இல்லை. கலைஞர் அதை அறியாதிருக்க வாய்ப்பில்லை.
இடைக்காலத் தீர்ப்பு, இடைக்கால நிவாரணம் என்பதெல்லாம் இறுதியில் உறுதி செய்யப்படும் கூடுதல் பலன்களுக்கான அடையாள முன்மதிப்பீடுகள்தாம். காவிரியின் இடைக்காலத் தீர்ப்பு தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீர் வழங்கியது. இறுதித் தீர்ப்பு இதைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குறைந்தபட்சம் 1 டிஎம்சியாவது அதிகம் கொடுத்துச் சமாளித்திருக்க வேண்டிய சிக்கல். ஆனால் வழங்கியதோ 185 டிஎம்சிக்கும் குறைவாக. இந்த உண்மையை ஒருமுறைக்கு இருமுறை உற்றுப்பார்க்கக்கூட பொறுமையும் பொறுப்புமில்லாமல் தமிழகத்துக்கு 430 டிஎம்சியும் கர்நாடகத்துக்கு வெறும் 270 டிஎம்சியும் வழங்கப்பட்டுள்ளதாக 'சன் தொலைக்காட்சி திரும்பத் திரும்ப உருவேற்றிக்கொண்டிருந்ததில் தமிழகமே அசைவற்று உறைந்துபோனது.
இந்த உறைதலுக்குக் காரணம் தமிழகத்துக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட நம்ப முடியாத கொடை மட்டுமல்ல, கர்நாடகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் வரலாறு காணாத வன்கொடுமை பற்றிய அச்சமும்தான். அதற்கேற்றாற்போல் கலைஞரும் உடனடியாக 'மன நிறைவளிக்கும் தீர்ப்பு’ என்று திருவாய் மலர்ந்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனோ 'திருப்தி, திருப்தி, திருப்தி’ என மும்முறை சத்தியம் செய்தார். தமிழகத்திற்கு எதிராக அவர்கள் அன்று மூட்டிய தீ கர்நாடகாவில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. 430 டிஎம்சி நீர் என்பது தஞ்சாவூர் வரை பெய்யும் மழையெல்லாம் சேர்த்துவருமாம். 430 டிஎம்சியைப் பார்த்ததும் நான் மலைத்துப்போய் மேலதிக விவரம் சொல்ல மாட்டார்களா, கர்நாடகத்தில் தமிழர் கொலைகள் தடுக்கபடாதா என்று தவித்தேன்.
அடுத்த 24 மணி நேரம் உண்மை நிலை அறிய மாட்டாத குழப்பத்திலேயே தமிழகம் திணறிக் கொண்டிருந்தது. மறுநாள் செய்தித்தாளைப் பார்த்த போதுதான் தமிழகம் அப்பட்டமாக வஞ்சிக்கப்பட்ட கொடுமை தெரிந்தது. பழ. நெடுமாறன்தான் முதலில் கண்டனம் தெரிவித்தார். அந்த நிலையிலும்கூட 'நமக்குக் குறைய வாய்ப்பில்லை. கர்நாடகத்திற்குத்தான் கொஞ்சம் கூடுதலாக குறைந்துவிட்டது’ என்று கலைஞர் உருகினார். தமிழகம் தன்பாட்டுக்கு அசைவற்றுத் துயில்கொண்டிருக்க, கர்நாடகத்தில் அலைஅலையாய் கண்டனப் பேரணிகள் எழுந்தன. அவற்றை 'சன் செய்தி; மிகுந்த கொண்டாட்டத்தோடும் அவர்களைப் பகைத்துக்கொள்ளாத பக்கச் சாய்வோடும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அது பயன்படுத்திய மொழி தமிழர்களைப் புண்படுத்திய கத்தி. மேலதிகம் பெற்ற கர்நாடகம் ஓலமிட்டுக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட தமிழகம் விடியவிடியக் கூத்தாடியவனின் கனத்த நித்திரைபோல் அயர்ந்து கிடக்கிறது.
கலைஞர் தன் சாதுர்யத்தால் தமிழகத்தைத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டார். கர்நாடகத்தின் அராஜகத்திற்கெதிராக குரலுயர்த்தி நியாயம் பேசுபவர்களைப் பார்த்து 'அது நம் அண்டை மாநிலம்தான். பகை நாடல்ல’ என்று உபதேசம் செய்கிறார். தமிழக வண்டி வாகனங்களை அனுமதிக்காதது மட்டுமல்ல, அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்துகின்றனர் கர்நாடக சமூக விரோதிகள். எல்லைக் கடந்துவந்து 'ஓசூரையும் அபகரிப்போம் என்று ஆர்த்தெழுகிறார்கள். எறிதழலை சூறையிட்டாற்போல் எங்கெங்கும் கூக்குரல் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞரின் தமிழ்நாடு பிரேதங்களின் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது. அப்படித் திகழ வைப்பதற்கென கலைஞர் வெகு நுட்பமாகச் செயல்பட்டிருக்கிறார்.
இதை எந்த விதமாய்ப் புரிந்துகொள்வது?
தமிழக நலனை லாவணிக் கச்சேரி செய்தே தொலைத்துக் கட்டுவதில் மட்டும் திராவிடக் கட்சிகளுக்குள் அப்படியோர் ஒற்றுமை. மக்கள் பிரச்சனைகளைக் கிளறுவதன் மூலம் கலைஞரை ஓரங்கட்டும் தன் எதிர்கால அரசியல் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் மருத்துவர் ராமதாசும்கூட கலைஞர் போராட்டாம் வேண்டாம் என்றதும் சரி என்று ஒதுங்கிக்கொண்டார். மக்களைத் தட்டி எழுப்பி, உண்மையைச் சொல்லி, களமிறக்கி, இந்திய அரசின் செவிட்டுக் காதுக்கு கேட்கும்படியாக எதிர்ப்புப் பேரணி நடத்தவேண்டிய தமிழக முதல்வர், பொய்த் தகவல்கள் கூறித் தமிழர் கவனத்தைத் திசை மாற்றிவிட்டு கர்நாடகாவின் அராஜகத்தைத் தன் சன் டிவி மூலம் தட்டிக்கொடுத்து மகிழ்கிறார்.
இடதுசாரி கம்யூனிஸ்டுகள் தங்கள் அதிகார மப்பால் எத்தனை போக்கிரித்தனமான காரியத்திலும் இறங்கக்கூடியவர்கள் என்பதற்கு கேரளத்தில் அச்சுதானந்தனையும் மேற்குவங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சாரியாவையும் முதலமைச்சர்களாக்கிக் காப்பாற்றி வருவதே போதுமான சாட்சியமாகும். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, பொய்யும் புனைசுருட்டுமாக பேட்டை ரவுடியைப்போல் ஆபாசமாகப் பேசியும் நடந்தும் காட்டுகிறார் அச்சுதானந்தன். அது பற்றிக் கலைஞர் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. பாலாற்றில் தடுப்பணை கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது ஆந்திர அரசு. தமிழகம் எதுகண்டும் பதைக்கவில்லை. தமிழகத்தின் நலன்களும் முன்னுரிமைகளும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழக வரலாற்றிலேயே இல்லாமலாக்கி விட்டவர் கலைஞர்.
அடிமாட்டிலிருந்து அழுகும் பொருள் வரை கேரளாவிற்குத் தமிழ்நாடுதான் அனுப்பி வைக்கிறது. அவற்றை நிறுத்தினால் கேரளம் வழிக்குவந்துவிடும் என்கிறார்கள் அரசியல் ஆத்திரக்காரர்கள். யார் நிறுத்துவது? நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே? ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு புதிய சந்தைகளை உறுவாக்குவதும் இறக்குமதிக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதும் அரசு செய்யவேண்டிய வேலை. ஆனால் கலைஞர்தான் 'சகோதர யுத்தத்திற்கு நான் தயாரில்லை. போவதுபோகட்டும். எஞ்சியது நிலைக்கும்’ என்பதாக புத்தர் வேடம் போடுகிறாரே. கலைஞருக்கு கோபமே வராதா, அவர் எந்த உரிமைகளையும் கோரிப் பெற மாட்டாரா என்பது சிறுபிள்ளைத்தனமான கேள்வி.
தன் பொறுப்பிலுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களையும் துருப்புச் சீட்டாய்ப் பயன்படுத்தி 'நாங்கள் கேட்ட இலாக்காக்கள் கிடைக்காவிட்டால் ....?’ என்று சோனியாவையே பதற வைத்தாரே? உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன? தன் சொந்த நலன்கள் கேள்விக்குள்ளாகும்போது அவர் சிங்கமாயிருப்பாரே தவிர சிறுநரியாய் அல்ல.
இந்தியா முழுமைக்கும் பொருந்துவதான பிற்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தவுடன் தம்மை யாரும்- குறிப்பாக ராமதாஸ்- முந்திவிடக்கூடாது என்னும் வேகத்துடன் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்தாரே. உடனடியாக நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விரைந்து வழிகாண வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாரே? அந்த வேகத்தையும் மிரட்டலையும் மூர்க்கத்தையும் தமிழகத்தைப் பாதிக்கும் நதிநீர் சிக்கல்களில் மட்டும் தன்னுள்ளேயே பதுக்கி வைத்துக்கொள்கிறார். கலைஞர் ஒன்றும் செய்யவில்லையே என்றால், உருப்படியாய்க் கவனம் கொள்ளும்படியாக, தீர்வை வென்றெடுக்கும்படியாக ஒன்றும் செய்ய முனையவில்லை என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பட்டியலிட்டுக் காட்டுவதற்கான சடங்காச்சாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் சகோதர யுத்தத்திற்கு தயாரில்லை என்பதை 'சன் குழுமத்தை’க் காக்கும் உபாயம் என்று சொல்லிவிடுவது கலைஞர் கொண்டிருக்கும் அர்த்தப்பாடுகளில் ஒரு துகளாகத்தான் இருக்க வேண்டும். அவரின் ஒவ்வொரு சிறு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படியெல்லாம் அளந்து செயல்படாமல் போனால் இன்றைய பிரம்மாண்டத்தை அவர் எட்டியிருப்பாரா? ஏதொன்றிலும் அவருக்கு நோக்கம் இருக்கும். திட்டம் இருக்கும். உள்ளூர அவரைப் பாதித்ததற்கான கோபங்கூட இருக்கும்.
இந்திய அமைதிக்காப்புப் படை இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது அவர்களை வரவேற்கும் விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டவர் கலைஞர். சிங்களப் படைகளைவிட இந்தியப் படையே ஈழத்தமிழர்கள் மேல் புரிந்த அட்டூழியங்களும் படுகொலைகளும் காட்டுமிராண்டித் தனங்களும் அளவற்றவை என்பதுதான் அதற்கான காரணம். இன்றைய கலைஞரைப் பார்க்கும்போது, 'தமிழினத் தலைவர்’ என்னும் பெயருக்கு ஒரு பொருத்தம் இருக்கட்டுமே என்றும், பின்னொருநாள் இனங்காக்கும் பேச்சு வரும்போது ஒரு சாட்சியாக இருக்கட்டுமே என்பதற்காகவும்தான் அவர் கலந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால் அன்றே இந்தியப் படை புரிந்த அட்டூழியங்களுக்காக அவர் மத்திய அரசை மன்னிப்பு கோர வைத்திருக்கலாம். ஒருவேளை இந்தியப் படையால் சிங்களர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அப்படித்தான் கோரப்பட்டிருக்கும். ஆகவே அவர் ஒவ்வொன்றையும் அளவெடுத்தாற்போல் திட்டமிட்டே செய்கிறார் என்பது புரிகிறது.
இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கிறது. உலகத்தில் வேறெங்கும் நடக்காத அட்டூழியம் இது. இலங்கைக் கடல் பகுதியில்தான் அதிகம் மீன் கிடைக்கிறது என இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியே சென்றிருந்தாலும் அவர்களைச் சுட்டுக்கொல்வ தென்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். தமிழகம் டெல்லிக்கு கடிதம் எழுதுகிறது. டெல்லி அதை வாங்கி வைத்துக்கொள்கிறது. டெல்லியின் அப்படியொரு மரத்தனத்தை வேறெந்த சந்தர்பத்திலும் நம்மால் காணவியலாது. மீனவர்கள் தமிழர்கள் என்பதால்தான் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால்தான் டெல்லியும் கண்டுகொள்ள மறுக்கிறது.
பல நூற்றுக்கணக்கான இந்தியக் குடிமக்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக் கொல்லப் படுவதை இந்திய அரசு கண்டுகொள்ளாது என்றால் இந்தியாவில் தமிழகத்தின் இடம் என்ன? இருப்பு என்ன? இந்தியா பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்; வெறும் பார்வை ஒன்றே போதும், சிங்கள அரசை அதன் இருப் பிடத்தில் நல்ல பிள்ளையாய் அழுத்தி வைக்க. ஆனால் இந்திய அரசு அதற்குத் தயாராயில்லை. பெரிய நாட்டை அண்டைச் சிறுநாடுகள் பகைத்துக்கொள்வதில்லை என்பது உண்மை எனில், இதிலுள்ள மர்மம் என்னவாக இருக்கும்? என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? இந்திய ஆணையானது அமைச்சகத்தின் கையிலே இல்லை. மாறாக, அதிகார வர்க்கத்தின் கையிலே இருக்கிறது.
அதிகார வர்க்கம் ஆங்கிலேயன் காலத்திலும்கூட பார்ப்பனத் தாக்கம் பெற்றதாகவே இருந்தது. இந்திய சுதந்திரம் என்பதே பார்ப்பன- பனியா சுதந்திரம்தானே?
தமிழ்நாட்டில் வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் ஆட்சித்தலைமையை வகித்ததில்லை. (சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு ஒரு தனிமாநிலமாகச் சுருங்கியபோது ராஜாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆட்சித் தலைமை ஏற்கும் பேறு கிடைத்தது.) ஆனால் ஆட்சியாளர்களை வழிநடத்துகிறவர்களாய் அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டதும், அதிகாரப் பகிர்வில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் இடையே இழுபறி போட்டி எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதிகாரச் சமன்பாடு குலையும்போதெல்லாம் அவர்களுக்குள் உரசல்கள் நிகழ்ந்து வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் கை ஓங்கிவிட்டது. அதை எதிர்த்து அதிகாரத்தில் பங்கு கேட்கவே நீதிக்கட்சி தோன்றியது.
நீதிக்கட்சி பார்ப்பனர்களைத்தான் எதிர்த்ததே தவிர பார்ப்பனியத் தாக்கங்களையல்ல. நிலைபட்டுப்போன கலாச்சாரத்தாக்கங்களின் பின்புலத்தில் ஒருவகையில் எல்லாருமே பார்ப்பனர்கள்தாம். ஒருவர் பிறவிப் பார்ப்பனர் என்றால் மற்றவர் பிழைப்புப் பார்ப்பனர். இதில் ஓரங்கட்டப்பட்டவர்கள் அல்லது ஊறுகாய்போலப் பயன்படுத்தப் பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். ஆங்கில ஆட்சிக் காலத்திலேயே இந்தியா ஒற்றைத் தேசமாகி, அதனுள் தென்னிந்தியா ஒரு கூறாகிவிட்டது. கூடவே, பார்ப்பன எதிர்ப்பை பாரத தேசத்தின் அதிகாரத் தகர்ப்பாகத் திரித்துப் பார்க்கும் மனோபாவமும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் டெல்லிச் செயலகத்தைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழ்ப் பார்ப்பனர்கள். நீதிக்கட்சியானது இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே தேய்ந்து சிதறி, முடிவில் தமிழ்நாட்டை மட்டுமே சேர்ந்த பெரியார் இயக்கமாகத் திரண்டெழுந்தது.
பெரியாரின் 'திராவிடர் கழகம்’ வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாக மட்டுமின்றி, பார்ப்பனக் கடவுள்களை மறுக்கும் இயக்கமாகவும், மேலும் பிரிவினை கோரும் பரப்புரை இயக்கமாகவும் திகழ்ந்து பார்ப்பனர்களை மருட்டும் அளவுக்கு அதிர்வுகளை எழுப்பியது. பெரியாரிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் தேர்தல் அரசியலைத் தெரிவு செய்யும் வரை நாத்திக வேடமும் 'திராவிட நாடு திராவிடர்க்கே’ முழக்கமும் போட்டுக்கொண்டிருந்தனர். ஏக இந்தியாவில் இவை சகித்துக்கொள்ளக்கூடாத அம்சங்களாகவும், தமிழர்கள் அபாயகரமானவர்கள், அடக்கிவைக்கப்பட வேண்டியவர்கள், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகவும் டெல்லி அதிகார மையத்தில் வல்லமை மிக்கதோர் உளவியல் எதிர்வு வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது.
மத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை ஒழிந்து, கூட்டணி ஆட்சிகள் வந்தாலும், தமிழ்நாட்டு ஆளும் கட்சிகள் சுயநலக்காரர்களையும், விதிமீறல் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள டெல்லியின் தயவுக்கு ஏங்குபவர்களையும் கொண்டிருந்ததால், அவர்களது ஆதரவைப் பெறுவதிலும், அதே சமயத்தில் அவர்களை அடக்கி வைப்பதிலும் டெல்லிக்காரர்களுக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பதையெல்லாம் தூக்கிக் கடாசிய பிறகு, கலைஞருக்கு டெல்லி தாய்வீடு மாதிரி. தமிழ்நாட்டுச் சனாதனப் பார்ப்பனர்கள் தமிழை 'நீச பாஷை’ என்று சொல்லிக்கொண்டே (இந்தியாவில் வேறெந்த மொழியேனும் அப்படி அழைக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதுவே தமிழின் தவிர்க்க முடியாத இருப்பை உறுதி செய்கிறது.) தமிழால் வாழ்வதுபோல், டெல்லி அதிகார அரசியலும் தமிழ்நாட்டைத் 'தலித் மாநிலமாக’ அழுத்தி வைத்துக்கொண்டே அதன் ஒத்துழைப்பையும் கோரிப் பெற்றுக்கொள்கிறது.
இந்தியாவில் தமிழகத்தின் இடமும் இருப்பும் இத்தகைய நுட்பங்களோடுதான் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழன் என்பவன் ஐயத்திற்கும் அவமதிப்பிற்கும் உரியவன் என்பதாக அந்த உறுதிப்பாடு நிலைத்துவிட்டது.
இந்தியாவில் உள்ள அடிமைத் தமிழனுக்கே இந்த கதி என்றால், முறையான இராணுவமும் ஆள்வதற்கு ஒரு நிலப்பகுதியும் வைத்துக்கொண்டு தனிநாடு கோரும் ஈழத்தமிழன் எவ்வாறு சகித்துக்கொள்ளப்படுவான்? ஒருவேளை, நாளை ஈழப் புலிகள் முழு இலங்கையையும் தங்கள் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிட்டால், அப்போது பங்களாதேஷ் விடுதலையை ஆதரித்தது போல் சிங்கள விடுதலைப் போரை இந்தியா ஆதரிக்கக் கூடும்.
இப்படியொரு சூழலில் கலைஞர் இந்திய இறையாண்மையைத் தாங்கி நிற்கும் கல்தூணாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். 'காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட நேர்தால் நான் என் பதவியைத் துறப்பேன்’ என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சொன்னதும், நீர் கிடைக்காமல் போவதைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல், இந்திய இறையாண்மைக்கு ஊறு நேர்துவிடுமே என்றுதான் முன்னாள் பிரிவினைவாதியாகிய கலைஞர் கவலைப்படுகிறார். இந்திய ஒற்றுமை சிதறி, கர்நாடகமும் தமிழ்நாடும் தனித்தனி நாடுகளாகிவிட்டால் தண்ணீர் பெற வழியேதும் இல்லையா என்ன? நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா? எல்லாரும் மாநில நலன் பேணுகிறவர்களாய்க் கெட்டிப்பட்டு வரும்போது கலைஞர் மட்டும் இந்தியராய் இருக்க முற்படுவது ஒருவகையில் பாராட்டுக்குரியதுதான் எனினும், அது தமிழர் நலனையும் பாதுகாப்பையும் காவு கொடுக்கவோ அல்லது காட்டிக்கொடுக்கவோ அல்ல. ஒரு துணிச்சல் உள்ள இந்தியனாக மீனவர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சில அதிரடி முடிவுகளை அவர் அறிவித்திருக்கலாம்.
கலைஞர் ஏன் தன் வல்லமையைப் பயன்படுத்தக்கூடாது? தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இனி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில்? இந்திராகாந்தி உடனே படையனுப்பினாரே? 'இங்கு எங்கள் மீனவர்களை காக்கத் தவறினால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஆயுதப் படையாக மாற்றப்படுவார்கள். அதற்குத் தமிழகம் ஏற்பாடு செய்யும்’ என்று எச்சரித்திருக்கலாம். இவ்வளவு மெத்தனமாகவும் மரத்தனமாகவும் உறங்குவதுபோல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, விடுதலைப்புலிகள் சிங்களப் படையைத் தாக்கிவிட்டால் மட்டும் என்னமாய்ப் பதறுகிறது! கடலோரக் காவல் படையை உடனடியாக முடுக்கிவிடுகிறது. மாநில அரசை பயங்கரவாதிகள் ஊடுருவி விடாமல் பார்த்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் சிங்கர்களால் கொல்லப்படும்போது மட்டும் காது கேளாததுபோல மௌனம் காக்கிறது. இதன் அர்த்தம் என்ன?
இலங்கைச் சிக்கலைப் பொறுத்தவரை 'இந்திய அரசின் நிலைப்பாடே என்னுடைய நிலைப்பாடும்’ என்கிறார் கலைஞர். மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர்கள் கொல்லப்படும்போது மௌனம் காப்பதும், கொல்லும் சிங்களப்படைக்கு உதவுவதும்தான். இது கலைஞருக்கும் சம்மதம்தானா?
விடுதலைப்புலிகள் சிறு விமானத்தைக் கொண்டு இலங்கை அரசின் கட்டுநாயகே இராணுவ விமான தளத்தைத் துல்லியமாகத் தாக்கிவிட்டுத் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனராம். மறுநாள் காலை இந்தியா முழுவதும் அல்லோப்பட்ட காட்சி சமச்சீர் புரிதல் உணர்வுள்ள எவரையும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். விடுதலைப் புலிகளின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்பதாகவும், அந்த பயங்கரவாதிகள் எந்த நேரமும் இந்தியாவில் நுழைவதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்கள் என்பதுபோலவும், அவர்களைத் தடுத்து நிறுத்தவும் அழித்து முடிக்கவும் எல்லாக் காப்பரண்களையும் உடனடியாக முடுக்கிவிடவேண்டும் என்றும் ஒரே கூக்குரல்தான்.
இந்திய அரசும் உடனே ராடார் பொருத்தியதும், கடலோரக் காவல்படையின் 24 மணி நேர ரோந்துப் பணியை முடுக்கிவிட்டதும் நடந்தேறியது. ஆனால் அதே நாளில்தான் இலங்கைக் கடற்படை சுட்டு 5 மீனவர்கள் மாண்டனர். எனில் இதன் அர்த்தம் என்ன? ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன? யாருக்கு உதவி செய்துகொண்டிருந்தன? மீனவர்களைச் சுட்ட சிங்களக் கடற்படையினரை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லையென்றால் அதற்கு என்ன பொருள்? ஆக இந்திய ரோந்துப் பணி என்பது கொலைகார சிங்களர் படைக்குக் காவல் புரிவதும், புலிகளின் நடமாட்டத்தை அவர்களுக்கு முன்னறிவித்து எச்சரிப்பதும்தான் என்றாகிறது. வேறு வகையில் சொன்னால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் புலிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாகச் சுடுவதற்குப் பாதுகாப்பளிப்பதுதான் என்றாகிறது.
இவற்றையெல்லாம் கலைஞர் அறியாதவரல்ல. ஆனால் அடுத்த நாள் அந்த ஐவர் கொலை பற்றிக் கலைஞர் சொன்னார், 'மீனவர்களைக் கொன்றவர்கள் யார்? அவர்களின் சர்வதேசத் தொடர்புகள் என்ன என்று கண்டறியவேண்டும்’ என்பதாக. இதன் மூலம் கலைஞர் இலங்கைக் கடற்படையினரைக் குற்றம் சாட்டவில்லை என்பதாகிறது. அவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் அப்படி குற்றஞ்சாட்டவில்லை என்று இலங்கை அமைச்சரே மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இலங்கையின் இன்னொரு அமைச்சர் 'மீனவர்களை விடுதலைப்புலிகள்தான் சுட்டிருப்பார்கள், நாங்கள் சுடவில்லை; என்கிறார். புலிகள் தான் சுட்டார்கள் என்று கலைஞர் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் சிங்களர்கள் அதன் மறைபொருளை உடனடியாக உள்வாங்கிக் கொண்டவர்களாய், அதை உறுதி செய்து சந்தோஷங்கொள்கிறார்கள்.
பார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன ஆலோசகர்களும், இந்திய உளவுப் பிரிவினரும் போன்ற எவரும் சொல்லாத, துணியாத ஒரு குற்றச்சாட்டை வெகு எதேச்சையாக கலைஞர் முன்வைக்கிறார் என்றால், 'தமிழினத்தலைவர்’ யாரைக் காக்கச் சபதம் மேற்கொள்கிறார்? புலிகளை அழித்தொழிப்பதைப்பற்றி நாம் ஒன்றும் பேசத் தேவையில்லை. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களையெல்லாம் தான்தோன்றித்தனமாகச் சொல்லவோ செயல்படுத்தவோ முடியாது. நாம் ஒன்று கேட்கலாம். திராவிட இயக்கத்தை நடத்தியவர்கள் தமிழினத் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டார்களே, அது ஒன்றுதான் அழிப்பதற்கு எளிதான வழி என்றா?
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தின் பார்ப்பன மூளைகளால் பிழையாக வழிநடத்தப்பட்ட ராஜீவ் காந்தியின் படுகொலையானது இந்தியத்தரப்பு இழைத்த கொடுமைகளையெல்லாம் மூடி மறைத்து விட்டது. ஆனால் அதற்கு நாம் இவ்வளவு பெரிய விலை கொடுக்க நேர்ந்தது ஆற்றிக்கொள்ள முடியாத சோகம். காந்தியார் கொலைக்குப் பின் ஆர்எஸ்எஸ்ஸின் ஊது குழல்கள் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு இந்த நாட்டில் சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்திராவின் கொலைக்குப் பின் சீக்கிய இனத்து மன்மோகன் சிங்கை அரியணை ஏற்றி இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வழியமைக்கப்பட்டுள்ளது. எனில் ராஜீவ் மரணத்திற்கான விலையாக ஈழத் தமிழினத்தின் அழிவைக் கோரக்கூடாது என்பது நியாயம் அறிந்தவர்களின் வேண்டுதலாய் இருக்கும்.
உலகெங்கிலும் விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அமைப்பாக்கப்பட்ட ஆகப்பெரும் பயங்கரவாதத் திரட்சிகளான அரச எந்திரங்கள் அப்படித்தான் அழைக்கும். விடுதலைப்புலிகளை இந்திய அரசு பயங்கரவாதிகள் என்றே அழைக்கட்டும். ஆனால் அவர்கள்தாம் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையும் கவசமுமாய் இருக்கிறார்கள். நோக்கமற்ற கொலைகளும் ஆள்கடத்தல்களும் கொள்ளைகளும் புரிந்துவந்த வேறுபல போராளிக் குழுக்களை இந்திய அரசும் உளவுப் பிரிவும் மிகுந்த பணச்செலவில் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தகவல்கள் சேகரிக்கவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவுமாய் இருக்கலாம். அவரவர்க்கும் அவரவர் நோக்கம் பெரிது.
பல நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அவர்களது அரசை ஏதோ ஒருவகையில் அங்கீகரித்துத்தான் அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிóறார்கள். 'அவர்களோடு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு வழங்கும் உதவியை நிறுத்திவிடுவோம்’ என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகள் மிரட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் சிங்கள அரசு புரியும் அட்டூழியங்களையும் மனித உரிமை மீறல்களையும் அவ்வப்போது கடுமையாகக் கண்டித்தும் வருகின்றன. ஆனால் இந்தியா தன் தேய்ந்து இற்றுப்போன பழைய பாதையிலேயே செல்கிறது என்றால் தமிழர்கள் அழிக்கப் படுவதற்காக அவர்கள் விரதம் காக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். கட்சி அரசியல் நிர்பந்தம் காரணமாகப் பொய் சொல்லிக்கொண்டே சிங்கள அரசுக்கு பொருளும் தளவாடங்களும் பயிற்சியும் உளவுத் தகவல்களும் வாரி வழங்குகிறது இந்திய அரசு.
தமிழகக் கடைகளில் பிடித்த அலுமினியக் கட்டிகளையும் இரும்பு பால்ரஸ் குண்டுகளையும் கைப்பற்றிக் கடத்தல் வழக்குகள் போடப்படும் அதே நேரத்தில் இந்திய நெடுஞ்சாலைகளில் கண்டெய்னர் லாரிகளில் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் அனுப்பப்படு கின்றன. அவ்வாயுதங்களை சிங்க அரசு தமிழ் மக்களை கொல்லத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது?
திபெத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் இந்தியாவிற்கு வந்தவர்கள் 'அகதிகள்’ என்னும் அந்தஸ்தில் அரச மரியாதையோடு வாழ்கிறார்கள். சிங்களப் படையின் தாக்குதல்களுக்குத் தப்பி இந்தியாவுக்கு ஓடிவரும் ஈழ மக்களோ 'புலம்பெயர்ந்தோர்’ என்னும் பெயரில் பஞ்சைப் பராரிகளாய், வக்கற்ற பிச்சைக்காரர்களாய், சந்தேகங்களுக்கு உள்ளாகும் சிறப்பு முகாம் கைதிகளாய், கொண்டுவரும் பொருள்களை யெல்லாம் காவலர்களிம் களவு கொடுக்கிறவர்களாய் நாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களின் குறைந்தபட்சத் தேவைகளை வழங்கவும் அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும்கூட கலைஞரின் இந்திய இறையாண்மை உணர்வு இடம் கொடுக்கவில்லை. ஒரு வரியில் சொன்னால் ஈழம் அழிவதில் கலைஞருக்கு எந்தத் துக்கமுமில்லை. இதையும் நம்மீது திணிக்கப்படும் அவரது நிலைப்பாடு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
கலைஞர் தமிழ் மக்களுக்குப் பல தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அவ்வாக்குறுதிகளும் அவற்றின் நிறைவேற்றமுமே தமிழகம் இலவசங்களில் உயிர் வாழும் நிரந்தரப் பிச்சைக்காரத்தனங்களால் நிரப்பப்பட்டிருப்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அடித்தள மக்களின் அவலத்தை நிலப் பகிர்வுத் திட்டமும் கிலோ அரிசி 2 ரூபாய் திட்டமும் உண்மையிலேயே போக்கலாம்தான். ஆனால் நடைமுறையில் அவை எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது அரசின் நோக்கத்திற்கும் அக்கறைக்கும் உரைகல்லாகும்.
மேற்குவங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நிலப்பங்கீடு இங்கும் நடக்குமெனில் அது மக்ளுக்கான திட்டமாய் இருக்கும். அல்லாது, உபரி நிலங்களை கையகப்படுத்தாமல், பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்காமல், முறையான நுகர்வோரைப் பட்டியல் போடாமல் செய்யப்படும் எந்தத் திட்டமும் அதன் விழாச் செலவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் தயாரிக்கவே பயன்படும். கிலோ 2 ரூபாய் அரிசித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து அரிசி வழங்கல் 35 சதவீதத்திற்கே நடப்பதும், அன்றாடம் லாரி லாரியாய் வெளி மாநிலங்களுக்கு அரசி கடத்தப்படுவதும் அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளைக் குறிப்புணர்த்தக் கூடும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி அதற்குள் சந்தையில் மறு விற்பனைக்கு வந்துவிட்டன. வேறு என்ன நடக்கும்? ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? யாருக்கு யார் நன்றி சொல்வது?
தெருவில் நடப்பவர்கள் அவசரத்திற்கு ஒன்றுக்கு இருக்க ஒரு வழி செய்யப்படவில்லை. மூத்திரத்தை அடக்கிச் சிரமப்படும் ஆத்திரக்காரர்களையும், கண்டகண்ட இடங்களையும் மூத்திரக் காடாக்கும் பொறுப்பற்றவர்களையும் கேட்டால் கலைஞர் தமிழர்களைப் பழி வாங்குகிறார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கலைஞரைக் கேட்டால் மாநில வாரியாக எத்தனை மூத்திரக்காடுகள் உள்ளன என்று சொல்லி, தமிழகத்தின் சீரழிவுக்குப் பரிந்து பேசுவார். அடித்தள மக்களுக்குக் குடிநீர் இல்லை. குடியிருக்க இடமில்லை. நடக்க வழியில்லை. நாற்றமில்லாத சூழல் இல்லை. முறையாக மின்வசதி இல்லை. கழிவுநீரால் கழுவப்படாத சாலைகள் இல்லை. ஈக்களும் கொசுக்களும் எங்கே பெருகுமோ, அங்கேதான் மக்களும் பற்றாமைகளோடு பிதுங்கித் திணறுகிறார்கள். வெகுமக்களின் நீண்டகால, அவசரகால எந்தப் பிரச்சினையும் தீர்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
காவிரிக்கரை கிராம மக்கள் கரையிலேயே காலைக் கடன்களை முடிப்பார்கள். ஊர்கூடி பொங்கல் வைக்கும் நாளில் அந்தக் கரையை நன்றாகச் சுத்தம் செய்து, மருந்தடித்து, புதுமணல் பரப்பி, அதன்மேல் பொங்கலிட்டு விழா எடுப்பார்கள். ஆனால் நம் அரசுகள் இடும் பொங்கலோ குடலைப் பிடுங்கும் மலக்காட்டு நாற்றத்திலேயே புது முழக்கங்களோடு நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சி தன் எதிர்காலத் திட்டத்தின் நம்பகத்தன்மையுள்ள முயற்சியாக மக்களின் அவலங்களை எடுத்து வைத்து அரசின் ஜடத்தனத்தைப் பறைசாற்றுகிறது. இது தொடக்கம்தான். அதுவே நெஞ்சை அதிர வைக்கிறது. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. அதிர்ச்சியூட்டும் வகையில் அவை அதிகரிக்கவும் செய்யப் படுகிறது. உண்மையைச் சொல்வதெனில் கலைஞர் அரசு 90% மக்களின் கோவணங்களை உருவிக் கொண்டு அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பயன்கள் யாவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பச்சைக் கம்பளம் விரித்துத் தாரை வார்க்கிறது.
முன்னெப்போதையும்விட, தலித்துகள் இன்று நாறிச் சிறுத்துப் போகிறார்கள். முன்னெப்போதையும் விட’ என்னும் தொடர் உங்களுக்கு வியப்பையோ கழிவிரக்கத்தையோ ஏற்படுத்துமெனில் நீங்கள் எவ்வளவு மரத்துப்போய்விட்டீர்கள் என்று நான் அதிசயிக்க வேண்டியிருக்கும். நேற்றுவரை தலித் மக்கள் தங்கள் அவலங்களைத் தலைவிதியின்மேல் இறக்கி வைத்திருந்தார்கள். இன்று தங்கள் அறிவின்மேல் ஏற்றிப் பார்க்கிறார்கள். ஆகவே, தங்கள்மேல் வீசப்படும் ஒவ்வொரு அற்பக் குறிப்பையும் மனத்துள் வாங்கிக் குன்றிப் போகிறார்கள். அடுத்த பக்கத்தில் புரசை கோ.தமிழேந்தியின் நியாயம் கோரும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு கேவலமான வசவுகள் அவர்கள்மேல் வீசப்பட்டுள்ளன! பூட்ஸ் கால் மிதியைவிட அந்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர்! ஒரு சாமான்யரைக் கரையேற்று வதற்காகத் தமிழகம் எவ்வளவு பிச்சைக்காரர்களையும் தீராத பிரச்சினைகளையும் காப்பாற்றித் தீர வேண்டியுள்ளது!
நிலவுடைமைக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு கழிசடை, பிறரைத் துல்லியமாக அவமானப்படுத்த நினைத்தால் அவரை 'அப்பன் பேர் தெரியாதவன்’ என்று நக்கலடிப்பான். நக்கலடித்தவனுக்கு சட்ட ரீதியாக ஒரு அப்பன் இருந்தாலும், உண்மை அதுவாயிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது, அவ்வளவு உள்ளீடற்ற வசவு அது. ஆனால் உடைமைச் சமுதாயத்தில் அது எதிராளியை வேரற்றவனாக அடித்து வீழ்த்துகிறது. இந்த மண்ணில் சொந்தங்களற்று, நிற்க நிழலற்று, ஊன்றிக்கொள்ள விழுதுகளற்று, மானுடத்தின் அற்பப் பிறவியாக அவரைச் சித்தரித்து மகிழ்கிறது. நமது அரசியல்வாதிகள் இதுபோன்ற கற்பிதங்களை முதலில் தகர்க்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முன்வரவும் மாட்டார்கள். அவர்களால் முடிந்ததெல்லாம் அந்த வசவை மேலும்மேலும் வலுப்படுத்தி மனத்துள் மகழ்ந்துகொள்வதுதான்.
இந்தப் பின்புலத்தில், நாம் அவர்களை வேண்டுவதெல்லாம் தயவுசெய்து தமிழர்களை அப்பன் பேர் தெரியாதவர்களாக்கி விடாதீர்கள் என்பதுதான். இந்த வேண்டுகோள், கலைஞர், மருத்துவர், புரட்சித் தலைவி என எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டு ஓடிவந்து நாற்காலியைத் தட்டிப் பறித்துக்கொள்ளப் போகிற புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கும்தான். மக்களை மந்தைகளாகவே இருத்தி, இலவசத்துக்கு மிதிபட்டுச் சாகும் ஏமாளிகளாகவே வளர்த்து அழகு பார்க்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான அறைகூவலாக இருக்கும்.
ஜனவரி - ஜூலை 2007
தமிழ்க் கனவும் தமிழ்ப் புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் திராவிடப் பேரரசும்
கவிதாசரண்
இந்த இதழில் வெளிவந்துள்ள புதிய மாதவியின் கட்டுரை ஒரு இணைய தளத்தில் இடம் பெற்றிருந்தது.(பார்க்க: கட்டுரை மார்ச் 21,2007 திராவிட அரசியல்) எனினும் கவிதாசரணிலும் வரவேண்டும் என விழையப்பட்டதால் இங்கு வெளியிடப்பெற்றது.

Subscribe to:
Posts (Atom)