Sunday, June 30, 2019

Tottaa Petaaka Item Mall

Tottaa Pataaka Item Maal Movie - Sakshitottaa petaaka item mall..
எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்புணர்வு
செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழும் பெண்கள்.
இரவு எட்டு மணி ஆகிவிட்டால்.. இந்த அச்சம் அவர்களைத் 
துரத்திக் கொண்டே இருக்கிறது..இதை அந்தப் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்…
4 பெண்கள். ஒருத்தி கார் வாங்கி ஓட்டுகிறாள்.
கல்லூரி மாணவிப் பருவத்தில் பெண்கள் அச்சமின்றி
பயணிக்க பெண் ஓட்டுனர்கள் தேவை என்று நினைக்கிறாள். 
பெண்கள் மட்டும் டாக்ஸி சர்வீஸ் ஆரம்பிக்கிறாள். அவள் காரில்
பெண் போலீஸ், கராத்தே கறுப்பு பெல்ட் வாங்கியவள், 
சமூக வலைத்தளம் சார்ந்த மீடியாவில் வேலைப்பார்ப்பவள்
 இவர்கள் மூவரும் பெண்கள் மட்டும் டாக்ஸியில் ஏறுகிறார்கள்.
முன் பின் அறிமுகமில்லாதப் பெண்கள்…
உரையாடல்கள் தொடர்கின்றன.
ஆணுடல் எப்போதும் பெண்ணை அச்சுறுத்துவது ஏன் 
என்ற கேள்விக்கு பதில் தேடி அலைகிறார்கள். 
அவர்களில் கராத்தே பெண்ணுக்கு நேரடி
அனுபவம், மீடியாவில் வேலை செய்பவள் தன் தங்கையை 
இதனால் இழந்தவள்.. இவர்கள் தங்கள் பயணத்தில் 
பெண்ணைச் சீண்டிப்பார்க்கும் ஒருவனைச் சந்திக்கிறார்கள். 

எது ஓர் ஆணை இதெல்லாம் செய்ய தூண்டுகிறது?
பெண்ணுடலை எப்போதும் அச்சத்திலேயே
வைத்திருப்பதால் ஆண் தன் மேலாதிக்கத்தை
எவ்வித தடையுமில்லாமல் அனுபவிக்கின்றானா?
பெண்ணுடலை ஆண்கள் பாலியல் பலாத்காரம்
செய்துவிடுவார்கள் என்ற அச்சம் தானே ஒவ்வொரு
பெண்ணையும் எப்போதும் அச்சத்தில் வைத்திருக்கிறது.
ஆணுக்கு பெண்ணுடல் அனுபவிக்கும் அந்த அச்சத்தின்
 துளி அனுபவம் கூட கிடையாதா?

பெண்கள் ஆணுடலைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது
 என்றும் செய்யமாட்டார்கள் என்றும் ஆண்கள் காலம் காலமாக நம்பிக்கொண்டிருப்பதால் தான் பெண்ணுடல் எப்போதும் அச்சத்தில்…
இதையே அவனுக்கு உணர்த்தினால்…

விளைவு.., அவனைக் கட த்திக் கொண்டு போய்
அடைத்து வைக்கிறார்கள்.
சமையல் வேலை துப்பரவு வேலை செய்யச் சொல்கிறார்கள்.
பெண்ணைப் போல அவனுக்கு ப்ரா போட்டுவிட்டு
குட்டையான ஸ்கர்ட் போட்டுவிட்டு ஹைஹீல்ஸ் அணிந்து 
ஆடச் சொல்லுகிறார்கள். அவன் வாயில் மதுவை ஊற்றி 
அவனை ஆட வைக்கிறார்கள்..
நிர்வாணப்படுத்துகிறார்கள்.
இரும்பு கம்பியை எடுத்து வந்து அவன் பிட்ட த்திற்கு
அருகில் கொண்டு வருகிறார்கள். அவன் துடி துடிக்கிறான்
.
நீ செய்த தை நாங்களும் செய்துவிட முடியும் என்பது தான் 
அந்தப் பெண்கள் பிற ஆண்களுக்குச் சொல்லவரும் செய்தியாக .. ..

இந்தியாவின் மகள் .. நிருபயாவின் பக்கமிருந்து

திமிறி எழுந்து திருப்பி அடிக்கும் பெண்ணுடல் 
என்று தான் பார்க்க வேண்டும். 
இயக்குநர் ஆதித்ய கிருபளானி இப்படம் குறித்து
நிறைய பேசி இருக்கிறார். 
கொஞ்சம் வித்தியாசமான திரைப்படம் தான்.

Wednesday, June 26, 2019

கழிவறை காதல் - நினைவுக்குறிப்புகள்

கழிவறை காதல் - நினைவுக்குறிப்புகள்
இரண்டு நிமிஷத்திற்கு ஒரு இரயில்
அறிவித்தார் அமைச்சர்.
அச்சப்பட்டார்கள் – என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்துநிற்கும்
அவஷ்தையை நினைத்து..
“ அம்மாக்களின் அவஷ்தை” என்ற தலைப்பில் என்
நிழல்களைத் தேடி தொகுப்பில் ..
இன்று பார்த்த மை டியர் ப்ரைம் மினிஸ்டர் திரைப்படம் கழிவறை காதலை
அந்த நினைவுகளை அதன் வலிகளை ஓட்ட த்தை, நாற்றத்தை, அவஸ்தையை, வெளியில் சொல்ல முடியாத சங்கட த்தை..
இப்படியாக எதை எல்லமோ கிளறிவிட்ட து.
Mere Pyare Prime Minister
மை டியர் பிரைம் மினிஸ்டர்/ என் பிரியமான பிரதமர்..
இந்தப் பட த்தை திரையில் பார்க்கும் போது பலருக்க
 இக்கதையின் கழிவறை முகம் சுழிக்க வைக்கலாம்.
ஆனால் இக்கதையின் ஒவ்வொரு காட்சிகளையும்
நான் கூர்ந்து கவனித்தேன். ஆகாயத்தில் பறந்து
 கொண்டிருக்கும் விமான ங்கள்.. இந்தக் குடிசைகளைத் 
தாண்டித்தான் தரையில் இறங்கும். 
இந்தக் குடிசைகளில் டிவி உண்டு, எல்லோரிடமும் 
அம்பானி புண்ணியத்தில் கைபேசி உண்டு, 
ஏன் Wi-fi வசதி கூட உண்டு.
ஆனால் கழிவறை ???????????????????
Image result for mere pyare prime minister (2019)
50 மாடி கட்டிடம், ஒரு மாடியில் 10 வீடு. 2BHK .
 ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கழிவறை வீதம் அந்த ஒரு கட்டிட்த்தில் 
மட்டும் 1000 கழிவறைகள்!
ஆனால் பத்தாயிரத்திற்கு அதிகமாக மக்கள் வசிக்கும் 
குடிசைப் பகுதியில் ஒரு கழிவறை கூட இல்லை!!! 
அந்த குடிசைப்பகுதியின்
சிறுவர்கள் பேசிக்கொண்ட து.. முகத்தில் அறைகிற மாதிரி இருந்த து.
இலக்கியத்திற்கும் கழிவறைக்கும் கூட ரொம்பவும்
நெருக்கம் உண்டு. இலக்கியக் கூட்டங்களை நட த்துபவர்கள்
 எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். போவதில் 
பிரச்சனை இல்லை. ஆனால் மணிக்கணக்கில் மைக் கிடைத்துவிட்ட
குஷியில் தமிழ்த் தாகம் தணிய அவர்கள் தொண்டைவறள
 பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடிகிறது.
மணிக்கணக்கில் அடக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவதை..?

தமிழ்த் தாய் ஒரு பெண் என்பதால்
அவளுக்கும் இந்த அவஸ்தைப் புரியும் என்பதால்
 தமிழ்த்தாய் தமிழ் வளர்க்கும் / தமிழ் இலக்கியம்
வளர்க்கும் இடங்களில் எல்லாம் கழிவறையும் இருக்க வேண்டும்
 என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும்.

என் தனியறை கதைகளிலும் புதிய ஆரம்பங்கள்
கதை தொகுப்பிலும் இப்பிரச்சனையை மையமாக
கொண்ட கதை மாந்தர்கள் உண்டு.
இவர்கள் கற்பனை பாத்திரங்கள் அல்ல என்பதும்
இப்படியான அவஸ்தை என் வாழ்க்கையில்
 கடந்தக் காலத்தின் ஒரு மூலையில் என் அனுபவத்தின் 
வலியாகவும் இன்றும் அதன் நினைவுகள் கூட 
என் வயிற்றைக் கலக்கி .. ஓட வைக்கிறது.
எனக்குத் தெரியும்..
இப்பகுதியில் வாழும் ஒரு சிறுவன் தன் அம்மாவுக்காக
 கழிவறை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகள் அவன் டில்லி வரை பயணித்து
தன் கைப்பட எழுதிய கடித த்தை பிரதமரின் அலுவலகத்தில்
 கொடுத்துவிட்டு வரும் காட்சி…
தொண்டு நிறுவனத்தின் வெளி நாட்டுப்பெண் வசிக்கும் வீட்டு கழிவறையை அச்சிறுவன் தன் கண்கள் விரிய காணும் காட்சிகள்
எனக்கு இன்று கழிவறை நினைவுகளை எழுப்புகிறது.
வங்கியில் வேலைப் பார்க்கும் போது தாஜ் ஹோட்டலில் 
எங்களுக்கு பயிற்சி வகுப்பு. அந்த ஹோட்டலின் கழிவறையை
 பொன்னிறத்தில் மின்னிய தண்ணீர்க் குழாயை.. 
கண்ணாடியை.. விரிப்புகளை
கழிவறையில் சுகந்த மணம் சுழன்று வந்த தை…
அன்று நாங்களும் இப்படித்தான் … 
கண்கள் விரிய கொஞ்சம் அச்சத்துடன் தொட்டு தொட்டுப் பார்த்து .
. கழிவறையைப் பயன்படுத்தினோம்.!!
கழிவறையின் விலை என்ற கவிதையில்
“கழிவறை கட்டணம் இருந்தால் மட்டுமே சாப்பிட முடியும் “ என்று
கழிவறைக்கு கட்டணம் வசூலிக்கும் கொடுமையை எழுதி வைத்தேன்.
மாப்பிள்ளை வீட்டில்
வசதியானவர்கள்’ என்றார் அப்பா.
‘அப்படி என்ன கொட்டிகிடக்கிறதாம்’
அலுத்துக்கொண்டாள் அம்மா.
‘அடப் போடீ வீட்டோ ட இருக்கே கக்கூசு ‘
……..
‘நித்தமும் டப்பாவுடன் ஒடிக்கொண்ருக்கும்
அம்மாவும் அப்பாவும் எங்கள் சால்வீடுகளின்
காலைவணக்கம் கேட்டு
கண்விழிக்கிறது – கழிவறை சூரியன்.
இக்கவிதையில் “கழிவறை சூரியன்” என்ற சொல் பேசுபொருளாகி
கவிதையைத் திசைத்திருப்பிய சுவராஸ்யமான கதைகளும் உண்டு.
கழிவறை கட்ட
அடிக்கல் நாட்டியது அப்பா
கட்டியது நாங்கள்
திறந்து வைத்தவர் மகன்
தண்ணீரில்லாமல் சொறிநாய்களின்
சொர்க்கமாய் – ஒர் அரசியல் பரம்பரையின்
ஆவணமாய் – உடைந்த கதவுகளுடன்
கழிவறைகள் இன்றும் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.
பெரு நகரத்தில் நீங்கள் பார்க்க விரும்பாத/பார்க்க
மறுக்கின்ற முகமாய் .. இப்போதும்..
கழிவறைகள் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.
கவிதைகள் மட்டுமல்ல
கழிவறைகள் கூட காலத்தின் கண்ணாடி என்று 
இக்கவிதைகளை விமர்சித்த எழுத்தாளர் கே ஆர் மணி 
“கழிவறை காதல்” என்று எழுதி இருந்தார்.
இப்போதும் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்வதிலும்
 விதம் விதமாக அலங்கரிப்பதிலும் (!!!) 
எனக்கு அடிக்கடி அருள் வந்துவிடுவதாக வீட்டில் கமெண்ட்
 வரும்போது ஒரு சாமியாடி ரேஞ்சுக்கு நான் ஆடுவது..
கொஞ்சம் ஓவர்தானோ..

Thursday, June 20, 2019

இந்தியா 2047

Leila
இந்தியா 2047
சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டு எப்படி இருக்கும்?
இந்தியா 2047..
அப்போது இந்தியா என்ற தேசம் இருக்குமா? இருக்காது.
இந்தியாவில் வேறொரு தேசம் இருக்கும்.
அந்த தேசத்தின் பிதா மகாத்மா காந்தியாக இருக்க மாட்டார்.
இக்கதையில் தேசப்பிதா ஜோஷி.
அந்த தேசத்தின் அடையாளமாகவும் கொள்கையாகவும்
குறிக்கோளாகவும் “இனத்தூய்மை” இருக்கும்.
Purity of blood  இதற்கு மாறாக இருப்பவர்கள்
 கொலை செய்யப்படுவார்கள்.
அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்
 குருதி தூய்மையை இழந்துவிடுகிறது என்றும் 
அதனால் அவர்கள் தேசத்தில் வாழும் உரிமையையும்
 இழந்துவிடுவதாக அறிவிக்கிறார்கள்.  
இந்த தூய்மைவாதம் சாதியப் பின்புலத்தில் 
காட்டப்படாமல் மதங்களின் பின்புலத்தில் அதிலும்
குறிப்பாக இந்து இரத்தமும் இசுலாமிய  இரத்தமும் 
கலந்துவிடுவதால் ஏற்படும் தூய்மை இழப்பை
  முன்னிலை படுத்துகிறது.

இவர்களின் தேசத்தில் தூய்மையானவர்கள் மட்டுமே
 குடியுரிமை பெற்றவர்கள். அல்லாதவர்கள் அடிமைகள். 
இவர்கள் தங்கள் தேசத்தின்
தூய்மையை தங்கள் தேச எல்லையில் சுவர்களை எழுப்பியும் முள்கம்பிகளால் வேலிகள் அமைத்தும்
 பாதுகாத்துக் கொள்கிறார்கள். 
ஏழைகள், அன்றாடங்காய்ச்சிகள் முள்கம்பிகளுக்கு அந்தப்புறம். அப்பகுதியில் தான் குப்பைக்கிடங்குகள் இருக்கின்றன. 
அப்பகுதியில் மக்கள் தண்ணீருக்கு அடித்துக் கொண்டு 
சாகிறார்கள். பசி பட்டினி குப்பைகள் என்று அவர்களைச்
சுற்றி இன்னொரு தேசத்தை இவர்களின் தேசவரைபடம் உருவாக்கிவிடுகிறது.
தங்கள் தேசத்தில் காற்றும் தூய்மையாக இருக்க வேண்டும்
 என்பதற்காக காற்றைச் சுத்திகரிக்கும் ராட்சத 
பிராஜெக்ட் உருவாகிறது. அதிலிருந்து வெளியாகும் 
கழிவும் நச்சுக்காற்றும் குடிசைகள் நிரம்பிய அந்தப் பகுதிக்கு
போகிறது… 
இப்படியாக இந்திய தேசத்தில் ஓர் ஆர்யவர்த்தா 2047 ல்
 உருவாகிவிடுவதாக காட்டப்படும் நெட்பிளிக்ஸ் தொடர் 
லைலா/லெய்லா – Leila.
தீபா மேக்தா இயக்கத்தில் சம கால அரசியலை ஒரு குறியீடாக்கி
நம்மை மிரட்டுகிறது. ப்ரயாக் அக்பரின்  நாவல் புனைவின் ஊடாக
இன்னொரு அரசியலைத் தெளிவாக முன்வைத்திருக்கிறது.
 இந்திய தேசத்தில் உருவாகும் ஆர்யவர்த்தா.. ..
இந்தியா 2047..
இதைப் பார்த்தப் பிறகு ஹிட்லர் நினைவுக்கு வந்தால் ஓகே.
டிரம்ப் நினைவுக்கு வந்தால் டபுள் ஓகே.
வேறு யாராவது நினைவுக்கு வந்தால் …
அதற்கு நானோ ஏன் தீபா மேக்தாவோ கூட பொறுப்பல்ல.


Tuesday, June 18, 2019

தமிழில் உறுதிமொழி எடுத்தால்... ??

நூறுகோடி முகமுடையாள்..
செப்புமொழி பல உடையாள்..
இந்தியாவின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் நன்றியும் வாழ்த்துகளும்.
இந்தி மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும்
உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் நம்
நாடாளுமனற உறுப்பினர்கள்.
>பிஜேபி வேட்பாளர்கள் சதான்ந்த கெளடா & பிரகலாட் ஜோஷி
இருவரும் கன்னட மொழியில்

>மத்திய அமைச்சர் ஹரிசிம்ரன் கவுர் பாதல் – பஞ்சாபி மொழியில்.

>மத்திய அமைச்சர் அரவிந்த் கண்பட் சாவந்த் &
>ராவ்சாகிப் படில் டன்பெ இருவரும் – மராத்தி மொழியில்.

>ஜிதேந்திர சிங்க் – பிஜேபி வேட்பாளர் – டோங்க்ரி மொழியில்.

>பீகார் கோபால் ஜி தாகுர் & அசோக்குமார் யாதாவ் – மைதிலி மொழியில்

>காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியும் பிஜேபி வேட்பாளர் பாபுல் சுப்ரியோ இருவரும் – ஆங்கிலத்தில்.

> ராமேஷ்வர் டெலி பிஜேபி வேட்பாளர் – அசாமி மொழியில்

> தீபஸ்ரீ சவுத்ரி – பங்க்லா மொழியில்

>கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசு எம்பி 
கொடிக்குன்னில் சுரேஷ் மலையாளத்திலோ ஆங்கிலத்திலோ 
உறுதிமொழி எடுக்காமல் இந்தியில் உறுதிமொழி எடுத்தார்.

>ஆந்திர எம் பிக்கள் சிலர் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்தார்கள்.

>பிஜேபி எம்பி ஜனார்தன் சிங்க் சிக்ரிவால் போஜ்புரி மொழியில்
 உறுதிமொழி எடுக்க முன்வந்தார். ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை. காரணம்
போஜ்புரி மொழி இந்திய அரசியல் சட்ட த்தில் \
தேசிய மொழிகளில் ஒன்றாக இன்னும் இடம் பெறவில்லை.
இவை அனைத்துடனும் சேர்த்து வாசிக்க வேண்டிய செய்தி
 (முக நூல் அன்பர்கள் கவனிக்க... )
தமிழகத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியில்
உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் என்பது.
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள்.

இதற்கு முன்பும் தாய்மொழியில் உறுதிமொழி 
எடுத்துக் கொண்டது உண்டு. 
எனவே என்னவோ இப்போது தான் நடைபெற்றது போல
 பொங்குவது தேவை தானா

Friday, June 14, 2019

பொற்காலத்தின் குற்றவாளி பா ரஞ்சித்

Image result for பா ரஞ்சித் தஞ்சை கோவில்கலைத்திறன் உலகமெங்கும் போற்றப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளும் சீனாவின் பெரும்சுவரும் ஏன் ஷாஜஹானின் தாஜ்மஹாலும் கூட கலைத்திறனுக்காக போற்றப்படுகின்றன.
 ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் அக்கலைத்திறன் வெளிப்பாடு 
அதற்கும் அப்பால் அந்தக் காலத்தைப் பொற்காலமாக க் கொண்டாடும்
 ஒரு மன நிலையை உருவாக்கி இருக்கிறது.
இந்தப் பொற்கால மன நிலையை உருவாக்கியதில்
 வரலாற்றாசிரியர்கள் மட்டுமல்ல, இன்றைய 
அரசியல் தலைவர்களும் கூட சமதையான பங்களிப்பு
 செய்து நம் பொற்காலத்தை அப்ப டியே தக்கவைத்துவிட்டார்கள்.
அதன் விளைவுகள் தான்… இன்றைய பா ரஞ்சித் அவர்களுக்கு
 கிளம்பி இருக்கும் எதிர்ப்பின் இன்னொரு முகம்.
மகாத்மா காந்தியைக் கூட விவாதப் பொருளாக்கி கோட்சே
 ஏன் கொலைவெறி கொண்டான் என்று யோசிக்க வைக்கும்
 அளவுக்கு ஊடகங்கள் கிளர்ந்து எழுந்துவிட்ட காலத்தில்
 பா. ரஞ்சித் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறார்.
பா ரஞ்சித்தைக் குற்றவாளி ஆக்கியது
 ராஜ ராஜனைக் குற்றம் கண்டுப்பிடித்ததற்காக அல்ல என்பதும்
 அக்குற்றத்தைப் பலர் கண்டுபிடித்து
பலர் புத்தகம் எழுதி அதுவும் கல்வெட்டு ஆதாரங்களோடு
 வெளிவந்தப் பின் அப்படி வெளிவந்த ஒரு கருத்தை
 பா ரஞ்சித் பேசியது தான் மிகப் பெரிய குற்றமாக
 சித்திரிக்கப்படுகிறது என்றால் …உண்மையில் இவர்களுக்கு
இடைஞ்சலாக இருப்பது இதை எல்லாம் 
பா ரஞ்சித் வகையாறாக்கள் பேசக்கூடாது என்ற பொற்கால உளவியல் தான்!
கருங்கற்பாறைகளே இல்லாத காவிரி பாயும் தஞ்சை மண்ணில்
 ஒரு இலட்சத்து முப்பாதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு
 கட்டப்பட்ட கம்பீரமான கோவில் தான் தஞ்சைக்கோவில். 
அதுவும் சாலை வசதியோ நவீன தொழில் நுட்பமோ இல்லாத
 காலத்தில் இதை அவன் செய்து முடித்த து எப்படி???
ராஜ ராஜன் காலத்தில் குடவோலை முறை இருந்த தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அக்குடவோலையில் பங்குபெறும் அதிகாரம்
யாருக்கு கொடுக்கப்பட்டிருந்த து என்ற பொற்காலத்தை நாம் பேசுவதில்லை.
அந்த திருவுளச்சீட்டு வேட்பாளர் வேதம் கற்றிருக்க வேண்டும், 
நில உடமையாளராக இருக்க வேண்டும்.
 இந்த இரண்டு தகுதிகளும் யாருக்கு பொருந்தும்??!!
13 காசுக்கு தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டவர்கள் இருந்தார்கள்.
அப்படி விற்றுக்கொண்டவர்கள் இவன் தேசத்து குடிமக்கள் தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
திருமணத்திற்கு வரி விதித்த பொற்காலம் இவன் காலம்.
யாரெல்லாம் இவன் வரிக்கொடுமையை எதிர்த்து கலகம் செய்தார்களொ
அவர்களெல்லாம் “சிவத்துரோகி” என்று குற்றம் சாட்டப்பட்டார்கள்.
உற்பத்தி பெருக்கமும் அதிகாரத்தின் உச்சமும்
 பிரமாண்டங்களை எழுப்புவதன் மூலம் தங்கள் 
அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள
நினைக்கின்றன. “காந்தளூர்ச் சாலை கல மறுத்தருளி” 
என்பது கூட அவன் மெய்க்கீர்த்தியாகத்தான் 
சொல்லப்படுகிறது. தங்கம் வெள்ளி அடிமைப்பெண்கள் 
குழந்தைகள் என்று போரில் கொண்டுவந்துக் குவித்த
அதிகாரத்தின் வடிவம் தான் பெருவுடையார் கோவில்.
இக்கோவில் சைவத்தை மட்டும் வளர்க்கவில்லை.
 இக்கோவில் தான் நிலவுடமையின் அதிகாரத்தையும்
பேணியது. பொற்களஞ்சியமாக இருந்த இக்கோவில் தான் 
மார்வாடியின் ஈட்டி மாதிரி வட்டிக்கு கடன் கொடுத்தும் திருப்பிக் கொடுக்காதவர்களின் நிலத்தை அபகரித்தும்
 தன்னைப் பெருக்கிக் கொண்ட து.
அரசர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் போது
 அடிமைகளை மறந்துவிடுவது வாடிக்கைதான். 
வரலாறு நெடுக வெற்றி பெற்றவர்களின் கதை மட்டுமே
 எழுதப்பட்டு பொற்காலமாக வலம் வருகிறது.
என்ன… பொற்காலத்தின் ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. பொற்காலத்தின் இன்னொரு முகம்
அவ்வளவு எளிதில் மறுக்க முடியாததாய் அச்சமூட்டுகிறது.
ஆனால் அதை பா ரஞ்சித் வகையாறாக்கள் பேசிவிடக் கூடாது
 என்பது தான் ரொம்பவும் முக்கியம்.
இதுதான் பொற்கால உளவியல். 
பா ரஞ்சித் அந்த ராஜ ராஜன் காலத்தில் பேசி இருந்தால் 
"சிவத்துரோகி" என்று அழைக்கப்பட்டிருப்பார்.
இன்று அவரை தமிழ் இனத்துரோகி, தமிழ்த்தேசிய துரோகி என்று பொற்காலத்தவர் அழைக்கலாம்!

பொற்காலம் இப்படித்தான் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
வாழ்க பொற்காலம்.

Wednesday, June 5, 2019

நிறங்களுக்கு அரசியல் உண்டா

Image result for பெரியார் கருஞ்சட்டை


நிறங்களுக்கு அர்த்தங்கள் உண்டா.
உண்டு .
நிறங்களுக்கு அரசியல் உண்டா.
உண்டு.
நிறங்களின் அரசியல் என்பது
அடையாள அரசியல்.
அடையாள அரசியல் என்பது எளிதானதாகவும்
பரப்புரைக்கு மிகவும் வசதியானதாகவும்
இருப்பதால் அடையாள அரசியல்
அரசியலின் ஓர் அங்கமாகவே
வளர்த்தெடுக்கப்பட்ட து.
ஆனால் இன்று அடையாள அரசியல்?
அரசியலின் கருத்து ரீதியான போதாமையை
மறைக்கவும் அசல் பிரச்சனகளின் மீது
சமூகத்தின் கவனம் திரும்பாமல் இருக்க
அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஒரு வகையான
கஞ்சா வாகவும் இருக்கிறது.
கருஞ்சட்டை அணிந்தால் சு.ம. காரன்,
கருஞ்சட்டை அணிந்தால் பெரியாரு ஆளு.
திராவிடர் கட்சிக்காரங்க..
இது கறுப்பு என்ற நிறத்திற்கு கொடுக்கப்பட்ட
அரசியலின் அடையாளம்.
இதே அடையாளத்தை வைத்துக் கொண்டு
இதே அடையாளத்தை தனதாக்கியதன் மூலம்
அய்யப்ப பக்தர்கள் “சாமியே சரணம் அய்யப்போ”
என்றார்கள். கருப்பு என்ற அடையாள அரசியலின்
முகம் மாறியதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அடையாள அரசியலை எடுத்துச் செல்வது
எவ்வளவு எளிதோ அதை விட எளிது
அடையாள அரசியலை அதே அடையாளத்தைக்
கொண்டு துடைத்து இல்லாமல் ஆக்குவதும்.
பெளத்த நெறியின் அடையாளங்கள்
வெள்ளை உடை, காவி உடை, மொட்டை அடித்தல்,
பிச்சைப்பாத்திரம், சிட்சைப் பெற்றதற்கு அடையாளமாக
பூணூல் அணிவது, நெற்றியில் பூசும் திரு நீறு…
இப்படியாக எண்ணற்ற அடையாளங்கள
இந்துமதம் தனக்கானதாக்கிக் கொண்ட து.
இன்னொரு வகையில் சொல்லப்போனால் பெளத்த
நெறிகளின் அடையாள அரசியலை த் தனதாக்கியதன் மூலம் பெளத்த த்தை
இந்தியாவிலிருந்து துடைத்து எடுத்து இல்லாமல்
ஆக்கியதில் ஆகச்சிறந்த வெற்றியைப் பெற்றது,
அடையாள அரசியலுக்குள் மட்டுமே சமூகத்தை
வைத்திருப்பதன் ஆபத்து இதுதான்.
அடையாள அரசியல் ஆரம்ப காலம் ,
தொடக்க நிலை.. அதைத்தாண்டிப் பயணிக்க
வேண்டும். அப்பயணம் கருத்தியல் ரீதியான
புரிதலுக்கு இட்டுச் செல்லும். அப்புரிதல் வசப்பட்டால்
அடையாள அரசியல் தேவைப்படாது என்பது மட்டுமல்ல
அடையாள அரசியலை வைத்துக் கொண்டு
மக்களைத் திசைத் திருப்புவதோ
அசல் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல்
இருக்க அடையாள அரசியலைப் பயன்படுத்தும்
கேவலமான அற்பத்தனமான அரசியலோ எடுபடாது.
அடையாளங்களைப் புரிந்து கொள்வோம்.
புரிந்து கொண்டு அடுத்த நிலைக்கு கடந்து
பயணிப்போம்.

Tuesday, June 4, 2019

திமுக வும் அகில இந்திய அரசியலும்

regional parties
திமுக இன்றுவரை மா நில கட்சி தான்.
அதிமுக வுக்கு அ இ அதிமுக என்ற இன்னொரு
இந்திய முகம் கட்சி ஆரம்பிக்கும் போதே 
வந்து ஒட்டிக்கொண்ட து. ஆனால் திமுக
ஆரம்பிக்கும் போதும் சரி அதன் பிறகும் சரி
தன் அடையாளத்தை மா நிலக் கட்சியாகவே
வைத்திருக்க வேண்டிய அரசியல் கொள்கையை
முன்வைத்த அரசியல் கட்சி ( கொள்கை இப்போ
இருக்கா..!னு எடக்கு மடக்கு கேள்வி எல்லாம்
கேட்டுவிடாதீர்கள்).
இன்றைய திமுக வின் வெற்றியும்
நாடாளுமன்றத்தில் திமுக வுக்கு
கிடைத்திருக்கும் இடங்களும் திமுக வின்
இடத்தை அகில இந்திய அளவில் ஒரு முக்கியத்துவம் 
வாய்ந்ததாக காட்டும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் அகில இந்திய ஊடகங்கள் 
இவர்களைத் திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
புதுமுகங்கள் பலர் டில்லி செல்கிறார்கள்.
எனக்கு அவர்களைப் பற்றி உடனடியாக 
சொல்வதற்கு எதுவுமில்லை.
அறிஞர் அண்ணா மேல்சபைக்குத்தான் போனார்.
கலைஞர் டில்லி போகவில்லை.
ஆனால் கலைஞரின் நிழலாக முரசொலி மாறன்
டில்லியில் இருந்தார். ஆனால் அப்போது திமுக
நடுவண் அரசின் ஆட்சியில் பங்கெடுத்த காலக்கட்டம்.
இப்போது நிலமை திமுக வே எதிர்ப்பார்க்காத ஒன்றுதான்.
ஆனால் திமுக வை அகில இந்தியா திரும்பிப் பார்க்கும் சூழலில்
மாநில சுயாட்சி,
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம்,
இவை உள்ளிட்ட தமிழக நலன் என்று திமுக
செயல்பட வேண்டி இருக்கிறது.

திமுக டில்லியில் சொல்லப் போகும் 
ஒவ்வொரு சொல்லும் 
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் 
அகில இந்திய அளவில் கவனிப்புக்குரியதாக மாறிவிட்ட சூழலில் ,
திமுக
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றொ
எதற்கெடுத்தாலும் வெளி நடப்பு நடத்தியொ
தகுந்த ஆதாரங்கள் இன்றி எதையும் பேசியோ
அல்லது அலங்கார மொழிகளில் பேசியோ
தன் இருப்பை இறங்கு முகமாக்காமல்
கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை
மிகச் சரியாகப் பயன்படுத்துவார்களா?
டில்லிக்குப் போகும் பிரபலங்கள் கட்சியின்
கட்டுப்பாடு என்ற ஒரு கொள்கையை
 கண்ணியத்துடன் கடைப்பிடிப்பார்களா?
இந்திய அரசியலின் முகத்தை இதுவரை
இமயம் முதல் குமரி வரை
என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.
இனி, குமரி முதல் இமயம் வரை என்று
மாற்றும் காலம்.. மாற்றுவார்களா?
இதுவரை திமுக வின் தலைவர்கள்
அறிஞர் அண்ணா, கலைஞருக்கும் கிடைக்காத
வாய்ப்பு ஸ்டாலின் காலத்தில் திமுக வுக்கு
கிடைத்திருக்கிறது. 
இந்தியாவில் மா நிலக் கட்சிகளின் 
தலைவர்கள் நடுவண் அரசுடன்
ஆடும் அரசியல் ..
அரசியல் சதுரங்கத்தில் இந்தக் கட்டம்..
ஸ்டாலின் கையில்.
காய்களை நகர்த்துவதில் வல்லவர்கள்
 நிரம்பி இருக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம்..
சிப்பாய்களும் அடிபட்டுவிடக் கூடாது.
ராணியையும் காப்பாற்றியாக வேண்டும்.
பார்க்கலாம்.
1, 2, 3..
செக்..
கவனம் .