Friday, November 21, 2008

ஊடகங்களும் ஊடறு பெண்களும்





வாழ்க்கை அவள் உரிமை
உங்களைப் போலவே
காற்றும் மண்ணும்
கடலும் வானும்
தாயின் கருவறையும்
அவளுக்கும் சொந்தமானவை.

அதை அவள்
யாரிடமிருந்தும்
பிச்சையாக
யாசிக்கப் போவதில்லை.

அவளுக்கு வாழ்வளிப்பதாக
நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும்
தருணங்களில்
உங்கள் வாழ்க்கையும்
தன்னைத் தூக்கிலிட்டுக்கொள்கிறது.

நிறைய திரைப்படங்கள், மெகா தொடர் காட்சிகளில் பெண்களை அதிகம் கவரும் காட்சி..
"பெண்ணுக்கு வாழ்வளிப்பதாக" காட்டப்படும் காட்சிகள் தாம்.

எப்படி, எம்மாதிரியான தருணங்களில் இக்காட்சிகள் காட்டப்படுகின்றன.
எந்த மொழியாக இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் இக்காட்சிகள் அதிகமாக
பெண் பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதாக சொல்கின்றன ஊடகங்களின் புள்ளிவிவரங்கள்.

காட்சி 1: :
தங்கையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான். அவள் தற்கொலை
செய்து கொள்ள முயற்சிக்கிறாள். ஓடி வந்து வழக்கம்போல கதாநாயக அண்ணன்காரன்
காப்பாற்றுகிறான். காப்பாற்றிவிட்டு காரணம் அறிந்து துடிக்கிறான். உடனே "யார் அவன்?"
என்று கேட்கிறான். உடனே சபதம் எடுக்கிறான்."தங்கையைப் பாலியல் பலாத்காரம்
செய்தவனுடனேயே எப்படியும் திருமணம் செய்து வைத்துவிடுவதாக. தங்கையும்
சந்தோஷப்படுகிறாள்.

காட்சி 2:

ரவுடியாக இருக்கும் கதாநாயகன் ஒரிளம் பெண்ணை -( அவள்தான் கதாநாயகி-
பொதுவாக அவள் அழகான, பணக்காரப் பெண்ணாக இருப்பாள் என்பது கதைகளின்
பொதுவிதி- ) மற்றவர்களுக்காக பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான்.
அதிலும் அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு
(அப்பொதுதான் காட்சி இன்னும் கொஞ்சம் கனமாக அமையும் என்பது டைரக்டர்களின்
கணிப்பு) அப்புறமென்ன. அந்தப் படித்த பணக்காரப் பெண் தன்னைக் கெடுத்த அந்த ரவுடியைத்
தேடி வருவாள்.. அவனுடன் வாழ்வதே தனக்கான வாழ்க்கை என்பது அவள் மூலமாக
சொல்லப்படும் சமூக நீதி

காட்சி 3:

பணக்கார வாலிபன் அந்த ஊரில் ஏழை ஆனால் அழகானப் பெண்ணை பாலியல் ப்லாத்காரன் செய்ய
ஊரே கூடி அவளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க.. அவள் எப்படி அவன் காதல் மனைவியாகிறாள்
என்பது கதை.

என்ன.. உங்கள் அனைவருக்கும் இம்மாதிரி கதைகளுடன் சம்மந்தப்பட்ட ரஜனிகாந்த், பார்த்தீபன்,
சீதா, அனில்கபூர் , ஜூகிசாவ்லா, ராணிமுகர்ஜி.. மேலும் இன்றைக்கு மெகா தொடர்களில்
வந்து போய்க்கொண்டிருக்கும் பலர் முகங்கள் நினைவுக்கு வரலாம்.

ஆனால் யாருக்கும் நினைக்கத் தோன்றுவதில்லை..
அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையிலிருந்து வாழ்க்கையை.

இம்மாதிரியான காட்சிகள் நாம் பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆண்-பெண் காதல்,
குடும்பம், கற்பு இத்தியாதி அனைத்தையும் தலைகுனிய வைத்துவிடும் அவலத்தை நாம்
உணர்வதில்லை. அந்தளவுக்கு ஆணாதிக்கச் சிந்தனை தச்சர்களால் செதுக்கப்பட்டிருக்கிறது
நம் ஒவ்வொருவரின் சிந்தனைச் சிலைகள்.

கிட்டத்தட்ட இம்மாதிரியான திரைப்படங்கள் - காட்சிகள் வந்து 15 வருடங்களுக்குள்
பல்வேறு உண்மைக் காட்சிகள் வெளியில் அனைவரின் பார்வைக்கும் தெரியும்படி அரங்கேறின.

வழக்கு 1:

இம்ரானாவின் வழக்கு நீதிமன்றம் வருகிறது. 2005ல் ல் உத்திரபிரதேசம் முஷபர்நகர் மாவட்டம் சார்த்தாவல் கிராமத்தில்
நூர் இலாகியின் மனைவி இம்ரானாவை அவள் மாமனார் அலி முகமது - கணவரின் தந்தை -
பாலியல் பலாத்காரம் செய்துவிட ஊர்ப்ப்ஞ்சாயத்து கூடி தீர்ப்பளிக்கிறது.

"இம்ரானா கற்பிழந்துவிட்டாள். அவள் கணவனைத் தவிர வேறொரு ஆடவனிடம்
அவள் உடலுறவு கொண்டுவிட்டதால் அவள் திருமண உறவு முறிகிறது
அவள் 7 மாதங்கள் தனித்திருக்க வேண்டும்
7 மாதம் தனித்திருப்பது அவள் தன்னைப் புனிதப் படுத்திக்கொள்ளவாம்!
அதன் பின் அவளைக் கெடுத்த அவள் மாமனாரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்!"
ஆனால் கணவன் நூர் இலாகியின் துணையுடன் ஜூன்20, 2005ல் இம்ரானா கட்டைப்பஞ்சாயத்து
வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கணவனுடனேயே சேர்ந்து வாழப்போவதாகவும்
மாஜிஸ்டிரேட் முன்னிலையில அறிவித்தாள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் துணையாக பல்வேறு
பெண் உரிமைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குரல் கொடுத்தன. (National commission of women
and other leading women's organisations) அதன் பின் தான் இந்திய உச்சநீதிமன்றம் இந்தியச் சட்டத்திற்கு
இணையாகவும் முரண்பட்டும் செயல்படும் அனைத்து நிறுவனங்களையும் கண்டித்தது.
( charged these two organisations, Darul-Ul-Uloom of Deoband and All India Muslim Personal
Law Board the two pillars of islamiz bodies in india with interfering with the country"s legal system and
introducing parallel islamic laws in violation of the constitution)

வழக்கு 2
-------------

2002ல் டில்லி நீதிமன்றத்தில் மனோஜ்குமாரின் வழக்கு. குற்றவாளி மனோஜ்குமார் தான்
பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறான்.
அந்தப் பெண்ணும் ஒத்துக் கொல்கிறாள். பிறகென்ன?
வழக்கு "பெண்ணுக்கு வாழ்வளித்தாந் சுபம்" என்று முடிகிறது,. அவன் திருமணம் செய்து கொள்ள
முடிவெடுத்ததாலேயே அவன் மீதிருந்த குற்றம் ரத்து செய்யப்படுகிறது. அதாவது குற்றப்பத்திரிகை
வாசித்த பெண்ணே அதைத் திருப்பி வாங்கிக்கொண்டு அவன் முடிவுக்கு தன் சம்மதத்தை
தெரிவிக்கிறாள்.

வழக்கு 3
------------
2003ல் வழக்கு 2 போலவே இன்னொரு வழக்கு. ஆனால் முடிவு ?
சாந்தி முகந்ட் மருத்துவமனையில் 23 வயது நர்ஸ் பாலியல் ப்லாத்காரம்
செய்யப்படுகிறாள். செய்தவன் புரா (Bhura) அவளுக்கு நம் சமூகம் மதிக்கும் அந்த
"வாழ்வளிக்கும் " நல்ல காரியத்தை செய்ய தயாராக இருப்பதாக அறிவிக்கிறான்.
" பாவம் இந்தப் பெண், இவளுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த யாரும் இவளை
ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய முன்வருவார்களா? அதனால் தான்
தான் அவளுக்கு வாழ்வளிக்க முன்வந்துள்ளதாக தலைநிமிர்ந்து சொல்கிறான்.

"பரிதாபப்பட்டு வாழ்க்கைப் பிச்சையளிக்க இவன் யார்?
அவனுடைய இந்த முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு என்னிடம் கேட்பதே தவறு!"
என்று அவனை மட்டுமல்ல அவன் முடிவைப் பற்றி தன்னிடம் அபிப்பிராயம்
கேட்ட நீதிமன்றத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறாள் இவள்.
குற்றம் செய்த புராவுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை என்று தீர்ப்பளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் தன்னைப் பலாத்காரம் செய்து வல்லுறவு கொண்ட ஆணைத்
திருமணம் செய்வது மட்டுமே தனக்கு பாதுகாப்பு, வாழ்வதற்கு சமூகம் அளிக்கும்
உரிமை, சமூகத்தில் தன் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள கிடைத்திருக்கு வாய்ப்பு
என்றே நினைக்கிறாள்.

பாதிக்கப்பட்ட பெண்ணே அவன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்வந்ததை ஏற்றுக்கொண்டால்
அது நல்லதுதானே , ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைக்கிறது, குற்றமிழைத்தவனுக்கு மன்னிப்பு
கிடைக்கிறது ' என்று தத்துவம் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வல்லுறவு கொண்டவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு
பாலியல் உறவில் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது சாத்தியமில்லை என்பதை
பெண்ணின் பெற்றோர்களிடம் சொன்னால், அவர்களோ "காலப்போக்கில் எல்லாம்
சரியாகிவிடும்" என்று பதில் சொல்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில்
பணிபுரியும் உளவியல் வல்லுநர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

உதிரிக்காட்சிகள்
-------------------

காட்சி 1
-----------

சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடம், சரியான நேரம் பார்த்து , பெண்களின் செண்டிமெண்ட்
விசயங்களைத் தொட்டுச்செல்லும் ராதிகா சரத்குமார் அவர்களின் அனைத்து மெகாதொடர்களிலும்
வரும் கணவன்மார்களுக்கு திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகள் உண்டு.
அல்லது இரண்டு மனைவி கதைகள்.. இரண்டாவது மனைவியாக வருபவர் கதாநாயாகியாக
இருப்பதால் பாவம்... முதல் மனைவி பாதியிலேயே செத்துப் போவதும், கொலை செய்யப்டுவதும்,
பைத்தியமாவது... இத்தியாதிகள் சகஜம்.
இந்த செட்டப் காட்சிகள் இன்றைய வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கும் இந்த தலைமுறையின்
அம்மாக்களுக்கும் ஆழப்பதிந்து போகும் காட்சிகள். இம்மாதிரியான காட்சிகளின் தாக்கம்
வாழ்க்கையின் சில முடிவுகளைக் கட்டாயம் பாதிக்கும் என்பதை இன்னும் 10 வருடங்களுக்குள்
இச்சமுதாயம் பிரதிபலிக்கும்.

காட்சி 2
------------

ஊடகங்களின் ஆகாயம் பரந்து விரிந்து நம் வீட்டு படுக்கையறை வந்துவிட்டது.
"ப்ரண்ட்ஸ்"(friends) என்ற அமெரிக்க மெகா தொடரைப் பார்த்து ரசிக்காத இளவட்டங்கள்
நகர்ப்புறங்களில் இருக்கவே முடியாது. தான் விரும்பிய ஆணுடன் பாலியல் உறவு கொள்வதையும்
அதை ரொம்பவும் சகஜமாகக் காட்டுவதும் அப்படி உறவு கொள்வதாலேயே அவனையே திருமணம்
செய்து கொள்ள வேண்டியதில்லை என்பதுமான காட்சிகள் இளைய தலைமுறையைக் கவர்ந்த
காட்சிகளின் கருப்பொருள்கள்.

கால்செண்டரில் ஓரிரவு (one night @the call centre) என்ற சேட்டன் பகத் எழுதிய நாவல்
ஆண்-பெண் பாலியல் உறவில் நகர்ப்புற இளைய தலைமுறையின் கருத்துகளைப் பிரதிபலிக்கிறது.

எனினும் இக்காட்சிகளும் திருமண உறவுக்குப் பிறகு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒழுக்க வரையறைகளை
மீறவில்லை. ஆனால் ஆணுக்கு அந்த மாதிரியான எதையும் வற்புறுத்தவுமில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

திருமண வாழ்வில் கற்பொழுக்கத்தைப் பேணுவதில் பெண் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறாள்.
அனைத்து காட்சிகளின் ஊடாக மெல்லிய இழையாக தெரிவது பெண்ணின் மாறாத முகம் மட்டும்தான்.
சில வசனங்களும் நடுவில் வரும் காட்சிகளும் மாற்றம் ஏற்பட்டிருப்பது போல ஒரு மாயத்தோற்றத்தை
ஏற்படுத்துகின்றன.
---------











**** புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக்
கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான
மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு , காதலும் அன்பும் இல்லாதவனுடன்
இருக்க வேண்டும் என்கின்ற சமுதாயக் கொடுமையும் அழிய வேண்டும்.**** தந்தை பெரியார். .

--------------------

Friday, November 7, 2008

திசைமாறிய பறவைகளின் கூடு




கவிஞர் சக்தி அருளானந்தம் மாநகரத்தில் திசைமாறித் தவிக்கும் பறவைகளின்
தவிப்பை தன் விரிந்த கவிதை வானத்தில் படம் பிடிக்கிறார்.
திசை மாறி பறந்து வந்த பறவைகள்,
பருவகால புலம் பெயர்தலாய் பல நுறு மைல்கள் கடந்து வந்து தன்னை, தன் இருப்பை முட்டையிட்டு அடைகாக்கும் பறவைகள்,
குஞ்சாக வெளிவந்ததெல்லாம் தன் கூட்டில் வளர வேண்டிய காக்கையின் குஞ்சுகள்
மட்டுமல்ல என்ற புரிதலுடன் வாடகைத் தாயாக மாறும் பறவைகள்,
சபிக்கப்பட்ட குயிலின் சோகக்கதை, கண்களில் பிறந்து வளர்ந்த கிராமத்து
மண்ணின் நினைவுகளை அடைகாத்துக் கொண்டு அடைக்கலம் தந்த நகரத் தெருக்களில் அகதியாய் அலையும் வாழ்க்கை, எதிர்பார்ப்புகளூடன் பிறந்த
மண்ணில் கால்வைக்கும் போது நினைவுகளில் வழ்ந்து கொண்டிருந்த எல்லா
தடயங்களும் மொத்தமாக காணாமல் போய்விடும் சோகம்...

இப்படியாக வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளையும் தன் கவிதைகளில்
கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் கவிஞர்.
கிராமத்து பின்னணியும் அதற்கான ஏக்கமும் கவிஞரின் பெரும்பாலான கவிதைகளில் பளிச்சிடுகிறது.
அந்த ஏக்கம் வெறும் இழப்பின் தாக்கமாக மட்டுமே இல்லாமல் சமூகப்பார்வையுடன்
முன்வைக்கப்படுவது மற்ற கவிஞர்களிடமிருந்து சக்தி அருளானந்தத்தை
வேறுபடுத்தும் புள்ளி.
உங்கள் கவனித்திற்கு என்ற கவிதையில் மிகச்சிறப்பாக இக்கருத்துருவாக்கத்தை
முன்வைத்திருப்பார்., இழந்து போன ஆற்றின் நினைவுகள், இன்று அதே ஆறு
சாக்கடையாய் மாறிப்போயிருக்கும் அவலம் இரண்டு கருத்துகளையும் இணைக்கும்போது சுற்றுப்புறச்சூழல் சார்ந்த சமூக அக்கறை என்ற தளத்தில்
கவிதைப் பயணிக்கிறது.

பொய்க்காத பருவமழை
இடைவிடாத அடைமழையாய்
சாக்கடையாய் உருமாறிய ஆற்றில்
கரையடங்கா பெருவெள்ளம்
கெக்கலித்து எக்காளமிட்டு
கழிவுகளூடன் ஓடுவதை
கால் நனைக்க முடியா துயருடன்
கண்டு நிற்கும் நம் குழந்தைகளை
கவனிக்காமல் கடக்கிறோம்
நம் கழிவுகளால் நாறிக்கிடந்த ஆறு
முன்பு நீயும் நானும்
தன்னுள் மூழ்கித் திளைத்து
முக்குளித்த நாள்களை கூறி அழததை
கவனிக்காமல் கடந்ததைப் போலவே.

இக்கவிதையின் 'நம் கழிவுகளால் நாறிக்கிடந்த ஆறு" என்ற வரிகள்
சுற்றுப்புறச்சூழல் தாண்டி வாழ்க்கையின் சமூக அவலங்கள், வர்க்கம், சாதியம்
என்று பல்வேறு தளத்திற்கு வாசகனை அழைத்துச் செல்லும் வலிமைமிக்கவை.

ஆண்டாளும் மீராவும் கொண்ட காதல் பக்தியை கொண்டாடும் சமுதாயம்
தன் வீட்டில் ஓர் ஆண்டாளையோ மீராவையோ இன்றுவரை உருவாக்கவில்லை.
பெண்ணிய வரலாற்றில் ஒரே ஒரு ஆண்டாள் தான்! ஏன்?

மானசீகமாய் காதலாகி கசிவது
கடவுளோடாயினும்
உனக்கிசைவில்லை
மீராவோ திலகவதியோ

என்று 'வெளி" கவிதையில் ஆணாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருக்கும்
பக்தியின் அடித்தளத்தை அசைத்துக் காட்டுவார் கவிஞர்.

இன்னொரு கவிதை 'நிர்வாணம்' முழுக்க முழுக்க பெண்ணிய விடுதலையை
பேசுகிறது.

எனக்குப் பொருந்தும் உடைகளை
எடுத்து வராமல்
உங்கள் ஆடைகளுக்கு
பொருத்தப் பார்க்கிறீர்களே என்னை
விடுங்கள் என்னை
நிர்வாணமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்

என்று ஒலிக்கிறது.
பெண், பெண்ணின் மொழி, பெண் விடுதலை அனைத்தும் பெண்ணிடமிருந்து
அவள் அனுபவத்திலிருந்து பிறக்க வேண்டும்

துரத்தல்களும் விடுபடல்களும் என்ற கவிதையில் இதுவரை யாரும் பேசாத
ஒரு கருப்பொருளை கவிதையாக்கியிருக்கிறார் சக்தி.
அதிகாலையில் 7 மணிக்கு சிறுவர்கள் பள்ளிக்கு பொதிசுமந்து கொண்டு
வரிசை வரிசையாக செல்வதைப் பார்க்கிறொம். 7 மணிக்கு தயாராக
அக்குழந்தை 6 மணிக்காவது எழுந்து தன்னைத் தாயார் செய்து கொள்ள
வேண்டி வரும். அப்படியான வாழ்க்கையை

கடிகார முட்களின் கூர் நுனிகள்
துளையிடுகின்றன
அவள் தூக்கத்தை

தூக்க கலக்கத்துடன் எழுந்தமர்கிறாள்
காற்றிறங்கும் பலூனென
கண்களில் வடிகிறது தூக்கம்

என்று காட்சிப் படுத்தி,

புத்தகப் பை மதிய உணவு
தண்ணீர்ப்பாட்டில் கொறிக்க சிறு தீனி
பொதியுடன் ஓடுவாள்
வருகையை ஒலிக்கும்
பள்ளிப் பேருந்தில் ஏற

கிடைத்த பொந்தினில்
பொதிந்து கொள்கையில்
கழிக்க மறந்த காலைக் கடனை
நினைவூட்டும் அடிவயிற்றின் வலி

என்று ஒரு நிதர்சனமான உண்மையை பேசியிருப்பார். கிட்டத்தட்ட எல்லோரும்
அறிந்த ஒரு விசயம், பிரச்சனை எனினும் இதை ஒரு சமூகப் பிரச்சனையாக,
பள்ளி குழந்தைகளின் பிரச்சனையாக பார்க்கத் தவறி இருக்கிறோம் இதுகாறும்
என்பதை சக்தியின் கவிதைகள் வாசகனுக்கு உணர்த்துவதில் வெற்றி
பெற்றிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

சக்தி கவிஞர் மட்டுமல்ல நல்ல ஓவியரும் கூட. அவர் கவிதைகளில்
மின்னும் காட்சிகளும் அக்காட்சிகளின் நுணுக்கமும் அவருக்குள் இருக்கும்
தூரிகையின் சாட்சியங்கள்.

நகரமழை என்ற கவிதையில் தார்ச்சாலையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியைக்
காட்சி படுத்துவார்.

மகரந்த தூளில்
சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல்
படபடக்கும் பட்டுப் பூச்சிகளாய்
தார்ச் சாலைத் தொட்டுத் தெறிக்கும்
மழைத்துளிகள்

என்பார். கரிய நிறத்தில் தார்ச்சாலை. தார்ச்சாலையில் படும் மழைத்துளியின்
தெறிப்பு.. மின்னும் சூரிய ஒளியில் வைரம் கலந்து பொன்னிறமாய்..
அக்காட்சி மகரந்தம் ஓட்டிய பட்டுப்ப்பூச்சியாய் மின்னுவாதக் காட்டும்
உவமையும் காட்சியும் ஓர் அற்புதமான ஓவியத்திரை.

ஞானம் கவிதையில் மரபியலான மெய்யியலுக்குள் நுழைந்து சக்தி தன் ஞானத்தை
எப்படி சிறைவைத்தார் என்பது புரியவில்லை. எல்லாம் விதி என்றும்
கல் சிலையாவதும் படியாவதும் நம் வசமில்லை என்றும் நினைப்பதும் தவறு.
யாரும் சிலைகளை படிகளாக்கலாம், படிகளை நிமிரித்து நடுகல்லாக்கி
வழிபடவும் செய்யலாம்.

அமர்பவன்
சித்தார்த்தனாயிருந்தாலே
போதி மரம் புத்தனாக்கும்
என்பது நிச்சயமாக புத்தன் என்ற மனிதன் புகட்டிய ஞானம் அல்ல.

பறவைகள் புறக்கணித்த நகரம்,
பிள்ளை பிடிப்பவள் அறை,
என்னோடு வந்து விட்ட என் கிராமம்,
பழையன கழிதலில்,
முன்பு பறவைகள் இருந்தன

மேற்சொன்ன கவிதைகளின் கிராமத்து வாசமும் சக்தி வரைந்திருக்கும்
கவிதைகளின் ஓவியமும் சக்தியின் தூரிகைக்கு பெருமை சேர்க்கும்
கவிதை ஓவியங்கள். கவிதைகளுடன் சேர்ந்திருக்கும் சக்தியின்
கோட்டோவியங்கள் கவிதைகளுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.சக்திக்கு வாழ்த்துகளுடன்,

சக்தியின் நட்சத்திர கவிதை

பழையன கழிதலில்
-------------------

அணையாத அடுப்பு அன்றெங்கள் அடுப்பு
ஆக்கி அரித்து ஆகக் கடைசியாய்
அம்மா அடுப்பில் வைப்பாள் பால்பானையை
கனன்று கொண்டிருக்கும் ராட்டினத்தணலில்
சிவந்து முருகி ஏடுகட்டும் பால்மணம்
வீடு நிறைக்கும்.

அரையாடப் பருவத்தில் ஆற்றில் குளிக்கையில்
அரையாட உருவி அதிலேயே மீன்பிடிப்போம்
அக்காவும் நானும்
அயிரைக் குஞ்சுகளின் தலைவால் கிள்ளி
அம்மியில் சாந்தரைத்து அவள் வைக்கும்
மீன்குழம்பு
அவ்வளவு ருசி.. அதுவும் சட்டியில்தான்.

வெங்கோடை நாள்களிலோ
அசலூர் ஆட்கள் தாகம் தணிக்க
ஆற்று மணல் குவித்து திண்ணை மூலையில்
தண்ணீர் நிறைத்து வைப்பாள்
புத்தம் புது பானையொன்றில்
'ஆத்தா நலாயிருப்பே' அவங்க
வாய் வார்த்தை ஒன்ணு போதும்
வம்சம் தழைக்குமென்பாள்.

பொங்கலுக்கும் புரட்டாசிக்கும்
கொசவங்குடி கொண்டுவரும்
சட்டிப் பானைகளை தட்டிப் பார்த்து
அவள் வாங்குவது தனியழகு

அய்யனுக்குத் தெரியாமல் சேர்க்கும் சிறுவாடு
அரிசி பருப்பு உப்பு புளி மிளகாய்
அஞ்சறைச் சாமான்கள் அஞ்சும் மூணும்
அத்தனையும் அடுக்குப் பானைகளில்தான்.

'சம்சாரி வீட்டில் சட்டிப்பான ஒடஞ்சா
வூட்டுக்கு ஆவாது' அம்மாவின் நம்பிக்கை
கவனத்துடன் கையாள செய்யும்.

பொழுதெல்லாம் சட்டிப்பானைகளில்
புழங்கிய அம்மா
பானைகளற்ற என் வீட்ட
வீடென்பாளா?

-----------

நூல்: பறவைகள் புறக்கணித்த நகரம்,
33 கவிதைகள்
வெளியீடு: இருவாட்சி பதிப்பகம், சென்னை 11.
பக்: 72, விலை. ரூ 40/

இந்தியப் பெண்ணியம்



ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை
ஒரு பெண்ணாக எனக்கென்று
ஒரு நாடு வேண்டாம்
ஒரு பெண்ணாக
இந்த உலகமே என் நாடு:

- வெர்ஜீனியா வுல்ஃப்


இந்தியப் பெண்ணியத்தைப் பற்றிப் பேசும் போது முதலில் சங்க இலக்கிய
தமிழ்ப் பெண்களைப் பற்றிய முன்னுரையே காலத்தாலும் கருப்பொருளாலும்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பெண்ணியமாக இருக்கிறது.
சங்க காலப் பெண்பால் கவிஞர்கள் என்று பார்த்தால் 26 கவிஞர்களைக் குறிப்பிடலாம். (எண்ணிக்கையில் சிலர் வேறுபடக்கூடும்).பெண்கள் சில குறிப்பிட்ட
இனத்தைச் சார்ந்தவர்களாக இல்லாமல் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைப் பார்க்கும் போது பெண்களுக்குக் கல்வி பொதுவான ஒன்றாக
இருந்ததை உணர முடிகிறது. குறமகள், குயத்தியார் என்ற அடைமொழிகள்
இதை உணர்த்துகின்றன.

சங்க இலக்கியத்தில் கற்பு என்பது திருமணமான பெண்ணுக்குரிய ஒழுக்கமாக
மட்டுமே சுட்டப்பட்டுள்ளது. 'மாசு இல் கற்பு' என்ற சொல் ஏறத்தாழ பல பாடல்களில்
நற்.:15, அகம் 66, 144,116 பயின்று வந்துள்ளதைக் கொண்டு இதனை உணரலாம்.
இக்கவிதைகள் மனிதனின் வாழ்க்கைக்கு உயிர்நாடியாக பெண் விளங்கியதையும்
பெண்களுக்குச் சிலவகை உரிமைகள் இருந்தன என்பதையும் சமூக வாழ்வில்
இரண்டாம் நிலையில் பெண்கள் இருந்தார்கள் என்பதையும் உணர்த்தும்
சான்றுகளாக உள்ளன.
கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருந்திருக்கிறது எனினும்,
தெரிவு செய்யப்பட்ட கணவன் தவறு செய்யின் செய்த தவறைச் சுட்டிக்காட்டி
அவனைத் திருத்த முயல்வது மட்டுமே பெண்ணின் கடனாக இருந்தது.
அவன் செய்த தவறுக்காக அவனைத் தண்டிப்பதோ விலக்குவதோ சமூகத்தில்
விளையாத கருத்தாக்கமாகவே இருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
சங்க காலத்து பெண்கள் கணவனின் போக்கைத் தடை செய்ய முடியாது.
கணவன் மீது அவர்கள் கொள்ளும் அன்பினை வைத்தே அவர்களின் பெருமை
அடையாளம் பெறும்.

வடமொழியில் மூத்த வேதமான ரிக் வேதத்தில் 267 ரிஷிகள் இருந்தனர் என்றும்
இவர்களில் பெண் ரிஷிகளின் எண்ணிக்கை இருபது எனவும் 'ஆர்ஷானுக்கரமணி'
எனும் நூல் தெரிவிக்கிறது. 'ப்ரஹத்தேவதா' எனும் நூல் 27 பெண் கவிஞர்கள்
இருந்ததாக தெரிவிக்கிறது. கணபதி சாஸ்திரிகள் 12 பெண் ரிஷிகள் இருந்ததாக
சொல்கிறார். கா.ஸ்ரீ.ஸ்ரீ. ரிக் வேதத்தில் 24 பெண் கவிஞர்கள் இருந்தனர் என்று
பட்டியல் தருகிறார். எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வதேச சபையில் "வேதகாலத்தில் பெண்கள்
ரிஷிகளாக இருந்தார்கள் என்று பெருமையுடன் குறிப்பிட்டதை' கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ள முடியும்.


குடும்பம், குடும்ப நலன், குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்,
தாம்பத்ய உறவின் சிக்கல்கள், கணவனின் பரத்தையர் பிரிவு, அதைப் பொறுக்க முடியாத பெண்ணின் இயல்பான எழுச்சி.. இப்படியாக பெண்களின் உலகம்
முரண்பாடுகள் கொண்ட இந்த இரு வேறு இனக்குழுவிலும் இணைகோடுகளாகவே இருந்தது என்பது தான் அதிசயத்தக்க உண்மை.
ரிக் வேத பெண் ரிஷிகளின் கவிதைகளும் சங்க இலக்கியப் பெண் கவிஞர்களின்
கவிதைகளூம் கருப்பொருளின் மையப்புள்ளியாய் ஆண் சார்ந்தும் குடும்பம் சார்ந்தும்
இயங்கியதைக் காணலாம்.


பக்தி இயக்க காலத்தில் தோன்றிய பெண் கவிஞர்கள் மராத்தியில் சக்குபாய், ஜானாபாய், தமிழில்
-ஆண்டாள், காரைக்கால் அம்மையார்,- ராஜஸ்தானில் மீராபாய் - கர்நாடகாவில் அக்கா மகாதேவி - ,இந்தியில் மகாதேவி வர்மா, மலையாளத்தில் லலிதாம்பிகா
அந்தரஜ்னம், வங்கத்தில் ஆஷாபூர்ணதேவி என்று கடவுள் என்ற பரமாத்மாவை
நோக்கி காதல் பக்தியுடன் பாடியப் பெண்களின் பாடுபொருளூம்
ஒரே தளத்தில் பயணம் செய்தது.
'இயற்கை என் கருப்பை. அதில் சிந்தும் வித்துகளின் தந்தையும் நானே'
(Nature is my yoni. Iam the seed giving father) என்று கீதையின் கண்ணன்
சொல்லும் தத்துவம் ஆண்-பெண் உறவையும் ஆணின் சமூக மேலாண்மையையும்
காட்டும்.
இந்தியத் தேசியம் கட்டமைக்கப்பட்ட காலக்கட்டத்தில் கண்ணுக்குப் புலப்படாத
இந்த மையப்புள்ளியைச் சுற்றி இந்தியப் பெண்ணியம் கட்டமைக்கப்பட்டது.
மேற்கத்திய பெண்ணியத்திற்கு எதிராக (Non western) இந்தியப் பெண்ணியம் கட்டி எழுப்பப்பட்டது.
"பெண்மையின் வலிமையைச் சக்தியை அடிப்படையாகக் கொண்டே இந்திய நாகரிகம் என்னும் மாளிகை எழுப்பப்பட்டிருகிறது" என்று சரோஜினிதேவி போன்றவர்கள் குரல் கொடுத்தது இந்தப் பின்னணியில் தான்.
பெண் தெய்வமாக்கப்பட்டதும், புனிதமாக்கப்பட்டதும், சக்தியின் வடிவமாக
கொண்டாடப்பட்டதும் இந்தப் பின்னணியில் தான். இக்கருத்துருவாக்கங்கள்
இந்தியப் பெண்ணியத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டன.
இந்தியப் பெண்ணியம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுடன்
இணைந்து வளர்தெடுக்கப்பட்டது.
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று வகுத்து பெண்ணடிமைத் தனத்தை
சட்டமாக்கிய மனுநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் விழிப்புணர்வு ஆங்கில
ஆட்சிக்குப் பின்னரே பெண்களுக்கு ஏற்பட்டது.
பெண்களுக்குச் சுதந்திரம், உரிமை, விதவை மறுமணம், உடன்கட்டை எதிர்ப்பு, பெண்கல்வி என்று பெண்ணியம் விழிப்புணர்வு பெற்றது.
சுவர்னகுமாரிதேவி தலைமையில் 1886ல் பெண்கள் கூட்டமைப்பு (Ladies association)
உருவானது. 1917, மே மாதம் 8 ஆம் நாள் சென்னையில் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு உருவானது. ஜாலியன் லாலபாக்
படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்ட தேசிய எழுச்சியில் தான் முதன் முதலில்
இந்தியப் பெண்கள் போராட்டக் களத்தில் பங்கேற்றனர். ஆங்கிலேயர் கொணர்ந்த
நிறுவனக் கல்வி முறையும் பெண்களின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோலாக இருந்தது.

"இவற்றிக்கெல்லாம் மேலாக மராட்டியத்தில் தோன்றிய ஜோதிபாபூலே (1827-1890)
என்பவரே முதன் முதலில் பெண் தனித்துவம் வாய்ந்தவள் என்று குரல் கொடுத்தவர் ஆவார். ஜோதிபாபூலே தான் முதன் முதலில் சாதியத்திற்கும் பெண்ணடிமைத் தனத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்தினார்" ( இரா.பிரேமா, பெண்ணியம் பக் 176).

தமிழகத்தில் தந்தை பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் மிகப்பெரிய
சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. குஷ்பு பிரச்சனையாகட்டும், கண்ணகி சிலை
விவகாரமாகட்டும் தந்தை பெரியாரின் பெண்ணியக் கருத்துகளைத் தொட்டுச்
செல்லாமல் எவராலும் பெண்ணியம் பேச முடியாத அளவுக்கு பெண்ணியத் தளத்தில்
இன்றுவரைத் தொடர்ந்து வருகிறது தந்தை பெரியாரின் குரல்.

இக்கட்டுரையில் தமிழ் மொழி தவிர்த்து பிற வட இந்திய மொழிகளில்
இந்தியப் பெண்ணியம் பயணிக்கும் தளத்தை அடையாளம் காட்டுவதன்
மூலம் தமிழ்ப்பெண்ணியத்துடன் கை கோத்து நடக்கும் ஒப்புமையை
மறுபக்கமாக்கி வாசகனை அடுத்தக் கட்ட நகர்வுக்கு இழுத்துச் செல்ல முடியும்
என்று நம்புகிறேன்.

இந்தியப் பெண்ணியம் அடையாளப்படுத்தும் மரபு சார்ந்த அரசியல் நிறுவனங்களை ஆராய்ந்து பெண்கள் ஏன் நசுக்கப்படுகிறார்கள், அதற்கான காரணங்கள் எவை,
என்று ஆராயும் போது தனிமனித வாழ்வில் பெண்கள் நசுக்கப்படுவது போலவே
பொதுவாழ்விலும் பெண்கள் நசுக்கப்ப்டுகின்றனர் என்று உணர்ந்தார்கள்.
மனித மறு உற்பத்தி, திருமணச் சடங்கு, கட்டாய இருபாலர் உடலுறவு, தாய்மை
இவற்றின் பெயரால் பெண்கள் கட்டுப்படுத்தப்படுவதும் தனிநபர் வழக்கமே சமூக
அமைப்பின் கட்டுப்பாடுகளாக ஆக்கப்பட்டு அவற்றை ஏற்றுக்கொள்ளூமாறு பெண்கள்
கட்டாயப்படுத்தப் படுவதைக் காணலாம்.


பாதிதூரம் வந்தப் பின்
அவள் திரும்பிப் பார்த்தாள்
காணவில்லை
அவள் கடந்து வந்தப் பாதையை.
வயல்களில்லை
வீடுகளில்லை
மனிதர்கள் இல்லை
எதுவுமில்லை
எங்கிருந்து அவள் புறப்பட்டாள்
என்பதற்கான
எந்தத் தடயங்களும் இல்லை
யாரோ
அவளுக்குப் பின்னால்
கவனமாக
அவள் வாழ்வின் அடையாளங்களை
துடைத்துச் சென்றிருக்க கூடும்..

என்று இந்தி கவிஞர் ஜியோட்சனா மிலன் பெண்ணுக்கான தனித்துவங்களும்
பயணங்களும் அடையாளங்களும் சமூகத்தால் துடைக்கப்படுவதை
தன் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

பெண்ணியத் திறனாய்வில் காத்லின் வீலர் தன்னிலை மீதான ஒடுக்கு முறையிலிருந்து சமுதாயத்தை புலனாய்வு செய்வதையும் அந்தரங்கமே அரசியல் என்பதையும் வலியுறுத்துவார்.

இருட்டு
அந்த இருட்டு
அவளுக்குள்ளும்.
கிணறைச்சுற்றி
எழுப்பப்பட்டிருக்கும்
சுற்றுச்சுவரைப்போல
அவளைச் சுற்றி
இருட்டு..

வெளிச்சத்தின் தடயமில்லாத இருட்டு.
என்று பெண்ணைச் சுற்றி மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் இருக்கும்
ஆண் சமூகச் சிந்தனைகள் உருவாக்கி இருக்கும் இருட்டை வெளிச்சப்படுத்துவார்
இந்திக் கவிஞர் அனாமிகா.

புத்தகங்களூம் வாசிப்புகளூம் நிறுவனக்கல்வி முறையும் பெண்ணியத்தில்
ஏற்படுத்திய சிந்தனை மாற்றங்கள் இதுவரை யுகம் யுகமாய் உறுதியானதாக
ஆணாதிக்க சமூகத்தால் கட்டி எழுப்பப்பட்டிருந்த குடும்பம், வீடு என்ற
கட்டுமானத்தை அசைத்துப் பார்த்தது.

செங்கல் சிமெண்ட் மரத்தால்
கட்டுக்கோப்பாக
உறுதியாக
கட்டப்பட்டிருப்பதாக நம்பப்படும்
வீட்டை
அதன் பலத்தை
அடித்தளத்தை
அசைத்துப் பார்க்கிறது
புத்தகங்களும்
புத்தகங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்
கரையான்களும்.

என்று மராத்திக் கவிஞர் கவிதாமகாஜனின் கவிதை வெளிப்படையாகவே
பேசுகிறது.
பெண் -அழகியல் இரண்டுமே ஒன்றாக கருதப்படுவதால் மராத்திக்கவிஞர்
மல்லிகா அமர்ஷேக் பெண்ணை அழகின் குறியீடாக இருக்கும் வீனஸ் சிலையுடன்
ஒப்பிடுகிறார்.


அவளுக்கு கைகள் இல்லை
-என்னைப் போலவே
அவள் தீர்க்கதரிசனப் பார்வை
அடியோடு செத்துப் போய்விட்டது
அவள் ஆடாமல் அசையாமல்
அலங்காரப்பொம்மையைப் போல
நின்று கொண்டிருக்கிறாள்
- என்னைப் போலவே
கரடு முரடான
கலாச்சார நூலேணியில்
கஷ்டப்பட்டு
தொங்கிக்கொண்டிருக்கிறாள்
கால்களுக்கும்
கால்களின் மேலிருக்கும் உதடுகளுக்கும்
நடுவில் இறுக்கமாக
- என்னைப் போலவே.

பாலியல் உந்துதல்களின் காரணமாகப் பாலியல் வன்முறை தொடர்வதும்
தந்தை வழிச் சமூகத்தில் அதிகார மையம் இதுவே என்பதும் இதனால் தான்
பெண் இரண்டாம்தரக் குடிநிலைக்குத் தள்ளப்படுகிறாள்: என்பதும் பெண் ஆண்
சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்தையும் பெண்ணின் அதிகாரங்கள் மறுக்கப்படுவதையும் இன்றைய பெண் கவிஞர்கள் பல்வேறு கவிதைகளில்
அடையாளப்படுத்துகிறார்கள்.
ஆணின் காதலும் காதல் கவிதைகளும் பெண்மீது சுமத்தப்படும் முள்கீரிடங்களாகவே
இருக்கின்றன.

அவள் முலைகளிலும்
தொடைகளிலும்
நீ
வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடி
அலைகிறாய்.
விடைத்தெரியாத
உன் கேள்விகளுக்கு
அவளீடம்
விடைகாணத் துடிக்கிறாய்.
என்று சொல்லும் மல்லிகா அமர்ஷேக்கின் கவிதை இக்கருத்தின் உள்ளும் புறமும்
அலசுகிறது.
ஆண் பேசும் காதலும் கவிதையும் பொய்யானவை என்று சொல்கிறது

அந்த உடல்களுக்கு அப்பால்
உயிர்ப்புடனிருக்கும் 'அவள்களை'
நீ வேண்டுமென்றே
உதாசீனப்படுத்துகிறாய்.

உண்மையில்
உன் கேள்விகளுக்கெல்லாம்
படுக்கையறை மட்டுமே
பதிலாக முடியுமா?

உன் காமம் தணிந்த இரவில்
உன்னோடு உறங்கிய அவளை
நீ அறிந்திருக்கவில்லை.
அவள் பெண்ணோ
ஊத்தைக் கண்ணோ
மாயப்பிசாசோ
இத்தருணத்தில்
கவிதைகளைப் பற்றிய
உன் பேச்சு
ஆச்சரியம்தான்.
ஆனால்
வருத்தமாகவும் இருக்கிறது
இன்னும் எத்தனைக் காலங்கள்
அர்த்தமில்லாத சொற்குவியலாய்
ம்ரப்பாச்சி வாழ்க்கையில்
பொய்யான கீரிடத்தைச்
சுமந்து கொண்டு
திரியப் போகிறாய்?
என்று கேள்வி எழுப்புகிறது.

உன் படகுகள்
பெண்ணின் தொடைகளைச் சுற்றிவந்து
பாய்மரத்தை விரிக்கின்றன

படகின் பயணம்
மீண்டும் ஒரு கடற்கரை
அல்லது
இளைப்பாறுகிறது அவள் முலைக்காம்புகளில்
உன் படகு.
சத்தமாகப் பாடுகிறாய்
அமெரிக்கா அமெரிக்கா
உரேக்கா யுரேக்கா..
இப்படியாக எதொ ஒரு பாடலை
கடலலைப் போன்ற அவள் கூந்தலில்
உன் சரீரம்
தொங்கிக்கொண்டிருக்கிறது.

அவள் கண் இமைகளில்
ஈர உதடுகளில்
காய வைக்கிறாய்
உன் சுவையான
அதிகப்படியான
தர்க்க நியாயங்களை.

மகிழ்ச்சி அலையின்
உச்சக்கட்டத்தில்
நிறைவுகளின் விளிம்பில்
நீ.

இப்போதும்
நான் சொல்லவரவில்லை
அவள்
தேவதை என்று!
ஆனால்
அரைநிர்வாணமாகிப் போன
உன் ஆன்மாவுக்கு
அவள் மட்டுமே
ஆடையாக முடியும்!.

இறுதியாக கவிதை இந்திய மெய்யியலின் தத்துவத்துடன் பெண்ணிய விடுதலையை
இணைக்கிறது. பெண்ணியத்துடன் மெய்யியலை இணைக்கும் போக்கில்
பெண்ணின் மனதில் புதியச் சிக்கல்கள் உருவாகின்றன. பெண் தனக்குள்ளும்
வெளியிலும் புதிய தேடல்களில் ஈடுபடுகிறாள். மரபை முற்றாக ஒதுக்கிவிடவும்
முடியாமல் மரபில் புதுமைச் செய்வதும் தேவையாகிறது. அவளுக்குள் இருக்கும்
பெண் பிம்பத்தை துரத்தவும் முடியவில்லை. புதிய தேடல்களில் மரபு சார்ந்த
மெய்யியலை இணைத்து ஒரு புதிய வழிமுறையை உருவாக்க அவள் முனைகிறாள்.

பெண்ணியத்தின் மேற்சொன்ன போக்கில் புராண இதிகாச கருப்பொருளுக்கு
புதிய அர்த்தங்கள் கொடுப்பதும் இதிகாசப் பாத்திரங்களுக்குள் இன்றைய சிந்தனைகளைப் புகுத்தி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக்கத்தை
கேள்விக்குட்படுத்துவதும் புதிய கருத்து தளத்தைக் கட்டமைப்பதும் சாத்தியமாகிறது.

மோதிரங்கள்
திருமணத்தின்
புனித அடையாளங்கள்
என்றால்
ஏ .. துஷ்யந்த ராஜனே
நான் உன் சகுந்தலையாக
இருக்க விரும்பவில்லை.

ரத்தமும் சதையுமான
என்னை நினைவூட்ட
தேவை ஒரு மோதிரம்தான் என்றால்
என்னை நீ மறந்துவிடுவதே நல்லது
துஷ்யந்தா.
என்கிறார் பஞ்சாபிக் கவிஞர் வனிதா.

நிராதரவான தருணத்தில்
மழைச்சாரலாய் நான்
ஈன்றெடுப்பேன்
என் மகன் பரத்தை.
அவனுக்காகவும்
அலைய மாட்டேன்
மீன்களின் வயிற்றில்
மோதிரத்தைத் தேடி.
என் மகனுக்காக
நான் உருவாக்கும் உலகத்தில்
மீன் அவன் வீடு
மாகடல் அவன் தந்தை
பூமி அவன் தாய்மடி.

என்று ஆண் சார்பில்லாத சகுந்தலையை அடையாளம் காட்டுகிறது.

பெண்ணுக்கு தன் உணர்வு என்ற ஒன்று கிடையாது. அப்படியே இருந்தாலும்
அதை அவள் வெளிப்படையாக உணர்த்தவே கூடாது என்பது தான் இலக்கியத்திலும்
இலக்கணத்திலும் காணப்படும் பெண்ணியம்.
'தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணுங்காலை கிழத்திக்கில்லை" என்று தொல்காப்பியம் பேசும் பெண் திணை
இலக்கணம் நினைவு கூரத்தக்கது.
ஆனால் இருபதாம் நூற்றாண்டு பெண்ணியம் தன் தனித்துவத்தை, தன் வேட்கையை
தங்கள் கவிதைகள் வழி பதிவு செய்ய ஆரம்பித்துள்ளன.

உனக்குத் தெரியுமா
அந்தக் கணநேர காதலுக்காக
நான் காத்திருந்தேன்
பல நாட்கள் என்பது.

கற்பனைத் தவளும் கண்கள்
தேன்சொட்டும் உதடுகள்
மதுவடியும் முலைகள்
போதையூட்டும் தொடைகள்
ப்ராண அவஸ்தையில் அல்குல்
ஒரே ஒரு முறை
காதலின் சுவையறிய
அடிக்கடி
என்னை நானே
கொலை செய்து கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
என்னை
உயிர்ப்பித்துக் கொள்ள.

என்ற அபர்னா மொகந்தி - ஒரியா கவிதை
ஆண் எழுதும் எதையும் பெண்ணும் எழுத முடியும் என்பதும் அதைப் பெண் எழுதும் போது ஏற்படும் சக்திவாய்ந்த மொழியின் கருத்துருவாக்கத்தையும் சேர்த்தே பதிவு
செய்துள்ளது.

"ஆண் உயர்வு சமுதாயத்தில் இருக்கும்வரை பெண்ணுக்கான வெளி உருவாக முடியாது. ஆண் உயர்வு வெளியில் இருந்து கொண்டு பெண் பேசும் அரசியலும் ஆண்மை சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். அதற்குப் பெண் தன்னைத் தானே
உணர்தலும் உணர்ந்ததைத் தன்னுடைய மொழியில் வெளிப்படுத்தலும் தேவை"
என்பார் எலைன் ஷோவால்டர். (பெண்ணியத் திறனாய்வு. பக் 45)
ஆணாதிக்கச் சமுதாயத்தில் இரண்டாம் நிலையிலிருந்து தாங்கள் பெற்ற
சொந்த அனுபவங்களின் வழி தன்னை உணர்தலே இன்று அலுவலக மகளிர் குரலாக
பல கவிதைகளில் ஒலிக்கிறது.
"ஆபிஸில் மதிய உணவு நேரம் " என்ற பிரதிபா நந்தகுமாரின் கன்னட மொழிக்கவிதை ஒரு காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..
என்று சொல்லி இறுதியில்

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'

என்று முடியும் போது தனித்தனி இருவேறு பெண்களாக ஆணாதிக்கத்தால்
அடையாளப்படுத்தப் பட்ட இரண்டு பெண்களும் இரண்டாம் நிலையிலேயே
இருப்பதை உணர்த்திவிடுகிறது.

பெண்ணியப்போக்கில் சில கவிதைகளில் யதார்த்தத்தின் கோரமுகம் அப்படியே
சித்தரிக்கப்படுகிறது. பெண் விடுதலை என்பது இரும்புக் கூட்டிலிருந்து தங்கக்கூட்டிற்குள்
அடைக்கப்படுவதாக மட்டுமே இருக்கிறது. ஆண்-குடும்பம்
என்ற சிறை உடைத்து வெளியில் வந்தால் இந்தப் பூமி உருண்டையின்
ஒவ்வொரு அசைவிலும் ஆணாதிக்கமே கோலோச்சுவதால் விரக்தியுடன்
ஓர் ஆணுக்கு அடிமையாக இருந்து விட்டு போகிறேன் என்ற தத்புருஷ்
கவிதையில் சொல்கிறார் மராத்திக் கவிஞர் கவிதாமகாஜன்.

ஒத்துக் கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை

என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.

உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்


கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்

என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.

என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.

எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:

உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?



இந்தியப் பெண் கவிஞர்களின் படைப்புகளை இதுவரை யாரும் ஒட்டு மொத்தமாகத்
தொகுத்து ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்ளவில்லை.
அப்படி தொகுக்கப்பட்டால் மொழி சார்ந்த பிரிவுகளைத் தாண்டி முரண்படும்
புள்ளியில் கை கோத்து நிற்கும் இந்தியப் பெண்ணியத்தின் கோட்பாடுகளையும்
போக்குகளையும் கண்டறிய முடியும்.


பிற மொழிக்கவிதைகள்:

> Live Update
-an anthology of recent marathi poetry
edited and translated by Sachin Ketkar
published by poetrywala

> Indian literature -sahitya akademi bi-monthly No: 215 of 2003
-women's poetry today.