Sunday, March 19, 2023

'கண்ணம்மா' வாக மாறிய தருணம்

 "


என் துப்பட்டாவை

முண்டாசாக எடுத்து

கட்டிக்கொண்டாய்.."


நானே கண்ணம்மாவாக மாறிய

தருணங்கள்..

நமக்கானவை.


உன் கவிதை வானத்தின் மின்னல்

எனக்குள் இறங்கியது.

ஒளிர்ந்தேன்.

எரிந்தேன்.

தீக்குள் விரலை வைத்து

தீண்டும் இன்பம் 

போதாதென்று

தீயாகி எரிந்து எரிந்து

குளிர்ந்தேன்.


உன் காந்தவிழிகளில்

என் கருத்த முகம்

பட்டுத் தெறித்தப்போது

மழைக் கொட்டியது.

இருவருமே நனைந்தோம்.


என் துப்பட்டாவை

முண்டாசாக எடுத்துக்

கட்டிக்கொண்டாய்.

பாடிக் கலந்திடவே

நம் யகங்களின்  தவம்.

உன் கோட் பாக்கெட்டில்

கனவுகள் இளைப்பாறின.


செல்லம்மா அரிசியோடு

தாழ்வாரத்தில் அமர்ந்தாள்.

பேதை நான்

பிச்சி நான்.

சிட்டுக்குருவியாகி

கீச்கீச் என 

படபடத்தேன்.

இங்கேதான் செல்லம்மாவின்

உலை அரிசி

நீ எடுத்து சிதறியபோது

பூமி பசி ஆறியது.

விட்டு விடுதலையாகி

பறப்பதன் சுகத்தை

சிறகுகள் அறிந்தன.

வானம் வசப்பட்டது.

காக்கை குருவி எங்கள் சாதி

என்றாய்.

பித்தம் தெளிந்தேன்.


உன் வீட்டுத் தூணில்

சாய்ந்திருந்தேன்.

கண்கள் குளமாயின.

"உன் கண்ணில் நீர் வழிந்தால்...

என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி.."

காதருகில் ரகசியமாக

உன் குரல் ...

அதே பாசத்துடனும்

நேசத்துடனும்..

கண்ணீரைப்

 பத்திரப்படுத்திக் கொண்டேன்.


நீ வானம்.

நான் உன் பறவை.

நீ கடல்

நான் உன்னில் மிதக்கும் தீவு.

நீயே நிலம்.

நான்  நிலத்தடியில்

பூத்திருக்கும் வேர்.

நீ காற்று.

நான் சுவாசம்.

நீ பிரபஞ்சம்.

நான் அதில் ஒரு துளி.


(புதுவையில் பாரதியார் இல்லத்தில்

கண்ணம்மா..18 மார்ச் 2023)

#புதியமாதவி_20230320

#puthiyamaadhavi_poems