Wednesday, May 29, 2019

MUMBAI DR PAYAL VS NASA KATHERINE JOHNSON

payal tadvi suicide

மாற்றங்கள் மேலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆம்.
சேரியிலிருப்பவன் மட்டுமே சாதிக்கு எதிரானவனாக 
இருக்கும் வரை சாதி தன் கோர முகத்துடன் இருக்கும்.
மாற்றங்கள் மேல்தட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அண்மையில் நாசா ஆய்வு மையம் தன் இரண்டாவது 
ஆய்வகத்திற்கு கறுப்பின கணினி விஞ் ஞானி
 காத்தரைன் ஜான்சனின் பெயரை வைத்திருக்கிறது.

1950களில் இதே காத்தரைன் என்று பெண்ணுக்கு
அவள் நிறம் காரணமாக நிறவெறியின் உலகம்
அவர்கள் பயன்படுத்திய கழிவறையை காத்தரைன்
பயன்படுத்தக் கூடாது என்று சொன்னது. நாசாவின்
கணித கணினியாக கணினிகள் வருவதற்கு முன்பே
 செயல்பட்டவர் காத்தரைன். 
அவர் மதிய உணவுக்குப் பின் தினமும்
 அரை மைல் தூரம் நடந்து சென்று கறுபர்களுக்கான
 கழிவறைக்குப் போனார்.
அதே நாசாவில் தான் கணினி வந்தப் பிறகு 
கணினி போட்டிருக்கும் கணக்கு சரிதான் என்று 
காத்தரைன் சொன்னால் தான் விண்வெளியில் பறப்போம்
 என்று சொன்ன விண்வெளி வீரர்களும் உண்டு.
இன்று நாசா... காத்தரைன் ஜான்சனுக்கு
 தலைவணங்கி இருக்கிறது...
ஆனால் 
நான் வாழும் மும்பையில் அண்மையில் நடந்த ஒரு செய்தி..
 என்னை மிகவும் பாதித்தச் செய்தி... 
ஆதிவாசி குடும்பத்தைச் சார்ந்த டாக்டர்
பாயல் தட்வி - வயது 26- அவள் பிறப்பு காரணமாக
அவளுடன் பணி புரியும் பிற டாக்டர்களால்
தொடர்ந்து இழிவுப்படுத்தப் பட்டிருக்கிறார்.
அதிகமான வேலைப்பளுவை வேண்டுமென்றே
சுமத்துவது, ஆபரேஷன் தியேட்டரில் நுழைய/ 
பிரசவ வார்டுக்குள் செல்ல ஆதிவாசி டாக்டருக்கு
 அருகதை இல்லை என்று ஒதுக்குவது.. 
இப்படியான மன உளைச்சல்களைத் தொடர்ந்து 
கொடுத்து வந்ததால்..
டாக்டர் பாயல் தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர் பாயலைத் தற்கொலைக்குத் தூண்டிய
டாக்டர்கள் எந்த மருத்துவக்கல்லூரியில்
சாதியைக் கண்டுப்பிடிக்கும் 
ரத்த பரிசோதனைகளைப் படித்தார்களோ.. !

படிப்பு இங்கே என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது?
தன்னைப் போல படித்த சக டாக்டர் பெண்ணைச்
சாதியின் பெயரால் இழிவுப்படுத்தச் சொல்லிக்
கொடுத்திருக்கிறது!
இதே படிப்பு தற்கொலை செய்து கொண்ட
 டாக்டர் பாயலுக்கு போராட்டக்குணத்தைக் 
கொடுப்பதற்கு பதிலாக தற்கொலையைச்
 சொல்லிக் கொடுத்திருக்கிறது!
மாற்றங்கள் மேல்தட்டிலிருந்து வரட்டும்.
வர வேண்டும்..
வருமா ???????????
Image result for katherine johnson

Monday, May 27, 2019

நேருவின் இந்தியா தான்



நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு.
சிலர் அவர் பிம்பத்தை மறைத்துவிடலாம் என்று
 பிரம்ம பிரயத்தனம் செய்து பார்க்கிறார்கள்.
ஆனால் அவருடைய கனவுகள் நனவாகி
அதிலிருந்து விளைந்தப் பயிர்களைத்தான்
இன்றுவரை இந்தியா அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
அவருடைய சில அரசியல் முடிவுகளுடன் 
நாம் மாறுபடலாம். ஆனால் அவை எதுவும் எந்த
கார்ப்பரேட்டுகளுக்கும் அவர் எழுதிக் கொடுத்த
அடிமை சாசனங்கள் அல்ல.
.
Related image

அவர் தான் இன்று உலக நாடுகளில் வாழும் இந்திய
மூளைகளை உருவாக்கிய பல்கலை கழகம்.
அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), 
இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), 
இந்திய மேலாண்மைக் கழகம் (IIM), 
தேசிய தொழில் நுட்பக் கழகம் ( NIT) 
போன்ற உயர்கல்வி நிறுவனங்கள்
 நேருவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவை தான்.. 
இந்திய விடுதலை வீரர்களின் சித்திரவதை முகாமில் தான்
 கரக்பூரின் ஐஐடி யை கட்டி எழுப்பினார்.
அணைகளும் கனரக இரும்பு உருக்கு ஆலைகளும்
அவர் கட்டிய கோவில்கள்.
அவர் காலத்திய BARC அணு ஆராய்ச்சி மையம் தான்
பின்னர் வந்த அப்துல்கலாமுக்கு கிடைத்த அக்னிச்சிறகுகள்.
தமிழகத்தின் பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை,
 ஆவடி பீரங்கி தொழிற்சாலை திருச்சி பாய்லர் தொழிற்காலை 
அவர் காலத்தில் உருவானவை தான்.
உலகத்தலைவர்கள் பலருக்கு அவர் தான் ஆதர்ச சக்தி. 
நெல்சன் மண்டேலா நேருவைத்தான் தனக்கு முன்மாதிரி
 என்று சொல்கிறார்.
இன்றைக்கு விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பி 
இந்தியா வல்லரசாகிவிட்டது என்று மார்தட்டி சொல்லுகிறார்களே.
அவர்களுக்குத் தெரியும் 
1962ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) 
அமைத்தது நேரு என்று.

அதனால் தான் மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை
 அமைச்சரான வாஜ்பாய் அவரின் அறையில் இருந்த
 நேருவின் படத்தை எடுக்க முயன்ற போது , .
 “இல்லை ! அவரின் படம் அங்கேயே இருக்கட்டும் !” என்றார்.

மக்களவைத் தேர்தலின் போது இந்தியாவெங்கும் பயணித்து
 பிரச்சாரம் செய்த நேரு தான் போட்டியிட்ட தொகுதியில் மட்டும் 
பிரச்சாரம் செய்யவில்லை. காரணம் கேட்கப்பட்ட பொழுது ,
”என்னுடைய திறந்த புத்தகமான நாற்பது ஆண்டுகாலப் 
பொதுவாழ்க்கையைப் பார்த்து மக்கள் எனக்கு ஓட்டுப் போடட்டும் !”
 என்றார்
ராகுல் ...
காங்கிரசும் மறந்துவிட்ட உங்கள் பூட்டனாரின்
பெருமை மிக்க வரலாறு இது.
உங்கள் பயணம் அவரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.. ராகுல். 

இப்போதும் அந்தப் பாதை உங்களுக்காக
திறந்தே இருக்கிறது...
நடக்கும் துணிவிருந்தால்
எதுவும் வெகுதூரமில்லை.

ராகுல் அபிமன்யு ஆக்கப்பட்டாரா?

ராகுல்காந்தி தனித்து விடப்பட்டாரா..?!
தங்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால் 
கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டிய
பெரிசுகளின் அராஜகம்... 
வாரிசுக்கு சீட்டு வாங்குவதில் காட்டிய 
பிடிவாதத்தில் 10% கூட மோதியைத் தோற்கடிப்பதில் 
காட்டவில்லை! இந்தப் பழம் தின்னு கொட்டை முழுங்கிய
 பெரிய மண்டைகள்.. 

தமிழ் நாடு ப. சிதம்பரம்,  மத்திய பிரதேச முதல் மந்திரி கமல் நாத், 
ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் ஆகியோரின்
பெயர்களை வெளிப்படையாக சொல்லி காங்கிரசு கமிட்டியில் 
பேசி இருக்கிறார்கள். 

இதைத் தோற்றுப்போனவரின் புலம்பலாக மட்டுமே
 எடுத்துக் கொண்டு கடந்து சென்றுவிட முடியவில்லை. 
காரணம் அவர் சொல்வதில் இருக்கும் 
உண்மையின் கொதி நிலை..

ராகுல்காந்தியும் காங்கிரசும் பெற்றிருக்கும் 
சொற்பமான தொகுதிகளின் வெற்றிகள் கூட
காங்கிரசின் வெற்றி அல்ல, 
அந்தந்த மா நில கட்சிகளின் தலைவர்களுக்கு 
இத்தேர்தலில் இருந்த செல்வாக்கும் 
மா நில கட்சியினரின் உழைப்பும் மட்டும் தான் காரணம்...
இவ்வளவும் செய்துவிட்டு...
I stand with Rahul gandhi " என்று
என்ன டுவிட்ட வேண்டி இருக்கிறது.. !

Saturday, May 25, 2019

மாறிய அரசியல் களமும் காட்சியும்

சிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மை
என்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல்
களம் நகர்ந்திருக்கிறது.
மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி
அமைத்து மூன்றாவது சக்தியாக மாற
வேண்டிய சூழல் இந்தியாவில் இல்லை.
எமர்ஜென்சி காலத்தின் நெருக்கடி போல
ஒரு சூழல் ஏற்படவில்லை.
எதிரணியினர் மோதி என்ற தனி நபரை
மட்டும் எதிரியாக நினைத்து தங்கள்
பரப்புரைகளைத் தொடர்ந்தார்கள்.
மோதி வரக்கூடாது, வந்துவிடவே கூடாது
என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்களே
தவிர அதற்கான காரணத்தை, பொது ஜனம்
 நம்பும் வகையில் முன்வைக்க அவர்களால் முடியவில்லை.
1)ரபேல் ஊழல் என்று ராகுல் சொல்லும் போதெல்லாம்
 போபர்ஸ் ஊழல் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
2) பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மோதி
அரசின் தோல்வி படித்த மத்திய தர மக்களின்
புரிதலுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட தால்
அடித்தட்டு மக்களோ உழைக்கும் மக்களோ
இதெல்லாம் பெரிய பணக்காரனுக்குத்தான்
மோதி வேட்டு வைத்தார் என்று நினைத்தார்கள்.
அவர்களை அது பாதிக்கவில்லை.
3) ஜிஎஸ்டி வரி விதிப்பு.. வியாபாரிகளைப் பாதிக்கவில்லை.
காரணம் வியாபாரிகள் அதை விற்பனையில் கூட்டி
வாங்குபவர்களின் தலையில் கட்டினார்கள்.
விலைவாசி உயர்வுக்கு பழக்கப்பட்டு விட்ட
பொதுஜனம் பொருட்களை வாங்கும் போது
வரி விதிப்பை எல்லோருக்குமானது நமக்கும்,
என்று எடுத்துக் கொண்டார்கள். இன்னும் ஒரு படி
மேலே போய் இனி, வியாபாரிகள் அரசாங்கத்தை
ஏமாற்ற முடியாது, வரி கட்டியாக வேண்டும்,
அரசு பணம் பொதுமக்களின் பணம் என்ற
இன்னொரு பக்கத்தை முன்னெடுத்து சென்றார்கள்.
மேலும் அதிகச்சம்பளம் வாங்கும் கணினித்துறை
சார்ந்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையாகவே
இல்லை. இன்று புதிதாக எடுக்கும் எல் ஐ சி பாலிசி பிரிமியத்தில்
ஜி எஸ் டி சேர்த்து கட்ட வேண்டும். !
4) வேலை வாய்ப்பின்மை என்ற பிரச்சனையை
சரியான வழியில் கையாள எதிரணியினர் தவறிவிட்டார்கள்.
5)படிப்புக்கேற்ற வேலை இல்லை, விவசாயிகளின் பிரச்சனை
இத்தியாதி பிரச்சனைகள் அனைத்தும் 
வலிமையான இந்தியா, பாதுகாப்பான இந்தியா
 என்று மோதி முன்வைத்த இந்திய முகத்தின் முன்னால் 
சுருங்கிப் போனது.
6) இட ஒதுக்கீடு.. எப்போதுமே ஒரு சாராருக்கு வாய்ப்புகளைக் '
கொடுக்கும் என்ற நிலையில் மற்றவர்கள் முணுமுணுப்பார்கள்.
மோதி அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு அதிலும் குறிப்பாக
 10% இட ஒதுக்கீடு இந்தியாவின் இந்துக்களுக்கு ஒரு வசீகரமான
சக்தியாக மாறியது. அது தேர்தலில் ஓட்டுகளாகவும் மாறி இருக்கிறது.''
7) இன்று காங்கிரசும் காங்கிரசு கூட்டணி வைத்த
 அரசியல் கட்சிகளும் எதிர்க்கும் பல திட்டங்கள்
நீட் தேர்வு உட்பட... காங்கிரசு ஆட்சி காலத்தில்
மன்மோகன் சிங்க் கோப்புகளில் இருந்தவை தான்'
 என்பதைப் பலர் அறிவார்கள்.
8) மேற் சொன்ன அனைத்து காரணங்களையும் விட
மிக முக்கியமான இன்னொரு காரணம்.. 
மோதி என்ற நபருக்குப் பின்னால்'
 எந்தக் குடும்ப அரசியலோ வாரிசு அரசியலோ இல்லை.
இந்தியாவின் அனைத்து கட்சிகளிலும் பரவி இருக்கும்'
 வாரிசு அரசியலின் நெடி மோதியிடம் இல்லை. 
அராஜகமான வாரிசு அரசியலில் நொந்துப் போயிருக்கும்
 மக்களுக்கு அப்படியான எதுவும் இல்லாத 
மோதியின் தலைமை ஒரு பெரிய 
ஆறுதலாகத்தான் இருக்கிறது.
மோதிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுப்போம்
 என்பதே மக்களின் விருப்பமாக இருந்திருப்பதை
 தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

ஆனாலும்.. இப்படியா..????
இதை யோசிக்க வேண்டிய கட்டாயம்
காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
யோசிப்பார்களா ..?

Thursday, May 23, 2019

தாமரை மலர்ந்தே தீரும் ...

தாமரை மலர்ந்தே தீரும்..
அருள் வாக்கு சொன்ன அக்கா
தமிழச்சி தமிழிசை வாழ்க!

Image result for தாமரை மலர்ந்தே தீரும் தமிழிசை



தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் எந்த இக்கட்டான 
தருணத்திலும் குரல் கொடுத்தவர்
தமிழகத்தின் தமிழிசை. 
மோதிஜி அவருக்கு கட்டாயம் ஒரு அமைச்சர் பதவியாவது 
கொடுத்து அவரை ஊக்குவிக்க வேண்டும்.
காரணம் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தமிழிசை அக்காவின் அருள்வாக்கு
பலித்துவிட்டது. அக்காவின் குரல் தான் 
 தாமரையின் இந்த மாபெரும் வெற்றிக்கு
காரணம் என்பதை இத்தருணத்தில் சொல்லிக் கொள்வதில்
 பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதுடன்
 அந்தக் குரலின் வலிமையை எல்லோரும் உணரும் வகையில் ...
 ம்ம்க்கும்..
கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன். தொண்டை
வறண்டு போகுது.
சரவணா... எங்கே ஒரு ஓ போடு பார்ப்போம்
தமிழிசைக்கு.
தமிழச்சி தமிழிசை சொன்னார் ..
தாமரை மலர்ந்தே தீரும் என்று.
மலர்ந்தது தாமரை.

சென்ற முறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை
எதிர்த்து தோல்வி அடைந்த சும்ருதி இரானிக்கு மட்டும் 
நீங்கள் மந்திரி பதவி கொடுத்து அழகுப்பார்க்க வில்லையா என்ன?
தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் குரல்
கொடுக்கும் எங்கள் தமிழிசை மட்டும் 
சும்ருதி இரானியை விட குறைந்தவரா என்ன???
என்ன என்ன .. ( எதிரொலி சரவணா )

#BJPTAMILNADU
#தமிழிசைBJP

Monday, May 20, 2019

HAMID - அல்லாவுடன் பேசும் காஷ்மீரி சிறுவன்

Image result for hamid movie
HAMID –
ஹமீது- திரைப்படம்..
காணாமல் போன காஷ்மீர் மக்களின் அரசியல் கதை.
சமகால அரசியல் பின்புலத்தில் கதைகளை
திரைப்படமாக்கும் போது ஏற்படும் பெரிய சிக்கல்
சார்பு நிலை. எது சரி, யார் பக்கம்  நியாயம் இருக்கிறது
என்ற கேள்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சமாக
இருந்து விடுவது வாடிக்கை. ஆனால் ஹமீது அப்படி இல்லை
என்பதும் சமகால தீவிரமான இந்திய அரசியலை , காஷ்மீரின்
பின்புலத்தில் காட்டும் போது காஷ்மீர் மக்களின் கண்ணீரும்
அவர்களை இரவும் பகலும் காவல் காத்து  நிற்கிறோம்
என்ற நிலையில் இந்திய இராணுவ வீர்ர்களின் மன நிலையும்
அழுத்தமும்… மாறி மாறி காட்சிகள் விரியும் போது..
தேசமும் எல்லைகளும் தேவைதானா..
எதற்காக இந்தச் சண்டைகள் தொடர்கின்றன,
யாரை எதிர்த்து சண்டைப் போடுகிறது நம் இந்திய அரசு?
இப்படியான பல கேள்விகள் படம் பார்க்கும் போதும்
பார்த்து முடித்தப் பிறகும் நம்மைத் துரத்துகின்றன.

கதை புதிய கதையல்ல,
கிறிஸ்துமஸ் நேரத்தில் சொர்க்கத்தில் இருக்கும்
தன் அப்பாவுக்கு சிறுவன் ஒருவன் கடிதம் எழுதுகிறான்,
அதை வாசிக்கும் போஸ்ட்மேன் அச்சிறுவனுக்கு சொர்க்கத்திலிருந்து
பரிசுகள் அனுப்புவதாக எழுதி பரிசுகள் அனுப்பிய கதையை நம்மில்
பலர் வாசித்திருப்போம். கதை என்னவோ அதே கதை தான்.
ஹமீது 786 என்ற எண் அல்லாவின் எண் என்று முடிவு செய்து
தன் அப்பாவின் செல்போனிலிருந்து அழைக்கிறான். செல்போன்
எண் பத்து இலக்கமாக இருக்க வேண்டும் என்று கடைக்கார ர்
சொல்ல ஒரு நோட்டீசில் அச்சிடப்பட்டிருக்கும் செல்போன்
வரிசைப் படி 786 எண்ணை முதல் எண் 9 போட்டு 786 786 786
என்று அழைக்கிறான். அந்த எண் இந்தியப் படைவீரனுக்குப்
போய்விடுகிறது. அல்லாவுடன் பேசுவதாகவே சிறுவன்
நினைக்கிறான். பிறந்த  தன் பெண் குழந்தையைப் பார்க்காமல்
குழந்தையின் நினைவுகளில் தவிக்கும் அப்பாவின் மனம்
ஹமீது என்ற சிறுவனிடம் பேச ஆரம்பிக்கிறது/ காணாமல் போன
தன் அப்பா அல்லாவிடம் இருக்கிறார். அல்லா, என் அப்பாவிடம்
சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று தினமும்
பேசுகிறான்… கதையின் ஊடாக சிறுவனின் பேச்சு.
அல்லா கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும்
கிடையாது என்று சிறுவன் சொல்லும் போது..
இம்மாதிரி சிறுவர்களைக் குறிவைத்து மடக்கி தங்கள்
இயக்கத்தில் சேர்க்கும் அமைப்புகள்.. இப்படியாக கதை
விரிகிறது.

அல்லாவாக சிறுவனிடம் போனில் நடிக்கும் இந்திய வீரன்
ஹமீதுவின் அப்பாவைத் தேடும் முயற்சி அவன் அதிகாரிகளுக்குத்
தெரிய வருகிறது. அந்தச் சிறுவனுக்கு உதவ விரும்புகிறேன்
என்று அவன் சொல்லும் போது “  நீ உதவ விரும்புவது ஹமீதுக்காகவா?
ஹமீதின் அம்மாவுக்காகவா? என்று அதிகாரி கேட்கிறார்.
“ உனக்கு கொடுத்திருக்கும் வேலையை மட்டும் செய்.
இதிலெல்லாம் தலையிடாதே..” என்று அதிகாரம் சொல்கிறது.
படைவீரன் சல்யூட் அடித்துவிட்டு நகர்ந்து செல்வதைத் தவிர
நடைமுறையில் எதுவும் சாத்தியப்படவில்லை.

சிறுவன் ஹமீதின் அம்மா இஷ்ரத்தான நடிக்கும் ரஷிகா டுகல்..
ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
நடிக்கவில்லை, அந்தக் கதைப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார்
என்று யாருக்கெல்லாமோ சொல்வார்கள் நம் விமர்சகர்கள்.
ஆனால் ரஷிகா டுகல் .. அப்படித்தான் ஹமீதில் வாழ்ந்திருக்கிறார்.
ஐஜஸ் கான் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம்
காஷ்மீர் காட்சிகளைக் கூட இரண்டாம்  நிலைக்குத் தள்ளிவிட்டு
ஒவ்வொரு வசனத்திலும் பாத்திரங்களின் நடிப்பிலும் சமகால
அரசியலை கலைவடிவத்தில் எவ்விதமான சேதாரமும் இல்லாமல்
கொடுத்திருப்பதும் .
கண்களில் வழியும் கண்ணீரின் சூடு ஆறவில்லை இன்னும்.


Friday, May 17, 2019

R S S வசனத்தில் கமலின் நடிப்பா??

ஹேராம்..
கோட்சேவின் குண்டுகளில்
மகாத்மாவின் மரணத்தில்
நீ ஏன் மறுபிறவி எடுத்தாய்..
ஹே ...ராம்..
கமலுக்குப் பதில் சொல்லி காந்தியின் கொள்ளுப்பேரன் எழுதிய கடிதம் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. அக்கடிதம் கோட்சேவை தீவிரவாதி என்று சொல்வதை ஏற்க மறுக்கிறது. அத்துடன் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் கட்டுப்பாடு பயிற்சி செயலூக்கம் சாதி மறுப்பு ( யெஸ் சாதி மறுப்பு உட்பட ...!) அனைத்தையும் அவர்களின் பயிற்சி முகாமில் நேரில் கண்ட காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்பை மிகவும் பாராட்டியதாகவும் சொல்கிறது.

இந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வரிகளையும் வாசிக்கும் போது ... கமலின் கோட்சே இந்து தீவிரவாதி வசனம் ஏற்கனவே பிஜேபி எழுதிய வசனமோ அதில் கமல் தன்னுடைய கதைப் பாத்திரத்தை எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசி நிறைவு செய்திருக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது.
அதாவது இப்படியான ஒரு கேள்வியை இத்தருணத்தில் எழுப்பி வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும் சில உண்மைகளை மாற்றி எழுதவும் சிலவற்றை மீண்டும் விமர்சித்து உரையாடல் நிகழ்த்தி இந்து தேசாபிமானத்தைக் கட்டமைக்கவும் பிஜேபி இத்தருணத்தை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகவே தெரிகிறது.
காரணம்.. கமலின் இந்த வசனம்,,, பிஜேபிக்கோ அல்லது காங்க்கிரசுக்கோ வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகும் வசனம் அல்ல. ஆனாலும்
இந்த வசனம் தேர்தல் களத்தின் சூட்டோடு சூடாக
அனல் பறக்க பரிமாறப்படுகிறது. இதன் சூடு ஆறிவிடாமல் காப்பாற்றுவதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றிக் கொண்டு இருக்கின்றன.
இது ஒருவகையில் பிஜேபின் தொலை தூரப்பார்வை மற்றும் பிஜேபி கட்டமைக்க விரும்பும் இந்து தேசத்தின் அபிமானிகளுக்கான உரையாடலாக மாறி இருக்கிறது.  திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கிறது. காந்தி இதை இதைச் செய்யவில்லை... அதனால் தான் நாதுராம் கேட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றான் என்ற வாதத்தை மீண்டும் பொதுவெளிக்கு கொண்டு வந்ததில் கமல் ஒரு துருப்புச் சீட்டு. கதையும் வசனமும் அவர்கள் எழுதுகிறார்கள். 
இப்படியாக மீண்டும் மீண்டும்
காந்தி மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன... இன்னும் எத்தனை தடவை தான் அந்தக் கிழவனைச் சாகடிக்கப் போகிறார்களோ ..
ஹே ராம்...

Sunday, May 12, 2019

கல்லறை கலாச்சாரம்


கல்லறை கலாச்சாரம்
கல்லறைகள் தமிழரின் கலாச்சாரத்தில் அதிகாரத்தின்
அடையாளமாக இருந்திருக்குமா ? 
எகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் கல்லறைகள்.
இந்தியத் தலை நகரம் டில்லி கல்லறைகளால் 
நிரம்பி வழிகிறது.
மெரீனா கடற்கரையும் விதி விலக்கல்ல!
ஆனால் கல்லணைக் கட்டிய கரிகால்லுக்கு 
ஏன் தனக்கு ஒருஅழியாத கல்லறை கட்ட வேண்டும்
என்று தோன்றவில்லை?
பெருவுடையார் கோவிலைக் கட்டிய 
தஞ்சை ராஜ ராஜ சோழனுக்கு கல்லறை இருக்கிறதா?
 இருப்பதாக அடிக்கடி யு டியூப்பில் வெளிவரும்
செய்திகள் கூட எந்தளவுக்கு ஆதாரப்பூர்வமானவை
என்ற கேள்வி எழுகிறது. 
தமிழகத்தை ஆண்ட மூவேந்தருக்கும் கல்லறைகள் இல்லை
என்பது மட்டுமல்ல, அரண்மனைகளும் இல்லை.

வட இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில்
வாழ்ந்த அரசர்களின் அரண்மனைகள் இப்போதும்
 பளிங்குக்கற்களில் ஜொலிக்கின்றன.
இந்தி திரைப்படங்களின் கனவு காட்சிகளுக்கும் 
காதல் டூயுட்டுகளுக்கும் அந்த அரண்மனைகள்
 பெரிதும் பயன்படுகின்றன.
 உலக அதிசயமான தாஜ்மஹால் ஒரு கல்லறை தான் 
என்பது நாம் அறியாதச் செய்தி அல்ல.

கல்லறை கலாச்சாரம் என்பது எப்போது ஏற்பட்ட து?
கல்லறை கட்டுவது என்பது அந்த குறிப்பிட்ட 
ஆளுமையைக் கொண்டாடுவது என்பதும் 
அவருடைய முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்வது என்பதும் கூட
 ரொம்பவும் மேம்போக்கானது.
 ஒரு வகையில் இவை எல்லாமே 
ஆளுமைகளை அடையாள அரசியலுக்குள்
அடக்கு முடக்கிப் போடும் வித்தை.

பெருந்தலைவர்களுக்கு நினைவு மண்டபங்கள் 
கட்டுவது அரசியல் களத்தில் ஒரு கண்கட்டு வித்தை.  
நினைவு மண்டபங்கள் கட்டுகிறேன்
என்றுசொல்லி இயற்கையின் அழகிய கன்னியாகுமரியை
எவ்வளவு சீரழித்துவிட்டோம் என்பதைப் பற்றி நம்மில் பலர் உணர்ந்திருந்தாலும் வெளியில் சொல்வதில்லை. காரணம்… 
நாம் யாருடைய நினைவு மண்டபத்திற்கு எதிராகவோ
இதைச் சொல்வதாக புரிந்து கொள்ளப்பட்டு
அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து 
தப்பிக்கும் மன நிலை தான்
பொது ஜன உளவியலில் இருக்கிறது.

கல்லறைகள் எப்போதுமே அதிகாரத்தின் 
குறியீடாகவே இருக்கின்றன.
அரசன் என்பவன் இயற்கையை பாதுகாப்பவன்.
ஏரி தூர்வார்த்து குளம் வெட்டி நீர் மேலாண்மை 
காத்தவன் தான் தலைவன்.
விவசாயத்தை தன் வாழ்வியலாக கொண்ட
 சமூகத்தில் கல்லறை இல்லை.
வணிகத்தை முன்னிறுத்தும் சமூகம் தான்
மாட மாளிகைகள்,அரண்மனைகள், செத்தப்பின் கல்லறைகள் 
என்று அதிகாரத்தை எப்போதும் 
தன் கூடவே வைத்திருக்கிறது.