Monday, October 27, 2014

இந்தியாவை ஏமாற்றும் நோக்கியா...





பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் திருபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில்(SEZ) கைப்பேசித் தொழிற்சாலையை தொடங்கி நடத்தி வந்தது. இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.
 31,000க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக இதனால் வேலை வாய்ப்பை பெற்றனர்.
ரூ.620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத் தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு ரூ 2400 கோடி வரி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நோக்கிய நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் 2013ல் செய்து கொண்ட ஒப்பந்தம்
நிறைவேறவில்லை. அதாவது நோக்கியா மைக்ரோசாஃப்ட்டுக்கு
கைமாறவில்லை.
இப்போது நோக்கியா நவம்பர் முதல் தன் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக
அறிவித்துவிட்டது. அதில் பணிபுரியும் பலர் விருப்ப ஓய்வுக்கும்
சம்மதித்துவிட்டார்கள்/ கட்டாயப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.


பலகோடி ரூபாய்க்கு வரிவிலக்குப் பெற்று சகலவிதமான ராஜமரியாதையுடன் சிவப்புக் கம்பளம் விரித்து இங்கே வரும்
அயல்நாட்டு நிறுவனங்கள் மொத்த லாபத்தையும் கொள்ளையடித்து
தன் நாட்டுக்கு அனுப்புவதுடன் தொழில் நடத்தும் நாட்டின் சட்ட திட்டங்களையும் மதிக்காமல் அடாவடித்தனம் செய்வதும் வரி ஏய்ப்பு
செய்வதும் வழக்குத் தொடர்ந்தால் "சரிதான் போடா" என்று கதவை
அடைத்து மூடிவிட்டு போகத் தயாராக இருப்பதும்... தொடர்ந்து நடக்கிறது.
ஆனாலும் கண்களை மூடிக்கொண்டு இந்திய அரசு வெளிநாட்டு முதலாளிகளை தங்கள் நாட்டுக்கு வந்து முதலீடு செய்ய அழைக்கிறது.
அப்படி அழைப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் நம் ஊடகங்கள்
அந்த நிறுவனங்கள் செய்யும் ஏமாற்றுகளைக் காட்டுவதில்லை.


நோக்கியாவில் வேலை வாய்ப்பு பெற்றிருந்த அந்த 31000 பேரின் எதிர்காலம்
என்னவாகும்? நோக்கியா நிறுவ்னம்  இந்தியாவில் முதலீடு செய்த இதே
ரூ 620 கோடியில் 8 ஆண்டுகளில் 25000 கோடி நிகரலாபத்தை
தன் சொந்த நாட்டில் முதலீடு செய்திருந்தால் கிடைத்திருக்குமா?


என்னவோ இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாகவும் நம் பாடப்புத்தகங்களில்
படித்திருக்கிறோம். ஆனால்
இப்போதும் சுரண்டல்கள் நடக்கத்தான் செய்கின்றன.
சுதந்திர இந்தியாவின் அனுமதியுடன்,  வெவ்வேறு பெயர்களில்.

 


Sunday, October 26, 2014

பெண்களும் கைபேசியும்





பெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது.
முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது
அத்துடன்,முகநூலைப் பயன்படுத்தும் பெண்கள் தாங்கள் என்ன
செய்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

.
கணினி  வசதிகள் எதுவும் இல்லாத இடத்திலும்
இன்று கைபேசிகள் வந்துவிட்டன. அதிலும் கைபேசிகள்
வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களிடம்
எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன
என்பதற்கு இன்றுவரை நம்மிடம் கள ஆய்வுகள் இல்லை.

தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாதிப்பெண், இன்னொரு குறிப்பிட்ட
சாதி ஆணுடன் காதல் உறவு கொள்வதாக மேடைகளில்
சாதித்தலைவர்கள் முழங்கிய போது அக்கருத்தை ஒட்டி
உளவியல் பேராசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர்
என்னுடன் உரையாடினார். வெறும் பாலியல் ஈர்ப்பு என்பதையும்
தாண்டி இந்தப் பிரச்சனையை அணுக வேண்டி இருப்பதை
நாங்கள் பேசிக்கொண்டிருந்த தருணத்தில் அவருடைய ஆய்வு
திருமணம் ஆகாத பெண்களைப் பற்றியதாக மட்டுமே இருப்பதைச்
சுட்டிக் காட்டினேன். அப்போது அவர் தன்னுடைய  ஆய்வில்
திருமணம் ஆன பெண்களின்  வாழ்க்கையில்
ஏற்பட்டிருக்கும் மன அழுத்தங்களையும் அவர் கணக்கில்
எடுத்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினேன்.


திருமணம் ஆன, பெண்களின் வாழ்க்கையில்
கைபேசி எம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும்
குறிப்பாக வேலைக்குப் போகாத பெண்கள், ஹோம் மேக்கர்ஸ்
என்று பெருமையுடன் எங்களைப் போன்றவர்கள் அறிமுகப்படுத்தும்
ஹவுஸ்வொய்ஃப், நகரங்களிலும் கிராமங்களிலும் இப்பெண்களின்
வாழ்க்கையில் கைபேசியின் தாக்கம் எம்மாதிரியான விளைவுகளை
ஏற்படுத்தி இருக்கிறது?

குறிப்பாக  நடுத்தர வயதுப் பெண்கள் அங்கீகாரங்களுக்காகவும்
ஆறுதல் மொழிகளுக்காகவும் ஏங்கி நிற்பதையும் ப்டுக்கை
அறை வரை தொலைக்காட்சி வந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில்
கணவன் - மனைவி இருவருக்குமான உரையாடல்கள்
குறைந்துவிட்டது.
அந்த இடத்தை முகநூலும் கைபேசியும் பிடித்துவிட்டன.
கைபேசியில் குறுஞ்செய்திகள் ஏற்படுத்தும் குழப்பங்களும்
பிரச்சனைகளும் இல்லாத குடும்பங்களே இல்லை என்று
சொல்கிற அளவுக்கு இதன் தாக்கங்கள் இருக்கின்றன.
அடுத்தவன் மனைவிக்கு ஆசை வார்த்தைகளைக் குறுஞ்செய்திகளாக
அனுப்பும் ஒவ்வொரு ஆணும் என்றாவது ஏதாவது ஒரு சூழலில்
அந்தப் பெண்ணின் இடத்தில் தன் மனைவியை, தன் மகளைப்
பார்க்கும் தருணத்தில் நிலை குலைந்துப் போகிறான்.
இதே நிலைப் பெண்ணுக்கும் ஏற்படுகிறது என்பதும் உண்மை.
 
எந்த ஒரு சமூகப்பிரச்சனையின் தாக்கமும் அதன் 3வது
தலைமுறையிடம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது
சமூகவியல் ஆய்வுகள் சொல்லும் முடிவு.. எனவே,
என் தலைமுறையின் சில உண்மை சம்பவங்களை
மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுவது
தவறு என்பதையும் அறிவேன். ஆனால் தாக்கங்கள்
இருக்கின்றன.. அதை இல்லை என்று சொல்லவோ
அல்லது மறைக்கவொ முடியாது.

இத்தருணத்தில் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையில்
ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட சில தாக்கங்களைப்
பற்றி நினைவூட்டுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


என் கல்லூரி காலங்களில் எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆடவனைக்
காதலித்திருந்தால், அந்தச் செய்தி அவள் திருமணத்தின் போது
பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது ஒரு பெண் மனசால்
ஒருவனை நினைத்துவிட்டாலோ போதும். அவள் மாசிலா
கற்பிலிருந்து விலக்கப்பட்டவளாக நினைத்தார்கள். இந்த
பாஃர்மூலாவை வைத்து அன்றைய வார இதழ்களில் தொடர்கள்
வந்தன. திரைப்படங்கள் வந்தன. அதன் பின், திருமணத்திற்கு
முன், பெண் ஆண் வாழ்க்கையில் காதல் வருவதும் வராமல்
இருப்பதும் ரொம்பவும் சகஜம் என்ற மனநிலை வந்தது.
திருமணத்திற்கு முன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை,
திருமணம் ஆனபின், கணவன் மனைவி ஒருவருக்கொருவர்
உள்ளத்தாலும் உடலாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யாமிலிருக்க
வேண்டும் என்ற சமூக அறம் தானாகவே உருவானது.
அதுவும் சரியாகவெ இருப்பதாக எல்லோருமே ஏற்றுக்கொண்டோம்.

பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் உலகத்தில் பெண் சில தனிப்பட்ட
பிரச்சனைகளைச் சந்திக்கிறாள்.
"திறந்திருக்கும் முதுகுகள்" என்று இப்பிரச்சனையை
முன்வைத்து நானொரு சிறுகதை எழுதி இருக்கிறேன். அக்கதையை
கோவையில் நடந்த என் படைப்புகளுக்கான கருத்தரங்கின் போது
மயூரா ரத்தினசாமி அவர்கள் மிகச்சிறந்த விமர்சனத்தை வைத்தார்.
அக்கதையின் படி, வேலைப்பார்க்கும் இடத்அப்படி இப்படி
தொடுவதும் உரசுவதும் சகஜம் என்பதும் அதை தில் "எல்லாம்
பொருட்டாக நினைத்தால் இன்றைய கார்ப்பரேட் உலகத்தில்
ஒரு பெண் தன் பயணத்தை தொடர முடியாது என்பதையும்
பெண் வேலைப்பார்த்தே ஆக வேண்டும் என்பதில் இருக்கும்
 நடுத்தர வர்க்கத்தின் தேவை, அபிலாஷைகளையும்
எழுதி இருப்பேன். அதாவது இதெல்லாம் நடப்பது தான்,
படுக்கை அறையில் ஆண் பெண் பாலியல் உறவு நடந்துவிட்டால்
மட்டும் தான் குற்றம் என்ற நம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை
உணர்த்தும் கதை அது. அக்கதையின் ஊடாக இதை ஏற்றுக்கொள்ளும்
நம் சமூகம் தன் உடலை பாட்டின் தாளத்துக்கு ஏற்றபடி இரவில்
மதுபான விடுதிகளில் ஆடும் நடன மங்கையிடம் மட்டும் ரொம்பவும்
வித்தியாசமாக காட்டும் இரட்டை மனநிலையை அக்கதையில்
வைக்கப்படும் கேள்வியாக இருக்கும்.

எனவே, இக்கண்டுபிடிப்புகளால்,,
ஆண் பெண் உறவுகளில் சமூகம் உருவாக்கி இருக்கும்
சட்டதிட்டங்கள் விதிமுறைகள் முழுக்க தகர்க்கப்படுமா?
குடும்பம் என்ற நிறுவனத்திற்கு இக்கண்டுபிடிப்புகள்
எம்மாதிரியான சவால்களை முன்னிறுத்துகின்றன?
இக்கண்டுபிடிப்புகள் பெண்களுக்கு வடிகால்கள் மட்டும் தானா?
இதெல்லாம் "சகஜம்பா" என்று கடந்து செல்வோமா?!!

Monday, October 20, 2014

காதலின் பரிணாமம்






நான் பறவையைக் காதலித்தேன்
அது தன் சிறகுகளில்
என்னை அணைத்து
வையகமெங்கும்
வானகமெங்கும்
பறந்து திரிந்தது.
விட்டு விடுதலையானக்
காதலின் சுகத்தை
அப்போதுதான் அனுபவித்தேன்.

நான் ஆமையைக் காதலித்தேன்
அவசரப்படாமல் அருகில் வந்தது.
தேரில் பவனிவரும்
மதுரை மீனாட்சியைப் போல
அதன் ஒடுகளே சிம்மாசனமாய் 
கம்பீரமாக அசைந்து நடந்தேன்.
கடல் அலைகளில்
பாய்மரக்கப்பலாய்
பவனி வந்தேன்.


நேற்று என் காதல்
முண்டாசுக்காரனின் தோரணையில்
மயங்கி 
கண்ணம்மாவின் 
எச்சில் பட்டக் காதலுக்காக
வெட்கமின்றி காத்திருந்தது. 
ராதையின் தோட்டத்தில்
காத்திருந்த கோபியரைப் போல.
அப்போதும் காதல்
ஒரு மகாகாவியத்தைப் போல
மாலையுடன்  வலம் வந்தது.
நான் காதலுடன் வாழ்ந்தேன்
காதல் என் கவிதையில் வாழ்ந்தது.


இன்று
களவுக் காதல்
கற்பு காதலுடன் 
சங்கமிக்கும் தருணம்
காதல் -
கவிதையைக்  கொலை செய்தது
தானும் தற்கொலை செய்துகொண்டது.

அன்றைய பத்திரிகையில்
காதலின் முகவரி
சாதி அட்டையிலும்
கடவுளின் கட்டைவிரல்
அடையாளத்திலும்
பத்திரமாக 
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருந்தது.

--------------------------------------------------

ஒரு பெரியாரிஸ்டின் தீபாவளி






நட்சத்திரங்களை விரட்டிவிட்ட மின்விளக்குகளின் ஆகாயத்தில் தீபாவளியும் சேர்ந்து நிலவுக்கு இருட்டடிப்பு செய்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் வண்ண விளக்குகள். தீபாவளிக்கு என்றே அக்பரலிஷ் கடையிலிருந்து நடைபாதை மணிஷ் பஜார் வரை வண்ணக் காகிதங்களில் சுற்றப்பட்டிருக்கும் தீபாவளி பரிசுகள். குடியிருப்புகளில் நம்ம ஊரு சிவகாசியின் சத்தம்.. சின்னக்குழந்தைகள் பொதிந்து வைத்திருந்த கந்தக வெடிகளை இங்கே பெரிய மனிதர்களின் வீட்டு சின்னக்குழந்தைகள் வெடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அது படியளக்கும் வாழ்க்கை. இவர்களுக்கு இது வாழ்க்கையின் கொண்டாட்டம்.

போனஸ் எதிர்பார்த்து காத்திருக்கும் வீடுகள், எப்படியும் லஷ்மி பூஜைக்கு புதிதாக இரண்டு வளையல்கள் செய்திவிட வேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் பெண்கள், கடை கடையாக ஏறி இறங்கி VTV, MTV டாப் தேடி வாங்கிக் கொண்டிருக்கும் இளசுகள்..வீடுகளின்அடுக்கு மாடிகளில் தொங்கும் தோரணவிளக்குகள் குடிசைகளிலும் போட்டிப்போட்டுக் கொண்டு சரம் சரமாய் தொங்கிக்கொண்டிருக்கும் விளக்குகள்.. எங்கு பார்த்தாலும் தீபாவளி தீபாவளி.. எனக்கு எரிச்சலாக வந்தது.

அந்த நேரம் பார்த்து விஜயின் போன்.

'மேடம்.. தீபாவளி மேட்டர் ரெடியா ? '

'வாட் ? '

'என்ன மேடம் ? தீபாவளி சிறப்பிதழில் அட்டைப்படத்திலேயே உங்கள் ஹைகூ போடலாம்னு சொன்னேனே.. பர்ஸ்ட் க்ளாஸா ஒரு தீபாவளி ஹைகூ எழ்திடுங்க. அப்புறமா உங்க பாணியிலே ஒரு கவிதையோ கதையோ எப்படியும் எனக்கு இன்னிக்கு சாயந்திரம் வேணும் மேடம். பையனை எத்தனை மணிக்கு அனுப்பனும் ? '

'என்னதான் இவன் மனசிலே நினைச்சுக்கிட்டான் ? இவன் அட்டைப்படத்தில் போடாறான்ன உடனே நான் இவனுக்கு ஹைகூ எழுதிடனும்னு நினைப்பா ? ஹைகூ என்ன இவன் தாத்தா வீட்டு குக்கூவா ? வந்தக் கோபத்தை அடக்கிக்கொண்டு 'லுக் விஜய், யு ந்நோ மி வெரிவெல். நான் தீபாவளி கொண்டாடறதில்லே. தீபாவளி சிறப்பிதழில் என் சம்மந்தப்பட்ட எதுவுமே வராமலிருப்பதுதான் எனக்கு நீங்க செய்யும் பெரிய்ய உதவியா இருக்கும் '

அதில்லே மேடம், ஒரு பத்திரிகைங்கிறப்போ நாமா சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதானே ஆகணும். ஊரோடு ஒத்து ஒழுகல் ' என்று சொல்லுவாங்களே உங்களுக்குத் தெரியாததா ?

' இந்தப் பாருங்க விஜய்.. உங்க பத்திரிகை,. நீங்க ஊரோடு ஒத்து ஒழுகறதும் விழுறதும் அழுறதும் உங்க விருப்பம். டோண்ட் ஃப்போர்ஸ் மீ நான் என் கொள்கைகளுடன் வாழறதைத்தான் விரும்பறேன்.. OK ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் தீபாவளி இஸ்யு '

விஜய்க்கு என் பதில் எவ்வளவு ஏமாற்றத்தைத் தந்திருக்கும்னு நினைச்சவுடன் பாவமா இருந்தது. பாவம் விஜய்.. ஆனா அதற்காக நான் என்ன செய்யறது ? இப்படி ஒவ்வொருத்தருக்கும் பாவப்பட ஆரம்பிச்சா அப்புறம் நாம யாருனு நமக்கே சந்தேகம் வந்திடும். சரி இதை எல்லாம் சேர்த்து வைத்து பொங்கல் சிறப்பிதழை ஜாமாய்ச்சிடனும்..

'ம்மா.. தீபாவளிக்கு என்ன ஷ்பெஷல் பண்ணப்போறே ? '

நமக்கு என்னடா தீபாவளி ?

என்னம்மா இது ? எது கேட்டாலும் இது நமக்கு கிடையாதும்பே. சித்திரை விசு நமக்கு கிடையாதும்பே, கார்த்திகை கிடையாது.. கண்பதி கிடையாது தீபாவளி கிடையாது.. என்ன தான் நமக்கு உண்டோ ? எப்ப பாரு தைப் பொங்கல் உழவர் திருநாள், வள்ளுவர் பெருநாள்னு எதையாவது சொல்லி வைப்பே. அந்தப் பொங்கலுக்கு நீ பண்ர அரிசிப் பாயசத்தை என் பிரன்ஸ் யாரும் சாப்பிட மாட்டாங்க. பிரசாதமானு ஒரு ஸ்பூன் சாப்பிடுவாங்க. அதெலாம் எனக்குத் தெரியாது.. இந்தத் தடவை எனக்கு கடைசி வருஷம் என் பிரண்ஸ் எல்லோருக்கும் நம்ம வீட்லேதான் லஞ்ச். நீ என்ன பண்ணிவியோ .. நீ தீபாவளி கொண்டாடு இல்ல கொண்டாடாம இரு. லெட் அஸ் யென் ஜாய் தி லைஃப்..

'சரிம்மா ..இப்போ என்ன உன் பிரண்ட்ஸ்க்கு லஞ்ச் பார்ட்டி வேணும் அவ்வளவுதானே டண் '

பையன் பால்கனியிலிருந்து சத்தம் போட்டான். அம்மா அந்த ஹால் சுவிட்சைப் போடு.. ஒருதடவை செக்கப் செய்துக்கறேன்.

சுவிட்சைப் போட்டுவிட்டு பால்கனியில் எட்டிப் பார்த்தேன். என் தொட்டிச்செடிகளின் கிளைகளில் எல்லாம் வண்ண வண்ண மின்மினி விளக்குகள். பால்கனி என்னவொ கல்யாண மண்டபம் மாதிரி ஜொலித்தது. என் மல்லிகைச் செடிகள் நாணத்தில் சிவந்து தலைகுனிந்து.. அடடா.. எப்படி என் மல்லிகைக்கும் இந்த புதுப்பெண்ணின் நாணம் வந்தது ?

ஒன்றுமே சொல்லாமல் வெளியில் வந்தேன்.

எலெக்ரிக்ஸ் எலெக்ரானிக்ஸ் பொருட்களை வைத்துக் கொண்டு ஏதாவது நோண்டிக்கொண்டே இருப்பான் என் பிள்ளை. சில சமயங்களில் சாப்பிடமால் குளிக்காமல் அவன் இப்படி ஏதாவது செய்து கொண்டிருக்கும்போது எனக்கும் அவனுக்கும் வாக்குவாதம் வரத்தான் செய்யும். அப்பொதெல்லாம் என் பெண்தான் நடுவராக வருவாள். பெரும்பாலும் என்னைத்தான் சத்தம் போடுவாள்.

அவன் இப்போ என்ன செய்திட்டானு இப்படி கத்தறேம்மா. மற்றப் பசங்க மாதிரி ஊர்ச்சுத்தி ஃபாருக்கு போயிட்டு லேட் நைட் சினிமா பார்த்துட்டு வர்றானா சொல்லு ? ?.

'டேய் ஏண்டா சாப்பிடமாகிடந்து இதைப் பண்ணிட்டிருக்கே. உடம்பப் பாரு.. குச்சி மாதிரி.. '

இரண்டு பேரும் அமைதியாகிவிடுவோம்.

'டேய்.. தீபாவளிக்கு டிரெஸ் வாங்கறதுக்கு யார் யாருக்கு எவ்வளவு வேணும் ? அப்பா.. எனக்கு இரண்டு டிரெஸ் வாங்கனும். அப்பா நான் சேல்ஸ் போட்டிருக்கான் அதிலே ரண்டு டி ஷர்ட் வாங்கிக்கறேன்.

'.. ஆமா உனக்கு என்ன வேணும் ? ' என் கணவர் என்னைப் பார்த்தார். நான் அவரை ஒரு முறைப்பு விட்டுவிட்டு சோபாவிலிருந்து எழுந்திருச்சேன்.

'என்ன முறைக்கறே.. ம்ம் .. பெரிய்ய பெரிய தலைவர்கள் உங்க கொள்கை வீரர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. நீ என்னடானா என்னைப் பாத்து முறைக்கே! '

'நல்ல சொல்லுங்க டாடி.. அப்போதான் அம்மாவுக்குப் புரியும்! '

அவளுக்கு எல்லாம் புரியும்ட்டா. ஆனா புரிஞ்சதுனு ஒத்துக்கிடத்தான் மாட்டா. அதுதான் அவளோட ஸ்பெஷாலிட்டி.

'ஏன் என்னை வம்புக்கு இழுக்காம உங்களுக்கு சாப்பிட்டது ஜீரணிக்காதா ? அப்பா, பொண்ணு பிள்ளை .. சேர்ந்து தீபாவளி கொண்டாடுங்களேன்.. யாரு வேண்டாம்னா.. ? '

'இந்தப் பாரு.. தீபாவளியின் ஒரிஜினல் என்னவாகவும் இருந்திட்டுப் போகட்டும். இப்போ தீபாவளியின் அர்த்தங்கள் மாறிப் போச்சு. இன்னும் சொல்லப்போனா இது இந்துக்களின் பண்டிகைங்கிறதுகூட கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது. இதுதான் இந்தியாவின் ஒரே பண்டிகை. எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப் படற நாள் '

'ஆமா..உங்க லாஜிக் எல்லாம் எதிலே கொண்டு போய் விடும் தெரியுமா ? இந்துக்களே இந்தியானு சொல்றதிலேதான் கடைசியில் கொண்டுபோய் விடும் '

'ok ந்நோ ஆர்க்யுமெண்ட்ஸ்.. ' அவர் வழக்கம்போல பிசினஸ் இண்டியாவை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.

தீபாவளிக்கு எல்லார் வீட்டு வாசலிலும் ரங்கோலி. என் பொண்ணு கலர்ப் பொடிகளை வாங்கிக் கொண்டுவந்து வாசலில் ஏதோ ஜியாமெண்ரி டிசைனை வரைந்து கொண்டிருந்தாள். எனக்கு சிரிப்பு வந்தது. நான் கண்டு கொள்ளாமல் கீழே இறங்கினேன்.மறுநாள் லஞ்ச்க்கு வேண்டிய காய்கறிகள் வாங்க.

எங்கள் குடியிருப்பில் மூன்றே அடுக்குமாடிக் காட்டிடங்கள். ஒவ்வொரு கட்டிடத்தின் வாசலிலும் பெரிய்ய ரங்கோலிகள். இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களின்வாசலிலும் ரங்கோலி போட்டு ரங்கோலியைச் சுற்றி விளக்குகள் ஏற்றியும் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் பில்டிங் வாசலில் மட்டும் இளசுகள் கையைப் பிசைந்துகொண்டு நிற்பது தெரிந்தது. கடைசி நேரத்தில் எப்போதும் ரங்கோலி போடும் அம்புஜம் மாமி மூட்டுவலி வந்து எழுந்திருக்க முடியாமல் இருப்பதால் ஏற்பட்ட தடங்கல். என்னைப் பார்த்தவுடன் எல்லாரும் என்னைச் சுற்றி..

தீதி..ப்ளீஸ்.. ஆண்ட்டி.. நாங்க ஹெல்ப் பண்றோம்..என் கையிலிருந்த மார்க்கெட்டிங் பேக்கை அவர்கள் வாங்கிக்கொண்டார்கள். அவர்களிடம் என்னால் ந்நோ சொல்ல முடியவில்லை.

இடத்தின் அளவை பார்த்தேன். இதில் எந்தக் கோலம் போட்டால் சரியாக இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தேன். இவ்வளவு பெரிய கோலம்.. கம்பிக்கோலம் போட்டால் கொஞ்சம் கம்பி வளைந்தாலும் கோலம் கோணலைக் காட்டிக் கொடுத்துவிடும். ம்ம்ம் என்ன செய்யலாம்.

புடவையை இழுத்துச் சொருகிக்கொண்டேன். என் கைகள் புள்ளிகளை வைத்துக் கொண்டே போனது. புள்ளிகளை வைத்து முடிந்தவுடன் எழுந்துநின்று நிமிர்ந்து பார்த்தேன். என்னைச் சுற்றி வாட்ச்மேனிலிருந்து இளசுகள், பொடிசுகள்.எல்லோரும். என்னவோ மர்மத்தொடர் பார்ப்பதுபோல அமைதியாக..

சரி .. புள்ளிகள் சரியாக வந்துவிட்டது. இனி.. புள்ளிகளை இணைத்தேன். ஒவ்வொரு இணைப்பும் முடியும்போது.. கூட்டத்திலிருந்து 'வாவ்..வொண்டர்புல் ' என்ற குரல்கள்:

நடுவில் பெரிய தேர். எங்கள் அம்மன் கோவில் தேர்மாதிரி.. தேரைச் சுற்றி தோரணங்கள்.. முன்னால் தாமரை.. சங்கு.. சக்கரம்.. என் இடுப்பு வலிக்க ஆரம்பித்தது. அவர்களிடமிருந்த வண்ணப்பொடிகளை வாங்கி ஒவ்வொரு வண்ணங்களுக்கும் சரியான கலவையுடன் பொடிகளைச் சேர்த்துக் கொடுத்தேன். டா அரிப்பு, சூப் அரிப்பு தகடுகளுடன் ஒவ்வொருவரும் மாக்கோலத்தை ரங்கோலியாக்கிக் கொண்டிருந்தார்கள். கோலத்தைச் சுற்றி நான் வரைந்திருந்த பாடர் டிசைனில் சின்ன சின்ன விளக்குகள் திரியுடன் எண்ணெயில் எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசில் சந்தோஷங்கள் மத்தாப்பாய்..

குழந்தைகள் புது ட்ரெஸ் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கும்போது அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. லஞ்ச்சுக்கு வந்த பெண்ணின் நண்பர்கள் கூட்டம் ஒன்றும் மிச்சம் வைக்காமல் சாப்பிடும்போது ,.. 'ஆண்ட்டி திஸ் இஸ் சவுத் இண்டியன் ஸ்பெஷல் க்கடி அண்ட் அவியல்.. இது உங்க ஊரு அப்பளம்தானே.. ' எல்லாம் எங்க ஊரு ஸ்பெஷல்னு சொல்லும்போது பெருமையாகத்தான் இருந்தது.

மறுநாள் லஷ்மி பூஜை. எப்படியோ இவர்களின் தீபாவளி அட்டகாசமெல்லாம் ஒருவழியாக முடிந்ததுனு நிம்மதியாக இருந்தேன்.

ரொம்ப நாள் ஆகுது அக்கா ஊரிலிருந்து வந்து. வர்றியா போய் பாத்துட்டு வந்திடலாம்னு என் கணவர் கேட்டவுடன் சரி கொஞ்சம் வெளியில் போயிட்டு வந்தா நல்லா இருக்கும்னு கிளம்பினேன்.

அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன் கமலாபாய் நேரமாகிவிட்டதுனு வாசலில் விளக்கேற்றி வைத்திருப்பது தெரிந்தது. எங்காவது வெளியில் போயிட்டு நேரமாகிவந்தால் அவளே நாம் சொல்லாமல் எல்லாம் செய்வாள்.

கமலாபாய் தாதர் மார்க்கெட்டிலிருந்து பூ வாங்கிக் கொண்டுவந்து காலையிலும் மாலையிலும் விற்பாள். நான் கேட்காமலே பண்டிகை நாட்களில் என் வீட்டு கதவுகளில் சாமந்தி, கேந்திப் பூக்களின் மாலைகளைத் தொங்கவிடுவாள். மெதுவாக எல்லாவற்றுக்கும் சேர்த்து பணம் வாங்கிக்கொள்வாள்.


'ஆஜ் தோ லஷ்மி பூஜாக்கா தீன் ஹை. கர்மே பூஜா கர்க்கே பார் ஜானேக்காதானா ' லஷ்மி பூஜையும் அதுவுமா பூஜை பண்ணாமல் எங்கேடி வெளியில் சுத்திட்டு வர்றேனு என்னை அவள் மாமியார் மாதிரி அதிகாரம் பண்ணுவதை என் கணவரும் பிள்ளைகளும் ரசித்தார்கள்.

அவர்களின் பார்வையிலிருந்து என்னைக் காப்பாற்றியது டெலிபோன். மறுமுனையில் விஜய்.. என்ன மேடம் எங்கிட்டே நானும் என் கொள்கையும்னு பேசிட்டு இன்னிக்கு டெய்லி பேப்பரில் அரைப் பக்கத்திற்கு 'என் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள் 'னு விளம்பரம் கொடுத்திருக்கீங்க.. '

நான் வாயடைத்துப் போனேன்.

எதிர்த்த பில்டிங்கில் புதிதாக குடியேறி இருக்கும் ராஜன்சார் நேற்று தீபாவளி வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார். அவர், ' என்ன மேடம் இப்போதெல்லாம் எங்கள் டெய்லியில் நீங்க எழுதுவதே இல்லை ' என்று வருத்தப்பட்டுக் கொண்டார். உங்கள் பால்கனியில் லைட் அலங்காரம் எங்கள் பால்கனியிலிருந்து பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்குனு ஒரு பாராட்டு சொல்லிட்டு நான் கொடுத்த காஜு பர்ஃபியை இரண்டு சாப்பிட்டுவிட்டு போனார்.

இது அவருடைய வேலையாகத்தான் இருக்கும் .. ச்சே இந்த மனிதர்களின் அன்புத்தொல்லையும் சில சமயங்களில் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் உரிமையும் பெரிய்ய தொல்லையாகத்தான் இருக்கிறது.

என் கணவர் ஹாலில் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்தும் பிள்ளைகளைப் பார்த்தும் சிரிப்பது எனக்கு கோபமூட்டியது.
'ஆப்க்கா குருஜிக்கா பூஜா பி க்கியா.. ' என்றாள் என்னருகில் வந்து கமலாபாய்.

என் குருஜியா.. யாரது ? எனக்கே தெரியாத என் குருஜி..னு நான் அவளைப் பார்த்தேன். அவள் ஹாலில் தொங்கும் புகைப்படத்தைக் காட்டினாள். தந்தை பெரியாரின் புகைப்படம் பூமாலைகளுடன். முன்னால் கற்பூரத்தட்டு, புகைவத்திகள் எரிந்து கொண்டிருந்தன.

நான் அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றேன். என் பால்கனியின் மல்லிகைச் செடியில் பூத்த மின்சாரப் பூக்கள் என்னைப் பார்த்து சிரித்தன....!!!!

***


(டிச, 2004 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது . என் சிறுகதை தொகுப்பு
மின்சாரவண்டிகள் )

Tuesday, October 14, 2014

சிறகசைக்கும் ஆகாயப்பறவைகள்



(SPARROW's fourth volume If the Roof Leaks, Let it Leak... edited by Menka Shivdasani, in the series of five volumes with interviews and works of 87 writers from 23 languages, was launched by the renowned dancer Jhelum Paranjape at the Kitab Khana as a part of the 100 Thousand Poets for Change event organised by Menka Shivdasani.)

பெண்களின் படைப்புகளைப் பெண்களே தொகுத்து வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் கலை இலக்கியத் துறையில் சமூகத்தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் பெண்களின் கருவூலமாக இருக்கும் அமைப்புதான்  SPARROW.  (Sound & Picture ARchives for Research On Women)
இத்தொண்டு நிறுவனத்தின்  உயிர்நாடியாக இருந்து செயல்படுபவர் எழுத்தாளர் சி. எஸ் . லஷ்மி என்ற அம்பை.

கால்நூற்றாண்டு பயணத்தில்  ஸ்பரோ செய்திருக்கும் பணிகள் தமிழ் வட்டத்தின் பெண்ணிய தளத்தில் இன்றுவரை அதிகமாக பேசப்படவில்லையோ என்ற வருத்தம் என் போன்றவர்களுக்கு உண்டு. 79 ஆவணங்கள், 30 மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் , 25 வாய்மொழிப்பதிவுகள்  என்று விரிகிறது அதன் சிறகுகள். மொழி, இனம், நாட்டின்  எல்லைகளைக் கடந்து பெண்களை
ஒருங்கிணைக்கும் அதன் பயணத்தில் தற்போது
23 இந்திய மொழிகளின் பெண் கலைஞர்கள் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் பணி. அந்த வரிசையில் இப்போது வெளிவந்திருக்கிறது 4 வது தொகுப்பு.
IF THE ROOF LEAKS, LET IT LEAK.

இத்தொகுப்பில் இந்தி, பஞ்சாபி, சிந்தி, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழி கலைஞர்களும் எழுத்தாளர்களும் இடம் பெற்றுள்ளனர். மேன்கா சிவ்தஷானி தொகுப்பாசிரியர்

பெண்களின் கதை மற்றும் கவிதைகளின் தொகுப்பாக மட்டுமே வெளிவரவில்லை இத்தொகுப்பு. குறிப்பிட்ட  அந்த எழுத்தாளருடனான   உரையாடல் இத்தொகுப்பில் முக்கியத்துவம் பெறுவதுடன் இத்தொகுப்பை கனமுள்ளதாகவும் மாற்றியுள்ளது. கதை , கவிதை எழுதும் பெண்களின் வாழ்க்கையும் வாழ்க்கை குறித்த அவர்களின் பார்வையும் எப்போதுமே ஒரு பொருட்டாக இலக்கிய உலகம் எடுத்துக்கொண்டதில்லை.  பெண்களுக்கு அப்படி என்ன தனிப்பார்வை உண்டு ? என்ற  எண்ணம் தான் அதற்கு காரணம். ஆனால் பெண்களின் உலகத்தையும்  அவர்களைப் பாதிக்கும் உலகியலுடன்
அவ்ர்கள் பாதித்த உலகத்தையும் ஒருசேர கொண்டு வந்திருக்கிறது இத்தொகுப்பு.

காதல், குழந்தைப்பேறு . கல்யாணம் இதற்கு அப்பால் பெண்கள் பேசும் தளங்களும் உண்டு அவர்களின் உரையாடலி ன்   ஊடாக ஒரு கருத்தை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் நீலேஷ் ரகுவன்ஷி  (பக் 145, 146)

"ஆதிவாசிகள் எப்போஈது ந ம்   சமுகத்திற்கு வருவார்கள்? என்று  பேசும் போது மகாஸ்வேடா தேவி கோபம் கொண்டாராம். நடுத்தர வர்க்கத்தின் கெட்ட புத்தியைச் சாடினாராம்.
"ஆதிவாசிகள் ஏன்  நம்முடன் கலக்க வேண்டும்? அவர்கள் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை. அவர்கள் சமூகத்தில் பெண் வெறும் அழகுப் பதுமை அல்ல.
அங்கே டவுரி கிடையாது. ஆணும் பெண்ணும் சமமானவர்கள்"என்கிறார்.

நீலேஷ் ரகுவன்ஷி இன்னொரு முக்கியமான கருத்து குறித்தும் பேசுகிறார்.
குழந்தையைக் காரணம் காட்டி வேலையை விட வேண்டியதோ அல்லது நமக்கு மனநிறைவைத் தரும் செயலை விலக்குவதோ தேவையில்லை (பக் 147) என்கிறார்.

ஆணும் பெண்ணும் வேலைக்குப் போகும்  இன்றைய சூழலில் மகப்பேறு க்குப் பின் குழந்தை வளர்ப்பை முன்னிட்டு பல  பெண்கள் வேலையை விட்டுவிடுகிறார்கள்.இப்பிரச்சனை வளரும் நாடுகளில் மட்டுமல்ல,
வளர்ந்த நாடுகளிலும் பெண்களின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கிறது.


குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்பதை இன்றைய சமூகம் ஏற்றுக்கொண்டாலும் அதைக் கடமையாக
பெண்ணுக்கு மட்டுமே விதித்திருக்கிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும்
குழந்தை தொடர்பான வேறு சிறு சிறு வேலைகளுக்கும் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஒரு பெண்ணுக்கே ஏற்படுகிறது. அதனால்தான்
அலுவலகங்களில் பொறுப்புகள் அதிகம் உள்ள உயர்பதவிகளை எட்டுவது
என்பது பெண்ணுக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால்; பெண்களே கூட அக்கூடுதல் பொறுப்புகளை விலக்கி
வைக்கின்ற நிலையைக் காணலாம். ஏனேனில் வேலை பறிபோனாலோ அல்லது வேலையை விட்டுவிட்டாலோ ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும்
பெண்ணுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

The Centre for reproductive rights என்ற அமைப்பு ஐ. நா. சபையின் மனித உரிமை
குழுவிடம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் அமெரிக்க அரசு பெண்களின் உடல்நலம் மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம்,
குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் அமெரிக்க அரசு கடுமையான விதிகளை விதிப்பதாக
குற்றம் சாட்டியுள்ளது. . இந்த அறிக்கை பெண்ணியவாதிகளிடம்
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பெண்களின் நிலை கவலை அளிப்பதாக இருப்பதற்கு இன்னொரு ஆதாரம், London school of Economics நிறுவனம் தாக்கல் செய்திருக்கும்
Centre for Economics Performance என்ற அறிக்கைதான்.  ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. பெரும்பாலும்
குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும் கூட இந்த சம்பள பாகுபாட்டிற்கு காரணம் என்கிறது
அந்த அறிக்கை. கடந்த முப்பது வருடங்களில் இந்த சம்பள இடைவெளி
குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது அந்த அறிக்கை. ஒரு கட்டத்தில் தன் குடும்பத்திற்க்காக, குறிப்பாக தன் குழந்தைக்காக வேலையைத் தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது என்கிறார் இந்த அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.

இந்த நிதர்சனங்களின் பின்புலத்தில் தான் நீலேஷ் ரகுவன்ஷியின்
பதிவு கவனத்தைப் பெறுகிறது.



ஓர் ஆண் வேலைப் பார்த்துக்கொண்டு, தன மனைவி குழந்தையிடம் அன்பு காட்டி தன பெற்றோர்களையும் கவனித்துக் கொள்கிறான் என்றால் அவனிடமிருந்து நான் இதைக் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார்.  (பக் 147)
 தன சுய அனுபவத்தில்லிருந்து இப்பெண்கள் வைக்கும் பார்வைகள் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளை நோக்கி இட்டுச்செல்லும்  பெரும் பணியையும் ஓசையின்றி செய்துவிடுகின்றன.


தன் அம்மாவும் எழுத்தாளர் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும்
மிருனாள்பாண்டே "தன் அம்மா வாழும் காலத்தில் ஏன்   கொண்டாடப்படவில்லை" என்று இலக்கிய உலகின் இன்னொரு முகத்தைப் பற்றி பேசுகிறார்.
தொகுப்பாசிரியர் மேனகா  , விமர்சகர்கள் அவர் எழுத்துகளை "எதிர்மறை எண்ணங்களின் கலைவடிவம் " என்று விமர்சிக்கப்பட்டதை  அணுகும் முறை ஆரோக்கியமாக இருக்கிறது. "விமர்சனம் என்பது அந்த  விமர்சகரின் அனுபவம், ரசனை சார்ந்தது" என்கிறார்.மேன்கா .

புயல் வீசிய அந்த இரவுகளில்
நான் எழுதிய கடிதங்கள் எங்கே போயிருக்கும்?

என்று காதலைத் தேடும் பெண்கள். (நிருபமா தத் - கவிதை .. பக் 223)

வாழ்க்கைப் புத்தகத்திற்கு
 மேலட்டையைப் போல ஓர் அங்கியைப்
போட்டுவிடாலாமென
அடிக்கடி நினைக்கிறேன் நான்.

அதில் சிலபக்கங்கள்
தங்களுக்கு எதிராகவே கலகம் செய்கின்றன

சில பக்கங்கள்
கண்ணீர்த்தடாகத்தில் குளித்து
தற்கொலை செய்து கொள்கின்றன.

சில பக்கங்கள்
தத்துவ விசாரணைகளின் ஊடாக நீந்திச் சென்று
தங்களையே கடந்து செல்கின்றன

சிலபக்கங்கள்
நான் எதுவுமே எழுத விரும்பாத பக்கங்கள்
தன்னிடமிருந்தே விவாகரத்துப் பெற்று
எப்போதும் தனித்தே இருக்கின்றன

(மஞ்சித் திவானா கவிதை பக் 193)

என்று திருமணம் என்ற நிறுவனம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்கிறது


பெண்கள் என்ன இடம் அற்றவர்களா? அவர்களுக்கு என்று சொந்த
இடமில்லையா?  நகத்தைப் போல தலையிலிருந்து  விழுந்துவிட்ட முடியைப் போல அவர்கள் தூர எறியப்பட வேண்டியவர்கள் தானா? என்ற கேள்விகளை முன்வைத்து விசாரணை செய்கிறது அனாமிகாவின் கவிதை. (பக் 37)

இத்தொகுப்பில் நான் மிகவும் விரும்பி வாசித்ததும் தன கருத்துகளில் துணிவும் தெளிவும் கொண்டதாக என் வாசிப்பில் வசப்பட்டதும் ஆதிவாசிப் பெண் எழுத்தாளரான நிர்மலா புடுல் .

ஆண்களின் ஆதிக்க மனபாவம் ஆதிவாசி ஆணிடமும் இருக்கிறது. ஆனால் அவன் தன்  சமூகத்து பெண்ணை அணுகுவதும் இன்னொரு ஆண் ஆதிவாசி இனப் பெண்ணை அணுகுவதிலும் வேறுபாடு  இருக்கிறது. மற்ற ஆண்களிடம் ஆதிவாசிப் பெண் எப்போதும் எளிதில் அடையக் கூடியவள்" என்ற ஒரு  தவறான  எண்ணம் இருக்கிறது ' என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆதிவாசிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்று, அவர்கள
தங்கள் பெண்களை நிலத்தை உழவோ ஒழுகும் கூரையைச செப்பனிடவோ
அனுமதிப்பதில்லை. In adivasai society WOMEN CANNOT PLOUGH THE FIELD OR MEND THE ROOF EVEN IF IT LEAKS" இதிலிருந்து தான் இத்தொகுப்பின் தலைப்பே
if the roof leaks lET IT LEAKS   - சமூகத்தில் தங்களின் உரிமைகளும் இடமும் மறுக்கப்பட்டதற்கு எதிரான பெண்களின் கூட்டுக்குரலாக ஒலிக்கிறது
இத்தொகுப்பு.

இந்தியப் பிரிவினையின் பாதிப்புகளை அதிகமாக தங்கள் படைப்புகளில் எழுதி இருக்கும் படைப்பாளர்களில் சிந்தி மொழி படைப்புகள் முன்னிலை வகிக்கின்றன. இத்தொகுப்பிலும் பூபதி ஹிரானந்தானியின் கதை "என் பாட்டி" அக்கருப்பொருளை மிகவும் அருமையாகக் கையாண்டிருக்கிறது.

 நிர்மலா புடுல் (சந்தாலி மொழிக் கவிதை. பக் 379)



தொலைதூரத்தில் திருமணம் செய்து கொடுக்காதே:

------------------------------------------------------------------------------------------;


தந்தையே..
என்னைத் தொலைதூரத்தில்
திருமணம் செய்து கொடுக்காதே.
உன் ஆடுகளை விற்று
என்னைப் பார்க்க வர வேண்டியிருக்கும்.

அங்கே வசிப்பது கடவுள்கள் மட்டும்தான்
மனிதர்கள் இல்லை என்றால்
அந்த இடத்தில்
என்னைத் திருமணம் செய்து கொடுத்துவிடாதே.

எண்ண அலைகளை முந்திக்கொண்டு
பறக்கும் கார்கள்
வானுயர்ந்த அடுக்குமாடி வீடுகள்
பெரிய அங்காடிகள்
இருக்கும் இடத்தில் நிச்சயமாக
என்னைத் திருமணம் செய்து கொடுத்துவிடாதே..

தோட்டங்களில்லாத வீட்டில்
எனக்கு வரன் பார்க்காதே
அங்கே விடியலை வரவேற்கும்
சேவல்கள் கூவுவதில்லை.
புழக்கடையிலிருந்து
மலையடிவாரத்தில் சூரியன் அஸ்தமிப்பதை
என்னால் பார்க்க முடியாது.

எதற்கும் உருப்படாதவன்
எப்போதும் கேளிக்கைகளில் மூழ்கியிருப்பவன்
திருவிழாவுக்கும் வரும் பெண்டுகளைப்பார்த்து'
விசில் அடிக்கும் மைனர்
இப்படி ஒருவனை
மணமகனாக பார்த்துவிடாதே.

கணவன் என்பவன்
குடமோ தட்டோ அல்ல.
எப்போது வேண்டுமானாலும்
என் விருப்பப்படி மாற்றிக்கொள்ள.

எப்போதும் அடிதடிகள் (பிரம்பு) குறித்து
பேசிக்கொண்டிருப்பவன்
கோடாரியையும் வில்லையும்
எடுத்துச் செல்பவன்
வங்கம், அசாம், காஷ்மீர் என்று
வெளியில் சுற்றுபவன்
இம்மாதிரி கணவனால்
எந்தப் பலனும் இல்லை எனக்கு.

ஒரு மரம் நடாதவன்
விதை விதைக்காதவன்
அல்லது
'அ' என்றால் அன்பு என்று
எழுதத் தெரியாதவன் சுமக்கும் பாரத்தை
இறக்கி வைக்க உதவாதவன்
கைகளில் பிடித்து
என்னைக் கொடுத்துவிடாதே.

எனக்கு நீ திருமணம் செய்தே ஆகவேண்டுமென்றால்
செய்து கொடு,
காலையில் வந்துவிட்டு
சூரியன் மறைவதற்குள்
வந்து செல்லும் தூரத்தில்.

நதிக்கரை ஓரத்தில்
ஒருவேளை நான் அழுதுக்கொண்டிருந்தால்
என் விசும்பல் கேட்டு
மறுகரையிலிருக்கும் நீ
வந்துவிடும் தூரத்தில்.

இங்கிருந்து வந்துப்போகும் ஆட்களிடம்
முறுக்கும் அதிரசமும்
பதிநீரும்  கொடுத்துவிடவேண்டும்.
அத்துடன்
இங்கு விளையும்
முருங்கைக்காய் பூசணிக்காய்
வெள்ளரிக்காய் வெண்டைக்காய்
அனுப்பமுடியும்..

சந்தைக்கோ திருவிழாவுக்கோ
வந்துப்போகும்
நம்ம ஊரு சனங்களைப்
பார்க்க முடியும்.
அவர்கள்
பசுமாடு கன்று போட்டுவிட்டதா?
என்று நம்வீட்டு செய்திகளைச் சொல்லுவார்கள்.

அந்த மாதிரி இடத்தில்
என் திருமணம் நடக்கட்டும்.

கடவுள்கள் அல்ல
எங்கே மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கே
எங்கே புலியும் ஆட்டுக்குட்டியும்
ஒரே நீரோடையில் தண்ணீர் அருந்துகிறதோ அங்கே
என்னைத் திருமணம் செய்து கொடு.

பகலில் வயலில்
வேலைப்பார்க்கும் போதும்
இரவில் படுக்கையில்
துயரங்களையும் சந்தோஷங்களையும்
பகிர்ந்து கொள்ளும் போதும்
புறாக்களைப் போல
இணைப்பிரியாமல் இருக்கும் ஒருவனுக்கு
என்னை ,மணமுடித்துக் கொடு.

கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்தவனாய்
பறை அடிக்கத் தெரிந்தவனாய்
டிரம் இசைக்க அறிந்தவனாய்
இருக்கட்டும் அவன்.
அப்படி ஒருவனை எனக்கு
மணவாளனாக தேர்ந்தெடு.

அவன் -
வசந்தக் காலத்தில்
என் கூந்தலை அலங்கரிக்க
வாசமுள்ள மலர்களைக் கொண்டுவர வேண்டும்.
நான் சாப்பிடவில்லை என்றால்
அவன் கோபித்துக் கொண்டு போக வேண்டும்.
அப்படி ஒருவனை
எனக்கு மணவாளனாக்க தேடு.


நம் ஆதிதாயின் குரலாய் நம் வேர்களைத் தேடி பயணித்திருக்கிறது
இக்கவிதை.

இனம், மொழி , வர்க்க வேறுபாடுகளைக் கடந்து எழுத வரும் அனைத்து பெண் படைப்பாளர்களுக்கும் எழுத்து என்பது பொழுதுபோக்கிற்கோ
புகழ் ஏணியில் ஏறுவதற்கான படிககட்டாவோ இல்லை.
அவர்களின் இருத்தலைக் காட்டும் அடையாளமாக
அவர்களின் தேடலை நோக்கிய பயணமாகவே இருக்கிறது.
அந்தப் பயணத்தில் ஆகாயமே ஓட்டை விழுந்த கூரையாக..
கொட்டும் மழை , வெயிலில் அவர்களும் அவர்களின் எழுத்துப்பயணமும்.
சிறகசைக்கின்றன.  .


.





Friday, October 10, 2014

மலாலாவும் கைலாஷும்





2014 ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசை பாகிஸ்தானின் மலாலாவும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கிறார்கள். எல்லையில் இரண்டு நாடுகளிலும் தொடர்ந்து அத்துமீறல்களும் துப்பாக்கி சூடும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதும் "விட்டேனா பார்" என்று இரு நாட்டின் பிரதமர்களும் வீரவசனங்களைப்  பரிமாறிக்கொண்டிருக்கும் சூழலில்
இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. என்ன மாதிரியான முரண் இது!
மலாலா:

2008ல் மலாலா வாழ்ந்தப் பகுதி தாலிபானின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. சற்றொப்ப 400 பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. அங்கிருந்து இடம் பெயர்ந்த அவர்கள் குடும்பம். தன் 11 வயதில் மலாலா தாலிபான்களை நோக்கி ஒருகேள்வியை வைக்கிறாள்.
"இந்த தாலிபான்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்கள் கல்வி பெறும் உரிமையை பறிப்பார்கள்?How Dare the Taliban Take Away My Basic Right to Education?” 

09 அக்டோபர் 2012ல் தான் மலாலாவைச் சுட்டார்கள் தாலிபான் ஆட்கள்.அவள் தலையில் குண்டு பாய்ந்தது. அந்த மரணத்தின் வாசலைக் கடந்து வந்த மலாலா 9 மாதங்களுக்குப் பின் ஐ.நாவில் பேசினாள். "அவர்கள் நினைத்தார்கள், துப்பாக்கியின் குண்டுகள் எங்களை ஊமையாக்கிவிடும் அமைதியாகிவிடுவோம் என்று. ஆனால், அவர்கள் தோற்றுப்போனார்கள்!


அந்த அமைதியிலிருந்து தான் ஆயிரக்கணக்கான குரல்கள் எழுந்தன. எங்கள் பலகீனம்,  பயம், கையறுநிலை முடிந்துப்போனது. வலிமை, எழுச்சி. வீரம் பிறந்தது.:
என்று முழங்கினார்.
சரியாக 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று அதே அக்டோபர் 9ல் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிற்து, வாழ்த்துவோம் ,நாமும் நம் மலாலாவை, நம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து, சிநேகம் வளர்க்கும் புன்னகையுடன்.


 கைலாஷ் சத்யார்த்தி
-------------------------------


குழந்தைத் தொழிலாளர்கள் என்பது சாதாரண பிரச்சினை அல்ல, பொருளாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல, சட்டப் பிரச்சினையும் அல்ல. அது பல்வேறு விதமான சமூகப் பிரச்சினைகளின் கலவையாகும்.
 
 
 உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இதுபோன்ற குற்றங்களை, சமூக அவலத்தை தடுக்க முடியாமல் இருப்பது மிகவும் சோகமான விஷயம்.
 
பெரும்பாலான குழந்தைகள் கொத்தடிமைப் பெற்றோர்களுக்குப் பிறக்கின்றன. பிறந்ததுமே அதுவும் கொத்தடிமை முறைக்குள் வந்து விடுகிறது. இது மிகக் கொடுமையானது.
குழந்தைகள் கடத்தல் அதிகம் நடப்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களில்தான். இதேபோல பிற பெருநகரங்களிலும் உள்ளன
 
சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான விஷயமாகும். இதை முற்றாக அழிப்பதே எனது  லட்சியம்.

இதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான்  பச்பன் பச்சாவ் அந்தோலன்  - குழந்தைகளைக் காப்போம் என்ற  அமைப்பு. இதுவரை 80,000 குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவந்திருக்கிறது இந்த அமைப்பு.

வாழ்த்துவோம் நம் கைலாஷ் சத்யார்த்தியை.


கொடுமைகளைக் கண்டும் காணாது போகிறார்கள் பலர்.

சிலர் மட்டும் அந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் கொதிக்கிறார்கள்.
அவர்களிலும் ஒரு சிலர் தான் ஓர் இயக்கமாகவே மாறுகிறார்கள்.
வாழ்த்துவோம், 
கொண்டாடுவோம் அவர்களை.

Wednesday, October 8, 2014

இரண்டு செய்திகள்

இரு செய்திகள்:


ஏப்பா...த்லையைச் சுத்துதே!

இந்த இரு செய்திகளையும் இணைத்து வாசிப்பதும் வாசிக்காததும் உங்கள் விருப்பம்.





முதல் செய்தி

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகிறேன்’ என்று அப்போது நரேந்திர மோடியிடம் ரஜினிகாந்த் கூறினார்.

தற்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கு ரஜினிகாந்தை இழுக்கும் முயற்சியில் அக்கட்சியின் மேலிட தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஏற்கனவே இது குறித்து ரஜினிகாந்திடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அங்கு அவர் லதா ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் தினத்தந்தி நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-தமிழகத்தில் பா.ஜனதாவிற்கான வாக்கு வங்கி அதிகரித்து இருக்கிறதா?

பதில்:- நிச்சயமாக, பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட இடத்தில் மட்டும் 5 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்றோம். உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் பல இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறோம். கோவை, தூத்துக்குடி மாநகராட்சியில் வைப்பு தொகையை பெற்று இருக்கிறோம். ஆளும் கட்சியை எதிர்த்து இவ்வளவு வாக்குகளை பெற்று இருப்பதே இதற்கு சாட்சி.

பா.ஜனதாவிற்கு இழுக்க முயற்சியா?
 கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நீங்கள் சென்றீர்களே? இதில் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?

பதில்:- ரஜினிகாந்த் தேசிய சிந்தனையுள்ளவர். மக்கள் நலனை முன் வைத்து கருத்துக்களை சொல்பவர். அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் நவராத்திரி விழாவுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சென்றேன். ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.

கேள்வி:- ரஜினிகாந்தை பா.ஜனதாவிற்கு இழுக்கும் முயற்சி நடக்கிறதா?

பதில்:- நான் ஏற்கனவே சொன்னது போல, ரஜினிகாந்த் மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர். தமிழகத்தில் எப்போது எல்லாம் மக்கள் நலன் பாதிக்கப்படுகிறதோ? அப்போதெல்லாம் அவர் குரல் கொடுத்து இருக்கிறார். மக்கள் நலனுக்காக வாஜ்பாய் அரசு நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்தபோது ஒரு கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்தார். இன்றைக்கு தமிழக அரசியலில் அசாதாரண நிலை உள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலனை காக்கும் ஆட்சி மலருவதற்கு ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும்.

பா.ஜனதாவில் சேரும்படி ரஜினிகாந்தை கட்டாயப்படுத்த முடியாது. அது அவருடைய விருப்பம். பா.ஜனதா தலைமையில் நல்லாட்சி அமைவதற்கு உதவும் வகையில் அவர் ஆதரவு அளித்தால் வரவேற்போம்.


கேள்வி:- பாரதீய ஜனதாவில் ரஜினிகாந்த் இணையும் பட்சத்தில், அவர் பா.ஜனதாவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?

பதில்:- பாரதீய ஜனதா கட்சியில் பதவிகளை பொறுத்தவரையில் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பதவியை எதிர்பார்த்து தான் அவர் ஆதரவு தருவார் என்று சொல்ல முடியாது. அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஆகவே இந்த கேள்வியே தேவையற்றது. இருப்பினும் தமிழகத்தை பற்றி இப்போது சொல்ல முடியாது.
அ.தி.மு.க. தலைவர் ஒரு வழக்கில் சிக்கியிருக்கிறார். தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி இருக்கிறது. ஆகவே ஊழலற்ற ஆட்சியை, மக்கள் விரும்பும் ஆட்சியை பா.ஜனதா மட்டும் தான் தர முடியும். 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.

கேள்வி:- தமிழக அரசியலில் ‘வெற்றிடம்’ ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகிறார்களே?

பதில்:- தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதை விட, அது பா.ஜனதாவிற்கான ‘வெற்றி’ இடம் என்று சொல்லலாம். பா.ஜனதாவை பலப்படுத்த 42 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம் நடத்தி, கிளை அலுவலங்களில் அமைப்பு ரீதியாக கமிட்டி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் பணியும் விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது. தமிழக அரசியலில் மாற்று அரசியல் கட்சியாக பாரதீய ஜனதா உருவெடுத்துள்ளது.

 (செவ்வாய், அக்டோபர் 07,2014, THANTHI )

 இரண்டாவது செய்தி"

ஊழல்களில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் ஈடுப்பட்டுள்ளது என்பதை கீழ்க்கண்ட பட்டியல் கூறும்.

1. 1987 போர்ஃபர்ஸ் ஊழல் , பேர்பாக்ஸ் ஊழல் - ரூ. 260 கோடி
2. 1992 ஹர்சத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் - ரூ. 5000 கோடி
3. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ. 650 கோடி
4. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ. 5000 கோடி
5. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ. 400 கோடி
6. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி
7. 1995 - மேகாலயா வன ஊழல் - ரூ. 300 கோடி
8. 1996 உர இறக்குமதி ஊழல் - ரூ. 1300 கோடி
9. 1996 யூரியா ஊழல் - ரூ. 133 கோடி
10. 1996 பீகார் மாட்டுத் தீவன ஊழல் - ரூ. 990 கோடி
11. 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ. 1500 கோடி
12. 1997 - எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ. 374 கோடி
13. 1997 பீகார் நில ஊழல் - ரூ. 400 கோடி
14. 1997 சி.ஆர். பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி
15. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ. 8000 கோடி
16. 2001 யு.டி.ஐ. ஊழல் - ரூ. 4800 கோடி
17. 2001 தினேஸ் டால்மியா பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி
18. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ. 1250 கோடி
19. 2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் - ரூ. 1 பில்லியன் வரை
20. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ. 600 கோடி
21. 2003 டெல்க்கி பத்திரபபேர ஊழல் - ரூ. 172 கோடி
22. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி
23. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ. 146 கோடி
24. 2005 பீகார் வெள்ள நிவாரண ஊழல் - ரூ. 17 கோடி
25. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி
26. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ. 1500 கோடி
27. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி
28. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ. 50,000 கோடி
29. 2008 சத்யம் ஊழல் - ரூ. 10, 000 கோடி
30. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் - ரூ. 513 கோடி
31. 2008 ராணுவ ரேசன் ஊழல் - ரூ. 5000 கோடி
32. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி
33. 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் - ரூ. 130 கோடி
34. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ. 2500 கோடி
35. 2009 ஒரிசா சுரங்க ஊழல் - ரூ. 7000 கோடி
36. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ. 37000 கோடி
37. 2010 எல்.ஐ.சி. வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்
38. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆதர்ஷ் ஊழல்
39. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊழல்.
40. 2010 ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்
41. 2011 - 2 ஜி ஸ்பெக்டராம் ஊழல் - ரூ. 1,76,000 கோடி.
42. 2012- வக்பு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 200000 கோடி
43. 2012 இந்திய நிலக்கரி சுரங்க ஓக்கீட்டு முறைகேடு ஊழல் - ரூ. 185591 கோடி
44. 2012 உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் - ரூ. 10000 கோடி
45. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊழல்.
46. தங்க நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊழல்.
47. கார்கில் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ரூ 75,000/- கோடி ஊழல்.
48. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த எடியூரப்பா இரும்புத் தாது வெட்டி எடுப்பதில் ரூ 50 கோடி ஊழல்.
49. கோவாவில் பாரதீய ஜனதா கட்சி முதல்வர் பணிக்கர் அரசின் இரும்புத் தாது ஊழல் ரூ 25 கோடி ஊழல்
50. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஜூன் முண்டா மற்றும் மதுகோடாவின் கனிம ஊழல் ரூ 37 ஆயிரம் கோடி ஊழல்.

51. சத்தீஸ்கரில் கனிம வளங்களை வெட்டி எடுக்க ஒப்பந்தம் வழங்குவதில் மற்றும் மின் திட்டங்களில் ராமன்சிங் அரசு செய்த முறைகேடு ரூ 40 ஆயிரம் கோடி ஊழல்.
52. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி ஊழல்.

ref:  எழுத்தாளர்: சுகதேவ்
 http://www.keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/26629-2014-06-03-05-21-56) 




 ஏப்பா...த்லையைச் சுத்துதே!

இந்த இரு செய்திகளையும் இணைத்து வாசிப்பதும் வாசிக்காததும் உங்கள் விருப்பம்.சொல்லாதச் செய்தியைக் கண்டுபிடித்து வாசித்துக்கொள்வது கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளும் அவரவர் திறமை பயிற்சி அனுபவம் சார்ந்தது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்


 நான் சொல்ல வருவதெல்லாம்

ரஜினிகாந்த எப்போதுமே எம்ஜிஆராக முடியாது என்பதுதான் பிஜேபி கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.




Monday, October 6, 2014

ஜெ வும் "அம்மா " என்ற கவசமும்






எழுத்தாளர் வாசந்தி அவர்களின்
ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார்
என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன க்தைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து வாசந்தி எழுதியிருந்தது என்ன என்பதும் ஊகிக்க முடியுமே தவிர எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் வாசந்தி தன் நேர்காணலில் ஜெ பற்றி சொல்லும் போது
She wants to project herself as the Immaculate Virgin. She is Amma. 

என்று சொல்லுகிறார்.
ஜெ வுக்கு என்ன காரணம் கொண்டும் தன்னை
மாசற்ற ஒரு கன்னியாக காட்ட வேண்டிய அவசியமே இல்லை.
அவர் அப்படி காட்டியதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரின் பெண், காதலி, ரகசிய மனைவி(இந்த சொற்பிரயோகமே சரியில்லைதான்!!) சின்னவீடு ..

இப்படியான ஏதோ ஒன்றாகத்தான் அவரைத் தமிழ்நாட்டின் பெண்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  
 எம்ஜிஆரின் வாரிசாக இப்படித்தான் ஜெ , பெண்கள் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும் விருப்பமும் எம்ஜீஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது, அவர் வாழ்வில் ஏதொ ஒரு வகையில் இடம் பிடித்த ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது. அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக.



தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.
அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது. அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார். ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும் அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.

 பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய இந்த தமிழ்ச்சமூகம் ஜெவைக் கொண்டாடது என்பதை அவர் அறிவார். என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது. இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் 
 அதிகார மையத்தில் ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் "அம்மா" என்ற சொல் அவருக்கு ஒரு கவசமாக இருந்தது. அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.
ஒவ்வொரு ஆணும் தன் காலடியில் விழுந்து வண்ங்கும் போது ஜெ முகத்தை கூர்ந்து கவனியுங்கள். அதில் அந்தப் பெண் கடந்து வந்தப் பாதை தெரியும்.  ஆண் சமூகம் அவளை வஞ்சித்தது தெரியும். ஒரு சாதாரண பெண்ணுக்குரிய அபிலாஷைகளுடன் அவளை வாழவிடாமல் தங்கக்கூண்டில் சிறைவைத்தக் கதையின் பக்கங்கள் பளிச்சிடும்.


 ஜெ குறித்த இந்தப் பார்வை பேசப்பட்டிருக்க வேண்டும். அதுவும் வாசந்தி போன்ற ஒரு எழுத்தாளரால். ஆனால் அதை    விட்டுவிட்டு 

 

She wants to project herself as the Immaculate Virgin. She is Amma. 

 என்று   வாசந்தி புதுக்கதை சொல்வது தான் புதிராக இருக்கிறது.

 (ஜெ வின் வழக்கு தண்டனை செய்திகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!)



( வாசந்தியின் நேர்க்காணல்; 


http://www.thenewsminute.com/side_headlines/68)





Wednesday, October 1, 2014

என் ஜன்னல்




குங்குமம் தோழி இதழ் - எண்ணங்கள் வண்ணங்கள் பகுதியில்
வெளியாகி இருக்கும் என் ஜன்னல் - நன்றி குங்குமம் தோழி, அக் 1 -15 , 2014

இடம்: பாலைவனப் பச்சையம்






யு.எஸ். போய்விட்டு இந்தியா திரும்பும் வழியில் என் தம்பி சுப்புரத்தினத்தின் குடும்பம் அபுதபியில் இருப்பதால் அங்கு நான்கு நாட்கள் தங்கிவிட்டு திரும்பினேன்.
பெரிய பெரிய கட்டிடங்கள் முன்னால் நின்று போட்டோ எடுத்து அதை முகநூலில் போடுவதிலும் லைக் வாங்குவதிலும் மகிழ்ச்சி அடையும்
கூட்டத்தில் நானில்லை என்பதை ஓரளவு என் தம்பியும் அறிந்திருந்தான்.
அரபுநாட்டில் நான் பார்க்க விரும்பியது பாலைவனம் தான் என்பதைச்
சொன்னவுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து என்னை அழைத்துச் சென்றான். அபுதபியில் இருக்கும் பாலைவனத்திற்கு.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல் மேடுகள், மணல் குவியல்கள்.
அந்த மணல் குவியலுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு இரவில்
வானத்தின் நட்சத்திரங்களைப் பார்க்கும் போது பூமித்தாய் தன் கைகளையே தொட்டிலாக்கி தாலாட்டுவது போல இருந்தது. ரோஜா தோட்டங்களைவிட
அழகானவை பாலைவனங்கள் . ஆனால் அந்த ரோஜாவில் இருக்கும்
முட்களைப் போல இந்தப் பாலைவன நினைவுகளின் ஊடாக
இப்போதும் என்னைக் காயப்படுத்திக்கொண்டிருக்கிறது
பாலைவனத்தில் ஒட்டகங்களைப் பராமரிக்கும் பாகிஸ்தான்
சகோதரன் முகமும்  சுற்றுலா பயணிகளுக்கு உணவு பரிமாறிய தமிழ்,
மலையாள இளைஞர்களின் முகங்களும்..

அந்தப் பாலைவனத்திற்கு நடுவில் ஒரு மரத்தைப் பார்த்தேன். ஒரே ஒரு மரம்.
எப்போதெல்லாம் தனித்திருக்கின்றேனோ மனம் கனத்திருக்கின்றேனோ அப்போதெல்லாம் அக்காட்சி எனக்குள் விரிகிறது பச்சையமாக..

இணையம்: ஊடறு

சுவிச்டர்லாந்தில் வாழும் தோழி றஞ்சியும் ஆஸ்திரேலியாவில் வாழும் தோழி
ஆழியாளும் சேர்ந்து நடத்தும் கூட்டு முயற்சி
"ஊடறு" இணைய இதழ் பெண்களுக்கான இணையம். பெண்களைப் பற்றிய
கட்டுரைகள், கவிதைகள், குறும்படங்கள் , ஓவியங்கள்,  உலகளாவிய பெண்கள் பற்றிய பிரச்சனைகள், பன்னாட்டு பெண்களின் படைப்புகள், செவ்விகள், என்று விரிகிறது இதன் பக்கங்கள்.. 

இந்த இதழின் முதன்மையாசிரியராக இருக்கும் தோழி றஞ்சி ,
ஒரு களப்பணியாளர். ஊடறு இணைய இதழுடன் பெண்களின்
படைப்புகளை தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு ஒரு முறை
புத்தகமாகவும் கொண்டு வருகிறார்கள்.

www.oodaru.com

நூல்: நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா?.




"நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா..? = DO THEY HEAR YOU WHEN YOU CRY " என்ற புத்தகம் 1999 களில் நான் வாசித்தப் புத்தகம். இப்போதும்
அந்தப் புத்தகத்தின் அதிர்வுகள் வெவ்வேறு அலைகளில் பல்வேறு
தருணங்களில் என் மறுவாசிப்புக்குள்ளாகிறது. பவ்ஷியா கசின்ட்ஜா
(FAUZIYA KASSINDJA)  எழுதிய சுயசரிதை. ஆப்பிரிக்க மண்ணில்
டோகா வில் பிறந்து வளர்ந்தவள், தன் 17வது வயதில் நான்காவது மனைவியாக அலங்கரிக்கப்பட்டிருந்த தருணத்தில் தன் சகோதரியின் உதவியுடன் நள்ளிரவில் ஆப்பிரிக்காவை விட்டு தப்பி ஓடுகிறாள். ஜெர்மன்
வழியாக (அமெரிக்கா )- யு,எஸ்.ஏவில் நுழையும் போது இமிகிரேஷன்
அதிகாரிகளால் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள்
சிறையில் இருக்கிறாள். சிறைச்சாலைகளும் சிறைச்சாலை கொடுமைகளும்
உலகமெங்கும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. நிர்வாணமாக நிறுத்தும்
அதிகாரிகள், அமெரிக்க குளிரில் குளிர்ந்த நீரில் நிர்வாணக் குளியல்,
மாதவிலக்கின் போது கூட மாற்றுத்துணி கொடுக்க மறுக்கும் பெண் அதிகாரிகள்.. இவர்களுக்கு நடுவில் என்றாவது தங்களுடைய வழக்கு
நிதீமன்றத்திற்கு வரும் என்றும் நீதிபதியின் முன்னால் தங்கள்
கோரிக்கையை வைக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்
பலமாதங்கள் சிறையில் தவிக்கும் பெண்கள்..

. ஆப்பிரிக்க மண்ணில் அதிலும் குறிப்பாக ஒரு மதத்தில் (இசுலாமியர்களிடம்) திருமண உறவுக்கு முன் பெண்ணுக்கு நடத்தும் ஒரு சடங்கு
CIRCUMCISION என்றழைக்கப்படும் .FEMALE GENITAL MUTILATION  என்பார்கள். அதாவது பெண்குறி மூலமும் (CLITORIS)  யோனியின் உதடுகளும் (LABIA) சிதைக்கப்பட்டோ முழுமையாக துண்டிக்கப்பட்டோ சிறுநீர் கழிக்கவும்  மாதவிடாய் ரத்தப் போக்கிற்கு சிறுதுவாரமும் விட்டு பெண் உறுப்பைச் சிதைக்கிறார்கள்.
கத்தி, கத்திரிக்கோல், துருப்பிடித்த ப்ளேடு, உடைந்தக் கண்ணாடி
துண்டுகளையே ஆயுதங்களாகக் கொண்டு இச்சடங்கை நடத்தும்
கொடுமை.வேறு.  இச்சடங்கை  செய்வதன் மூலம் அப்பெண்ணின் பாலுணர்ச்சி மட்டுப்படுத்தப்படுவதுடன் அவளுடைய "கன்னித்தன்மை" "கற்பு"
இத்தியாதி சமாச்சாரங்கள் பாதுகாக்கப்படுவதாக இப்போதும் நம்புகிறார்கள்!
இன்றைக்கும் உலகில் 150 மில்லியன் பெண்கள் இந்தக் கொடுமைக்குள்ளாகி
இருக்கிறார்கள். இந்தச் சடங்கு செய்யாத பெண்ணைத் தூய்மையற்றவள் என்று
சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இந்தச் சடங்கு செய்யும் நாளில் தான் பவ்சியா
இரவோடு இரவாக ஓடி வருகிறாள். இக்கதைக்கரு ஒரு பெண்ணின் சுயசரிதையை ஒரு சமூகத்தின் சுயசரிதையாக மாற்றிவிடுகிறது.
பவ்ஷியாவின் உண்மைக்கதை ஏப் 1996 நியுயார்க் டைம்ஸில் கவர் ஸ்டோரியாக  வெளிவந்தவுடன் அங்கிருக்கும் பத்திரிகைகள் , தொலைக்காட்சி ஊடகங்கள் பெண்ணுரிமையை,
மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமையை, இக்கொடுமையிலிருந்து
தப்பிக்க ஓடிவந்த பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதன் அவசியத்தை
வலியுறுத்துகின்றன. விளைவு.. அமெரிக்கா அரசு தன் கொள்கையில் திருத்தங்கள் செய்கிறது. பவ்ஷியாவுக்கு விடுதலை. அகதியாக அடைக்கலம். பவ்ஷியாவின் கதையைப் புத்தகமாகக் கொடுத்திருப்பவர் லைலி மில்லர் பஷீர். பன்டெம் புக்ஸ் (BANTAM BOOKS)
வெளியிட்டிருக்கிறது.






சினிமா: முள்வேலியைத் தாண்டி


தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம்
ஹோலோகொஸ்ட் கொடுமைகள் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில்
முக்கியமானது. ஹோலோகொஸ்ட் என்பது கிரேக்கச் சொல். அதன் பொருள் தீயில் பலியிடல், sacrifice by fire
யூதர்களை இப்படித்தான் கொன்று குவித்தான் இட்லர்.
உலக மகாயுத்தத்தில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட
கொடுமைகளின் களம் ஹோலோகொஸ்ட்.
.

. யூதர்களை அடைத்து வைக்கும் ஒரு கேம்ப்
அந்த இடத்திற்கு பணிமாற்றலாகி வரும் இராணுவக்குடும்பம்.
அந்த அதிகாரியின் மகன் புருனோவுக்கு வந்த இடத்தில் விளையாட அவனை ஒத்த நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
தனியாக விளையாடும் அவன் ஒரு நாள் யூதர்களின் முகாம் எல்லைவரை
வந்துவிடுவான். அவன் விளையாடும் பந்து அந்த எல்லையிம் முள்வேலியைத்
தாண்டி விழும். முகாமில் இருக்கும்  இன்னொரு யூதர் சிறுவன் அந்தப் பந்தை எடுத்துக் கொடுப்பான். சிநேகம் வளர்க்கும் புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள். நட்பு வளரும். முகாம் வாழ்க்கை குறித்து நண்பன் சொல்ல சொல்ல . அதைப் பார்க்கும் ஆர்வத்தில்
ஒரு நாள் முள்வேலி தாண்டி தன் நண்பனுடன் புருனோ
முகாமுக்குள் நுழைவான். அகதிகள் பைஜாமாவை அணிந்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் ஹோலோகொஸ்ட் ஆர்டர் வரும்.
முகாமில் இருக்கும் அனைவரும் வரிசையாக நடப்பார்கள். ஒரிடத்தில் அடைக்கப்படுவார்கள். அப்போதுதான் வீட்டில் ப்ருனோவைக் காணவில்லை என்று அவன் தாய் தேடுவாள். தன் கணவன் , இராணுவ அதிகாரியுடன் சேர்ந்து தேடும்போது முள்வெளி தாண்டி அவன் சென்றிருக்கும் அடையாளம் தெரியவரும். முகாமிலோ ஹோலோகொஸ்ட் ஆர்டர் ... அதிகாரி ஓடிப் போவதற்குள் எல்லாம் முடிந்திருக்கும். ஆம் கூட்டமாக அனைவரும் ஓரிடத்தில் அடைக்கப்பட்டு விஷவாயு செலுத்தி பஸ்பமாக்கப்பட்டிருப்பார்கள்.
இதுதான் அந்தக் கதை. .

இப்படத்தில்   புருனோவாக நடித்த இராணுவ அதிகாரியின் மகன்,
அவன் நண்பனாகும் யூதர் முகாமிலிருக்கும் சிறுவன் , இருவரின்
நடிப்பும் ஹோலோகொஸ்ட் கொடுமையை உணர்த்தும் வகையில்
அமைந்தக் கதையும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அக்காட்சி
சொல்லாமல் சொல்லும் வரலாற்று நிகழ்வுகளும்..
இத்திரைப்படத்தை உலக சினிமா வரிசையில் 100
திரைப்படங்களில் ஒன்றாக நிறுத்துகிறது

.