Tuesday, April 19, 2022

சோட்டா மோதி..

 


சின்னக்கவுண்டர் வந்தாரா வரலையா தெரியாது.

ஆனால்

சின்ன மோதி – சோட்டா மோதி வந்துவிட்டார் , வந்துவிட்டார்.

மனோஜ் சோனி – UPSC New Chairperson. ஆக நியமனம்.

மோதிஜி குஜராத்தின் முதல்வராக இருந்தப்போது

அவருடைய உரைகளை தயாரித்துக்கொண்டுத்தவர்.

அதாவது மோதிஜி பேசியதெல்லாம்

சோட்டா மோதி எழுதிக்கொடுத்தது என்ற வகையில்

அப்போதே செல்வாக்கு மிக்கவர்.

2002 குஜராத் கலவரத்தை “In search of a third space’ என்ற புத்தகம்

எழுதி இந்துத்துவ பார்வையை முன்வைத்தவர்.

பொதுவாக அதிகாரமிக்க IAS , IPS பதவிகள் ..

அதைத் தீர்மானிக்கும் அதிகாரமிக்க பதவி UPSC Chariperson.

இப்பதவியில் அரசியல் கட்சி சார்பில்லாதவர்களை

நியமிப்பது வழக்கம். அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு

சோட்டா மோதி வருகிறார். வருகிறார்.

இந்தியாவின் IAS IPS அனைவருமே இவர் வசமானால்

என்று கல்வியாளர்கள் மட்டுமல்ல

அரசியல்வாதிகளும் அச்சம் கலந்த கவலையுடன்

இந்த நியமனத்தைப் பார்க்கிறார்கள்.

தமிழ் நாட்டில் ..?

நமக்கென்ன  சரவணா..

இப்போதைக்கு இளையராஜா பஞ்சாயத்தே முடியவில்லை.

பிறகுதானே மற்றதை எல்லாம் பார்க்க முடியும். ..!

 

 

 

Monday, April 18, 2022

மகாகவி பாரதியின் திலகர் யார்?

 

 

 
மகாகவி பாரதி போற்றிய திலகர் யார்?
பெண்விடுதலையை, பெண் கல்வியைப்
போற்றிப் புகழ்ந்து பெண்ணை மனசார
வாழ்த்தி பராசக்தியாக வழிபட்டவர்
பாரதி. அதில் எனக்கு ஐயப்பாடில்லை.
ஆனால் நம் பாரதி போற்றிப் புகழும்
திலகர் யார் என்பது புரியவில்லை!
பாரதி அறிந்திருக்கவில்லையா!
அறிந்தும் கடந்து செல்வது வசதியாக
இருந்திருக்கிறதா…!
கவிதைகள் புனைவுலகம் தானா?!!!
கவிதைகள் வரலாற்றை மூடி மறைத்துவிடும்
இன்னொரு அறிவுஜீவியின் ஆயுதமா..?
பாலகங்காதர திலகருக்கும்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறுக்கும்
நெருங்கிய தொடர்புண்டு.
"சுயராஜ்யம் என் பிறப்புரிமை, 
அதை அடைந்தே தீருவேன்" என்
று முழக்கமிட்ட திலகரின் வரிகள்
இப்போதும் சூடேற்றுகின்றன. 
ஆனால் திலகரின்சுயராஜ்யம் எது? 
அவர் யாருக்கான விடுதலையை
இந்திய விடுதலையையாக முன்வைத்தார்?
திலகரின் கேசரி...
வரலாற்றில் திலகரின் சுயராஜ்யத்தை
படம் படித்துக் காட்டி இருக்கிறது.
திலகரின் 'கேசரி' இனிக்கவில்லை!
 
திலகர்..
பெண்கல்விக்கு எதிரானவர்.
பெண்கள் பள்ளிக்கூடம் போனால் அவர்களின்
ஒழுக்கம் கெட்டுவிடும் என்று சொன்னவர்.
பெண்களுக்கு எதற்கு கல்வி, அது இந்து தர்மத்திற்கு
எதிரானது என்று வாதிட்டவர்.
அனைவருக்கும் அடிப்படை கல்வி கட்டாயமாக்கப்பட
வேண்டும் என்று மகாத்மா புலே போராடிய போது
அவரை ‘தேசத்துரோகி’ என்று குற்றம் சாட்டியவர்.
குடியானவனின் பிள்ளைக்கும் கொல்லனின் பிள்ளைக்கும்
கணக்குப் பாடமும் சரித்திரப்பாடமும் எதற்கு?
அரசு பணத்தை வீணடிக்கிறார்கள் என்று எழுதியவர்.
அன்று அவரோடு போராடியவர்கள் ஒரு கட்டத்தில்
பொறுத்துக்கொள்ள முடியாமல் விலகிவிடுகிறார்கள்.
ஆம்..கேசரி பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அகர்கர்
கேசரியிலிருந்து விலகி ‘சீர்திருத்தவாதி’ என்ற 
தனிப்பத்திரிகை ஆரம்பித்த வரலாறெல்லாம் இருக்கிறது.
அதனால் தான் எனக்கு பாரதியை ரொம்பவும்
பிடிக்கும் என்றாலும் 
அதற்காக பாரதி சொல்வதைஎல்லாம் பிடிக்காது.
திலகரின் ஒரு பக்கத்தை மட்டும் கண்டு 
போற்றியது மட்டுமில்லாமல்,
வாழ்க திலகன் நாம ம்
என்ற பாடலில்
 
/கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான் - நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தோர்
அகழி வெட்டினான்
சொல் விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக்
கொடியைத் தூக்கினான் (வாழ்க/
என்னால் பாரதியுடன் சேர்ந்து 'வாழ்க'
சொல்ல முடியாது.
பாரதி என்னை மன்னிக்க வேண்டும்.

Friday, April 15, 2022

தப்பு தாளங்கள் இளையராஜா




மோதி, அம்பேத்கரைப்பற்றி பேசிய பிறகுதான் இளையராஜாவுக்கு அம்பேத்கர் பேசியிருப்பதே தெரிய வந்திருக்கிறது!!!


/நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016இல் முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்துகொண்டது சிறப்பானது./ ( இ. ரா எழுதியிருப்பது)


இளையராஜா அம்பேத்கரை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.


அடுத்து... இந்த நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து இளையராஜாவுக்கு எதுவும் தெரியவில்லை அதனால்தான் இ.ரா


/" தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் 'மேக் இன் இந்தியா' கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பில். சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது' /( இ. ரா. எழுதியிருப்பது)

என்று எழுதுகிறார்.


அதாவது அம்பேத்கரையும் அறிந்திருக்கவில்லை. மோதி பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதெல்லாம் ஒரு இந்தியக் குடிமகனுக்கு பெரிய குற்றமல்ல ஆனால் எதுவும் தெரியாமல் எதற்காக இளையராஜா இந்தப் புத்தகத்திற்கு அறிமுகம்/ அணிந்துரை எழுதியிருக்கிறார்???


ஏ. ஆர் . ரஹ்மானை எதிர்ப்பதற்கு இளையராஜாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வலையில் தேவையில்லாமல் இளையராஜா மாட்டிக் கொண்டிருக்கிறார்.


இசை கச்சேரிகள் மேடைகளில் பாடகர் ராகம் தவறிவிட்டால் அது யாராக இருந்தாலும் இளையராஜா அவர்களைத் திருத்துவார். சரியாகபாடவும்  வைப்பார். இப்போது???!!!

தனக்கு தெரியாதவர்களைப் பற்றி தான் அறியாதவைகளைப்பற்றி ... எப்படி எழுத துணிந்தீர்கள்! 

தப்பு தாளங்கள்..

Wednesday, April 13, 2022

அறிவாயுதமே போராயுதமாய்.. அண்ணல் அம்பேத்கர்

 

கலையின் பெயரால் எம் பெண்களை  இழிவுப்படுத்துவதை இனியும்

பொறுப்பதற்கில்லை, அப்படி இழிவுப்படுத்தி கிடைக்கும் பணம் எமக்குத்

தேவையுமில்லை” – பாபாசாகிப் அம்பேத்கர்.

10 செப், 1927 .. ல் அவர் கண்முன்னாலேயே அதை அவர்கள் செய்தார்கள்.

அதுவும் அவரை அழைத்து அவருக்கு நிதி திரட்டி தருவதாக கூறி

(மகட் சத்தியாகிரகத்திற்கு நிதி திரட்டியபோது) அழைத்திருந்தார்கள்.

அழைத்தவர் ஜல்ஷா  நாட்டிய  நாடக கலைஞர் பட்டே பாபுராவ்.

அவர் ஆடிக்கொண்டே வருகிறார். அவரின் இரண்டு பக்கமும் மகர்

இன தமாஷா (கூத்து நடனம்) பெண்கள் ஆடிக்கொண்டு வருகிறார்கள்.

அத்தருணம் அம்பேத்கருக்கு எப்படி இருதிருக்கும்?

காரணம்  தமாஷா ஆடியவர்கள் அன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள்.

 நிலவுடமை சமூகத்தை , ஆதிக்க சாதியை மகிழ்விக்க மாலையில்

தமாஷா..  இரவில்  அப்பெண்கள் நிலவுடமையின் காமப்பசிக்கு

இரையாகிப்போகும் அவலம்..

அக்கர்மஷி நாவலில் சரண்குமார் லிம்பாளே தன் தாய் மகமாயி கதையை

தன் பிறப்பை விவரித்திருப்பார். இவை எதுவும் புனைவல்ல.

இந்தப் பின்புலத்தில் தான் அம்பேத்கருக்கு நிகழ்ந்த இந்த

அவமானத்தை அவருக்கு ஏற்பட்ட காயத்தை அந்த வலியை

புரிந்து கொள்கிறேன்.

 நிதி தருவதாக சொல்லி தன்னை அழைத்து அவன் நடத்திக் காட்டும்

கூத்து ,

கலை என்ற பெயரில் ரசனைக்குரியதல்ல.. !

அவர் கொதித்தெழுகிறார்.

நீயாவது .. உன் நிதியாவது

எம் பெண்களை இழிவுப்படுத்தி எனக்கு நீ கொடுக்கும் இந்தப் பணம்

தேவையில்லை என்று அந்த இடத்திலேயே அதை தூக்கி எறிந்துவிட்டு

வெளியேறுகிறார்.

இச்சம்பவத்தை எதுவுமே நடக்காதது போல மவுனமாக கடந்து செல்லவே வரலாறு விரும்புகிறது. அந்தப் பின்னணியில் எத்தனையோ கட்டுக்கதைகளை  எழுதி,  பரப்பி , சினிமாவாக்கி .. இருக்கிறது.

இப்படித்தான் வரலாறு எப்போதுமே விளிம்பு நிலைக்கு எதிராக

தன்னைப் புனைந்து கொள்கிறது.

 BR Leopards - 'மூக் நாயக்' 'Mooknayak' ஊமைகளின் ...

மூக் நாயக் பத்திரிகை துவங்கியபோது இப்படி ஒரு மராத்தி இதழ்

வெளிவர இருக்கிறது என்பதை  (செய்தியாக அல்ல,)  "விளம்பரம்"

 வெளியிட கூட "கேசரி" பத்திரிகை தயாராக இல்லை.

கேசரி பத்திரிகை திலகர் நடத்திய பத்திரிகை.

திலகரும் கேசரி பத்திரிகையும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில்

முக்கியமான பக்கங்கள். அப்படித்தானே வரலாறை படித்திருக்கிறோம்!

இங்கிருந்து விடுதலைப்போராட்டத்தின் இன்னொரு வரலாற்று

பக்கத்தையும் வாசித்தாக வேண்டி இருக்கிறது.

 

அவமானப்படும்போது

காயப்படும்போது

நிராகரிக்கப்படும்போது

வேண்டுமென்றே கள்ளமவுனத்தில்

இச்சமூகம் கடந்து செல்லும்போது..

அம்பேத்கரின் அறிவாயுதமே

போராயுதமாய்..

ஜெய்பீம்.

(14 ஏப்ரல்  2022)



Tuesday, April 5, 2022

யார் இந்த பிரவின் தாம்பே..? kaun Pravin Tambe?

 


யார் இந்த பிரவின் தாம்பே (PRAVIN TAMBE)
கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரவின் தாம்பே ஒரு லெக் ஸ்பின்னர்.
முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட் எடுத்த பெளலர்.
 பிரவின் வாழ்க்கையில் கிரிக்கெட்?!!

கிரிக்கெட் பிரவின் வாழ்க்கையில் கனவாக மட்டுமில்லை.
எல்லாமாகவும் இருக்கிறது.
பத்திரிகை ஸ்போர்ட்ஸ் பக்கங்கள் ஏன் பிரவீனை
 கொண்டாடவில்லை?
அந்த முதல் ஓவர் கிரிக்கெட் பந்து கையில் கிடைப்பதற்கு 
 பிரவின் கடந்து வந்தப் பாதை .. அவ்வளவு எளிதானதல்ல.
பிரபல பத்திரிகை ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர்கள்
பிரவினை “கல்லி ப்ளையர் – தெரு சந்தில் விளையாடும் கிரிக்கெட்டர்"
என்றுதானே விமர்சித்தார்கள்? ஏன்?
 
கிரிக்கெட் ஓர் அரசியல்.
கிரிக்கெட் ஆசை எல்லோருக்கும் நிறைவேறிவிடுவதில்லை.
கிரிக்கெட் கனவுகளில் தன்னைத் தொலைத்தவர்கள்
சினிமா கனவுகளில் தன்னைத் தொலைத்தவர்களை விட அதிகம்.
இங்கே திறமை மட்டும் போதாது,
அந்த திறமையைக் காட்டும் வாய்ப்புகள்..?
அந்த திறமையை அடையாளம் காணும் மனிதர்கள் அரிது.
அந்த மாதிரி அரிதினினும் அரிதானவை
எப்போதாவது நடந்துவிடுகின்றன.
அபூர்வமானவைகள், விதிவிலக்குகள் என்றாலும்
விதியைக் கடந்துவர இம்மாதிரி ஆபூர்வமானவைதான்
கைகொடுக்கின்றன.
பிரவின் தாம்பே யார் என்பதை ஒரு சில காட்சிகளில்
சூசகமாக காட்டி இருக்கிறது இத்திரைப்படம்.
அந்த ஒரு புள்ளியிலிருந்து கோலம் பூர்த்தியடைகிறது.
அதுதான் கிரிக்கெட் அரசியல்.