தேசியம் இல்லாத தேசம் எங்கள் இந்தியத் தேசம்.
கனக-விசயனின் தலையில் கல்சுமக்க வைத்தது எங்கள் கடந்தகாலசரித்திரம்
கார்க்கில் போரில் வீரமரணம் இன்றைய வரலாறு.
இந்திய தேசம் என்பது இமயமுதல் குமரி வரை என்பது
பூகோளம் அறியாதவர்கள் எழுதிவைத்தது.
குமரி முதல் இமயம் வரை என்பது ,மனித இன வரலாறு.
இப்படி புரளும் வரலாற்றின் அலைகளில்
காந்தியம் என்ற பேரலை வீசிய போதும்
நாங்கள் அடித்துச் செல்ல முடியாத
அழிக்க முடியாத எழுத்துகளை எழுதியிருக்கின்றோம்.
எங்களிடம் தான் காந்தியத்தின் சத்தியாகிரகத்தின்
உப்பின் வேர்வை கரைந்திருக்கின்றது.
அந்தக் கரைசல் வெறும் பெளதிகக் கரைசல் அல்ல,
சத்திய சோதனையை அக்னி சோதனைக்கு உள்ளாக்காத நம்பிக்கை.
அந்த நம்பிக்கை பலரின் வாழ்க்கையானது.
இந்த அரபிக்கடலோரம் இந்திய வரலாற்றில்
எத்தனையோ பக்கங்களை எழுதி இருக்கிறது.
அதில் காந்தியும் எழுத மறந்த சிலப் பக்கங்கள் உண்டு.
இவை எங்களைப் போன்ற சாமனியமானவர்களின் பக்கங்கள்.
எங்களுக்கு முகவர்கள் இல்லை. முகவரிக் கூட இல்லை.
அதனால்தான் எங்கள் வாழ்க்கையின் உன்னதங்களைப்
பதிவு செய்பவர்கள் இல்லை.
எழுதத் தெரியாத மக்கள் எத்தனையோ
எழுதமுடியாதச் சரித்திரங்களை தன் வாழ்க்கையில் எழுதினார்கள்.
இன்று-
அந்தச் சரித்திரத்தின் எச்சமாக நிற்பவை சிலரின் பெயர்கள்.
அந்தப் பெயர்கள் மட்டுமே கடலோரம் இருக்கும் கல்வெட்டுகள்.
**
காந்தி, பகவத்சிங், திலக், பாரதி இதெல்லாம்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்தப் பெயர்கள்.
அட... காந்தி என்பது தனி நபரின் பெயரல்ல..
அது ஒரு குடும்பத்தின் பெயர். (SURNAME)
இதை எடுத்துச் சொன்னபோது அதனாலென்ன..,
அடுத்தக் குழந்தைக்கு காந்தியின் பெயரை
வைத்து விடுகின்றேன் .."மோகன்" என்று..
இப்படி பெயர் வைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.
அவர்களில் ஒருவர் , காந்தி என்ற பெயர்சூட்டப்பட்டவர்
இன்று பத்தமடை காந்திநகரில் சீரும் சிறப்புமாக
வாழ்ந்து கொ ண்டிருக்கிறார்.
பகவத்சிங், மோகன் என்ற பெயர் சூட்டப்பட்ட அந்தக் காந்தியவாதியின் மகன்கள் இன்று இல்லை.
இன்னொரு சுவராஷ்யமான செய்தி ..( நினைவில் வாழும் சீர்வரிசை சண்முகராசன் மூலமாக நானறிந்த சம்பவம் )
அவர்களில் ஒருவர்... தொழிலாளி..
தனக்குப் பிறந்தப் பெண்குழந்தையை...
இரண்டு மாதம்கூட ஆகாத தன் குழந்தையை எடுத்துக்
கொண்டு மும்பையிலிருக்கும் மணிபவன் வாசலில்
காலையிலிருந்து காத்திருக்கின்றார்...
கூட்டம்.. அலைமோதுகிறது...
அந்தக் காந்தியப் பேரலையில் நனைய வந்திருக்கும்
பச்சிளங்குழந்தை அழுகிறது..
வெயில் தாங்காமல்.. கூட்ட நெரிசலில்..பசித்து..
"வேண்டாம் நமக்கு இந்த அலையின் ஈரம்..
இந்த அகிம்சை விடுதலையில் நம் அடிமைத்தளை
உடையப் போவதில்லை.
தலைவர்களுக்காக நீங்கள் ரத்தம் சிந்தியது போதும்
என் கண்களையும் கட்டி விடாதீர்கள்
நான் எனக்கான விடுதலையைப் போராடியே
பெறுவதற்குப் பிறந்துவிட்டேன்
வேண்டாம் எந்த மகாத்மாவும் ..
எனக்குத் தேவை மனிதர்கள் மட்டும்தாம்..!."
அழுதது அழுதது....
இன்னும் அழுதுக் கொண்டே இருக்கிறது.
ஆனால் கேட்காதச் செவிகள்..
அப்படித்தான் அந்தக் குழந்தையுடன் அவரும் ...
அந்தக் குழந்தையின் அழுகுரல்..
காந்தியின் கூடாரத்தில் முட்டி மோதி
அவர் மெளனத்தைக் கலைத்துவிட்டதா ?
பின் எப்படி நிகழ்ந்தது அந்த நிகழ்வு..!
காந்தியின் உதவியாளர் வெளியில் வந்தார்.
அழுகின்ற குழந்தையைக் கையில் ஏந்தி நிற்கும் செல்லையாவிடம்.
செல்லையா கண்களில் நீர்மல்க...
எங்கள் காந்தி-
என் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன்...!
கண்ணப்பனுக்கு காட்சியளித்த சிவனின்கதை வெறும் புராணம்..
இந்தச் செல்லையாவுக்கு அன்று காந்தி கொடுத்தது?
செல்லையாக்களின் வாழ்க்கையில் அதுவே வரம்..
காந்தி அவர்களுக்குக் கொடுத்த வரம்.
செல்லையாவின் பெண்மகவுக்கு காந்தி வைத்தப் பெயர் கஸ்தூரி..
ஆம் கஸ்தூரி...
அவருடைய வாழ்வின் துணை, காந்தியின் சரிபாதி..
கஸ்தூரியைக் கையில் ஏந்திக் கொண்டு செல்லையா கடலோரம் நின்றபோது..
காந்தி என்ற சரித்திரத்திற்கு தலை வணங்காதக் கடல் அலைகள்
செல்லையா என்ற உழைப்பாளியின் நம்பிக்கைக்கு முன்னால் தலைவணங்கியது.
இந்தச் செல்லையா அவர்கள் தமிழ்நாட்டில்
கோவில்பட்டி வட்டாரத்தைச் சார்ந்தவர்,
வேதமுத்து என்ற தமிழ்ப்பண்டிதரின் இளவல்.
இன்று காந்தியின் கஸ்தூரி.. நெல்லை மாவட்டத்திலிருக்கும் சேரன்மகாதேவியில் தன் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
செல்லையா இன்று இல்லை...
யாருக்குத் தெரியும்... எத்தனை பேருக்குத் தெரியும்...
தன் இரண்டு மாத அழுகுரலில் காந்தியை எழுப்பிய
கஸ்தூரி இவர் என்பது...
பெரும் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது தன் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து அதையே
பெரியப் புகைப்படம் எடுத்து நடு அறையில்
மாட்டி வைத்துக் கொண்டு வாழ்கின்ற
இன்றைய விளம்பரங்கள் அறியாத
செல்லையாக்கள் எத்தனை எத்தனையோ பேர்..
காந்தியின் தேசிய நீரோடையில் தன் சுயம் இழக்காமல்
வாழ்ந்த தமிழர்களும் உண்டு.
அவர்களுக்கெல்லாம் மகாத்மா பூலே தலைவராக இருந்தார்.
சமூகவிடுதலை இல்லாத அரசியல் விடுதலை... சாத்தியமில்லை
என்ற கருத்தை முன்வைத்து தங்கள் இருத்தலுக்காகப்
போராடியவர்கள். அவர்களின் ஒருவரான
நரசிம்மமேஸ்திரி அவர்கள் தான் முதன் முதலாக
தாராவியின் தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகள்
கல்வி கற்பதற்காக முதல் தமிழ்ப் பள்ளிக்
கூடத்தை நிறுவினார். தமிழ்நாட்டிலிருந்து கல்வி கற்பிக்க
ஆசிரியர்களை அழைத்து வந்தார்.
இசுலாமியர்களுடன் இணக்கமான சகோதரத்துவ
உறவைப் பேணி வந்தார்.
இந்த எச்சங்கள் தான் இன்றும் தாராவியில்
காணப்படும் தமிழர்களின் வாழ்க்கை.
காந்தி அலையும் எதிரலையும்
ஒன்றுடன் ஒன்று கலக்காமல், மோதிக் கொள்ளாமல்
அரபிக்கடலோரம் .. வாழ்ந்த வாழ்க்கை..
மும்பைத் தமிழர் வாழ்க்கையில்
முக்கியமான பக்கங்கள்.