Monday, March 30, 2015

கலைஞரின் விசிஷ்டாத்வைதம்


திமுக தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கத்தை அலங்கரிக்கிறார்
விசிஷ்டாத்வைதம்  தத்துவம் பேசிய ஸ்ரீராமானுஜர்.
ராமானுஜர் பற்றிய நூல்களை எழுதி இருக்கும் இந்திரா பார்த்தசாரதியிடம் போய் வெற்றிலைப் பாக்கு தேங்காய் பழம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கியாச்சு. அவாளும் அந்தக் காலத்திலேயே (11ஆம் நூற்றாண்டு)
ஒருவர் இவ்வளவு சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டிருந்தார் என்பதால் கருணாநிதி இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்னு சொல்லி "நன்னா இருங்கோ"னு ஆசிர்வாதம் செய்துட்டார்.
ஆனா இந்திரா பார்த்தசாரதிக்கு கலைஞரையும் தெரியும்,
ராமானுஜரையும் நன்னாவே தெரியும். ஒரு மனிதன்
எப்போது வசிஷ்டாத்வைதம் வாசிக்க ஆரம்பிக்கிறான்
என்பதையும் மிக நன்றாகவே அறிந்தவர் இந்திரா பார்ததசாரதி.
அதனால் தான் அவர் சொல்கிறார்,
"கருணாநிதி ஆன்மீகத்தை நாடுகிறாரோ என்றும் தனக்குத்
தோன்றுவதாகச் "சொல்கிறார்.
கலைஞ்ரின் விசிஷ்டாத்வைத  அவதாரத்தால் கலைஞருக்குசிறப்பா என்று கேட்டால் அதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரமும்
அவர் உடன்பிறப்புகளுக்கே உண்டு.!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இதனால் ராமானுஜருக்கோ
அவர் காட்டிய  தத்துவத்திற்கோ எந்தச் சிறப்பும்
வந்துவிடப்போவதில்லை. இதனால் பயப்பட வேண்டியவர்
உண்மையில் உண்மையான விசிஷ்டாத்வைத  ராமானுஜ பக்தர்கள் தான்

இனி வசிஷ்டாத்வைதத்தை திமுக தொண்டர்கள்
அனைவரும் கவிஷ்டாத்வைதம்  என்று கொண்டாட ஆரம்பிப்பார்கள்.
கலைஞருக்கு ஆழ்வார்களின் ஆழ் (ள்)வார் என்ற புதிய பட்டம் ஏதாவது
கொடுக்கலாம்..
வாழ்க கலைஞரின்  விசிஷ்டாத்வைதம்.
பாவம் , கலைஞ்ர் தொலைக்காட்சியைப் பார்க்கும் தமிழ்மக்கள்


ref:
http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150319_ramanujarkarunanidhi


Wednesday, March 25, 2015

கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது..?





அமெரிக்க கறுப்பினத்தின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டவர் மாயா ஏஞ்சலோ
அமெரிக்கர்களுக்கு இணையாக சம உரிமை கேட்டு, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார் மாயா.
 மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் எக்ஸ் ஆகியோரிடம் நட்பு கொண்டிருந்தார்

1969ம் ஆண்டு, ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்’
 என்ற பெயரில் சுயசரிதையை வெளியிட்டார். இது அவருடைய 17 வயது
வரையி லான வாழ்க்கையை ஆவணமாக்கியது. . .7 சுயசரிதைகள்,
 கட்டுரை, கவிதைத் தொகுப்புகள் உள்பட ஏராளமான படைப்புகள் வெளிவந்துள்ளன.
மேலும், திரைப்படங்களுக்கும் கதை எழுதினார். திரைப்படங்கள் மற்றும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்தார். இயக்குனராகவும் செயல்பட்டார். நடித்தார்.

இசைத்துறையில் சாதிப்பவர்களுக்கான மிக உயரிய ‘கிராமி’ விருது பெற்றார்.
 ‘பிரசிடென்டல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ என்கிற உயர் விருது
அமெரிக்க அதிபர் ஒபாமாவால் 2011ம் ஆண்டு  மாயாவுக்கு வழங்கப்பட்டது
. எந்த அளவு துன்பத்தை அனுபவித்தாரோ அதே அளவுக்கு தன் திறமை
மூலம் உச்சம் தொட்டார் மாயா ஏஞ்சலோ. அமெரிக்க  அதிபர்கள் தொடங்கி,
 எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைத்துறையினர், இசைத்துறையினர்,
 உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கொண்டாடும் மிகச்
 சிறந்த ஆளுமையாக வலம் வந்த மாயா ஏஞ்சலோ, 2014 மே 28 அன்று, 86 வயதில் மறைந்தார்.

அண்மையில் கவிஞர் அவைநாயகன் அவர்கள் மாயா ஏஞ்சலோவின்
வாழ்க்கை சரிதத்தின் முதல் புத்தகமான I KNOW WHY THE CAGED BIRD SINGS
புத்தகத்தின் மொழியாக்கத்தை அனுப்பி வைத்திருந்தார்.
மாயா ஏஞ்சலோ 2014ல் மறைந்தப் போது அவர் குறித்த
பல பதிவுகள் வாசிக்க கிடைத்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக
அவருடைய வாழ்க்கை சரிதமான ஒரு புத்தகம் தமிழாக்கம்
பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவைநாயகன் கூண்டுப்பறவைக்கும்
அப்பறவையின் பாடலுக்கும் சரியான இடத்தை இம்மொழியாக்கத்தின்
மூலம் உருவாக்கி இருக்கிறார்.


மாயா ஏஞ்சலோ குறித்து அவர் வாழ்ந்தக் காலத்திலேயெ பல்வேறு
விமர்சனங்கள் வந்துவிட்டன. அவர் அந்த விமர்சனங்களைச் சந்திக்க
மறுத்தவர் இல்லை.

சிலருடைய சுயசரிதை என்பது அக்குறிப்பிட்ட நபரின் தனி வாழ்க்கை
குறித்த ஒரு கதையாக மட்டுமே இருக்கும். அல்லது அக்குறிப்பிட்ட
நபருக்கும் சமூகத்தில் அவருக்கான இடம் குறித்த பதிவுகளாக விரியும்.
ஆனால் மாயா ஏஞ்சலோவின் வாழ்க்கை சரித்திரம் என்பது
மாயா ஏஞ்சலோ என்ற ஒரு தனிப்பெண்ணின் கதையல்ல.
அல்லது அவர் சார்ந்த கறுப்பினப் பெண்ணின் தனிக்கதை மட்டும்
அல்ல. நிறவேறியின் பக்கங்களையும் அப்பக்கத்தில் ஒரு பெண்ணாக
அவள் கடந்து வந்தப் பாதையும் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட
ஜீவனின் குரலாக ஒலிக்கிறது. ஒடுக்கப்பட்டவரின் குரல் என்றவுடன்
நமக்கு அழுகைக்காட்சிகளும் சோகங்களும் தோல்விகளும்
மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் தரையில் வீசப்படும்
ஒவ்வொரு பந்தும் அதே வேகத்துடன் மேலே எழும்புவது போல
மாயா ஏஞ்சலோவின் சுயசரிதையும் கறுப்பினத்தின் வீரத்தின்
அடையாளமாகவும் மனித நேயத்தின் அடையாளமாகவும்
பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

உலக ஹெவி வெயிட் சாம்பியனாக ஜோ லூயிஸ் அறிவிக்கப்படும்
அப்போட்டியை விவரிக்கும் பக்கத்தில்..(பக் 155)
"உலக சாம்பியன் ஒரு கறுப்பன், ஏதொ ஒரு கறுப்பு பெண்ணின்
மகன், உலகிலேயே உறுதியான மனிதன்.." என்று விவரித்திருப்பார்.

அவ்வாறே வாய்மொழியாக வழங்கும் கதைகளில்
வெள்ளையர் பார்வையும் அதே கதையை கறுப்பினத்தவர்
சொல்லும் விதத்தையும் போகிற போக்கில் சொல்லிச்செல்வார்.
(பக் 245)
ஒவ்வொரு ஒடுக்கப்பட சமூகத்திலும் வாய்மொழிக்கதையின்
இன்னொரு வடிவமும் உள்ளடக்கமும் இருக்கின்றன.



பெற்றோரின் பிரிவினால பாதிக்கப்பட்ட மாயா சிறுவய்தில்
தன் சகோதரனுடன் பாட்டியிடம் வருகிறார். அதுவும் அக்குழந்தைகள்
இருவரும் தனியாக. ஏன் தன் தாய் மட்டும் தங்களை இப்படி
அனுப்பி வைத்தாள்?  என்ற மன உளைச்சலுக்குப் பதில்
தெரியாமல் பயணம் தொடங்குகிறது. பாட்டியும் பாட்டிக்கு
இருக்கும் கடவுள் நம்பிக்கையும் மாறாமல் தொடர்கின்றன.
மீண்டும் தாயிடமே வரும்போது தாயின் கணவன் 8 வயது
மாயா என்ற குழந்தையை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி
மிரட்டுகிறான். தன் உடலை என்ன செய்கிறான என்பதைக்கூட
புரிந்துக் கொள்ள முடியாத குழந்தை.. அதன் பின் நீதிமன்றம்
தண்டிக்கிறது அவனை. ஆனால் அதற்கு முன்னரே
அவன் பிணமாக கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான்.
கொலையை யார் செய்திருப்பார்கள் என்பதை மிக எளிதாக
ஊகிக்க முடிகிறது. அம்மாவின் இன்னொரு கணவனோ அவனுடைய
இன்னொரு மனைவியுடன் வாழ்ப்வன், தன்னுடன் விடுமுறையைக்
கழிக்க வரும் மாயாவை நல்ல விலைக்கு விற்றுவிட முயற்சி
செய்கிறான். தன் செயலுக்கான எவ்வித குற்ற உணர்வும் இன்றி.
வளர வளர ஒரு பெண்ணாக மாயா சந்திக்கும் சமூகச்சிக்கல்களுடன்
பெண்ணுடல் சந்திக்கும் பிரச்சனையின் உச்சமாக விவரிக்கபப்டுகிறது
மாயாவுக்கு ஏற்படும் பால்பேத குழப்பம்.
தான் ஒரு பெண் தானா அல்லது திருநங்கையா?
தன் உடலின் பாலியல் உறுப்புகளின் மாற்றமும்
வளர்ச்சியும் பெண்ணுடலுக்கானது தானா? இக்குழப்பம்
அவளை விரட்டுகிறது. அந்தப் பதின்ம வயதில் தன் பெண்ணுடலை
பெண்ணுடல்தான் என்று சோதிக்க நினைத்து ஓர் ஆணுடன் உடலுறவு
கொள்கிறாள். ஓர் ஆண் குழந்தைக்கும் தாயாகிறாள். இத்துடன்
கூண்டுப்பறவை முதல் பாகம் முடிகிறது.

மாயாவுக்கு ஏற்படும் பெண்ணுடல் குறித்த சந்தேகங்களும்
அதைப் பற்றிய தாய் மகள் உரையாடலும் இப்புத்தகத்தை
விமர்சனத்திற்குள்ளாக்கின.

சர்ச்சைக்குள்ளான நூறு புத்தகங்களின் பட்டியலில் மாயா ஏஞ்சலோவின்
இப்புத்தகம் 3 வது இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்க
நூலக கூட்டமைப்பு. கறுப்பின மக்களின் தேசிய கீதமாக இவர்
கவிதைகள் கொண்டாடப்படுகின்றன. ஒரே நேரத்தில் 4 இலட்சம்
பிரதிகள் விற்று விற்பனையில் மாயா ஏஞ்சலோவின் புத்தகங்கள்
முதல் வரிசையில் இருநதன. தான் வாழும் காலத்திலேயெ
அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு நிகழ்வில் கவிதை வாசித்தது
முதல் பல்வேறு பல்கலை கழகங்களில் அவர் பெற்ற விருதுகளும்
டாக்டர் பட்டங்களும் பெற்ற சிறப்புக்குரியவர் மாயா ஏஞ்சலோ.




A bird doesn't sing because it has an answer, it sings because it has a song.

மாயா ஏஞ்சலோ கூண்டுப்பறவையை மொழ்யாக்கம் செய்திருப்பதன்
மூலம் சமூக தளத்தில் மட்டுமல்ல, பெண்ணியத்திற்கும்
நியாயம் செய்திருக்கிறார் அவைநாயகன். அவருக்கு என் வாழ்த்துகளும்
நன்றியும்.

புத்தகம் வெளியீடு: எதிர் வெளியீடு
பக் 336 விலை ரூ 300.


Friday, March 13, 2015

இரோம் ஷர்மிளாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்



ஷ்ர்மிளா இன்று உனக்குப் பிறந்தநாள்.
14 மார்ச். இன்றுடன் உனக்கு வயது 42.
15 ஆண்டுகள் உண்ணாநோம்பிருக்கும் உன்னை
என்ன் சொல்லி வாழ்த்தட்டும்..?
இன்று போல என்றும் வாழ்க என்று உன்னை வாழ்த்தமுடியாது.
நீயோ ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் 1958
நீக்கப்படும் வரை உன் போராட்டத்தைக் கைவிடப்போவ்தில்லை
என்று உறுதியாக சொல்லிவிட்டாய்.
இந்த 15 ஆண்டுகள் உன்னை ஒருமுறைக்கூட உன் பெற்றதாய் வந்துப்
பார்க்கவில்லை என்பதை அறிந்தேன்.
உன் போராட்டதை தன் கண்ணீரால் இம்மியளவுக்கூட
இறுக்கம் தளர்த்திவிடக்கூடாது என்பதால்
ஒரு தாய் தன் மகளை இன்றுவரை நேரில் சந்திக்கவில்லை
என்றால்.. அந்த தாயின் உள்ளத்தை வணங்குகிறேன்.
நானும் ஒரு தாயல்லவா.
எனக்குத் தெரியும்.. ஷர்மிளா. அந்தத் தாயின் வலியும் வேதனையும்.

ஷர்மிளா.. இந்திய நாட்டின் காவல்துறை கண்காணிப்பில்
நீ உன் நாட்களை மருத்துவமனையில் கடத்திக்கொண்டிருக்கிறாய்.
இது உன் விருப்பமல்ல.. தெரியும் ஷர்மிளா..
இது நம் இந்திய இறையாண்மையின் விருப்பமாக இருக்கிறது.
அஹிம்சையில் வாங்கிய இந்திய சுதந்திரம்..
உன் அஹிம்சைவழி போராட்டத்தை மட்டும் அதிதீவிரவாதமாக
அடையாளம் காட்டுவது அதிசயமல்ல.
இது தான்  நிஜம்.
ஆனாலும் போராடுவோம்.
போராட்டங்கள் என்றுமே தோற்றதில்லை.

மனித உரிமையை நிலைநாட்டவும் மக்களின்
சுதந்திரத்தைக் காப்பதற்கும் ஜனநாயக வழியில் போராடும்
உன் போராட்டம் வெற்றி பெறும்.
மார்ட்டின் லூதர் கிங்க் போராட்ட்த்தின் வெற்றிதான்
இன்றைய அமெரிக்க அதிபர் ஓபாமா.
மனிதன் சுதந்திரமாகப் பிறந்தவன்.
சுதந்திரமாக வாழும் உரிமை அவனுக்குண்டு.
இந்த உன் பிறந்தநாளில்
என் அன்புத்தங்கையே..
என் வாழ்த்துகளும் கண்ணீரில் நனைந்த முத்தங்களும்.

-----

இரோம் ஷர்மிளாவின் பேட்டியிலிருந்து சில வரிகள்:

* எவ்வளவு நாட்கள் என் போராட்டம் தொடரும் என்று எனக்குத் தெரியாது.
ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. நான் உண்மைக்காக நிற்கிறேன்.
உண்மை கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்புகிறேன்.

* என் இலக்கை அடைவது கடினமானது தான். தெரியும்.
ஆனாலும் நான் நிலைகுலையாமல் பொறுமையாக காத்திருக்கிறேன்.
அந்த நாள் கண்டிப்பாக வரும் என்று.

* என் சிறைவாழ்க்கையில் பெரிய இழப்பு என்று பார்த்தால்
என்னால் யாரையும் சந்திக்க முடியவில்லை. அதற்கு அனுமதி
இல்லை. மருத்துவமனையில் நானொரு கைதியாக இருக்கிறேன்.

*எந்த ஒரு  போராட்டமும் கொள்கை ரீதியாக உயர்ந்ததாக
இருக்க வேண்டும் . அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக
இருக்கவே கூடாது.

*என்னைப் பற்றி எவரும் சினிமா எடுப்பதை நான் விரும்பவில்லை.
என்னைப் போல ஒருவர் நடிப்பதையும் விரும்பவில்லை.
I DON'T WANT IT TO BE TRANSLATED INTO THE WORLDLY MEDIUM
OF ENTERTAINMENT. I DON'T WANT PEOPLE TO KEEP ME ON A
PEDESTAL. I DON'T WANT TO BE TREATED LIKE A GODDESS.


Wednesday, March 11, 2015

ஆயுத எழுத்து





உயிர் எழுத்துகள்
சிறுபான்மையான என்னை ஒதுக்கி வைப்பதில்
கவனமாக இருக்கின்றன.
மெய்யெழுத்துகளுக்கு
என்னுடன் தீண்டாமை.
உயிர்மெய் வாதிகளுக்கு
எப்போதும் என்மீது ஒவ்வாமை.
ஆய்த எழுத்து நான்.
என்னை எவரும் வளைக்கவோ
சுழிக்கவோ சுருக்கவோ முடியாமல்
தோற்றுப்போனதை
இவர்களின் எழுத்ததிகாரம்
எழுத மறந்தாலும்
பொருளதிகாரத்திற்குத் தெரியும்
எழுத்துவரிசையில்
கடைக்கோடியில் ஒதுக்கப்பட்டதும்
காலந்தோறும் ஒடுக்கப்பட்டதும்..
இணையாத என் புள்ளிகளின்
இடைவெளியிலிருந்து
காற்று பிரசவித்த
இசையின் குறிப்புகளே
உங்கள் எழுத்து மொழி
நான் அஃறிணையில் வலம்வரும்
உயர்திணை.
ஒற்றுப்பிழைகள் அறியாத
புணர்ச்சி மையம்.
முக்காலமும் அறிந்த முக்கண்ணனின்
மூன்றாவ்து கண்.

Saturday, March 7, 2015

சரித்திரம் மறந்த(மறைத்த) சாதனைப்பெண்மணி





இதுவரை நானறிந்து எந்தப் பத்திரிகையும் பேசாத
எந்த பேராசிரியரும் எழுதாத
எந்த சரித்திரமும் குறிப்பிடாத ஒரு சாதனைப் பெணணை
இந்த நாளில் நான் நினைவு கூர்ந்து என் நன்றியை
சொல்லியாக வேண்டும்.
இந்த மராத்திய மண்ணில் இருந்துக் கொண்டு
இதைக்கூட நான் செய்யவில்லை என்றால்
4 தலைமுறை இந்த மண்ணில்வாழ்ந்ததற்கும்
இந்த மண் எங்களை வாழ்வைத்ததற்கும் அர்த்தமிருக்காது.

அப்பெண்மணி -

இந்திய பெண்ணியதின் தாய்.
நவயுக புதுமைப்பெண்ணின் தொட்டில்
9 வயதில் அவளுக்குத் திருமணம் ஆனது.
எழுதப்படிக்கத்தெரியாத அவள் தன் 13 வயது கணவனிடன்
தன் ஆசையைச் சொல்கிறாள்.
அந்தக்கணவனும் அவளுக்கு எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுக்கிறான்.
அவளை பள்ளிக்கூடம் அனுப்புகிறான்.
டீச்சர் வேலைக்குப் படிக்கிறாள்.
1848 ல் பிடேவாடா, நாராயம்பெத் புனே பகுதியில் பெண்களுக்கான
முதல் இந்தியப்பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது அவள் முயற்சியால்.
அவள் தான் இந்தியாவில் பெண்களுக்காக முதல்
பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தப் பெண்.
ஒரு பெண் கல்விக்கூடம் ஆரம்பிப்பதா?
அவள் பாடசாலையில் கல்வி மறுக்கப்பட்ட
பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களும் இசுலாமியர்க்ளும்
கல்வி கற்பதா? இது தகுமா? நம் தர்மம் ஏற்குமா? என்று
கொதித்து எழுந்த தர்மவான்கள் அவள் மீது சாணி அடித்தார்கள்,
கல்லால் எறிந்தார்கள். காயப்படுத்தினார்கள்.
இருந்தாலும் அவள் ஓயவில்லை. 3 ஆண்டுகளில்
மேலும் 3 பாடசாலைகளை அவள் ஆரம்பித்து நடத்தினாள்.

மதிய உணவு, சத்துணவு, பெண்கள் கல்வித்திட்ட்டம் என்று
இன்று சுதந்திர இந்தியா பேசும் அனைத்துக் கல்வித்திட்டங்களுக்கும்
அவள் தான் முன்னோடி.
பெண்களின் படிப்பு தடைப்படாமல் தொடர வேண்டும் என்பதற்காக
கல்வி உதவித்தொகை வழங்கிய முதல் கல்வியாளர் அவள் தான்.

பால்யவிவாகமும் விதவைக்கொடுமையும் நிலவிய அக்காலக்கட்டத்தில்
அவள் தான் "திருமண உறவுக்கு அப்பால் பிறக்கும் உங்கள் குழந்தையை
எங்கள் தொட்டில் காப்பாற்றும், உங்கள் ரகசியமும் காப்பாற்றப்படும்,"
என்று அறிவித்தாள். அக்காலத்தில் இளம்விதவைகள் வீட்டுக்குள் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும் இளம்விதவைகள், அவர்களின் உறவினர்களாலேயே
பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாகி கர்ப்பம் தரித்த்து அந்த அவமானம் தாங்காமல்
சிசுக்கொலை செய்வதும் தற்கொலை செய்வதும் நடந்துக்கொண்டிருந்தது.
இப்பெண் தங்கள் வீட்டு வாசலில் ஒரு பாதாகையைத் தொங்கவிட்டிருந்தாள்.
A POSTER 1863 ; WOMEN WHO CONCEIVE OUT OF WEDLOCK SHOULD GO TO THE HOME
OF JOTIRAO GOVINDRAO PHULE FOR THEIR CONFINEMENT, THEIR NAMES WILL BE
KEPT CONFIDENTIAL"

தான் எழுதியப்படியே அவள் வாழ்ந்தும் காட்டினாள்.
தன் மகனாக ஒரு அனாதை சிறுவனை தத்தெடுத்துக்கொண்டாள்.
1855 அவள் எழுதுகிறாள்..
மாங்க் மக்களையும் மகர் இன மக்களையும் படைத்த அதே
இறைவன் பிராமணர்களையும் படைத்தான். அவன் தான்
இதை எலலாம் எழுதும் அறிவையும் எனக்குள் படைத்தான்!"
என்று எழுதினாள்.

எல்லோரும் அரசியல் விடுதலையைப் பேசிக்கொண்டிருந்தக் காலத்தில்
சமூக விடுதலை இல்லாத அரசியல் விடுதலை அர்த்தமில்லாதது
என்று விடுதலையின் அர்த்தத்தை விளக்கினாள்.
"ஆங்கிலத்தாயின் கதவோரத்தில் செத்துக்கிடக்கிறான் மனு"
என்ற அவள் கவிதையின் வரிகள் இன்று தோற்றுப்போயிருக்கலாம்.
ஆனால் அவள் தான் சமூகவிடுதலையைப் பேசிய போராளி

புராணகாலத்து சீதை, காந்தாரி, காப்பியக்காலத்து கண்ணகி, மணிமேகலை,
பக்தி காலத்து காரைக்கால் அம்மையார் ஆண்டாள் மீராபாய்,
பிரிட்டிஷ் காலத்து ஜான்சி ராணி, இசையில் சுப்புலட்சுமி
ஓட்டத்தில் பி டி உஷா, எவரெஸ்ட் சிகரம் தொட்ட பஜேந்திரபால்,
முதல் பைலட் துர்கா பானர்ஜி முதல் விண்வெளி பயணம் செய்த
கல்பனா சாவ்லா வரை.. நம் சரித்திரத்தில் இடம் பெற்ற
சாதனைப் பெண்மணிகளின் வரிசையில் நம் சரித்திரத்தின்
பக்கங்களில் அவளுக்கான பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது.

அவளைப் பற்றி அறிவுஜீவிகளோ
தொலைக்காட்சிகளோ பேராசிரியர்களோ
ஏன் பெண்ணியவாதிகளோ கூட
பெண்கள் தினத்திலும் நினைவூட்டுவதில்லை. நினைவூட்டப்போவதுமில்லை.
எனக்குத் தெரியும்..
அவளைப் பற்றிய சரித்திரம இந்திய சரித்திரத்தில்
வெற்றிடமாக இருப்பதன் நோக்கம்...

அவள் பெயர் சாவித்திரிபாய் புலே.





Wednesday, March 4, 2015

பிபிசி ஆவணப்படமும் இந்திய அரசும்




திகார் சிறையில் குற்றவாளியாக இருப்பவனின் பேச்சு
நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதைவிட
அதிர்ச்சியாக இருப்பது அந்த முகேஷ் சிங்கிற்காக
வாதிடும் வக்கீலின் பேச்சு.

lawyer AP Singh, who defended the gang in court
echoed his views on women:
"If my daughter or sister engaged in pre-marital activities
and disgraced herself and allowed herself to lose face and character
by doing such things, I would most certaintly take this sort of sister
or daughter to my farmhouse, and in front of my entire family,
I would put petrol on her and set her alight."

ஒரு குற்றவாளி மட்டுமல்ல, சட்டம் படித்த ஒரு
வக்கீலின் மனநிலையும் குற்றவாளியின் அலைவரிசையில்
தான் இருக்கிறது.

பிபிசியின் ஆவணப்படத்தைப் பற்றி எதுவும் காட்டக்கூடாது
என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்க் இந்தியாவின் அனைத்து
தொலைக்காட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
திகார் சிறையில் சொன்னது குற்றவாளியின் குறுக்குப்புத்தி என்றால்
அவனுக்காக வாதிடும் இந்த வக்கீல் சொன்னதை எதில் சேர்ப்பது.

திகார் சிறைச்சாலையில் மட்டுமல்ல, நம் நீதிமன்ற வாசலில்
நடமாடும் சட்டம் பயின்ற வழக்குரைஞர் பேசியதை என்ன
செய்யப்போகிறார்? இப்பேச்சு ஒரு வழக்கறிஞ்ர் தன்
கட்சிக்காரருக்காக பேசிய பேச்சு மட்டுமா?

இம்மாதிரி ஆவணப்படங்கள் உலக அரங்கில் இந்தியாவை
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடாக அடையாளப்படுத்தும்
என்று நீங்கள் அச்சப்படுவதில் அர்த்தமிருக்கிறது என்றாலும்
அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. நீங்கள் ஒரு கதவை
மூடினால் பல கதவுகள் திறந்துவிடும். குனன் போஸ்போராவில்
நம் இராணுவமே காஷ்மீர் பெண்களை பாலியல் வங்கொடுமை
செய்தது முதல் கோவா, உ.பி, என்று அனைத்து மாநிலங்களின்
புள்ளிவிவரங்களும் மறைத்துவிடக்கூடியதல்ல.

இன்றைய கூகுள் யுகத்தில் எதையும் இந்தியாவில் தடை
செய்வதால் மட்டும் எதுவும் ஆகிவிடாது. எப்படியும்
எல்லோரும் பார்க்கத்தான் போகிறார்கள். எனவே, காரணங்களை நேருக்கு நேர்
நாம் சந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.


இன்றைக்கு அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் பெண்கள்
அவ்ர்களின் இராணுவ அதிகாரிகளால் பாலியல் வன் கொடுமைக்குள்ளாகி
இருக்கிறார்கள். அதுவும் அப்படி பாதிக்கப்பட்ட பெண், அதே காரணத்திற்காக
இராணுவத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறாள்.
அப்படி பாதிக்கப்பட்ட பெண் நூரிஸ் சொல்கிறார்

" I WANTED TO DIE BECAUSE I BASICALLY FEEL I GOT FIRED FOR BEING
RAPED"

IT IS A WEAPON OF WAR என்ப்தை இன்று உலகமே அறியும்.
சமத்துவம், சம உரிமை இல்லாத எவ்விடத்தும் இந்த
யுத்தம் நடந்துக்கொண்டே இருக்கும். ஆண் - பெண் சமத்துவம்,
சம உரிமை குறித்து காத்திரமான உரையாடல்களை, புரிதல்களை,
அடிப்படை கல்வியை, விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.
அதற்குத் தடையாக இருக்கும் உங்கள் மதம், சடங்கு, நம்பிக்கைகளை
கொண்டாடிக்கொண்டு பிபிசி மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை.
இம்மாதிரி தடை செய்வதால் இப்பிரச்சனைக்கு எந்தத் தீர்வும்
ஏற்படப்போவதில்லை.

Tuesday, March 3, 2015

மோதியின் கனவு இல்லமும் பட்ஜெட்டும்



மோதி பிரதமரானவுடன் அறிவித்த ஒரு திட்டம் கனவு இல்லம்.
வீடில்ல்லாத ஒருவன் கூட இனி இந்தியாவில் இல்லை
என்ற கனவு.. கேட்பதற்கும் நினைப்பதற்கும் ரொம்பவும்
இனிமையாக இருந்தது. திட்டங்களை அறிவிக்கும் போது
மோதியின் சிறப்பம்சம்.. என்னவோ பாரதமாதா அவர்
கனவில் தோன்றி என் புதல்வர்கள் அனைவருக்கும்
நீயே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட
தொனியில் ஆவேசம் வந்து அருள் வாக்கு கொடுப்பது போல
பேசுவார். தொலைக்காட்சியில் அவ்ர் பேசும் போது கேட்பவர்களுக்கு
எழுந்து நின்று கைதட்ட வேண்டும் போலிருக்கும்.

இந்தியாவில் இந்தியர் அனைவருக்கும் வீடு.. கனவு இல்லம் என்பது
மோதியின் கனவு என்று நம் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும்
சொல்லிக்கொண்டே இருந்தன. இதில் வேறு, 2022க்குள் இத்திட்டம்
நிறைவேறி விடும். 2022 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள்
நிறைவடையும் தருணத்தில் இந்த சாதனை கொண்டாடப்படும் என்று
காலம் நேரம் நாள் குறித்துவிட்டார்கள். இதுவும் கேட்பதற்கு இனிமையாக
பாலாறும் தேனாறும் கலந்து ஓடுவது போள இனித்தது.

இத்திட்டம் சாத்தியப்படும் என்று திட்டக்குழு அறிஞர்களைக்
கொண்டு பேச வைத்தார்கள். HOUSING AND URBAN INFRASTRUCTURE
CORPN. தலைவர் சுரேஷ் இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றி
விளக்கமாக பேசினார். எழுதினார். எப்படி?

போக்குவரத்து, சாலைவசதி. நிலம் கையகப்படுத்துவ்தில் இருக்கும்
சட்டங்களை எளிமைப்படுத்துதல், கட்டிடம் கட்டுவதற்கான
கச்சாப்பொருட்கள் குறைந்த விலையில் எளிதாக கிடைக்க
ஏற்பாடு செய்தல்.. இத்துடன் கட்டிய வீடுகளை வாங்குவதற்கு
எளிதில் கடன் வசதி செய்து கொடுக்கும் திட்டங்கள்..
இன்னபிற வசதிகள் செய்துக் கொடுக்கப்ப்ட்டால் "கனவு இல்லம்"
சாத்தியப்படும் என்று எழுதினார்.

இத்திட்டத்திற்கு நம் பட்ஜெட்டில் அருண்ஜெட்லி ஒதுக்கி
இருக்கும் தொகை ரூபாய் 22,407 கோடி. இதில் அவ்ர்கள்
60 மில்லியன் வீடுகளை 2020க்குள் கட்டியாக வேண்டும்.
அதில் 40 மில்லியன் வீடுகள் கிராமப்புறங்களிலும்
20 மில்லியன் வீடுகள் நகரப்புறங்களிலும் கட்டப்படும்
என்று அறிவித்திருக்கிறார்.
அகமதாபாத் மறுசீரமைப்பு திட்டத்தில் அத்திட்டத்தை
நிறைவேற்றுவதற்கு ரூ 45,000 கோடி ஒதுக்கப்ப்ட்டது.
இதில் ரூ 30,000? கோடி சாலை வசதி, தண்ணீர் வசதி
என்ற அடிப்படை வசதிகளுக்கே தேவைப்பட்ட்து என்று
சொல்கிறது குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் நகர சீரமைப்பு
திட்டத்திற்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்ப்ட்டதை
அந்த மாநிலத்தில் அப்போது முதல்வ்ராக இருந்த்
மோதி அவ்ர்கள் நன்றாக அறிவார். அப்படியானல்
பட்ஜெட் ஒதுக்கி இருக்கும் இந்த 22,407 கோடி
போதுமா? சரி.. அப்படியே போதும் என்று கற்பனை
செய்துக்கொண்டாலும் இத்திட்டங்களை நிறைவேற்ற,
வீடு கட்ட முதலில் தேவை நிலம். எங்கே, எவ்வளவு
நிலம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது?
தனியார் நிலங்களா, அரசு நிலங்களா?
இத்திட்டத்தை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்த
வேண்டும் என்றால் இத்திட்டத்தில் மாநிலங்களில் பங்கு
என்ன?
இன்னும் 5 வருடங்களுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும்
என்றால் வருகின்ற நிதியாண்டில் இத்திட்டம் தொடங்கப்பட
வேண்டும்., இத்திட்டத்திற்கான வரைபடம் எங்கே?


ஏற்கனவே இதேமாதிரி திட்டங்கள் வெவ்வேறு பெயர்க்ளில்
இந்தியா நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டன.


Jawaharlal Nehru National Urban Renewal Mission: Basic Services to the
Urban Poor (BSUP) & Integrated Housing & Slum Development Programme
(IHSDP)

• Swarna Jayanti Shahari Rozgar Yojana (SJSRY)

• Affordable Housing in Partnership (AHIP)

• Interest Subsidy Scheme for Housing the Urban Poor (ISHUP
)
• Integrated Low Cost Sanitation Scheme (ILCS)

• Projects/ Schemes for the Development of North Eastern States, including
Sikkim
Vision of Slum Free India: Launch

இவை எல்லாம் என்னவானது?

மோதியின் கனவு இல்லம், கூரைகளுடன் செங்கள் சிமிண்டால்
கட்டப்படும் pucca house என்பது எந்தளவுக்கு சாத்தியப்படும்?

முன்பெல்லாம் தனி நபர்கள் மட்டும் தான் கனவு க்ண்டார்கள்.
இப்போதெல்லாம் இந்திய அரசும் கனவு காண ஆரம்பித்துவிட்டது.
தனி நபர் கனவு அந்தக் கனவு கண்ட நபரை மட்டும் தான் பாதிக்கும்.
ஆனால் ஓர் அரசே கனவு கண்டால்..?