மெரீனா கடற்கரையில் மெழுவர்த்தி ஏந்தி
உங்கள் உணர்வை
உங்கள் எதிர்ப்பைக் காட்டிய
என் உறவுகளே....
ஆண்டுக்கொரு முறை மெழுகுவர்த்தி ஏந்தி
நினைவேந்தல் நடத்துவதன் ஆரம்பவிழாவா
உங்கள் கூட்டமும் உங்கள் கோஷமும்..?
அப்படியானால்
என்னை மன்னித்துவிடுங்கள்...
இனிமேல் மெழுகுவர்த்திகளை
உங்கள் தீர்க்கமுடியாத வியாதியாகிவிட்ட
மின்சாரதடையின் போது மட்டுமே
உபயோகப்படுத்துங்கள்.
அது உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் அடையாளங்களைச் சுமந்து
உங்கள் அடையாளங்கள் இருந்ததால் மட்டுமே
மண்ணில் விதைக்கப்பட்ட
மானுட விதைகளுக்கு
நீங்கள் செய்யும் மரியாதையாக
இருக்க முடியும்.
எப்போதும் உணர்வுக்குமிழிக்குள்
பொங்கி வெளிவந்து
கரை சேர்வதற்குள் உடைந்துப் போன
கடந்தக் காலத்தின் கதைகள்
தொடர்கதையாகிவிடாது
என்பது என்ன நிச்சயம்?
உங்கள் திட்டம் என்ன?
உங்கள் செயல்பாடு என்ன?
உங்களுக்குள் இருக்கும்
உப்பு புளி சண்டைகளை
உங்களுக்குள் இருக்கும்
அதிகார ஆசைகள்
உங்களுக்குள் இருக்கும்
உன்மத்தங்கள்
எல்லாவற்றையும் எரித்துவிட்டீர்களா?
எரித்தச் சாம்பலை வங்கக்கடல்நீரில்
கரைத்துவிட்டீர்களா?
யாராவது தீர்மானம் போட்டால்
எல்லாம் நடக்கும் என்று
எப்போதும் நினைத்தீர்கள்!
அட இப்போதும் நினைக்கிறீர்கள்!
எப்படி நடக்கும்?
இறையாண்மை இருக்கிறதே..!
அதை வெல்லும் மறையாண்மை
மறவர் ஆண்மை
உங்களிடம் இருக்கிறதா..?
செண்ட்ரல் ஸ்டேஷந்தாண்டி
உங்கள் செய்திகள் கூட
பயணிக்கவில்லை என்பதை
என்றாவது பார்த்திருக்கின்றீர்களா?
மெரீனாவில் ஏற்றிய
மெழுகுவர்த்திகள் எரிந்து முடிவதற்குள்
இலவச டிவிக்களில்
மானாட மயிலாட பார்க்கும்
மானுடப்பிறவிகளே...
இருளைச் சுமந்துக்கொண்டே
எரியும் மெழுகுவர்த்தியாய்
இந்தியத் தமிழனாய்
இருக்க நினைப்பது
சத்தியமாய்த் தவறில்லை
சாத்தியமா தெரியவில்லை
செங்கோட்டையிலிருந்து
தேவதூதர்கள்
வருவார்கள்
போவார்கள்
எழுதுவார்கள்
அறிக்கை விடுவார்கள்..
ஆகா என்று
ஆனந்தப்பட்டு ஆரத்தழுவும்
காட்சிகள் மாறவில்லை
கட்சிகள் தான் மாறி இருக்கின்றன.
முடியும் என்றால்
உங்கள் அணிவகுப்பை
செங்கோட்டையை நோக்கித்
திருப்புங்கள்
செங்கோட்டை வாசலெங்கும்
மெழுகுவர்த்திகள் எரியட்டும்
அணையாமல் எரியட்டும்
குளிர்ந்தக் காற்றில்
அணைந்துவிடாமல்
சூடேற்றக் காத்திருக்கும்
சூரியக்குஞ்சுகளின் சார்பாக...
Wednesday, June 29, 2011
Tuesday, June 21, 2011
காயங்களுக்கு மயிலிறகாய் கவிதைமொழி....
என் கவிதை தொகுப்பு "ஐந்திணை"
இருவாட்சி பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.
அந்நூலுக்கான என்னுரையில்.....
காதல் ஒரு நினைவுச்சுருள்.
ஒரு நிமிடத்தில் ஓராயிரம் ஆண்டுகளின் நினைவுகளைப்
புரட்டிப் போடும் வேகம்
காதலின் நினைவுச்சுருளுக்குள் பத்திரமாக
நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்
நமக்குள் ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
அந்த நினைவுகளைப் புரட்டிப்பார்ப்பதும் அசைப்போடுவதும்
பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கற்பொழுக்கத்தில் ஒரு கரும்புள்ளிஎன்று
காலம் காலமாக அவளுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.
அதனால்தான்
அந்த நினைவுச்சுருளைத் தொட்டுப்பார்க்கவே பெண்கள் அச்சப்படுகிறார்கள்.
சமூகம், சமூக அந்தஸ்த்து, குடும்பம்..
இப்படியாக சொல்லப்படும் காரணங்கள்
அனைத்தும் பெண்ணை மையமாக்கி
சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் வளையங்கள்.
அந்த வளையத்துக்குள் இருந்துக்கொண்டே
பிரபஞ்சம் போல பரந்து விரிந்து
தன்னை ஆட்கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்பது
சங்ககாலம் தொட்டே பெண் எதிர்நோக்கும் பிரச்சனையாகவே
வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
புறம் சார்ந்தக் காரணிகள் ஒருபக்கம் என்றால்,
புறக்காரணிகளின் தாக்கத்தால் ஏற்படும்
அகம் சார்ந்த உணர்வுகளே குற்றமாகி
அவள் கழுத்துக்கு மேலே தூக்குக்கயிறாய்
எப்போதும் அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது.
காதல் இயல்பானது-
காதல் இயற்கையானது -
என்ற உண்மையை அவள் உணர்ந்து கொள்ள நடக்கும் போராட்டத்தில்
அவள் சமூகத்துடன் மட்டுமல்ல,
'நான் - பெண் ' என்ற தன் சுயத்துடனும்
போராடிக் கொண்டே இருக்கிறாள்.
இந்தப் போராட்டத்தில்
உண்மையை அப்படியே நிர்வாணமாக்க
அவள் உடல் கூசுகிறது.
மொழிகளின் வசீகரமான வார்த்தைகளால் உண்மைகளை
அவள் அலங்காரம் செய்துக் கொள்கிறாள்.
கவிதைமொழி அவள் காயங்களுக்கு மயிலிறகாய் தடவிக்கொடுக்கிறது.
**
காதலும் பெண்ணும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்து கரைந்து நிற்பதை
அவள் உணரும் தருணத்தில்..
அவள் தான் காதல்
காதல் தான் அவள்.
அவளிடமிருந்து எவராலும் எக்காலத்தும் காதலைப் பிரித்தெடுக்க முடியாது.
குட்டிப்போட்டு பாலூட்டுவது மட்டுமே பெண்ணின் அடையாளம் என்ற வட்டத்தை
அவள் உடைத்துவிட்டாள். காதல் மட்டுமே அவளுக்கான அடையாளம்.
ஆகாயத்தின் கீழிருக்கும் அனைத்தையும் அவள் காதல் தனதாக்கிக் கொள்கிறது
களவும் கற்பும் ஊடலும் கூடலும் மட்டுமே காதலாகி இருந்த அவள் வாழ்க்கையில்
நெய்தலும் பாலையும் காதலின் வலிமையைக் காட்டும் அவள் ஆயுதங்களாகின்றன.
**
உங்கள் காதல் கவிதைகளின் போதையில் பெண் தள்ளாடுவதை
உங்களின் வெற்றி என்று கொண்டாடினீர்கள்.
அப்போதுதான் அவளுக்குத் தெரியவந்தது
காதல் என்ற பெயரால் அவள் கட்டப்பட்டிருக்கும் சூக்குமம்.
காதலுக்கு கூட இனி அவள் அடிமையாக இருக்க மாட்டாள்.
காதல் மட்டுமே விட்டு விடுதலையாகி பறக்கும் சுகத்தைத் தரும்
என்பதை அவள் தனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் சேர்த்தே பாடிக்கொண்டிருப்பாள்.
வேடனின் வலையுடன் பறந்தப் புறாவின் கதையை நீங்கள் அறிவீர்கள்.
வேடன் வலையையே சிறகாக்கி பறக்கும் புறாவாக அவள்
இதோ.. உங்களுடன்.
**
கவிதைகளில் "கூறியது கூறல்" இருப்பதை நானறிவேன். வெவ்வேறு காலக்கட்டத்தில்
எழுதியவை என்ற காரணங்களுக்கெல்லாம் அப்பால் அபாயங்கள் இருப்பதை
அடிக்கடி நினைவுபடுத்தினால் விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்ற நப்பாசைதான்!
உள்ளாடையிலிருந்து உள்ளாட்சி தேர்தல் வரை இங்கே அரசியல் இருக்கும் போது
ஐந்திணையிலும் அரசியல் கலந்திருப்பது ஆயுள் தண்டனைக்கான குற்றமா என்ன?
**
ஐந்திணையை என் அப்பச்சி - அப்பாவின் அம்மா - நினைவில் வாழும்
என் பாட்டி அமராவதி சுப்பையாவுக்கு... என்று ஒற்றைவரியில்
அறிமுகப்படுத்துவது அவளுக்கு நான் செய்யும் நியாயமாக இருக்காது.
என் பாட்டியின் புகைப்படம் இல்லவே இல்லை. நாங்கள் யாரும் அவளைப்
பார்த்ததில்லை. ரவிக்கையும் காலில் செருப்பும் அணிவது மறுக்கப்பட்ட
சமூகத்தில் அவள் 1915வாக்கில் தன் திருமணத்தின் போதே திருநெல்வேலி சீமையிலிருந்து
ரவிக்கை அணிந்து காலில் செருப்புடன் எங்கள் கிராமத்தில் அடியெடுத்து வைத்து
மவுனமாக ஒரு புரட்சியைச் செய்திருக்கிறாள்..கொழும்பு, கராச்சி, பம்பாய் என்று
தாத்தாவுடன் கப்பலில் பயணம் செய்திருக்கிறாள். அவள் செய்த புரட்சிகளைப்
புரிந்துக் கொள்ளவும் பெருமையுடன் உங்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஐந்திணையில்
ஒரு புள்ளி வைத்திருக்கிறேன்.
**
கடுகளவு உதவி செய்தாலும் அதைக் கடலளவாய் எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கும்
பேருள்ளம் சிலருக்குதான் உண்டு. என் நட்புவட்டத்தில் எப்போதும் அந்த
அலைகளுக்குச் சொந்தக்காரர் நண்பர் அன்பாதவன் அவர்கள். அவருடைய முயற்சிதான்
என் எழுத்துகள் பல அச்சேற உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றன.
தன் பணிகளுக்கு நடுவில் இக்கவிதைகளுக்கு அவரே அணிந்துரையும் தந்து
சிறப்பு செய்திருக்கிறார்.
வடிவமைத்த கோவை பாலா, வெளியிடும் உதயக்கண்ணன், என் கவிதைகளுக்கு
இடமளிக்கும் சிற்றிதழ், இணைய இதழ் தோழமை உறவுகளுக்கும் என் வணக்கமும்
நன்றியும்.
Thursday, June 16, 2011
சமச்சீர் கல்வியும் சண்டைக்கோழியும்
சமச்சீர் கல்வியை தடை செய்வதும் அதற்கான காரணங்களாக
பாடத்திட்டத்தில் குற்றம் கண்டுபிடித்ததும்.. இப்படியாக
நித்தமும் ஓர் அறிக்கை யுத்தம்.. பாவப்பட்டவர்கள்
மாணவர்களும் பெற்றோர்களும் மட்டுமல்ல.. பள்ளிகூட
ஆசிரியர்களும் தான்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
பாடத்திட்டம் தொடரும் என்று அறிவித்தாகிவிட்டது.
ஆறாம் வகுப்புக்குப் பின் பழைய பாடத்திட்டமாம்!
தலையைச் சுற்றுகிறது...! இந்தக் கேலிக்கூத்துக்கெல்லாம்
சொல்லப்படும் காரணங்களும் அரசியல் தலைவர்களின்
கோமாளித்தனங்களும்...!!
தினமலர் 13/6/2011ல் வெளியாகி இருக்கும் ஒரு செய்தி.
" ப்ளஸ் 1 ப்ளஸ் 2 பாடப்புத்தகங்களில் கடைசிப் பக்கத்தில்
செம்மொழி மாநாடு லோகோ அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகங்களில்
உள்ள லோகோவை மறைக்கும் வகையில் அதன் மீது ஸ்டிக்கர்
ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 வகையான அளவுகளில்
இரண்டு லட்சம் ஸ்டிக்கர் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
கோரப்பட்டிருந்தன. அதன்படி பச்சை நிறத்திலான ப்ளெயின் ஸ்டிக்கர்
வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான ஸ்டிக்கர் வழங்கி
புத்தகங்கள் மீது ஒட்டிய பின்பே மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது."
செம்மொழி மாநாடு நிகழ்வில் பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
செம்மொழி மாநாடு கலைஞரின் கவிதை.. "செம்மொழியான தமிழ்மொழியாம்..."
வெளிவந்தவுடனேயே பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இலக்கண குற்றத்தையும்
தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டினார்கள்...
இதெல்லாம் இருக்கட்டும்.. ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் செம்மொழி
மாநாடு முத்திரையும் அதில் எழுதப்பட்ட 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்'
என்ற வாசகங்களும் மட்டும்தான் ஒவ்வொரு தமிழனும் பெருமைக்கொண்ட
விரும்பிய ஓர் அம்சம். அதை அரசுப் பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் திமுக கலைஞர் மீதான வெறுப்பை தமிழனின் பெருமிதமான
திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் செயல்படுத்தி இருக்கிறார்.
இந்த நிகழ்வின் மூலம் சமச்சீர் கல்வியை எதிர்ப்பது ஏன் என்பதை
மட்டுமல்ல..
' நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் பார்..! '
என்ற தன் அதிகாரத்தின் உச்சத்தையும் காட்டி இருக்கிறார் தமிழக முதல்வர்.
குஷ்பு எதாவது உளறிக்கொட்டினால் கொதித்துப் போகும் என் தமிழ்
உணர்வாளர்கள் இதை எல்லாம் கண்டும் காணாமலும் இருக்க
கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.. "
Saturday, June 11, 2011
கலைஞர் டிவியும் திமுகவும்
கலைஞர் டிவி.. திமுக என்ற அரசியல் இயக்கத்தின் தொலைக்காட்சி அல்ல.
திமுக என்ற அரசியல் இயக்கத்தின் தலைவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்
சொந்தமான ஒரு சொத்து கலைஞர் டிவி. வீடு வாசல் தோட்டம் நகை நட்டு போல
இதுவும் ஒரு சொத்து. அதிலும் பொன்முட்டையிடும் வாத்து என்று கூட வைத்துக்
கொள்ளலாம்.
சரி, திமுகவின் எந்த திராவிட இயக்க கருத்துகளை முன்வைத்து
கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கிறதா என்று பார்த்தால்
மற்ற தொலைக்காட்சிகளுக்கும் கலைஞர் டிவிக்கும் எந்த வேற்பாடுகளும்
கிடையாது. எனவே கலைஞர் டிவியை திராவிட இயக்கத்தின் கருத்துப் பரப்பும்
ஊடகம் என்று காதில் பூச்சுத்த முடியாது.
கலைஞர் டிவி ஆரம்பிக்கும் போது திமுக வின் பொதுக்குழு செயற்குழு
கூட்டத்தைக் கூட்டி அதில் கருத்துக் கேட்டு ஆரம்பித்தார்களா என்றால்
அப்படியும் இல்லை. ஆனால் கலைஞர் டிவிக்கு இன்று ஏற்பட்டிருக்கும்
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண திமுக வின் பொதுக்குழு
செயற்குழு கூட்டப்படுவது ஏன்?
Saturday, June 4, 2011
கலைஞர் வசனத்தில் குளறுபடி
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 88வது வயது
பிறந்தநாள் அன்று 3/6/2011 ல் தன் தொண்டர்களுக்குச் சொன்னது:
" சமுதாய எழுச்சிக்காகவும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை
ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள்,
'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்ற பொன்மொழியை மறந்துவிடாமல்
பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்றார்.
எல்லாம் சரிதான். நீங்கள் மிகச் சிறந்த வசனகர்த்தா என்பதில்
என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் இதென்ன.. ?? இந்த வசனத்தை நீங்கள் சொல்றமாதிரி
இருப்பது கதையுடனும் காட்சியுடனும் பொருந்தவே இல்லையே.
உடன்பிறப்புகள் உங்கள் பிறந்தநாளுக்குச் சொன்னதாக
இருந்தால் தானே சரியாக இருக்கும்.
இப்படி எல்லாம் உங்களைப் போன்ற சிறந்த வசனகர்த்தாக்கள்
வசனத்தில் குளறுபடி செய்வது தான் எங்களுக்கு குழப்பமாக
இருக்கிறது. கதையும் புரியலை.. உங்கள் கதைப் பாத்திரமும்
புரியலை.. பாவம் உடன்பிறப்புகளும் கூட்டணி தோழர்களும்.
Subscribe to:
Posts (Atom)