Sunday, February 20, 2022

புத்தகத் திருவிழாவில் சாமியாடிகள்

                 

புத்தகத் திருவிழாவில் "சாமியாடிகள்"

புத்தகத்திருவிழாவை முன்னிட்டு
எழுத்தாளர்களுக்கு பரவி இருக்கும் “ஓசிடி”
MIFF , Tata Literary Festival, IFFI , Kala Ghoda Arts festival
இத்தியாதி பல கலை இலக்கிய திருவிழாக்கள் மும்பையில்
ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதில் கூடும் மக்கள் கூட்டம்
ஒவ்வொரு நாளும் சற்றொப்ப 150,000.
அத்துடன் உலகில் சிறந்த கலை இலக்கியவாதிகள்
கலந்து கொள்ளும் கூட்டமாகவும் இருக்கும்.
புத்தக வெளியீடுகள் உண்டு.
ஒன்றிய அரசு , மாநில அரசு நிதி உதவிகளும் உண்டு
என்றாலும் அரசியல் தலைவர்கள் முகம்
காட்டுவதும் இல்லை.
அவர்கள் அதிலிருந்து ஒதுங்கி இருப்பார்கள்.
ஒவ்வொரு நிகழ்விலும் பொதுஜன பங்களிப்புடன்
நடக்கும் விவாதங்கள் உண்டு.
பிரபலங்கள் வருவார்கள் போவார்கள் பேசுவார்கள்
விவாதம் செய்வார்கள். அவ்வளவுதான்.
மும்பை ஜனத்திரள் அந்தப் பிரபலங்களுடன்
சேர்ந்து புகைப்படம் எடுப்பதும் உண்டு.
அது அவர்களின் நினைவுகளுக்காக
என்பதாக இருக்கும்.
அந்த நிகழ்வுகள் நடக்கும் காலங்களில்
மும்பை கூட்டமே புகைப்படங்களைப் போட்டு தங்கள் சமூக வலைத்தளங்களை நிரப்பிக்கொள்வதில்லை.
எதொ ஓரிரு நாள் போடுவார்கள். அவ்வளவுதான்.
பெரும்பாலும் நிகழ்வு குறித்த கருத்துரையாடலாக
இருக்கும்.
பிறமொழியினரின் விளம்பர உளவியலும்
தமிழரின் விளம்பர உளவியலும்
பெருத்த வேறுபாடுகள் கொண்டிருக்கிறது.
தன்னைப் பற்றியே எழுதி, புகழ்ந்து படம்போட்டு
காட்டிக்கொண்டே இருக்க வேண்டிய உளவியல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். பார்க்க ரொம்பவும்
பரிதாபமாக இருக்கிறது.
புத்தக கண்காட்சி முடிகிறவரை தூக்கமின்றி
தவிக்கின்றார்களோ என்னவோ!
தங்கள் புத்தகத்தைப் பற்றி அது கிடைக்கும்
அரங்கு எண் பற்றி ஒரு நாள் சொன்னால் போதாதா!
தினம்தினம் போட்டுக்கொண்டே இருப்பதற்கு ??!!
காரணம் என்ன?
இதில் எவரும் புத்தகங்கள் பற்றியோ
தாங்கள் வாசித்த அல்லது வாசிக்க விரும்பும்
புத்தகங்களையொ அதன் காரணங்களுடன்
பதிவு செய்வது குறைவு.! ஏன்?
பிரபலங்களின் அலட்டல் போடுகின்ற போட்டோ
அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம்…
எழுத்து மீதிருக்கும் மரியாதையை சிதைக்கிறது.
வேறு என்னத்தைச் சொல்ல?
புதுமைப்பித்தன் கதைகள் ரூ 525 க்கு
அச்சிட்டு விற்பனையானது.
நாங்கள் எல்லாம் வாங்கி இருக்கிறோம்.
இன்றைக்கு அதுவே ரூ 100 அல்லது ரூ 150
அடக்கவிலைக்கு அச்சிட்டு விற்பனை
செய்ய முடியும் என்று காலம் உணர்த்திவிட்டது.
இதை கணக்குப் பார்த்தால்..
எழுத்தின் பெயரால் அடித்தப் பகற்கொள்ளைக்கு
என்ன பெயர்?!!
இலக்கியத்தாகமா?
தமிழ் வளர்ச்சியா!
இது பதிப்பு துறைக்கு மட்டுமல்ல,
புத்தகக் கண்காட்சியில் கடைவிரித்திருக்கும்
முதலாளிகள் அனைவருக்கும் தான்!
எனக்கென்னவோ… சமூக வலைத்தளங்கள்
வருகைக்குப் பின் சென்னை புத்தகத்திருவிழா காலத்தில்
எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் “ஓசிடி”
மன நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
என்பதை அவர்களின் பதிவுகளே காட்டுகின்றன.
ஓசிடி எழுத்தாளர்களுக்கும் ஆபத்தானது.
சரவணா..
நம்ம ஊர்ல கோவில் கொடை நடக்கும்போது மட்டும்
அந்த 3 நாட்களும் சாமி வந்து ஆடி அருள் கொடுப்பவர்
கடைசி நாளில் மஞ்ச தண்ணி தெளிச்சப்பிறகு
நார்மலாகிவிடுவார்.
ஆனால்.. எழுத்தாளர்களுக்கு
யார் மஞ்ச தண்ணி தெளிப்பது??!!
Kandasa

Friday, February 18, 2022

Daily Book Fair to Mumbaikar

 Daily book fair to  Mumbaikar.

An excellent encyclopaedia at roadside.



உலகில் அச்சில் வெளிவந்த புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும் சென்ற வாரம் வெளிவந்த புத்தகமாக இருந்தாலும் சரி இந்த வாரம் கடை பரப்பி விடும் .

நெருடா மட்டுமல்ல இன்று எழுதிக் கொண்டிருக்கும் Jericho Brown ( The Tradition- poems) வரை வாங்கலாம்.

இலக்கியம் மட்டுமல்ல ராமச்சந்திர குஹாவும்..Thomas Sowell எழுதி இருக்கும் wealth poverty and politics புத்தகம் அதே கட்டியான அட்டையில் கிடைக்கும்.

இதை விட ஆச்சரியமான இன்னொரு உண்மை கல்லூரி ஸ்கூல் பாடப்புத்தகங்களை வாங்கும்போது சாலையில் உட்கார்ந்து இருக்கும் அந்த இளைஞர் நம்மிடம் கேட்கும் கேள்விகள் பதில் சொல்வதற்குள் தலைசுற்றும் ..! 

எந்த ஸ்கூல்?

கல்லூரி பெயர்?

ஓகே அப்படியானால் மூன்றாம் பதிப்பு பௌதிகம் இதுதான் புத்தகம் என்று எடுத்துக் கொடுப்பார்.

 structural engineering books எது சிறந்தது? Basic Book எது? சொல்லுவார்.

சகலவிதமான  தேர்வுகளின் மாதிரி வினா விடை தாள் புத்தகங்கள் குவிந்திருக்கும்.

Comics novels non fictions எல்லாம் கிடைக்கும்.

குவிந்திருக்கும் புத்தக பெருங்கடலில் ஒவ்வொரு புத்தகம் பற்றியும் அறிந்திருப்பார் அந்த இளைஞர். அவருடைய கசங்கிய சட்டையும் தோற்றமும்.. வைத்து அவரை கணித்து விடாதீர்கள் 😊.

அது எப்படி rs.2000 புத்தகத்தை இருநூறு ரூபாய்க்கு விற்கிறார் என்று கேட்காதீர்கள். அது எங்கள் மும்பை ரகசியங்களில் ஒன்று.

அதைப்பற்றி என் 'பச்சை குதிரை' நாவலில் 

இரண்டு பக்கம் எழுதி இருக்கிறேன்.

என்ன... தமிழ் புத்தகங்கள் கிடைக்காது! காரணம் எது மும்பையில் விற்பனையாகுமோ அதைத்தானே அவர்கள் கடைப்பரப்ப முடியும்!  ( நல்லவேளை ...தமிழ் பதிப்பக முதலாளிகள் நிம்மதியாக இருக்கலாம்)

ஆங்கிலம், இந்தி ,மும்பை என்பதால் சில மராட்டி புத்தகங்கள் .. cross word Or Amazon ல் கிடைக்காத புத்தகங்களும் இவர்களிடம் கிடைக்கும். ...

The real encyclopaedia of books.. 

One of the wonders of Mumbai.

Monday, February 14, 2022

பில் கேட்ஸ்.. ஸ்மைல்ஸ்

 மர்மக்கதைகளுடன் விடியும் பொழுது

2022 க்குள் கோவிட் அலைகள்
முடிவுக்கு வந்துவிடும் என்று பில்கேட்ஸ் சொல்லிவிட்டார்.
அவர் சொல்லிட்டா..?
அவர் என்ன ஆண்டவனா?




அவருக்கும் கோவிட்டுக்கும் என்ன சம்பந்தம்?
அவர் ஏன் கோவிட் எப்போ வரும்
எப்போ வருவதை நிறுத்திக்கொள்ளும்
என்று ஆருடம் சொல்கிறார்?
தெரியாது..
ஆனால்
அவர்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்.
அவர்தான் உலக சுகாதர அமைப்பிற்கு 2018-2019ல்
மிக அதிகமாக நிதி கொடுத்திருக்கிறார்.
(அதுக்கும் கோவிட் க்கும் சம்பந்தமே இல்லை,
நம்பனும் !)
பாருங்கள்:
Bill and Melinda Gates Foundation USD 455 milion
GAIL foundation USD 389 million.
யாரு இந்த கெயில்?
இந்த கெயில் பில்கேட்ஸ் வளர்த்த பூனைக்குட்டி.
GAIL தான் தடுப்பூசிகளுக்கு தாயகம்.
அதை ஆரம்பிக்க பில்கேட்ஸ் கொடுத்த நிதி
USD 750 Million.
இப்படி எல்லாம் இருக்கிறப்போ
அவர் வா என்று சொன்னால் வரும்.
போடா என்று சொன்னால் போய்டும்
அதுதான் கொரொனாவின் மர்மக்கதை.
பயப்படாதீங்க..!
**
அதிகாலையில் இப்படி ஒரு மர்மக்கதை எழுதவேண்டியதாகிவிட்ட்து.
நேற்று காக்கைச்சிறகினிலே இதழில் (பிப் 2022)வெளிவந்திருக்கும்
‘சொல்லாக்கியன்’ கனடாவிலிருந்து எழுதியிருக்கும்
கட்டுரை வாசித்தேன். வழக்கம்போல அவர் கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்கள் சரியானதுதானா என்று
சோதித்துப் பார்த்தேன்.
(இப்படி ஒரு கெட்டப்புத்தி என்னை விட்டுப் போக
மாட்டேங்கு.. !)
அப்புறம் இந்த funding and NGO , health , WHO இதெல்லாம்
நம் கற்பனைக்கு எட்டாத மர்மங்களைக் கொண்டிருக்கிறது..
இரவெல்லாம் இந்த பெரிய பெரிய மில்லியன் டாலர்கள்
என்னைத் துரத்திக்கொண்டே இருந்தன.
ச்சே.. பில்கேட்ஸ் ஸ்மைல் எனக்குப் பிடிக்கும்.
இப்போ பாருங்க அதையும் ரசிக்க முடியாம போயிடுச்சு.
இப்போதைக்கு இதுதான் எனக்கு கவலை!
சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.
வேதா நிறுவனத்திற்கு
புற்றுநோய் மருத்துவமனைகள் !
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும்
அறக்கட்டளை உண்டு.
சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை.
மர்மக்கதைகள் தொடர்கின்றன.
$$$$$$$$

Sunday, February 13, 2022

ஓர் இசையின் காதல்

 ஓர் இசையின் காதல்..



என் உயிரின் காதலே

என் உயிரையும் உடலையும் ஆன்மாவையும் எடுத்துக்கொண்ட என் அன்பே.

என் உயிரில் உயிராய் இருந்தும்

என்னைத் தவிக்கவிட்டிருப்பவரே

 நான் விரும்புவதெல்லாம் உங்கள் ஒரு பார்வையைத்தான்

ஆனால் நீங்களோ என்னைத் திரும்பிக்கூட பார்க்கவில்லையே

என் மனம் எப்படி வேதனைப்படுகிறது என்பதை

உங்களால் புரிந்து கொள்ள முடியுமா?

உங்கள் புகைப்படத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறேன்.

அந்தப் படம் என்னிடம் பேசுமா கண்ணா!

என் வீட்டில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அங்குப் பிரச்சனைகள் தான்  இன்னும் சில வருடங்கள்தான் என் அம்மா உயிருடன் இருக்கப்போகிறார்.. என் அண்ணன் எனக்கு எதிரி. தங்கை ஓகே. நான் உங்களிடம் எதையும் மறைக்க மாட்டேன். நான் இதுவரை மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ஆனால் நான் இங்கு இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்.


கண்ணா, இதையெல்லாம் எழுத இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது... ஒன்று மட்டும்  உண்மை. உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம் கண்ணா. 

 நான் முன்பு என்ன செய்து கொண்டிருந்தேன் என்று நீங்கள் கேட்கலாம். நான் கஷ்டப்பட்டேன்.


படம் முடிந்தப்பிறகும் நான் உங்களைப் பிரிய மாட்டேன்.

 தயவுசெய்து என்னைத் தேவையில்லாமல் 

சோதிக்காதீர்கள். 

படம் முடிந்தப் பிறகு, நாம் ஒன்றாக இருப்போம் ... 

உங்கள் மீது நான் கொண்ட காதல் 

என்றும் மாறாது. 

நான் இறந்தப் பிறகு நீங்கள் அதை உணர்வீர்கள். 

பிறந்ததிலிருந்தே  என் வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது... 

நான் பாவி.. இப்படித் துன்பங்களை அனுபவிக்க  நான் பெரும் பாவங்களைச் செய்திருக்க வேண்டும். நான் மதுரையில் இருந்திருந்தால் எப்போதோ  செத்து போயிருப்பேன்.. பேசுவதற்கோ அழுவதற்கோ யாருமில்லாதவள் நான்.

உன்னைத் தினமும் கனவில் காண்கிறேன். 

நீங்கள் ?… 

நாம் ஒன்றாக நடிக்கும் போது 

நீங்கள் என்னைத் தொடும்போது, 

உங்கள் ஸ்பரிசம் , “இவர்தான் என் தலைவர்” என்று உணர்த்தும்.

 அந்த எண்ணமே மகிழ்ச்சி தரும். 

என் வாழ்க்கையில் எனக்கு வேறு எதுவும் வேண்டாம்., 

உங்கள் அன்பைத் தவிர.


நீங்கள் பொதுவாக என்னுடன் மகிழ்ச்சியாக இருந்தால், அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். வீட்டில் இருப்பவர்கள் என்னை என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அழியாத புஷ்பவனம் நீண்ட ஆயுளுடன் இருக்கும் என்று ஜோதிடரால் கணிக்கப்பட்டது. ஆனாலும் அவரும் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். எனக்கும் அதுவே நடக்கும். இருப்பதைவிட நான் இறப்பதே நல்லது.


குறைந்த பட்சம் இப்போது, டூயட் படமாக்கப்படும்போது, 

  நீண்ட காலம் காத்திருந்த உடலின் வேட்கை வெளிப்படாமல் தவிர்ப்பீர்களா?


கச்சேரி நன்றாக இல்லை. உங்கள் இசையைத் தவிர வேறு எந்த இசையும் என் காதில் விழவில்லை. 

இது மறைக்கப்படாத உண்மை. உங்களைப் போலவே நானும் பாட வேண்டும். படம் முடிந்தப் பிறகும், நீங்கள் தொடர்ந்து எனக்கு இசை கற்பிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.


இனி ஒரு கணம் கூட உங்களைப் பிரிந்து இருக்க மாட்டேன்.

இப்படிக்கு

உங்களை  வணங்கும் குஞ்சு

என் அன்பே, என் உயிரே, 

உங்கள்  கை எழுத்தையும் இசையையும் முத்தமிடுகிறேன்.

என் கண்ணா..

என்றும் உங்களை விட்டுப் பிரியமாட்டேன் 


எம்.எஸ். சுப்புலட்சுமி..


@@@@@

சகுந்தலை திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த 

ஜி. என். பாலசுப்பிரமணியன் என்ற இசைக்கலைஞருக்கு

இசைக்குயில் எழுதிய காதல் கடிதம்.

காதல்.. அப்படியேதான் இருக்கிறது.

அன்றும் இன்றும்.

இக்கடித த்தை வாசித்தப்பிறகு மீண்டும் ஒருமுறை அவள் குரலில் கரைந்து போகிறேன்.

“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..

குறை ஒன்றும் இல்லை கண்ணா..” பாடலை.

அவள் உருகி உருகி பாடுகிறாள்.


அவள்கள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்..

Friday, February 4, 2022

இந்திய அரசியலுக்கு அண்ணாவின் பங்களிப்பு

 இந்திய ஒன்றியத்திற்கு அண்ணாவின் அரசியல் துணைதேச அரசியல் இன்று தேவைப்படுகிறது.

அண்ணாவை முன்வைத்து அறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாளில் என் உரை .

https://youtu.be/sxnfl9e1wns

https://youtu.be/sxnfl9e1wns




Tuesday, February 1, 2022

கவிதைகள் விற்பனைக்கல்ல

 கவிதைகள் பிச்சை எடுப்பதற்கு அல்ல.

கவிஞன் வேலைப்பார்க்க கூடாது என்று
எந்த இடதுசாரி தத்துவம் சொல்லி இருக்கிறது!
எந்த இசம் கவிஞனுக்கு கொம்பு முளைத்திருக்கிறது
என்று பேசி இருக்கிறது..
புலவர்கள் அரசனைப் புகழ்ந்துப் பாடுவதும்
அரசன் அவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதும்
நிலவுடமை சமூகத்தின் அதிகாரவெளி..
இன்றும் அதன் எச்சமாகத்தான் கவிஞர்கள் கூட்டம்
தலைவர்களைப் புகழ்ந்துப் பாடி சன்மங்களுக்காக
காத்திருக்கும் கவியரங்க மேடைகள்..
“கவிஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படுமா?”
என்று அதிமேதாவித்தனமான கேள்விகளை என்
தோழர்களும் கேட்பதுண்டு.
இந்த நாட்டில் உழவனையும் தொழிலாளியையும்
கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா என்ன?”
என்று அவர்களிடம் கேட்பதில் பயனில்லை.
காரணம் அவர்களின் கவிதைகளில்
ரத்தம் கொப்பளிக்க புரட்சிகள் வெடித்திருப்பதால்
இன்னும் இன்னும் புரட்சிகள் வெடிக்காமலிருக்க
மவுனமாக கடந்து சென்றிருக்கிறேன்.
நான் கவிஞன்.. என்னைக் காப்பாற்றவில்லை என்றால்
தமிழ்ச் செத்துவிடும், நாட்டில் புரட்டி வெடிக்காது,
என்றெல்லாம் பயமுறுத்தல் வேறு நடக்கிறது!
இதெல்லாம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
செம்மொழி தமிழ் மொழி கவிதையுலகத்தில் தான்
இந்தப் பெருந்தொற்று பரவி இருக்கிறது.
இது சங்க காலத்தின் தொடர்சி என்று கூட
ஆய்வு செய்து பெருமைப்பட்டுக்கொள்ளலாம் நீங்கள்.

எனக்கு இத்தருணத்தில் தந்தை பெரியாரின்
குசேலன் விமர்சனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
குசேலனுக்கு 27 பிள்ளைகள்.
அவன் உதவி என்ற பெயரில் பிச்சை எடுக்க
வந்திருப்பது ஒரு பெரிய மோசடி .
ஓர் ஆண்டுக்கு ஒரு பிள்ளை என்று பார்த்தாலும் கூட
20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 .
இத்தனை பிள்ளைகள் உழைக்கிற வயசில் இருக்கும்
அப்பன் அவர்களைக் காப்பாற்ற பிச்சை எடுப்பது
மோசடி அல்லாமல் வேறு என்ன?
என்று உரக்கச் சொன்னவர் பெரியார் மட்டும்தான்.
அதுவரை குசேல புராணத்தை கிருஷ்ணபிரானின் நட்பாக கொண்டாடிக்கொண்டிருந்தக் கூட்டமிது.
சரி அதைவிடுங்கள்..
குசேலன் பிராமணன். அவன் கையேந்தி கேட்டுவிட்டால்
அரசன் கொடுத்தாக வேண்டும்.
இது மனு நீதி. அரச தர்மம்.
புலவர்கள் அரசனைப் பாடினால்
அவன் பரிசு கொடுத்தாக வேண்டும்.
இது தமிழ் நீதி..
இதில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன
இருக்கிறது என்று இடதுசாரிகள் தான்
தத்துவ விளக்கம் சொல்ல வேண்டும்!

கவிஞனுக்கும் அதிகார அரசு பீடத்திற்குமான உறவு
முடியரசு காலத்தின் எச்சம்.
நிலவுடமை சமூகத்தின் வடிவம்
. உடல் உழைப்பை விட கவிதை உன்னதமானது
என்று கொண்டாடும் மன நிலையில் இருக்கிறது
உடல் உழைப்பு செய்பவனை கீழ்மைப்படுத்தும்
மேட்டிமைத்தனம்.
கவிதைகள் பிச்சை எடுப்பதற்கு அல்ல.
உழைப்பின் வேர்வைத்துளிகள் இல்லாத கவிதை
முதலாளித்துவத்தின் ஆபரணம்.