கணபதி குறித்தக் கதைகள், கட்டுரைகள் , புத்தனின் அரச மரத்தடியை
கணபதி கைப்பற்றிய சரித்திரம் இதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும்
நிறையவே எழுதியாகிவிட்டது. விநாயக சதுர்த்தியின் மகிமையைக்
கொண்டாட மும்பை மாநகரமெங்கும் பக்தர்களின் கூட்டம்
மண்டல்களில் லோக்கல் தாதாக்களின் ஆளுயரக் கட் அவுட்..
இப்படி எத்தனையோ காட்சிகள். ஆனால் கணபதி உற்சவத்தின்
அந்தப் பத்து நாட்களில் இன்றும் என் நெஞ்சைவிட்டு அகலாத
சில நினைவுகள் இருக்கின்றன. இந்த மனிதர்கள் நிஜமானவர்கள்.
என் கதைகளின் வசீகர மொழிகளுக்குள் அவர்களைப் படம் பிடிப்பது
அவ்வளவு எளிதல்ல. அது என் கருப்பண்ணசாமிக்கு திருப்பதி
பாலாஜியின் அலங்காரத்தைச் செய்துவிட்டது போல இருக்கும்!
நினைவு 1
-------------------
1982 ஆம் வருடம். என் திருமணத்திற்குப் பின் நானும் சங்கரும் வடலா
அண்டாப்ஹில் ஏரியாவில் வாடகைக்கு குடியிருந்த நாட்கள்.
எதிர்வீட்டில் ஒரு வயதான மராட்டியப் பெண்மணி. அவள்
என்ன வேலை செய்கிறாள் என்பது குறித்து ஒவ்வொருவரும்
பற்பல கதைகளைச் சொல்வார்கள். சிலர் அவள் பிறந்தக் குழந்தைகளை
மாலிஸ் செய்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். தற்போது தள்ளாடும்
வயதில் அதுவும் செய்ய முடியவில்லை என்றார்கள்.
ஆனால் அவளிடம் யாரும் எதுவும் பேசுவதில்லை.
அவளும் தான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி
வந்தவுடன் அவள் தன் வீட்டை வெள்ளை அடிப்பாள். சின்னதாக
ஒரு கண்பதி சிலையை வீட்டில் வைத்து 10 நாட்களும் பூஜை
செய்வாள். அப்போது மட்டும் அவள் மகன் அவளுடன் வந்து
இருப்பான். லால்பாக் கண்பதியை மணிக்கணக்கில் வரிசையில்
நின்று கும்பிட காத்திருக்கும் மனிதர்கள் , அது என்னவோ அவள்
வீட்டு கண்பதியை மட்டும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை!
என் வீட்டுக்கு எதிர்த்த வீடு அவள் வீடு. அவள் கண்பதி எடுத்திருப்பதை
அதிசயமாக வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்., என்னை நோக்கி
புன்னகைத்தாள். சைகையில் அழைத்தாள். நானும் அவள் வீட்டு
கண்பதியைப் பார்க்கும் ஆசையில் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன்.
பூஜையில் வைத்திருந்த ஓர் ஆப்பிள் பழம், இனிப்பு பேடா கொடுத்தாள்:.
வாங்கிக்கொண்டேன். "இப்போ புதுசா கல்யாணம் ஆயிருக்கா?" என்றாள்.
"ஆம்" என்றேன். அவள் உடைந்த டிரங்க் பெட்டியைத் திறந்து அதில்
பழைய புடவைக்குள் வைத்திருந்த புதிய பச்சைக்கலர் கண்ணாடி
வளையல்களை எடுத்து என் கைகளில் போட்டுவிட்டாள்.
மராத்தி பெண்கள், திருமணமானவுடன் பச்சைக்கலர் வளையல்
அணிவது வழக்கம் என்பதை நானறிவேன். பச்சைக்கலர் வளையலைக்
கழட்டக்கூடாது என்று வேறு சொன்னாள். நான் தலையை ஆட்டி
வைத்தேன். வீட்டுக்கு வந்தவுடன் என் சங்கரிடன் நடந்ததைச் சொன்னேன்.
கண்பதி பிரசாதத்தை கொடுத்திருக்கிறாள், ஒரு 100 ரூபாயாவது
வைத்தாயா? என்று கேட்டார். ஓகோ அப்படி கூட ஒரு வழக்கம்
உண்டா என்று கேட்க நினைத்து அதற்குள் சங்கர் சொன்ன
வார்த்தைகளில் வாயடைத்து நின்றேன்.
அவள் எவ்வளவு வறியப் பெண், வயதானவள், அதை எல்லாம்
மனசில் வச்சாவது நீ காணிக்கை வைத்திருக்க வேண்டும் என்றார்.
"இப்போ போய் 200 ரூபாய் வச்சிட்டு வரட்டா? என்று கேட்டேன்.
"வேண்டாம், அது அவளை அவமானப்படுத்தின மாதிரி ஆயிடும்" என்றார்
சங்கர்.
200 ரூபாய் அவளுக்கு ரொம்பவும் பெரிய தொகை தான், அதுவும் 1982ல்!
ஆனால் அவள் வாழ்ந்த பெருமிதமான அந்த வாழ்க்கையை நான்
மதித்தேன். பன்னாட்டு வங்கியில் கவுண்டரில் உட்கார்ந்து வேலைப்
பார்க்கும் போது அவள் தந்தப் பச்சை வளையல்களை அணிந்துக்
கொண்டு வேலைப் பார்ப்பது இயலாது. அந்தப் பச்சை வளையல்கள்
எப்போதும் என் ஆபீஸ் பையில் இருக்கும், வீட்டை விட்டுக் கிளம்பும்
போதும் வீட்டுக்குள் வரும் போதும் அவள் கண்கள் என் கைகளைப்
பார்க்கும், அதில் மறக்காமல் அவள் தந்த பச்சை வளையல்களின்
ஓசை அவளைப் பரவசப்படுத்தும்! அதற்காகவே நானும் வளையல்களை
கழட்டுவதும் மாட்டுவதுமாக இருந்தேன்.
எனக்கு அவள் பெயர் தெரியாது. அவளுடைய ஒரே மகன் கண்பதி
உற்சவ பத்து நாட்களுக்கு மட்டும் அவள் வீட்டுக்கு வருவான்.
மற்றபடி அவள் எப்போதும் தனியாகவே தள்ளாடும் வயதில்
பெருமிதத்துடன் வாழ்ந்தாள்.
இன்று அவளை நினைக்கின்றேன். பச்சை வளையல்களாக அவள்
எப்போதும் என் நினைவில் வாழ்கிறாள். அவள் வீட்டு கண்பதியைக்
கும்பிட யாருமே வராததைப் பற்றி அவள் வருத்தப்பட்டதே இல்லை. ஊரெல்லாம்
கண்பதி பப்பா மோரியா
என்று உரத்து ஒலிக்கும் இந்த நாளில்
.
அவள் வாழ்ந்த திசை நோக்கி கைகூப்பி கும்பிடுகிறேன்..