சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக பா.ரஞ்சித்
அவர்களுக்கு நானும் வாழ்த்து சொல்கிறேன்.
என் வாழ்த்தும் விமர்சனமும் அவருக்கு முக்கியமா இல்லையா
என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.
வாழ்த்துவதில் மகிழ்ச்சி. நமக்கு மகிழ்ச்சி தரும்
சின்ன சின்ன விஷயங்களையும் உடனுக்குடன்
செய்துவிட வேண்டும். அதுதானே முக்கியம்.
அப்புறம்… சார்பட்டா பரம்பரை தலித் படம் என்று சொல்கிறார்கள்.
அப்படியா..? அப்படித்தான் என்றால் இன்னும் அதிகமாகத்தான் கொண்டாடவேண்டும்.
இருந்தாலும் எனக்கு இந்த வகைப்படுத்தல் புரியவில்லை.
சாதிப்பெயரோடு திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
சாதிப்பெயரின் பெருமையைக் கொண்டாடும்
திரையிசைப் பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.
அப்போதெல்லாம் ,
அந்தப் படங்களுக்கெல்லாம்
இல்லாத சாதி அடையாளம் இந்தப் பட த்திற்கு மட்டும்
கொடுக்கப்படுகிறது!!
அந்தப் படங்கள் எல்லாம் கிராமத்தின்
மண்வாசனை வீசும் படங்கள் என்றும்
ஏன் தமிழ்க்கலாச்சாரத்தை பிரதிபலித்த
யதார்த்தமான கதைகள் என்றும் சொல்லப்பட்டன.
நாங்களும் அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டோம்..
ஆனால் சார்பட்டா பரம்பரை மட்டும் தமிழ்ச் சமூகத்தின்
கதையாக இல்லாமல் தலித் கதையாக மாறுகிறது..
இது நல்லா இருக்கு…
பா ரஞ்சித் மிகவும் நுணுக்கமாக வைத்திருக்கும் காட்சிகள்..
அதில் காட்டப்படும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், நீல நிறம்
இதிலெல்லாம் இருப்பது அந்த மக்களின் வாழ்க்கை அடையாளம்.
அந்த மக்கள் தலித்மக்கள் என்பதால் இது தலித் படம்..
இப்படியாக பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..
இதில் உண்மை இருக்கிறது. ஆனால் இதுமட்டுமல்ல உண்மை.
விளிம்புகள் மையத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன.
கதையின் களமும் காட்சிகளும் சமகால அரசியலின்
புனைவுகளைக் கடந்து நிஜங்களுடன் வருகின்றன.
இந்த மாற்றத்தை கையாண்டிருப்பதில்
பா. ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார்.
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இனி, சார்பட்டா கதையின் நாயகனாக நடிக்கும் ஆர்யாவை விட துணைப்பாத்திரங்கள் ஓவர்டேக் செய்துவிடுகின்றன.
அது என்னவோ தெரியவில்லை.. ஆர்யா இந்த வாய்ப்பை
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ
என்று ஓர் எண்ணம் வருகிறது... ..
சம்திங்க் இஸ் மிஸ்ஸிங்க் இன் ஆர்யா..
ஆர்யாவின் உடல்வாகு ஒத்துழைத்த அளவுக்கு
நடிப்பு ஒத்துழைக்கவில்லை..! இந்தப் படத்திற்கான
பிரத்யோகமான நடிப்பை அவர் தரவில்லை.