சமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர்
தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள்
நிமித்தம் மருத்துவமனையில் இருக்கும் போது..
அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கவலையில்
இருக்கும் போது..
அத்தருணம் அந்த தனிப்பட்ட நபர் குறித்த செயல்பாடுகளை
விமர்சிக்கும் நேரமல்ல. இதையே அந்த நபர் விமர்சனத்திற்கெல்லாம்
அப்பாற்பட்டவர் என்று எடுத்துக் கொள்வதும் தவறு.
நாகரீகம் அனைவவருக்கும் உண்டு. ஆனால் நயத்தக்க நாகரீகம்
தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த கொடை என்பது என் கருத்து.
இத்தருணத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம்
பதில் சொல்லி நியாயப்படுத்திவிடுவது அறமல்ல.
அவர்களின் கருத்துகளை
அவர்கள் பக்கத்தில் பதிவதற்கு அவர்களுக்கு
எந்தளவுக்கு உரிமையுண்டோ
அதே உரிமை அப்பதிவை public வாசிக்கலாம்
என்று அறிவிக்கும் போது
அதை வாசிப்பவர்களுக்கும் கருத்து சொல்லும்
உரிமையை அப்பதிவு
தன் உரிமையுடன் சேர்த்தே பதிவு செய்திருக்கிறது என்பதை
பலர் உணர்வதில்லை.
தன்னுடைய பதிவை கருத்தை வரவேற்று
கொண்டாடும் கூட்டத்திற்கு நடுவில் ஓரிருவர்
அக்கருத்தை தெளிவான
கருத்துகளுடன் எதிர்கொண்டால் -
கவனிக்க வசைச்சொல் இன்றி கருத்தை
கருத்தால் எதிர்கொள்வது -
உடனே விமர்சனம் செய்தவரை பிஜேபி என்றும்
துரோகி என்றும் இனப்பற்று இல்லாதவன் என்றும்
இன்னும் ஒரு படி மேலே
ஏறி அரசியல் அறியாதவர் என்றும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளும்
வாசகங்கள் அண்மையில் அதிகரித்திருக்கின்றன.
இன்னார் இன்னாரைப் இந்த வாசகத்தை
இத்தருணத்தில் சொன்னார் என்பதை
எதிர்காலம் மறந்துவிடும். ஆனால் சொல்லப்பட்டவை
சொல்லப்பட்டவையாக அப்படியே எடுத்துச் செல்லப்படும்.
உண்மையை எழுதுங்கள். உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.
அரசியலை எழுதும் போது ஆதாரங்களுடன் எழுதுங்கள்.
மன எழுச்சியில் எழுதும் அரசியல் விமர்சனங்கள்
ஆபத்தானவை. எழுதுபவருக்கும் எழுதப்படுபவருக்கும் கூட
ஆபத்தானவை தான்.
சூதர்களின் பாணர்களின் வாய்மொழியில் போற்றப்பட்ட
புராண இதிகாச தலைவர்களின் காலம் அல்ல நாம்
வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்.
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே…
பிகு: கலைஞர் அவர்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு
நெருக்கமானவரோ அதைவிட அதிகமாக எனக்கும்
நெருக்கமானவர். எம் தந்தையர் வாழ்க்கையின் எச்சமாக
இருப்பவர். என்னைப் பற்றி அறியாதவர்களுக்காக இதையும்
சேர்த்தே எழுதியாக வேண்டி இருக்கிறது.