Wednesday, January 26, 2011
அம்மாவின் காதலன்(ர்)
காதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன்
என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்
என்று ர் விகுதிப் போட்டு மரியாதையைத் தெரிவிக்கலாமா என்று இரண்டு நாட்கள்
யோசித்துப் பார்த்துவிட்டு வாசிப்பவர்கள் சாய்ஸ்க்கு ஏற்றபடி இருக்கட்டும் என்று
ஒருவழியாக முடிவுக்கு வருவதற்குள் ரொம்பவும் தான் நான் அவஸ்தைப் பட்டுவிட்டேன்.
அண்ணனின் காதலி பற்றி நிறைய எழுதலாம். தம்பிகளின் காதலிகள் குறித்தும்
எழுதுவதற்கு கைவசம் நிறைய உண்மை நிகழ்வுகளே இருக்கின்றன. தாத்தாவின்
காதலியர் குறித்து கி.ராவின் ரேஞ்சுக்கு எழுதுவதற்கு விஷயங்கள் உண்டு.
அதிலும் என்னுடைய தாத்தாக்கள் கொழும்பு, பர்மா, கராச்சி என்று சுற்றி
அலைந்திருக்கிறார்கள். அடா பொழைப்புத்தேடித் தாங்க!
போகிற இடத்தில் எல்லாம் அவரவர் தகுதிக்கு ஏற்ப காதலியர் கிடைத்திருப்பார்கள்.
எப்படியோ அந்த வகையில் இந்தப் பிரதேசங்களில் எல்லாம் எனக்கு மரபணு சார்ந்த
ரத்த உறவுகள் இருக்கிறார்களாக்கும். இதில் எனக்குப் பெருமைதான்.
அக்காவின் காதலர் குறித்து தெரிந்தாலும் எழுதினால் குழப்பம் வரும்.
அதனால் அவர்களைப் பற்றி நாம் எழுதாமல் இருப்பதே உத்தமம்.
ஆனால் இந்தக் காதலர் கதைகளில் எல்லாம் இல்லாத ஒரு நெகிழ்வும்
என்னவென்று சொல்ல முடியாத ஓர் உணர்வும் அம்மாவின் காதல் கதையை
எழுதும் போது மட்டும் ஏன் ஏற்படுகிறது?
அம்மாவுக்கும் காதல் இருந்திருக்கும் என்பதும் அம்மாவும் அப்பாவைத் திருமணம்
செய்வதற்கு முன் யாரையாவது காதலித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதும்
ஒத்துக் கொள்ளக்கூடியது தான் என்றாலும் மனசு இந்தச் செய்தியைக் கேட்டவுடன்
திடுக்கிட்டுத் தான் போனது.
அம்மானா இப்படித்தான் இருக்கனும்னு யாரோ என் மனசில் மந்திரிச்சி போட்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து மாறாக இருக்கும் எதுவும் எனக்கு என்
அம்மாவைப் பற்றியதாக இருப்பது முதலில் அதிர்ச்சியாகவும் அதன் பின்
சங்கடமாகவும் இருக்கிறது.
சாதாரணமாக வீட்டில் நடந்த அம்மா அப்பா சண்டைகளுக்கும் அம்மாவின் காதலுக்கும்
எதாவது தொடர்பு இருந்திருக்குமோ என்று தேவையிலலாமல் ஃப்லஷ் பேக்
செய்து அந்த உத்தியும் கைகொடுக்காமல் கதையை நடுவில் நிறுத்திவிட்டு
நிகழ்காலத்தில் மவுனமாக கரைந்து போகிறது வாழ்க்கை.
ஆரம்பத்தில் அம்மா மீது வெறுப்பு வந்தது உண்மைதான். அம்மா அப்பாவைத்
திருமணம் செய்வதற்கு முன் வேறு ஒருவரைக் காதலித்திருந்தாள் என்ற
உண்மை அம்மாவின் கற்புக்கு ஏற்பட்ட இழுக்கு என்று பழைய காலத்து
ப்ளாக் அண்ட் வொய்ட் சினிமா காதல் ரேஞ்சில் யோசித்தேனோ என்னவோ.
ஆனால் அந்தக் கோபம் வெகு சீக்கிரத்தில் பரிதாபமாக மாறிப்போனது.
அம்மாவைப் பற்றி இந்தச் செய்தியைச் சொன்னது அம்மாவின் சித்தப்பா
மனைவி. அவளுக்கு எப்போதுமே அம்மாவையும் அம்மாவின் தங்கைகளையும்
பற்றி இப்படி எதாவது கதைகள் கட்டி விடுவதும் அதைச் சந்தர்ப்பம் கிடைக்கும்
போதெல்லாம் யாரிடமாவது சொல்வதும் வழக்கம் என்று அம்மாவின் கடைசித் தங்கை
அதாவது எங்கள் சின்ன சித்தி சொன்னாள். அவள் சொன்னால் சரியாகத் தான்
இருக்கும். சித்தி இதைச் சொன்னதும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
ஏனோ அழுகை அழுகையா வந்தது. சித்தி 'என்னடி இது, இதுக்குப் போயி
மனசைக் குழுப்பிட்டிருந்தியானு' சொல்லிட்டு பாசத்துடன் முதுகில் தடவிக்
கொடுத்தாள்.
'கட்டையிலே போறவா.. சுடுகாடு போறவரைக்கும் அவப் புத்தி அவளை விட்டுப்
போகாது' என்று தன் சித்தப்பன் பொண்டாட்டியை வாய்க்கு வந்தப் படி
திட்டித் தீர்த்தாள். சித்தி எங்க அம்மாக்கூடப் பொறந்தவர்களிலேயே கொஞ்சம்
அதிகம் படித்தவள். அந்தக் காலத்திலேயே எல்.ஐ.சியில் வேலைப் பார்த்தவள்.
அவள் இந்த ரேஞ்சில் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனைச் செய்ததை
நான் அன்றுதான் பார்த்திருக்கிறேன்.
அப்போதைக்குச் சித்தியின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது.
அம்மாவைப் பற்றிய இந்தச் செய்தியை நான் யாரிடமும் சொல்லவும்
விரும்பவில்லை.
ஒருநாள் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் வாய்ச்சண்டை.
சண்டைக்கான காரணம் என்னவென்று பார்த்தால்
'நீதானே உன் பிறந்த வூட்டு சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுனு இந்த
கரிகெட்ட மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்த..
என்னைக் கீழுர்லே கேட்டாவா,
நீ என்ன சொன்னே
கீழுர்க்காரப் பயலுவ அந்தக் காலத்திலே நம்ம தாத்தாக்கிட்டே கைநீட்டி
நின்னவுனுக.. இப்போ என்னவோ நாலு எழுத்துப் படிச்சிட்டோம்னு
நாலு காசு வந்தவுடனே நம்ம வாசலுக்கு வந்து பொண்ணு கேட்க
வந்துட்டானுவ.. அடி செருப்பாலேன...'
'ஆமாம் அந்தச் சாதிக்கெட்டப் பயலுவளுக்கு உன்னைக் கெட்டிக் கொடுத்திருக்கனும்..
அப்போ தெரிஞ்சிருக்கும்..'
'உன்னோட இந்தப் பேச்சும் திமிரும் தான் என் குடியிலே மண்ணை அள்ளிப்
போட்டிச்சி.. என்னைக் கேட்டுவந்தவக இன்னைக்கு மாடிப் போட்டு வீடு கட்டி
இன்னிக்கு வரைக்கும் துபாயிலா இருக்காம். பாத்துக்கா.
நீ கட்டிவச்ச மாப்பிள்ளை மாதிரி ஊர் மேஞ்சிட்டு இருக்கலே'
'ஏ தாயி.. என்ன பேச்சு இது.. உன் பிள்ளை சமஞ்சப் பொறவும்
அம்மைக்கிட்ட வந்து அவனுக்குக் கட்டிக் கொடுத்த என்ன
இவனுக்குக் கட்டிக் கொடுத்த என்னனு பேசிக்கிட்டு'
பக்கத்துவீட்டு வள்ளியம்மைப் பாட்டி அதட்டினாள்.
'நீ சும்மா கிடக்க மாட்டே கெளவி.. அந்தக் காலத்திலே மலையாளத்துக்கு
பொண்ணுக் கெட்டிக் கொடுக்காதே, மலையாளத்துக் காரனுவ மாயமந்திரம்
தெரிஞ்சவனுகனு .. தோவாளை மாப்பிள்ளைக் கேட்டு வந்தப்போ
எங்க அம்மைக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்தவ நீதானே.
எனக்கு வர்ற வெளத்துலே உன்னைப் பொறவு ஏதாவது சொல்லிப்பிடுவேன்.
பேசாமா உன் சூத்தைப் பொத்திக்கிட்டுப் போ.."
மாமியார் சாகிற வரை நாத்தனார் இதே கதையைப் பல்வேறு வசனங்களில்
சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரின் சண்டையும் எனக்கு கலக்கல் காமெடி மாதிரி
இருக்கும். ஆனால் காலம் செல்ல செல்ல நாத்தனாரின் புலம்பல் பயம்
கொடுத்தது.
என் அம்மா இப்படி எல்லாம் கிடையாது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை
வரும் போதெல்லாம் அம்மாவின் சத்தம் கேட்டதே கிடையாது. அப்பாதான்
வாயாலும் கையாலும் கொடுப்பார்., பிறகு அவர் ஓய்ந்துப் போய் நிறுத்திக்
கொள்வார். அம்மா அப்பா சொல்வதற்கெல்லாம் எதிர்த்து பேசி இருந்தால்
ஒருவேளை அப்பா அம்மாவை இவ்வளவு அடித்து துன்புறுத்தி இருக்க மாட்டாரோ
அப்பா அடிக்க அடிக்க கண்ணீர் சிந்தாமல் ஒரு சத்தம் வெளியில் காட்டாமல்
அப்படியே மனசுக்குள் போட்டு அரைத்து மென்று துப்பிக் கொண்டிருந்த அவள்
குணம் தான் அப்பாவுக்கு கோபத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
அம்மா ரொம்பவும் அழுத்தமானவளாக இருந்திருக்கிறாள் என்று இப்போது
நினைக்கத் தோன்றுகிறது.
உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எத்தனை எத்தனையோ
மனிதர்களின் காதலைப் பற்றி அறிந்ததெல்லாம் அந்தந்த நேரத்தில் பயணத்தில் சந்தித்து
கைகுலுக்கி மறந்துவிடும் மனசு போல இருந்தது ஆனால் அம்மாதான் மறக்க வேண்டும்
என்று நினைத்தாலும் அடிக்கடி நினைவில் வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்.
அம்மா காதலித்தது யாரை? அவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா?
எந்த ஊரில் இருக்க கூடும்? யாரைக் கேட்டால் தெரிய வரும் என்று மனசு தவித்தது.
அம்மா உயிருடன் இருக்கும்போதே தெரிந்திருந்தால் அம்மாவிடமே கேட்டிருக்கலாமோ?
அப்படி அம்மாவிடம் கேட்டிருக்க முடியுமா? கேட்டிருந்தால் அம்மா என்ன சொல்லி இருப்பாள்?
வழக்கம் போல மவுனமாக இருந்திருப்பாளா? இல்லை, போடி, உன் வேலையைப் பாத்துக்கிட்டு
என்று பொய்க்கோபம் காட்டி சமாளித்திருப்பாளா?
என்னுடைய அம்மாவைப் பற்றி எனக்கே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியவில்லை.
அப்படி இருக்கும் போது மற்றவர்கள் என்ன சொல்லிவிடுவார்கள்?
வள்ளி முருகனைக் காதலித்தாளா ஆனைமுகனைக் காதலித்தாளா..
இது என்னடா புதுக்கதை என்று நினைக்கிறீர்களா?
புதுக்கதை எல்லாம் ஒன்றுமில்லை.. வள்ளி காட்டில் பிறந்து வளர்ந்தப் பெண்.
அவள் ஒன்றும் ஆனையைக் கண்டு பயந்து அலறி அடித்து முருகன்
பிடியில் விழுந்திருக்க மாட்டாள்.. அவள் ஆனையை நன்கு அறிந்தவள்.
பிறகு வேறு என்னவாக இருந்திருக்க முடியும்?
ஆனையுடன் பிறந்து வளர்ந்தவள் ஆனைமுகனைத் தான் காதலித்திருக்க
வேண்டும். ஆனைமுகன் ஆனை வடிவில் வந்து அவளைத் துரத்துகிறான்.
அங்கே வந்த முருகன் வள்ளியின் அழகில் மயங்கி
அவளைக் கட்டிப்பிடிக்கிறான். ஆனைமுகன் ஆனைவடிவில் வந்து விரட்டியதும்
அவனே குறிஞ்சி அழகனாக வந்து அவளைக் கட்டிப்பிடித்ததும் எல்லாம் ஆனைமுகனின்
செயல் என்றே அந்தப் பெண்ணுள்ளம் நினைக்கிறது.
களவு மணம் முடிந்து கற்பு மணத்தில் வாழ்க்கை ஆரம்பிக்கும் போதுதான்
வள்ளிக்குத் தெரிய வருகிறது ... தன்னைக் களவு மணம் செய்தவனின்
அண்ணன் தான் ஆனைமுகன் என்பதும்..
முருகனுக்கோ வள்ளியின் மனசில் இடம் பிடித்தவன் அண்ணன் ஆனைமுகன்
என்பதும் அந்த நினைப்பில் தான் அவள் தன்னைக் காதலித்தாள் என்பதும்
தெரியவந்ததும் முருகனின் ஈகோவில் பெரிய கீறலை ஏற்படுத்தி விடுகிறது.
கோபித்துக் கொண்டு ஆண்டியின் கோலத்துடன் பழநி மலையில் ஏறி
உட்கார்ந்து கொள்கிறார்.
சிவனும் பார்வதியும் போய் அழைத்தும் வரவில்லை.
இதை எல்லாம் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆனைமுகன்
வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியில் வந்து குளத்தங்கரையில்
உட்கார்ந்து கொள்கிறார். வள்ளியை நினைத்த மனதால் வேறு எந்தப்
பெண்ணையும் ஆனைமுகனால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.
இந்த முக்கோணக் காதல் கதையால் சிவபெருமான் குடும்பத்தின் மானம்
மரியாதைக்கு இழுக்கு வந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால்
சுட்டப் பழம், சுடாதப் பழம் என்றும் ஞானக்கனியை அடைவதற்காக
உலகம் சுற்றிய வாலிபன் கதையும் எழுதப்பட்டிருக்கலாம்.
இந்தக் கதையை வலைப்பூவில் வாசித்துவிட்டு எனக்கு வேண்டியவர்கள்
சிலர் கோபித்துக் கொண்டார்கள். முருகன் தமிழ்க் கடவுள், தமிழ் மண்ணின்
அரசன், வள்ளியோ அசல் தமிழச்சி.. அவர்களைப் பற்றி எல்லாம் இப்படிக் கதைகள்
எழுதுவது தமிழணர்வை அழிக்க நாமே பாதைப் போட்டு கொடுத்த மாதிரி
இருக்கும் என்று வருத்தப் பட்டுக்கொண்டார்கள். சிலர் ஒரு படி மேலே போய்
நான் இந்த மாதிரி தமிழ்ப் பெண் இமேஜை சிதைத்திருக்க கூடாது என்றார்கள்.
இவர்கள் தான் இப்படி என்றால் ஆனைமுகன் என்றால் யார் என்று நினைத்தீர்கள்?
நம் புத்தர் பகவானாக்கும். அரச மரம் புத்தருடன் தொடர்புடையது.
இப்படியாக கோபித்துக் கொண்டார்கள் என் புத்த சமாஜ் நண்பர்கள்.
இதெல்லாம் புனைவுகள் தானே என்று அவர்களுக்குப் பதில் சொல்லவும்
இப்படியாக புனைவுகளின் ஊடாகவே நம் தமிழர் வரலாறும் கலாச்சாரமும்
சீரழிக்கப்பட்டது என்று ஆதங்கப்பட்டார் மும்பையில் வசிக்கும் தோழி புதியமாதவி.
வள்ளி என்ற ஒரு பெண்ணின் காதல் கதையை அந்தக் கதையின் திருப்பங்களை
ஒரு மிகப்பெரிய நாவலாக்க நினைத்த முயற்சி முளைவிடும் முன்பே கருகிப்போனது.
அம்மாவின் காதல் கதையை எழுதும் போதும் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
அதுவும் அந்த திருப்பம் விசா வாங்கி இந்திய எல்லைகளைத் தாண்டி
விசவரூபம் எடுத்தது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சொகுசு பேருந்தில் பயணம். போகும்
வழியில் பத்துக்கேவ் முருகன் தரிசனம். கம்பீரமாக வேலுடன் முருகன்
நுழைவாயிலிலேயே வந்து நின்று நம்மை வரவேற்கும் காட்சி.
கூட வந்தப் பயணிகள், அதிலும் குறிப்பாக தழிழ்நாட்டிலிருந்து சுற்றிப்பார்க்க
வந்தவர்கள்...
'அடேய்.. நம்ம்ம இளைய தளபதி ஒரு பாட்டுக்கு ஆடினது இந்த ஸ்பாட்லே தான்,
என்று மெய்மறந்து சொல்லிச்சொல்லி ஆடாதக் குறையாக பல்வேறு போஸ்களில்
போட்டோ எடுத்து தள்ளினார்கள். அவர்கள் சொல்ல சொல்ல எனக்கும் கூட
ஒரு சில சினிமாக்களும் பாடல் காட்சிகளும் நினைவுக்கு வந்து கொஞ்சமாக
அருள் எட்டிப் பார்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நல்ல கொளுத்தும் வெயிலில் தாகம் வாட்டியது. கோவில் வாசலில் இருந்தக்
கடைக்குள் நுழைந்தோம். சின்னக் கடை தான் என்றாலும் கச்சிதமாக
அளவான இருக்கைகளுடன் எல்லா வகையான குளிர்ப்பான வசதிகளுடன்
.. வருகிற சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வருவதும் போவதுமாக..
கடை எப்போதும் பரபரப்பான வியாபாரத்தில்.
கடையில் முருகன் போட்டோவுக்குப் பக்கத்தில் இன்னொரு போட்டோ
சின்னதாக மின் இணைப்புள்ள குத்துவிளக்கு வெளிச்சத்தில்.
புதிதாகவும் வித்தியாசமாகவும் பார்க்க கிடைத்த எல்லாவற்றையும்
க்ளிக் செய்யும் என் காமிரா அந்தக் காட்சியையும் மறக்காமல் க்ளிக்
செய்து கொண்டது.
சிங்கப்பூரில் அடிக்கடி அந்தக் காட்சி வந்து கனவில் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
பாங்காக் போய்த் திரும்பும் வரை அந்தக் காட்சி பல்வேறு கோணங்களில்..
டூர் முடிந்து ஊருக்கு வந்தவுடன் நல்ல ஓர் உளவியல் மருத்துவரை அணுகி
இந்தக் கனவு தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்று தீர்மானித்துக்
கொண்டேன்.
மருத்துவரிடம் போய் கேட்டால் மனுஷன் நம்மைக் கேள்விக் கேட்டே
பயமுறுத்திவிட்டார். மொத்தத்தில் வாயில் நுழையாத வார்த்தைகளை எல்லாம்
சொல்லி அவர் படித்ததை நினைவு படுத்திக் கொண்டதாகவே எனக்குப் பட்டது.
வேறு யாரிடமும் என் குழப்பத்தை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல்
நாளுக்கு நாள் தவிப்பு அதிகமானது.. சித்திக்கு மட்டும் தான் அம்மாவின் கதை
தெரியும். அவளிடம் தான் மீண்டும் போக வேண்டும்.
அந்த நாளும் வந்தது. மெதுவாக சித்தியின் அருகில் போய் நான் அம்மாவின்
இளம்பிராயத்து போட்டோவை மலேசியா முருகன் கோவிலடியிலிருக்கும்
கடையில் பார்த்ததாகச் சொல்லியதும் அவள் சத்தமாக சிரித்தாள்.
உனக்கு என்னாச்சும்மா..? நீ இன்னும் எங்க சித்திக்காரி கட்டிவிட்ட
கதைய்லகத்திலிருந்து வெளியில் வரலியா? அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய்னு சொல்ற கணக்கா இருக்கு நீ சொல்றது..
இல்லை சித்தி அந்தப் போட்டோ அம்மாக்குள்ளதுதான்.
நான் கூட அதே மாதிரி போட்டோவை பாட்டி இருக்கும் போது
ஊர்லே பாத்திருக்கேன். எனக்கு நல்லா நினைவு இருக்கு.
வேணும்னா நீயே பாரேன்.. நான் மலேசியாவில் அந்தக் கடையில்
போட்டோ எடுத்திட்டு வந்திருக்கேன்..
சொல்லிவிட்டு என் காமிராவில் இருக்கும் ஒவ்வொரு படங்களாக காட்ட
ஆரம்பித்தேன். அந்தக் கடை வந்தும் ஸூம் போட்டு காட்டினேன்..
என்ன தெரியுது.. விளக்கு எரியறது மட்டும் தான் தெரியுது..
நீயே பாரு..
சித்தி சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காமிராவைப் பார்த்தேன். அந்த மின் இணைப்பில் நட்சத்திரமாக
வெளிச்சம் தெரிந்தது. அம்மாவின் படத்தை மட்டும் காணவில்லை...
எனக்குள் இனம் புரியாத அச்சம் ஏற்பட்டது.
அந்தக் குத்துவிளக்கு அம்மாவின் புகைப்படம் முன்னால் தான்
எரிந்து கொண்டிருந்தது. நன்றாக நினைவிருக்கிறது.
நான் என் காமிராவில் எடுத்திருந்த மற்ற காட்சிகள் எல்லாமே
ஒரு இம்மிப் பிசகாமல் பதிவாகி இருக்கிறது.
இது மட்டும் எப்படி..?
சித்தி என்னையே பார்த்தாள். நீண்ட பெருமூச்சுடன் என் கைகளைப்
பிடித்துக் கொண்டாள்,
நான் எவ்வளவோ சொல்லிட்டேன் நீ நம்ப மாட்டேங்க..
இப்போ ஒன்னு கேட்கிறேன்.. அம்மாவின் கதை நீ கேள்விப்பட்ட
மாதிரிதானு வச்சிக்கிடுவோம்.. அதைத் தெரிஞ்சி உனக்கு இப்போ
என்னவாகனும் சொல்லு..
எதுக்கும்மா உன் மனசைப் போட்டு தேவையில்லாம குழப்பிக்கிறே?
என்று கரிசனத்துடன் சொன்னாள்.
அவள் கேள்வி எனக்குச் சரியாகவே பட்டது.
அமைதியாக வீட்டுக்கு வந்தப் பின் மனம் வேறொரு மரத்தில்
ஏறிக்கொண்டது.
அது எப்படி.. அம்மாவின் புகைப்படம்... என் கண்ணால் பார்த்தது..
காமிராவில் விழவில்லை!
இதுதான் ஆவிகளின் விளையாட்டோ..
ஆவிகள் உலவுவது உண்மையோ?
நிறைய ஆவிகள் குறித்தப் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
கனவில் இப்போதும் அம்மா வரத்தான் செய்கிறாள்.
ஆனால் தன் கதையைப் பற்றி வாய்த்திறப்பதில்லை.
சில சமயங்களில் வள்ளி கனவில் வருகிறாள்..
முருகனுடன் மட்டுமல்ல எப்போதாவது ஆனைமுகனுடனும் வந்து
தரிசனம் தருகிறாள்...
-----------------------------
nanRi - yukamaayini jan 2011
Subscribe to:
Posts (Atom)